பிழைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 2,039 
 
 

காரை விட்டு இறங்கினார் தங்கம். தன்னுடன் காரில் வந்த மாவட்டத் துணைச் செயலாளர் இசக்கியிடம் “இருங்க வரன்” என்று சொல்லிவிட்டு டிரைவரிடம் “அஞ்சு நிமிஷத்தில வந்திடுவன் ரெடியா இருக்கணும்” என்று சொன்னார். அப்போது தங்கத்தை பார்ப்பதற்காக வந்து காத்திருந்த ஆண்மப்பெருக்கி ஊரைச் சேர்ந்த பத்துக்கும் அதிகமான கட்சிக்காரர்கள் ஓடி வந்து “வணக்கம்ண்ணே” என்று ஒரே குரலாகச் சொன்னார்கள். அவர்களிடம் “இருங்க வரன்” என்று ஒரே வார்த்தைதான் சொன்னார். பிறகு விடுவிடுவென்று வேகமாக வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

வீட்டிற்கு முன் போட்டிருந்த பந்தலின் நிழலில் தங்கத்திற்காகக் காத்திருந்த ஆண்மப்பெருக்கி ஊரைச் சேர்ந்த கட்சிக்காரர்களுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. கட்சிக்காரர்களைப் பார்த்து வணக்கம் சொல்லாமல், என்ன ஏது என்று விசாரிக்காமல் ஒரு நாளும் இருக்க மாட்டார். கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தாலும் கட்சிக்காரன் வணக்கம் வைத்தால் பதில் வணக்கம் வைப்பார். மந்திரியாக இருந்தபோது சாதாரண கட்சிக்காரன் வணக்கம் வைத்தால்கூட “வணக்கம் வாங்க” என்று சொல்வார். கட்சியிலுள்ள மற்ற மாவட்டச் செயலாளர்கள்போல், வணக்கம் வைத்தால், தலையை மட்டுமே ஆட்டுகிற பழக்கமோ, ஒற்றைக் கையால் மட்டுமே வணக்கம் வைக்கிற பழக்கமோ தங்கத்திடம் இருந்ததில்லை. இன்று என்ன வாயிருக்கும்? கட்சிக்காரர்கள் சாதாரண நேரத்தில் வணக்கம் வைக்கிறார்களோ இல்லையோ, தேர்தல் நேரத்தில் கட்டாயம் வணக்கம் வைப்பார்கள். “வாங்கண்ணே” என்று தானாகவே கூப்பிடுவார்கள். எதுவும் பேசாமல் விர்ரென்று தங்கம் போனதால் நல்ல கோபத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆண்மப்பெருக்கி ஊரைச் சேர்ந்த கட்சிக் கிளைச் செயலாளர்  சுடலை, “என்னண்ணே மாவட்டம் விர்ன்னு போயிட்டாரு கோபத்தில இருக்காரா?” என்று இசக்கியிடம் கேட்டார்.

“நரிக்குடி ஒன்றியத்தில பழய கட்சிக்காரர் இறந்திட்டாரு. அதுக்குப் போவணும். அதுக்கு ரெடியாவறதுக்காகப் போயிருக்காரு” என்று சொல்லிவிட்டு சிகரட் குடிப்பதற்காக மறைவான இடத்தைத் தேடிப்போனார் இசக்கி.

காரை துடைத்துக்கொண்டிருந்த டிரைவரிடம் “மாவட்டம் என்னிக்கும் இல்லாம இன்னிக்கி வேகமாப் போறாரே ஏதாவது பிரச்சனயா?” என்று சுடலை கேட்டார்.

“பொணத்துக்கு மால போடுறதுக்காக ஓட்டுக் கேக்குறதப் பாதியிலியே வுட்டுட்டு வந்திட்டம். அதனால் டென்ஷனா இருக்காரு” என்று சொன்னான் டிரைவர். சுடலை டிரைவரிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

சிகரட் குடித்துவிட்டு வந்த இசக்கி “தேர்தல் நேரத்தில என்ன கூட்டமா வந்து இருக்கிங்க?” என்று சுடலையிடம் கேட்டார்.

“கொடி வல்ல. தோரணம் வல்ல. சுவர் விளம்பரம் செய்யுறதுக்கு ஆள் வல்ல. எங்க ஊர்ல தேர்தல் வேலயே ஆரம்பிக்கல. அதான் மாவட்டத்தப் பாத்துச் சொல்லிட்டு போவலாம்ன்னு வந்தம்ண்ணே”

“ஒரு கிளைக்கி அஞ்சாயிரம்ன்னு முத ரவுண்டு கொடுத்தமே என்னாச்சி?”

“எங்க கிளைக்கு வல்லண்ணே.”

“என்னய்யா சொல்ற?”

“உண்மயத்தான் சொல்றன். மாவட்டத்துகிட்ட வந்து பொய்ச்சொல்ல முடியுமாண்ணே?”

“ஒங்க பகுதிக்கு குழுத் தலைவரு யாரு?”

“ஒன்றியம்தான். அவர்கிட்ட காசு போனாலே வராதுண்ணே.”

“நான் மாவட்டத்துகிட்ட சொல்றன். கொடுக்கிறதில பாதிகூடப் போய்ச் சேரலன்னா என்னா செய்ய முடியும்? மாவட்டத்தோட தொகுதியே இந்த லட்சணத்திலதான் இருக்கு. சரி ஒங்க ஊர்ல நம்பளுக்கு எத்தன ஓட்டு வரும்?”

“எல்லாம் நம்ப ஓட்டுத்தாண்ணே.”

“எல்லாம் நம்ப ஓட்டுத்தான்னு தொகுதியிலுள்ள ஒவ்வொரு ஊருக்கார பயலும் சொல்றானுவ. பொட்டியத் தொறந்து எண்ணும்போதுதான் ஒவ்வொருத்தனோட யோக்கிதயும் தெரியும்” என்று இசக்கி சொன்னதும் கோபப்பட்ட மாதிரி, “எங்க ஊர் ஓட்டு எண்ணும்போது பாருங்க. யாருக்கு அதிக ஓட்டு விழுந்திருக்குன்னு தெரியும்” என்றார் சுடலை.

“எதா இருந்தாலும் போன்ல சொல்ல வேண்டியதுதான? தேர்தல் நேரத்தில அவனயும் இவனயும் கொற சொல்லிக்கிட்டு இருக்காதிங்க. கட்சி ஜெயிக்கிறதுக்கான வேலயப் பாருங்க” என்று எச்சரிக்கை செய்வதுபோல இசக்கி சொன்னார்.

“ஒன்றியம் போன எடுக்கல. எலக்‌ஷன் நேரத்திலியுமா ஆளு பாத்துக் காரியம் செய்வாரு? அத சொல்லத்தான் வந்தம்” என்று சுடலை சொன்னார். அப்போது ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஆறு பேர் இறங்கினார்கள். பத்திரிகைக்காரர்கள் என்பதால் அவர்கள் வணக்கம் வைப்பதற்கு முன்பாகவே இசக்கி வணக்கம் வைத்து, “வாங்க. வாங்க” என்று சொன்னார்.

பத்திரிகைக்காரர்களில் கறுப்பாக, குள்ளமாக இருந்த மாவட்டப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் வெற்றிவேல், “மாவட்டத்த பாக்கணும்ண்ணே” என்று சொன்னதும் “மாவட்டம் அவசரமா ஒரு இடத்துக்குக் கிளம்பிக்கிட்டு இருக்காரு” என்று இசக்கி சொன்னார். அப்போது “இசக்கி” என்று தங்கம் கூப்பிட்ட சத்தம் கேட்டட்தும்  இசக்கி வீட்டிற்குள் சென்றார்.

குளித்து முடித்துவிட்டு வேட்டி, சட்டையை மாற்றிக்கொண்டு மூக்குக் கண்ணாடியை துடைத்துக்கொண்டிருந்த தங்கம் “கிளம்பலாமா?” என்று கேட்டார்.

“போவலாம்ண்ணே” என்று சொன்னார். பிறகு குரலைத் தாழ்த்திப் பிடிக்காத விஷயத்தை சொல்வதுபோல், “பத்திரிகைகாரங்க வந்திருக்காங்க” என்றார்.

“நாளைக்குப் பாக்கலாம்ண்ணு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டுக் கண்ணாடியை போட்டுக் கொண்டார். மடித்து வைத்திருந்த கட்சித் துண்டையும் செல்போனையும் எடுத்துக்கொண்டார். “கிளம்பிட்டம், அர மணிநேரத்தில வந்திடுவம்ன்னு துட்டி வீட்டுக்காரங்களுக்கு சொல்லிடுங்க” என்று சொன்னார். அப்போது செல்போன் மணி அடித்தது. போனை எடுத்துப் பேசினார். போன் பேசும்போது பக்கத்தில் இருந்தால் திட்டுவார் என்பதால் வெளியே வந்த இசக்கி டிரைவரிடம் “அண்ணன் கிளம்பிட்டாங்க. வண்டிய ஸ்டார்ட் பண்ணு” என்று சொன்னார். உடனே வண்டியில் ஏறி உட்கார்ந்தான் டிரைவர்.

“மாவட்டத்துகிட்ட சொல்லிட்டிங்களாண்ணே” என்று வெற்றிவேல் கேட்டார்.

“சொல்லிட்டங்க.”

“பி.ஏ. ரெண்டு பேரு இருப்பாங்களே எங்க?”

“எலக்‌ஷன் வேலயா வெளிய போயிட்டாங்க” என்று இசக்கி பட்டும்படாமல் சொன்னார். அப்போது தங்கம், “இசக்கி” என்று கூப்பிட்டார். வீட்டிற்குள் ஓடினார் இசக்கி.

“போவலாமா?”

“பத்திரிககாரங்க வாசப்படியில நிக்குறாங்கண்ணே” என்று சொல்ல விரும்பாத செய்தியை சொல்வது போல் சொன்னார் இசக்கி.

“நேரம் காலம் வாண்டாமா?” என்று கேட்டு முறைத்தார் தங்கம். இசக்கி எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார். “தெனம் தெனம் வந்தா என்னா செய்யுறது? எலக்‌ஷன் வந்தாலே இவனுங்க தொல்லதான்” என்று சலித்துக்கொண்டார் தங்கம்.

“இப்பப் பாக்க முடியாதுன்னு சொல்லிடவாண்ணே?”

“சும்மா இருக்கும்போதே இல்லாததயும், பொல்லாததயும் அள்ளிப்போட்டு எழுதுவானுங்க. நீ மொறச்சா நான் மொறச்ச மாதிரிதான். தேர்தல் நேரம் வேற. ‘ஓட்டுக் கேட்கச்சென்ற மாஜி மந்திரியை மக்கள் விரட்டியடிப்பு’ன்னு எழுதிடுவானுங்க. எதையும் வெளிய சொல்ல முடியாது. என்ன செய்ய? வரச் சொல்லுங்க.” என்று சொல்லிவிட்டுத் தலையில் அடித்துக்கொண்டார். சாதாரணமாக பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சிக்காரர்கள் என்று யார் வந்தாலும் முகம் சுளிக்காமல் பேசுவார். ஆனால் இன்று ஒரு சாவுக்குப் போக வேண்டும். அதற்கடுத்து தொகுதி கமிட்டிக் கூட்டத்துக்குப் போக வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தார் தங்கம்.

இசக்கி வெளியே போய் “வாங்க” என்று சொன்னார். பத்திரிகைகாரர்கள் ஆறுபேரும் உள்ளே வந்து “வணக்கம்ண்ணே.” என்று சொன்னதோடு தங்கத்தின் கையைப் பிடித்து குலுக்கினார்கள்.

“உட்காருங்க” என்று சொல்லி பொய்யாகச் சிரித்துக்கொண்டே கிழக்குப்புறச் சுவர் ஓரமாக இருந்த சோபாவைத் தங்கம் காட்டினார். பத்திரிகைக்காரர்கள் உட்கார்ந்ததும் தன்னுடைய நாற்காலியில் உட்கார்ந்தார். “என்ன சாப்புடுறிங்க? டீயா, காபியா?” என்று கேட்டார்.

“அதெல்லாம் வாணாம்ண்ணே ஒங்கள பாத்ததே போதும்” என்று சொல்லிச் சிரித்தார் வெற்றிவேல்.

“வீட்டுக்கு வந்து எதுவும் சாப்புடலன்ன எப்படி?” என்று அன்பாகக் கேட்ட தங்கம், கதவை ஒட்டி ஒடுங்கிப்போய் நின்றுகொண்டிருந்த இசக்கியிடம், “ஆறு காபி கொண்டுவரச் சொல்லுங்க” என்று சொன்னார். உடனே உள்வீட்டிற்குள் சென்றார் இசக்கி.

பத்திரிகைக்காரர்கள் மட்டுமல்ல தங்கமும் வாயைத் திறக்கவில்லை. வெறுமனே ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். பத்திரிகைக்காரர்கள் உட்கார்ந்திருக்கும் விதத்தைப் பார்த்தால் தற்போதைக்கு வாயைத் திறக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்ட தங்கம் “என்ன திடீர்னு எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வந்து இருக்கிங்க” என்று கேட்டார்.

“பதிமூணு பேர்தாண்ணே கிளம்பினோம். சின்ன வண்டிங்கிறதால இடமில்ல. ஆறு பேர்தான் வர முடிஞ்சிது. மத்தவங்கள வேற வண்டிய எடுத்துக்கிட்டு வரச் சொல்லியிருக்கம்” என்று சொன்ன வெற்றிவேல் சிரித்தார். அவர் எதற்காகச் சிரித்தார் என்று தங்கத்திற்குப் புரியவில்லை. ஆனாலும் எதையாவது பேச வேண்டுமே என்ற எண்ணத்தில் “அப்படியா?” என்று கேட்டார். கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஐந்து என்று தெரிந்ததும் உள்அறைப் பக்கம் பார்த்து “இசக்கி” என்று கூப்பிட்டார்.

“வந்துட்டண்ணே” என்று சொல்லிக்கொண்டே வந்த இசக்கி கையில் வைத்திருந்த ட்ரேயில் ஆறு காபி தம்ளர்கள் இருந்தன. பத்திரிகைக்காரர்களுக்கு காபியைக் கொடுத்துவிட்டு ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டார்.

“வண்டிய ஸ்டார்ட் பண்ணச் சொல்லுங்க” என்று இசக்கியிடம் சொன்னார் தங்கம். ”ஸ்டார்ட் பண்ணித்தான் இருக்கு” என்று சொல்ல நினைத்தார். ஆனால் எதுவும் சொல்லாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனார் இசக்கி.

“வீட்டுல யாருமில்லியாண்ணே?” என்று வெற்றிவேல் கேட்டார்.

“வெளிய போயிருக்காங்க.”

“எப்பவும் ஜேஜேன்னு ஒரே கூட்டமா இருக்குமே.” என்று வெற்றிவேல் சொன்னார்.

“தேர்தல் நேரமில்லியா? ஆளாளுக்கு வேல. ராத்திரி பத்து மணிக்கு மேலதான் கட்சிக்காரங்க வருவாங்க.” என்று சொன்னார். அடுத்து தங்கமும் பேசவில்லை. பத்திரிகைக்காரர்களும் பேசவில்லை. தங்கத்தை சந்தோஷப்படுத்துவதற்க்கான வழிகளைப் பத்திரிகைகாரர்கள் யோசிக்க ஆரம்பித்தனர். பொறுமையிழந்துப்போன தங்கம்தான் “சொல்லுங்க” என்று கேட்டார்.

“அண்ணன் ஜெயிச்சு திரும்பவும் மந்திரியாவணுமின்னு வாழ்த்துச் சொல்ல வந்தம்ண்ணே” என்று சொன்ன வெற்றிவேல் எழுந்து வந்து தங்கத்திடம் ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்தார். அவரையடுத்து மற்ற ஐந்து பேரும் ஆளுக்கொரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்து வாழ்த்துச்சொன்னார்கள்.

“வீடு தேடி வந்து வாழ்த்து சொன்னதுக்கு நன்றி. ரொம்ப சந்தோஷம்” என்று தங்கம் சொன்னார். அடுத்து பத்திரிகைக்காரர்கள் ஏதாவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்தார். ஒரு ஆள்கூடப் பேசவில்லை அதனால் தங்கமே கேட்டார் “வேற என்ன விசேஷம்?”

“நேத்து நீங்க ஓட்டுக் கேக்குறப்ப எடுத்தப் போட்டோவப் பெருசா கலர்ல போட்டிருந்தன். பாத்திங்களாண்ணே” என்று கேட்ட ஆதவன் என்ற பத்திரிகையாளர் போட்டோ வந்திருந்த செய்தித்தாளைத் தங்கத்திடம் கொடுத்தார். செய்தித்தாளை வாங்கிக்கொண்டு “காலயிலியே பாத்தன்” என்று சொன்னார்.

“நியூசும் பெருசா கவர் பண்ணியிருந்தண்ணே.”

“பாத்தன். நல்லா எழுதியிருந்திங்க” என்று சொன்னதோடு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் சிரித்தார். பிறகு “அப்புறம்?” என்று கேட்டார். அதற்கு பத்திரிகையாளர்களில் ஒரு ஆள்கூட பதில் சொல்லவில்லை. பத்திரிகையாளர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள். நாம்தான் எதையாவது பேசித் தொலைக்க வேண்டும் என்று நினைத்தத் தங்கம் “தொகுதி நிலவரம் எப்பிடி இருக்கு?” என்று கேட்டார்.

“அண்ணன் ஜெயிக்கிறது உறுதி. மந்திரியாவறதும் உறுதி” என்று வெற்றிவேல் சொன்னார். அதைக் கேட்ட தங்கம் லேசாகச் சிரிக்க மட்டுமே செய்தார். பிறகு “தமிழ்நாடு முழுக்க நிலவரம் எப்பிடி இருக்கும்?” என்று ஒரு பேச்சுக்குக் கேட்டார். அதையே காரணமாக வைத்து வெற்றிவேல் அரசியல் பேச ஆரம்பித்தார்.

“நம்ப கட்சிக்கு சாதகமாத்தான் இருக்குண்ணே. ஆனா எப்பவும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுக்க கட்சிக்காரன், எதிர்க்கட்சிக்காரன்னு பாக்காம ஓட்டுக்கு ஆயிரம்ன்னு ஆளும் கட்சிக்காரங்க இப்பவே கொடுத்து முடிச்சிட்டாங்க” என்று வெற்றிவேல் சொல்லி முடிப்பதற்குள் “போலீச காவலுக்கு வச்சிக்கிட்டே பணத்த கொடுத்திட்டாங்க” என்று சொல்லிவிட்டு சிரித்தார். தங்கம் சிரித்ததால் பத்திரிகைக்காரர்களும் சிரித்தார்கள்.

“வழக்கமா வீக்கான தொகுதியில, வீக்கான கிராமத்தில, வார்டுலதான் பணம் கொடுப்பாங்க. ஆனா இந்தமுற பை எலக்ஷனில் கொடுக்கிற மாதிரி சகட்டுமேனிக்கு ஓட்டுக்கு ஆயிரம்ன்னு கொடுத்திட்டாங்க” என்று அதிசயமான விஷயத்தை சொல்வதைப்போல் வெற்றிவேல் சொன்னார். “மந்திரிங்க தொகுதியில் ரெண்டாயிரம். முதலமைச்சர் தொகுதியில மூவாயிரம்ன்னு கொடுத்திட்டாங்க” என்று தங்கம் சொன்னதும், பத்திரிகைக்காரர்கள் பேசவில்லை. தங்கமே மீண்டும் சொன்னார், “ரெண்டாவது முறையும் எப்படியாவது ஆட்சிக்கு வரணுமின்னு நெனைக்கிறாங்க. ஹெலிகாப்ட்டரிலியே பணத்தக் கொண்டாந்து டெலிவரி பண்றங்க.”

“தமிழ்நாட்டுல வழக்கமாக மாறிமாறி ஆட்சிக்கு வரதுதான் நடமுற. இப்ப அளவு கடந்து பணம் வௌயாண்டிருக்கு. அதனால ரிசல்ட் இந்த முற எப்பிடி வரும்ன்னு சொல்றது கஷ்டம்ண்ணே. ரெண்டாயிரத்துப் பதினாறு தேர்தல் வித்தியாசமானதுண்ணே.” என்று வெற்றிவேல் சொன்னார். அப்போது “நானும் கட்சிக்காரன்தாண்ணே. தலைமயில சொல்லி எப்பிடியாச்சும் நம்ப கட்சியிலயும் ஓட்டுக்கு ஐநூறாவது கொடுக்கச் சொல்லுங்க. நூறு ஐம்பது கொடுத்தா வேலக்கி ஆவாதுண்ணே” என்று அக்கறையுடன் ஆதவன் சொன்னார். அதற்குத் தங்கம் எந்தப் பதிலும் சொல்லவில்லை. பார்க்கலாம் என்பதுபோல் தலையை மட்டுமே ஆட்டினார்.

வெற்றிவேலும், ஆதவனும், மற்ற பத்திரிகைக்காரர்களும் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தனர். எதையும் கேட்கிற மனநிலையில் தங்கம் இல்லை. அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்தார். கர்ச்சீப்பால் முகத்தையும், முன் நெற்றியில் இருந்த வழுக்கைத் தலையையும் துடைத்துக்கொண்டார். தாங்கள் சொல்வதைத் தங்கம் கேட்கிறாரா இல்லையா என்றுகூட யோசிக்காமல் ஜோசியக்காரகள்போல் தேர்தல் முடிவுகள் பற்றிப் பத்திரிகைக்காரர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றுக்கும் தங்கம் “அப்படியா?” என்று கேட்பதுபோல் பார்க்க மட்டுமே செய்தார். அரசியல்வாதியாக இருந்தாலும் தங்கம் அதிகமாகப் பேச மாட்டார். அவருடைய முகத்தை மட்டுமே பார்த்து சந்தோஷமாக இருக்கிறாரா, கோபமாக இருக்கிறாரா என்று கண்டுபிடிப்பது சிரமம். இப்போதும் அவருடைய முகம் எதையும் கண்டுப்பிடிக்க முடியாத நிலையில்தான் இருந்தது.

இசக்கி உள்ளே வந்து “போன் வந்துகிட்டே இருக்குண்ணே” என்று சொன்னார்.

“வரன்” என்று தங்கம் சொன்னதும் மறு வார்த்தை பேசாமல் வெளியே போனார் இசக்கி.

“ஏதாவது வேலயா வெளிய போறிங்களாண்ணே” என்று தாடி வைத்திருந்த பத்திரிகையாளர் கேட்டார்.

“ஒரு துட்டிக்கிப் போவணும். நான் போயி மால போட்ட பின்னாலதான் பாடிய எடுப்பன்னு வச்சிக்கிட்டு இருக்காங்க” என்று தங்கம் சொன்னதைக் கேட்ட ஆதவன், “ஓட்டு கேக்குற சமயத்திலகூடவா இப்பிடி நெருக்கடி கொடுக்கிறாங்க?” என்று கேட்டார்.

“மாவட்ட செயலாளர்ங்கிறதாலதான் கூப்புடுறாங்க. போய்தான் ஆவணும். கட்சிக்காரன் வீட்டு நல்லது கெட்டதுக்குப் போனாத்தான கட்சி இருக்கும். அப்பிடி உருவான கட்சிதான் இது? சினிமாக்காரன் கட்சியோ, சினிமாக்காரி கட்சியோ இல்லியே இது?” என்று சொன்னார். பிறகு ஒரு காரணமும் இல்லாமல் லேசாகச் சிரித்தார்

“நாங்க வந்த நேரம் சரியில்லண்ணே” என்று வெற்றிவேல் சொன்னார்.

“எதுக்காக அப்பிடி சொல்றிங்க?”

“சும்மாதாண்ணே” என்று சொல்லி வெற்றிவேல் பொய்யாகச் சிரித்தார்.

“நேரங்காலம் பாத்தா சாவு வருது? என்னால கட்சிக்காரரோட பாடிய எடுக்கிறது லேட்டாவக் கூடாதுன்னுதான் ஓட்டுக் கேக்குறத பாதியிலியே விட்டுட்டு வந்தன். நான் போனா அவங்களுக்கு ஒரு சந்தோஷம். ஊர்ல ஒரு மரியாத, கட்சிக்காரனுக்கு என்னால வேற என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். பத்திரிகையாளர்கள் பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தனர்.

“கல்யாண வீட்டுக்குக்கூட போவாம இருப்பன். ஆனா சாவு வீட்டுக்கு மட்டும் போவாம இருக்க மாட்டன். கல்யாண மாப்ள, பொண்ண, சாயங்காலமோ, மறுநாளோ பாக்க முடியும். செத்தவங்கள அப்பிடிப் பாக்க முடியாதில்ல.”

“உங்களுக்கு தலைவரு சரியாத்தாண்ணே பேரு வச்சியிருக்காரு.” என்று சொன்ன வெற்றிவேல் இப்போது நிஜமாகவே சிரித்தார்.

“தங்கம்ன்னு என்னிக்கி தலைவரு பேரு வச்சாரோ அன்னியிலிருந்து நான் படுறபாடு கொஞ்சமில்ல. பேர காப்பாத்தவே போராட வேண்டியிருக்கு, சாவ வேண்டியிருக்கு” என்று மனம் நொந்து போனது போல் சொன்னார். “நம்ப கட்சியிலியே நல்ல மாவட்ட செயலாரு, நல்ல மந்திரின்னு பேரு எடுத்த ஒரே ஆளு நீங்கதாண்ணே” என்று ஆதவன் சொன்னதைக் கேட்டு தங்கம் சந்தோஷப்படவில்லை. பத்திரிகைக்காரர்களை என்ன சொல்லி, எப்படிச் சொல்லி அனுப்புவது என்று மட்டுமே யோசித்தார். ஆனாலும் பத்திரிகைகாரர்களிடம் தேவையில்லாமல் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற எண்ணமும் மனதிற்குள் இருந்தது. அதனால் “அப்புறம் சொல்லுங்க” என்று கேட்டார்.

பத்திரிகைக்காரர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஆனால் தங்கத்திற்கு மட்டும் பதில் சொல்லவில்லை. அப்போது உள்ளே வந்த இசக்கி, “சிவகாசியோட நகரம் வந்திருக்கார்ண்ணே” என்று சொன்னார்.

“இருக்க சொல்லுங்க வரன்” என்று தங்கம் சொன்னதும் வெளியே போனார் இசக்கி. பத்திரிகைக்காரர்களைப் பார்த்து “ஒங்கக்கிட்ட எலக்‌ஷன் பத்தி நெறயா பேசணும்ன்னுதான் நெனைச்சன். இப்ப அதப் பத்திப் பேச நேரமில்ல. தப்பா எடுத்துக்காதிங்க. நாளைக்கு வாங்க பேசிக்கலாம். துட்டிக்குப் போகணும். அப்புறம் விருதுநகர்ல நடக்கிற தொகுதி கமிட்டிக் கூட்டத்துக்குப் போகணும்.” என்று சொல்லிவிட்டு எழுந்திருப்பதற்கு முயன்றார் தங்கம்.

“ஒரே ஒரு விஷயம்தாண்ணே” என்று தயக்கத்துடன் வெற்றிவேல் சொன்னார்.

“சொல்லுங்க” என்று கட்டளைபோல் சொன்னார் தங்கம்.

“தேர்தலுக்கு விளம்பரம் வாங்க வந்தம்ண்ணே” என்று ஆதவன் சொன்னார்.

“பிரச்சாரத்திற்கு தலைவர் வரும்போதும், மத்த பேச்சாளர்கள் வரும்போதும் கொடுக்கிறதுக்கா?”

“ஆமாண்ணே.”

“அதுக்கென்ன, வழக்கமா கொடுக்கிறதுதான? கொடுத்திடலாம்.”

“கலர்ல முழுப் பக்கம் கொடுத்தா உதவியா இருக்கும்ண்ணே” வெற்றிவேல் ரொம்ப மரியாதையுடன் சொன்னார்.

“எல்லாப் பத்திரிகைக்கும் முழுப் பக்கம் கொடுக்க முடியுமான்னு தெரியல. இப்பதான் தினசரியிலியே ஏழெட்டுப் பத்திரிகயாயிடிச்சி. அப்பறம் மாலைப் பத்திரிக வேற இருக்கு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்றன். சரியா? இதுக்காகவா இவ்வளவு தூரம் வந்திங்க? இத போனிலியே சொல்லியிருக்கலாமே. நீங்க சொன்னா நான் செய்ய மாட்டனா?” என்று கேட்டு உரிமையுடன் பத்திரிகைக்காரர்களிடம் கோபித்துக்கொண்டார்.

“ஒங்களப் பத்தி எங்களுக்குத் தெரியாதாண்ணே” என்று சொல்லி மழுப்பிய ஆதவன் “வேற ஒரு விஷயமா வந்தம்ண்ணே” என்று குரலைத் தாழ்த்திச் சொன்னார்.

“சொல்லுங்க. போவணும். நேரமில்ல.”

“தேர்தல் முடியுரவர ஒரு பேக்கேஜ் நியூஸ் போடலாமின்னு இருக்கம்ண்ணே.”

“நல்லா செய்யுங்க. தேர்தல் நேரத்தில பெரிய உதவியா இருக்கும்” என்று தங்கம் சொன்னதும் பத்திரிகைக்காரர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர்.

“ஒரு பேக்கேஜ் நியூசுக்கு ஒரு லட்சம்ண்ணே. தெனம் ஒரு நியூசும் போட்டாவும் வரும்ண்ணே” என்று ஆதவன் சொன்னதும், அதிசயமான விஷயத்தைக் கேட்டது போல் “யே அப்பா.” என்று சொன்னார் தங்கம். பிறகு “இது இல்லாம விளம்பரம் வேறயா?” என்று கேட்டார். பத்திரிகைக்காரர்கள் பதில் பேசவில்லை.

“சாதாரணமா எப்பவும் போடுற நியூஸ்தான? இப்ப என்ன புதுசா பேக்கேஜ்ன்னு பேரு வச்சி பணம் கேக்குறிங்க?” என்று தங்கம் கேட்டார். பணம் கேட்பதற்க்கும் ஒரு அளவு வேண்டாமா என்று கோபம் வந்தது. வந்த கோபத்தை மறைத்துக்கொண்டு எப்போதும்போல் இயல்பாக முகத்தை வைத்துக்கொள்ள முயன்றார். மந்திரியாக இருந்தாலும், மாவட்டச் செயலாளராக இருந்தாலும், பத்திரிகை, தொலைக்காட்சிக்காரர்கள் முன் எலிகள்தான் என்ற எண்ணம் அப்போது அவருக்கு உண்டாயிற்று.

தங்கம் நேரிடையாக விஷயத்தை கேட்டதும் பத்திரிகைக்காரர்களுடைய முகம் பச்சிலை மருந்தைக் குடித்ததைப் போல் சுருங்கிப்போயிற்று. எப்படி விஷயத்தைச் சொல்வது என்று தெரியாமல் விழித்தனர். அவசரப்பட்ட தங்கம், “சொல்லுங்க. நான் கிளம்பணும். நேரமில்ல” என்று சொன்னார். அப்போதும் பத்திரிகைக்காரர்கள் எதுவும் பேசாததால் கோபம் வந்த மாதிரி “ஒரு பத்திரிகைக்கு ஒரு லட்சம்ண்ணா, எத்தனை பத்திரிகை இருக்கு? எத்தன லட்சம் செலவு ஆவும்? அப்பறம் தலைவர்கள் வரும்போது, பேச்சாளர்கள், சினிமா நடிகர்கள், நடிகைகள் வரும்போதெல்லாம் அரப் பக்கம், முழு பக்கம்ண்ணு கலர்ல விளம்பரம் கொடுக்கணுமில்லியா?” என்று கேட்டார். அவருடைய  குரலில் முன்பிருந்த இயல்புத்தன்மை இல்லை.

“ஆமாண்ணே” என்று சொன்ன ஆதவனின் குரலில் பணிவு கூடியிருந்தது.

வந்த காரியம் முடிய வேண்டும் என்பது மட்டுமே பத்திரிகைக்காரர்களின் நோக்கமாக இருந்தது. தனியாக போனால் காரியம் நடக்காது, கூட்டமாகப் போனால்தான் காரியம் நடக்கும் என்று தெரிந்துதான் ஆறு பேரும் ஒன்றாக வந்தார்கள்.

1991ல் தங்கம் முதன்முதலாக சட்டமன்றத் தேர்தலில் நின்றபோது மொத்தமே பதினாறு லட்சம்தான் செலவாயிற்று. இப்போது பத்திரிகைக்காரர்களுக்கு மட்டுமே இருபது முப்பதுலட்சம் செலவு ஆகும்போல் இருக்கே என்று யோசித்தார். 1991ல் தங்கத்திற்குத் தெரிந்து இரண்டு மூன்று பத்திரிகைக்காரர்கள்தான் மாவட்டத்திற்கே இருந்தார்கள். கட்சிக் கூட்டத்திற்கு வந்த பத்திரிகைகாரர்களிடம் டீ செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று நூறு ரூபாய்தான் அப்போது கொடுத்தார். அதையே வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். இப்போது அப்படிச் சொல்கிற ஒரு ஆளைப் பார்ப்பது அபூர்வம். இப்போது பத்திரிகை நிருபர்கள் என்று மாவட்டத்தில் குறைந்தது நூறு பேராவது இருப்பார்கள். தொலைக்காட்சி நிருபர்கள் என்று தனியாக நூறு பேர் இருப்பார்கள். ’இவனுங்ககிட்ட கொடுக்கிற பணத்த சனங்ககிட்ட கொடுத்தா கொறஞ்சது பத்தாயிரம் ஓட்டு வாங்கி ஜெயிக்கலாமே’ என்று மனதிற்குள் கணக்குப்போட்டார். கணக்கு அவரை பயம்கொள்ள வைத்தது. அதனால் உடனே ஆட்களை அனுப்ப வேண்டும் என்று நினைத்தார். பத்திரிகைக்காரர்கள் அவர்களாகப் பேச மாட்டார்கள், வந்த காரியத்தை முடிக்காமலும் போக மாட்டார்கள் என்பதால் தற்போதைக்கு விஷயத்தைத் தள்ளிப்போடுவோம் என்ற எண்ணத்தில் “நாளைக்கு வாங்க பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டுச் சட்டென்று எழுந்து நின்றார். தங்கம் எழுந்துவிட்டதால் பத்திரிகைக்காரர்களும் எழுந்துவிட்டார்கள், “ஒரு பேக்கேஜ் போட்டுறம்ண்ணே” என்று கெஞ்சுவதுபோல் வெற்றிவேல் கேட்டார்.

“அவசரப்படாதிங்க. சொல்றன்.”

“நீங்க சரின்னு சொன்னா போதும். அண்ணங்கிட்ட பணமா கேக்குறம்?” என்று சொன்னதோடு ஒரு பொய்யான சிரிப்பையும் சிரித்தார் ஆதவன்.

“இப்ப அப்பிடித்தான் சொல்விங்க. அப்பறம் நாளைக்கே வந்து ரசீத கொடுப்பிங்க” என்று சொல்லிவிட்டுத் தங்கம் சிரித்தார். வெட்கமாக இருந்தாலும் பத்திரிகைக்காரர்களும் சிரிக்கவே செய்தனர். அப்போது உள்ளே வந்த இசக்கி “திருத்தங்கல் ஒன்றியம் மாடசாமி கல்யாண பத்திரிகை கொண்டு வந்திருக்காரு. கல்யாண வீட்டுக்காரங்களையும் அழச்சிக்கிட்டு வந்திருக்காரு” என்று சொன்னதும், இதை வைத்தே வெளியே போய்விடலாம் என்று நினைத்தத் தங்கம், “நேரமில்ல உடனே வரச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தார். இசக்கி வெளியே போன சிறிது நேரத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட ஆட்கள் உள்ளே வந்தனர். வந்த வேகத்திலேயே ஒரு பையன், “மாவட்டம் வாழ்க, வருங்கால மந்திரி வாழ்க” என்று கோஷம் போட்டான்.

“வாங்க வாங்க” என்று உள்ளே வந்த கட்சிக்காரர்களைப் பார்த்து கும்பிட்டுவிட்டு கோஷம் போட்ட பையனைப் பார்த்து “மாவட்டம் வாழறது, மந்திரியாவது எல்லாம் அப்பறம். முதல்ல தேர்தல் வேலய பாரு” என்று கண்டிப்பான குரலில் சொன்னார். அப்போது மாடசாமி ஒருவரை காட்டி “இவர் பொண்ணோட அப்பா” என்று சொன்னார்.

“வணக்கம்” என்று தங்கம் சொன்னார். மற்றொருவரைக் காட்டி “இவர் பையனோட அப்பா” என்று மாடசாமி சொன்னார். அவருக்குக்கும் தங்கம் “வணக்கம்” என்று சொன்னார்.

“ரெண்டு குடும்பமும் பரம்பர கட்சிக் குடும்பம்” என்று மாடசாமி சொன்னார்.

“சந்தோஷம்” என்று தங்கம் சொன்னார். பிறகு ஒரு தட்டில் வைத்துக்கொடுத்த பத்திரிகையை வாங்கிக்கொண்டு “எலக்‌ஷன் நேரத்தில வருவனா மாட்டனான்னு யோசிக்க வேண்டாம். கட்டாயம் வந்திடுவன். கல்யாண வேலயில எலக்‌ஷன் வேலய வுட்டுடாதிங்க” என்று சொன்னார்.

“கல்யாண வேல ரெண்டாம்பட்சம்தான். மாவட்டத்த ஜெயிக்க வைக்கிறதுதான் எங்களோட முத வேல” என்று மாப்பிள்ளையினுடைய அப்பா கருப்பசாமி சொன்னதும் “ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்ட தங்கம் “போயிட்டு வாங்க” என்று சொன்னார்.

அப்போது முன்பு “மாவட்டம் வாழ்க, எங்கள் தங்கம் வாழ்க” என்று கோஷம்போட்ட பையன் “அண்ணே நேத்து நீங்க ஓட்டு கேக்குறப்ப எடுத்த போட்டோவப் பேஸ்புக்குலப் போட்டிருந்தன் பாத்திங்களாண்ணே” என்று கேட்டதும் “தேர்தல் முடியுறவர பேஸ்புக்கு, வாட்ஸ்அப்ன்னு அலயக் கூடாது. ஒழுங்கா தேர்தல் வேலயப் பாரு” என்று சொன்னார். அப்போது கருப்புசாமி தங்கத்தின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். சட்டென்று தங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது “என்னண்ணே செய்யுறிங்க? நம்பக் கட்சி என்னா கட்சி? நீங்க எல்லாம் எந்தக் காலத்துக் கட்சிக்காரங்க? நீங்க பாத்து வளந்த பையன் நானு? தயவு செஞ்சி இனிமே இந்த மாதிரி செஞ்சி என்னை கஷ்டப்படுத்தாதிங்க” என்று கண்டிப்பது போல தங்கம் சொன்னார். உடனே கருப்புசாமியின் முகம் வாடிப்போனதைப் பார்த்தார். அவரை சமாதானப்படுத்துவதற்காக “இங்க வாங்கண்ணே” என்று சொல்லி கருப்புசாமியை பக்கத்தில் அழைத்து தோளில் கையைப் போட்டுக்கொண்டு “அண்ணனையும் என்னையும் ஒரு போட்டோ எடுங்க” என்று சொன்னதுதான் ஒரே நேரத்தில் ஆறு ஏழு பேர் செல்போன் மூலம் போட்டோ எடுத்தனர். அடுத்தகனமே கருப்புசாமியின் முகம் மலர்ச்சியாகிவிட்டது. முன்பு கோஷம் போட்ட பையன் அப்போது “அண்ணே ஒரு செல்ஃபி” என்று சொல்லித் தங்கத்துடன் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டான். அவனுடைய முதுகில் செல்லமாகத் தட்டிய தங்கம், “ஒன்னோட பூத் ஓட்டு கொறஞ்சா ஒன்னெ கொண்டே புடுவன்” என்று சொன்னார். “சரிண்ணே” என்று சொல்லிவிட்டு அந்தப் பையன் ஒதுங்கி நின்றுகொண்டான்.

“எல்லாரும் போயிட்டு வாங்க” என்று சொல்லித் தங்கம் கும்பிட்டதும் “எல்லாரும் வெளிய வாங்க” என்று சொல்லித் தன்னுடன் வந்தவர்களை அழைத்துக்கொண்டு வெளியே போனார் மாடசாமி.

அப்போது சுவர் ஓரமாக நின்றுகொண்டிருந்த இசக்கி, “நாளைக்கு மதியத்துக்கு மேலதாண்ணே ஓட்டு கேக்க முடியும்” என்று சொன்னார்.

“காலயில வேற நிகழ்ச்சி இருக்கா?” என்று கேட்டார்.

“நாளைக்கி மொத்தம் பன்னண்டு கல்யாணம் இருக்கு. நாலு புதுமணை புகு விழா இருக்குண்ணே”

“அப்பிடியா?” என்று கேட்டார் தங்கம்.

இசக்கி சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட வெற்றிவேல் “அத்தன நிகழ்ச்சிக்கும் போவ முடியுமாண்ணே?” சந்தேகத்துடன் கேட்டார்.

“போய்தான் ஆவணும்.”

“ஆச்சரியமா இருக்குண்ணே” என்று ஆதவன் சொன்னார்.

“இதிலென்ன ஆச்சரியம் இருக்கு? பத்திரிக வச்சி போவலண்ணா என் வீட்டு விசேசத்திற்கு வராத மாவட்டச் செயலாளரை மாத்துங்கன்னு தலைவருக்கு பெட்டிசன் போடுவாங்க. கட்சிக்காரர மதிக்கலன்னு மாவட்டச் செயற்க்குழுவுல ஓப்பனா பேசுவாங்க. எங்க கட்சி அப்பிடி. மாவட்டச் செயலாளர் கொடுக்கிற மனு மேல நடவடிக்க எடுக்கிறாரோ இல்லியோ, சாதாரண கட்சிக்காரன் மனு கொடுத்தா உடனே நடவடிக்க எடுத்திடுவாரு எங்க தலைவரு. இது மத்த கட்சி மாதிரி இல்ல.” என்று சொன்ன தங்கம் கண்களைச் சிமிட்டிச் சிரித்தார்.

“பணமும் கரயும். அலச்சலும் கூடும். எப்பிடிண்ணே சமாளிக்கிறாங்க?”

“என்ன செய்ய? மாவட்டச் செயலாளரு, முன்னாள் மந்திரி, இப்போதைக்கு எம்.எல்.ஏ. போகாம இருக்க முடியுமா? போனாலும் ஆயிரம் ஐநூறுன்னு மொய் வைக்க முடியாது. ஒரு நிகழ்ச்சிக்கு அஞ்சாயிரம்ன்னா நாளைக்கு ஒரு நாள் மட்டும் எவ்வளவு செலவு ஆகும்ன்னு கணக்குப் பாருங்க.”

“முக்கா லட்சம் வரும்ண்ணே.”

“ஒரு நாளைக்கே முக்கா லட்சம்ண்ணா, ஒரு வருஷத்துக்கு எவ்வளவு செலவு ஆகும்?”

“கற்பன செய்யவே பயமா இருக்குண்ணே”

“ஒரு லட்சம் ஆனாலும் ஒரு கோடி ஆனாலும் போய்தான் ஆகணும். ஏன்னா, அதுதான் போத.” தங்கம் வாய்விட்டுச் சிரித்தார்.

“போதயா?”

“ஆமாம். பத்துக் கட்சிக்காரன் வந்து பாக்காட்டி பைத்தியமாயிடும். விசேஷத்துக்கு கூப்புடாட்டி, வந்து பாக்காட்டி போன போட்டு, ’என்னப்பா ஆளயே காணும்’ன்னு கேட்டு வரவழச்சி நாங்களே பேசிக்கிட்டிருப்பம். பணம் கரயுறதவிட, அலயுறதவிட தனியா இருக்கிறதுதான் எங்கள மாதிரியான ஆளுங்களுக்குப் பிரச்சன. என்னெ சுத்தி எவ்வளவு கூட்டம் இருக்கோ அதவச்சித்தான் கட்சியில எனக்கு மரியாத. அரசியல்வாதிக்கு கூட்டம்தான் மூலதனம்” என்று சொன்ன தங்கம் வாய்விட்டுச் சிரித்தார். “நீங்க ஆறு பேர் மட்டும்தான?” என்று கேட்டார்.

“இன்னம் ஏழு பேர் வந்துகிட்டு இருக்காங்கண்ணே” என்று தாடிக்காரப் பத்திரிகையாளர் சொன்னார். அவர் சொன்னதைக் காதில் வாங்காத தங்கம் இசக்கியைக் கூப்பிட்டு, “ஆறு கவர் ரெடிபண்ணு” என்று காதோடு காதாகச் சொன்னார்.

தங்கம் இசக்கியிடம் என்ன சொல்லியிருப்பார்  என்பதைப் புரிந்துகொண்ட வெற்றிவேல் “அதெல்லாம் இன்னிக்கி வேணாம்ண்ணே. பேக்கேஜுக்கு மட்டும் ’ஓ.கே.’ன்னு சொன்னா போதும். தலமயில டார்ச்சர் செய்றாங்க.” என்று சொன்னார் வெற்றிவேல்.

“பேக்கேஜ்ங்கிறத புதுசா ஆரம்பிச்சி இருக்கிங்களா?”

“இந்த தேர்தல்ல இருந்துதாண்ணே.”

“எல்லா பத்திரிகைகாரங்களுமா?”

“ஆமாண்ணே.”

கோபம் வந்தாலும் கோபம் இல்லாததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு “இதுவர நீங்க எத கேட்டு நான் இல்லன்னு சொல்லியிருக்கன்? பாத்துக்கலாம் போயிட்டுவாங்க” என்று சொல்லி கையெடுத்துக் கும்பிட்டார் தங்கம்.

“அண்ணன இன்னிக்கா பாக்குறம். எங்களோட நலம் விரும்பி நீங்கன்னு எங்களுக்குத் தெரியாதாண்ணே” என்று வெற்றிவேல் சொன்னார். மறுநொடியே “அண்ணனப் பத்தி இதுவர மோசமா ஒரு நியூஸ்கூட மாவட்டத்தில எந்தப் பத்திரிகையிலயும் வந்ததில்லண்ணே” என்று பெருமை பொங்க ஆதவன் சொன்னதைக் கேட்ட தங்கம் “தெரியும்” என்று சொன்னார். அப்போது அவருடைய முகத்தில் எந்தச் சலனமும் எற்படவில்லை.

“தலைமைக்குத் தகவல் கொடுத்திடுறம்ண்ணே” என்று ஒரே குரலாக ஆறு பேரும் சொன்னார்கள்.

“முடியாதிண்ணா விடவாப் போறிங்க?” என்று கிண்டலாகக் கேட்டார் தங்கம். ஆறு பேரும் கூச்சத்துடன் சிரித்தார்கள். வெற்றிவேல் மட்டும் “தலம சொல்றதத்தான் நாங்க செய்யுறம்,” என்று சொன்னார்.

“ஆளுங்கட்சியா இருந்தப்ப நீங்க கேட்டதெல்லாம் செஞ்சனா இல்லியா? எவ்வளவு விளம்பரம், எத்தன ட்ரான்ஸ்பர், எத்தன அப்பாயிண்மண்ட்?”

“எல்லாம் செஞ்சிங்கண்ணே. இல்லன்னு சொல்லல. அதனாலதான் ஆளுங்கட்சியா இருந்தாலும், எதிர்க்கட்சியா இருந்தாலும் இந்த மாவட்டத்தப் பொருத்தவர நீங்கதாண்ணே எங்களுக்கு நிரந்தர மந்திரி” என்று புகழ்ந்தார் ஆதவன். மறு நொடி வெற்றிவேல், “வருங்கால மந்திரி வாழ்க” என்று கோஷம் போட்டார். மற்ற பத்திரிகைக்காரர்களும் வெற்றிவேலை அடுத்து கோஷம் போட்டார்கள்.

பத்திரிகைக்காரர்கள் கோஷம்போட்டதைப் பார்த்து கேலியாகச் சிரித்துவிட்டு “நீங்க மட்டும்தான் பாக்கிண்ணு நெனச்சன்” என்று சொன்னார்.

“நீங்கதாண்ணே எப்பவும் எங்களுக்கு மந்திரி” என்று தாடிக்காரர் சொன்னார்.

“சந்தோஷம்” என்று சொன்ன தங்கம் “ஆளுங்கட்சிக்காரங்களப் பாத்திட்டிங்களா?” என்று பொடிவைத்துக் கேட்டார். உடனே பத்திரிகைக்காரர்களுடைய முகம் செத்துப்போயிற்று. ஆனாலும் சமாளிப்பதுபோல் “எங்க பொழப்பு நார பொழப்புண்ணே” என்று சொல்லி மழுப்பினார் வெற்றிவேல். அதை காதில் வாங்காத தங்கம், “இசக்கிய பாத்திட்டு போங்க” என்று சொல்லிவிட்டு பட்டென்று வெளியே வந்தார். அவருக்காகக் காத்திருந்த கட்சிக்காரர்கள் ஓடிவந்து கும்பிட்டனர். எதையும் கண்டுகொள்ளாமல் “இருங்க வரன்” என்று சொல்லிவிட்டு காரில் ஏறினார். அப்போதுதான் நினைவுக்கு வந்ததுபோல், “மாடசாமி ஏறுங்க. சிவகாசி நகரமும் ஏறுங்க” என்று சொன்னதும் இரண்டு பேரும் காரில் ஏறியபோது ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஏழு பேர் இறங்கி வேகமாக வந்து தங்கத்திற்கு ”வணக்கம்ண்ணே” என்று சொல்லிக் கும்பிட்டார்கள். அதில் இரண்டு பேர் பத்திரிகைகாரர்கள், ஐந்து பேர் தொலைக்காட்சிகாரர்கள். ஏழு பேருக்கும் “வணக்கம். இருங்க வந்திடுறன். ஒரு அவசரம்” என்று சொல்லிக் கும்பிட்டுவிட்டு “போடா” என்று டிரைவரிடம் கத்தினார் தங்கம்.

 ”கண்ணாடியைக் கழற்றித் துடைத்தார். “மின்னல் வேகத்தில போ. இப்பவே மணி ஆரு. படுத்துத் தூங்கிப்புட்டு வரன்னு துட்டி வீட்டுக்காரனுங்க முணுமுணுப்பானுங்க” என்று சொன்னார். பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடித்தார். பிறகு தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல் “ஒரு மணி நேரம் போயிடிச்சி. பத்திரிகக்காரன, டி.வி.க்காரன சமாளிக்கிறதே பெரிய எழவா இருக்கு. எலக்‌ஷன் நேரத்திலகூட கட்சிக்காரன்கிட்ட பேச முடிய மாட்டங்குது. கட்சிக்காரன சமாளிக்கிறது, எதிர்க்கட்சிக்காரன சமாளிக்கிறது, சனங்கள சமாளிக்கிறதுகூட பெருசில்ல. பத்திரிககாரனயும், டி.வி.காரனயும் சமாளிக்கிறதுதான் இப்ப பெரும் பாடா இருக்கு. தாவு தீந்துபோவுது.” என்று சொன்னார். பிறகு டிரைவரைப் பார்த்து “நீயும் ஏன்டா உயிர வாங்குற? போ வேகமா” என்று சொல்லிக் கத்தினார். தங்கம் கோபமாக இருப்பது தெரிந்தும் மாடசாமியும், சிவகாசி நகரச் செயலாளரும் வாயை மூடிக்கொண்டிருந்தனர்.

கார் காற்றாகப் பறக்க ஆரம்பித்தது.

“பொறுமயா போடா. ‘கட்சிக்காரன்ங்கிற திமிர்ல என்னா வேகமாக போறானுவ பாரு’ன்னு ரோட்டுல போறவனுவோ திட்டுவானுவோ. கார்ல கொடி இல்லாம போனாக்கூட ஒண்ணுமில்ல” என்று சொன்னார்.

– உயிர்மை டிசம்பர் 2017

கடலூர் மாவட்டம், கழுதூரில் பிறந்த (1966) இமையம் அவர்களின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர், இப்போது விருத்தாசலத்தில் வசித்து வருகிறார். தமிழின் மிக முக்கியமான நாவலாசிரியராக, சிறுகதையாசிரியராக அறியப்படும் இமையத்தின் முதல் நாவலான `கோவேறு கழுதைகள்’ (1994) உடனடியான கவனம் பெற்று, இன்றுவரை பேசப்படும் ஒன்றாக உள்ளது. `கோவேறு கழுதைகள்’ ஆங்கிலத்தில் ‘Beasts of Burden என்ற தலைப்பில் 2001ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது. `ஆறுமுகம்’ 1999லும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *