இடது கன்னத்தில் குலோப் ஜாமூன் ஒன்றை மறைத்து வைத்திருப்பது போன்ற முகத் தோற்றமுள்ள ஒருத்தி என்னிடம் ‘‘பல் டாக்டர் பரமேஸ்வரன் வீடு எங்கிருக்கிறது?” என்று கேட்டாள். பரிதாபப்பட்ட நான் ‘‘ஐயோ, பாவத்தே!’’ என்று மட்டுமே சொன்னேன். ‘பல் டாக்டர் பரமேஸ்வரன் வீடு மட்டுமல்ல.. பல் என்ற ஒரு உறுப்பையே நான் முன்னே பின்னே பார்த்ததில்லை’ என்று சொல்லி விட்டேன். பல் டாக்டர் பரமேஸ்வரன் எனக்கு சித்தப்பா மகன்.
‘விலாசமில்லாத குட்டி நாய்க்கும் ரொட்டி போட்டு உதவுகிற பெரிய மனசுக்காரி தனலட்சுமி வீடு எது?’ என்று யாராவது கேட்டால் என் வீட்டைத்தான் காட்டுவார்கள். சொந்தபந்தங்களுக்கு மட்டுமல்ல, சொத்தைப் பல் உள்ளவர்களுக்கும் உதவ வேண்டும் என்பதுதான் என் சித்தாந்தம். அப்படிப்பட்ட நான், வலது கை அக்குளில் கட்டி என்றாலும் இடது கையை யாவது தூக்கி டாக்டர் இடத்தைக் காட்டியிருக்க வேண்டும். செய்யவில்லை. காரணம்..
ஒரு வருடத்துக்கு முன்பு ஒருநாள் கோயிலுக்குப் போயிருந்தேன். நவக்கிரகங்களை நான் இடது பக்கமாக சுற்றினேனா, வலது பக்கமாக சுற்றினேனா.. தெரிய வில்லை. கிரகங்கள் ஒன்பதும் என்னை வலம் இடமென்று முழுதுமாக சுற்றிக்கொண்டது அன்றைக்குத்தான். நெற்றி நிறைய பக்தியோடு அங்கே வசுமதி நின்றிருந்தாள். வசுமதி எனக்கு வெகு காலத்துப் பழக்கம். அவள் கோயிலுக்கு தினம் வருகிறவள் கிடையாது. அவளுக்குக் கல்யாண வயதில் ஒரு மகன் இருக்கிறான். அதனால்தான் தெய்வீகத் தோற்றம்.
கோயில் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தபோது வசுமதி, பெண் பார்த்த வேதனைப் படலங்களைக் கதையாகச் சொன்னாள். தெரிந்த பெண் இருந்தால் சொல்லச் சொன் னாள். அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் கல்யாணம் செய்து வைத்தால் புண்ணியம் என்பார்கள். கல்யாணமே கனவாய்ப்போன ஆயிரம் மனிதர்கள் இருக்கும்போது, மனிதர்களுக்குக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வதுதான் புண்ணியமென்று எனக்குத் தோன்றியது.
வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு ஐஸ்க்ரீம் கடையைப் பார்த்ததுமே எனக்கு தீபிகாவின் நினைவு வந்துவிட்டது. அபிஷேக் -& தீபிகா. அம்மாடியோவ்..! என்ன ஒரு பொருத்தம்! தீபிகா எனக்கு திட்டமாக சொல்ல முடியாத அளவுக்கு குழப்பமான தூரத்து சொந்தம். நல்ல படிப்பும், கவிதை யும், பளிச்சென்ற சிரிப்பும் கொண்ட பெண்.
‘ஒவ்வொரு புன்சிரிப்புக்கும் ஒரு ஐஸ்க்ரீம் என்று வாக்கு கொடுக்காதே, காதலனே! ஐஸ்க்ரீம் விற்பவன் கோடீஸ்வரனாவான்’ என்று தீபிகா எப்போதோ எழுதி புத்தகத்தில் பிரசுரமான கவிதையால்தான் இப்போது அவள் நினைவு வந்தது. வீட்டுக்கு வந்ததும் வசுமதிக்கு தொலைபேசி செய்தேன். எடுத்தது அபிஷேக்..
‘‘அபிஷேக்.. உனக்கு வரப்போற பொண்ணு கவிதை எழுதினா பிடிக்குமா?’’
எங்கள் வீட்டுத் தொலைபேசி பழுதாகும்படி அதிரச் சிரித்த அவன், ‘‘ரொம்ப சந்தோஷம், ஆன்ட்டி. கவிதை எழுதட்டும். ஓவியம் வரையட்டும். மீரா மாதிரி தலையில புடவையோட தம்பூரா வாசிக்கட்டும். நீங்க சொன்னா எனக்கு சரி’’ என்றான். காதலே பூமியைச் சுழற்றுகிறது என்று இளசுகள் நம்புகிற இந்தக் காலத்தில் இப்படி ஒரு பையன்.
வசுமதியும் போனில் சம்மதம் சொன்ன பிறகு நான் தீபிகாவின் வீட்டை தொடர்பு கொண்டேன். இரண்டு வீட்டு ஆட்களும் மாற்றி மாற்றி மாப்பிள்ளையும் பெண்ணும் பார்த்துக் கொண்டார்கள். இரு குடும்பத்துக் கும் பிடித்துப் போனது. ‘பெண் எப்படி, மாப்பிள்ளை எப்படி’ என்று ரகசியமாக என்னிடம் விசாரித்தார்கள். தீபிகாவும், அபிஷேக்கும் என் குழந்தைகள் என்றேன். எல்லாமே சுமுகமாக முடிந்தது. கல்யாணமும் நடந்தது.
கல்யாணமானவர்கள் எங்களின் காலில் விழுந்த போது எனக்கும், கணவருக்கும் உச்சந்தலை குளிர்ந்தது. தீபிகாவின் அம்மா என் சுண்டு விரலுக்கு ஒரு தங்க மோதிரம் போட்டாள். என் கணவருக்கும் பட்டு வேட்டி. அவர்களின் அன்பில் நான் திகைத்துப் போனேன். சில நாட்களிலேயே அபிஷேக்கும் தீபிகா வும் சந்தோஷமாக தனிக்குடித்தனம் போனார்கள்.
சில மாதங்கள் கழித்து ஒருநாள் அபிஷேக் வீட்டுக்கு வந்தான். புதுக்குடித்தனம் நடத்துகிற ஆர்வத்தில் சீப்பு வாங்கவுமா மறந்து போயிருக்கும்.. அவன் தலையெல்லாம் கலைந்திருந்தது. தீபிகா வெளியே இருக்கிறாளா என்று எட்டிப் பார்த்தேன். வீதியில் குப்பை வண்டிக்காரன்தான் மணி அடித்துக் கொண்டு போனான்.
‘‘தீபிகா எங்க அபிஷேக்?’’
‘‘காபி வேணுமானு கேக்க மாட்டீங்களா, ஆன்ட்டி?’’
காபியில் முகம் பார்த்தபடி தலை குனிந்து மௌன மாக குடித்த அவன், ‘‘நான் நல்ல காபி குடிச்சி ரொம்ப நாளாச்சு, ஆன்ட்டி” என்று விரக்தியோடு சொன்னான்.
அடப்பாவி சிறுசுங்களா.. படுக்கைக்குக் கீழே முள்ளை பரப்பிக்கிட்டீங்களா?
அவள் நேரத்துக்கு சமைப்பதில்லை. பதினோரு மணிக்குத்தான் படுக்கையை விட்டு எழுந்திருக்கிறாள். அம்மா வீட்டுக்கு போக வேண்டுமென்று மணி நேரத்துக்கு ஒருமுறை கேட்கிறாள் (ஒருமுறைகூட அனுப்பவில்லையாம்). சத்தமாகப் பேசுகிறாள். சிரிப்பு காட்டினால் கோபத்தோடு அழுகிறாள். தூக்கம் வருகிற நேரத்தில் கடி ஜோக் சொல்கிறாள். இப்படி சிறுபிள்ளைத்-தனமான குற்றச்சாட்டுகளாக அவன் வைத்தான். எனக்கு சிரிப்புதான் வந்தது. தீபிகா என்ற செல்லப் பெண்ணை கொஞ்சித் திருத்த வேண்டும் என்று நான் அவனுக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தேன்.
சில நாட்கள் கழித்து தீபிகா வந்தாள். அவளும் தனியாக, முற்றிலும் அலங்காரத்தோடு வந்தாள். ‘ஓ..’வென்று அழ ஆரம்பித்துவிட்டாள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் மாலையும் கையுமாக துக்கம் விசாரிக்க வந்து விடுவார்களோ என்று அச்சப்படும்படியான சாவு ஒப்பாரி அது. கதவு, ஜன்னல், புகைபோகும் சந்து, என் காது அத்தனையையும் காற்று புகாமல் இறுக்கமாக மூடிய பிறகு அவளிடம் விசாரித்தேன்.
‘‘ஆன்ட்டி, நான் கர்ப்பமா இருக்கேன்” என்றாள் அவள்.
‘‘ஓ.. தீபு குட்டி! உனக்கு குழந்தையா? சந்தோஷம்!” என்று அவள் மீது கை வைத்து ஆசீர்வதித்தேன்.
அவளோ கண்ணீரோடு ‘‘ஆன்ட்டி! ஒரு நல்ல டாக்டர் இருந்தா சொல்லுங்களேன். எனக்கு குழந்தை வேணாம்! எனக்கு ரொம்ப ஷேமா இருக்கு’’ என்றாள். எனக்கு கருப்பை கலங்கிப் போயிற்று.
‘‘பாரு தீபு, நீ கல்யாணம் ஆனவ. இது தப்பில்லே. அபிஷேக் ரொம்ப சந்தோஷப்படுவான்.’’
‘‘போங்க ஆன்ட்டி.. உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. நீங்க ஊர் உலகம் தெரியாத பச்சைக் குழந்தை. அதுவு மில்லாம ஒரு லூஸ§..’’
லூஸா? தேவைதான்டி ஆத்தா! அவள் என்னை பகிரங்கமாகவே ஆங்கிலத்தில் பைத்தியம் என்று சொன்ன பிறகு நான் மௌனமாகிவிட்டேன்.
‘‘அபிஷேக் ரொம்ப மோசம் ஆன்ட்டி. அவனுக்கு நிறைய கெட்ட பழக்கம். நிறைய கெட்ட ஃப்ரெண்ட்ஸ். அசிங்கமா பேசறான். அவனோட போன்ல பொண்ணுங்க குரலா கேக்குது. நிறைய கோபப்படறான். எங்க அப்பாவை பிச்சைக்காரன், கஞ்சன்னு திட்டறான். கடைசி வரையில அவன் என்னோட இருப்பானானு தெரியலே ஆன்ட்டி. என் குழந்தைக்கு ஒரு அப்பா, நாலு அம்மா ஆயிட்டா என்ன செய்யறதுனு பயமா இருக்கு. தெனமும் சண்டை.. எனக்கு முடியலே, ஆன்ட்டி. நல்ல வக்கீல் இருந்தா சொல்லுவீங்களா?”
சேர்த்து வைக்கவும் நானே, பிரித்து வைக்கவும் நானேவா! என்ன அவதாரமாகப் பிறந்தேன் நான். அவளோ விடாமல் அவர்களுக்குள் நடந்த சச்சரவை, வாக்குவாதத்தை, மனப் பிளவை, தனி படுக்கையை, கண்ணீரை எல்லாம் ஓயாமல் சொன்னாள். ஒட்ட முடியாத இரண்டு கண்ணாடிப் பாளங்களாக அவர்கள் வாழ்க்கை பிளந்துவிட்டதாகத் தோன்றியது. கண் துடைத்து எழுந்த அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். ‘‘அபிஷேக் எனக்காகக் காத்திட்டு இருப்பான் ஆன்ட்டி. இன்னிக்கு நாங்க சினிமாவுக்குப் போறோம். அப்படியே ஹோட்டல். நேத்து அவனைப் பத்தி ஒரு அற்புதமான கவிதை எழுதினேன். அதுக்காகத்தான் பார்ட்டி. வரட்டுமா’’ அவள் துள்ளி ஓடிப்போனாள்.
தினமும் சண்டை பிடிப்பார்கள். அதே சமயம் கவிதை எழுதி வைத்துவிட்டு ஒன்றாக சினிமாவுக்கும் போவார்களா? என்ன விளையாட்டு இது! ஆனால், அவர்களுக்குள் இருக்கிற பிரச்னை நிஜம் என்றுதான் தோன்றியது. பெற்றவர்களிடமே பிரச்னையை சொல்லாமல் என்னை ஒரு தாய்போல நினைத்து வந்து என்னிடம் புலம்புகிறார்கள். ஒரு தாயாக நானும் அவர்கள் பிரச்னையை முளையிலேயே கிள்ளி சரி செய்ய நினைத்தேன்.
நானும் என் கணவரும் மறுநாள் அவர்கள் வீட்டுக்குப் போனோம். வீட்டில் தீபிகா மட்டும் இருந்தாள். அபிஷேக் வெளியே போயிருந்தான். எங்களுக்கு அழகாக தேநீர் போட்டுக் கொடுத்தாள். வீட்டை அழகாக வைத்திருந்தாள். அவளும் அபிஷேக்கும் புகைப்படத்தில் சண்டை போட்டுக் கொள்ளாமல் வாயார சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
“குட்டி அபிஷேக் வயித்துக்குள்ள எட்டி உதைக்கிறான் ஆன்ட்டி” என்று வெட்கத்தோடு சொன்னாள் தீபிகா. இரண்டு மாத சிசு உதைக்கிறதா? லூஸ§.. நான் சிரித்துக் கொண்டேன். டாக்டரிடம் போக அபிஷேக்குக்கு நேரமே இல்லையாம் (சினிமாவுக்கு நேரமிருக்கிறது). டாக்டரிடம் போகலாமா என்று கேட்டாள். கடவுளே.. அவர்களிருவருக்கும் பிரச்னை குழந்தையின் வரவால் முடிந்து போயிருக்கிறது. நான் அவளை சந்தோஷமாக டாக்டரிடம் அழைத்துப் போனேன். மாத்திரை, மருந்து களோடு வீட்டுக்குத் திரும்பினோம். அபிஷேக் சிரிக்காத பாறை முகத்தோடு எங்களை வரவேற்றான்.
‘‘வக்கீலைப் பார்த்துப் பேசிட்டேன். நாளைக்கு வரச் சொல்லியிருக்கார்” & அபிஷேக் தீபிகாவிடம் சொன்னான். தீபிகா அழுகிறாள். அபிஷேக் திரும்பி நின்று கொள் கிறான். நான் வாய் திறப்பதற்கு முன்பாகவே ‘‘ஆன்ட்டி, வேணாம். உங்களால நான் கெட்டது போதும்’’ என்று என் வாயை விளக்குமாற்றால் அடிக்கிறான்.
அவர்களுக்குள் சண்டை ஆரம்பிக்கிறது. அவர்களின் இரண்டு குடும்பத்து சரித்திரமும் குப்பையில் வந்து விழுகிறது. என்னையும் குடும்பத்தோடு அதே குப்பையில் போடுகிறார்கள். ‘‘இந்த சனியனாலதான் வாழ்க்கை நாசமாச்சு’’ என்று இரண்டு பேரும் கோபத்தோடு கத்துகிறார்கள். கை காட்டிய அந்த சனியன் நான்தான். எனக்குக் கண் இருண்டு போய் என் கணவரைப் பரிதாபமாக பார்க்கிறேன். அவர் முகமெல்லாம் வியர்த்து முதல் முறை ஹார்ட் அட்டாக் வந்த திடீர் நோயாளி போல நிற்கிறார்.
நேற்று சினிமாவுக்குப் போனவர்கள் இன்றைக்கு இத்தனை கோரமாக சண்டை பிடிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. சண்டையின் உச்சத்தில் அவர்கள், இனி சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து பரபரவென்று பெட்டியில் பொருட் களைத் திணித்துக்கொண்டு ஆளுக்கு ஒரு திசையில் காணாமல் போயிருந்தார்கள். அதிர்ச்சி அடங்காத நாங்கள் வீட்டை பூட்டிக் கொண்டு தோல்வியோடு திரும்பினோம்.
அபிஷேக்கின் பெற்றவர்கள் ஒருநாள் வந்தார்கள். பச்சை மரத்தின் மீது நான் நெருப்பைக் கொட்டினேன் என்றார்கள். நடத்தை கெட்ட பெண்ணை பொய் சொல்லி கட்டி வைத்ததாக குற்றம் சொன்னார்கள். மருமகள் கர்ப்பத்தை கலைப்பதற்காக நான் டாக்டரிடம் அழைத்துச் சென்றது துரோகம் என்றார்கள். பொய் சொல்லி கல்யாணம் முடிக்க நான் சுண்டு விரல் மோதிரமும், ரொக்கப் பணம் லட்சமும் வாங்கியதாக சொன்னார்கள். படுபாவியான நான் அநாதைப் பிணமாய் போவேன் என்றார்கள். என் மகளுக்கு கடைசிவரை கல்யாணமே ஆகாமல் வெறும் கழுத்தோடு செத்துப் போவாள் என்றார்கள். வறண்ட வாய் பிளந்து நான் அவர்களிடம் பேசுவதற்குள் அவர்கள் படி இறங்கிப் போய்விட்டார்கள். போவதற்கு முன்பாக, பூட்டாத அபிஷேக் வீட்டில் நான் எடுத்த அவன் பணம் எழுபதாயிரத்தை எண்ணி மரியாதையாக வைக்கச் சொன்னார்கள். நான் திகைத்துப் போனேன். அவர்கள் போட்ட சத்தத்தில் சுற்றி இருந்த வீடுகள் எல்லாம் அலறிப்போனது.
இரண்டொரு நாள் கழித்து தீபிகாவின் பெற்றவர்கள் வந்தார்கள். பாவியின் வீட்டுக்குள் நுழையக் கூடாது என்று குலதெய்வத்திடம் சத்தியம் செய்தவர்கள் போல வாசல் படியிலேயே பரப்பி உட்கார்ந்து அழுதார்கள். குற்றம் சொல்லவுமில்லை, சபிக்கவுமில்லை. ஆனாலும் அவர்களின் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் சாபத்தின் துளி போல வீட்டு வாசலில் விழுந்தது. ஒரு ரவுடிக்கு அவர்கள் பெண்ணை ஏமாற்றி கல்யாணம் செய்துவைத்த நானேதான் அவர்கள் பிரிவதற்கும் காரணமாம். என் மகளை அபிஷேக்குக்குக் கட்டிவைக்கத்தான் நான் இந்த நாடகமாடுகிறேனாம். பூட்டாத வீட்டுக் குள் தீபிகா விட்டுச் சென்ற நகை எழுபது பவுனையும் மறைத்து எடுத்து வந்துவிட்டேனாம். அக்கம் பக்கம் புலம்பினார்கள்.
நான் ஏமாற்றுக்காரியானேன். திருடி ஆனேன். பெண்ணுக்குக் கள்ள மாப்பிள்ளை தேடும் தரம் கெட்டவளும் ஆனேன். எருக்கங் குச்சியோடு கரு கலைக்கச் சென்ற மருத்துவச்சியும், கொலைகாரியும் ஆனேன். இது பையன், இது பெண் என்று அடையாளம் காட்டியதைத் தவிர நான் செய்த பாதகம் எது? கல்யாணம் செய்து குடித்தனம் நடத்தத் தெரியாதவர்கள் மந்திரம் சொன்னவனையும், மாங்கல்யம் செய்தவனை யும், பந்தல் போட்டவனையும், பத்திரிக்கை அடித்தவனையும், சமையல் செய்தவனையும் சபிப்பது எந்தவிதத்தில் நியாயம்? தன் பிள்ளைகள் பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்குமே.. அதை என்னிடம் சொல்லாமல் மறைத்து குற்றம் செய்த அவர்கள் என்னைக் குற்றம் சொல்கிறார்கள். மனிதர்களின் நியாயம் இப்படித்தான் இருக்கிறது. சண்டையில் இறந்தவர்களெல்லாம் அநேகமாக சமாதானத்துக்கு போனவர்களாய்த்தான் இருக்கிறார்கள்.
நல்ல மனிதர்களை அமிலத்தில் முக்கிப் பார்த்தா தெரிந்துகொள்ள முடியும்? அபிஷேக்கும், தீபிகாவும் மாசில்லாத பளிங்கு என்றுதான் நான் நினைத்தேன். ஆசீர்வாதம் வாங்குவதற்காக காலில் விழுந்தவர்கள் கட்டை விரலை ரத்தம் வர கடிப்பார்களென்று நான் எதிர்பார்த்தேனா? என் நிம்மதி முற்றிலும் அழிந்தது. தினம் யாராவது வந்து சண்டைக்கு நிற்கிறார்கள். அல்லது சமாதானத்துக்கு அழைக்கிறார்கள். சாட்சி சொல்லச் சொல்கிறார்கள். வேவு பார்த்துச் செல் கிறார்கள். வதந்திக்கு மேல் வதந்தி. இரவெல்லாம் கெட்ட கனவு வந்து வீறிட்டு அலறி எழுகிறேன்.
குளிக்காத அழகியாக, சோறுண்ணாத குழந்தையாக, தினம் அழுகிற கிழவியாக, வாய் பிதற்றும் பிரேதமாக, பல்வலியில் துடிப்பவளுக்கும் பரமேஸ்வரனைக் காட்டாதவளாக அல்லாடித் திரிந்த எனக்கு என் கணவர்தான் நம்பிக்கை வார்த்தை சொன்னார்.
‘‘தனம்.. குழந்தைங்க விரலை கடிச்சிட்டா சோறு ஊட்டறத நிறுத்தக் கூடாது. வலியைப் பொறுத்துக்கிட்டு ஊட்டித்தான் ஆகணும். யார் மேலயோ இருக்கிற கோபத்தை பல்வலியோட வர்றவ மேல காட்டறது மடத்தனம். அவளுக்கு நீ வழி சொல்லியிருக்கணும்” அவரின் சமாதானம் எனக்கு சரியென்றுதான் பட்டது. நான் சற்று சுதாரித்தேன்.
டாக்டர் வீட்டுக்கு வழி கேட்ட பெண் உச்சி வெயிலில் திரும்பி வருவதைக் கண்டு, குற்ற உணர்ச்சி யோடு வீட்டுக்குள் பதுங்கினேன். பல் பிடுங்கிய வாயில் இருந்து பஞ்சை எடுத்துவிட்டு அவள் என் நாக்கைப் பிடிங்கிக்கொள்ளும்படி ஒரு கேள்வி கேட்டாள்.
‘‘உன்கிட்ட காசு பணமா கேட்டேன்.. ரெண்டு வீடு தள்ளி இருக்கிற டாக்டர் வீட்டுக்கு வழி சொல்ல மாட்டியா? நீயெல்லாம் ஒரு பொம்பளை..” சொல்லிவிட்டு அவள் அனல் வெயிலில் நடந்தாள். உதவிக்கு ஒரு வார்த்தை சொன்னாலும் வசவு. உதவாமல் சும்மா நின்றாலும் வசவா? வீதியில் வெறும் காலோடு நடந்த அவளைக் கூவி அழைத்தேன். வந்தவளிடம், “கால் சுடலையா உனக்கு?” என்று கேட்டேன்.
கால் மாற்றி நின்றபடி ஆமென்பது போல தலை அசைத்தாள். காலையில் மனசு சரியில்லை என்று சமாதானமாகப் பேசிய நான், என் பழைய செருப்பை எடுத்துத் தந்தால் அவள் ஏற்றுக்கொள்வாளா என்று கேட்டேன். அவள் திகைப்போடு என்னைப் பார்த்தாள். பழைய, ஆனால் உபயோகமாகும் செருப்பை அவளுக்குத் தந்தேன். போட்டுக்கொண்ட அவள் வாயில் நன்றி வரவில்லை. கண்ணில் அது தெரிந்தது. அவள் செருப்பணிந்த பாதத்தோடு கொதிக்கிற தரையில் வேதனையற்று நடந்து சென்றாள்.
பொறுக்காத வலி கண்டவர்கள் எதிர்ப்பட்டவர்கள் மேல் தங்கள் பாரத்தை இறக்கி வைக்க முயற்சிக்கத்தான் செய்வார்கள். நாம்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போது எனக்கு உறைத்தது.
அபிஷேக்கும் தீபிகாவும் சேர்ந்து வாழ மீண்டும் ஒரு தீராத முயற்சி செய்ய வேண்டுமென்பதே என் இறுதி விருப்பமாக அப்போது இருந்தது.
– ஆகஸ்ட் 2007