கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 4,072 
 
 

அங்கம் மூன்று | அங்கம் நான்கு | அங்கம் ஐந்து

தெளிவான உணர்ச்சியோடு சிரித்துப் பேசுகின்ற அந்தப் பாமரச்சிறுமி, துளசிக்கு ஓர் அற்புதப் பிறவியாகவே தோன்றினாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியாமல், உணர்ச்சி பரவசத்தால், தேகமெல்லாம் புல்லரித்துக்கொண்டிருந்தது. அவளையறியாமலே கண்கள் கலங்கின. சிலிர்த்துப் போன முகத்தை நிமிர்த்தி ஊடுருவி அவளை ஆன்ம நேயத்தோடு, குழைந்து பார்த்தவாறே, அவள் பரிவு மிக்க, மெல்லிய குரலில் சொன்னாள்.

‘ராணி! துருவநட்சத்திரம் சாகிறேலை அது மீண்டும் மீண்டும் என் காலடிக்கே வந்து கொண்டிருக்கு. உன் பேச்சைக் கேட்க எனக்கு எவ்வளவோ சந்தோஷமாக இருக்கு. இதெல்லாம் உண்மையா? நீ நிறைய நாளுக்கு நல்லபடியாக இருக்க வேணுமே. நீ உண்மையிலே என்னைவிடப் பெரிய ராணிதான். இல்லை! தெய்வப்பிறவி! துருவநட்சத்திரம் இதுக்கு மேலே எனக்கு ஒன்றுமே சொல்லத் தெரியேலை. நல்ல மனிதர்களைச் சீக்கிரமே விதி கொண்டு போகிறது. இதுக்காக அழுவதுகூடப் பாவம் உனக்கு அழிவில்லை. இதை நான் மானஸீகமாகச் சாகாமல் இருந்து பார்க்கத்தான் போறன். நல்லவை என் நெஞ்சிலே, நிலைத்து நிற்கும். அவை அபூர்வமாகத் தோன்றும், என் மனதையே கறை எரித்துப் பரிசுத்த மாக்கிவிட்டுப் போகும். உன்னைப் பார்க்கிற போது, சாந்தியான, அமைதிநிலை கொண்ட உன் அன்பு முகத்தில், விசாகனையே கண்டு, தரிசிக்கிற மாதிரி, நான் உணர்ச்சியில் கரைந்து போறன். உன்னை நினைப்பது போல் என்றும் அவன் இருப்பான்’

‘ராணி! இந்த முத்துமாலை ஒரு ஜடம், இதுக்கு உயிர் கொடுத்தவன் விசாகன், ஆனால் இது கொடுத்து வைக்கவில்லை. நானோ நீயோ இதுக்குப் பொருளாகப் போவதில்லை. நாங்கள் மனிதர்;களெல்லாம் பார்க்கும் படி, பெரிய வானத்திலே, வலம் வந்து சோபிக்கப் போகின்ற ஒளிப்பிழம்புகளல்ல, கீழே நின்றாலும், அன்பு ஒளியே எங்கள் வெற்றி,

இதைக் கண்ணாடி வைத்துப் பார்க்கிறதென்றால், இந்த முத்துமாலையே போதும். இதன் கதையை நான் உனக்குச் சொல்லப்போறன்’. குரலில் சுருதி ஏறித் தொடர்ந்து அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘எனக்கு அப்ப ஒன்பதுஇ பத்து வயசிருக்கும் எனக்கு உலகம் பிடிபடுகிற வயது, வயசுக்கு மீறிய வளர்ச்சியுடன் இருந்ததால், நான் வெளியே போக முடியாது. இப்ப மாதிரிச் சுதந்திரம் இல்லை. கடைக்குப் போனாலே வம்புதான். கடைவீதி மட்டுமா? ஊரில் இன்னும் என்னென்ன இருக்கு, எத்தனை இடங்கள் இருக்கு. வயல்வெளி என்ன! குளக்கரை என்ன! காலாறப் போனால், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். பெரியவர்களெல்லாம் விழித்த பிறகு, நான் வெறும் ஜடம், ஐயோ என்னைப் பூட்டி வைத்து விட்டார்களே!, யாருக்குப் பூட்டு? எனக்கா? என்னைப் பூட்டி வைக்க முடியாதே.

நானென்றால், இது வெறும் உடம்பல்ல, இந்த உடம்பு அழிந்து போகும். அப்ப நான்யார்;? எனக்கே அது புரிகிற மாதிரிப்படுகிறது. நிச்சயம் புரியும், ஜன்னலடியில் நின்று பார்க்கிற போது, தெருவும் வாசலும், ஊரும் மனிதர்களும், எல்லாமாய் என்னைக் காண்கிற போது, கறையற்ற வானம் எதிரே நின்று ஒளியில் சிரிக்கும் ஏனென்றால் எனது ஜன்னல், மனம் எப்போதும் விசாலமாகவே திறந்து கிடக்கும். தூங்காமலே விழித்துக் கொண்டிருக்கும்.

ஒரு நாள் வாசலிலே, தூணோரமாய், உட்கார்ந்து கொண்டு தெருவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்ப பூமியின் கறையை விழுங்கிக் கொண்டு, ஓர் துருவ நட்சத்திரம்! விசாகன் வந்து நிற்கிறான். அவனை நான் முன்பின் பார்த்ததில்லை.

டவுனிலிருந்து ஒரு புதுவிருந்தாளியாகத் தன் அப்பாவோடு அவன் வந்திருக்கிறான். அவன் அப்பாவைத்தான் எனக்கு நன்றாகத் தெரியுமே. என்ரை அப்பாவின் ஒன்று விட்ட தம்பியாம் அவர். குகதாசன் சித்தப்பா என்று அவரை நான் கூப்பிடுகிறேன். பார்ப்பதற்கு, அவர் சாதுவாக இருப்பார். வாய்திறந்து, அதிகம் பேச மாட்டார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து போவார். இன்றைக்கு அதிசயமாக ஒரு புது விருந்தாளியோடு வந்திருக்கிறர்;. அவன்தான் விசாகன்.

அவன் எனக்கு முன்னால் வந்து, கம்பீரமாக நிற்கிறான். இந்தக் கிராமத்து மண்ணோடு ஐக்கியப்பட்டு, உயிர்விடக் காத்து நிற்கும் எனது நிலை, அவனுக்கு முன்னால் எடுபடாமல், என்னை வெட்கம் பிடுங்கித் தின்ன, தூண் மறைவில் நான் நிழலாக மறைந்து நின்றிருந்தேன்’. அவன் கேட்டான்.

‘ஓடி வந்து களைத்துப் போனேன். எவ்வளவு பெரிய இடமாக இருக்கு. இதுதான் பெரியப்பா வீடோவென்று சந்தேகமாக இருக்கு. மம்மி காறி உமிழ்வாளே, ம்! எனக்கொன்றும் புரியேலை. நீர் தானே துளசி?’

‘அவன் குரல் தெளிந்த நீருற்றுப் போல், அன்பு லயம் மாறாமல், ஒலிக்கிற போது, நான் மெய்மறந்து அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு அவனை நிமிர்ந்து பார்த்தேன். இவன் இந்த மண்ணுக்கு ஈடாகவே, இலக்கு மாறாமல் நின்று கொண்டிருந்தான். அவன் கண்கள், ஒன்றுமறியாத எனது வெள்ளை உள்ளத்திற்கு ஈடாகவே, களங்கமற்று, நிர்மலமாய் இருந்தன. அவனது பார்வையிலும், பேச்சிலும்இ தொனியிலும், வக்கிரமற்ற, சூதற்ற, நிகரில்லாத அன்பே, உயிர் கொண்டு, நிலைத்திருப்பதாய், நான் உணர்ந்தேன். அதை முழுமையாகத் பிரதிபலிக்கிற அவன்மீது, என்னையறியாமலே, ஒரு பாச ஈர்ப்பு ஏற்பட்டிருப்பதை, என்னால் நன்றாகவே உணர முடிந்த போதிலும், நான் இன்னும் தனியாகவே பிரிந்து நிற்பது போன்ற பிரமையை, என்னால் மறக்கமுடியேலை. அவனிடம் எனக்கு வெட்கம் நிறைய இருந்தது. இதற்குக் காரணம் வயது வித்தியாசமல்ல. அவன் ஆண்பிள்ளை என்பதாலுமல்ல, சகோதரத்துவம், அன்பு இவை தவிர, நான் வேறொன்றும் அறியேன், அப்படியாயின் நான் ஏன், அவனிடத்தில் வெட்கம் அடைந்திருக்கிறேன்?

ஓ! அது எனக்குப் புரிகிறது, பரிசுத்தமும், எளிமையும், ஆடம்பரமுமற்ற தூய தெய்வீக அழகும் நிரம்பிய என்னுடைய கிராமத்துப் பாமரத்தனங்களுக்கு முற்றிலும் மாறுபட்டவனாக, அவன் வந்திருப்பதே, இதற்குக் காரணமாக இருந்தது. அவனிலும் குற்றமில்லை. அவன் அப்படி வளர்க்கப்பட்டிருக்கிறான். தோற்றம் இயல்பான நிலையிலிருந்து, போலி வழியில் திரிந்து போனாலும், அன்பு மாறாத, அவனது உள்ளப்பாங்கு, எனக்கு ஒத்ததாகவே இருந்தது.’

ராணி அவள் சொல்வதைக் கேட்டவாறே தன்னை மறந்து, தூங்கிக் கொண்டிருந்தாள். துளசி அவளின் முதுகில் தட்டி,

‘என்ன ராணி, தூங்கிறியா?’ என்றாள்.

அவள் திடுக்கிட்டுப் பாதிகனவில் விழிக்கிற மாதிரிக் கண்ணைத்திறந்து, பார்த்துவிட்டு,

‘இல்லையக்கா!’ என்றாள.;

‘பொய் சொல்கிறாய், உண்மைக்குத் திரை இருக்கு அந்தத் திரையிலே மறைந்து போய் நிற்கிற, ஒற்றை நிழல் நான், இது செத்துப்போன மாதிரிக்கூட இருக்கு, இந்த நிழலைத் தேடி, நீ வந்திருக்கிறாய்! உண்மையின் திரையைத் தாண்டி வந்திருக்கிற உனக்கு, இப்ப எல்லாமே விளங்கும், பொய் எங்கே இருக்கு? சொல் பார்ப்போம்.’

‘எனக்குச் சொல்லத் தெரியேலை.’

‘சரி! உனக்கு அது தெரிய வேண்டாம், மனதிலே அழுக்கு இல்லாமல் இருக்கிற அன்பு மட்டும், உனக்கு புரிந்தால் போதும், எனக்கும் உனக்கும் உறவு வழியில் என்ன சம்பந்தமிருக்கு? வெறும் அன்பு என்று சொன்னால் உலகம் சிரிக்கும். நாம் அதுக்குப் பயந்து, வாழ்ந்தது போதும். நீயும் நானும் ஒன்றுதான். இந்த ஐக்கியத்திலே வேற்றுமைகளை மறந்துவிட்டுச் சந்தோஷமாக இருக்கத் தோன்றுது. நான் விசாகனோடு அப்படித்தான், ஒன்றாக உயிர் கலந்து இருந்தேன். அந்த நீண்ட பயணம், சில்லுமுறிந்து, இடையிலே நின்று போச்சு. அவன் மாதிரி, நீ வந்து நிற்கிறாய். இதை நான் மறக்கமாட்டேன். ராணி! நீ மீண்டும் வருவியே?’

‘துளசியக்கா! நான் சாகிறதே நிச்சயமாக இருக்கு. உங்களைக் கண்ட பிறகு, இன்னும் கொஞ்ச நாளைக்கு இருந்தாலென்ன என்று எனக்கு ஏக்கமாக இருக்கு, அதுக்கு வழியில்லை என்று நினைக்க, அழுகை அழுகையாக வருகுது. உங்களை நான் மறக்க மாட்டேன். நாளைக்கும் நான் இஞ்சை வருவன். விசாகனின் கதை இன்னும் இருக்கல்லே, கேட்க வேணும்’

‘அது முடியாத கதை… தொடர் தொடராய்! அதன் அமுக்கம் வந்து கொண்டேயிருக்கு. அவன் அன்பை நினைத்துத் துக்கத்தை மறந்தவள் நான், அவனை நான் எப்படி நேசித்தேனோ, அதே மாதிரி உன்னிடமும், எனக்கு அளவு கடந்த அன்பு இருக்கு. அதே போல், அதுக்கு ஈடாக எனக்கு நீ என்னதரப் போறாய்?’

‘அக்கா! நான் ஏழை, அம்மா தோட்ட வேலைக்குப் போவதோடு, மிகுதி நேரங்களில், பெட்டிஇ கடகம் இழைத்துச் சந்தைக்குப் போய், வித்திட்டுவாறவா, கஷ்டப்பட்டு, அவ இப்படி உழைக்காவிட்டால், எங்கடை வயிறு நிரம்பாது. இது மட்டுமில்லை நானும் பனை வடலிக்குள் போய் பனம்பழம், விறகு எல்லாம் பொறுக்கிக் கொண்டு வருவன். கஷ்டப்படாமல் இருக்க இயலாது. ஆனால் கடவுள் எனக்கு வருத்தத்தையும் தந்து விட்டாரே! என்னைத் தந்தாலும், உங்களுக்குப் பலனில்லை’

‘அப்படிச் சொல்லாதே ராணி! உன்னைப் பெறுவதிலே எனக்கு லாபமிருக்கு, ஏனென்றால், இப்ப வெல்லாம் காலம் மாறிப்போச்சு, பெரியோர்களிடம் பயம், பக்தி குறைவு, எல்லோருக்கும் எல்லாம் தெரியும். சிறியவர்களோடு பேச முடியவில்லை. என்ன சொன்னாலும், புத்தியில் ஏறாது, தீமை எம்மை அழித்துக் கொண்டு வருகுது. இதுக்கு மத்தியிலே அன்பைப் பற்றி நினைக்கிறதே, கொஞ்சம் ஆறுதலாக இருக்கு. அது இல்லாமல், இருக்க முடியாது. அப்படி இருக்கவேண்டும் என்று தோன்றினால், அப்பவே செத்துவிட்டதிற்குச் சமம். அதனால்தான் இந்த பூமி அலைந்து கொண்டிருக்கு ராணி! வாழ்க்கையை விட்டு விலகி நிற்கிற,

கரையிலே நின்று கொண்டு என்னைப் போலச் சூரிய நமஸ்காரம் பண்ணுறது புண்ணியமல்லே! இதுக்கு நீயும் வருவியா? சாகிறபோது, இதைப் பார்த்துக் கொண்டே, இரண்டு பேரும் ஒன்றாகச் சாவோம்’

‘இல்லையக்கா! நான்தான் முதலிலே சாவேன்’

‘உஷ் உரத்துப் பேசாதே ராணி! அப்பா காதிலே விழப்போகுது. சாகிறதை நினைத்தாலே அவருக்குப் பயம். நீயோ தைரியமாகஇ அதுக்கு முகம் கொடுக்கிறாய்? எனக்கு இதெல்லாம் பெரிய ஆச்சரியமாக இருக்கு. இந்த வயதிலே, உன்ரை இந்த மனப் பக்குவம், பெரிசில்லையா? இதை வழிபடுகிறதே எனக்குப் பெருமையாக இருக்கு, நான் உன்னை வணங்குகிறேனா? எனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு’

வழிபாடு என்றால் என்ன என்றே அறியாத அந்தப் பாமரச்சிறுமி, ஒரு துருவத்தில் தான் உயர்ந்து நிற்பதைக் கூட அறியாதவளாக உண்மையின் திரையில், உயிர்ச்சித்திரமாக ஒளியாக நிற்கும் அவள்! இந்தத் துளசி ஒன்றுமேயில்லாத வெறும் ஜடத்தின் நிழலல்ல அவளும் மாறுபடாத இருள் சூழாத சத்தியத்தின் ஒளித்தேவதைதான். அவளின் மாறாத அன்பு நிறைந்த சத்தியத்தையே, துணையாக நம்பி, ஏற்றுக்கொண்டு விட்ட மகிழ்ச்சிப் பூரிப்போடு, ராணி முகம் களை கொண்டு, துளசியிடம் சொல்லிவிட்டு, எழுந்து வெளியே கதவைத் தாண்டிப் போகிற போது, வாசல் சன்னமான இருளில், வெறித்துக் காலியாகிக் கிடந்தது.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *