புதுக்குடித்தனம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,929 
 
 

“”என்னங்க… காபி ரெடி. இதைக் குடிச்சிட்டு ஆபீஸ் கிளம்புற வேலையைப் பாருங்க. அப்புறம், இன்னிக்கு ஒருநாள், காலை டிபனும், மதிய சாப்பாடும், உங்க ஆபீஸ் கேன்டீன்லயே சாப்பிட்டுக்கோங்க. அது பிடிக்கலைன்னா, ஏதாவது ஓட்டல்ல சாப்பிட்டுக்கங்க. கொண்டு வந்து இறக்கி போட்ட சாமான்களெல்லாம் அப்படியே குவிஞ்சு கிடக்கு. இதெல்லாத்தையும் ஒழுங்குபடுத்தவே எனக்கு நேரம் சரியா இருக்கும்; சாயங்காலத்துக்குள்ள, முடியுமான்னு தெரியல. எதுக்கும் ஈவினிங் வரும்போது, ஓட்டலேர்ந்து ஏதாவது டிபன் பார்சல் வாங்கிட்டு வந்திடுங்களேன்,” என்றபடி, எதிர்புறமிருந்து பதிலைக் கூட எதிர்பார்க்காமல், மும்முரமாக வேலையில் இறங்கினாள் சுமதி!
அவள் சொன்ன எதையும் காதில் வாங்காதவனாக, தீவிரமாக எதையோ யோசித்தபடி அப்படியே உட்கார்ந்திருந்தான் மாதவன். சிறிது நேரம் கழித்து, அவன் அமர்ந்திருந்த திசையில் திரும்பிய சுமதி, சிறிய அதிர்ச்சியுடன் கேட்டாள்.
புதுக்குடித்தனம்!“”ஏங்க… இன்னுங் கிளம்பலியா நீங்க, காபி கூட அப்படியே ஆறிப்போய் கிடக்குது. அப்படி என்னங்க யோசனை… “பாவம் ஒருத்தியா கிடந்து அல்லாடறாளே… நாமளும் ஆபீசுக்கு லீவு சொல்லிட்டு, கொஞ்சம் ஒத்தாசையா வீட்டு வேலைகள்ல கூடமாட உதவி செய்யலாமா…’ன்னு தானே யோசிக்கறீங்க. அதெல்லாம் நான் பார்த்துக்கறேங்க. நீங்க கிளம்புங்க நேரமாச்சு,” என்று தானே கேள்வியும், தானே பதிலுமாய், எதிரே வந்து நின்ற சுமதியை, கண்கள் சிவக்க அனல் பார்வையுடன் நிமிர்ந்து பார்த்தான் மாதவன்.
அவன் கோபத்திலிருக்கிறான் என்பது நன்றாகவே தெரியும் சுமதிக்கு. இருந்தாலும், காட்டிக் கொள்ளாமல் அருகில் சென்று, “”ஏங்க இப்படி கண்ணெல்லாம் சிவந்திருக்கு. உடம்புக்கு ஏதாவது சரியில்லையா?” என்றபடி அவன் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.
ஆவேசமாக சுமதியின் கைகளைத் தட்டிவிட்ட மாதவன், சீற்றத்துடன் அவளைப் பார்த்துக் கேட்டான்.
“”என்னைத் தொடாதே ராட்சசி… பெரிய இவளாட்டம் நடிக்கிறா பார்… நீ நினைச்சபடியே காரியத்தைச் சாதிச்சுட்டோமுன்னு ஆடறியா. பார்க்கிறேன்டி நானும், நீ எப்படி சந்தோஷமா இருப்பேன்னு. ஆமா, நான் கேட்கிறேன். இப்ப தனிக்குடித்தனம் வர வேண்டிய அவசியம் என்ன வந்தது உனக்கு… அப்படி என்ன பிடிவாதம் பொம்பளைக்கு?
“”எங்க வீட்ல, அப்படியென்ன கொடுமையை அனுபவிச்சிட்ட நீ… இத்தனைக்கும் கல்யாணமாகி ஆறு மாசங்கூட ஆகல… உனக்கு அங்க ஏதாவது நாத்தனார் கொடுமையா, இல்ல, எங்க அம்மா, அப்பாதான் உனக்கு கொடுமை செஞ்சாங்களா… ஏன் இப்படி பண்ணினே? ச்சே… ஆரம்பத்தில உன்னோட நடிப்பை பார்த்து, உண்மையிலேயே நீ நல்லவன்னு நினைச்சு நம்பி, நான் மோசம் போயிட்டேன். ஆனா, அத்தனையும் நடிப்பு, வெறும் வேஷம்ன்னு இப்பல்ல தெரியுது!
“”பாவம்… வயசான காலத்தில அவங்களைத் தனியாத் தவிக்க விட்டுட்டு, என்னைப் பிரிச்சுக் கூட்டிட்டு வந்து, இங்க என்ன சந்தோஷத்தை அடைய முடியும்ன்னு நீ எதிர்பார்க்கிற?
“”வீட்டுக்கு ஒரே ஆம்பளப்புள்ள… நான் தானே அவங்களைக் கடைசி வரைக்கும் கூட இருந்து பாத்துக்கணும்… ஆனா, பேய் மாதிரி புகுந்து, இப்படி பண்ணிட்டியேடி பாவி… உன் முகத்தைப் பார்க்கவே எனக்கு எரிச்சலாயிருக்கு. என் கண் முன்னாடி நிக்காதே. எங்கேயாவது போய் தொலை.” எரிமலையாகப் பொரிந்து தள்ளினான் மாதவன்.
கொஞ்சமும் கோபப்படாமல், முகமலர்ச்சியுடனேயே கேட்டாள் சுமதி.
“”முடிச்சிட்டீங்களா? அதானே பாத்தேன். வந்ததிலேர்ந்து ஒரு வார்த்தை கூடப் பேசக் காணோமேன்னு. ஒரேடியா எல்லாத்தையும் கொட்டித் தீர்த்திட்டீங்களா. இல்ல இன்னும் இருக்கா? இருந்தா, அதையும் கொட்டிடுங்க. ஏன் சொல்றேன்னா, அப்பதான் உங்க மனபாரம் குறைஞ்சு, ரிலாக்சாவீங்க. இல்லைன்னா, அப்படியே ஆபீஸ் போயி, அங்க யார்மேலயாவது எரிஞ்சு விழுந்து, வீண் பிரச்னையாயிடக் கூடாது பாருங்க,” என்றாள் அமைதியாக.
சற்றே சூடு தணிந்தவனாக, அவள் முகத்தைப் பார்த்தான் மாதவன்; அந்த முகத்தில் அப்படி ஏதும் கபடவேஷம் தெரியவில்லை.
“”ஏன் இப்படி பண்ணினே?” என்றான், சற்றுத் தாழ்ந்த குரலில்.
“”சொல்றேங்க… நீங்க கேட்டீங்களே, “அங்கென்ன மாமியார், மாமனார் கொடுமையா நடந்துச்சி…’ன்னு அப்படியெதுவும் நடந்திடக் கூடாதுன்னு தாங்க, முன்னெச்சரிக்கையா நான் இப்படி பண்ணினேன்.”
“”ஏண்டி… அவங்களா உன்னைக் கொடுமை படுத்துவாங்கன்னு நினைக்கிறே… எவ்வளவு அன்பா, பிரியமா, பெத்த பொண்ணப் பார்க்கிற மாதிரி தானேடி உன்னையும் பார்த்துக்கிட்டாங்க. அப்புறம் என்ன குறை உனக்கு அங்க?” என்றான் மாதவன்.
“”குறை எனக்கில்லீங்க… அவங்களுக்குத்தான் பெரிய குறை. அதை சரிபண்ணத்தான் நான் இப்படியொரு நடவடிக்கை எடுத்தேன். பாவங்க அவங்க,” என்று சுமதி சற்று இடைவெளி விடவும், மாதவன் கேட்டான்.
“”என்னடி குழப்புற… ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையால்ல இருக்கு, நீ சொல்றது?”
“”இப்ப உங்களுக்கு எதுவும் புரியாது. நீங்க ஆபீசுக்கு கிளம்புங்க. எல்லாத்தையும் நான் விவரமா ராத்திரிக்குச் சொல்றேன்,” என்ற சுமதி, அவனைக் கிளப்புவதிலேயே குறியானாள்.
“”அந்தக் கதையே வேணாம். உங்களோட பலமும், எங்களோட ஒட்டுமொத்த பலவீனமும், அப்பதானடி வேலையைக் காட்டுது. அதனால இந்த, “ராத்திரிப் பேச்சுவார்த்தை’ எல்லாம் நம்மகிட்ட ஆகாது. அப்படிப் பேசிப் பேசியேதானடி என்னை இங்க கொண்டு வந்து உட்கார வெச்சிருக்கிற. எனக்கு ஆபீஸ் போனாலும், வேலையே ஓடாது. மண்டையைக் குடஞ்சிட்டேயிருக்கும். அதனால, எதுவாயிருந்தாலும், இப்பவே இங்கேயே சொல்லு,” என்றான் அழுத்தமாக.
“”விடமாட்டீங்களே… உங்க பிடிவாதத்தை!”
“”உன்னைவிடவாடி நான் பிடிவாதம் பிடிக்கிறேன்?”
“”சரி… கொஞ்சம் தள்ளி உட்காருங்க,” என்று, மாதவனை உரசியபடி, சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்து, சோபாவில் உட்கார்ந்தாள் சுமதி. பின், ஆறிய காபி கோப்பையை நகர்த்திவிட்டு, பிளாஸ்க்கிலிருந்து சூடான காபியை மற்றொரு கோப்பையில் நிரப்பி, மாதவனிடம் நீட்ட, அவன் முறைந்தான்.
“”இதைப்பிடிங்க முதல்ல,” என்று அவன் கையில் கொடுத்துவிட்டுக் கேட்டாள்.
“”ஏங்க… மாமாவுக்கு இப்ப என்னங்க வயசு?”
“”இதென்ன கேள்வி… போனமாசந்தானே ரிட்டையர்ட் ஆனார். அம்பத்தெட்டு இருக்கும்.”
“”சரி… அத்தையைப் பார்த்தா அப்படியொண்ணும் வயசானமாதிரி தெரியல. என்ன ஒரு நாற்பத்தஞ்சு, நாற்பத்தாறு இருக்குமா?”
“”ஆமாண்டி… இப்ப என்னங்கிற அதுக்கு. என்னவோ ரேஷன் கார்டு கணக்கெடுக்கிறா மாதிரி கேட்டிட்டிருக்கே… என்ன, என் கவனத்தை திசை திருப்ப பார்க்கறீயா?” என்றான் கடுப்பாக.
“”ச்சூ… கேட்கிறதுக்குப் பதில் சொல்லுங்க. அவங்க ரெண்டு பேரும், ஒண்ணா சேர்ந்து தூங்கிப் பார்த்திருக்கீங்களா?”
“”எனக்கு ஞாபகம் தெரிஞ்சு… நான் பார்க்கல. அப்பா ஆபீஸ் போயிட்டு சாயங்காலம் ஏழு மணிக்கு வருவார். அப்புறம் சாப்பிட்டு கொஞ்ச நேரம், “டிவி’ பார்த்திட்டு எங்களோட வந்து படுத்துப்பார். அம்மா எல்லா வேலையும் முடிச்சிட்டு, கிச்சன் சுத்தம் செய்து முடிக்க மணி பதினொன்னாகும். அப்புறம் அப்படியே ஹால்லயோ, சில நேரம் கிச்சன்லயோ கூடத் தூங்கிருவாங்க. திரும்ப காலையில நாலு மணிக்கெல்லாம் எழுந்து, வேலையில இறங்கிடுவாங்க,” என்றான் மாதவன்.
“”சரிங்க… அவங்க ரெண்டுபேரும், என்னிக்காவது ஒண்ணா உட்கார்ந்து மனம்விட்டுப் பேசிப் பார்த்திருக்கீங்களா?”
“”ம்ம்… அவங்க ரெண்டு பேரும் தனியாப் பேசி நான் பார்த்ததேயில்லை. எல்லாரும் இருக்கும் போதுதான் பேசுவாங்க. அதுவும் வீட்டுச் செலவுக் கணக்கு, அக்காவோட கல்யாணம். என்னோட படிப்பு, வேலைன்னு இப்படித்தான் இருக்கும் அவங்க பேச்சு.”
“”என்னங்க… உங்கக்காவோட வயசை வெச்சுப் பார்க்கும்போது, எப்படியும் அத்தைக்கு ஒரு பதினைந்து வயதும், மாமாவுக்கு இருபத்தைந்து வயதும் இருக்கிறப்போ, அவங்க கல்யாணம் நடந்திருக்கணும். அதிலேயும் தலைச்சங்குழந்தை பொண்ணாப் பொறந்திடிச்சா… மளமளன்னு வளர்ந்து நின்னிருக்கும். அப்பவே, அவங்க ரெண்டு பேரும், ஒரு இடைவெளியை, “மெயின்டைன்’ பண்ண ஆரம்பிச்சிருப்பாங்க. அப்புறம் நீங்க பொறந்த கொஞ்ச நாள்லயே, உங்கக்கா வளர்ந்து பெரியவளாயிருப்பாங்க. அத்தை – மாமாவுக்கிடையிலான அந்த இடைவெளி அப்படியே நிரந்தரமாயிருக்கும். அப்புறம் உங்க படிப்பு, உங்கக்கா கல்யாணம், வீட்டு வேலைன்னு இப்படியே நிக்க நேரமில்லாத எந்திரத்தனமான ஓட்டமா இருந்திருக்கும் அவங்களோட வாழ்க்கை. அப்புறமா உங்க… அதான் நம்ம கல்யாணம்…”
“”சரிடீ… இப்ப நீ என்னதான் சொல்ல வர?” என்றான் மாதவன் பொறுமையிழந்தவனாக.
“”கொஞ்சம் பொறுமையா கேளுங்க… இதுநாள் வரைக்கும் ஆபீஸ் வேலை, பிள்ளைங்களைக் கரைசேர்க்கணுமேங்கிற அந்த எண்ணத்திலேயே, மாமாவோட மொத்த கவனமும் இருந்தது. அப்படியே பொழுதும் கழிஞ்சது…
“”அதேபோல, அத்தைக்கு மொத்த வீட்டு வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யறதிலேயே கவனமிருந்து, அப்படியே அவங்க நேரமும் ஓடிட்டிருந்தது. அதனால, பொழுதானா ஏதோ சாப்பிட்டமா, அக்கடான்னு படுத்து தூங்கினமான்னு தான் ஒவ்வொரு நாளும் தோணியிருக்கும். அதில், அவங்க இழந்த பல விஷயங்கள், அவங்க ஞாபகத்துக்கு வந்திருக்காது. ஆனா, இப்ப மாமா வேலையிலேர்ந்து, “ரிட்டையர்’ ஆயிட்டாரா, நான் வந்தப்புறம் வீட்டு வேலையிலிருந்து அத்தைக்கும் விடுதலை கிடைச்சிடிச்சு… நாள் முழுக்க டோட்டலா ரெண்டுபேருமே ப்ரீ. இப்ப அவங்களோட மொத்த கவனமும், நம்பள கணக்குப் பார்க்கிறதிலே தான் இருக்கும். குறிப்பா, என் மேல இருக்கும். நான் என்ன செய்றேன்; என்ன பேசுறேன்; எங்க போறேன். எப்ப வர்றேன்னு, விடாம கவனிச்சு, ஏதாவது குற்றங்கண்டுபிடிக்கத்தோணும். உங்ககிட்ட என்னைப் பற்றி குறை சொல்லலாம். அதோட, நம்மளோட பிரைவசியும், நெருக்கமும் அவங்களுக்கு ஒரு மாதிரி மனப்பாதிப்பை ஏற்படுத்தும். உங்களால, அதாவது குழந்தைங்களால, அவங்க இழந்த அந்த தருணங்கள், அவங்க ஞாபகத்துக்கு வரும். அது ஒரு மாதிரி பொறாமையா மாறவும் வாய்ப்பிருக்கும்.
“”உண்மைதாங்க… உங்களுக்கொரு விஷயம் சொல்லவா. பெண்களோடேயே ஒட்டிப் பிறந்த குணம் ஒண்ணு இருக்குன்னா, பொறாமைதாங்க அது. தான் பெத்த மகளோ, மருமகளோ, உயிர்த்தோழியோ யாராக இருந்தாலும், தனக்குக் கிடைக்காத ஒண்ணு, அவங்களுக்கு கிடைச்சா பொறாமைப் படத்தான் செய்வாங்க.
“”தான் அனுபவிக்காத வாழ்க்கை, தன் மகளுக்கு கிடைச்சா சந்தோஷப்படற தாய்களவிட, பொறாமைப்படற தாய்ங்கதான் அதிகம். இது புராணகாலத்திலேயே உண்டு. பிராமண குலத்தில பிறந்து, மூர்க்கனா வளர்ந்த பரசுராமனால சத்ரிய குலமே வேரோடு அழிய காரணமாயிருந்தது, ஒரு தாய், தன் மகளுக்கு கிடைத்த நல்ல வாழ்க்கைமேல கொண்ட பொறாமைதான். மகனையும் விட்டுவைக்க மாட்டாங்க இந்த பெண்கள். எங்கே தன்னை விட்டுப் பிரிந்து போய் விடுவானோ, இன்னொருத்தி (மனைவி)யின் கட்டுப்பாட்டில் சென்று விடுவானோ என்ற பயமும், சந்தேகமும், பொறாமையும் சேர்ந்து, அதை அப்படியே மகன் மேல காட்டாம, மருமகள் மேல காட்டுவாங்க. “எடிபஸ்காம்ப்ளக்ஸ்’ உருவாகிறது இங்கதான்.
“”இன்னிக்கு எல்லா வீட்டிலும் நடக்கும் மாமியார் – மருமகள் சண்டைக்கு காரணமே, இந்த காம்ப்ளக்ஸ் தான். இப்படியே நாளாக ஆக, அற்ப விஷயத்துக்கெல்லாம் எரிஞ்செரிஞ்சு விழுவாங்க. குத்தல் பேச்சு அதிகமாகும். அப்படியே புகைச்சலாகி, ஒரு நாள் பெரிய சண்டையா வெடிக்கும். அப்படியொரு நிலை வந்து, சண்டை போட்டு, மனக்கசப்போட அங்கிருந்து வெளியேற வேண்டாமேன்னுதான்,” என்று சுமதி முடிப்பதற்குள், “”அதான், இப்பவே மூட்டையைக் கட்டிட்டு வெளியேறிட்டியாக்கும்?” என்றான் மாதவன், அவளை இளப்பமாகப் பார்த்தபடி!
“”அது மட்டுமே காரணமில்லீங்க. நான் யோசிச்ச காரணமே வேற.”
“”என்னது தனியா வந்து, கேட்பார், மேய்ப்பாரில்லாம, உன் இஷ்டத்திற்கு கூத்தடிக்கிறதா?” என்று மாதவன் கிண்டலாக கேட்டான்.
“”ச்சீய்… சொல்றதைக் கேளுங்க. பாவம் அவங்க ரெண்டு பேரும் நிறைய விஷயங்களை இழந்திருக்காங்க. ரொம்பவே கஷ்டமும் பட்டிருக்காங்க. இப்ப அவங்களுக்கு தனிமையும், நெருக்கமும் அவசியம் தேவைப்படுது. அதுக்கான ஏக்கத்தை, அவங்க ரெண்டு பேரோட கண்லயும் பார்த்தேன். நான் சொல்றது வெறும் உடல் சார்ந்த நெருக்கம் மட்டுமில்லீங்க… மனசால ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல், ஒரு அரவணைப்போட ஒருத்தர் தோள்ல ஒருத்தர் சாஞ்சிக்க, மனம் விட்டுப் பேச, நாலு இடங்களுக்குப் போய் வர, இப்படி எவ்வளவோ இருக்குங்க. நாம அங்கே இருந்தா, இதெல்லாம் நடக்குமா? இப்பப் பாருங்க, அவங்களுக்கு எந்த தடையுமில்ல. அலுக்க அலுக்கப் பேசலாம். விரும்பின, “டிவி’ நிகழ்ச்சியைப் பார்க்கலாம். நெனைச்சா கதவச்சாத்திட்டு தூங்கலாம். நாளுங்கிழமையும், நாலு இடங்களுக்குப் போய் வரலாம் இல்லையா?”
“”எல்லாம் சரி சுமதி… உன்னோட சாமான்கள் மட்டுமில்லாம, அங்கிருந்த, ஸ்டவ் உட்பட எல்லாத்தையும் இப்படித் தொடச்சு வாரிட்டு வந்திட்டியே, அங்க, அவங்க எப்படி சமையல் செய்து சாப்பிடுவாங்க?”
“”எதுக்கு செய்யணும்… அவங்க எந்த வேலையும் செய்யக் கூடாதுன்னுதானே நான் இப்படி செய்தேன்.”
“”என்ன சொல்ற நீ?” என்று புரியாமல் அவளை பார்த்தான்.
“”ஆமாங்க… இவ்வளவு பக்கத்து தெருவிலேயே வீடு பார்த்து வந்த காரணமே அதுதான். அதாவது, ஒவ்வொரு வேளைக்கும், சமைச்சு ஹாட்பேக்ல போட்டு கொடுத்திடுவேன். பிளாஸ்க்கில் பாலும், சர்க்கரை, காபி தூளும் தனியா கொடுத்திடுவேன். கைச் செலவுக்குப் பணமும் கொடுத்திடுவேன். ஞாயிற்றுக் கிழமையானா அவங்களோட துணிகளை எல்லாம் எடுத்துவந்து தொவச்சு அயர்ன் பண்ணிக் கொடுத்திடுவேன். அவங்க, அங்க எந்தக் கஷ்டமும் படாம, இஷ்டப்படி இருக்கலாம். ஆக்சுவலா, இது நமக்கான, தனிக் குடித்தனம் கிடையாது; அவங்களுக்கான, புதுக்குடித்தனம்,” என்றாள் சுமதி.
“”அதுசரி… காலம் பூரா இப்படியேதான் ஓடுமா கதை?”
“”ஆங்… அதெப்படி, எல்லாம் ஒரு ரெண்டோ, மூணோ வருஷம்தான். அப்புறம் நமக்கொரு குழந்தை குட்டின்னு ஆனா, உடனே முதலாளா நான் அங்கே இருப்பேன்.”
“”இப்பத்தாண்டீ புரியுது உன் திட்டம். அதாவது, ரெண்டு மூணு வருஷத்திற்கு, கேட்பாரில்லாம ஜாலியா கூத்தடிச் சிட்டு, குழந்தை பிறந்ததும், ஆயாவேலை, எடுப்புவேலை செய்ய உனக்கு எங்கம்மாவோட உறவு தேவையாயிருக்கு. அப்படிதானே?”
“”ச்சீ… வாய மூடுங்க. நான் அந்த அர்த்தத்தில் சொல்லல. வர்ற இந்த ரெண்டு மூணு வருஷத்தில் அவங்க ரெண்டு பேரும், நிறையவே மனம்விட்டு பேசி, கூடிக்குலாவி, நாலு இடம் சுற்றிவந்து, இப்படி அவங்களோட அடிமனசில் அடைப்பட்டுக் கிடந்த எல்லா ஆசையும் நிறைவேறிடும். மன இறுக்கம் குறைஞ்சு, ஒரு பக்குவநிலைக்கு வந்திடுவாங்க. அப்புறம், ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க, அவங்களுக்கே அலுத்துப் போயிடும். பேசி பேசிப் புளிச்சுப் போயிடும். அதோட, ஒரு வெறுமையை உணர ஆரம்பிச்சிடுவாங்க.
“”அப்ப அவங்க மனசு, மகன் – மருமகள், பேரக்குழந்தைகள்ன்னு கலகலப்பான சூழலுக்காக ஏங்க ஆரம்பிக்கும். அந்த நேரம் பார்த்து, நாம குழந்தையோட அங்க என்ட்ரி ஆனோம்ன்னு வெச்சிக்கங்க, அப்படியே அவங்களோட சந்தோஷம் ரெட்டிப்பாகும். நம்மளையும் ரொம்பவே கொண்டாடுவாங்க. அரவணைப்பாங்க. அதோட, குத்தங்குறை கண்டுபிடிக்க மனசு அலையாது. எல்லாமே நேர்மறையாத் தோணும். அப்படியே குறை சொன்னாலும், அதை பொறுமையா எப்படிச் சமாளிக்கிறதுங்கிற பக்குவம் எனக்கும் வந்திடும். அப்புறமென்ன? நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் தான். அதுக்குள்ள நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலையொண்ணு இருக்கு.”
“”என்னது… ஒரு குழந்தையை உருவாக்கணும் அதானே?”
“”ம்… உங்க மூஞ்சி… முழுசா கேளுங்க. நம்ம வீடு, இடவசதி போதாதுங்க. அதனால, இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துக்குள்ள ஒரு ட்புள்பெட்ரூம் வித் அட்டாச்டு பாத்ரூமோட வீடு ஏற்பாடு பண்றீங்க,” என்றாள் சுமதி.
மாதவனின் முகத்தில், ஒரு மந்தகாசப் புன்னகை பரவியிருந்தது. பெருமிதத்துடன் சுமதியை ஏறிட்டு பார்த்துச் சொன்னான்…
“”அட… எம்பொண்டாட்டி உண்மையிலேயே நல்லவதான் போல.”
“”இல்ல… ரொம்பக் கெட்டவ. நைட்டுக்கு வாங்க வெச்சிக்கிறேன்.”
“”ம்ம்… நைட்டெல்லாம் கிடையாது. இப்பவே.”
“”என்னது?” என்று பதறிப்போய் எழுந்த சுமதியைப் பார்த்து, “”அட, இப்பவே ஆபீசுக்கு போன் செய்து, லீவு சொல்லிட்டு வீட்டுவேலைகளை முடிச்சிடலாம்ன்னு சொல்ல வந்தேன்,” என்றான் மாதவன்.

– ஜூலை 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *