புதிய போதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2021
பார்வையிட்டோர்: 5,608 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த வீடு முழுவதையும் அசைவற்றதாய் ஆட்டிப் படைத்த நிசப்தம், பல கூக்குரல்களில் கலைந்து ஒப்பாரியாய் ஓலமிட்டது.

கட்டிலில் கிடந்த கன்னையாவின் கைகால்கள், அங்கு மிங்குமாய் வெட்டின. ஆனாலும், வலக்கையை வலுக் கட்டாயமாக , லேசாய் முகம் சுழித்துத் தூக்கி, அங்குமிங்கு மாய் ஆட்டினார். கண்களை அவர் பக்கம் படரவிட்டு வாசல் படியில் நின்ற சொர்ணம்மா , அலறியடித்து அவர் பக்கம் ஓடி வந்தாள். சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த மோகனா , பாத்திரத்தை அப்படியே கீழே போட்டிருக்க வேண்டும். அது எழுப்பிய ஒலி வேகத்திற்கு ஏற்ப ஓடி வந்தாள். அப்போது தான் பீடியும் தட்டுமாய் வந்த கனகா , ஓடிப்போய் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண் டாள் . நோட்டில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த குமரகுரு அதை வீசியடித்து விட்டுக் கட்டிலருகே பாய்ந்து வந்தான். அந்த வீட்டின் மூத்த மகன் கலைச்செல்வன் அந்த அறைக்கு வெளியே அசையாமல் நின்றபடி தந்தை யைப் பார்த்தான்.

கன்னையா, மீண்டும் வலக்கையைத் தூக்கி அங்குமிங்கு மாய் ஆட்டியபோது, சொர்ணம்மா, அதை எடுத்துத் தனது மாங்கல்யத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டு விம்மினாள். அந்தக் கைக்குரிய கண்கள், மகள்களையும், மகனையும் ஒவ்வொரு பக்கமும் நின்று நின்று, ஆழம் போட்டுப் பார்த்தன. பிறகு மனைவியின் மாங்கல்யத்திலிருந்து விடுபட்ட ஈரம் பதிந்த உள்ளங்கையை வலப் பக்கமாய் வளைத்து, கலைச்செல்வன் நிற்கும் பக்கமாகத் திசை மாற்றி ஆடியது. உடனே மோகனா ஓடிப்போய் அண்ணன் கலைச் செல்வனை இழுத்துக் கொண்டு வர, அந்த அறையைவிட்டு தாவினாள்.

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், பிரபல நடிகர் அக்கினி நாத் எப்படி நடந்து கொள்வானோ, அப்படி நடந்து கொண் டான் இந்தக் கலைச்செல்வன். இரும்பால் செதுக்கியது போன்ற உடம்பில், பனங்காய் மாதிரியான பிடறியில் இரண்டு கைகளையும் பின்புறமாக வளைத் க் கோத்துக் கொண் டான். இப்படித்தான் அம்மாவே தெய்வம்’ என்ற படத்தில் அக்கினிநாத் அப்படி கையை வைத்துக் கொள்வான். மோகனா பலமாக முதுகில் குத்தியதால் திரும்பியவன், அவள் கை பிடித்து இழுக்க, அசல் மாடு மாதிரியே உள்ளே வந்தான்.

கன்னையா, அவனைத் தமது அருகே வரும்படி கைய சைத்தார். அவனும் அசல் அக்கினிநாத் இந்த மாதிரி சோக மான சந்தர்ப்பத்தில் எப்படி அடி மேல் அடியாய் நடப்பானோ , அப்படி நடந்தான். இதற்குள் கன்னையா , மனைவிகளையும் மகள் களையும் சின்னப் பயல் குமரகுரு வையும் மோவாயை நீட்டித் தலைமாட்டிற்கு வரச் சொன்னார். பிறகு, அவர்களது கைகளைச் சேர்த்துப் பிடிக்கப் போனார். அது முடியாமல் போகவே, அவரது அனைவரது ஆள் காட்டி விரல்களையும் ஒன்றாகச் சேர்த்துப் படித்து அவற்றை ஒரே கை போலாக்கினார். அவற்றை வளைத்து வளைத்துத் தம் மார்புக்கு மேல் வளைவாகக் கொண்டு வந்து இன்னொரு கையால் தட்டுத் தடுமாறி கலைச் செல்வனின் கையை எடுத்து, அதில் நான்கு விரல் குவியல் களையும் எடுத்துக் கொடுத்தார். கட்டிலில் மல்லாந்து கிடந்த அவர் கண்களிலிருந்து இரு பக்கமும் கண்ணீர் பெருக் கோடியது.

அவரையே பிரமை பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்த சொர்ணம்மா, மகனிடமிருந்து விரலை விடுவித்து மாறி மாறித் தலையிலடித்துக் கொண்டு, “என் ராசா , என் ராசா” என்று அரற்றினாள். மோகனா, அப்பா அப்பா என்று விம்மினாள். கனகா , செய்வதறியாது திகைத்து நின்றாள். சின்னப்பயல் குமரகுரு , அப்பா ஏற்கெனவே இறந்து விட்டது போல் தடாரென்று தரையில் விழுந்து தானே செத்துக் கொண்டிருப்பது போல் தரையில் அங்கு மிங்குமாகப் புரண்டான். கலைச்செல்வன், அசல் அக்கினிநாத் இதே மாதிரியான ஒரு காட்சியில் முகத்தை மூடிக்கொண்டு, தலையை அங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டு நிற்பது போல் நின்றான்.

கெட்டகை மாதிரியான தாழ்வாரத்தை ஒட்டிய அந்த அறைக்குள் பலர் ஓடோடி வந்தார்கள். வீட்டில் எழுப்பிய கூக்குரல் அவர்களை அங்கே வரவழைத்து விட்டது. சுவரோடு ஒட்டிப் போட்ட தேக்குக் கட்டிலில் ஒரு காலத்தில் அந்தக் கட்டில் முழுவதும் வியாபிக்கப் படுத்துக் கிடக்கும் கன்னையா , இப்போது ஒரு கயிற்றை நீட்டிப் போட்டது போல் ஒடுங்கிக் கிடந்தார். ஏழெட்டுப் பேராய் நின்ற கூட்டத்தைப் பார்த்துச் சொர்ணம்மா விம்மி விம்மிச் சொன்னாள்:

“எம் மவராசாவுக்கே பிழைக்க மாட்டோம்னு தெரிஞ் சிட்டுப் போலிருக்கு. பத்து நாளைக்கு முன்னால் தேர் மாதிரி நடமாடின மனுசனுக்கு இப்படி வெட்டு வெட்டா வரும்னு நினைக்கலியே…. காணி நிலம் இல்லாட்டாலும், சந்தை சந்தையா ஊர் ஊரா , மஞ்ச மசாலாவை வத்து வித்து எங்களை முற்றத்து நிழலு முதுகுல படாம வச்சிருந்த என் ராசாவே…. நாங்க யாருகிட்ட சொல்லுவோம் – அடிச்சுக் கொன்னாலும் ஆறு மாசம் ஆகுமே….. பத்து நாள் ஜுரத்துல இப்படி ஆயிட்டியளே ….”

அம்மாவின் விம்மலால் மோகனா வார்த்தைகளை வெளிப்படுத்தாமலே, அழுகை ஒலியெழுப்பினாள். அவள் வாயடைத்த விரல்களையும் மீறி ஒலி வெளி வாங்கியது. கடந்த ஆறு மாதங்களாக , தமக்கு ஏற்றவனைக் கண்டு பிடிப்பதற்கு நடையாய் நடக்கும் அப்பாவை நினைத்ததும் அவளுக்குத் தனது எதிர்காலமும் அவரோடு போய்விடப் போவது போல் தோன்றியது. ‘என் மவளுக்கு என்ன மாதிரி அலயறவன் வரப்படாது … சொர்ணம். இருந்த இடத்துல இருந்தே அஞ்சோ பத்தோ சம்பாதிச்சா கூடப் போதும். அப்படிப்பட்டவனைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்’ என்று சொன்ன தந்தை, தேட முடியாத இடத்திற்குப் போகப் போவது கண்டு அவள் பொருமினாள். அப்பா படுகிற அலைச்சலையும் அவருக்குள் ஏதோ ஒரு நோய் புகைச்ச லாகிக் கொண்டிருப்பதையும் அம்மா சொன்னதைக் கேட்ட ஒன் தாவது வகுப்பு கனகா – வகுப்பிலே முதலில் வந்தவள், அவர் வாரத்தில் ஒரு நாளாவது அலையக கூடாது என்ப தற்காகப் பள்ளிக் கூடப் பையைப் பீடித் தட்டாக மாற்றிக் கொண்டவள்.

பலசரக்குச் சாமான்களை வட்டமான கூடையில் சுமந்து கொண்டு நாளைக்கு ஒரு சந்தையாக அலைந்து திரிந்த அப்பாவை அந்த ஏழு நாட்களில் ஒரு நாள் ஆசையோடு பார்த்துவிட்ட அவள், இனி அந்த ஆசை, நிராசையாகப் போவதாக நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் அழுதாள். எட்டாவது படிக்கும் குமரகுரு , அம்மாவும், சகோதரிகளும் அழுவது தொற்றிக் கொள்ள, அங்குமிங்குமாய்த் தரையில் உருண்டான். ஆனால், கலைச்செல்வனோ உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். அந்தக் குடும்பத்தின் அழுகை அவனையும் ஆட்படுத்தியது. ஆனாலும், எந்த மாதிரி சமயத்திலும் அழக்கூடாது. அழவே கூடாது. அழுவது கோழைத்தனம்’ என்று தனது ஆத்மார்த்த நடிப்புக் குரு அக்கினிநாத் ஒரு ரசிகர் மன்றக் கூட்டத்தில் பேசியது அவனுக்கு அப்போது பார்த்து நினைவுக்கு வந்தது. ஆகை யால், ஏதோ சுமக்க முடியாத பாரத்தைத் தலையில் சுமப்பது போலவும், அதைக் கீழே விழாமல் பார்த்துக் கொள்வது போலவும் இரண்டு கைகளையும் தலையில் கூடாரம் போல ஆக்கிக் கொண்டான்.

இதற்குள், ஏற்கெனவே சத்தம் கேட்டாலும், பலர் நிதானமாக அங்கே வந்தார்கள். வயலிலிருந்து அப்போது தான் வந்த கன்னையாவின் அக்கா , ஒவ்வொரு நடைக்கும் ஒரு தடவை தலையில் அடித்துக் கொண்டு உள்ளே வந்தாள். தம்பியை அந்தக் கோலத்தில் பார்த்ததும் அவளால் தாள முடியவில்லை . மாறி மாறி முகத்தில் அடித்துக் கொண்டாள். சுவரில் தலையை மோதிக் கொண் டாள். அவளை அசைய விடாமல் பிடித்துக் கொண்ட ஒரு குண்டம்மா, ‘போன வாரம் பண்ணையார் மாமா ராமசாமியும் இப்படித்தான் துள்ளத் துடிக்கப் போயிட் டார். எழுதாக் குறைக்கு அழுதா முடியுமா ஆண்டவன் படியளக்காமலா விடுவான்?’ என்றாள். முகத்தில் ஒரு சின்னத் துயரச்சாயல் கூட இல்லாமல் . திடீரென்று ஒரு குரல் எவரும் பேசப்படாது என்பது போல் பேசியது.

“பண்ணையாரு ராமசாமியையும் கன்னையா அண்ணாச்சியையும் ஒரு தட்டுல வச்சா பேசுறே? அவருக்கு மூணுகோட்டை நிலம் இருக்கு. ஆண்டவன் அது மூலம் படியளப்பான். இந்த வீட்டுக்குக் கன்னையா அண்ணாச்சியோட உடல் தான் மொதலு . ஒரு பணக்காரன் உடம்பைவிட ஒரு ஏழை உடம்புதான் முக்கியம். அதுலயும் இப்படி ஒரு தறுதலைப் பிள்ளையை பெத்தவன் போயிட்டா , குடும்பமே சின்ன பின்னமாயிடும். சரி, சரி… காத்தை அடைக்காம வழியை விடுங்க.”

அந்தக் காலத்து வில்லுப்பாட்டாளியான பெரிய ஆறுமுகம், கன்னையாவின் அருகே போனார். அவர் கன்னங்களைத் தடவி விட்டார். அவரைப் பார்த்து, கன்னையா மூச்சால் பேசுவது போல் ஏதேதோ உளறிய போது, அவர் ஆறுதல் சொன்னார்.

மனசைக் கலங்க விடாதடா. வேணும்னா பாரு – ஒனக்கு ஆயுசு நூறு பேரன் பேத்திகளோட கொஞ்சிக் குலாவிட்டு அவங்க வழியனுப்பிச்சு வச்சப்பறம் தான் போகப் போற ஏல.. ராமசாமி ஓஹோ …. இப்ப ஒன் பேரு கலைச் செல்வனோ? கழுதைக்குப் பேரு முத்துமாலையாம் நீயும் பித்துப் பிடிச்சு நின்னா எப்படி? கோணச் சத்திரத்துக்குப் போயி டாக்சிய கூட்டிட்டு வா… டவுனுல டாக்டர்கிட்ட ஒங்கப்பாவை உடனே காட்டணும். காய்ச்சல் இன்னிக்குப் போயிடும் நாளைக்குப் போயிடும்னு ஒங்கம்மா தான் அறிவில்லாம இருந்தா…. ஒனக்கு எங்கல அறிவு போயிட்டு?”

“எங்க அண்ணன் மகன் ஒரு வாரத்துக்குப் பிறகு இன்னிக்கு தான் வந்திருக்காக. அதுவும் கட்டுலுல கிடக்கிற பெத்தவனப் பார்க்கறதுக்கு இல்லே எதோ அக்கனிநாத்தோ கிக்கினிநாத்தோ , அவனுக்குச் சங்கம் அமைக்கப் போறா களாம். இவுக கவலையிலேயே எங்கண்ணாச்சி, கட்டுலுல விழுந்துட்டாக….”

கன்னையாவின் தங்கை அமிர்தவல்லி, வந்ததோடு வந்த கையாய் வாயைப் பேசவிட்டாள் அவளையே உற்றுப் பார்த்த பெரிய ஆறுமுகம், பிறகு ராமசாமி என்ற கலைச்செல்வனின் பரட்டைத் தலை முடியைச் செல்வமாகப் பிடித்து அங்கும் இங்குமாய் ஆட்டிக் கொண்டே பேசினார்.

“இனிமேலாவது புத்தியோட இருடா… சீக்கிரமா போய் டாக்சிய கூட்டிட்டு வா. கைக்காவலுக்கு எதுக்கும் ஐம்பது ரூபா எடுத்துட்டுப் போ. ஏன்னா கோணச்சத்திரத்தில் இருக்கிற வாடகைக் கார்க்காரங்க எல்லோரும் கூடிப் பேசி நம்ம ஊருக்கு வாறதா இருந்தா ….. டிபாசிட் வாங்கணும்னு தீர்மானம் போட்டிருக்காங்களாம். ஏன்னா ஊருக்கு வார காருங்களை நம்ம பயல்வ பஞ்சராக்கறாங்களாம். சிலரு இதோ வந்துட்டேன்னு எங்கோ ஓடிப் போயிடறாங்களாம். ஒன்ன மாதிரி நம்ம ஊரும் அவ்வளவு பிரசித்தம். சீக்கிரமா போ…

குடும்பத்தில் மகத்தான பொறுப்பைத் தியாக மனப் பான்மையோடு ஏற்றுக் கொள்வது போல் அங்குமிங்குமாய்ப் பார்த்த கலைச்செல்வன், சட்டைப் பைக்குள் கையை விட்டான். அவன் போட்டிருந்த ஸ்போர்ட் பாண்டிற்குள் ஒரு பையில் ஒரு கிழிந்த சினிமா டிக்கெட்டும், இன்னொரு பையில் ஒரு பாக்கெட் சிகரெட்டுமே மிஞ்சி இருந்தன. பெரிய ஆறுமுகம் குத்தலாக உபதேசித்தார்.

“துரை கையில் செக்குதான் இருக்கும். அத இப்போது மாத்த முடியாது. ஏளா. கனகா…ஒங்கிட்ட இருந்தாக் கொடு.”

கனகா , அப்போது தான் பீடிக்கடையிலிருந்து கூலியாக வாங்கி வந்திருந்த பணத்தில் சில்லறை நோட்டுக்களைத் தக்க வைத்துக் கொண்டு, ஒரு முழு நூறு ரூபாய் நோட்டை அண்ண னிடம் நீட்டினாள். பெரிய ஆறுமுகம், கோதி முடித்த கொண்டையைத் தடவி விட்டுக்கொண்டே, “வெளியில என் சைக்கிள் இருக்கு. எடுத்துட்டுப் போயி ஜல்தியா வாடா” என்றார்.

அசல் அக்கினிநாத் போல் கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு, அதன் மேல் தலையைக் கவிழ்த்துப் போட்டு நின்று கொண்டிருந்த, கலைச்செல்வன் முகத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே வந் தான். அப்போது வீட்டுக்குள் அழுகைச் சப்தம் பலத்தது. உள்ளே போகப் போனவன், மனசை அக்கினிநாத் மாதிரி வைத்துக் கொண்டு சைக்கிளை எடுத்தான். விடுத்தான்.

தெருவில் பம்பரமாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், அலறியடித்து ஓடும் படியும், மண் குடத்தில் தண்ணி ஏந்தி வந்த ஒரு பரமசாதுப் பெண், தான் தப்பிக்க குடத்தைக் கீழே போடும்படியும், கலைச்செல்வன் சைக்கிளை வேக வேகமாய் ஓட்டினான். அண்ணன் அக்கினிநாத் ஒரு படத் தில் இதே மாதிரியான கிளைமாக்ஸ் காட்சியில், எப்படி மோட்டார் பைக்கில் பாய்ந்தானோ, அதே போல் அந்தச் சைக்கிளையே ஒரு மோட்டார் பைக் ஆக்கினான். அது கீழே விழுந்து அவனைப் புறமுதுகு காட்டும்படி தட்டி விட் டது. மீண்டும் அவன் சைக்கிளில் ஏறி, “தந்தையைப் போல் ஒரு தெய்வமுண்டோ ‘ என்று அக்கினிநாத் பாடிய பாடலை மனசுக்குள்ளேயே ஒலிக்க வைத்துக்கொண்டு, கோணச் சத்திரத்திற்கு வந்துவிட்டான். சைக்கிளை உருட் டிக்கொண்டே வெள்ளை வண்ணத்தில் முண்டியடித்து நின்ற வாடகைக் கார்கள் பக்கம் நெருங்கினான்.

அங்கு என்ன கூட்டம்? தெரிந்த மொகங்களா தெரியுது? அது என்ன லாரி? ஒரே தலை மயம். கலைச்செல்வன் சைக்கிளை உருட்டிக்கொண்டே போனான்.

அங்கு லாரியில் இடுப்பளவு சுற்றுப் பலகைக்கு உள்ளே நாற்பது தலைகள் நெருக்கியடித்து நின்றன. அத்தனையும் விடலைத் தலைகள். சிலர் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள். பலர் மௌனமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள். அவனை அடையாளம் கண்டு கொண்ட பல வாயகள் விவகாரததை மாறி மாறிச் சொல்லப்போன தில், அந்தக் கூட்டத்தின் சத்தம் சந்தைச் சத்தமாய் ஒலித்த தால், கலைச் செல்வன லாரியின் முன் இருக்கைப் பககம் போனான. டிரைவருக்கு அடுத்து, அக்கினிநாத் மாவட்ட ரசிகர் மன்றத் தலைவன அககினிநாத் தாசன சோகப்பட்டுக் கிடந்தான். அவனுக்கு அருகே இருந்த லாரி உரிமையாளர் பெருமாள், இந்த மாதிரி ரசிகர் மன்ற நடவடிக்கைகளில் முன்னணியில் நிறகும் கலைச்செல்வனின் வருகையை அங்கீ கரித்தது போல் விவரத்தை விளக்கினார்.

“ஒங்க ஆருயிர் அண்ணன் அக்கினிநாத் மதுரைப் பக்கம் வெளிப்புறப் படப்பிடிப்புல ஓரு விபத்துல சிக்கிக்கிட் டாராம். லேசான காயமாம். மதுரை ஆஸ்பத்திரியில் சேர்ந் திருக்குன்னு திருச்சி ரேடியோ சொல்லிச்சு…”

“அப்பாடா எப்படியோ பிழைச்சார்..”

“அப்படியும் சொல்ல முடியாது. இந்த ரேடியோக்காரன் எல்லாச் செய்திகளையும் லேசாத்தான் சொல்லுவான். இந்திராகாந்தி செத்ததையே ரெண்டு நாள் சொல்லலியே. இதே மாதிரி அக்கினிநாத்துக்கும் ஏதாவது ஏற்பட்டு, அதை ரேடியோக்காரன் மூடு மந்திரமா சொல்லி யிருக்கலாம் இல்லையா? அதனால இப்பவே மதுரைக்குப் போறோம் ஆருயிர் அக்கினிநாத்தைக் கண்ணால் கண்ட பிறகுதான் நிம்மதி வரும். நீயும் வேணும்னா ஏறிக்கோ … ஐம்பது ரூபாய் தான்.”

கலைச்செல்வன், பையிலிருந்த நூறு ரூபாய் நோட்டை இரண்டு கையிலும் பிடித்து லாரி உரிமையாளரிடம் சுண்டி விட்டான். பிறகு கையிலிருந்த சைக்கிளைத் தொப்பென்று கீழே போட்டான். அதன் மட்கார்டு, பக்கத்தில் நின்ற ஒரு சின்னப் பையனின் தோளில் ரத்தக் களறியை ஏற்படுத்தி அந்தப் பையனைக் கீழே வீழ்த்தியது. கலைச்செல்வனுக்கு அது கண்ணில் படவில்லை. கீழே குனிந்து நான்கைந்து கற்களைப் பொறுக்கிக் கொண்டு அங்குமிங்குமாக ஓடியோடி எறிந்தான். பல கார்கள் ரிவர்சில் போயின. அப்படியும் திருப்திப்படாமல் ஐந்தாறு கடைகளை நோக்கிக் கல்லெறிந் தான். லாரியிலிருந்தும் சில பையன்கள் குதித்தார்கள். ஒரே கல்லெறி, சோடா பாட்டில்கள், மெட்ராஸ் ஸ்டைலில் எறியப் படாமல் கிராமத்துப் பாணியில் எறியப்பட்டன. இதனால் கடைகள் மூடப்பட்டன. போக்குவரத்து ஸ்தம்பித்தது. மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள்.

கண்ணகி மதுரையை எரித்துத் திருப்திப்பட்டது போல், கல்லெறிந்து திருப்திப்பட்ட கலைச்செல்வன், லாரியின் பின் பக்கமாக வந்தான். ‘அங்கினிநாத் அக்கினிநாத்’ என்று அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பினான். உடனே லாரியில் நின்ற விடலைகள் ‘வாழ்க வாழ்க’ என்று கோஷமிட்டார்கள். கீழே நின்ற லாரியின் பலகையில் முகம் போட்டுக் களைப்பாறிய கலைச்செல்வனை, கழுத்தைப் பிடித்து லாரிக்குக் கொண்டு வந்தார்கள்.

அந்தக் கூட்டத்திலிருந்து ஒவ்வொருவரும் நடிகர் அக்கினிநாத்தின் கல்யாண குணங்களைத் தங்கள் தரத்திற் கேற்றவாறு விளக்கிக் கொண்டிருந்ததைக் கலைச்செல்வன் உன்னிப்பாகக் கேட்டதால், லாரி ஓடுகிற உணர்வே அவனுக்கு வரவில்லை. ஒரே ஒருமுறை அப்பாவை நினைத்துப் பார்த்தான். அதற்குள் லாரி ஐம்பது கிலோ மீட்டரைத் தாண்டிவிட்டது.

– பூநாகம் (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1993, கங்கை புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *