புதிய தலைமுறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2023
பார்வையிட்டோர்: 1,019 
 
 

 (2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோபாவுக்குள் சுருண்டு படுத்த டேவிட் ராஜாவுக்கு தூக்கம் வரவில்லை. மனநிம்மதி இழந்து உழன்றான். 

நேற்றிரவு நடந்த சண்டையும், காட்சிகளும் மாறி மாறி மனசை வதைத்தன. 

‘வளர்ந்த மகளைக் கைநீட்டி அடிச்சது சரியில்லை’ என்று மனசு நெருடிற்று. 

‘அடியாத மாடு படியாது. கெறு பிடிச்சவள்’ என்பது அறிவின் சமாதானம். 

ஆளுக்கு ஆள் தங்களுடைய நியாயங்களைத் தான் சொன்னார்கள். மனைவி ரஞ்சிக்கு தன் நியாயங்கள். மகள் ஸ்டெல்லாவுக்கு தன் நியாயங்கள். தமிழ் மண்ணிலே பிறந்து வளர்ந்த தன் நியாயங்களுக்கு இந்த மண்ணிலே இடமில்லையா? 

மனம் வலிக்க மறுபக்கம் திரும்பினான். 

‘அலார்ம்’ மணிக்கூடு அடிக்கத் துவங்கியது. 

அதனை நிறுத்துவதற்கு மனைவி ரஞ்சி படுக்கை அறையிலிருந்து விரைந்து வந்தாள். அதற்கிடையில் ராஜாவே எழுந்து அதை நிறுத்தினான். ரஞ்சியின் கண்கள் சிவந்திருந்தன. முகத்தில் சோர்வு டன் கூடிய வாட்டம் அவளும் தன்னைப்போல தூக்கமின்றித் தவித்திருக்கக் கூடும் என்று தோன்றியது. இந்தச் சிந்தனைகளுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் அவன் அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைந்தான். அவன் ஆறு மணிக்கு வேலைக்குப் போக வேண்டும். அவசரமாகப் புறப்பட்டால்தான் முடியும். 

பாத்ரூமிலிருந்து வெளியே வந்த ராஜா, அறைக்குள் சென்று அவசர அவசரமாக உடைகளை மாற்றிக் கொண்டிருந்தான். 

ரஞ்சி கோப்பி கலந்து எடுத்து வந்து டைனிங் மேஜையில் வைத்தாள். 

வேலைக்குச் செல்லும் உடைகள் அணிந்து, ராஜா அறைக்கு வெளியே வந்தான். 

நேற்றிரவு வீட்டிலே நடந்த சச்சரவுக்கு பின் மயான அமைதி நிலவியது. 

‘கோப்பி போட்டிருக்கிறேன்… குடியுங்கோ’ என்றாள் ரஞ்சி. அமைதியைக் குலைத்து சகஜ நிலையை மீட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பேச்சுக் கொடுத்தாள். 

ராஜா பேசாமல் கோப்பியைக் குடிக்கத் துவங்கினான். 

சடுதியாக, அந்த அதிகாலை வேளையில், வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. 

‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்?’ என்கிற கேள்வி தொக்க, இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

பாபு கதவைத் திறந்தான். 

இரண்டு நோர்வேஜிய போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். 

ராஜாவும், ரஞ்சியும் உறைந்தார்கள். 

‘குமோர்ண். வீ.ஆர் பொலித்தி கான்ஸ்டபிள், கொம்மர் பிரா ஓஸ்லோ பொலித்தி ஸ்ரசூன்…’ என்று தங்களை நோர்வேஜிய மொழியான நொஸ்க்கில் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். 

(அவர்களுக்கிடையில் நோர்வேஜிய மொழியில் நடந்த உரையாடல் வருமாறு:) 

‘இங்க ஸ்டெல்லா என்ற பெண் இருக்கிறாளா?’ 

‘ஆம். அவள் என் மகள்.’ 

‘நல்லது. அவள் இரவு கொடுத்த முறைப்பாட்டின்படி உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம்’. 

‘என்ன? என் மகள் முறைப்பாடு செய்தாளா?’ 

‘நேற்றிரவு நீங்கள் உங்கள் மகளை மோசமான முறையிலே அடித்திருக்கிறீர்கள். கொடுமைப்படுத்தியிருக்கிறீர்கள். இதுபற்றி ஸ்டெல்லா முறைப்பாடு செய்திருக்கிறாள்.’ 

இந்த உரையாடல் ராஜாவுக்கு ஞானத்தை ஏற்படுத்தியது. 

நேற்றிரவு நடந்த சச்சரவில், ‘அடியாத மாடு படியாது’ என்று மகள் ஸ்டெல்லாவுக்கு இரண்டு தட்டுத் தட்டினான் ராஜா, அவள் அதனை ஆட்சேபிப்பதுபோல, ‘து ஹார் இக்க லோ ஸ்லோ மை’ என்று நோர்வேஜிய மொழியில் ஆத்திரமாகப் பேச முற்பட, ராஜாவின் கோபம் கட்டுங்கடங்காது போனது. தன்னை மறந்து அவன் அவளைத் தாறுமாறாக அடிக்கவும், அவள் ஓடிச் சென்று தன் அறைக்குள் கதவைச் சாத்திக் கொண்டாள்.. இடையிலே புகுந்த ரஞ்சிக்கும் நல்ல அடி. 

போலிஸ்காரர்கள் மிகப் பண்பாக விசாரித்து, அவர்களுடைய அனுமதியுடன் ஸ்டெல்லாவின் அறைக்குள் நுழைந்தார்கள். 

அந்த இடைவெளியைப் பயன்படுத்துவது போல, டேவிட் ராஜா அவனுடைய வாழ்வின் சில முக்கிய பக்கங்களைப் புரட்டினான். 

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், டேவிட், ஒரு வெள்ளைக்கார சுவாமியாரின் உதவியால், நோர்வே நாட்டுக்கு ஒரு மாணவனாக வந்து சேர்ந்தான். முதலில் நோர்வே மொழி கற்று, பின்னர் அதே மொழியில் தொழிற் கல்விப் பட்டமும் பெற்றான் கல்வித் தராதரத்துக்கு ஏற்ற வேலையும் கிடைத்தது. நோர்வே பெண் ஒன்றைக் கல்யாணம் செய்யும் வாய்ப்பினைத் தவிர்த்து, தமிழ் அடையாளத்தைத் தன்னுடன் கல்லறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற தாகத்துடன், விடுமுறையில் ஊருக்குச் சென்று, ரஞ்சியைக் கல்யாணம் செய்து கொண்டான். 

ரஞ்சி ஊரிலேயே நர்ஸ் வேலை பார்த்ததால், ஓஸ்லோ வந்து சேர்ந்ததும், அவளுக்கு வேலையில் சேர்வது கஷ்டமாக இருக்கவில்லை. ஒன்பது மாதத்திலேயே மொழியைக் கற்று, முதியோர் வைத்திய இல்லம் ஒன்றில் வேலை தேடிக் கொண்டாள். 

கணவன்-மனைவி இருவருமே வேலை செய்ததால், வீடு-கார்-மற்றும் ஆடம்பர பொருள்கள் என்று சேர்த்து, வசதிகளுடன் கூடிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். 

ஸ்டெல்லா பிறப்பை ஒட்டி, ரஞ்சி மூன்று மாதம் பிரசவ விடுப்பில் நின்றாள். தொடர்ந்து வேலை செய்தால் வளத்தினைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பது தீர்மானமாகவே, குழந்தை ஸ்டெல்லாவைப் பார்த்துக் கொள்ள ஒரு டாக் மம்மா (Dag mamma) தேவைப்பட்டது. அவளுடன் வேலை செய்யும் நோர்வேஜிய நர்சுகள், டாக் மம்மாவாகப் பல குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு நோர்வேஜியப் பெண்மணியை அறிமுகஞ் செய்து வைத்தார்கள். ஸ்டெல்லாவை அவளுடைய பராமரிப்பிலே சேர்ப்பதில் எவ்வித சிரமமும் இருக்கவில்லை. வேலைக்குச் செல்லும் பொழுது டாக் மம்மாவிடம் குழந்தையை ஒப்படைத்து, வேலையை விட்டு வரும்பொழுது குழந்தையை அழைத்து வருவது ரஞ்சிக்கும் வசதியாக இருந்தது ஸ்டெல்லாவும் நோர்வேஜிய டாக் மம்மாவின் பராமரிப்பில் வளர்ந்தாள். பின்னர்’பாண ஹாகென்’ என்றழைக்கப்படும் குழந்தைகள் கூடத்திலே சேர்க்கப்பட்டாள். இப்பொழுது ‘உண்டம்’ ஸ்கூலில் சேர்ந்து, இன்று எட்டாவது படிக்கிறாள். 

ஸ்டெல்லா இவ்வாறு நோர்வேஜிய பராமரிப்பிலும், சூழலிலும் வளர்வது அவர்களுக்குப் பெருமையாகவும் இருந்தது. இருவரும் வேலை செய்து வளத்தைப் பெருக்கிக் கொள்ளவும் அது தோதாக இருந்தது. நோர்வேயில் வாழும் சகதமிழர்களுக்கு தங்களுடைய அந்தஸ்தினைப் பறைசாற்றி விருந்துக் கேளிக்கைகளை வார இறுதி சிலவற்றிலே நடத்தி மகிழவும் வாய்ப்பு ஏற்பட்டது. எல்லாமே மகா சுமூகமாக நடைபெறுகின்றன என்று டேவிட் ராஜா தம்பதி கட்டிய கோட்டைதான் நேற்று மாலை நடந்த சம்பவம் ஒன்றினால் தகர்ந்தது. 

நேற்று வேலையிலிருந்து திரும்பும்பொழுது, இரண்டு தமிழ் படங்களை எடுத்து வரலாம் என்று கடைக்குப் ராஜா சென்றான். அவன் அங்கு நிற்பதைச் சட்டை செய்யாத இளவட்டக் கும்பல் ஒன்று அரட்டையில் ஈடுபட்டிருந்தது. 

‘ஆரு மச்சான், அந்த வெள்ளப் பொடிச்சி? முழு எடுப்பும் உந்த நோர்வேஜியன் காரியளைப் போல, விழுந்து விழுந்து, ஸோ சோஷல்! என்னாலை நம்ப முடியேல்லை மச்சான்!’ 

‘எனக்கெண்டாப் போலை? அவளைத் தமிழ் பெட்டை எண்டே சொல்ல முடியாதாம். அவள் இங்கைதான் பிறந்து வளந்தவளாம். எங்கடை தமிழ்ப் பொடிச்சியளோடை பழக மாட்டாவாம். எல்லாம் நோர்வேஜிய பெடியன்களும் பெட்டையளுந்தான் அவவின்ரை பிரண்ஸ்மாராம்.’ 

‘அவவின்ரை அப்பர் இங்கை ஸ்ருண்டாக வந்து, இங்கேயே படிச்சவர் எண்ட எடுப்பு.’ 

‘உமக்கு இன்னொரு விஷயம் தெரியுமே? அவை வீட்டிலையும் தமிழிலை கதைக்கிறேல்லையாம். நொஸ்கிலைதான் குசுவும் விடுகினமாம், மச்சான்” என்று ஊத்தை பகிடியை விட்டுக் கடகடத்துச் சிரித்தான். 

‘அவளின்ரை பெயர் என்ன மச்சான்?’ 

‘ஸ்டெல்லாவாம்… என்ரை அண்ணனின்ரை மகள்கூட இவள் படிக்கிற ‘உண்டம்’ஸ்கூலிலதான் படிக்கிறாள். இன்னும் ரெண்டு மூண்டு தமிழ்ப் பிள்ளையளும் அங்கை படிக்கினம். அவங்களோடை இவள் கதைக்கவும் மாட்டாளாம். 

‘நான் கேள்வி மச்சான், இவள் நோர்வேஜிய பொடியளோடை சேர்ந்து பியரும் அடிக்கிறவளாம். அவள் வளையம் வளையமாப் புகை விடுறதைப் பார்த்து நாங்கள் பிச்சை எடுக்க வேணும் மச்சான்…’ 

இதற்கு மேல் அவர்களுடைய சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருக்க டேவிட் ராஜாவால் முடியவில்லை. பொடியன்கள் இவரின்ட மகளைப் பற்றித்தான் ‘கமெண்ட்’ அடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட கடைக்காரன் மசிந்தினான். ராஜாவுக்கு உலமெல்லாம் இருண்டு வருவது போல இருந்தது. தான் கட்டிக் காத்த கௌரவம் எல்லாம் றோட்டிலே அடிக்கப்பட்ட சிதறுதேங்காயைப் போல ஆகிவிட்டதோ என்று நினைத்துக்கொண்டு வீடியோ படமும் எடுக்காமல் உடனேயே திரும்பிவிட்டான். 

எங்கேயோ பிழை நடந்துவிட்டது! 

எத்தகைய ஒரு மகத்தான வாழ்க்கையை அவன் தனது குடும்பத்துக்கு அமைத்துக் கொடுக்க உழைத்து கொண்டிருக்கின்றான். 

இந்த அந்நிய நாட்டிலிலும் கௌரவமாகப் பரம்பரை பரம்பரையாக வாழலாம் என்கிற இனிய கனவுகள், காற்றிலே கலைந்த கடுதாசிக் கூட்டமாளிகை போல…கலைந்தது அவன் மனம் துர்வாச முனிவனாக மாறியது… நெஞ்சிலே கனன்று கொண்டிருந்த அக்கினியை யார் மீதாவது கொட்டித் தீர்க்க வேண்டும்… 

இரவு ஏழு மணிக்கு ரஞ்சி வேலையிலிருந்து வீடு திரும்பினாள். அவள் வந்து கால்கூட ஆறவில்லை. 

“உவள் ஸ்டெல்லாவை நீ எப்படி வளர்த்து வச்சி இருக்கிறாய். தமிழ் பண்புக்கு தேவையானஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு வேண்டாம் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாவது வேண்டாமா? 

‘அவளுடைய போக்குக்கு எப்பவும் நீங்கள்தானே ‘சப்போர்ட்’. இப்ப என்ன வந்தது?” 

‘றோட்டிலை நிண்டு கண்டவன் நிண்டவன் எல்லாம் பேசுறான். பியர் குடிக்கிறாளாம். சிகரெட்டாய் ஊதித் தள்ளுறாளாம். நோர்வேஜிய பெட்டை’ எண்ட நினைப்பிலை குதிக்கிறாளாம்…’ 

‘உங்களுக்கு கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை. வேலைக்குப் போகாமல் அவளைக் கவனிக்கலாம் எண்டு நான் சொன்னன். நர்சு வேலையிலை பொல்லாலடிச்ச காசு வருகிதெண்டு நீங்கள்தான் சொன்னியள். பணம், பணம் எண்டு சேர்த்தீர்கள். நொஸ்க்கில் அவள் விண்ணியானால் போதுமெண்டு குதிச்சீங்கள். இப்ப என்ரை வளர்ப்பைப் பற்றிப் பேச வந்திட்டியள்… அவளும் தன் பங்குக்குப் பாய்ந்தாள். வேலைக்குப் போய் அவள் படும் சிரமம் அவளுக்குத் தெரியும். 

டேவிட் ராஜாவுக்கும் ரஞ்சிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் சூடேறிக் கொண்டிருந்த பொழுது, ஸ்டெல்லா வீட்டுக்குள் மெதுவாக நுழைந்தாள். 

‘உதிலை நில்லும் நோனா. ஸ்கூல் விட்டு எவ்வளவு நேரம்? இவ்வளவு நேரமும் எங்கை உலாத்திப் போட்டு வாறாய்?’ என்று ஸ்டெல்லாமீது பாய்ந்தான். 

தகப்பனிடமிருந்து இந்தத் தாக்குதலை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதான பதிலும் அவளிடம் இருக்கவில்லை. எதுவுமே நடக்காததுபோல தன்னுடைய அறைக்கு சென்றாள். 

‘வாடீ இங்கை, அப்பா கேட்டுக் கொண்டு நிக்கிறார். கேட்டதுக்குப் பதில் சொல்லன்டீ!” என்று கத்தினான் ரஞ்சி. 

‘வா சொம் சேட் போர் தேர இடாக்’ என்று நொஸ்கிலே பேசிக் கொண்டு ஸ்டெல்லா தன் அறையிலிருந்து வெளியே வந்தாள். 

ராஜாவுக்கு அவள் பேச்சையும் போக்கையும் தாங்க முடியவில்லை. 

‘தமிழிலை பேசுடி. நொஸ்கில பேசுறாளாம் நொஸ்கில! நீ என்ன நொஸ்கனுக்குப் பிறந்தவளா?’ என்று இரைந்தான். 

‘ஏன்? என்ன நடந்தது? புதினமா தமிழ், நொக்ஸ் என்று பேசுறியள்? இன்றைக்கு என்ன வந்திச்சு?’ 

‘ஊரிலை சந்திக்குச் சந்தி நிண்டு, நீ நோர்வேஜிய பெடி பெட்டையளோடை அடிக்கிற கும்மாளத்தை பற்றித்தான் பேசுறாங்கள். அதுதான் கேக்கிறான். ஏன் இவ்வளவு நேரம் பிந்தி வீட்டுக்கு வாறாய்?’ 

‘ஓ, அதுவரி? அதுதானே பார்த்தன். இரண்டு பேரும் காலையில் எழுந்து வேலைக்கு ஓடுறீர்கள். வீட்டுக்குத் திரும்பினால், சமையல்-ரி,வி-வீடியோ- சாப்பாடு – உறக்கம்! எனக்குப் பேசபழக-சிரிக்க-எல்லாம் ஸ்கூல் பிரண்ஸ்தான்! இது தெரியேல்லையா?’ என்று ஏளனத் தொனியில் சொன்னாள். 

‘பொத்தடி வாயை. உனக்கு நாக்கு நீண்டு போச்சு’ என்று பாய்ந்து, ஸ்டெல்லாவுக்கு ஓர் அறை விட்டான் ராஜா. 

இதனை ஸ்டெல்லா சற்றும் எதிர்பார்க்க வில்லை. 

‘ஸ்ரொப். து ஹார் இக்க லோ ஓ ஸ்லோமை’ என்று வலி தாங்கமாட்டாது கத்தினாள் ஸ்டெல்லா. 

ராஜா தன்வசம் இழந்தான். கைகளாலும், கால்களாலும் ஸ்டெல்லாவைத் துவைக்கத் துவங்கினான். விலக்குப் பிடிக்க இடையிலே புகுந்த ரஞ்சியும் வாங்கிக் கட்டிக் கொண்டாள். 

மழை ஓய்ந்தது. 

ஸ்டெல்லா தன் அறைக்குள் புகுந்து கொண்டாள். அவள் விசும்பும் சத்தம் நீண்ட நேரமாகக் கேட்டது. 

சோபாவில் வந்து அமர்ந்த பாபுவுக்கு நிதானம் திரும்பியது. அவளுக்கு இப்பொழுது பன்னிரண்டு வயது. தந்தை தாயாக அவர்கள் ஸ்டெல்லாவுடன் செலவு செய்த நேரம் பற்றிய கணக்கெடுப்பும் நடந்தது. பிழை தங்கள்மீதும் உண்டு என்பது இலேசாக உறைக்கலாயிற்று பணம் சம்பாதிப்பதிலே காட்டிய ஆர்வம், சில விஷயங்களை விட்டுக் கொடுக்கச் செய்துவிட்டது. 

சாப்பிடவில்லை. யாருடனும், பேசவில்லை. சோபாவில் சுருண்டு படுத்துவிட்டான். 

இப்பொழுது கோப்பி குடிக்கும் பொழுது போலீஸார் வந்துவிட்டனர். 

நோர்வேஜிய சட்டம் டேவிட் ராஜாவுக்கு தெரியாததல்ல. அச்சட்டத்தின்படி யாரும் யாரையும் அடித்துத் துன்புறுத்துவதற்கு இடமில்லை. கட்டிய மனைவி, பெற்ற பிள்ளை ஆகியவர்களைக்கூட அடித்துத் துன்புறுத்த முடியாது. யாராவது முறைப்பாடு செய்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும். 

ஸ்டெல்லா நோர்வேயில் பிறந்தவள். வளர்ந்தவள். புதிய தலைமுறையைச் சேர்ந்தவள். சட்டத்தின்படி பாதுகாப்பினைத் தேட அவளுக்கு உரிமை உண்டு. 

அந்த உரிமையை எடுத்துக் கொண்டுள்ளாள். 

ஸ்டெல்லாவின் அறைக்குள் சென்ற போலீஸார் திரும்பினார்கள். அவளிடமிருந்து முறைப்பாட்டினை எழுதி வாங்கியிருக்க வேண்டும். 

‘டேவிட், நோ கான் விட்ரா தில் பொலித்தி ஸ்டசூன்’ என்றான் ஒரு போலிஸ்காரன். 

தான் வேலைக்குச் செல்ல வேண்டும், அன்றேல் வரமுடியாது என்று அறிவிக்க வேண்டும் என்று டேவிட் தயங்கினான். 

அதனை ஸ்டேஷனிலே ஒழுங்கு செய்ய முடியும் என்று அவர்கள் நாகரிகமாகச் சொன்னார்கள். 

ரஞ்சியால் எதுவே பேச முடியாமல் பிரமை பிடித்தவளைப் போல நின்றாள். 

ஸ்டெல்லா அறையைவிட்டு வெளியே வரவில்லை. 

‘ஸ்கால் வீ என்று போலீஸார் சொன்னதும், எந்தவித மறுப்பும் சொல்லாமல் அவர்களைப் பின்தொடர்ந்தான் டேவிட் ராஜா. 

புலம் பெயர்ந்த நாடுகளிலே புதிய தலைமுறை ஒன்றும் உருவாகி வருகின்றது என்கிற ஞானத்தினைப் பரப்பும் முன்னோடியா இந்த ஸ்டெல்லா?

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *