கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 2,921 
 
 

(1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 – 10 | 11 – 20

1

‘கிணிங் கிணிங்’.

படலையடியில் சைக்கிள் மணியோசை கேட்டது. வீட்டு முற்றத்தில் நின்ற ஆட்டுக்குட்டிக்கு முருங்கைத் தளிர்களை மடித்து ஊட்டிக்கொண்டிருந்த பார்வதி நிமிர்ந்து பார்த்தாள்.

கிடுகு வேலிக்கும் தட்டிப் படலைக்கும் இடையிலுள்ள நீக்கலின் ஊடாகத் தபாற்காரன் வெளியே நிற்பது தெரிந்தது.

வாசற்படியில் சுருண்டு படுத்திருந்த நாய் வீமன் தலையை நிமிர்த்தி ஒரு தடவை உறுமியது. பின்பு பார்வதி எழுந்து செல்வதைப் பார்த்ததும் மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டது. இன்று அந்த நாய்க்கு ஏனோ சோம்பற் குணம் வந்துவிட்டது. மற்ற நாட்களில் தபாற்காரன் அந்த வழியாகச் சைக்கிளில் போகும்போது அது குரைத்துக்கொண்டே அவனைத் துரத்திச் செல்லும். அப்போது அவன் பயத்துடன் “அடி,அடி’ என அதனை விரட்டியபடி காலை மேலே தூக்கிக்கொண்டு பனை வடலிகளின் ஊடாக ஒற்றையடிப் பாதையில் படுவேகமாகச் சைக்கிளை ஓட்டிச் செல்வான். அதனைப் பார்த்துப் பார்வதி வேடிக்கையாகச் சிரிப்பாள்.

பார்வதிக்கு இருபத்தேழு வயது முடிந்து விட்டது. ஆனாலும், அவளது மெலிந்த கொடிபோன்ற உடலும், நீண்ட கேசமும், வட்டவடிவான வதனமும் அவளது தோற்றத்தில் ஐந்தாறு வயதைக் குறைத்துக் காட்டின. அவளது கண்களில் மட்டும் சதா ஏனோ ஏக்கம் குடிகொண்டிருந்தது.

ஆட்டுக்குட்டியை நெஞ்சோடு அணைத்து அதனை வருடியபடியே சென்ற பார்வதி தபாற்காரன் கொடுத்த கடிதத்தைப் பெற்றுவந்தாள்.

அது அவளது சிநேகிதியால் அவளுக்கு அனுப்பப்;பட்டிருந்த திருமண அழைப்பிதழ்.
அதன் முன் பக்கத்தில் மணமக்களின் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன.

“டேவிட் – மேரி’.

அதனை வாசித்தபோது பார்வதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன….. டேவிட் என்ற ஒருவனையா மேரி திருமணஞ் செய்யப் போகிறாள்‰ அப்படியானால், அவள் சந்திரனை ஏமாற்றி விட்டாளா?’ பார்வதியால் அதனை நம்பவே முடியவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேரியின் சிநேகிதம் அவளுக்குக் கிடைத்தது. மேரியும் பார்வதியும் அப்போது ஊரிலுள்ள தையல் வகுப்பொன்றில் பயின்று வந்தார்கள். மேரி அயற் கிராமத்திலிருந்து அந்தத் தையல் வகுப்புக்கு வந்து போய்க்கொண்டிருந்தாள். வகுப்பு முடியும்வரை சந்திரன் அவளுக்காகத் தெருவிலே காத்திருந்து அவளுடன் வீடுவரை கூடிச் செல்வான்.

சிலநாட்களில் தையல் வகுப்புக்குப் போவதாகக் கூறிவிட்டு மேரி சந்திரனுடன் எங்கெல்லாமோ சென்று வருவாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார விரும்பினார்கள். தாய் தந்தையரின் எதிர்ப்புக்கிடையே அவர்களது காதல் வளர்ந்து வந்தது. தனக்கும் சந்திரனுக்கும் உள்ள காதல் விவகாரங் களையெல்லாம் மேரி பார்வதியிடம் கதை கதையாகச் சொல்வாள். உயிர் உள்ளவரை சந்திரனைப் பிரியமாட்டேன் எனக் கூறியவள் இப்போது வேறொருவனுக்கு மாலையிடப் போகிறாளா?

பாடசாலை வாழ்க்கையிலும், தையல் வகுப்பிலும் தனக்குக் கிடைத்த தோழிகள் ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்த்தாள் பார்வதி. மேரியைத் தவிர மற்ற எல்லோருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. அவர்களில் பலர் இன்று குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக வாழ்கிறார்கள். வெகு காலமாகத் திருமணஞ் செய்யாதிருந்த மேரியும் இப்போது திருமணஞ் செய்யப்போகிறாள்.
ஆனால், எனது நிலை?

பார்வதியினது நெஞ்சின் அடித்தளத்திலிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.
எனது உள்ளத்தின் காதலை யாருக்கு எடுத்துச் சொல்ல முடியும்? பிறருக்குச் சொல்லக் கூடிய முறையிலா எனது காதல் அமைந்திருக்கிறது. நான் விரும்பியவரிடத்திலே கூட எனது காதலைத் தெரிவிக்க வகை அறியாது தவிக்கிறேனே‰ ஒரு வேளை வாழ்நாள் முழுவதும் எனது ஆசைகளை நெஞ்சுக்குள்ளே புதைத்து வைத்துக் கொண்டிருக்கவேண்டிய நிலைமை ஏற்படுமோ? அல்லது மேரியைப் போல காதலுக்கு ஒருவனும் கைப்பிடிக்க வேறொருவனுமாக அமைந்து விடுமோ என்னவோ?
பார்வதி, கையில் அணைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டி அவளது பிடியில் இருந்து திமிறித் துள்ளிக்குதித்துத் தாயிடம் ஓடியது.

வீட்டினுள்ளே “லொக்கு….. லொக்கு…’ எனப் பார்வதியின் தாய் சின்னத்தங்கம் இருமும் சத்தம் கேட்டது. அவளைக் கவனிப்பதற்காகப் பார்வதி உள்ளே சென்றாள்.
பார்வதியின் தாய் ஒரு நோயாளி. அவளுக்கு அடிக்கடி தொய்வு நோய் ஏற்படும். அதனால், பார்வதிக்கு வீட்டில் நிறைய வேலைகள் இருந்தன. சமையல் செய்வதிலிருந்து ஆடு மாடுகளைக் கவனிப்பதுவரை சகல வேலைகளையும் அவள்தான் செய்யவேண்டியிருந்தது. அவளது தந்தை செல்லப்பர் ஒரு லொறிச் சாரதி. அவர் வெளியிடங்களுக்கு லொறியுடன் புறப்பட்டுவிட்டால் எப்போது வீட்டுக்குத் திரும்புவார் எனச் சொல்ல முடியாது. கிழமையில் இரண்டு மூன்று நாட்கள்கூட வீட்டில் தங்குவது சந்தேகந்தான். அதனால், வீட்டின் நிர்வாகப் பொறுப்புகளையும் பார்வதிதான் கவனிக்க வேண்டியிருந்தது.

தொடர்ச்சியாக வந்த இருமலைக் கட்டுப்படுத்த முடியாமல் நெஞ்சை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்தபடி சின்னத்தங்கம் இருமிக் கொண்டிருந்தாள். அவளுக்கு மூச்சு முட்டியது. கண்கள் கலங்கின. மிகவும் கஷ்டப்பட்டு நெஞ்சுக்குள் பசையாக ஒட்டிக்கொண்டு வெளியே வரமறுக்கும் சளியை வரவழைக்கும் முயற்சியில் பலமாகக் காறி பக்கத்திலிருக்கும் பேணிக்குள் உமிழ்ந்தாள்.

பார்வதி தாயின் பக்கத்தில் அமர்ந்து அவளது நெஞ்சை நீவிவிட்டாள்.

”ஏனம்மா மருந்து குடிக்கேல்லையோ? காலமை தொடக்கம் ஒரே இருமலாயிருக்கு“.

”இல்லைப் பிள்ளை, மருந்து முடிஞ்சுபோச்சு“.

”அப்ப கொஞ்சம் சுடுதண்ணி கொணந்து தரட்டோ?“

மகளின் கேள்விக்குப் பதில்கூற முடியாதவாறு சின்னத்தங்கத்தை மீண்டும் இருமல் பற்றிக் கொண்டது.

பார்வதி குசினிக்குள் ஓடிச்சென்று ஒரு பேணியில் வெந்நீர் எடுத்துவந்து

சின்னத்தங்கத்தின் தலையை ஆதரவாகத் தடவியபடி சிறிது வெந்நீரை அவளுக்குப் பருக்கினாள்.

அதன் பின்புதான் சின்னத்தங்கத்துக்குச் சிறிது ஆறுதலாக இருந்தது. பார்வதி கவலையுடன் தாயைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பத்து வருடங்களுக்கு மேலாகச் சின்னத்தங்கம் இந்தத் தொய்வு நோயினால் கஷ்டப்படுகிறாள். சில நாட்கள் அவள் உற்சாகமாக வெளியே எழுந்து நடமாடுவாள். மற்றைய நாட்களில் படுக்கையில் படுத்துக்கொள்வாள். கடந்த இரண்டு மூன்று கிழமைகளாக அவளால் வெளியே வரமுடியவில்லை. நோயின் காரணமாக அவளது உடல் மிகவும் மெலிந்து போயிருந்தது. முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு கண்கள் குழி விழுந்திருந்தன.

”பிள்ளை, ஆர் வந்தது……. சைக்கிள் சத்தம் கேட்டுது?“

”அது தபாற்காரனம்மா. என்ரை சிநேகிதிக்கு கலியாணம். அதுதான் காட் அனுப்பியிருக்கிறாள்“.

சின்னத்தங்கம் ஏதோ நினைத்துக் கொண்டவளாகப் பார்வதியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். பின்பு ”அப்பு எப்ப வாறனெண்டு சொன்னவர் பிள்ளை?“ எனப் பார்வதியிடம் வினவினாள்.

”நேற்றே வாறன் எண்டு சொல்லிப்போட்டுப் போனவரம்மா. இன்னும் வரேலை…… ஒருவேளை இண்டைக்கு வரக்கூடும்“.

”அந்த மனிசனுக்கு குடும்பத்திலை அக்கறையில்லை. வீட்டிலை ஒரு குமர் இருக்கெண்டு சிந்தனை இல்லை. ஊர் ஊராய்ச் சுத்தித்; திரியிறார்“. என எரிச்சலுடன் தனது கணவனைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டாள் சின்னத்தங்கம்.

”என்னம்மா செய்யிறது…. அப்புவின்ரை வேலை அப்பிடி. வெளி இடங்களுக்கு லொறி கொண்டுபோனால், தூரப் பயணத்திலை ஏதேன் சுணக்கம் ஏற்படத்தானே செய்யும். எப்பிடியும் இண்டைக்கு வந்திடுவார்“.

”நான் அதைப் பற்றிச் சொல்லேல்லைப் பிள்ளை. உழைக்கிற காசுகளைக் குடிச்சு வெறிச்சுக் கொண்டு திரியிறார். வருங்காலத்தைப் பற்றி அவருக்கு யோசினை இல்லை. உனக்கு ஒரு கலியாணங் காட்சி வந்தால் கையிலை மடியிலை நாலு காசு இருந்தால்தானே இந்தக் காலத்திலை எதையுஞ் செய்ய முடியும்“.

”இப்ப என்ரை கலியாணத்துக்கு என்னம்மா அவசரம்‰ சும்மா மனசைப் போட்டுக் குழப்பாதையுங்கோ? பேசாமல் படுத்திருங்கோ“ எனச் சிறிது கண்டிப்பான குரலில் கூறினாள் பார்வதி.

சின்னத்தங்கம் போர்வையை இழுத்துப் போர்த்தபடி மறுபக்கம் புரண்டு படுத்தாள். அவள் பேசாது படுத்திருந்த போதிலும் பார்வதியைப் பற்றிய பலவாறான சிந்தனைகள் அவளது மனதில் அலைமோதி வேதனைப் படுத்திக் கொண்டிருந்தன.

மாட்டுக் கொட்டிலிலிருந்த பசு “அம்மா’ எனக் குரல் கொடுத்தது.

பார்வதி எழுந்து வெளியே வந்தாள். அப்போது படலையைத் தாண்டி, பனையோலைக் கட்டைச் சுமந்த வண்ணம் மாணிக்கம் அங்கு வந்துகொண்டிருந்தான்.

2.

மாணிக்கத்தைப் பார்த்தபோது பார்வதியின் முகம் மலர்ச்சி அடைந்தது. அவன் ஒவ்வொரு நாளும் அங்கு வருவான். சிறுவயதிலிருந்தே மாணிக்கத்துடன் பார்வதி நெருங்கிப் பழகி இருக்கிறாள். ஆரம்பப் பாடசாலையில் அவனுடன் கல்வி பயின்றிருக்கிறாள். சிறுமியாக இருந்தபோது அவனுடன் பாடசாலைக்குச் சேர்ந்து சென்று வந்திருக்கிறாள். மாணிக்கத்தின் வீடு அவர்களது வீட்டிலிருந்து சிறிது தூரத்திலேதான் இருக்கிறது.

மாணிக்கம் சகல உதவிகளையும் பார்வதிக்குச் செய்து கொடுப்பான். பனையிலிருந்து ஓலை வெட்டிவந்து அவளது பசுவிற்குக் கிழித்துப் போடுவான். கூப்பன் கடைக்குச் சென்று அவர்களது வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவான். செல்லப்பர் வெளி இடங்களுக்குச் செல்லும் வேளைகளில் அவன் சின்னத்தங்கத்திற்கும் பார்வதிக்கும் துணையாக அங்கே வந்து தங்குவான்.

சின்னத்தங்கத்தை, மாணிக்கம் “ஆச்சி ‘ என அழைப்பான். பார்வதியை அவன் பெயர் சொல்லித்தான் அழைப்பது வழக்கம். இப்படிச் சற்று அதிகப்படியான உரிமையை எடுத்துக் கொண்டதையிட்டு மாணிக்கத்தின் தாய் தந்தையர் அவனை அடிக்கடி கண்டிப்பதுண்டு. ஆனாலும், சிறுவயதிலிருந்து பழகிய பழக்கத்தை அவனால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. சின்னத்தங்கமும் பார்வதியும் கூட அவன் அப்படி அழைப்பதைத் தவறாக ஒருபோதும் எடுத்துக்கொண்டதில்லை.

தலையில் சுமந்துவந்த ஓலைக்கட்டை உடலைச் சரித்து தலையினால் நெம்பி தடாரென்ற சத்தத்துடன் கீழே சாய்த்தான் மாணிக்கம்.

கட்டுமஸ்த்தான உடலும் இளமைத் துடிப்பும் நெற்றியிலே அநாயாசமாகச் சுருண்டு விழும் கேசமும் அலட்சியம் நிறைந்த கண்களும் கபடமற்ற சிரிப்புமாக மாணிக்கம் எப்பொழுதும் தோற்றமளிப்பான்.

முற்றத்திலுள்ள முருங்கை மரத்தில் கட்டியிருந்த தாய் ஆடு, ஓலைக்கட்டு விழுந்த சத்தத்தினால் வெருட்சியுற்று மரத்தைச் சுற்றிச் சுற்றி வேகமாக ஓடியது. அப்போது படீரென அதன் கழுத்திலிருந்த கயிறு அறுந்துகொண்டது. மறுகணம் அது பலமாகக் கத்தியபடி வீட்டின் கோடிப்புறத்தை நோக்கித் துள்ளியோடியது.

”ஐயய்யோ…….. ஆடு அறுத்துக்கொண்டு ஓடுது. கிணத்தடிப் பக்கம் போனால், கிணத்துக்குள்ளை விழுந்தாலும் விழுந்திடும்“ எனக் கூறியபடி ஆட்டைப் பின்தொடர்ந்து ஓடினாள் பார்வதி.

ஆடு அங்குமிங்குமாக ஓடி அவளை அலைக்கழித்;தது. ஆட்டைத் துரத்தியதினால் பார்வதி களைப்படைந்தாள். அவளுக்கு மூச்சு வாங்கியது.

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கம் வேடிக் கையாக “கலகல’ வெனச் சிரித்தான். எங்கெல்லாமோ சுற்றிய ஆடு மீண்டும் முற்றத்துப் பக்கமாக ஓடிவந்தது.

”மாணிக்கம், அந்த ஆட்டைப் பிடியன்….. நான் களைச்சுப் போனன்“ எனக் கெஞ்சியபடி பார்வதி வேகமாக ஓடிவந்தாள்.

மாணிக்கம் இரு கைகளையும் அகல விரித்தபடி ஆட்டின் கழுத்தை வளைத்துப் பிடிப்பதற்காக அதை நோக்கிப் பாய்ந்தான். அந்தப் பொல்லாத ஆடு அவனது பிடியிலிருந்து லாவகமாக நொளுந்தி ஓடியது. பின்னால் ஓடிவந்த பார்வதி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மாணிக்கத்தின்மேல் அடிபட்டுக் கீழே சாய்ந்தாள். மாணிக்கம் அவள் கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்காக அவளைத் தன் இருகைகளாலும் அணைத்துப் பிடித்துக் கொண்டான்.

ஆட்டைப் பிடிப்பதற்காகப் பாய்ந்து சென்றவனது கைகளில் அழகான மான்குட்டியொன்று துள்ளிக்குதித்து வந்து வீழ்ந்தது போல் பார்வதி அவனது கைகளுக்குள் வீழ்;ந்து அகப்பட்டுக் கொண்டாள்.

அவளின் கண்கள் படபடத்தன? வதனம் குப்பென்று சிவந்துவிட்டது. மாணிக்கம் இப்படித் தன்னை கட்டிப்பிடித்துக் கொள்வான் என அவள் சற்றேனும் எதிர்பார்க்கவில்லை. மறுகணம் மாணிக்கத்தின் பிடியை விலக்கிகொண்டு அவள் வெட்கத்துடன் குசினிக்குள் ஓடி மறைந்தாள்.

மாணிக்கம் ஒரு கணம் திகைத்து நின்றான். அவன் சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது. பார்வதியை அவன் தாங்கிப் பிடித்திராவிட்டால் ஒருவேளை அவளது தலை நிலத்திலே அடிபட்டிருக்கும். வேண்டுமென்றேதான் தன்னைக் கட்டிப் பிடித்ததாகப் பார்வதி நினைத்துக்கொள்வாளோ என அவனது மனம் பதறியது.

ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்டு ஆட்டைத் துரத்திப் பிடித்துவந்து மரத்திலே கட்டினான் மாணிக்கம். பின்பு திண்ணைத் தாழ்வாரத்தில் செருகியிருந்த பாளைக்கத்தியை எடுத்து முற்றத்திலே கிடந்த ஓலைகளைச் சிராய்த்து மட்டைகளை வேறாக்கத் தொடங்கினான்.

குசினிக்குள் சென்றிருந்த பார்வதி தேநீர் தயாரிக்கத் தொடங்கினாள். சிறிது நேரத்துக்குமுன் நடந்த நிகழ்ச்சியினால் அவளது நெஞ்சுக்குள் ஏற்பட்டிருந்த படபடப்பு இன்னமும் ஓயவில்லை.

மாணிக்கம் ஓலைகளைச் சிராய்த்துவிட்டு அதனைக் கிழிக்கத் தொடங்கினான்.
பார்வதி தேநீருடன் வெளியே வந்தாள்.

மாணிக்கம் எழுந்து சென்று சுவரின்மேல் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தனது பேணியை எடுத்துவந்து பார்வதியிடம் நீட்டினான்.

அவள் தேநீரைப் பேணிக்குள் ஊற்றும்போது எதுவுமே பேசவில்லை. அவளிடத்தில் ஏற்பட்டிருந்த நாணம் அவளைப் பேசவிடாது தடுத்தது.

தேநீரைக் குடித்துக்கொண்டே ”நல்ல வேளை, நான் பிடிச்சிருக்காட்டில் உங்கடை தலை நிலத்திலை அடிபட்டிருக்கும்“ என்றான் மாணிக்கம்.

”நான் கீழே விழுந்திருந்தாலும் பறவாயில்லை. அந்த நேரத்திலை நீ என்னை பிடிச்ச மாதிரியை ஆராவது கண்டிருந்தால் வித்தியாசமாய்த்தான் நினைப்பினம்“.

”வித்தியாசமாய் நினைக்கிறதுக்கு அதிலை என்ன இருக்கு?“ எனக் கேட்டான் மாணிக்கம் அலட்சியமாக.

”அதிலை பிழையில்லை எண்டு நினைக்கிற அளவுக்கு எங்கடை சமுதாயத்தில இன்னமும் முன்னேற்றம் வரேல்லை மாணிக்கம்“ எனக் கூறிய பார்வதி, தான் அப்படிக் கூறியதால் அவனது மனம் புண்பட்டிருக்குமோ என நினைத்துக்கொண்டாள்.

”நான் ஒரு பிழையும் செய்யேல்லை எண்டு உங்களுக்குத் தெரிஞ்சா அது எனக்குப் போதும். மற்றவையளைப்பற்றி எனக்குக் கவலையில்லை“ எனக் கூறிவிட்டு கிழித்த ஓலைகளை அள்ளிக்கொண்டு மாட்டுக்கொட்டில் பக்கம் சென்றான் மாணிக்கம்.
பார்வதியின் மனதில் அவள் ஆரம்பப் ;பள்ளிக்கூடத்தில் மாணிக்கத்தோடு சேர்ந்து படித்தபோது நடந்த நிகழ்ச்சியொன்று நினைவில் வந்தது.

இடைநேரங்களில் பாடசாலை மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடுவார்கள். விளையாட்டு முடிந்ததும் தாகந்தீரப் பாடசாலைக் கிணற்றில் தண்ணீர் அள்ளிப் பருகுவார்கள். மாணிக்கம் பாடசாலைக் கிணற்றிலே கொடிபிடித்துத் தண்ணீர் அள்ளக்கூடாது.

ஒரு நாள் அவன் விளையாடிக் களைத்து தாகமெடுத்த நேரத்தில் கிணற்றிலே தண்ணீர் அள்ளக்கூடிய மாணவர்களிடம் தனக்குத் தண்ணீர் அள்ளி வார்க்கும்படி கெஞ்சினான். ஒருவராவது அவனுக்கு உதவ முன்வரவில்லை. அவனைத் தனியாகக் கிணற்றடியில் விட்;டுவிட்டு எல்லோரும் வகுப்பறையை நோக்கி ஓடிவிட்டார்கள். மாணிக்கம் மறுகணம் ஒருவித ஆவேசத்துடன் அந்தக் கிணற்றிலே கொடிபிடித்துத் தண்ணீர் அள்ளிப் பருகி விட்டான்.

வகுப்பறையில் இருந்தவாறு அதனைக் கவனித்த தலைமை யாசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.

பாடசாலைக் கிணற்றிலே தண்ணீர் அள்ளிய குற்றத்திற்காக மாணிக்கத்தை அழைத்து, “சுளீர் சுளீ’ரெனப் பிரம்பினால் முதுகிலே அடித்துவிட்டார். மாணிக்கம் அப்போது அழவில்லை. தனக்குத் தண்ணீர் அள்ளிக் கொடுக்க மறுத்தவர்களைப் பழிவாங்கிவிட்ட திருப்தியோடு அலட்சியத்துடன் வீரச் செயல் புரிந்துவிட்டவன்போன்று நடந்துசென்று தனது இடத்திலே உட்கார்ந்துகொண்டான்.

”என்ன பார்வதி, கடுமையான யோசினை?“

மாணிக்கத்தின் குரல் கேட்டுப் பார்வதி தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.

”இண்டைக்குத் திங்கட்கிழமையெல்லோ.. சங்கக் கடைக்குப் போகவேணும்“ என ஞாபகப்படுத்தினான் மாணிக்கம். பார்வதி உள்ளே சென்று அரிசிக் கூப்பன்களையும் ஓலைப் பையையும் எடுத்து வந்தாள்.

”அரிசியைமட்டும் வாங்கிக்கொண்டுவா மாணிக்கம். மற்றச் சமான்கள் வாங்கக் காசில்லை. அப்பு வந்த பிறகுதான் வாங்க வேணும்“ எனக் கூறிக்கொண்டே அவனிடம் கூப்பன்களையும் ஓலைப்பையையும் கொடுத்தாள்.

மாணிக்கம் அதனைப் பெற்றுக்கொண்டு கடைக்குப் புறப்பட்டான்.

3.

பனை வடலிகளுக் கூடாகச் செல்லும் ஒற்றைடிப்பாதையில் மாணிக்கம் நடந்துகொண்டிருந்தான். பெயர் பெற்ற யாழ்ப்பாணத்து வெயில் ‘சூள் சூளெ’ன்று கொளுத்திக்கொண்டிருந்தது. அந்த வெங்காரில் சமைந்துபோயிருந்த பனைவடலியொன்றின் காவோலை காற்றில் அசைந்து பக்கத்து வடலியில் கீறி “கொர்…….. கொர்……..’ என ஒலியெழுப்பியது. அந்தச் சரசரப்பின் ஓசையைக் கேட்டு மாணிக்கம் முகத்தைச் சுளித்துக் கொண்டான். அவனுக்கு எப்போதுமே அந்த ஓசையைச் சகிக்க முடிவதில்லை. வெயிலில் வெந்துபோய்க்கிடந்த மண் அவனின் பாதத்தைச் சுட்டெரித்து உச்சி வரை சூடேற்றியது. அதன் தகிப்பைத் தாங்க முடியாதவனாய் அவன் வேகமாக ஒற்றையடிப் பாதையைக் கடந்து ஒழுங்கை முடக்கில் திரும்பித் தெருவை யடைந்தான்.

”டே…….“

பின்னாலிருந்து யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. மாணிக்கம் திரும்பிப் பாராது நடந்துகொண்டிருந்தான்.

”டேய் மாணிக்கன்….“

மீண்டும் அதே குரல் சற்றுக் கடுமையாக ஒலித்தது. அது துரைசிங்கம் முதலாளியின் குரல்தான் என்பது மாணிக்கத்துக்குத் தெரியும். அவன் இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.

சைக்கிளில் வந்து கொண்டிருந்த துரைசிங்கம் முதலாளி அவன் அருகில் வந்ததும் சைக்கிளை நிறுத்தினார்.

துரைசிங்கம் முதலாளியைப் பார்ப்பதற்கே பயமாக இருக்கும். ஆஜானுபாகுவான தோற்றம், கிருதா மீசை, பரந்தநெற்றி, பருத்த தொந்தி, இவற்றைப் பார்த்தவுடனேயே அவரை ஊரிலுள்ள சண்டியன் என யாரும் இனங்கண்டு கொள்ளலாம்.

”என்னடா, நான் கூப்பிடக் கூப்பிடப் பேசாமல் போறாய். என்ன காது அடைச்சுப் போச்சோ..“

”…………“

”உன்ரை கொப்பன் கோவிந்தன் எங்கை போட்டான்?“ துரைசிங்கம் முதலாளி கேட்ட விதம் மாணிக்கத்திற்கு ஆத்திரமூட்டியது. ஆனாலும், அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு பதில் சொன்னான்.

”அப்பு தோட்டத்திலைதான் நிப்பர்.“

”என்ரை வளவு வேலியெல்லாம் பிஞ்சுபோய்க்கிடக்கு? அதை வந்து அடைச்சுத் தரச்சொல்லி இரண்டு மூண்டு நாள் கொப்பனிட்டைச் சொன்னனான். அவன் அந்தப் பக்கம் திரும்பியும் பாக்கிறானில்லை“.

”இப்ப தோட்டத்திலை மிளகாய்க் கண்டு நடுகை நடக்குது. அதனாலைதான் அப்புவுக்கு வர நேரமில்லை“ பதில் கூறினான் மாணிக்கம்.

”நீ சும்மா தானேடா திரியிறாய். அந்த வேலியை வந்து அடைச்சுவிடன்“.

”எனக்கு நேரமில்லை“.

”செல்லப்பர் வீட்டு வேலையெல்லாம் செய்து குடுக்கிறாய். நான் கேட்டாத்தான் உனக்கு நேரமில்லையோ?“

துரைசிங்கம் முதலாளியின் கேள்வி மாணிக்கத்தைப் பொறுமையிழக்கச் செய்தது.

”அது என்ரை விருப்பம். அதைப் பற்றி நீங்கள் கதைக்கத் தேவையில்லை“.

”என்னடா ஞாயம் பேசிறாய். நீ வந்து வேலி அடைச்சுத்தரப் போறியோ இல்லையோ?“

”என்னாலை முடியாது“

”என்னடா ….. என்னோட எதிர்த்தோடா கதைக்கிறாய்“ துரைசிங்கம் முதலாளிக்குக் கோபம் பொங்கியது.

”உங்களுக்கும் எனக்கும் கதை இல்லை. ஏதேன் தேவையெண்டால் அப்புவோடை கதையுங்கோ…..“ மாணிக்கம் அவரை முறைத்துப் பார்த்தான்.

”என்னடா நீ அவ்வளவு தூரத்துக்கு வந்திட்டியோ, அடிச்சனெண்டால் பல்லெல்லாம் கொட்டிண்டுபோம்“; எனக் கூறிக்கொண்டே சைக்கிளிலிருந்து இறங்கினார் துரைசிங்கம் முதலாளி.

”சும்மா தெருவிலை போய்க்கொண்டிருந்த என்னோடை நீங்கள்தான் வலியக் கொளுவினனீங்கள்….. மேலிலை தொடுங்கோ பாப்பம். நீங்கள் நாலு அடி அடிச்சால் நான் ஒரு அடியெண்டாலும் அடிக்கமாட்டனோ…?

மாணிக்கம் துரைசிங்கம் முதலாளியை நெருங்கினான்.

துரைசிங்கம் முதலாளி அடிப்பட்ட சிறுத்தையானார். அவரது தேகம் ஆத்திரத்தால் ஆட்டங்கண்டது. ஆனாலும் அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். இவன் கூறுவது போல தற்செயலாகத் தனது தேகத்தில் கை வைத்துவிட்டால் மானம் போய்விடுமே என நினைத்துக்கொண்டு சைக்கிளில் ஏறிக்கொண்டார்.

ஒரு கீழ் சாதிப் பயலுக்கு இவ்வளவு துணிவு வந்திட்டுதோ…? அவர் மனம் மறுகினார்.

”டே ….உன்னை அடிக்கிறது எனக்கொரு பெரிய வேலை இல்லையடா, நீ இப்ப போ. நான் உன்னை கவனிச்சுக் கொள்ளுறன்“ எனக் கூறிவிட்டு சைக்கிளைச் செலுத்தத் தொடங்கினார் துரைசிங்கம் முதலாளி.

கோபத்தினால் ஏற்பட்ட படபடப்பு நீங்காதவனாய் கூப்பன் கடையை நோக்கிச் சென்ற மாணிக்கத்தின் மனதில் துரைசிங்கம் முதலாளியைப் பற்றிய பலவாறான சிந்தனைகள் அலைமோதின.

4.

பார்வதி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். எவ்வளவோ முயன்றபோதிலும் அவளுக்கு நித்திரை வரவில்லை. அவளது மனதில் மாணிக்கத்தைப் பற்றிய நினைவுகள் நிறைந்திருந்தன. காலையில் ஆட்டைப் பிடிப்பதற்காக ஓடிவந்த மாணிக்கம் தன்னைக் கட்டிப்பிடித்த நிகழ்ச்சி அவளது மனதில் அடிக்கடி அலைமோதிக்கொண்டிருந்தது. அது தற்செயலாக நடந்த நிகழ்ச்சியாக இருந்தபோதிலும் அதனை நினைத்துப் பார்க்கும்போது அவளது உள்ளத்தில் ஓர் இன்ப உணர்வு ஏற்படச் செய்தது.

“ஏன் எனது மனதில் மாணிக்கத்தின் நினைவுகள் அடிக்கடி வந்து அலைமோதுகின்றன? – இப்படி நான் மாணிக்கத்தைப் பற்றி நினைப்பது எவ்வளவோ விபரீதமான செயல்தான். ஆனாலும் இந்த நினைவுகளை என் மனதிலிருந்து அகற்ற முடியவில்லையே’.

“எனது மனதை மாணிகத்தினால் புரிந்திருக்க முடியுமா? என்னால் மாணிக்கத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மாணிக்கம் விரும்பினால், என்னை அடைவதற்கு எத்தகைய எதிhப்;புகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்த்து சமாளிக்கக்கூடிய துணிவும் மனத்திடமும் மாணிகத்திடம் நிறைய இருக்கின்றது’.

பார்வதியின் மனதில் சிறுவயதில் நடந்த நிகழ்ச்சியொன்று நினைவில் வந்தது.
மாணிக்கம் பாடசாலைக்குச் செல்லும்போது பார்வதியின் வீட்டுக்கு வந்து அவளையும் கூடவே அழைத்துச் செல்வான். பாடசாலையிலிருந்து திரும்பும் போதும் அவன் அவளை அழைத்து வந்து வீட்டிலே விட்டுவிட்டுத்தான் தனது வீட்டுக்குச் செல்வான்.

பாடசாலைக்குச் செல்லும் வழியிலே உள்ள வளவொன்றில் வேலியோரமாக இரண்டு கிளிமூக்கு மாமரங்கள் இருக்கின்றன. மாங்காய்க்; காலத்தில் கள்ளத்தனமாகப் பாடசாலைச் சிறுவர்கள் அந்த மரத்தில் மாங்காய் அடித்துச் சாப்பிடுவது வழக்கம்.
மாணிக்கம்தான் வேலிமேல் ஏறி வளவுக்குள் குதித்து மாமரத்திலிருந்து மாங்காய்களைப் பறித்து எல்லோருக்கும் கொடுப்பான். மரத்தின் சொந்தக்காரர் பலமுறை தலைமையாசிரிடம் அவன் களவாய் மாங்காய் பறிப்பதைப்பற்றிக் கூறியதால் மாணிக்கம் தண்டனையும் பெற்றிருக்கிறான்.

ஒருநாள் பாடசாலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது பார்வதி தனக்கு மாங்காய் பறித்துத் தரும்படி மாணிக்கத்திடம் வேண்டினாள். அவன் மரத்திலேறி மாங்காய் பறித்துக் கொண்டிருந்த போது மாமரத்தின் சொந்தக்காரர் திடீரென அங்கே வந்துவிட்டார். அவரைக் கண்டதும் மாங்காயை வாயிலே கௌவிக்கொண்டு மாணிக்கம் வேலிக்கு மேலால் வெளியே குதித்து விட்டான். பார்வதியும் மாணிக்கமும் ஒரே ஓட்டமாக அவ்விடத்தைவிட்டு ஓடினார்கள். வீட்டுக்குச் செல்லும் ஒழுங்கை முடக்கில் வந்ததுந்தான் மாணிக்கம் பார்வதியிடம் மாங்காயைக் கொடுத்தான்.

”என்ன மாணிக்கம் ஒரு மாங்காய்தான் கிடைச்சுதோ?“

”ஓம் பார்வதி, ஒண்டுதான் பிடுங்கினனான். அதுக்கிடையிலை அந்த வளவுக்காரன் வந்திட்டார்“.

”நீ மாங்காய் பிடுங்கினதைப் பற்றி அவர் வாத்தியாரிட்டைச் சொல்லுறாரோ தெரியேல்லை“ பார்வதி கவலையுடன் கூறினாள்.

”சொன்னால் சொல்லட்டும். வாத்தியார் இரண்டு அடி போடுவார், அதுக்கு நான் பயப்பிடேல்லை.“

”என்னாலைதானே உனக்கு அடிவிழப் போகுது மாணிக்கம்“ எனக்கூறியபோது பார்வதியின் கண்கள் கலங்கிவிட்டன.

பார்வதி மாங்காயை வாயில் வைத்துக் கடித்தாள். அதன் தோல் வயிரமாக இருந்தது. பலமாகக் கடிக்க முயன்றாள் அவளது முரசிலே இலேசாக இரத்தம் கசிந்தது. அவளால் அதனைக் கடிக்க முடியவில்லை.

”மாணிக்கம் நீதான் இதைக் கடிச்சுத்தா“ எனக் கூறி மாணிக்கத்திடம் மாங்காயைக் கொடுத்தாள் பார்வதி.

அவன் அதனைத் தனது வாயில் வைத்துக் காக்காய்க்கடி கடித்துக் கொடுத்தான். இருவருமாக அந்த மாங்காயை ருசித்த வண்ணம் வீட்டுக்குச் சென்றார்கள்.

அப்போது அதனைக் கவனித்தபடி அந்த வழியாக வந்த செல்லப்பர் பார்வதி வீட்டுக்கு வந்ததும் அவளைக் கடிந்தார்.

”எடியே, எளிய சாதிக்காரன் கடிச்சுப்போட்டுக் குடுத்த மாங்காயை ஏனடி சாப்பிட்டனி? இனிமேல் அவனோடை சேர்ந்து பள்ளிக்கூடம் போகப்பிடாது“ என ஏசினார்.

பார்வதியின் சிந்தனைகள் கலைந்தன.

மாணிக்கம் கடித்துக் கொடுத்த மாங்காயைச் சாப்பிட்டதற்கே கோபமடைந்த தந்தை இப்போது நான் மாணிக்கத்தை விரும்புகிறேன் என்பதை அறிந்தால் சும்மா விட்டுவிடுவாரா? – ஒரு பிரளயமே நடந்தாலும் நடக்கலாம் என எண்ணி அவள் கலக்கமடைந்தாள்.

5.

அம்பலவாணரை அறியாதவர்கள் யாரும் அந்த ஊரில் இருக்க முடியாது. அம்பலவாணர் என்று கூறுவதைவிட “ஐஸே’ அம்பலவாணர் என்று அடைமொழியுடன் கூறினால்தான் எல்லோரும் இலகுவாகப் புரிந்துகொள்வார்கள். அவர் தனது நண்பர்களை “ஐஸே, ஐஸே’ என அடிக்கடி அழைப்பதனாலேதான் அந்த அடைமொழி அவருடன் ஒட்டிக்கொண்டுவிட்டது. அவரது தந்தை ஏராளமான செல்வத்தைத் தேடி வைத்துவிட்டு இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டன. தந்தை தேடி வைத்த பணத்தை வட்டிக்குக் கொடுத்து அதிலிருந்து வரும் வருவாயை எடுத்து அவர் படாடோபமாகச் செலவழிப்பார். அவரை அநேகமாக ஊரிலுள்ள வாசிகசாலையிலேதான் பார்க்கலாம். சலவை செய்து மடிப்புக் குலையாத வேட்டியும், உயர்ந்தரக சேட்டும், சென்ற வாசனையும், கழுத்திலே தொங்கும் நீண்ட வடச் சங்கிலியுமாக அவர் எப்போதும் காட்சிதருவார். அவரைப் பார்ப்பவர்களின் மனதில் அவர் ஒரு “மைனர்’ என எண்ணத் தோன்றும்.

அம்பலவாணர் அதிகம் படித்திருக்கவில்லை. ஆனாலும் தனக்கு ஆங்கிலமும் தெரியுமென மற்றவர்கள் நினைக்க வேண்டுமென்பதற்காகத் தனக்குத் தெரிந்த ஒரு சில ஆங்கிலச் சொற்களை அநாயாசமாக அள்ளி வீசுவார். ஊரிலுள்ள இளவட்டங்களிடையே அவருக்க ஒரு தனி மதிப்பு உண்டு. எப்பொழுதும் அவருடன் ஒரு சில இளைஞர்களைக் காணலாம். எந்தப் புதிய சினிமாப் படம் வந்தாலும் அவர் தனது நண்பர்களில் சிலரையும் கூட்டிக்கொண்டு படம் பார்க்கச் சென்றுவிடுவார். சினிமாப் படங்களில் வரும் கதாநாயகர்களைப் போல அவர் தன்னை நினைத்துக் கொள்வார்.
காலை நேரங்களில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பலர் வாசிகசாலைக்குப் பக்கத்திலிருக்கும் பஸ்தரிப்பில் கூடுவார்கள். தையல் வகுப்புக்குச் செல்லும் மாணவிகளும் அந்த வழியாலேதான் செல்வார்கள். அவ்வேளையில் தனது நண்பர்களுடன் வாசிகசாலையிலிருந்து கேலிக்கதைகள் பேசிப் பலமாகச் சிரித்து பெண்களின் கவனத்தைத் தனது பக்கம் இழுப்பதில் அம்பலவாணருக்கு ஒரு தனி இன்பம். ஊரிலுள்ள பெண்களில் சிலர் தன்னைக் காதலிப்பதாகத் தனது நண்பர்களிடம் கதை கதையாகச் சொல்லுவார் அம்பலவாணர். அவர் கூறும் கதைகளில் எவ்வளவு தூரம் உண்மையிருக்குமென்பதை ஆராய்ந்து பார்க்காது இரசனையுடன் கேட்பதில் நண்பர்களுக்கு ஒரு தனி ஆனந்தம்.

நேரங் கிடைக்கும் போதெல்லாம் பார்வதியின் வீட்டுக்கு அம்பலவாணர் வருவதற்குத் தவறுவதில்லை. சின்னதங்கத்தைப் பார்க்கும் சாட்டில் அவர் அடிக்கடி அங்கு வருவார்.

”மாமி… மாமி…“

வெளியே குரல் கேட்டு குசினியிலிருந்த பார்வதி எட்டிப் பார்த்தாள். அம்பலவாணர் கையில் ஒரு பார்சலுடன் அங்கு நின்று கொண்டிருந்தார்.

”வாருங்கோ அண்ணை… வாருங்கோ… நேற்றுத் தொடக்கம் அம்மா உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறா“ என அவரை குதூகலித்தபடி வரவேற்றாள் பார்வதி.
அம்பலவாணர் அவளைப் பார்த்துச் சிரித்தப்படி உள்ளே நுழைந்தார். அப்போது அவர் அணிந்திருந்த சேட்டிலிருந்து ‘சென்ற்’ வாசனை “கம்’ மென்று வீசியது.

”அம்மா …இஞ்சை அண்ணை வந்திருக்கிறார்“ எனக் கூறியபடி தாய் படுத்திருக்கும் அறையை நோக்கிச் சென்றாள் பார்வதி. அவளைத் தொடர்ந்து அம்பலவாணரும் உள்ளே சென்றார்.

வெளியே அம்பலவாணரின் குரல் கேட்ட பொழுதே அவரை வரவேற்பதற்காகச் சின்னதங்கம் தனது படுக்கையிலிருந்து எழுந்து சுவரிலே சாய்ந்தபடி இருந்தாள்.
அம்பலவாணரைக் கண்டதும் சின்னத்தங்கம் முகம் மலர அவரை வரவேற்றாள்.
”வா தம்பி….. எனக்கு மருந்து வாங்கியந்தனியோ? அதில்லாமல் இப்ப இரண்டு நாளாய் எனக்கு நெஞ்சுக்குள்ளை முட்டாய்க்கிடக்கு? நித்திரையும் வருகுதில்லை“.

”எனக்கு எங்கைமாமி நேரம்… நேற்று முழுதும் ஒரு விசயமாய் யாழ்ப்பாணத்திற்குள்ளை “பிஸி’ யாத் திரிஞ்சனான். அதுதான் இங்கை வரமுடியேல்லை. மருந்து இல்லாமல் மாமி கஷ்டப்படப்போறாவே எண்டு நேற்று ஒரே கவலையாய் இருந்தன்“ எனக் கூறிக்கொண்டே கையில் வைத்திருந்த கடதாசி உறையிலிருந்து ஒரு சாராயப் போத்தலை வெளியே எடுத்தார் அம்பலவாணர்.
தொய்வு நோயினால் மூச்சுமுட்டிக் கஷ்டப்படும்போதும் நித்திரையின்றித் தவிக்கும்போதும் சின்னத்தங்கம் சிறிது சாராயத்தைப் பருகுவாள். அது அவளுக்குச் சிறிது ஆறுதலைக் கொடுக்கும். தன்னை மறந்து நிம்மதியாகத் தூங்குவாள். அம்பலவாணர் அடிக்கடி சின்னதங்கத்துக்குச் சாராயம் வாங்கி கொடுக்கத் தவறுவதில்லை. இதற்காகச் சின்னத்தங்கம் அவருக்குப் பணம் ஏதும் கொடுப்பதில்லை. அவளின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக அம்பலவாணர் இதனைச் செய்கிறார்.
தனது கணவன் செல்லப்பருக்கு தெரியாமல்தான் சின்னத்தங்கம் அந்த மருந்தைப் பாவித்து வருகிறாள். தெரிந்தாலும் அவர் அதனைத் தடுக்கப் போவதில்லை. ஆனால் சாராயம் வீட்டிலிருப்பது தெரிந்துவிட்டால் ஒரே நேரத்தில் அவர் அதனைத் தீர்த்துக் கட்டிவிடுவாரென்ற பயத்திலேதான் அவள் அதனை அவருக்குத் தெரியாமல் மறைத்து வருகிறாள்.

காகித உறையில் வேறு ஏதோ இருப்பது போலச் சின்னத்தங்கத்துக்குத் தெரிந்தது.

”என்ன தம்பி வேறையும் ஏதோ வாங்கியந்திருக்கிறாய் போலை கிடக்கு“ என ஆவலுடன் கேட்டாள் சின்னத்தங்கம்.

”போனகிழமை எங்கடை கறுத்தக் கொழும்பான் மாமரத்திலை கொஞ்ச மாங்காய் புடுங்கினனாங்கள். அதிலை ஒரு ஐஞ்சாறு பழங்கள் கொண்டு வந்தனான்“.

”தம்பி என்ரை வருத்தத்துக்கு உதுகள் சாப்பிடக்கூடாது“ எனக் கூறிக்கொண்டே கையிலிருந்த போத்தலைக் கட்டிலின் பின்புறமாக மறைத்து வைத்தாள் சின்னத்தங்கம்.

”நீங்கள் இதைச் சாப்பிடமாட்டியள் எண்டு எனக்குத் தெரியும் மாமி….. பார்வதி சாப்பிடலாம்தானே….“ எனக் கூறிய அம்பலவாணர், சற்றுத் தூரத்தில் நின்றிருந்த பார்வதியின் பக்கந் திரும்பி, ”இந்தா பார்வதி, உனக்கெண்டுதான் இதைக் கொண்டுவந்தனான்“ எனக் கூறியபடி பார்வதியிடம் பார்சலை நீட்டினார்.

பார்வதி மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்றுக்கொண்டாள். பின்பு, ”அண்ணை கொஞ்சம் இருங்கோ, தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன்“ எனச் சொல்லிவிட்டு மாம்பழப் பார்சலுடன் குசினிப்பக்கம் சென்றாள்.

”மாமி … இப்ப கொஞ்ச நாளுக்குள்ளை நல்லாய் ஒடுங்கிப் போனியள். உடம்பைக் கவனிக்கிறேல்லைப் போலைக் கிடக்கு“ எனச் சின்னதங்கத்தைப் பார்த்துக் கூறினார் அம்பலவாணர்.

”எனக்கு ஒன்டுமில்லைத் தம்பி, எல்லாம் உவள் பார்வதியைப் பற்றின யோசினைதான்;. அவளை ஒருத்தன்ரை கையிலை குடுத்திட்டால் என்ரை கவலையெல்லாம் தீர்ந்துபோம்“ எனக் கவலை தோய்ந்த குரலில் கூறினாள் சின்னத்தங்கம்.

”அதுக்கு ஏன் மாமி கவலைப்படுகிறியள். பார்வதியின்ரை வடிவுக்கும், குணத்துக்கும், கெட்டித்தனத்;துக்கும் அவளைக் கலியாணம் செய்யிறதுக்கு ஆக்கள் நான் நீயெண்டு போட்டி போட்டுக்கொண்டு வருவினம்“. இதனைக் கூறும்போது குசினிக்குள் இருக்கும் பார்வதிக்கும் கேட்க வேண்டுமென்பதற்காகச் சற்றுப் பலமாகவே கூறினார் அமபலவாணர்.

”எதுவும் முயற்சி செய்தால்தான் நடக்குந் தம்பி. அந்த மனிசன் ஒண்டிலும் அக்கறை இல்லாமல் திரியுது. அவர் கொஞ்சம் அக்கறை எடுத்திருந்தால் பார்வதியின்ரை கலியாணம் எப்பவோ முடிஞ்சிருக்கும்“.

”கவலைப்படாதேயுங்கோ மாமி, காலநேரம் வரேக்கை கலியாணம் தானே நடக்கும்? வேணுமெண்டால் இருந்து பாருங்கோ பார்வதிக்கு ஒரு திறம் மாப்பிளைதான் வருவார்“.

இப்படி அம்பலவாணர் கூறியபோது, பார்வதி தேநீருடன் அங்கு வந்தாள்.

அவளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தார் அம்பலவாணர்.

”அண்ணை தேத்தண்ணிக்குச் சீனி இல்லை, பனங்கட்டிதான்“. பார்வதி தேநீரையும் பனங்கட்டியையும் அம்பல வாணரிடம் நீட்டினாள்.

பனங்கட்டியை வாங்கும்போது பார்வதியின் விரல்களை வேண்டுமென்றே பற்றிச் சீண்டிவிட்டு மீண்டும் சிரித்தார் அம்பலவாணர்.

பார்வதியும் சிரித்தாள்.

வழக்கமாக அம்பலவாணர் பார்வதியிடம் இப்படிச் சில சேட்டைகள் செய்வார். அவள் அதனைப் பெரிது படுத்துவதில்லை. அதற்காக அவரை வெறுக்கவோ அல்லது கண்டிக்கவோ அவளுக்குத் தோன்றவில்லை. அவரது சேட்டைகள் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதெனக் கூறமுடியாது. ஆனாலும் அவள் அவற்றை ஏற்றுச் சிரித்துக் கொள்வாள்.

”அப்ப இருங்கோ மாமி, நான் போட்டு வரப்போறன். இண்டைக்கு எங்கடை வாசிகசாலையிலை ஒரு கூட்டம். நான் தான் நிண்டு ஓடியாடி நடத்தவேணும். பெடியன்கள் காத்துக் கொண்டு இருப்பாங்கள்“ எனக் கூறிக்கொண்டே எழுந்திருந்தார் அம்பலவாணர்.

”தம்பி, நீ அடிக்கடி இந்தப்பக்கம் வரவேணும். நீ செய்யிற உதவியளை நாங்கள் மறக்கமாட்டோம்“ எனக் கூறினாள் சின்னத்தங்கம்.

”இதென்ன மாமி பெரிய உதவியோ…. மனிசனுக்கு மனிசன் ஒத்தாசையாய் இருக்கத்தானே வேணும். ஏதேன் தேவையெண்டால் சொல்லுங்கோ நான் வாங்கிக்கொண்டுவந்து தாறன்…. பார்வதிதான் என்னட்டை ஒண்டுங் கேக்கிறதில்லை. நான் ஒரு பிறத்தியான் எண்டு நினைச்சுப் பழுகுது“ எனக் கூறிவிட்டுப் பார்வதியைப் பார்த்தார் அம்பலவாணர்.

”அப்பிடி ஒண்டுமில்லை அண்ணை? ஏதேன் தேவையெண்டால் கேப்பன்தானே. இப்ப எனக்கு ஒண்டும் தேவையில்லை“ எனச் சிரித்தபடி கூறினாள் பார்வதி.

”என்ன பிள்ளை….. ஏதோ சட்டை தைக்கிறதுக்கு நூல் வேணுமெண்டு சொல்லிக்கொண்டிருந்தாய். தம்பியிட்டைச் சொல்லிவிடன் வாங்கியருவர்“ என்றாள் சின்னத்தங்கம் பார்வதியைப் பார்த்து.

”அது ஒண்டுமில்லையண்ணை…. சிவப்பு நிறத்திலை கொஞ்சம் நூல் வேணும். வசதியிருந்தால் வாங்கியாருங்கோ….. பொறுங்கோ அண்ணை காசு தந்துவிடுகிறன்“.
”காசுக்கு ஒண்டும் இப்ப அவசரமில்லைப் பார்வதி. நான் நூல் வாங்கிக்கொண்டு வாறன், பிறகு பாப்பம்….. அப்ப நான் வரப்போறன்“ எனக் கூறிக்கொண்டே அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டார் அம்பலவாணர்.

அம்பலவாணர் படலையைத் தாண்டிச் சென்றதும் பார்வதி தாயைக் கடிந்துகொண்டாள். ”அம்மா உங்களுக்கு வேறை வேலையில்லையே, நூல்; வாங்;கிறதுக்கு நான் மாணிக்கத்திட்டைக் காசு குடுத்து அனுப்ப இருந்தனான். அதுக்குள்ள அவசரப்பட்டு ஏன் உவரிட்டைச் சொன்னனீங்கள்“.

”இப்ப நான் சொன்னதிலை உனக்கு என்ன குறைஞ்சு போச்சு? அதுக்கென்ன வாங்கியரட்டுமன் “ என்றாள் சின்னத்தங்கம்.

”அதுக்கில்லையம்மா சின்னச் சின்னத் தேவையளுக்கெல்லாம் ஒரு மனிசரைக் கடமைப்படுத்தப் பிடாது“.

”சரி…. சரி பிள்ளை நான் படுக்கப்போறன் . நீ போய் உன்ரை வேலையைப் பார்“ எனப் பார்வதியை அனுப்பிவிட்டு கட்டிலின் மறைவில் வைத்திருந்த போத்தலை எடுத்துச் சிறிது சாராயத்தைப் பேணியில் ஊற்றி அதனை ஒரு மிடறில் குடித்துவிட்டு முகத்தை அஷ்டகோணமாகச் சுளித்தபடி படுக்கையில் சாய்ந்தாள் சின்னத்தங்கம்.

6.

வீட்டு முற்றத்தில் நின்ற வேப்ப மரத்தின் அடியில் சற்றுக் களைப்பாறுவதற்காகச் சாய்ந்திருந்தான் கோவிந்தன். காலையில் நாலு பனை ஏறியிறங்கிய பின் உச்சி வெயிலில் நின்று தோட்டம் கொத்திவிட்டு வந்ததினால் ஏற்பட்ட களைப்பு.

முற்றத்திலிருந்த பானையில் தண்ணீர் எடுத்து கைகால் கழுவியபின் பொன்னி கொடுத்த பழஞ்சோற்றையும், மரவள்ளிக் கிழங்குக் கறியையும் குழைத்துச் சாப்பிட்டுவிட்டு ஏதோ சிந்தனையின் வயப்பட்டவனாக அவன் மரத்தின் வேரில் தலை வைத்தபடி படுத்திருந்தான்.

சில வேளைகளில் கோவிந்தன் இப்படிக் களைப்பாறும் போது பொன்னியும் அவனருகே இருந்து வெற்றிலை மடித்துக் கொடுத்து அளவளாவிக் கொண்டிருப்பாள். ஆனால், இன்று கோவிந்தனிடம் வந்து கதைப்பதற்கு அவளுக்குப் பயமாக இருந்தது. தோட்டத்திலிருந்து வந்ததிலிருந்து அவன் சிடுசிடுப்புடன் இருந்தான். அவன் கோபமாக இருக்கும் வேளைகளில், தான் ஏதும் கதைத்தால் அவனது கோபம் தன்மேல் திரும்பிவிடும் என்பதை பொன்னி அறிவாள்.

முற்றத்திலிருந்த பானையில் தண்ணீர் முடிந்திருந்தது. அதைத் தூக்கிக்கொண்டு தண்ணீர் எடுத்து வருவதற்காக வெளியே சென்றாள் பொன்னி.

தட்டிப் படலையைத்திறந்து கொண்டு அப்போது மாணிக்கம் உள்ளே வந்தான். வேப்ப மரத்தடியில் தகப்பன் படுத்திருப்தைப் பார்த்ததும், “அப்பு நித்திரை கொள்ளுகிறார்’ என மனதிற்குள்ளே நினைத்துக்;கொண்டு மெதுவாக வீட்டினுள்ளே நுழைந்தான்.

”எங்கையடா ஊரளந்து போட்டு வாறாய்? நான் மரமேறப் போகேக்கை வீட்டை விட்டு வெளிக்கிட்டனி… இப்பதானோடா வாறாய்.?“ – கோவிந்தனின் குரல் கடுமையாக ஒலித்தது.

ஒரு கணம் திடுக்குற்று நின்ற மாணிக்கம் ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்டு பதில் சொன்னான்.

”நான் ஒண்டும் ஊர்சுத்தித் திரியேல்லையப்பு… செல்லப்பர் கமக்காரன் வீட்டிலை கூப்பன் அரிசி எடுத்துத் தரச்சொன்னவை. அதுதான் சங்கக் கடைக்குப் போட்டு வந்தனான்“.

”டேய், நான் காலமை தொடக்கம் தனிய இருந்து கஷ்டப்படுகிறன். எனக்கு உதவி செய்வமெண்டு யோசினை இல்லை. ஊரா வீட்டுக்கெல்லோ உழைச்சுத் திரியிறாய்“.

”ஏன் அப்பு சத்தம் போடுறியள். இப்ப நான் என்ன செய்ய வேணும் சொல்லுங்கோ“ எனத் தந்தையைப் பார்த்துக் கேட்டான் மாணிக்கம்.

”தடி மாடு மாதிரி வளர்ந்திருக்கிறாய். உனக்குச் சொல்லித்தான் தெரியவேணுமோ? இரண்டு மரத்திலை கள்ளுச் சீவலாம், தோட்டத்தைக் கொத்தலாம் …… சும்மா சுத்தித் திரிஞ்சால் வயித்துக்கு வருமோடா?“

”……………..“ மாணிக்கம் பதிலெதுவும் பேசாது தலை குனிந்தப்படி நின்றான்.

”துரைசிங்கம் கமக்காரனோடை என்னடா மரியாதை இல்லாமல் கதைச்சனியாம், அவர் தோட்டத்திலை வந்து சத்தம் போட்டிட்டுப் போறார்“.

கோவிந்தன் இப்படிக் கூறியபோது தந்தையின் கோபத்துக்குக் காரணத்தை மாணிக்கம் புரிந்துகொண்டான்.

”அப்பு, நான் ஒண்டும் அவரோடை கதைக்கேல்லை. அவர்தான் என்னோடை வலியக் கொளுவி அடிக்க வந்தவர்“.

”டேய் அவர் ஏதேன் வேலை சொன்னால் செய்து குடுக்கத்தானே வேணும். நீதான் எதிர்த்துக் கதைச்சனியாம்“.

”நான் எதிர்த்துக் கதைக்கேல்லை அப்பு, எனக்கு நேரமில்லையெண்டுதான் சொன்னான்“.

”ஏனடா உனக்கு நேரமில்லை? செல்லப்பர் கமக்காறன் வீட்டிலை எந்த நேரமும் அடைஞ்சு கிடக்கிறாய். அவையின்ரை பாடுபயன் பாத்துக்கொண்டு திரியிறாய். துரைசிங்கம் கமக்காறன் கேட்டால்தான் உனக்கு நேரமில்லையோ?“

”அதுக்கில்லையப்பு, அவர் சண்டித்தன முறையிலை என்னைக்கொண்டு வேலை பாப்பிக்கப் பாக்கிறார்“.

”டேய் மடையா, அவற்றை காணியிலை தானேடா நாங்கள் குடியிருக்கிறம்? தோட்டஞ் செய்யிறம் …… அதையெண்டாலும் நினைச்சுப் பாத்தியோடா..“

”அப்பு, நாங்கள் அவருக்குக் குத்தகைக் காசு குடுக்கிறம்தானே, அதுக்காக அடிமைச் சேவகம் செய்யவேணுமோ?“

இப்படி மாணிக்கம் கூறியதைக் கேட்டதும் கோவிந்தனது கோபம் அதிகமாகியது.

”பொத்தடா வாயை….. உனக்கு நாக்கு நீண்டு போச்சு. எங்கடை அப்பன் பாட்டன் காலத்திலையிருந்து நாங்கள் கமக்காரர் சொன்ன வேலையைச் செய்துகொண்டு தானே வாறம், நீயெல்லோ புதுசு புதுசாய்க் கதைக்கிறாய், உன்னைப் படிக்க வைச்சதுதான்ரா பிழையாய்ப் போச்சு“.

”நியாத்தைக் கதைச்சால் ஏனப்பு பிழையெண்டு சொல்லுறியள்?“

”நியாயங்கள் கதைக்க நீ வெளிக்கிடத் தேவையில்லை. அதுக்கு நாங்கள் – பெரியாக்கள் இருக்கிறம், நீ இப்ப போய் கமக்காறன்ரை காலிலை விழுந்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்டிட்டு வா“.

”அது மட்டும் நடக்காது“ – விறைப்பான குரலில் கூறினான் மாணிக்கம்.

”என்னடா சொன்னனி“ எனக் கர்ச்சித்த கோவிந்தன், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பக்கத்தில் இருந்த உழவாரப் பிடியையெடுத்து மாணிக்கத்தை நோக்கி வீசினான்.

மாணிக்கம் சடாரென விலகிக் கொண்டான். உழவாரப்பிடி வீட்டுத் திண்ணையில் பட்டுத்தெறித்தது.

அப்போது தண்ணீர்க் குடத்துடன் அங்கே வந்த பொன்னி, ”ஐயோ…. இதென்னப்பா கரச்சல்“ எனப் பதறியபடி மாணிக்கத்தின் அருகே ஓடினாள்.

”எல்லாம் நீ குடுத்த செல்லந்தானடி…… துரைசிங்கம் கமக்காரனுக்கு கை நீட்டுற அளவுக்கு உவன் வந்திட்டான். கமக்காறன் இந்தப் போகத்தோடை காணியை விடச்சொல்லி தோட்டத்திலை வந்து சத்தம் போட்டிட்டு போறார். உவனாலை தான் நாங்கள் குடியெழும்ப வேண்டிவரும்“.

கோவிந்தன் கூறியதைக் கேட்டபோது பொன்னியின் நெஞ்சு விறைத்துப் போயிற்று.
கமக்காறனுக்கு கை நீட்டுற அளவுக்கு மாணிக்கம் போயிருப்பான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை

”உவனுக்கு சும்மா இருந்து சாப்பிட்டுக் கொழுத்துப் போச்சு, எடியேய் …… உவனுக்கு இண்டைக்குச் சாப்பாடு குடுக்காதை“ எனக் கூறிய கோவிந்தன், வேலியில் செருகியிருந்த பாளைக் கத்தியை எடுத்து இடுப்பிலே செருகியபடி, ”நான் ஒருக்கா துரைசிங்கம் கமக்காறனிட்டைப் போட்டு வாறன்“ எனக் கூறிவிட்டு கோபத்துடன் வெளியேறினான்.

தகப்பனின் கோபத்தைக் கண்டு மௌனமாக இருந்த மாணிக்கத்திடம் ”என்னடா மோனை நடந்தது?“ என விசாரித்தாள் பொன்னி.

நடந்தது யாவற்றையும் தாயிடம் மாணிக்கம் விபரமாகக் கூறினான்.

”என்னதான் இருந்தாலும் நீ துரைசிங்கம் கமக்காறனோடை உப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது. எங்களைப் போலைதானே எங்கடை ஆக்கள் எல்லாரும் கமக்காரரவையின்ரை காணியளில் குடியிருக்கினம், துரைசிங்கம் கமக்காறன் நினைச்சால் எல்லாக் கமக்காறரிட்டையும் சொல்லி எங்கள் எல்லாரையும் குடியெழுப்பிப் போடுவர். அந்த மனிசனைப் பற்றி உனக்குத் தெரியாது. முந்தி ஒருத்தனை ஆள்வைச்சு வெட்டிச் சாக்கொண்டவரல்லோ“.

”ஆச்சி, எங்களுக்கு காணி இல்லையெண்டபடியாலை தானே நாங்கள் அடிமைச் சீவியம் செய்யவேண்டியிருக்கு. உழைச்சுப்பட்டு ஒரு காணியை வாங்கிப் போட்டமென்டால் பிறகு ஒருத்தருக்கும் பயப்பிடத் தேவையில்லை“.

”உனக்கு அனுபவம் இல்லை மோனை? அதுதான் உப்பிடிக் கதைக்கிறாய். கமக்காறரவை தங்கடை காணியை ஒருநாளும் எங்களுக்கு விலைக்குத் தரமாட்டினம்“.
மாணிக்கம் சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.

எப்படி இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எனப் புரியாமல் அவனது மனம் தவித்தது.

”வாமோனை….. வந்து சாப்பிடு? சாப்பிட்டிட்;டு தோட்டத்திலை மிளகாயக் கண்டு நட்ட குறை கிடக்கு, அதைப் போய் நடவேணும்“ என அழைத்தாள் பொன்னி.

”ஆச்சி எங்களுக்கும் ஒரு நாளைக்கு நல்லகாலம் வரத்தான் போகுது“ எனக் கூறிக்கோண்டே வீட்டினுள் எழுந்து சென்றான் மாணிக்கம்.

7.

வாசிகசாலையில் சீட்டாட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருந் தது. அம்பலவாணரும், அவரது நண்பர்களுந்;தான் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

எப்போதோ அருகே இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு நேர்த்திவைத்து யாரோ புண்ணியவானால் கட்டப்பட்டது அந்தத் தங்குமிடம். சுற்றாடலில் இருக்கும் தோட்டங்களில் உழைத்துக் களைத்த கமக்காரர்களும், வழிப்போக்கர்களும் அந்த மடத்திலே வந்து களைப்பாறுவார்கள். வேலையற்றுத் திரிபவர்களும், வேலை செய்து ஓய்வு பெற்ற ஒரு சில ‘பென்சனியர்’களுங்கூடத் தமது பொழுதைக் கழிப்பதற்கு அங்கு வருவார்கள். மடத்தைச் சுற்றியுள்ள சூழலில் ஓங்கி வளர்ந்திருக்கும் பெருவிருட்சங்களைத் தழுவி வரும் இதமான காற்றின் சுகத்தையும் – சிலகாலங்களில் அந்தக் காற்றிலே கலந்து வரும் மகிழம்பூ வாசனையையும் சேர்த்து அனுபவிப்பதற்கென்றே அங்கு வருபவர்களும் உண்டு. ஊரிலுள்ள துடிப்புள்ள இளைஞர்கள் சிலரால் இப்போது அந்த மடம் வாசிகசாலையாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் பத்திரிகை வாசிப்பதற்காகச் சிலரும் அங்கு வருவதுண்டு.

வாசிகசாலையை ஏற்படுத்திய இளைஞர்ளால் அதற்குரிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக அந்தக் கட்டிடம் தங்குமடமும், வாசிகசாலையுஞ் சேர்ந்த ஒரு படிமுறை வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

”கம்மாரிசு“ எனக் கூறியபடி கடைசிச் சீட்டை உற்சாகமாக அடித்தார் அம்பலவாணர்;.

”ஐஸே, நீர் இதை முந்தியே அடிச்சிருக்க வேணும். “டயமன்’ பத்து விழுந்தவுடனை உமக்கு “கம்மாரிசு’ தானே“.

”என்ன விசர்க் கதை பேசிறாயப்பா, “ஆசு’ வெளியிலை நிக்கேக்கை “கம்மாரிசு’ அடிக்க முடியுமோ…?“

”ஐஸே எனக்கு நீர் ‘காட்ஸ்’ விளையாடக் காட்டித்தரத் தேவையில்லை. நீர் ஒன்பதை அடிச்சா, ஆசு விழுந்திருக்கும் தானே“ எனக் கையிலிருந்த காட்ஸை மேசையில் ஓங்கி அடித்தார் சின்னத்தம்பர்.

”காட்ஸ் விளையாடத் தெரியாட்டில் சளாப்புக் கதைகள் கதைக்காதையுங்காணும்“ எனச் சின்னதம்பரைப் பார்த்துக் கூறினார் அம்பலவாணரின் “பாட்னரான’ கந்தையா.
”டேய், நீங்கள்தான் சளாப்புக் கதைகள் கதைக்கிறியள“. சின்னத்தம்பர் கோபத்துடன் எழுந்திருந்தார்.

அவர்களிடையே வாக்குவாதம் உச்சக் கட்டத்தை அடைந்தது.

வாசிகசாலையின் எதிர்ப் புறமாகத் தெருவின் மறுபக்கத்தில் இருக்கும் தமிழ்ப் பாடசாலையின் தலைமை உபாத்தியாயர் பொன்னம்பலம்; அப்போது அங்கு வந்து பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார். சீட்டு விளையாடுபவர்கள் போட்ட சத்தம் அவருக்கு எரிச்சலை மூட்டியது.

மூக்குக் கண்ணாடியைக் கையில் கழற்றியவாறு, ”தம்பியவை, இங்கை பேப்பர் படிக்கிறது உங்களுக்குத் தெரியேல்லையோ, ஏன் கா……. கூ….. எண்டு கத்திறியள்“ என்றார் சற்றுக் கோபமாக.

”ஒய் … வாத்தியார் நீர் ஏன்காணும் பள்ளிக்கூட நேரத்திலை இங்கை வந்து பேப்பர் வாசிக்கிறீர், பிள்ளையளைப் போய் மேயுங்காணும்“. என்றார் சின்னத்தம்பர் காரசாரமாக.

பொன்னம்பல வாத்தியார் வாயடைத்துப்போய் மீண்டும் கண்ணாடியை அணிந்துகொண்டு பேப்பரிலே பார்வையைச் செலுத்தினார்.

அப்போது அந்த வழியாக்; வந்த நடேசு, ”என்ன அண்ணையவை சண்டை பிடிக்கிறியளோ?“ எனக் கேட்டுக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தான்.

சீட்டு ஆடிக் கொண்டிருந்தவர்களின் சண்டை ஒருவாறு ஓய்ந்து இப்போது நடேசுவைக் கண்டதும் அவர்களது கவனம் அவன் பக்கம் திரும்பியது.

”வா, மச்சான் நடேசு……. இவ்வளவு நேரமும் உன்னைத்தானே பார்த்துக் கொண்டிருந்தனாங்கள். உந்தத் திண்ணையிலை இரு“ என உற்சாகமாகக் கூறினார் கந்தையா.

நடேசு அங்குள்ள எல்லோரையும் பார்த்து விகற்பமின்றிச் சிரித்தான்.

நடேசுவுக்கு முப்பது அல்லது முப்பதைந்து வயதுவரை மதிக்கலாம். பார்ப்பதற்கு சிறிது கட்டையாகவும் பொது நிறம் பொருந்தியவானாகவும் காணப்படுவான். சேட் அணியாத அவனது தேகத்தில் ரோமங்கள் நிறைந்து காணப்படும். தலைமயிர் கட்டையாக ‘குறொப்’ செய்யப்பட்டிருக்கும். அரையில் கட்டியிருக்கும் அழுக்குப் படிந்திருந்த சாரத்தை முழங்கால்வரை மடித்துக் கட்டி சதா சிரித்தபடி ஊரெங்கும் சுற்றித் திரிவான். நடேசுவைப் பொறுத்தவரையில் அவனுக்கு கவலை என்பதே கிடையாது. காண்பவர்களையெல்லாம் அண்ணண், தம்பி, மாமன், மச்சான் என ஏதோ வாயில் வரும் முறையைச் சொல்லி அழைப்பான். ஊரிலுள்ளவர்களுக்கு அவனிடம் கேலி செய்து மகிழ்வதில் ஓர் உற்சாகம்.

”நடேசு மச்சான், ஒரு பாட்டுப்படி, உன்ரை பாட்டைக் கேட்டு கனகாலம்“ எனக் கூறினார் சின்னத்தம்பர்.

நடேசு மூக்கைச் சுளித்து நுகர்ந்தபடி, ”எங்கையோ நல்ல வாசம் மணக்குது“ எனக் கூறிக்கொண்டே அம்பலவாணரின் பக்கம்வந்து, அவர் அணிந்திருந்த சேட்டை மூக்கின் அருகில் பிடித்துக்கொண்டு, ”உங்கடை சட்டையிலைதான்; அண்ணை “சென்ட்’ வாசம் மணக்குது“ எனக்கூறினான்.

”டே…… டே……. சேட்டிலை ஊத்தையைப் பிரட்டாதை“ எனக் கூறியபடி அவனிடமிருந்து விலகிச்சென்று சேட்டில் படிந்திருந்த மண்ணை விரலினால் சுண்டிவிட்டார் அமபலவாணர்.

”நான் உன்னையல்லோ பாட்டுப் பாடச் சொன்னனான். உந்த வாங்கிலை இருந்து அசல் பாட்டாய் ஒரு பாடடுப் படி பாப்பம்“ என்றார் சின்னத்தம்பர் நடேசுவைத் தனது பக்கம் திருப்பியபடி.

”அண்ணை…… எனக்கு ஒரு பத்துச் சதம் காசு தாறியே, கடலைக் கொட்டை வாங்கிறதுக்கு “ அம்பலவாணரைப் பார்த்துக் கேட்டான் நடேசு.

”நீ முதல் பாட்டைப் படியன், பிறகு பாப்பம்“.

”வாணரண்ணை, பாட்டுப் படிச்சாப் பிறகு நீ என்னை ஏமாத்தப்பிடாது“ என்றான் நடேசு.
கந்தையா குறுக்கிட்டு, ”அவர் தராட்டில் நான் தாறன்“ என நடேசுவை உற்சாகப்படுத்தினார்.

நடேசு திண்ணையில் இருந்து ஒரு தடவை இருமி தொண்டையைச் செருமிவிட்டு கைகளினால் தாளம் போட்டபடி பாடத் தொடங்கினான்.

”சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சுப்பிரமணிய சுவாமி எனை மறந்தார்
ஆவார் பொய் மொழிவார்“.

நடேசு பாடிக்கொண்டிருக்கும்போது அம்பலவாணரும், அவரது நண்பர்களும் ஒருவரையொருவர் பார்த்து, பொங்கிவந்த சிரிப்பைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள்.

பாட்டு முடிந்ததும் நடேசு, ”வாணரண்ணை எப்பிடி என்ரை பாட்டு?“ எனக் கேட்டான்.

”சோக்கான பாட்டு மச்சான், தியாகராஜ பாகவதர் பாடின மாதிரி இருந்துது“.

”அப்ப இன்னுமொரு பாட்டுப் படிக்கட்டோ?“ என உற்சாகத்துடன் கேட்டான் நடேசு.

”ஐயய்யோ….. வேண்டாம் – நீ இனி வாயைத் திறந்தால் வண்ணான் வந்திடுவன் நடேசு ….“ எனக் கூறினார் சின்னத்தம்பர்;.

எல்லோரும் “கொல்’லென்று சிரித்தனர். நடேசுவும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.

”என்ன வாத்தியார் ஒண்டும் பேசாமல் இருக்கிறியள்…. என்ரை பாட்டு உங்களுக்குப் பிடிக்கேல்லையோ?“ வாத்தியாரின் பக்கம் திரும்பிக்கேட்டான் நடேசு.

”உனக்குத்தான் மூளை வளர்ச்சி குறைவெண்டு பாத்தால் இங்கை இருக்கிறவங்கள் எல்லோருக்கும் அறிவு குறைவாய்த்தானே தெரியுது“ – இவ்வளவு நேரமும் மனத்திற்குள்ளே புகைந்துகொண்டிருந்த வாத்தியார் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு எழுந்து பாடசாலைக்குப் புறப்பட்டார்.

”ஏன் வாத்தியார் என்னோடை கோவமோ? எழும்பிப் போறியள்“. எனத் தலையைத் தடவியபடி கேட்டான் நடேசு.

பொன்னம்பல வாத்தியார் எதுவுமே பதில் கூறாது போய்விட்டார்.

”என்னதானிருந்தாலும் மாஸ்ரரின்ரை மனம் நோகும்படி நாங்கள் நடக்ககூடாது“ அம்பலவாணர் தனது நன்பர்களிடம் கூறினார்.

”நடேசு மச்சான் உன்னைப் பாக்கிறபொழுது சரியாய் ஜெமினி கணேசன் மாதிரித்தான் தெரியுது……“

”சும்மா விசர்க் கதை பேசாதை கந்தையா, ஒரு “சைட்டிலை’ நிண்டு பாத்தால் சிவாஜியை உரிச்சு வைச்ச மாதிரி இருக்கு“.

நடேசு தனது தேகம் முழுவதும் குலுங்கக் கூடியதாக அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு, ”அண்ணை காசைத் தா நான் போகப் போறன்“ என அம்பலவாணரிடம் கையை நீட்டினான்.

”இப்ப என்ன அவசரம் நடேசு ? கொஞ்சநேரம் இருந்திட்டுப் போவன்“.

”பிறக்கிறாசியாற்றை மேளுக்கு இண்டைக்குக் கலியாணமெல்லோ – சோடினை நடக்குது, என்னையும் வரச்சொன்னவை, நான் போவேணும்.

”அது சரி, உனக்கு எப்ப மச்சான் கலியாணம்?“

”தெரியாதண்ணை எனக்கும் கலியாணம் செய்ய ஆசை தான், அம்மாதான் ஒரு இடமும் பேசிச் செய்து வைக்கிறாயில்லை“.

”உனக்கு ஆர் மச்சான் பெம்பிளை தரப்போகினம்?“

”ஏன் அப்பிடிச் சொல்லுறியள், எனக்கு மச்சாள் இருக்கிறாதானே, அவவைத்தான் நான் கலியாணம் செய்யப் போறன்“.

”அதார் நடேசு உன்ரை மச்சாள்?“

”வேறை யார் செல்லப்பர் அம்மான்ரை மகள் பார்வதிதான்“. நடேசு உற்சாகத்துடன் கூறினான்.

”அடி சக்கை எண்டானாம்‰ காத்திருந்தவன் பெண்டிலை நேற்று வந்தவன் கொண்டு போனமாதிரியெல்லோ முடியப் போகுது“. அம்பலவாணரைப் பார்த்து நக்கலாகக் கூறினார் கந்தையா.

எல்லோரும் மீண்டும் சிரித்தனா.

”பார்வதியின்ரை காதிலை இந்தச் சங்கதி விழுந்தால் விளக்குமாத்தாலைதான் தருவள் மச்சான் உனக்கு“ என்றார் அமபலவாணர் அசட்டுச் சிரிப்புடன்.

”என்ன வாணரண்ணை உப்பிடிச் சொல்லுறாய், என்னைக் கலியாணம் செய்யிறியோ எண்டு நான் பார்வதியிட்டைக் கேட்டனான். அவவும் அதுக்கு “ஓம்’ எண்டு சொல்லியிருக்கிறா. நீங்கள் வேணுமெண்டால் இருந்து பாருங்கோ நான் அவவைத்தான் கலியாணம் முடிக்கப் போறன்“.

”இதைச் செல்லப்பர் அம்மான் கேள்விப்பட்டால் உன்ரை முதுகுத் தோலை உரிச்சுப் போடுவர்“. அம்பலவாணர்தான் இப்படிக் கூறினார்.

”அம்மானுக்கும் என்னிலை நல்ல விருப்பம், அவர் ஒண்டுஞ் சொல்ல மாட்டார்…… அதுசரி நான் போகப்போறன். கடலைக் கொட்டை வாங்க காசைத்தா அண்ணை“.

அம்பலவாணர் ஒரு பத்துச் சத நாணயத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

”அண்ணையவை நான் போட்டுவாறன் “ எனக் கூறிக்கொண்டே நடேசு அந்த இடத்தை விட்டகன்றான்.

அப்போது சின்னத்தம்பர் அம்பலவாணரிடம் ”என்ன ஐஸே, பார்வதி உன்னை ஏமாத்தப் போறாள் போலை கிடக்கு“ எனக் கிண்டலாகக் கேட்டார்.

”அவன் விசரன் அலட்டிப் போட்டுப் போறான்“ எனக் கூறிவிட்டு அசட்டுத்தனமாகச் சிரித்தார் அம்பலவாணர். ஆனாலும் அவரது மனதில் ஒருவித தாக்கம் ஏற்படத்தான் செய்தது.

8.

செல்லப்பர் லொறியை ஓட்டிவந்து கோவிந்தனது குடிசையின் முன்னால் நிறுத்தினார். அவருக்கு ஒரே அலுப்பாக இருந்தது. அலுப்புத்தீர இரண்டு போத்தல் கள்ளாவது குடிக்க வேண்டுமென்பது அவரது திட்டம்;. ஒழுங்கை முடக்கில் லொறியைத் திருப்பும் பொழுது கோவிந்தன் தோட்டத்தில் மிளகாய்க் கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதை அவர் பார்த்துவிட்டுத்தான் வந்தார். வீட்டில் கோவிந்தன் இருக்காவிட்டாலென்ன, பொன்னியும் மாணிக்கமும் இருப்பார்கள் தானே என்ற நினைப்போடு லொறியை விட்டிறங்கிக் குடிசையை அடைந்தார் செல்லப்பர். அப்போது பொன்னி முற்றத்திலே இருந்து சட்டி, பானைகள் கழுவிக் கொண்டிருந்தாள். செல்லப்பரைக் கண்டதும் மரியாதையுடன் எழுந்து அவரை வரவேற்றாள்.

”வாருங்கோ கமக்காறன், இப்பதான் பூநகரியிலையிருந்து திரும்பி வாறியள் போலை கிடக்கு“.

”ஓம் பொன்னி, இன்னும் வீட்டுக்கும் போகேல்லை, நேரே இங்கைதான் வாறன் ….. ஏதேன் கிடந்தால் கொண்டு வா“ எனக் கூறிக்கொண்டே வெளித் திண்ணையில் உட்கார்ந்தார் செல்லப்பர்.

”கொஞ்சம் இருங்கோ, வாறன் கமக்காறன்“ எனக் கூறிக்கொண்டே குடிசையின் உள்ளே சென்ற பொன்னி, முட்டியுடன் கள்ளை எடுத்துவந்து பிளாவுக்குள் ஊற்றி அதனைச் செல்லப்பரிடம் கொடுத்தாள்.

செல்லப்பர் பிளாவை இரண்டு கைகளாலும் ஏந்தி கள்ளில் இருந்த நுரையை ஊதித் தள்ளிவிட்டு உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினார்.

”சோக்கான கள்ளு“. – கள்ளின் சுவையில் தன்னை மறந்து கூறினார் செல்லப்பர்.

”கமக்காறன், நீங்கள் ஒருவேளை வரக்கூடும் எண்டுதான் கலப்பில்லாததாய் எடுத்து வைச்சனான்“.

பொன்னிக்குத் தன்மேல் இருக்கும் அக்கறையை நினைத்தபோது செல்லப்பருக்கு உள்ர மகிழச்சியாக இருந்தது.

”எங்கை மாணிக்கனைக் காணேல்லை?“

”அவன் கமக்காறன், உங்கடை வீட்டுப் பக்கந்தான் போயிருப்பன், அவனைப் பற்றித்தான் உங்களோடை கதைக்க வேணுமெண்டு இருந்தனான்“.

”என்ன பொன்னி, அப்பிடி அவனைப் பற்றி என்ன விசயம்?“

”ஏன், துரைசிங்கம் கமக்காறன் உங்களிட்டை ஒண்டும் சொல்லேல்லையோ?“

”இல்லைப் பொன்னி, இன்னும் நான் அங்கை போகேல்லை. பூநகரியிலையிருந்து நேரே இங்கைதான் வாறன். இனித்தான் லொறியைக் கொண்டுபோய் விடவேணும்“

துரைசிங்கம் முதலாளிக்குச் சொந்தமான லொறியிலேதான் செல்லப்பர் சாரதியாக வேலை செய்கிறார். இருப்பினும் துரைசிங்கம் முதலாளி ஒருபோதும் செல்லப்பரைத் தன்னிடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளியாகக் கருதுவதில்லை. தனது கூட்டாளியாகவே நடத்தி வருகிறார்.

”மாணிக்கனெல்லோ துரைசிங்கம் கமக்காறனோடை வாக்குவாதப் பட்டிட்டான். அவர் கறுவிக்கொண்டு திரியிறார். இந்தப் போகத்தோடை தோட்டத்தை விடட்டுமாம். எங்களுக்கு இரவு பகல் இதே யோசினையாய்த்தான் இருக்கு. என்ரை மனிசனுக்கும் ஒரே கலக்கமாய்க் கிடக்கு“ எனக் கூறிய பொன்னி நடந்தது யாவற்றையும் செல்லப்பரிடம் விபரமாகச் சொன்னாள்.

”துரைசிங்கம் ஒரு ஒற்றைப் புத்திக்காரன். அந்த ஆளிட்டை ஏன் இவன் வாயைக் குடுத்தவன்?“

”ஏதோ இளந் துடிப்பிலை பெடியன் தெரியாத்தனமாய்க் கதைச்சுப் போட்டான். நீங்கள்தான் துரைசிங்கம் கமக்காறனைச் சாந்தப்படுத்த வேண்டும்“ எனக் கெஞ்சும் குரலில் கூறினாள் பொன்னி.

”நீ ஒண்டுக்கும் யோசிக்காதை பொன்னி. நான் அதெல்லாம் சரிப்படுத்திறன். இனிமேல் மாத்திரம் அந்த ஆளோடை வீண் கதை வைச்சிருக்க வேண்டாமெண்டு மாணிக்கத்திட்டைச் சொல்லு.“

”இதைச் செய்தியளெண்டால் கமக்காறன் உங்களுக்குப் பெரிய புண்ணிமாய்ப் போம்……“

முட்டியிலிருந்து கள்ளு முடிந்தபோது செல்லப்பருக்கு வயிற்றுக்குள் இருந்த கள்ளு வேலை செய்யத் தொடங்கியது.

”பொன்னி, கள்ளு இருந்தால் இன்னும் கொஞ்சம் கொண்டு வாவன்“ என்றார் செல்லப்பர் ஒருவித மயக்கத்துடன்.

பொன்னி விட்டினுள்ளே சென்று முட்டியிலிருந்த கள்ளில் சிறிது வார்த்து எடுத்து வந்தாள்.

பிளாவுக்குள் அவள் கள்ளை ஊற்றும்போது தனது நரைத்திருந்த மீசையைத் தடவிவிட்டபடி, ”என்ன பொன்னி, இப்ப கொஞ்சக் காலமாய் நீ என்னைக் கவனிக்கிறதில்லை“ எனக் கூறிக்கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்தார் செல்லப்பர்.
பொன்னிக்கு அவர் அப்படிக் கூறியதன் அர்த்தம் புரிந்தது. ஆனாலும் அவள்; ஒன்றுமே புரியாதவள் போன்று ”என்ன கமக்காறன், ஏன் அப்பிடிச் சொல்லுறியள்?“ என அவரிடம் வினவினாள்.

”என்னடி ஒண்டும் விளங்காத மாதிரிக் கேக்கிறாய், எனக் கூறியபடி தள்ளாடிய வண்ணம் எழுந்த செல்லப்பர் அவளது கைகளைப் பற்றினார்.

”சும்மா இருங்கோ கமக்காறன். யாரேன் கண்டால் என்ன நினைப்பினம்?“ என அவரது பிடியிலிருந்து தனது கைகளை விலக்க முயற்சி செய்தாள் பொன்னி.

”இப்ப இங்கை ஒருதரும் வரமாட்டினம். நீ பயப்பிடாதை பொன்னி“ எனத் தாழ்ந்த குரலில் சொன்ன செல்லப்பர், அவளை வீட்டின் உட்பக்கமாகத் தள்ளினார்.

”இல்லைக் கமக்காறன், இனி மாணிக்கன் வந்திடுவன். நீங்கள் வீட்டுக்குப் போங்கோ“ எனப் பதட்டத்துடன் அவரது பிடியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டாள் பொன்னி.
செல்லப்பர் தள்ளாடியபடி வெளியே வந்தார்.

”என்ன பொன்னி, இப்ப நீ கொஞ்ச நாளாய்ப் பஞ்சிப்படுகிறாய். நான் கிழவனாய்ப் போனனென்டு நினைச்சிட்டியோ? சரி……….. சரி…. நான் போட்டுவாறன்“ எனக் கூறிவிட்டு லொறியை நோக்கி நடந்தார் செல்லப்பர். ”கவனமாய் லொறியை ஓட்டுங்கோ கமக்காறன் குடிசிட்டு இருக்கிறியள்….. “ எனக் கொஞ்சத் தூரம் அவரைப் பின்தொடர்ந்து வந்த பொன்னி கூறினாள்.

”லொறியில் ஏறி உட்கார்ந்த செல்லப்பர், ”போடி போ, எனக்குப் புத்தி சொல்ல வந்திட்டாய்“ என எரிச்சலுடன் கூறிவிட்டு லொறியை வேகமாகச் செலுத்தத் தொடங்கினார்.

ஒழுங்கை முடக்கில் லொறி மறையும் வரை அதனையே பார்த்துக்கொண்டிருந்த பொன்னி, ”கமக்காறனுக்கு இப்பவும் இளமைத் துடிப்புக் குறையேல்லை“ எனத் தனக்குத்தானே கூறிச் சிரித்துக் கொண்டாள்.

9.

”அம்மா…… அம்மோய்…….“

நேரம் இரவு பத்தரையைத் தாண்டிவிட்டது. வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு படுக்கைக்குச் சென்ற சரசு அவளது தமையன் நடேசுவின் குரல்கேட்டு எழுந்திருந்தாள். இருட்டில் தனியாகச் சென்று கேற்றைத் திறந்துவிடுவதற்கு அவளுக்குப் பயமாக இருந்தது. தலைவாசலை அடுத்துள்ள திண்ணையில் அவளது தாய் அன்னம்மா குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள்.

அது ஒரு பழைய காலத்து நாற்சாரம் வீடு. எல்லாவிதமான வசதிகளும் அந்த வீட்டில் அமைந்திருந்தன. அன்னம்மாவின் கணவன் அந்தக் காலத்தில் சிங்கப்பூரில் ஏதோ தொழிற்சாலையொன்றில் வேலையாக இருந்தவராம். அவர் வேலை செய்யும் இடத்தில் நடந்த விபத்தொன்றில் இளமையிலே அகால மரமணமடைந்துவிட்டார். இப்போது அன்னம்மாவுக்கு சிங்கபூரில் பென்சன்பணம் வந்துகொண்டிருக்கிறது. அந்தப் பணத்தில் அவளும் அவளது பிள்ளைகளும் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.அவளது கணவணுக்குச் சொந்தமாயிருந்த நிலபுலன்களிலிருந்தும் அவர்களுக்குப் போதிய வருவாய் கிடைக்கிறது.

”சரசு…….. சரசு…….“

நடேசு இப்போது தங்கையைக் கூப்பிட்டான். ”அம்மா, அம்மா, எழும்புங்கோ….. அண்ணை கூப்பிடுகிறார்“ எனத் தாயை எழுப்பினாள் சரசு.

வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருந்த அன்னம்மா அரிக்கன் லாந்தரைக் கைலெடுத்து அதனைத் தூண்டிவிட்டாள்.

நிலைப்படியின் மேல் வைத்திருந்த கேற் திறப்பை சரசு எடுத்துக்கொண்டாள். இருவருமாகச் சென்று கேற்றைத் திறந்துவிட்டர்கள்.

”ஏனடா மோனை இரவிரவாய்ச் சுத்தித் திரியிறாய். உன்னையெல்லோ வீட்டைவிட்டு ஒரு இடமும் போகவேண்டாமெண்டு சொன்னனான்“. அன்னம்மா நடேசுவைப் பார்த்துக் கூறினாள்.

”அம்மா, நான் பிள்ளையார் கோயிலுக்குப் போனனான். கோயில் ஐயர் குத்துவிளக்குகளைத் தேய்ச்சுத் தரச் சொன்னவர். அதுதான் நேரம் செண்டு போச்சு.“

”அதெல்லாம் சரியண்ணை, உன்னாலை நாங்களுமெல்லே நேரத்துக்குப் படுக்கேலாமல் கிடக்கு. எங்கையோ திரிஞ்சுபோட்டு நடுச் சாமத்திலை வாறாய். இனிமேல் பிந்தி வந்தால் நாங்கள் கேற்றைத் திறக்க மாட்டோம்“ எனக் சினந்தாள் சரசு.

”கோவிக்காதை தங்கச்சி, நான் இனிமெல் வேளைக்கு வாறன்“.

”பிள்ளை சரசு, அவனைக் கூட்டிக்கொண்டு போய் ஏதேன் சாப்பாடு குடு. அவனுக்குப் பசிக்கும்“ என அன்னம்மா சரசுவிடம் கூறினாள்.

”அம்மா, எனக்கொண்டும் இப்ப வேண்டாம். ஐயர் மோதகம், வடை தந்தவர். நான் நிறையச் சாப்பிட்டிட்டன்“

”அப்ப சரி, பாயைப் போட்டுப் படண்ணை“ எனக் கூறிவிட்டு சரசு தனது படுக்கையில் படுத்துக்கொண்டாள்.

நடேசு திண்ணையில் ஒரு பக்கத்தில் படுக்கையை விரித்து உட்கார்ந்துகொண்டான்.
அன்னம்மா படுக்கையில் படுத்த சிறிது நேரத்தில் கண் அயரத் தொடங்கினாள்.

”அம்மா….. அம்மோய்…..“

”…………“

”எணை அம்மா…… “ சற்றுப் பலமாகக் கூப்பிட்டான் நடேசு.

”டேய் பேசாமல் படடா“ எனக் கூறிவிட்டு மறுபக்கம் புரண்டு படுத்தாள் அன்னம்மா.

”அம்மா….. ஒரு சங்கதி கேக்கிறன், சொல்லுறியோ?“

”என்னடா…. நித்திரை கொள்ள விடமாட்டியே?“

”அம்மா, எனக்கு எப்ப கலியாணம்?“

திடீரென நடேசு இப்படிக் கேட்டப்போது சரசு தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் குபீரெனச் சிரித்தாள்.

”ஏன் மோனை ஒரு நாளும் இல்லாத மாதிரி இண்டைக்கு உதைப் பற்றிப் கேக்கிறாய்?“

”இண்டைக்குத்தான் மடத்தடியிலும், கோயிலடியிலும் இதைப் பற்றி என்னட்டைக் கேட்டவை. அதுதான் நான் உன்னைக் கேக்கிறேன்“ என்றான் நடேசு.

”அண்ணை, நீ அதுக்கு என்ன பதில் சொன்னனி? எனக் குறும்பாகக் கேட்டாள் சரசு.

”நான் அம்மாவைக் கேக்க வேணுமெண்டு சொன்னனான்“.

”நீ உப்பிடி ஊர் சுத்தித் திரிஞ்சால் ஒருத்தியும் உன்னைக் கலியாணம் முடிக்க மாட்டாளவை“ எனக் கூறினாள் அன்னம்மா.

”இல்லையம்மா ….. பார்வதி மச்சாள் என்னைக் கலியாணஞ் செய்யிறனெண்டு சொன்னவ“

”அண்ணை, நீதான் மச்சாளிட்டை இதைக் கேட்டனியோ…. அல்லது அவதான் வலியச் சொன்னவவோ?“ சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள் சரசு.

”நான் கேட்டதுக்குத் தான் மச்சாள் என்னைக் கலியாணங் கட்டுவனெண்டு சொன்னவ“.

”அண்ணை, மச்சாளும் உன்னோடை நல்லாய்த்தான் பகிடி விடுகிறா போலை கிடக்கு“ எனக் கூறிச் சிரித்தாள் சரசு.

”அம்மா, நான் கேட்டதுக்கு நீ ஏன் பதில் சொல்லுறாயில்லை“. நடேசு மீண்டும் தாயிடம் கேட்டான்.

”எல்லாம் நான் யோசிச்சுச்; சொல்லுறன் நீ இப்ப படுமோனை“.

நடேசு பெரிதாகக் கொட்டவி விட்டபடி படுக்கையில் சாய்ந்த சிறிது நேரத்தில் பலமாகக் குறட்டை விடத்தொடங்கினான்.

இப்போது அன்னம்மாவுக்கு நித்திரை வரமறுத்தது. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்.

10.

காலைப் பொழுது புலர்ந்து வெகு நேரமாகிவிட்டது. ஆதவனின் ஒளிக் கதிர்கள் வீட்டுத் திண்ணைவரை நீண்டு, சார்மனைக் கதிரையில் சாய்ந்தவண்ணம் துயில் கொண்டிருந்த செல்லப்பரின் கால்களையும் தழுவியிருந்தது.

முதன்நாள் இரவு அவர் துரைசிங்கம் முதலாளி வீட்டிலிருந்து திரும்புவதற்கு வெகு நேரமாகி விட்டது. பூநகரியிலிருந்து செல்லப்பர் லொறியுடன் வந்து சேர்ந்ததும் துரைசிங்கம் முதலாளி அவருக்காக ஒரு போத்தல் சாராயம் வாங்கியிருந்தார். அதனை இருவருமாகக் குடித்துத் தீர்த்துவிட்டு, அங்கேயே இரவுச் சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு நிதானமிழந்த நிலையிலேதான் செல்லப்பர் வீடு திரும்பினார். அப்போது பார்வதியும், சின்னத்தங்கமும் நித்திரையாகி விட்டனர். வெளியே படுத்திருந்த மாணிக்கம்தான் அவர் வந்தபோது படலையைத் திறந்துவிட்டான். அவர் வெளியே கிடந்த சார்மனைக் கதிரையில் படுத்துக்கொண்டார்.

அவரது வரவைக் கண்ட வீமன் அவரைச் சுற்றிச் சுற்றி வந்து சந்தோஷத்துடன் முன்னங்கால்களை அவரின் மேல் போட்டுத் தனது அன்பைத் தெரிவித்தது. பின்பு அவர் நித்திரையானதும் அவரது காலடியிலேயே சுருண்டு படுத்துவிட்டது.

பார்வதி காலையில் எழுந்து வெளியே வந்தபோதுதான் தந்தை வந்திருப்பதைக் கவனித்தாள். மாணிக்கம் அவள் எழுந்திருப்பதற்கு முன்பே எழுந்து தனது வீட்டிற்குச் சென்றுவிட்டான்.

செல்லப்பர் கண்விழித்தபோது பார்வதி முற்றத்திற்குச் சாணி தெளித்துக் கொண்டிருந்தாள். சார்மனைக்கதிரையில் படுத்திருந்தவாறே அவர் கைகள் இரண்;டையும் நீட்டி முடக்கி கால்களைச் சொடுக்கிவிட்டு உடலை நெளித்து பெரிதாகக் கொட்டாவிவிட்டுச் சோம்பல் முறித்துக் கொண்டார். பின்னர் மடியிலிருந்த புகையிலையை எடுத்து அதனைக் கையிலே வைத்துச் சுருட்டி வாயில் வைத்துக் கடித்தவண்ணம் பார்வதியிடம் ”கொஞ்சம் நெருப்பு கொண்டாடி பிள்ளை“ என வேண்டினார்.

அடுப்புக்குள் இருந்த கொள்ளிக்கட்டை ஒன்றை எடுத்துவந்து அவரிடம் நீட்டிய பார்வதி, அப்பு தேத்தண்ணி கொண்டு வரட்டோ“ என அவரிடம் வினவினாள்.

”இல்லைப் பிள்ளை வெளியிலை, போட்டுவாறன்“.

சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு செல்லப்பர் பனை வடலிப் பக்கம் சென்றார். திரும்பி வரும்போது வேப்பங்குச்சியால் பல்லைத் துலக்கியபடி கிணற்றடிக்குச் சென்று கைகால் கழுவிவிட்டு வந்தார்.

விறாந்தையில் கைவளையில் கட்டித் தொங்கவிட்டிருந்த திருநீற்றுக் குட்டானுக்குள் விரல்களைப் புதைத்து, திருநீற்றை எடுத்து நெற்றியிலே பூசிவிட்டு மீண்டும் சார்மனைக் கதிரையில் உட்கார்ந்து கொண்டார் செல்லப்பர்.

பார்வதி மூக்குப் பேணியில் தேநீர் கொண்டுவந்து அவருக்குக் கொடுத்தாள்.

”ஏன் பிள்ளை வெறுந் தேத்தண்ணியாய்க் கிடக்கு? சீனி இல்லையோ?“

”இல்லை அப்பு, சீனி இன்னும் ;வாங்கேல்லை. வேண்டின பனங்கட்டியும் முடிஞ்சு போச்சு. இண்டைக்குத்தான் மாணிக்கத்தை அனுப்பி எல்லாச் சாமானும் வாங்கவேணும்“.

அப்போது வெளியே வந்த சின்னத்தங்கம், ”இப்ப நாலைஞ்சு நாளாய் காசுக்குப் பெரிய தட்டுப்பாடு. நீங்கள் வந்த பிறகுதான் சமான்கள் வாங்கவேணுமெண்டு பிள்ளை சொல்லிக்கொண்டிருக்கிறாள்“ எனச் செல்லப்பரைப் பார்த்துக் கூறினாள்.

செல்லப்பர் ஒன்றுமே பேசாது தேநீரைக் குடித்தார்.

”நான் இன்னும் துரைசிங்கத்தைச் சந்திக்கேல்லை. லொறியை கொண்டே வீட்டிலை விட்டிட்டு வந்திட்டன். இண்டைக்குத்தான் ஏதேன் வாங்கவேணும்“

மாதம் முடிவதற்கு முன்னரே துரைசிங்கம் முதலாளியிடம் அவ்வப்போது முற்பணமாகச் சம்பளத்தைப் பெற்றுத் தீர்த்து விட்டிருந்தார் செல்லப்பர். அதனை இப்போது சின்னத்தங்கத்திடம் கூறினால் வீட்டில் ஒரு பூகம்பமே நடந்துமுடியுமென்பது அவருக்கு தெரியும். அதனால் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற பொய்யொன்றைக் கூறி வைத்தார். வருகிற மாதச் சம்பளத்தில் முற்பணமாகச் சிறிய தொகையை வாங்கிச் சமாளித்து விடலாம் என்ற எண்ணமும் அவரது மனதில் தோன்றியது.

”உண்மையாய்த்தான் துரைசிங்கத்தைச் சந்திக்கேல்லையோ அல்லது சம்பளக் காசு முழுவதையும் முடிச்சாசோ?“ சந்தேகத்துடன் கேட்டாள் சின்னத்தங்கம்.

”ஏனணை, விடிஞ்சதும் விடியாததுமாய் சண்டைக்கு வாறாய். நானெல்லோ சொன்னான் இண்டைக்கு காசு வாங்கித் தாறனெண்டு“ சற்றுக் கடுமையான குரலில் கூறினார் செல்லப்பர்.

”உப்பிடி வெருட்டி உருட்டித்தானே காலத்தைக் கழிச்சுக்கொண்டு போறியள்“.

அவர்களிடையே வாக்குவாதம் முற்றிவிடும்போல் தோன்றியது பார்வதிக்கு.

”அப்பு நாலு நாளைக்குப் பிறகு இப்பதானே வீட்டுக்கு வந்திருக்கிறார்.அவரோடை ஏன் அம்மா சண்டை பிடிக்கிறியள்“ என சின்னத்தங்கத்திடம் கூறிவிட்டு பாத்திரங்ககளைக் கழுவுவதற்காக அவள் கிணற்றடிப் பக்கம் சென்றாள்.

”ஏனப்பா உங்களோடை சண்டை பிடிக்க எனக்கு ஆசையே, உவள் பிள்ளையைப் பற்றி ஒருவிதமான அக்கறையும் எடுக்காமல் இருக்கிறியள் எண்டுதான் எனக்குக் கவலையாய்க் கிடக்கு“ தாழ்ந்த குரலில் கூறியபடி சார்மனைக் கதிரையின் அருகே வந்து அமர்ந்தாள் சின்னத்தங்கம்.

”அதுக்கேன் இப்ப கவலைப்படுகிறாய், காலநேரம் வந்தால் எல்லாம் தானே நடக்கும்“.

”இப்படிச் சொல்லிச் சொல்லித்தானே எல்லாம் இழுபட்டுக் கொண்டு போகுது“.

”நீயும் வருத்தக்காறி, என்ரை பிழைப்பும் வெளியிலை திரிய வேண்டியதாய்க் கிடக்கு. இந்த நிலைமையிலை பார்வதியை வெளியிலை விட்டிட்டால் எல்லாம் சீரழிஞ்சுபோம்“.

”அதுக்காக ஒரு குமரை எந்த நாளும் வீட்டுக்கை வைச்சிருக்க முடியுமோ?“

”எங்கடை வீட்டோடை இருக்கக்கூடிய மாப்பிளை சந்திச்சால்தான் பிள்ளையைக் கட்டிக் கொடுக்க வேணும். தூர இடங்களுக்கு கட்டிக் குடுத்தால் எங்களுக்கு உதவியில்லாமல்போம்“ என்றார் செல்லப்பர் யோசனையுடன்.

”அதுக்கு ஒரு வழி இருக்குது… நீங்கள் என்ன சொல்லுவியளோ எண்டுதான் எனக்குப் பயமாய்க் கிடக்கு“ – தன் மனதிலே எண்ணியிருப்பதைக் கூறுவதற்குப் பீடிகையுடன் தொடங்கினாள் சின்னத்தங்கம்.

”சொல்லன் சின்னத்தங்கம், சொன்னாத்தானே எனக்குத்தெரியும்“.

”இல்லைப் பாருங்கோ, பிள்ளையின்ரை விசயமாய் ஒருக்கா அம்பலவாணரைக் கேட்டுப் பார்க்கலாம் எண்டுதான் யோசிக்கிறன்“.

”நீ என்ன விசர்க்கதை சொல்லுறாய் சின்னத்தங்கம்….. அவன் வேலைவெட்டி இல்லாமல் ஊர் அளக்கிறான். அவனுக்கோ பிள்ளையைக் கட்டிக் குடுக்கிறது?“

”அவனுக்கு என்னத்துக்கு உழைப்பு. அவனிட்டை இருக்கிற சொத்துக்கு வீட்டிலை கால் நீட்டிக்கொண்டு இருந்து சாப்பிடலாம்“

”பணம் இருந்தால் மட்டும் போதாது சின்னத்தங்கம். குணம் நடையும் சரியாய் இருக்க வேணும். அம்பலவாணரைப் பொறுத்த வரையிலை ஊரிலை அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை“.

”ஒரு வயசிலை இளந்தாரியள் பொறுப்பில்லாமல் நடக்கிறதுதான். ஒரு கால்க்கட்டைப் போட்டிட்டால் எல்லாம் சரியாப்போம்“.

”இதுகளைத் தான் கணக்கெடுக்காமல் விட்டாலும் அம்பலவாணர் பகுதிக்கும் எங்களுக்கும் எப்பிடி ஒத்து போகும்? எங்கடை அப்புகாலத்திலையிருந்து அவையளோடை நாங்கள் சபை சந்தி கிடையாதெல்லோ“ என்றார் செல்லப்பர்.

”நீங்கள் எல்லாத்துக்கும் ஒவ்வொரு கதையள் சொல்லிக் கொண்டு இருக்கிறியள், முந்திப் பேசின சம்பந்தங்களையும் உப்பிடித்தான் நொட்டையள் சொல்லிக் குழப்பினனீங்கள்“ எனக் குறைப்பட்டாள் சின்னத்தங்கம்.

”அப்ப பிள்ளையைக் கண்ட இடத்திலை தள்ளிவிடுகிறதோ?“ எனக் கோபமாகக் கேட்டார் செல்லப்பர்.

அப்போது வீமன் குரைத்துக்கொண்டு படலைப் பக்கம் ஓடியது. படலையைத் திறந்துகொண்டு செல்லப்பரின் சகோதரி அன்னம்மா கவலை தோய்ந்த முகத்துடன் வந்து கொண்டிருந்தாள்.

அன்னம்மா வருவதைப் பார்த்ததும் செல்லப்பரும் சின்னத்தங்கமும் தங்கள் சம்பாஷணையை நிறுத்திக் கொண்டனர்.

”என்ன மச்சாள், இந்த நேரத்திலை ஓடி வாறியள்….. என்ன விசயம்“ என வினவினாள்; சின்னத்தங்கம்.

”இரண்டு நாளாய் நடேசு வீட்டுக்கு வரேல்லை. ஒரு வேளை இங்கை ஏதும் வந்திருப்பானோ எண்டு பாக்கத்தான் வந்தனான்“ எனக் கவலையுடன் கூறினாள் அன்னம்மா.

”அதுக்கேனக்கா கவலைப்படுகிறாய். அவன் நெடுக உப்பிடித்தானே போனபோன இடத்திலை தங்கிவிடுவன்“ என அன்னம்மாவைத் தேற்றினார் செல்லப்பர்.

அன்னம்மா திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள்

”நடேசு முந்தநாள் காலைமையும் இங்கைவந்து பிள்ளையோடை கதைச்சுக் கொண்டிருந்தவன். பிள்ளை ஒடியல் புட்டு அவிச்சுக் குடுத்தவள். அதையும் வாங்கிச் சாப்பிட்டிட்டுத்தான் போனவன்“. எனக் கூறினாள் சின்னத்தங்கம்.

அப்போது கிணற்றடியிலிருந்து பாத்திரங்களுடன் வந்து கொண்டிருந்த பார்வதி, ”நடேசு அத்தான் எங்கேயோ கலியாணமெண்டு சொல்லிக் கொண்டிருந்தவர். அங்கைதான் போயிருப்பர்“ எனக் கூறிவிட்டு அன்னம்மாவை பார்த்துச் சிரித்தாள்.

”இந்தா பார்வதி, இதிலை கொஞ்சம் பனங்காய்ப் பணியாரம் இருக்கு. சரசு தமையனுக்கு எண்டு சுட்டவள். அதிலை உனக்கும் கொஞ்சம் கொணந்தனான் “ மடிக்குள்ளிருந்து ஒரு பார்சலை வெளியில் எடுத்தாள் அன்னம்மா.

”இருங்கோ மாமி, பாத்திரங்களை வைச்சிட்டு வாறன்“ எனக் கூறிக்கொண்டே குசினிக்குள் நுழைந்த பார்வதி சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள்.

”நடேசுவுக்குப் பனங்காய்ப் பணியாரம் எண்டால் சரியான ஆசை. என்ன செய்யிறது, எப்ப வீட்டுக்கு வாறானோ தெரியேல்லை“ எனக் கூறியபடி பார்வதியிடம் பார்சலைக் கொடுத்தாள் அன்னம்மா.

அப்போது செல்லப்பர் குறுக்கிட்டு, ”அது சரி அக்கா, உரும்பிராயிலை சரசுவுக்கு சம்பந்தம் பேசினனியெல்லோ…. அது எந்த மட்டிலை இருக்கு?“ என அன்னம்மாவிடம் கேட்டார்.

”அந்தச் சம்பந்தமும் குழம்பிப் போச்சுத் தம்பி“ எனக் கூறிப் பெருமூச்சு விட்டாள் அன்னம்மா.

”ஏன் மச்சாள், உரும்பிராயார் சீதனம் கூடக்; கேக்கினமோ?“ எனக் கேட்டாள் சின்னத்தங்கம்.

”அப்பிடியொண்டுமில்லை. எங்கடை குடும்பம் விசர்க் குடும்பம் எண்டு யாரோ அவையளிட்டைப் போய்க் கல்லுக்குத்திப் போட்டினம்“.

”நடேசு உப்பிடித் திரியிறதாலைதான் வீண்கதையள் வருகுது. சரசுவின்ரை கலியாணம் முடியிறவரைக்குமாவது அவனை வீட்டை விட்டுக் கண்டபடி திரிய விடாதையக்கா“ எனக் கூறினார் செல்லப்பர்.

”அவனை நான் கட்டுப்படுத்த முடியுமே? கலியாணம் முடிச்சு பிள்ளை குட்டியளோடை இருக்க வேண்டிய வயசு. அவன்ரை கால கஷ்டம் உப்பிடித் திரியிறான்“.

”மச்சாள் உங்களுக்கு இருக்கிற பொருள் பண்டத்துக்கு நடேசு மட்டும் ஒழுங்காய் இருந்தால் நான் நீயெண்டு போட்டி போட்டுக் கொண்டு பெம்பிளை குடுப்பினம்“ என்றாள் சின்னத்தங்கம்.

செல்லப்பர் ஏனோ சின்னத்தங்கத்தை பார்த்துச் சிரித்தார்.

”ஏன் சின்னத்தங்கம் அப்பிடிச் சொல்லுறாய், அவனுக்கு என்ன குறை? குழந்தைப்பிள்ளை மாதிரி? வஞ்சகம் சூதில்லாத பிறவி. அவனுக்கு ஒரு கலியாணம் மட்டும் நடந்திட்டுதெண்டால் அவன் வீட்டோடையே இருப்பன். அவன்ரை குணங்களும் திருந்திவிடும்“.

செல்லப்பர் இப்போது அன்னம்மாவைப் பார்த்துச் சிரித்தார்.

அந்த வேளையில் அங்குவந்த பார்வதி, ”அப்பு சாப்பிட வாருங்கோ“ எனத் தந்தையை அழைத்துவிட்டு, ”மாமி நீங்களும் வாருங்கோ இடியப்பமும், உங்களுக்குப் பிடிச்ச வெந்தயக் குழம்பும் வைச்சிருக்கிறன் “ என அன்னம்மாவையும் அழைத்தாள்.

”இல்லைப் பார்வதி, நான் போவேணும், எனக் கூறிக்கொண்டே புறப்பட்ட அன்னம்மா, ”மாணிக்கன் இந்தப் பக்கம் வந்தால் அவனை அனுப்பி நடேசுவை ஒருக்கா வீட்டை வரச் சொல்லிவிடு“ எனப் பார்வதியிடம் கூறிவிட்டுச் சென்றாள்.

– தொடரும்…

– புதிய சுவடுகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email
தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். இவர் இச்சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு சூனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியவாறும் வெளியிட்டு வருகின்றார். வாழ்க்கைக் குறிப்பு நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[2] ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *