புதுவீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2020
பார்வையிட்டோர்: 4,394 
 

வீடு எப்படியிருக்கு பத்மா? தன் மனைவியை பார்த்து கேட்டான் குமார். சூப்பரா இருக்குங்க, எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, சொன்னவளிடம் இந்தா வீட்டுசாவி என்று கையில் கொடுத்தான். என்னங்க இது நிசமா? கண்கள் விரிய கேட்டவளை மெல்ல தொட்டு, முதல்ல வீட்டை திறந்து பாரு, நீ ஓ.கே சொல்லியிட்டியின்னா பேசி முடிச்சிடலாம். காண்ட்ராகடரிடம் என்மனைவி ஓ.கே சொன்னா முடிவை சொல்றேன்னு சொல்லியிருக்கேன்.

வீடு பிடித்து அக்ரிமெண்ட் எல்லாம் போட்டு ஒரு வழியாக பணத்தை செட்டில்மெண்ட் செய்து விட்டு தன் மனைவியுடன் முதல் நாள் பால்காய்ச்சி குடிபுகுந்தான். அப்பா இனி வாடகைக்கு அங்கும் இங்கும் சாமான்செட்டை தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதில்லை. புதுவீடும் அவள் மனதுக்கு அற்புதமாய் தெரிந்தது. பத்மாவுக்கு அதுவே பெரிய நிம்மதியாய் இருந்தது.

வீடு மூவாயிரம் சதுரஅடிக்குள் கச்சிதமாய் இருந்தது, சுற்றிவர நடப்பதற்கு சிமென்ட்தளம் போட்டு மீதமுள்ள இடங்களில் தோட்டம் போட வசதியாகவும், வீட்டை சுற்றி காம்பவுண்டும் போடப்பட்டு இருந்தது. ஒரே ஒரு வருத்தம் இதேபோல் அமைக்கப்பட்ட வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருந்தது. இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த இடத்தில் நிறையபேர் வீடுகட்டி வந்து விடுவார்கள் என்று பால் காய்ச்சும் போது காண்ட்ராக்டர் சொன்னார். இருந்தாலும் வாடகை வீட்டில் இருந்த போது அக்கம் பக்கம் நிறைய வீடுகள் இருந்ததால் பயமில்லாமல் இருந்தது,

இங்கு சொந்தவீடு என்றாலும் இரவானால் பயமாகத்தான் இருந்தது. பகலில் கூட கணவன் வேலைக்கு கிளம்பி விட்டால் பத்மா கதவை இறுக்கி சாத்திவிடுவாள். குமாரும் சொல்லியிருக்கிறான், யார் கதவை தட்டினாலும் உடனே திறந்து விடாதே. ஜன்னலை திறந்து யார் என்று பார்த்துவிட்டே திறக்க வேண்டும். இது வரை அந்தசூழ்நிலை வரவில்லை.

அன்று குமார் அவளிடம் விடைபெற்று வண்டியை கிளப்பி சென்றபின் இவள் வீதியை பார்த்த பொழுது ஒருவன் இந்த வீட்டையே பார்த்துக் கொண்டு நின்றான். அவ்வளவுதான் பத்மாவுக்கு பயம் ஜில் என்று உடம்புக்குள் ஊறியது. சட்டென ஓடிப்போய் வீட்டுக்குள் நுழைந்து கதவை தடால் என்று இறுக்கி சாத்திக் கொண்டாள். மனசு படபடவென அடித்துக் கொண்டது. யாரவன்?

குமாருக்கு போன் பண்ணலாமா என்று நினைத்தவள் வேண்டாம் வண்டியில் போய்க் கொண்டிருப்பார், கொஞ்சம் கழித்து அழைக்கலாம். முடிவு செய்தவள் படுக்கை அறையின் ஜன்னல் வழியாக பார்த்தால் தெரு தெளிவாக தெரியும் என்று முடிவுசெய்து மெல்ல படுக்கை அறைக்குள் நிழைந்து சத்தம் காட்டாமல் ஜன்னலை திறந்து வீதியை நோட்டமிட்டாள். தெருவில் அவனை காணவில்லை. அப்பாடி என்று நிம்மதியாகி தன்பார்வை கீழே தாழ்த்தி பார்க்க அப்படியே அதிர்ந்து போனாள்

அவன் வீட்டு காம்பவுண்டு அருகில் தலையை எட்டிபார்த்து அவர்கள் தண்ணீர் தொட்டி இருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். இவளுக்கு உடனே பயம் பிடித்துக்கொண்டது. இனியும் தாமதிக்ககூடாது, தன் கணவனுக்கு கைபேசியில் அழைத்தாள்.

குமார் பத்மாவை அப்படியே இரு, கதவை திறந்து வெளியே வந்துவிடாதே, என் பிரண்டு ரமேஷ் போலீஸா பக்கத்து ஸ்டேசன்லதான் இருக்கான், அவனை வர சொல்றேன். நான் கிளம்பி வந்துகிட்டே இருக்கேன். போனை துண்டித்து நண்பனை அழைத்தான்.

இவள் ஜன்னல் வழியாய் பார்த்துக் கொண்டே இருந்தாள் பத்து நிமிடத்துக்குள் ஒரு இருசக்கரவண்டி வந்து நின்றது. அதிலிருந்து போலீஸ் உடையில் ஒருவர் இறங்கி அவனை நோக்கி செல்வதை பார்த்தாள். மனதுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. அவர்கள் பேசிக் கொள்வது இங்கிருந்து தெரிந்தது. அவனை மெல்ல பிடித்து வண்டியில் ஏற சொல்வது இங்கிருந்தே தெரிந்தது. அதற்குள் வண்டி சத்தம்கேட்க இவள் பார்வையை திருப்பினாள். குமார் வண்டியை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தவர்கள் பக்கம் செல்வது தெரிந்தது.

கணவன் வந்துவிட்ட தைரியத்தில் இவள் வாசல் கதவை திறந்து வெளியே வந்தாள். அதற்குள் அந்த ஆளை ஏற்றிக் கொண்டு போலீஸ்காரர் குமாரிடம் ஏதோ சொல்லிவிட்டு கிளம்பினார்.

இரண்டு மூன்று நாட்கள் ஓடிவிட்டது. குமார் மேற்கொண்டு இந்த விசயத்தை பற்றி பேசவே இல்லை. ஆனால் இவள் மனதுக்குள் மாத்திரம் அவன் யார்? போலீஸ்காரர் என்ன சொன்னார்? என்ற கேள்வி வந்துகொண்டே இருந்தது. குமாரோ அதைபற்றி பேசுவதாகவும் தெரியவில்லை. இவள் பொறுக்க மாட்டாமல் ஒருநாள் கேட்டுவிட்டாள். ஏங்க யாருங்க அந்தஆள்? எதுக்காக நம்ம வீட்டு காம்பவுண்டுகிட்ட நின்று தண்ணி தொட்டியை முறைச்சு பாத்துட்டு நிக்கணும்?

அது ஒண்ணுமில்லைம்மா, என்று குமார் சமாளிக்கவும், எங்கிட்ட மறைக்காதீங்க, என்ன நடந்ததுன்னு சொல்லுங்க? மேற்கொண்டு வற்புறுத்தவே அவனும், அவன் சம்சாரம், கைக்குழந்தை மூணு பேரும்தான் இங்க குடிசை போட்டு இந்த வீட்டை கட்டினாங்களாம். இவன் குடுமப்த்தோட இங்கிருந்ததால, வீட்டுக்கு வாட்ச்மேன் தேவைப்படலை. எல்லா வேலையும் முடிஞ்சு தண்ணிதொட்டி கட்டி முடிச்சு, எங்காவது கசியுதான்னு, முதல்ல தண்ணி ஊற்றி பாத்திருக்காங்க. திறந்திருந்த தண்ணி தொட்டியை மூடாமவும் வச்சிருந்திருக்காங்க. பாவம் அவன் குழந்தை அந்த தொட்டிக்குள்ள விழுந்து மேற்கொண்டு பேசமுடியாமல் நிறுத்தியவன், அவன் குழந்தை ஞாபகம் வந்து இந்த தண்ணிதொட்டியை வந்து பாத்துட்டிருக்கான் .இதையை உன்கிட்ட சொன்னா நீ மனசு கஷ்டப்படுவேன்னுதான் பேசாம இருந்துட்டேன்.

பத்மாவின் மனதுக்குள் அந்த வீட்டை பற்றி உயர்வாய் நினைத்திருந்த எண்ணம் சற்று தளர்ந்துவிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *