கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 13,025 
 
 

“என்ன பளமை அடிச்சுக்கிட்டே இருக்கியே; நாளைக்கு ஆடிப் பதினெட்டு; கொமரீசுபரரை மறந்துட்தியா, புள்ளே? அரிசி, பருப்பு, காய் எல்லாம் வச்சிருக்கியா?” என்று கேட்டான் மாரப்பக் கவுண்டன்.

“இன்னிக்குத்தான் புதுமை பேசறியே. எல்லாத்தையும் பாக்குக் கடிக்கிற நேரத்திலே சேத்துடமாட்டேனா?” என்று பெருமிதத்துடன் கூறினாள் பழனியாயி. வருஷத்துக்கு ஒரு முறை அவர்கள் காவேரிக்கு நீராடச் செல்வார்கள். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அவர்கள். காவிரியாறு அவர்கள் ஊரிலிருந்து இருபத்திரண்டு மெயில் தூரத்தில் இருக்கிறது. மோகனூர் என்ற ஊருக்குப் போய், அங்குள்ள காவிரியில் நீராடிவிட்டுக் காவிரிக்கரையில் இருக்கும் அசலதீபேசுவரரையும் மதுகரவேணி யம்மையையும் தரிசித்து வருவது அவர்கள் வழக்கம்.

அசலதீபேசுவரர் என்றா சொன்னேன்? அது, அந்த ஊர்க்காரர்களும் புராணமும் சொல்லும் பேர். ஆனால் நம்முடைய கவுண்டருக்கு அவரைக் குமரீசுவரர் என்று சொன்னால்தான் தெரியும். ஆராய்ச்சிக்காரர்கள் அதைக் கேட்டு ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடித்தார்கள். “மோகனூருக்குக் குமரி என்பது பழம் பெயர். அதனால் சுவாமிக்குக் குமரீசுவரர் என்ற பெயர் வந்திருக்கிறது. ‘கொங்குதண் குமரித்துறை’ என்று அப்பர் சுவாமிகள் பாடியிருப்பது இந்தக் குமரித் துறையைத்தான்” என்று தங்கள் அறிவுப் பயணத்தைத் தொடங்கினார்கள். அதைப்பற்றிய கவலை இங்கே நமக்கு எதற்கு?

கொங்கு வேளாளர்கள் வேட்டையாடி முயல்களையும் நரிகளையும் கொன்று அவற்றைக் கையில் பிடித்துக் கொண்டு கூட்டமாக வருவார்கள். பல ஊர்களிலிருந்து வருவார்கள். வண்டிகளில் மனைவி மக்களை ஏற்றிவிட்டு ஆடவர்கள் நடந்தே வருவார்கள். வந்து ஆடிப் பதினெட்டன்று காவிரியில் நீராடிக் குமரீசுவரரைத் தரிசித்து இன்புறுவார்கள். காவிரிக் கரையிலேயே வண்டியை நிறுத்தி விட்டு, அருகில் மூன்று கல்லைக் கூட்டி அவர்களுடைய வீட்டுப் பெண்கள் சமையல் செய்வார்கள். அந்த உணவை உண்டு அன்று இரவு அங்கே தங்கி மறுநாள் விடியற் காலையில் வண்டியேறிப் போய்விடுவார்கள்.

சிலர் குடத்தில் காவிரி நீரை எடுத்துக்கொண்டு அதன் மேல் மாவிலைக் கொத்தைச் செருகித் தலையில் வைத்துக் கொண்டு கூட்டமாகச் செல்வார்கள். காவிரிக்கு வர இயலாமல் ஊரிலே தங்கினவர்களுக்கும் காவிரி நீராடும் புண்ணியம் கிடைக்கவேண்டும் அல்லவா?

ஆடிப் பதினெட்டன்று மோகனூர் வீதிகளில் எள் போட்டால் எள் விழாது; அவ்வளவு கூட்டம். வீதியோரத்தில் எல்லாம் கடைகள் வந்திருக்கும்; காதோலை கருகு மணி ஒருபக்கம் குவியலாக இருக்கும்; தேங்காய்பழம் ஒரு புறம; கடலைபொரி ஒரு பக்கம். அன்று ஒரே கோலா கலந்தான். அன்றன்று கூலிவாங்கிப் பிழைக்கும் ஏழைப் பெண்களும் நெடுந்தூரத்திலுள்ள பட்டிக்காட்டிலிருந்து வருவார்கள். வாரந்தோறும் ‘சந்தைக் கெடுவில்’ கூலிவாங்கும்போது ஓரணா, இரண்டணாவைத் தனியே ஒரு மண்குடுவையில் போட்டுவைப்பார்கள்; ஆடிப் பதினெட்டுக்குக் காவிரியில் முழுகத்தான்.

அப்போதெல்லாம் மேட்டூர் அணை வராத காலம். ஆடி மாதம் இருகரையும் புரண்டு வெள்ளம ஓடும். மோகனூர்க் கோயில் ஆற்றங்கரையிலேயே இருக்கிறது. அங்கே பதினெட்டுப் படிகள் அமைந்திருக்கிறார்கள் பதினெட்டாம் பெருக்கன்று வெள்ளம பதினெட்டாம் படியைத் தொட்டுக் கொண்டு போகும்.

மாரப்பக் கவுண்டன் நல்லி பாளையத்தில் நாட்டாண்மைக்காரன்; பெரிய பண்ணைக்காரக் கவுண்டன்; அந்த ஊர் ராஜா அவன்தான். அவனைக் கண்டால் ஊராருக்கு ஒரு தனி மரியாதை. யாராவது பேசிக்கொண்டிருப்பார்கள். “என்னப்பா லவுஸூ போடறே?” என்று அவன் குரல் கொடுப்பான். பேச்சுக் கப்சிப் என்று அடங்கிவிடும். அவனுக்கு முன் யாரும் சக்காந்தம் பண்ணமாட்டார்கள். யார் வீட்டில் மொய் எழுதினாலும் அவன் அஞ்சு ரூபாய்க்குக் குறைவாக எழுதமாட்டான். அவனுக்குக் குமரீசுவரிடமும் காவிரித் தாயிடமும் அளவில்லாத அன்பு. வருஷத்துக்கு ஒரு தடவை பதினெட்டாம் பெருக்குக்கு மோகனூர் போவதோடு அவன் நிற்பதில்லை. மற்ற நாட்களிலும் நினைத்தால் போய்க காவிரியில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு வருவான்.

காலையில் எழுந்தால் காட்டுக்குப் போவான். சரியானபடி மழைபெய்து விளைந்தால் கரைவழி விளைச்சல் என்னத்துக்கு ஆகும்? “காட்டு வெள்ளாமை எக்கச்சக்கமாக வெளைஞ்சால் கரைவழி வெள்ளாமை என்ன செய்யும்?” என்பான் கவுண்டன்.

புன்செய் நிலங்களைக் காடு என்று சொல்வது அந்தப் பக்கத்து வழக்கம். யாரோ தஞ்சாவூர்க்காரர் ஒரு நாள் நல்லிபாளையம் வந்திருந்தார். அவருக்கு அந்த ஊர்ப் பேச்சு விளங்கவில்லை. “கவுண்டர் எங்கே?” என்று கேட்டார். “காட்டுக்குப் போய்விட்டார்” என்று பதில் கிடைத்தது. ‘காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது’ என்ற பழமொழி அப்போது அவர் நினைவுக்கு வந்தது. ‘காட்டுக்கா? இந்த அம்மாள் என்ன சொல்கிறாள்?’ எனத் தயங்கினார். மறுபடியும், “எங்கே?” என்று கேட்டார். “காட்டுக்கு” என்றே விடை வந்தது. அவர் நின்று நிதானித்து, மேலும் சில கேள்விகளைக் கேட்டு விடை தெரிந்துகொண்ட பிறகுதான் காடு என்பது சுடுகாடு அல்ல என்று தெளிந்தார்!

“வருவதற்கு நேரமாகுமா?” என்று கேட்டார். “நீச்சத் தண்ணியைக் குடிச்சுட்டுப் போச்சு. உருமத்துக்கு முந்தி வந்துவிடும்.”

அவருக்குப் பேச்சுப் புரியவில்லை. தமிழ் மொழிக்குள்ளே எத்தனை வேறுபாடு! ஊருக்கு ஊர் வித்தியாசம்.

மாரப்பக் கவுண்டன் காலையில் காட்டுக்குப் போவதைப் பற்றிச் சொல்லும்போது இந்தப் பேச்சு விசித்திரம் ஞாபகத்துக்கு வந்தது. அது கிடக்கட்டும்.

மாரப்பனுடைய மனைவியான பழனியாயி அவனுக்கு ஏற்றவள். அவள் வெகுளி. கண்டதை அப்படியே நம்பி விடும் வெள்ளை உள்ளம் படைத்தவள். கல்யாணம் ஆகி ஆறு வருஷமாகியும் இன்னும் குழந்தை இல்லை. “உனக்குக் குமரீசுவரரிடம் பக்தி இல்லை. இருந்தால் உன்னைக் கண் திறந்து பார்ப்பார். உன் வயிறு திறக்கும்” என்று அவன் சொல்வான்.

“நான், என்ன செய்யட்டும்?” என்று அவள் கேட்பாள்.

“நான் மோகனூர் போகும்போது எல்லாம் நீயும் வா. காவிரியில் முழுகினால் கர்மம் தொலையும்” என்பான். வீட்டிலே வேலையை வைத்துக்கொண்டு திடீரெனப் பெண் பிள்ளை ஊர்ப் பிரயாணம் புறப்படமுடியுமா? காட்டில் இருந்து வேலை பார்ப்பாள். சாளையிலே சமையல் பண்ணிச் சாப்பிடுவதும் உண்டு.

***

ஒரு சமயம் மாரப்பன் குமரீசுவரரைத் தரிசனம் செய்ய வந்திருந்தான், அப்போது நவராத்திரி காலம். கோயிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடைய மண்டகப்படி அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்தார்கள். சாமண்ணா குருக்கள் மகாகெட்டிக்காரர். வருகிறவர்களிடம் நயமாகப் பேசி மேலும் மேலும் ஈசுவர கைங்கரியத்தில் ஈடுபடும்படி செய்து விடுவார். அடிக்கடி வரும் மாரப்பக் கவுண்டனுக்கும் அவருக்கும் பழக்கம் உண்டாயிற்று. கவுண்டன் ஒரு நல்ல புள்ளி என்று அவர் தெரிந்துகொண்டார். “என்ன கவுண்டரே, நீங்கள் நவராத்திரி உற்சவத்தைப் பார்த்ததில்லையே? ராத்திரி இருந்து அம்பிகையின் அலங்காரத்தைப் பாருங்கள்” என்று குருக்கள் சொன்னார். அன்று இரவு மாரப்பன் அங்கே தங்கினான். என்ன அலங்காரம்! என்ன அழகு! அவன் அந்தக் கோலாகலத்தில் மெய்மறந்து நின்றான். அந்தக் காலத்தில் கோயிலில் சின்ன மேளம் பிரமாதமாக இருக்கும். நவராத்திரியில் சதிர்க்கச்சேரி நடைபெரும்; பாரதநாட்டியந்தான். அதைப் பார்ப்பதற்காக நெடுந்தூரத்திலிருந்து ஜனங்கள் வருவார்கள். கரூரிலிருந்தும் நாமக்கல்லிலிருந்தும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் வருவார்கள்.

மாரப்பக் கவுண்டன் சதிர்க் கச்சேரியைக் கண்டு கண்டு வியந்தான். அதுவரையில் சதிரையே அவன் பார்த்ததில்லை. மறுநாள் மோகனூரை விட்டுப் புறப்படவே அவனுக்கு மனசு வரவில்லை. அன்றும் இருந்து, நவராத்திரி உற்சவத்தைப் பார்த்துக்கொண்டு புறப்பட்டான். ஊரில் உள்ள காடு அவனை வா, வா, என்று அழைத்தது! ஊருக்குப்போய் அங்கு உள்ளவர்களிடமேல்லாம் அந்தக் ‘கங்காட்சியைப்’ பற்றிச் சொன்னான். தாசி ஆடுவதை வருணித்தான்.

“பொம்பளையா வெட்கங் கெட்டுப்போய் வந்து ஆடினா?” என்று பழனியாயி கேட்டாள்.

“சாமிக்கு முன்னாலேதானே ஆடறாள்?” என்றான் மாரப்பன்.

பழனியாயிக்கு ஆது சம்மதமாகவே படவில்லை. மானத்தை விட்டு ஆடுவதாவது!

“நீ வந்து பாத்தாத் தெரியும்” என்றான் கவுண்டன்.

அடுத்த வருஷம் மாரப்பன் தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு போயிருந்தான். இரண்டு மூன்று நாள் தங்கினான். சாமியைப் பார்த்துப் பார்த்து இன்புற்றாள் பழனியாயி. ஆனால் சதிர்க்கச்சேரியைக் கண்டபோது அது அவளுக்கு ரசிக்கவே இல்லை. ‘என்ன மானங்கெட்ட வேசம்!’ என்றே அவளுக்குத் தோன்றியது.

பூங்காவனம் என்பவள் அன்று நடனம் ஆடினாள். ஊர்ப் பெரிய தனக்காரர்கள் அவளுக்கு அவ்வப்போது வெற்றிலையில் பணம் வைத்து நீட்டினார்கள். அவள் ஒய்யாரமாக நடந்து வந்து, தன் கை அவர்கள் கையில் படும்படி குனிந்து வாங்கி ஒரு புன்சிரிப்பை அவர்கள்மேல் வீசிவிட்டுப் பின்நோக்கி நடந்து சென்றாள்.

“என்ன கவுண்டரே, சும்மா இருக்கிறீரே. இந்தாரும் வெற்றிலைபாக்கு!” என்று குருக்கள் தூண்டி விட்டார். அவருக்கு நாலுபேர் உற்சவத்தில் உற்சாகமாகக் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை. பூச்சுற்றி முகஸ்துதி செய்து காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் பெரிய பேர்வழி.

மாரப்பனுக்குத் தைரியம் உண்டாகவில்லை. அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு வகையான அருவருப்புத் தட்டியது. “பெரியவர்கள் இருக்கும்போது, நான் எதற்கு?” என்று மெல்ல இழுத்தான். குருக்கள் விடவில்லை. “என்ன ஐயா, ஏமாற்றுகிறீர்? ஊரில் பெரிய பண்ணைக்காரர். அஞ்சு ரூபாயாக வைத்துக் கொடும்” என்றார். அவருக்கும் கவுண்டருக்கும் இப்போது பழக்கம் அதிகம் அல்லவா?

தர்மசங்கடமான நிலையில் மாட்டிக்கொண்டான் மாரப்பன். அடுத்த ஐந்து நிமிஷத்தில் யந்திரம்போல அவன் கைகள் வேலை செய்தன. குருக்கள் வெற்றிலை பாக்கைத் தந்தார். மாரப்பன் இரண்டு ரூபாயை எடுத்து அதில் வைத்துக் கொண்டான். பூங்காவனம் அன்ன நடை போட்டு வந்தாள். மாரப்பனிக்கு முன் குனிந்தாள். குஷிப் பேர்வழியாகிய குருக்கள் அந்தச் சமயம் பார்த்து, “அவரை விடாதே; சரியான புள்ளி!” என்று வேடிக்கையாகச் சொன்னார். பூங்காவனம் மாரப்பன் கையில் உள்ள வெற்றிலையைவாங்கக் கையை நீட்டினாள். கையும் கையும்….!

வீல் என்று குரல் கேட்டது; பெண்கள் இருந்த இடத்திலிருந்துதான். பழனியாயி ஆவேசம் வந்தவளைப் போலக் கத்தினாள். அந்த அப்பாவி, தன் கணவனைத் தன்னிடமிருந்து பறித்துக் கொள்வதற்காகச் சூழ்ச்சி நடப்பதாக எண்ணிக்கொண்டாள், பாவம்! நாகரிகம் தெரியாதவள்! ஒழுக்கமே உயிர் என்று எண்ணி வளர்ந்தவள்!

வெற்றிலையும் பணமும் கீழே விழுந்தன. பூங்காவனம் திடுக்கிட்டுப் பின்னே பார்த்தாள். அங்கிருந்தவர்கள் யாவரும் பழனியாயியையே பார்த்தார்கள். எல்லோரும், “என்ன? என்ன?” என்று கேட்டார்கள். அவள் மலங்க மலங்க விழித்தாள்.

மாரப்பன் எழுந்து அவளிடம் சென்று என்ன என்று கேட்டான். “உடனே ஊருக்குப் புறப்படவேண்டும்” என்று அவள் சொன்னாள். குருக்கள் விபூதியும் குங்குமமும் கொண்டுவந்து கொடுத்தார். “ஏதவது பயந்த கோளாறாக இருக்கும். இங்கே அம்பிகை மதுமரவேணிக்குச் சக்தி அதிகம். எந்தப் பேயாக இருந்தாலும் இங்கே ஆட்டம் போட்டாக வேண்டும்” என்றார். பாவம்! அங்கே எல்லோருக்கும் முன்பு ஆடிய ஒரு பேயைக் கண்டுதான் அவள் பயந்துபோனாள் என்பதைக் குருக்கள் உணரவில்லை; மற்றவர்களும் உணரவில்லை!

மறு நாள் காலையில் இருவரும் ஊர்போய்ச் சேர்ந்தார்கள். சேர்ந்தவுடன் பழனியாயி மாரப்பன் காலில் விழுந்து அழுதாள். “நீ எவுத்துக்கிட்டுப் போனாலும் ரவைக்கு இங்கே வந்துவிடவோணும். குமரீசுபரன் சாக்கியாகச் சத்தியம் பண்ணித் தா!” என்று கேட்டாள். “பைத்தியமே, உனக்கு ஏன் இந்தச் சந்தேகம் எல்லாம். நான் உன்னை விட்டு எங்கே போகப் போகிறேன்?” என்றான் மாரப்பன்.

“ஆம்பிள்ளைகளை மயக்க வெக்கங்கெட்ட பொம் பிள்ளைகள் செய்யற மோசடியைக் கண்ணாலே கண்டப்பறம் எனக்குப் பயம் பிடிச்சுக்கிட்டுது” என்று அவள் அழுதாள். அவன் அவளுக்குச் சத்தியம் பண்ணித் தந்தான்.

நாம் நினைக்கிறபடியே எல்லாம் நடக்கின்றனவா? அடுத்த முறை மாரப்பக் கவுண்டன் மோகனூர் போயிருந்தபோது எதிர்பாராதபடி அங்கே தங்கநேர்ந்தது. அங்கு கோயிலில் ஒரு விசேஷமும் இல்லை. குருக்கள் பெண்ணுக்குக் கல்யாணம். மாரப்பக் கவுண்டனுக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். கவுண்டன் முகூர்த்த நேரத்துக்கு வர முடியவில்லை. பின்புதான் வந்தான். குருக்கள், “ராத்திரி இருந்து, சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும்” என்று வற்புறுத்தினார். சாப்பிட்டுவிட்டுப் போக முடியுமா? இரவு தங்கிவிட்டு மறுநாள்தான் போகவேண்டும்.

இரவு தங்குவதா? பழனியாயிக்குச் செய்து கொடுத்த சத்தியம் என்ன ஆவது? அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. குருக்களிடம் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்துவதா? ‘இன்று ஒரு நாளில் என்ன வந்துவிடப் போகிறது?’ என்று ஒருவிதமாகச் சமாதானம் செய்துகொண்டு அங்கே தங்கினான்.

மறு நாள் ஊர்போய்ச் சேரும்போது காலை மணி பத்துக்குமேல் ஆகிவிட்டது. பழனியாயி தரையில் படுத்துக் கொண்டிருந்தாள். இரவில் தூக்கம் இல்லை. அவனுக்காகக் காத்திருந்து காத்திருந்து சாப்பிடவும் இல்லை. ஊனும் உறக்கமும் ஒரு வேளை இல்லாமற் போவதால் ஒன்றும் ஆபத்து வந்துவிடாது. அவள் மனத்தில் இருந்த சந்தேகப் பேய் ஒவ்வொரு கணத்தையும் ஒவ்வொரு யுகமாகப் பெருக்கிக் காட்டியது. அதோடு இப்போது மற்றொரு கவலையும் அவளுக்கு உண்டாகிவிட்டது. குமரீசுவரர் ஆணையாகச் சத்தியம் செய்து கொடுத்தானே? அதை யல்லவா இப்போது மீறிவிட்டான்? சாமி குற்றம் வேறு; அவனுக்குத் தண்டனை கிடைக்குமே! எல்லாம் சேர்ந்து அவளை ஒரே திகிலுருவாக்கி விட்டன.

மாரப்பன் வீட்டுக்குள் நுழைந்தானோ இல்லையோ, அவன் காலடியில் வந்து விழுந்தாள்; அப்படியே மூர்ச்சையாகி விட்டால். வெள்ளையுள்ளம்! சைத்தியோபசாரம் செய்து அவளை எழுப்புவதற்குள் அவனுக்கு என்ன என்னவோ நினைவுகள் வந்துவிட்டன.

இனி இவளை விட்டுப் பிரிவதே இல்லை, பகலிலுங் கூட’ என்று தீர்மானம் செய்து கொண்டான்.

அப்படியானால் காவிரி நீராட்டு? குமரீசுவரர் தரிசனம்? மாரப்பக் கவுண்டனுக்குப் புதிய யோசனை தோன்றியது. தானும் அந்தக் கரை வழிக்கே போய் இருந்துவிட்டால்? மோகனூரில் கொங்குவேளாளர் யாரும் குடியிருக்கவில்லை. வெளியூர்களில்தான் இருந்தார்கள். அயலில் சிறிய கிராமங்களில் இருந்தார்கள். தானும் அருகே ஓரிடத்தில் இருக்கலாம். உறவினர் இல்லாத இடத்தில் ஒரு பெண் பிள்ளைக்காகப் போய் இருந்து கொண்டு, பழைய ஊரை மறப்பதா? அவன் உள்ளத்தே போராட்டம் எழுந்தது.

பழனியாயிடம் அவன் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். மோகனூருக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் தனியே வீடு கட்டிக்கொண்டு வாழலாம் என்று தீர்மானித்தான். வேறு யாரவது உறவினர் வந்தாலும் வீடு கட்டிக் கொடுத்து விடலாம் என்றும் சொன்னான். பழனியாயிருக்குத் தன் ஊரை விட்டுச் செல்ல விருப்பம் இராதென்றுதான் அவன் நினைத்தான்.

ஆனால் அவள் உடனே ஒப்புக்கொண்டுவிட்டாள். “எனக்கும் இனிமேல் காட்டுக்குப் போய் வேலை செய்ய முடியாது. தனியாக உன்னோடு இருப்பது நல்லதுதான். அம்மாவை ஊரிலிருந்து வரவழைத்துக்கொள்கிறேன்” என்று அவள் சொன்னபோதுதான் மாரப்பக் கவுண்டனுக்கு உண்மை விளங்கியது. அவளை அனாவசியமாகப் பீதியடையச் செய்துவிட்டோமே என்று வருந்தினான்.

பண்ணைக்காரர் ஊரை விட்டுப் போகப் போகிறார் என்பதை அறிந்த ஊர்க்காரர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். “நான் அடிக்கடி இங்கே வருகிறேன். இங்கே ஆறு மாசம், அங்கே ஆறு மாசம் தங்கினால் போகிறது” என்று கவுண்டன் சொன்னான்.

***

மோகனூருக்கு அருகில் ஒரு பெரிய வெளி இருந்தது. அதை விலைக்கு வாங்கினான். வீட்டைக் கட்டிக் கொண்டான். உடன் வந்த இரண்டு மூன்று பேர்களுக்கும் வீடு கட்டிக் கொடுத்தான். அந்த இடத்துக்கு ஒரு பேர்வைக்க எண்ணியபோது பழனியாயி, “குமரிப்பாளையம் என்று வையுங்கள்” என்றாள்; “குமரீசுவரன் கண்கண்ட சாமி; அவன் பேர் இருக்கணும்” என்று விளக்கினாள்.

ஒரு மாதம் ஆன பிறகு அவள் தன் தாய் வீட்டுக்குப் போனாள். “ஆம்பிளைக் குளந்தையோடு பெத்துப் பொளைச்சு வா” என்று பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்தார்கள். மாரப்பக் கவுண்டன் அவளைத் தன் மாமியார் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு நல்லிபாளையம் போனான். மனைவி வந்த பிறகு குமரிபாளையம் போகலாமென்று தன் பழைய வீட்டிலேயே தங்கியிருந்தான்.

பழனியாயிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குமரிப்பாளையத்தில் இப்போது வர வர வீடுகள் அதிகமாகிக் கொண்டு வருவதாகக் கவுண்டன் சொன்னான். வேறு ஊர்க் கவுண்டர்கள் சிலரும் அந்த இடத்தில் வீடு கட்டிக் கொண்டார்கள். குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் வரையில் கவுண்டன் மாமனார் வீட்டுக்கும் நல்லிபாளையத்துக்கு மாகப் போய் வந்துகொண்டிருந்தான். குமரீசுவரரைத் தரிசித்து விட்டு நல்லிபாளையம் போவான். குமரி பாளையத்தில் உள்ள வீட்டில் யாரோ வேலைக்காரனை வைத்திருந்தான்.

குழந்தையும் கையுமாகப் பழனியாயி வந்தாள். முதலில் குமரீசுவரரைத் தரிசித்துக் கொண்டு குமரிபாளையாம் அழைத்துப் போனான் மாரப்பன். அவள் போன அன்று அங்கே கொட்டுமேளம் பிரமாதமாக இருந்தது. யாரோ புதிதாக வீடு கட்டிக்கொண்டு குடி வந்தார்களாம்.

“யார் அது? எந்த ஊர்க்காரர்?” என்று கேட்டன மாரப்பக் கவுண்டன்.

“மோகனூர்த் தாசி பூங்காவனமாம். இந்த ஊருக்குக் குடி வந்து விட்டாளாம்” என்றான் வேலைக்காரன்.

மாரப்பன் அப்படியே பிரமித்து நின்றுவிட்டான்!

– குமரியின் மூக்குத்தி (சிறு கதைகள்), அமுதம், முதற்பதிப்பு-டிசம்பர், 1957, நன்றி: https://www.projectmadurai.org

கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *