அங்கம் ஐந்து | அங்கம் ஆறு
இருபத்தைந்து வருடங்களுக்கு முன், இந்த கிராமத்தை விட்டு பிரிந்து போன விசாகன், ஒரு யுகத்திற்கு பிறகு, திரும்பி வருகிறான். அவன் போய் சிறிது காலத்திற்குள், மம்மியும் இறந்து போனாள், டாடியும் போன இடம் தெரியவில்லை, அவனுக்கு உறவு என்று சொல்லக்கூடியதாய், இந்த மண்ணில் துளசி ஒருத்தி மட்டுமே இருந்தாள். எவ்வித மாறுதலுமின்றித் தன் சொந்தப் பெருமைகளோடு, இயல்பு மாறாமல் இருந்து வரும் துளசிக்கு, அவனை எதிர்கொள்வது கூட ஒரு சவாலாகப்பட்டது. பெருமை இழந்து, நொந்து கெட்டு வரும் அவன் முன், தான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதே, அவளின் இப்போதைய கவலையாக இருந்தது, அதற்கு ஒத்திகை பார்கவும் அவள் தவறவில்லை.
அவனுக்காகவே காத்து நிற்கிற மாதிரி, பெருமை இழந்து போன அச்சிறு கிராமம் தூங்கி வழிந்து கொண்டிருந்தது, நவீன நாகரீக வளர்ச்சியில், அது முன்னேறி நிற்பது போல் தோன்றினாலும், காலத்தால் அழியாத சிரஞ்சிவீப் பெருமைகளை இழந்து நிற்பதால், அதன் காட்சியழகைக் காணக்கூடிய எல்லா இடத்திலும், உயிரில்லாமல் அழுது வடியும் அதன் முகமே, ஒரு பொய்யாக நின்று உறுத்திக் கொண்டிருந்தது. அந்தப் பொய்யே ஒரு சாபமாக ஏற்பட்டு போன நிலையில், விசாகன் வந்து சேர்ந்தான்.
அப்போது மணி இரண்டு இருக்கும், பகலின் உக்கிரம் தாங்காமல், அவள் வாசலுக்கு வந்து, தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு, கேட் கதவைத் திறந்து கொண்டு, யாரோ ஒரு அந்நிய புருஷன் உள்ளே வருவது அவளின் பார்வைக்கு மங்கலாகத் தெரிந்தது. அவள் திடுக்கிட்டுப் போய், அவனை கண்டு வெட்கப்பட்டவாறே,
புடவைத் தலைப்பை இழுத்துக் கழுத்துவரை மூடிப்போக்த்துக் கொண்டு, தூண் மறைவில் மறைந்து நின்றபடி அவனை வேடிக்கை பார்த்தாள்.
அதற்குள் அவன் உள்ளே வந்து விட்டான். அவனுக்கு நடுத்தர வயதிருக்கும். நீண்ட நாள் பயணத்தில் களைத்து வந்திருப்பவன் போல், அவன் மிகவும் சோர்வுடன் தோன்றினான், அவனின் தோளிலே அழுக்கு மண்டிய, கனமான ஒரு தோள்பை தொங்கியது. பரட்டையடித்துச் சிதறிக் குத்திட்டு நின்ற தலைமுடி காற்றில் சிலிர்த்தது, அவன் அணிந்து இருந்த சாயம் போன பழுப்பு நிற உடைகள், ஒரே அழுக்காக இருந்தன. அவனின் முகம் உணர்ச்சியின்றி மரத்துப் போய் இருந்தது, அதன் பின்னணியில் கவிந்து மூடிக்கொண்டிருக்கும் ஒரு நிரந்தர சோகத்தினது முழு இருட்டினிடையே, ஒருசிறு ஒளிக்கீற்றுப் போல், மின்னி ஒளிவிடும், அவனது அன்பின் சுவடு வற்றிப் போகாத அந்த கண்கள், அவளை ஊடுருவிக் கொண்டு துளைத்துப் பார்த்தன. அந்த பார்வையின் கனத்தை நெஞ்சில் ஏந்தியவாறு, திடுக்கிட்டுப் போய் தலை நிமிர்த்தி, அவள் அவனை இனம் புரிந்து கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டாள்.
அதைப் பார்த்தவாறே அவன். அந்த விசாகன் விறைத்துப்போய் நின்றிருந்தான். அவனால் அழக்கூட முடியவில்லை, தீட்டுக்குளித்துவிட்டு வந்து நிற்கிற மாதிரி, புனிதம் நிரம்பிய அவள் முன், இப்படி ஓர் அழுக்கு மூட்டையாய், பாவத்தை சுமந்து கொண்டு, வந்து நிற்கிறேனே என நினைத்து, அவன் மிகவும் வெட்கம் கொண்டான். அதனால் அவளைத் தலை நிமிர்த்தி பார்க்கவே மனம் கூசியவனாய், அவன் எங்கேயோ வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான்.
இரு துருவங்களாய் பிரிந்து போன அவர்களிடையே, நெருங்கி வர முடியாதபடி, ஒரு கனத்த மௌனம் நிலவிற்று, யார் முதலில் பேசுவது என்று புரியாமல் அவள் மிகவும் குழம்பிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக, முகத்தை திருப்பி, அவளை வெறுமையாய் பார்த்துக்கொண்டே, குரலை உயர்த்தி அவனே கேட்டான்.
‘என்ன துளசி பேசாமல் நிற்கிறாய்? உன்னைக் கண்டதும் எனக்குப் பழைய கதையெல்லாம் நினைவுக்கு வருகிறது. அப்ப நீ என் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாய், இப்ப இந்த விசாகன் முகத்தை பார்க்கவே உனக்கு பிடிக்கேலை? அப்படித்தானே?’
‘போதும் நிறுத்து விசாகா! நான் ஒன்றையும் மறக்கேலை, உன்னை எந்த நிலையிலும், நான் வெறுக்கமாட்டேன், நான் எல்லோரையும் போலவே உன்னையும், கரிசனையோடு நேசிக்கிறேன். இப்ப இந்த கதையெல்லாம் எதுக்கு? நீ புது உலகத்திற்கு வற்திருக்கின்றாய்! இவ்வளவு காலமும் அலைந்து களைத்துப் போனியே! உள்ளே வா! குளிச்சிட்டு சாப்பிடு! பிறகு ஆறுதலாய் பேசுவம்’
அவன் பழகிய உரிமையை மறவாமல், உள்ளே அவளைப் பின்தொடர்ந்து போனான்.
‘அப்பா! ஆர்; வந்திருக்கிறதென்று பாருங்கோ’ என்று அவள் வராந்தாவில் நின்றவாறே, அப்பாவின் காதில் படும்படி உரத்துச் சொன்னாள்.
அவள் சொன்னதை கேட்டு அவசரமாக, அறைக்குள்ளிருந்து வெளிப்பட்ட சுந்தரம், அவன் வாசலிலே ஒரு புது விருந்தாளியைப் போலத் தயங்கி நிற்பதைப் பார்த்துவிட்டுக் கேட்டார்.
‘யாரது? தெரியேலையே!’
‘நான்தான் பெரியப்பா! விசாகன் வந்திருக்கிறன்’
‘விசாகனா? ஆளே அடையாளம் தெரியேலை! என்ன இப்படியாகிவிட்டாய்?’
அவன் அதை கேட்டு மனம் வருந்தியவனாய், பேசவராமல், அங்கேயே தனிமை கொண்டு நிற்கும் பிரமையோடு, குழம்பி வெறித்த முகத்துடன், வந்த வேஷத்துடனேயே, அந்த வராந்தாவில் குறுக்கும் நெடுக்குமாய், தன்னை மறந்து உலாவத் தொடங்கினான்.
அதற்குள் துளசி உள்ளே போய், அவனுக்கு தேநீர் எடுத்துக் கொண்டு, திரும்பி வந்தாள்.
‘இந்தா விசாகா! நன்றாக களைத்துப்போனியே, முதலில் இதை குடி, பிறகு குளிக்கலாம்.’ என்று கூறிய அவள் தேநீர் கோப்பையை அவனிடம் கொடுத்து விட்டு எதையோ நினைத்துக்கொண்டு அறைக்குள் வந்தாள். அவள் திரும்பி வரும் போது, அப்பாவின் சலவை செய்த வேட்டி ஒன்றைக் கையில் எடுத்து வந்தாள்.
‘இந்தா விசாகா! குளிச்சிட்டு நீ உடை மாற்றுவியே,அப்ப இதை கட்டிக்கொண்டுவா’
‘எனக்கு வேட்டி கட்டுவதே மறந்த போச்சு!’ இதை சொல்லிவிட்டு, அவளின் முகத்தை சந்திக்க துணிவின்றி, அவன் தலையைக் குனிந்து கொண்டான்.
வெட்கமில்லாமல், தனது உண்மை நிலையைப் பிரகடனப்படுத்துவது போல், அவன் கூறிய அந்த வார்த்தை அவளை நெருப்பாய் நெஞ்சில் சுடவே, இதுவரை அடக்கி வைத்திருந்த தார்மீக கோபம், அவளை அறியாமலே பொங்கி வெடிக்கக் குரலில் சூடேறி, சத்தியாவேசமாய் அவள் அவனைப் பார்த்துச்சொன்னாள்.
‘நீ இதைச் சொன்னதற்காக, வெட்கப்பட வேணும் விசாகா! இதைகேட்காமலே, நான் இருந்திருக்கக்கூடாதா? ஏன்டா! உன்ரை புத்தி இப்படிப் போச்சு? உனக்கு மட்டும் தானா? இல்லை! முழுப்பேரையுமே கால வெள்ளம் அடித்துக் கொண்டு போட்டுதா என்ன? எனக்கு ஒன்றுமே புரியேலை! நாம் யார் என்று சொல்லித் தெரிய வேண்டாம்! எப்படியெல்லாம் பெருமையோடு பிறந்தோம்! இப்ப வேரே அறுந்து போச்சு. புரையோடிப்போச்சு. எல்லாம் போற போக்கில! எரிந்து போய்விடும் போல இருக்கு! எரியட்டுமே! இந்த கிராமமும் தான்! உன்னைப் போல, இப்ப நல்லாய், தீப்பற்றி எரிகிறது! எனக்கென்ன யோசனை? நான் இதைப்பற்றியெல்லாம் ஏன் சிந்திக்கிறன்?’
அவன் யோசனையில் ஆழ்ந்தான். அப்போது கதவை திறந்த கொண்டு, யாரோ உள்ளே வந்த மாதிரி இருக்கவே, உணர்ச்சி குழம்பிய முகத்துடன் துளசி திரும்பிப் பார்த்தாள்.
‘ராணி! இவன் யார் தெரியுமா? நான் என்ன என்று சொல்வேன். இவன் பெயர் விலாசம் எல்லாமே மறந்து போச்சு. ஒன்றுமேயில்லாதவனை என்ன சொல்லி அழைப்பது?’
அவன் சிரித்தவாறே, ஆனால் மனம் நொந்து போய்ச்சொன்னான்.
உண்மைதான் ஒரு நாடோடி மாதிரி நான் மாறிப் போனேன். துளசி! இங்கேயே உன்னுடன் அன்பு மறவாமல், நான் இருந்திருந்தால், என் பெயர் நிலைத்திருக்கும். வீண் ஆசை காட்டி, மம்மி என் மனசையே அழிச்சிட்டா! நான் பெரிய ஆளாய் வரவேணுமென்று, என்னை லண்டனுக்கு அனுப்பிவிட்டா, நானோ படிக்காமல், நாடு நாடாய் அலைந்து கெட்டுப் போனேன். நிம்மதியிழந்து நிறைய குடிச்சன், உடலே அழுகிப்போச்சு! எனக்கென்ன பெயர்? வெறும் பிணம்’
‘வருத்தப்படாதே விசாகா! இவளைப் பார், கை கால் எல்லாம் ஓடிஞ்சு போற, குச்சி மாதிரி இருக்கு. நெஞ்சிலே இவளுக்கு ஓட்டை இருக்காம், திடீரென்று ஒருநாள் செத்து போவாளாம். ஆனால் இவள் சந்தோஷத்தை பார்த்தியே.இவள் மிகவும் உயரத்திலே இருக்கிற ஒரு துருவ நட்சத்திரம் மாதிரி. நீயும் ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது?
அவன் கன்கலங்கியவாறே, ராணியை இழுத்து குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டான். துளசி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஏன் முடியேலை! பேராசை நமக்கு அதிகம் பெரிய வீடு கட்ட வேணும், கார் ஒட வேணும், நிறைய வசதிகளோடு, ஒரு பெரிய கனவான் மாதிரி வாழ்ந்தாலே போதும். நாங்கள் பெரிய மனிதனாகிவிட, இதைவிட வேறென்ன வேணும்? இதுக்கு மேலே வாழ்க்கையிலே என்ன இருக்கு? இதையெல்லாம் அடைய எம் சொந்தப் பெருமை, எப்படி போனாலென்ன?
இப்ப இதுதான் இஞ்சை நடந்து கொண்டிருக்கு. இது எங்கடை மண்ணைப் பிடித்த சாபம். நீ வந்ததாலே இந்தச் சாபமே தீர்ந்த மாதிரி இருக்கு. வா! நானும் நீயுமாக சேர்ந்து, எரிந்து போன நம் வீட்டைப் புதுப்பித்து, ஒரு புது வீடு கட்டப்பார்ப்போம் என்ன நான் சொல்வது, உனக்கு புரியுதா?’
அப்படியென்றால்… என்று அவன் இழுத்தான் அவளே தொடர்ந்தாள்’
‘ஆமாம்! உன்னாலே, இதைப்புரிந்து கொள்வது கூட கஷ்டம்தான். வெளிநாடு போனால் பணம் வரும், வீடு மிதக்கும், வீடு மிதந்தால், மனிதன் காலடியில் நாய் கூட விழும். இதுக்காக நாம் நாய் வேடம் கூடப் போட்டுக் கொண்டு ஆடலாம்.
நமக்கு இவ்வளவே பெருமை. மற்றதெல்லாம் அடியோடு மறந்து, அத்திவாரமே ஆட்டம் கண்டு தகர்;ந்து போச்சு, இனியென்ன பெருமை! ஆன்மீக ஞானமே இல்லாமல், வரட்டு கௌரவமே பெரிசென்று நினைத்தால் இப்படித்தான் நடக்கும். உண்மையான பெருமை தெரியாமல் கடவுள் போக்குக்கு மாறாய், வெறும் வீட்டிலே நம்பிக்கையும், ஆசையும் வைச்சு எல்லாமே தடம்புரண்டு தலைகீழாய் போச்சு! இது ஒரு கலியின் காலாக்கினி மாதிரி, என்னையும் உன்னையும் எல்லோரையும் எரித்துக்கொண்டிருக்கு! இதிலிருந்து மீளவேண்டுமானால், மேலான நன்மை தரக்கூடிய கடவுள் ஞானமில்லாமல் முடியாதே!
அவன் இதையெல்லாம் கேட்டுக் கிரகித்துக் கொண்ட பாவனையில், தலை ஆட்டியவாறே ஜன்னலைத் திறந்து விட்டு வெளியே பார்த்தான். மாறுதலாகத் தெரிந்த, அந்த பழம் பெரும் கிராமத்துத் தெருக்களில், வழியை அடைத்துக் கொண்டு இரு மருங்கிலும் வளர்ந்து ஓங்கி நிற்கும் நவீன மயமான, பெரிய பெரிய வீடுகளினிடையே, உயிரிழந்த வெறும் நிழலாகத் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து தோன்றும் ஒரு வெறுமை துளசி சொன்ன மாதிரி அவன் மனதை நெருடியது, அதைப் புரிந்து கொண்டதும், அவனது போலி நிலை மாறி மனதை நிறைத்து ஒர் ஒளிவட்டம் சூழ்ந்தாற் போல், அவன் முகம் களை கொள்ளக் கண்கள் சிரித்து, ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு போனவனாய், அவளை திரும்பி பார்த்துக்கொண்டு ஒரு வேதவாக்குப் போல, அவனின் குரல், துளசியின் காதிலே கணீரென்று ஒலித்தது.
‘துளசி! நீ சொல்வது எனக்குப் புரிகிறது. வெறும் பெருமையாலே பலனில்லை. ஆன்மாவை அந்த வழியிலே தேடிப்பார்க்கவேண்டும். இதுதான் உண்மை. வாழ்க்கையின் சத்தியத்தை நம்புவதும், ஏற்றுக்கொள்வதும் தான் உண்மையான பெருமை. இதை நல்வழியில் அடைய நினைக்கிறதே, நீ சொல்கிற புது வீடு. இதை எப்ப கட்டத்தொடங்கலாம்?’
‘காசில்லாமல் கட்டப்போறே, இந்தப் புதுவீட்டைப் பற்றி உனக்கென்ன கவலை’ என்று அவள் எல்லாம் மறந்து சிரித்தாள்
– முற்றும் –