பிலோமினா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 7,779 
 

லண்டன் 1993

நிர்மலா தான்; நினைத்தது பிழை என்று அவள் மனம் சொல்லி முடிப்பதற்கிடையில் அவள் வாய் முந்திவிட்டது. உலகத்திலேயே மிகப் பிரபலமான லண்டன் கடைகளிலொன்றான ‘ஷெல்பிறிட்ஜஸ்’ என்ற கடையில் பிலோமினா ஏன் வரப்போகிறாள் என்று அவள் தன்னைத்தானே கேட்க நினைத்ததை மீறி அவள் வாய்,தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பெண்ணை நோக்கி,’ பிலோமினா’ என்று கூப்பிட்டது.அவளின் குரல் ஒன்றும் பெரிதாக ஒலிக்காவிட்டாலும், முன்னால் போன பெண் அவளைத் திரும்பிப்பார்த்தாள்.

நிர்மலா,இன்னொருதரம் சந்தேகத்துக்குள்ளாகிறாள்.திரும்பிப் பார்த்த பெண் இன்னும் தன்னைக் கூப்பிட்ட நிர்மலாவைப் பார்த்தபடி நிற்க,தர்மசங்கடத்துடன்,’சாரி…நான் உங்களை எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணாக நினைத்து விட்டேன்’ என்கிறாள் நிர்மலா…

அந்தப் பெண் தன் முகத்தில் புன்னகை தவழ,நிர்மலாவைப் பார்த்து. ‘தட்ஸ் ஓகே’ என்று சொல்லி விட்டு எஸ்கலேட்டரில் கால் வைக்கிpறாள்.

அந்தப் பெண் மெல்லமாகத் தலையசைத்த விதம்.அவளின் புன்னகை,’என்னையா கூப்பிட்டிPர்கள்’ என்று கண்களாற் கேட்ட விதம்,நிர்மலா தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்டபோது, ‘பரவாயில்லை’என்ற வித்தில் தலையசைத்து விட்டு, எஸ்கலேட்டருக்குத் திரும்பிச் சென்ற விதம்? அத்தனையும் பல வருடங்களுக்கு முன்,நிர்மலாவின் சினேகிதியாயிருந்த பிலோமினாவை ஞாபகப் படுத்தியது.

பிலோமினா மாதிரியான உருவம் மட்டுமல்ல.அவளின் சுபாவம்..?

இவள் கடைசி வரைக்கும் பிலோமினாவாக இருக்கமுடியாது என்பதும் நிர்மலாவுக்குப் புரியும்.

இந்தப் பெண் பிலோமினாவாக எப்படியிருக்கமுடியும்? அவள் லண்டனுக்கு வந்திருக்க முடியாதே.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பிலோமினா இப்படித்தான் இளமையின் செழிப்போடு மிக மிக அழகாக இருந்தாள்.அன்று இவள் அவளைத் தாண்டிப் போவோரை இன்னொருதரம் திரும்பிப்பார்க்க வைக்கும் அழகுடனிருந்தாள். இன்றும், பல ஆண்டுகளுக்குப் பின் அப்படியே இருப்பாள் என்று எதிர்பார்த்தது யதார்த்தமல்ல.

பிலோமினா இப்போது எப்படியிருப்பாள்?

பிலோமினாவுடன்,நிர்மலா வாழ்ந்த பழையகாலத்தைப் பற்றிய இன்னும் எத்தனையோ இனிய நினைவுகளைக் கிளறி விட்டது.

நிர்மலா மறந்து விட்டதாக நினைத்த எத்தனையோ நினைவுகளை அவள் உண்மையாகவே மறக்க முடியுமா?

நினைவுகள் அடிமனதில் பதியலாம். புதிய நிகழ்ச்சிகள், புதிய அனுபவங்கள். சந்திப்புக்கள்.இடர்படும்போது பழைய வாழ்க்கையடன் சம்பந்தமானவற்றை முற்று முழுதாக மறக்க முடியுமா?

மறந்து விட்டதாக நினைப்பதே ஒரு மாயைத் தோற்றமா?

நிர்மலாவின் சிந்தனை சட்டென்று பல ஆண்டுகள் தாண்டியோடுகின்றன.லண்டனிலுள்ள பிரபலமான -ஆடம்பரமான விற்பனை நிலயத்தைத் தாண்டி அவளின் சிந்தனை பிலோமினாவுடன் அவள் செலவழித்த காலத்தை நினைத்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பறக்கின்றன.

இன்றுவாழும் குளிரடிக்கும் லண்டனில் நாகரிகமான, பணவசதி படைத்த மனிதர்களுடன்;,வாழும்வாழ்க்கையில்;, கபடமற்ற மக்கள் நிறைந்த கரையூர் என்ற அனல் பறக்கும் யாழ்ப்பாண சூழ்நிலை சட்டென்று மனிதில் தோன்றி ஒரு அழுத்தமான உணர்வையுண்டாக்கியது அந்த நினைவுகளில் அவள் எப்படியிணைந்திருந்தாள் என்பதின் பிரதிபலிப்பா?

பிலோமினாவைப்போல் ஒருபெண் என்ன பலர் இருக்கலாம். நிர்மலாவின் ஆச்சி சொல்வதுபோல்,’உன்னைப்போல் இன்னும் ஏழுபேர் இந்த உலகில் எந்த மூலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.’

பிலோமினா!

அவளை முதற்தரம் கண்டபோது பிலோமினாவின் தரைபார்த்த கூச்சமான பார்வையும், அழகான தோற்றமும் அவளை இன்னொருதரம் பார்க்கப் பண்ணியது. பிலோமிளன எவரையும் அல்லது யாரையும் நேரே நிமிர்ந்து பார்த்ததாக நிர்மலாவுக்கு ஞாபகமில்லை. அவளின் கடைக்கண்ணால், அரைகுறைப் பார்வையுடன் மெல்லமாகத் தலைதிருப்பி மற்றவர்களை அவதானிப்பது நமிர்ந்த நடையுடன் யாரையும் நேரேபார்த்துப் பேசும் நிர்மலாவுக்கு வேடிக்கையாகவிருந்தது.

நிர்மலா, பிலோமினா, சாந்தி என்ற மூவரும் ஒரு விடுதியிலிருந்து படித்துக்கொண்டிருந்த காலமது. சாந்தி கொழும்புப் பட்டணத்தைச் சேர்ந்தவள். பிலோமினா, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தீவு ஒன்றிலிருந்து வந்தவள்.

மூவரும் விடுதியிற் சேர்ந்தபோது, தலைநகரிலிருந்து வந்த சாந்திக்குப் பிலோமினாவின் மிக மிக அடங்கிப் பழகும்விதம் வேடிக்கையாகவிருந்தது. சாந்தி கொழும்பில் வாழும் இந்தியத் தமிழர் பரம்பரையைச் சேர்ந்தவள்.அவளின் பேச்சுத்தமிழ் யாழ்ப்பாணப் பிராந்தியத் தமிழுடன் மோதிக்கொண்டது.

பிலோமினாவின் தரைநோக்கும் பார்வை சாந்தியை வியப்புக்குண்டாக்கியது.

‘ நான் நோக்கும்போது நிலம் நோக்கும்,நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்’ என்ற குறளைச் சொல்லிப் பிலோமினாவை வம்புக்கிpழுப்பாள் சாந்தி.

சாந்தி பொல்லாத வாயாடி. அவள் குடும்பத்தில் அவள் கடைசிப் பிள்ளை. அம்மா அப்பாவின் செல்லமான பிள்ளை.பட்டணத்தில் பிறந்த வளர்ந்தவள்.அவளது கள்ளங் கபடமற்ற பேச்சின் கவர்ச்சியால் மற்றவர்களைக் கவருபவள்.

பிலோமினா. மிக மிக அழகான சிறிஸ்தவப் பெண் வீpட்டுக்கு மூத்தபெண். அவளைத் தொடர்ந்து இரணடு தங்கைகளும் இரு தம்பிகளுமிருக்கிறார்கள். கிறிஸ்தவப் பெண்ணான பிலோமினா தவறாமல் பிரார்த்தனை செய்வாள்.

சாந்தி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நல்லுர்; முருகன் கோயிலுக்கோ அல்லது முனிஸ்வரர் கோயிலுக்கோ போய்வருவாள். ஓய்வான நேரங்களில் மற்ற இருவரையும் தொந்தரவு செய்து சினிமாவுக்கு இழுத்துக்கொண்டு போவாள்.பிலோமினாவுக்கு அவையெல்லாம் பிடிக்காது.

இரவு படுக்கமுதல் பிலோமினா முழங்காலில் நின்று கர்த்தரை வணங்குவாள்.

‘அம்மாடி பிலோமினா, இருட்டில முழங்காலில் நின்னுக்கிட்டு அப்படி என்னதான் கர்த்தரிட்ட கேட்கிற?’ அதன் பின் இருவருக்குமிடையில் சமயங்கள் பற்றி தர்க்கங்கள் நடக்கும்.

‘கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என்ற தத்துவத்தை நம்பும் நிர்மலா இருவருக்குமிடையில் அகப்பட்டுக்கொள்வமுதுண்டு.

அவர்களின் தர்க்கத்தின் தொடக்கம் காலையில் அவர்கள் பஸ்சுக்குக் காத்து நிற்கும்போதும் தொடங்கும்.

பெரும்பாலும் புத்தகங்களுடன் தன் நேரத்தைக் கழிக்கும் நிர்மலா,அவர்கள் தர்க்கத்தில் நுழைந்தால், ‘உனக்கென்னடி வம்பு? உன் புத்தகத்தைக் கட்டிக்கொண்டழடி’என்று சாந்தி நிர்மலாவின் வாயை அடைத்து விடுவாள்.

அவர்களின் தர்க்கங்கள் நிர்மலாவுக்குச் சிலவேளை சிரிப்பாக வரும். வீட்டில் பலகட்டுப்பாடுகளுடனும் வாழவேண்டிய இளம் பெண்கள் இப்போது ஹாஸ்டல் வாழ்க்கையில் கிடைத்த சுதந்திரமான வாழ்க்கையில் சிறு விடயங்களுக்கெல்லாம் சண்டை போடுவார்கள்.

ஒருநாள் இரவு. பௌர்ணமி நிலவு உலவு வந்துகொண்டிருந்தது. இருளற்ற இரவாக உலகம் அழகாகவிருந்தது. அன்றெல்லாம் பொல்லாத வெயிலாக இருந்தபடியால், இரவு பகலிலென்றில்லாமல் வியர்த்துக் கொண்டிருந்தது. அறையில் கொஞ்சம் காற்று வரட்டும் என்று பிலோமினா, ஜன்னலைத் திறக்க.நிலவின் ஒளி அறையுள் பாய்ந்தது போல.இவர்களின் ஹாஸ்டலுக்குப் பின் தெருவையண்டியிருக்கும் சூசைக்கிழவரின் பாடலும் அறையுள் அலைபாய்ந்தது. சூசைக்கிழவர் வெறி போட்டதும், ஜெருசலம் நகருக்குக்; கேட்கக் கூடியதாகக் கிறிஸ்தவ பாடல்களைத் தொண்டை கிழியப் பாடுவார். அவர் குரலில் இனிமையுமில்லை. நடுச்சாமம் வரைக்கும் அவர் சாராய வெறியில் பாடும் ‘பக்திப்'(?)பாடல்களால் அண்டை அயலார் நித்திரையின்றித் தவிப்பதுதான் மிச்சம்.

திறந்த ஜன்னலால் வந்து அவர்களின் நித்திரையைக் குழப்பும் அவரின் பாடலைக் கேட்ட சாந்தி,’ ஐயையோ, அந்த மனிசனின் ஓலம் நித்திரை கொள்ள விடாது. பிலோமினா ஜன்னலைச் சாத்து’ என்று அலறத் தொடங்கினாள்.

‘என்ன அப்படி உன்னால் சகிக்கமுடியாது. பாவம் அந்தக் கிழவர் யேசுவை நினைத்துப் பாடுகிறார்.’ பிலோமினா தனது மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

, சாந்திக்கு விட்டுக் கொடுக்காமல் தர்க்கம் செய்தாள்,’அப்படியானால்,நான் விடிய விடிய விழுத்திருந்து கந்தபுராணம் பாடட்டுமா?’ சாந்தி பிலோமினாவுடன் போடும் தர்க்கத்தைப் பொறுக்காத நிர்மலா, ‘ஏன் வீணாகச் சண்டைபோடுகிறீர்கள்? நான் இந்தப் பக்கம் ஜன்னலைத் திறக்கிறன்’ என்றாள். ‘அய்யய்யோ, வேண்டாமடி நிர்மலா அந்த ஜன்னலைத் திறந்தா சவக்காலை தெரியும். எனக்குப் பயம்’ சாந்தி பதறினாள்.

‘ சாந்தி உனக்கு உயிரோடு இருக்கிற கிழவன் பாடினாலும் பிடிக்காது, இறந்தவர்கள் கல்லறையையும் பிடிக்காது.உனக்கு என்னதான் பிடிக்கும்? பிலோமினா அமைதியாக வினவினாள்.

அதில் தொடங்கிய வாதம் அன்றிரவெல்லாம்.கிறிஸ்தவ,இந்துமத தத்தவார்த்தம் பற்றி நீண்டுகொண்டு போனது.

இந்துக் கடவுள் முருகன் இருமனைவிகள் வைத்திருப்பது பற்றி பிலோமினா ஏதோ முணுமுணுக்க அதற்கு சாந்தி யேசுவைப் பற்றி ஏதோ சொல்லத் தொடங்கினாள். நிர்மலாவுக்கு அவர்களைச் சமாதானப்படுத்தி வைப்பது பெரிய தலையிடியான விடயமாகவிருந்தது.

‘இப்படி நீங்கள் குழந்தைத்தனமாகச் சண்டைபிடித்தால் நான் வேறிடம் பார்த்துக்கொண்டு போய்விடுவேன்’நிர்மலா மிகவும் கண்டிப்பாகச் சொன்னாள்.

சாந்தி தன்னில் வைத்திருக்கும்; அபாரமான தன்னம்பிக்கையின் அகங்காரம், பிலோமினாவின் அற்புதமான, ஏதோ ஒருவிதத்தில் பரிபூரணமான பவ்யத்தைப் பிரதிபலிக்கும் அழகும், கடவுளில் வைத்திருக்கும் அளவிடமுடியாத பக்தியும் என்பன அவர்கள் இருவரினதும் முரண்பாட்டுக்குக் காரணமா என்று நிர்மலாவால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர்களின் வாய்த்தர்க்கங்கள் சிலவேளை அளவு கடந்து போவது அவளுக்கு எரிச்சலாகவிருந்தது. அவர்களோடு தொடர்ந்திருந்தால் பிரச்சினை தொடரும், படிப்பில் இடைஞ்சல் வரும் என்று நிர்மலா நினைத்ததால்,அவர்களுக்கு அந்த இடத்தைவிட்டுத் தான்; போவதாக எச்சரிக்கை விடுத்தாள்.

சாந்திக்கு, அவர்கள் மூவரும் ஒன்றாக இருப்பது பிடிக்கும் என்பதைத் தெரிந்துதான் நிர்மலா அப்படிச் சொன்னாள்.அதன்பின் அவர்கள், படிப்புக்காலம் முடிந்து பிரியும்வரை ஒருத்தருடன் ஒருத்தர் சண்டை பிடித்துக் கொள்ளவேவேயில்லை.

ஓருநாள் அவர்கள் தங்கள் சினேகிதி ஒருத்தியின் பிறந்தநாள் பார்ட்டிக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது.

அந்த இடத்தில் இரவில் பெண்கள் மட்டும் தனியாகச் செல்வது அவ்வளவ பாதுகாப்பான விடயமில்லை என்ற விடயம் தெரிந்திருந்ததால், அவர்கள் அடிக்கடி வெளியில் போவது மிகவும் அபூர்வம்.

அன்று இரவு ஒன்பது மணிக்கு பஸ்ஸால் வந்து இறங்கியதும், சனநடமாட்டமற்ற அந்தப் பெருதெருவான கண்டி றோட் அவர்களுக்குத் திகிலையுண்டாக்கியது.

அவர்கள் சினேகிதியின் வீட்டிலிருந்து புறப்படும்போது,சினேகிதியின் தமயன், இவர்களுக்குப் பாதுகாப்பாக வருவதாகச் சொன்னபோது,சாந்தி தனது வாயடித்தனத்தால் அவனின் உதவியை மறுத்துவிட்டாள்.

அவர்கள் எதிர் கொள்ளப் போகும் அபாயத்தை அறியாத அவர்களின் முட்டாள்த்தனம் அவர்கள் கண்டி றோட்டில் கால் வைத்ததும் கண்முன்னே தெரிந்தது.

தாங்கள் போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையைப் பொருட்படுத்தாது,சாந்தி வழக்கம்போல், ஓயாமல் பேசிக்கொண்டு வந்தாள். பிலோமினாவுக்கு அதுபிடிக்காவிட்டாலும் அவளால் சாந்தியை அடக்கமுடியாது என்று தெரியும். மூன்று இளம் பெண்கள் கல கலவென்று பேசிக் கொண்டு தனியே வருவதைக் கண்டதும். ஓரு கார் இவர்களைத் தொடரத் தொடங்கியது. யாருமற்ற ஒருமூலையில் காரை நிற்பாட்டிக் காரில் வந்த காமுகர்கள் இவர்களைக் கடத்திக்கொண்டு போய் என்ன கொடுமை செய்தாலும் யாருக்கும் தெரியப் போவதில்லை.

பெருந் தெருவையண்டியிருந்த பிரமாண்டமான வீடுகள் பத்தடிக்குமேலுயர்ந்த மதில்கள்களால் மூடப்பட்டுப் பாதுகாக்கப் பட்டிருந்தன. தெருவில் என்ன கூக்குரல் கேட்டாலும் அந்த வீடுகளில் வாழும் பணக்காரர்கள் என்னவென்றும் கேட்கப்போவதில்லை. தெருவில் அடிக்கடி நடக்கும் அசாம்பாவிதங்களைக் கேட்டுப் பழகியவர்கள் அவர்கள்.

தங்களை ஒருகார் தொடர்வதைக் கண்ட சாந்தி நடுங்கி விட்டாள். ‘அய்யைய்யோ, என்னடி பண்றது. இந்தப் பனங்பொட்டைங்க (யாழ்ப்பாணத்து இளைஞர்கள்) பின்னாடி வர்ராங்க’ சாந்தி அலறத் தொடங்கி விட்டாள். பிலோமினா சாந்தியின் நடுக்கத்தைப் பொருட்படுத்தாமல் விறுவிறுவென நடந்தாள்.அவள் அந்தத் தெருவிலிருக்கும் கிறிஸ்தவ தேவாலயப் பிரார்த்தனைகளுக்கு அடிக்கடி வருபவள். அந்த இடத்துந் சூழ்நிலையைத் தெரிந்தவள்.

கார் தொடர்ந்தது. தூரத்தில் யாரோ யேசுவைப் பற்றிப் பெருங்குரலில் பாடுவது கேட்டது.

‘என்னாடி பண்றது. பின்னால காரில வர்ற பொறுக்கிப் பயக, முன்னால வெறியோட பாடுற கிழட்டுப்பயக..’ சாந்தி தன் குரல் தடுமாற முணுமுணுத்தாள்.நிர்மலாவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது, ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.

‘ யேசு காப்பாற்றுவார்’ பிலோமினா, தனது மெல்லிய குரலிற் சொன்னாள்.பின்னாற் தொடரும் வம்பர்களைக் கண்டு பயப்படாத அவளின் நிதானமும் துணிவும் நிர்மலாவை ஆச்சரியப் படுத்தியது.

அவர்களுக்கு முன்னால் தள்ளாடிக் கொண்டு, பக்தியில்(??) தன்னை மறந்த கிழவனை அடையாளம் கண்ட பிலோமினா,’ யார் அது சூசை அப்புவா?’ என்று ஆதரவுடன் கேட்டாள்.

சூசைக் கிழவர். மங்கலான தெருவிளக்கின் உதவியுடன், தன்னைக் கூப்பிட்ட பெண்ணை ஏற இறங்கப் பார்த்தார். தன்னைச் சுற்றியிருக்கும் தோழியருடன் நின்றிருந்த அழகிய தேவதையாகப் பிலோமினா அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

‘ஓ பிலோமினாவா’ கிழவர் தள்ளாடியபடி அவளை அன்புடன் நோக்கினார்.அவர் முகத்தில் அவளில் உள்ள பாசமும் மரியாதையும் வெளிப்பட்டது. அவர்கள் அடிக்கடி பக்கத்திலிருக்கும் தேவாலயத்தில் சந்தித்துக் கொள்பவர்கள்.

‘ சூசை அப்பு, எங்களுக்குப் பின்னால சில பொறுக்கிகள் வர்றாங்க.அவங்களுக்கு என்ன Nவுணுமின்னு விசாரியுங்க’ பிலோமினா திடமான குரலில்ச் சொன்னாள்.

கிழவருக்கு அவள் சொன்னது அரைகுறையாக விளங்கியது. யாரோ வசதி படைத்த கேவலமான இளைஞர்கள் இந்தப் பெண்களுக்கு வலை விரிப்பது தெரிந்தது. அவ்விதமான சேட்டைகள் பலவற்றைக் கண்டவர் அவர்.

கிழவர், பெண்களுக்குப் பின்னாற் தொடர்ந்த காருக்கு முன்னால் சட்டென்று போய்நிற்க, காரில் இருந்தவர்கள் வேறு வழியில்லாமல், காரை நிற்பாட்டினார்கள்.கிழவர், அவர்களிடம் நெருங்கி வந்து, அந்த இளம் பெண்கள் தங்கள் வாழ்நாளில் கேட்டிராத படுதூஷண வார்த்தைகளை, அவரின் மிக மிக உயர்ந்த குரலில்(ஜெருசலமுக்குக் கேட்கக்கூடிய சப்தம்) அவர்களில் கொட்ட ஆரம்பித்தார்.

கொஞ்ச தூரத்திலிருந்த கடையிலிருந்தவர்கள் கிழவரின் ஆவேசக் குரல் கேட்டு ஒடிவந்து ‘என்ன நடந்தது’? என்று விசாரித்தார்கள். அவர்கள் அந்தப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள். தேவாலயத்தில் பிலோமினாவைக் கண்டவர்கள். மரியாதையுடன் அவளைப் பார்த்தனர்.

கிழவர் தனது, ‘அபாரமான’ மொழியில், பெண்களைத் தொடர்ந்து வந்தவர்களை; பற்றித் திட்டினார். அப்புறம் என்ன?

காரில் வந்தவர்கள் படுபயங்கரமான கல்லெறித்தாக்குதல்களுக்கு ஆளானார்கள்.

அதன் பின், அவர்கள் தங்களின் படிப்பை முடித்துக் கொண்டு,அந்த விடுதியைவிட்டுச் செல்லும்வரைக்கும், சூசைக் கிழவர் தனது உச்சக் குரலில:; நடுநிசியில், ‘ஜெருசலாமிருக்கும்’ யேசுவுக்குக் கேட்கத் தக்கதாகப் பாடினார். ஜெருசலமுக்குக் கேட்டதோ இலலையோ, சாந்திக்கும் மற்றவர்களுக்கும் நிச்சயமாகக் கேட்டது. ஆனால் சாந்தி ஆங்காரம் கொண்டு அலட்டவில்லை.அன்றொரு நாள் அவர்கள் நடுநிசியில் சந்தித்த அபாயத்தை நீக்கிய பிலோமினாவிலும் சூசைக் கிழவனிலும்; சாந்திக்கு ஒருமரியாதை வந்திருக்கிறது என்று நிர்மலா புரிந்து கொண்டாள்.

அடுத்த சில நாட்களில், பிலோமினா படுக்கையிலிருந்தாள். தனக்கு உடம்புக்குச் சரியில்லை என்றாள்.

நிர்மலாவும், சாந்தியும் பீச்சுக்குப் போகப் பிலோமினாவை அழைத்தபோது அவள் இவர்களுடன் வரவில்லை.

அவள் சொல்லும் தடிமல் காய்ச்சலுக்கு அப்பால், பிலோமினா வேறு ஏதோ காரணத்தால் படுக்கையில் தன்னை ஒடுக்கிக் கொண்டிருக்கிறாள் என்பது நிர்மலாவுக்குப் புரிந்தது.

‘என்னடி பிலோமினா இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி இருக்கே?’ சாந்தி வழக்கம்போல் பிலோமினாவை வம்புக்கு இழுத்தாள்.

சாந்தியின் கிண்டலுக்கு வழக்கமாகப் பிலோமினாவிடமிருந்து வரும் சிறு முணுமுணுப்புக்கள்கூட வரவில்லை. மற்றவர்களுக்குச் சொல்லத் தயங்கும் பிரச்சினையால் பிலோமினா தவிக்கிறாளா?

நிர்மலாவும் சாந்தியும் தூண்டித்துருவி அவளைப் படாதபாடு படுத்த அவள், தனக்கு வந்திருந்த ‘காதல் கடிதத்தை’ இவர்களிடம் ஒப்படைக்க வேண்டியதாயிற்று.

பாவம் பிலோமினா!

அன்று அவள் சொல்ல முடியாத அளவு,சாந்தியின் கிண்டலுக்கு ஆளாகினாள். சாந்தி வழக்கம்போல் தனது கணிரென்ற கவர்ச்சியான குரலில், பிலோமினாவின் காதல் கடிதத்தை மிகவும் நாடகத் தன்மையான பாவங்களுடன் படித்து முடித்தாள்.

அந்தக் கிண்டல்கள் தாங்காத பிலோமினா, தன் நிதானம், பொறுமை என்ற பரிமாணங்களை மீறித் தன்னையறியாமல் அழுதே விட்டாள்.

‘ ஏனடி அழுவுறே,யாரோ ஒருத்தன் உன்னில ரொம்ப ஆசைப் பட்டு அழகாக எழுதியிக்கான். சில பெண்கள்தான் இப்படியான வர்ணனைக்கு உரியவங்க. நீ குடுத்து வைச்சவ,அவன் சொல்றதப் பார்த்தா அவன் உன்னில ரொம்ப உசிராயிருக்கான்.. காதல் பண்ணுற வயசுல காதல் பண்ணித் தொலையேன்’.

சாந்திக்கு எதுவுமே விளையாட்டுத்தான்.

அவளுக்குப் பதில் சொல்லாமல், பிலோமினா குப்புறப் படுத்து அழுதுகொண்டிருந்தாள்.

பிலோமினாவுக்குக் காதல் கடிதம் எழுதியவன்,நீண்டகாலமா அவளை மிகவும் தெரிந்தவனாக இருக்கவேண்டும்.

இல்லையென்றால் அந்தக் கடிதம் வெறும்;’உனது அன்பன்’ என்பதுடன் முடிந்திருக்காது.

‘யாரடி அந்த உன் மனம் கவர் அன்பன்?’ சாந்தி விடாப் பிடியாகப் பிலோமினாவிடம் பல்லவி பாடிப் பார்த்தாள்.

பிலோமினாவிடமிருந்து எந்த பதிலுமில்லை. கொஞ்ச நாளைக்குப் பின் அவனிடமிருந்து சாந்திக்கு ஒரு கடிதம் வந்தது.

கடிதம் எழுதியவன், இளமையிலிருந்து.பலகாலமாக ஒன்றாகப் பழகிய பிலோமினாவின் சினேகிதியின் தமயன் என்பது புpரிந்தது.

அவன் நீண்டகாலமாகக் கொழும்பில் வேலை செய்வதாகவும், சாந்தி, நிர்மலா, பிலோமினா மூவரும் அண்மையில் ஒரு இன்டர்வியுவுக்குக் கொழும்புக்குச் சென்றிருந்தபோது, பிலோமினாவைப் பல வருடங்களுக்குப் பின்; கண்டதாகவும், அன்றிலிருந்து,அவள் நினைவில் வாடுவதாகவும்(?) அவளைத் திருமணம் செய்ய விரும்பி அவன் அவளுக்கு எழுதிய கடிதங்களுக்குப் பிலோமினா பதில் எழுதவில்லை என்றும், தன்னைப் பிலோமினாவுடன் சேர்த்து வைக்கச் சாந்தி உதவி(!) செய்யவேண்டும் என்றம் எழுதியிருந்தான்.

சுpல மாதங்களுக்கு முன்,அவர்கள் கொழும்புக்குச் சென்றிருந்தபோது, அவர்களுடன், மிருகக்காட்சிச்சாலை, மியுசியம் என்று ஒன்றாகத் திரிந்த பிலோமினாவின் சினேகிதியின் தமயன் தியாகராஜாவைச்; சாந்தியும் நிர்மலாவும் நினைவு கூர்ந்தார்கள்.அவன் வாட்டசாட்டமான, கொழும்பு நகரில் வாழும் ‘நாகரிகமான’,பணக்கார வாலிபன்.பெண்களைக் கவுரமாக நடத்துபவன். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவன் ஒரு (கோயிலுக்குப் போகாத) இந்து,

பிலோமினா அவனின் தங்கையுடன் படித்தவள்,மிகவும் அழகானவள்.;அதனால் அவனைப் ‘பைத்திய’மாக்கி வைத்திருக்கும் ‘கிறிஸ்தவ ஏழைப் பெண்.’ பெரிய குடும்பத்தில் பல சுமைகளுடன் வாழ்பவள். ஒரு நாளும் மாறாத சோகத்தைத் தன் கண்களில் பிரதிபலிப்பவள். தனது வாழ்க்கையின் நிவர்த்திக்குத் தவறாமல் தேவாலயம் சென்று முழங்காலில் நின்று பிரார்த்திப்பவள்.ஒரு சிறு தவறுக்கும் பாதிரியிடம் சென்று முழங்காலில் நின்று பாவமன்னிப்புத் தேடுபவள்.

அவனைப்; பொறுத்தவரையில,அவன் ‘;காதல்’. என்ற உணர்வுக்கும்; ‘சாதி மத இன, மொழி,பணம்’ என்ற பேதங்களுக்கும் ஒருசம்பந்தமுமில்லை என்று தெரிந்துகொண்ட புத்திஜீவி.

பிலோமினாவோ,’யேசுவைத்’ தவிர வேறு யாரையும் மனதாலும் நினைப்பது பாவம் என்று நினைப்பவள்.

‘ ஏம்மா பிலோமினா, அவனுக்கு காதல் வரவேண்டிய காலத்தில வந்திருக்கு, அதிலும் உன்னில வந்திருக்கு, அவன் ரொம்ப வாட்டசாட்டமா இருக்கான்.அவனப் பிடிக்காட்டா எழுதித் தெலையேன். ஏன் குப்புறப் படுத்து அழணும்?’ சாந்தி ஓயாது முணுமுணுத்தாள். அவர்களின் காதலுக்குத் தரகுவெலை செய்யத் தான் தயாராகவில்லை என்பதைச் சாந்தி தெளிவாகச் சொல்லிவிட்டாள்.

பிலோமினா வழக்கம்போல் அவளின் மௌனத்தைச் சினேகிதிகள் கேட்கும் கேள்விகளுக்கு மறுமொழியாக்கிவிட்டுப் படுத்துவிட்டாள்.

பிலோமினா, தியாகராஜனஜன் காதல் மடல்களுக்குப் பதில் எழுதியதாக எந்த அறிகுறியுமில்லை.

காலம் பறந்தது. பரிட்சை வந்தது. சினேகிதிகளின் மாணவ வாழ்க்கை முடிந்தது.ஒவ்வொருத்தரும் வெவ்வேறு திசைகளுக்குப் பறந்தார்கள். தொடர்புகள் காலக்கிரமத்தில் அறுந்தன.

சில வருடங்களின் பின், கொழும்பில் நடந்த, ‘மெடிகல் கொலிஜ்’எக்ஸ்பிஷனுக்கு நிர்மலா தன் கணவருடன் போயிருந்தபோது, சாந்தியையும் தியாகராஜனையும் தம்பதிகளாகக் கண்டபோது, திடுக்கிட்டாள்.

தியாகராஜா, தனது காதலைக்கொட்டிப் பிலோமினாவுக்கு எழுதிய கடிதங்களை நிர்மலாவுடன் சேர்ந்து படித்தவள் சாந்தி. அவனுக்குப் பிலோமினாவிலுள்ள அளப்பரிய காதலை அவனின் கடிதங்கள் மூலம் தெரிந்துகொண்டவள்.

என்னவென்று இந்த இணைவு சாந்திக்குத் தியாகராஜாவுடன் ஏற்பட்டது? அடிக்கடி,அவன் பிலோமினா பற்றிச் சாந்திக்குக் கடிதம் எழுதியதன பலன்,அதைச் சாந்தி படித்தலால் வந்த மனமாற்றம் என்பன அவர்களின் திருமணத்தில் முடிந்ததா, நிர்மலா வாய்விட்டுப் பலகேள்விகளைக் கேட்க விரும்பினாலும், ஏதோ காரணத்தால் கேட்கமுடியவில்லை.

மத பேத காரணமாகத் தான் விரும்பியவளைச் செய்ய முடியாவிட்டாலும், அவள் சினேகிதியைச் செய்தால் வாழ்க்கை முழுதும் தனது மானசீகக் காதலியைச் சாந்தி மூலம் அடிக்கடி காணலாம் என்ற தியாகராஜன் நினைத்தானா?

பிலோமினாவின், அழகிய, சோகமான விழிகள் நிர்மலாவின் நினைவில் வந்து பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தன. ஆனால் அவள் எங்கேயிருக்கிறாள் என்று நிர்மலாவுக்குத் தெரியாது.

நிர்மலா தன் கணவருடன்,லண்டனுக்குப் புறப் படமுதல்,ஓருநாள்,யாழ்நகர் செல்லப் புகையிரத நிலையத்தில்,’யாழ்தேவி’ ட்ரெயினுக்குக் காத்து நின்றபோது, தற்செயலாகப் பிலோமினாவைச் சந்தித்தாள் நிர்மலா.

அடக்கமுடியாத ஆர்வத்துடன் ஓடிப்போய்ப்,’பிலோமினா’ என்ற கூவினாள் நிர்மலா.

பிலோமினா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் அதே சோகமான கண்கள்.அவளுடன்,பிலோமினாவையும் விட மிக அழகிய இரண்டு பெண்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் மூவரும் அந்தக் காலத்துத் தமிழ்ப்பட சினிமா நடிகைகளான, லலிதா,பத்மினி, ராகினியை நிர்மலாவுக்கு ஞாபகப்படுத்தினார்கள். அந்தப் பெண்களின் கைகளில் குமுதமும் கல்கிப் பத்திரிகைகள் இருந்தன. பிலோமினா ஒருநாளும் பைபிளைத் தவிர வேறெந்த பத்திரிகைகளையோ காதல் கதைகளையோ படித்ததில்லை என்பது நிர்மலாவுக்கு ஏனோ ஞாபகம் வந்தது.

‘எப்படிச் சுகம் நிர்மலா, லண்டனுக்குப் போறியாம் என்டு கேள்விப்பட்டன்’ பிலோமினா வழக்கம்போல் அவளின் மெல்லிய குரலில் கேட்டாள்.

பிலோமினா ஒரு பேரழகி மட்டுமல்ல, தனது குடும்பத்திற்காகத் தனது காதலைத் தியாகம் செய்த அற்புதமான ஒரு மனிதப் பிறவி என்ற நினைவு நிர்மலாவின் நினைவிற் தட்டியதும், பிலோமினாவைக் கட்டிக் கொண்டு அழவேண்டுமென்ற தனது உணர்வை நிர்மலா மறைத்துக்கொண்டாள்.

‘நீ எப்படியிருக்கிறாய் பிலோமினா?’ நிர்மலா கேட்ட கேள்விக்குப் பிலோமினாவிடமிருந்து ஒரு சோகமான சிரிப்பு வந்து மறைந்தது.

இருவரும் ட்ரெயினில் ஜன்னல் பக்கச் சீட்டுகளில் உட்கார்ந்திருந்த பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள்;.

பிலோமினாவின் சகோதரிகள் டாய்லெட் பக்கம் சென்றதும், ‘சாந்தி- தியாகராஜன் திருமணம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய்’ நிர்மலா சட்டென்று கேட்டாள்;. புpலோமினா, அவளுக்குப் பதில் சொல்லாமல் தனது பார்வையை ஜன்னலுக்கு வெளியில் செலுத்தினாள். வெளியில் வீசிய காற்றில், அவளிள் நீழ் கூந்தல் அலைபாய்ந்தது.கண்கள் பனித்தன. உதடுகள் நடுங்கின.அவள் தனது அழுகையைக் கட்டுப்படுத்த மிகவும் கஷ்டப் படுகிறாள் என்று நிர்மலாவுக்குத் தெரிந்தது.

‘ தியாகுவின் கடிதங்கள் ஞாபகமா?’ நிர்மலாவின் அந்தக் கேள்வி மிகவும் முட்டாள்த்தனமானது என்று தெரிந்துகொண்டும் கேட்டாள்.

‘சாரி பிலோமினா’ சினேகிதியின் கையை இறுகப் பற்றிக் கொண்டு நிர்மலா சொன்னாள்.

பிலோமினாவின் உதடுகளில் வரட்சியான புன்னகை.

‘எங்களைப் போல ஏழைகள், அப்படியான சொர்க்கங்களுக்கு ஆசைப்படக் கூடாது,எங்களைப் போலப் பெண்களிடமுள்ளது, அழுகையும் வேதனையுமே தவிர, அந்தச் சொர்க்கங்களையடைய வேண்டிய சீதனமோ, நகைகளோயில்ல,அவரைப் பற்றி -தியாகுவைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும் ஆனா எங்களப் போல எழைகள் அடைய முடியாப் பொருளுக்கு ஆசைப் படக்கூடாது.’இப்படிச் சொல்லும்போது, அவள் குரல் சாடையாக நடுங்கியது.

அன்று அந்தப் பழைய காலச் சினேகிதிகள், இருவரும் ஒன்றாக யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்து பிரிந்து கொண்டார்கள்.

நிர்மலா லண்டனுக்கு வந்து விட்டாள். எத்தனையோ வருடங்களின் பிலோமினா பற்றிக் கேள்விப் பட்டாள். தனது குடும்பப் பொறுப்புக்களை முடித்து விட்டு பிலோமினா கன்னியாஸ்திரியாக ஆபிரிக்காவுக்குச் சென்று விட்டாளாம்.

அவளை மிகவும் விரும்பிய, அவள் மிகவும் விரும்பக் கூடிய தியாகராஜனின் ஞாபகத்தை அழிக்க இன்னுமொரு கண்டத்திற்கே போய்விட்டாளா?

லண்டனிற் சிலவேளைகளில் நிர்மலா வேலைக்குப் போகும் வழியில் சில கன்னியாஸ்திரிகளைக் கண்டால் நிர்மலாவுக்குப் பிலோமினாவின் அழகிய முகம் ஞாபகம் வரும்.

எல்லாவற்றையும் துறந்த அவர்களோடு பிலோமினாவை இணைத்துப் பார்க்க நிர்மலாவின் மனம் சங்கடப் பட்டது.

அவர்கள் இளம் சிட்டுகளாகக் கும்மாளமடித்த இரவுகள், சூசைக் கிழவனின் தொண்டை கிழியும் பாடல்கள்,தியாகராஜனின் கவிதை வடிந்த காதற் கடிதங்கள், அதைப் படித்துவிட்டுக் குப்புறப் படுத்து விம்மிய பிலோமினா என்பன நினைவைச் சூழ்ந்துகொள்ளும்.

பிலோமினா,இன்று எங்கோ ஒரு பெரும் கண்டத்தில், அவளின் உறவினர்களைக் காண முடியாத நாட்டில்,அவள் இழந்து போன காதலுக்காகவும்,வாழமுடியாமற் போன இனிய வாழ்க்கைக்காகவும், முழங்காலில் மண்டியிட்டுப் பரமண்டலத்திலிருக்கும் பிதாவைத் துதித்துக்கொண்டிருக்கலாம்.

சாந்தி,பிலோமினாவிடம் கேட்ட கேள்வி நிர்மலாவுக்கு ஞாபகம் வருகிறது.

‘வாழ வேண்டியகாலத்தில உன்னைத் தேடி வர்ர வாழ்க்கையைத் துணிவாக ஏற்றுக் கொள்ளாமல்,அதை உதறிவிட்டு முழங்கால் தேயப் பிரார்த்திப்பதுதான் வாழ்க்கையா?’

(யாவும் கற்பனையே)

‘தாயகம்’ கனடா பிரசுரம் 25.06.1993.

(சில வசன நடை மாற்றப் பட்டிருக்கிறது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *