பிறை தேடும் இரவு

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2024
பார்வையிட்டோர்: 3,242 
 
 

(2014ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-8 | அத்தியாயம் 9-12 | அத்தியாயம் 13-16

அத்தியாயம்-9

“கோயிலுக்கு தானே போறே. காரில் ஏறு நான் கொண்டு போய் விட்டுட்டு கம்பெனிக்கு போறேன்.”

“ஆச்சரியமா இருக்கு தினகர், லேட்டாச்சுன்னு ஓடுவே… என்னை கோயிலில் இறக்கிவிடறதா சொல்றே. பரவாயில்லை நீ போ. நான் ஆட்டோ பிடிச்சு போறேன்”. 

“அட அட வாம்மா… சொன்னா கேளு…” வலுக்கட்டாயமாக காரில் ஏற்றுகிறான். 

“போயிட்டு வா. மகன் வருந்தி வருந்தி கூப்பிடறான் போய் தரிசனம் பண்ணிட்டு நல்ல புத்தியை கொடுக்கணும்னு கும்பிட்டு வா”.

சொன்னபடி சிரிக்கிறார். 


கையில் அர்ச்சனை தட்டுடன் தினகர் சொன்னதை வாயை பிளந்து கேட்கிறாள். 

“என்னால நம்பவே முடியலை. பரமு அண்ணனா சொன்னாரு. கோடீஸ்வரங்க நம்ப வீட்டில் பெண் கொடுத்து, பெண் எடுக்க நினைக்கிறது பெரிய அதிர்ஷ்டம். பெரியவனுக்குத்தான் வாழ்க்கை அஸ்தமனமாகி போச்சு. நீயாவது நல்லா இருக்கணும் தினகர். மாமாவை போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லு பேசி முடிச்சுடுவோம்”. 

“நீ ஆசைப்படறது, அவசரப்படறது எல்லாம் சரிதான்மா. இருந்தாலும் அந்த பெண்ணோட அண்ணன், நம்ப சுமதியை கட்டிக்க போறவன் சின்ன வயசில் போலியோ வந்து, ஒரு காலை சாய்த்து நடப்பானாம்”. 

“அடக்கடவுளே… என்னப்பா சொல்றே. இது நம்ப சுமதிக்கு சரி வருமா. அவ நிச்சயம் ஒத்துக்க மாட்டா.” 

“என்னம்மா நீ… இதெல்லாம் பெரிய விஷயமா… உன் பொண்ணு கோடீஸ்வரன் வீட்டில் வாழப் போறா… அதுவுமில்லாம கோடீஸ்வரி உனக்கு மருமகளா வரப்போறா. மொத்தத்தில் அவர் சம்பாதித்த சொத்து முழுவதையும் உன் பிள்ளைகள்தான் ஆளப் போறாங்க. இந்த குறையை பெரிசு பண்ணாம நல்லபடி பேசி முடிக்கிற வழியைப் பாரும்மா. “

“இருந்தாலும் உங்கப்பா, சுமதி சம்மதிக்கணுமே.” 

“சம்மதிக்க வைப்போம். இப்போதைக்கு இந்தக் குறையை பத்தி அப்பாகிட்டே பேசாதே. நல்ல இடம்னு மட்டும் சொல்லு.”

“தெரியாமலா போயிடும்.”

“அதற்குள் முகூர்த்த ஓலை எழுதி முடிச்சுடலாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்”. 

அரைமனதாக தலையாட்டுகிறாள் அம்சவல்லி.


தன் முன் அமர்ந்திருப்பவளை பார்க்கிறான் க்ருபாகரன்.

இளஞ்சிவப்பு நிற காட்டன் சேலை. அதை நேர்த்தியாக உடுத்தியிருக்கிறாள். தளர பின்னிய கூந்தல்.. நெற்றியில் சிறு புள்ளியாய் கண்ணுக்கே தெரியாத ஸ்டிக்கர் பொட்டு, கண்களில் சோகத்தை மீறி தெரியும் கனிவு. 

“நீங்க தப்பா நினைக்கலைன்னா உங்களை நானும் அண்ணின்னு கூப்பிடவா…” 

“உங்ககிட்டே மனசு விட்டு பேசணும்னுதான் சுமதியை கூட்டிட்டு வரலை”. 

“தெரியுது. நான் நல்லவனா, சுமதியை கடைசி வரை நல்லபடியா வச்சு காப்பாத்துவேனான்னு தெரிஞ்சுக்க வந்திருக்கீங்க. அண்ணி நீங்க கேட்பதற்கு முன்னால், என்னை பத்தி நானே சொல்லிடறேன்.” 

“பெத்தவங்க சின்ன வயசிலேயே போயிட்டாங்க. சித்தப்பா தான் வளர்த்தாரு. எனக்கு உறவுன்னு சொல்ல அவர் மட்டும்தான் இருக்காரு. தற்செயலான சந்திப்பு. சுமதியை எனக்கு பிடிச்சு போச்சு. பரஸ்பரம் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிட்டோம். ஒரு பெரிய கம்பெனியில் ஜி.எம்மா இருக்கேன். இதோ என்னோட விசிட்டிங் கார்டு. நீங்க கம்பெனியில்கூட என்னைப் பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கலாம்”. 

“உங்க சுமதியை மனசார நேசிக்கிறேன். சீர், வரதட்சணை எதையும் எதிர்பார்க்கலை. என்னை நம்பி உங்க பெண்ணை கொடுங்க. காலமெல்லாம் சந்தோஷமாக வச்சிருப்பேன்.’ 

“நீங்க உங்களை பத்தி சொல்லிட்டீங்க. எங்க குடும்பத்தை பத்தியும் தெரிஞ்சுக்குங்க. சுமதியின் அண்ணன், என் கணவர் திவாகர் டாக்டர். அவரோடு நர்ஸாக வேலை பார்த்த எங்களுக்குள் ஏற்பட்ட காதல்… நான் இல்லாத குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தாலும், என் மாமனாரின் முயற்சியிலும், அவர் அன்பிலும் நல்லபடியா நடந்தது. என் துரதிருஷ்டம் அவரோடு கடைசிவரை வாழற கொடுப்பினை இல்லாம போச்சு. ஆனா இன்னைக்கு வரைக்கும் அவர் உறவுகளை என சொந்தங்களாக நினைச்சுதான் வாழறேன்”. 

“என்னடா… தன்னை பத்தியே பேசறாளேன்னு நினைக்காதீங்க. அதுக்கு காரணம் இருக்கு. என் மாமியார் இப்ப வரைக்கும் சரியா சீர் கொண்டு வரவில்லை. டாக்டர் மகனுக்கு பெரிய இடத்தில் பெண் பார்த்திருப்பேன். என் துரதிருஷ்டம் அவரை கொண்டு போயிடுச்சுன்னு வார்த்தைகளால் காயப்படுத்திட்டுதான் இருக்காங்க.” 

பரிதாபமாக அவளை பார்க்கிறான். 

“உங்களோடு ஒப்பிடும்போது நாங்களும் தகுதி குறைஞ்சவங்க தான். மாமனார் ரிடையர்ட் ஆகியாச்சு. அவரோட தம்பி தினகர்… இப்பதான் சுயமா ஆரம்பிச்ச கம்பெனியில் லாபம் பார்க்க ஆரம்பிச்சிருக்காரு. அதுவுமில்லாம அவர் கொஞ்சம் சுயநலமானவர். பெரிசா அவர்கிட்டே எதையும் எதிர்பார்க்க முடியாது. எங்க சுமதி நிறைய சீர் கொண்டு வரலைன்னாலும், மனசு நிறைய அன்போடு வருவா. எனக்கு ஏற்படற அவமானம், சுமதிக்கு ஏற்படக்கூடாது. நீங்க அவளை நல்லபடியா பார்த்துப்பீங்களா…” 

“உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம். அன்புக்கும், உறவுக்கும் ஏங்கற நான், சுமதியோடு நீங்க சந்தோஷப்படும்படியா வாழ்வேன்.”

“எங்களுக்கு அது போதும். அப்புறம் முக்கியமான விஷயம். இந்த காதல், கல்யாண பேச்சு நமக்குள் மட்டும் இருக்கட்டும். நேரம் வரும் போது சொல்லி உங்க கல்யாணத்தை நல்லபடியா நடத்த நான் நிச்சயம் உதவுவேன்”. 

“உங்களை மனப்பூர்வமாக நம்பறேன் அண்ணி” அன்போடு அவனை ஏறிடுகிறாள் சாந்தி. 

அத்தியாயம்-10

“எனக்கு ஆச்சரியமா இருக்கு அபர்ணா.”

“எதைப்பத்தி?” 

“என்னை நேரில் பார்க்காமலேயே என் மேல் இவ்வளவு அன்பும், அக்கறையும் காட்டறதுக்கு”. 

“உங்க போட்டோவை பார்த்தேன். பரமு அங்கிள் உங்களைப் பத்தி அப்பாகிட்டே உயர்வாக சொல்றதை பார்த்தேன். உங்க கண்கள்… அதில் தெரிந்த கவர்ச்சி… அந்த காந்த விழிகள் என் மனசுக்குள்ளே பெரிய ரசாயன மாற்றத்தை உண்டாக்கிடுச்சு தினகர். நீங்கதான் எனக்கானவர்னு அந்த நிமிஷமே முடிவு பண்ணிட்டேன்.”

“நான் மட்டும் என்ன… இந்த பேரழகிதான் என் மனைவின்னு பார்த்த மாத்திரத்தில் முடிவு பண்ணிட்டேன்” 

“அதெல்லாம் இருக்கட்டும். உங்க வீட்டில் எங்க அண்ணனை மாப்பிள்ளையாக்க சம்மதிச்சுட்டாங்களா. அதில் எந்த பிரச்சினையும் வராதே”. 

“என்ன இப்படி கேட்கற. நிச்சயம் நடக்கும்.”

“அப்பா… பெண் கொடுத்து பெண் எடுக்கணும்ங்கிற விஷயத்தில் ரொம்பவும் பிடிவாதமாக இருக்காரு தினகர். நாளைக்கு ஏதாவது மறுப்பு சொன்னா நம்ப கல்யாணமே நடக்குமான்னு…” 

“ப்ளீஸ்… உன் வாயால அப்படி சொல்லாதே அபர்ணா. பார்க்காமலேயே உன் மேல் இவ்வளவு பிரியம் வச்சிட்டேன். நீ இல்லாத வாழ்க்கையை என்னால் நினைச்சுகூட பார்க்க முடியாது”. 

“அப்ப… சீக்கிரமே பேசி முடிச்சு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க ஓகே தினகர். நான் லேடீஸ் கிளப் வரைக்கும் போக வேண்டியிருக்கு. நாளைக்கு பேசுவோம். பை… போனை வச்சிடறேன்.”

அம்மா இன்று அப்பாவிடம் பேசுவதாக சொல்லியிருக்கிறாள். அபர்ணா சொன்ன மாதிரி சீக்கிரமே ஏற்பாடு பண்ண வேண்டும். பரமு மாமாவையும் வரச்சொல்ல வேண்டும். 

எண்ணங்கள் அபர்ணாவை சுற்றியே வட்டமிடுகிறது. 


கண்மூடி ஈஸி சேரில் சாய்ந்திருந்தவர். அம்சவல்லி சொன்னதை கேட்டு கண் திறக்கிறார். 

“நீ என்ன சொல்றே, பரமு வந்து தினகரை பார்த்து பேசினானா…” 

“ஆமாங்க நல்ல விஷயம். நம்ப ரெண்டு பிள்ளைகளுக்கும் கோடீஸ்வர வீட்டு சம்பந்தம் கிடைக்கப் போகுது. இந்த கொடுப்பினை எல்லாருக்கும் வருமா.” 

பையனுக்கு போலியோவால் கால் சற்று வளைந்திருக்கும் என்பதை மறைத்து மற்ற எல்லா விபரங்களையும் சொல்கிறாள். 

“சரி அம்சா… இது விஷயம் நாம் மட்டும் முடிவு பண்றதில்லை. தினகர், சுமதி சம்மதமும் வேணும்” சிரிக்கிறாள் அம்சவல்லி. 

“தினகர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அந்த பொண்ணு அபர்ணா கிட்டே பேசறான். பத்து நாளா இது நடக்குது. அவனுக்கு ரொம்பவே பிடிச்சு போச்சு. பொண்ணு ரதி மாதிரி இருக்கா.” 

“ஓகோ… அம்மாவும், பிள்ளையும் பேசி முடிவு பண்ணிட்டுதான் என்கிட்டே சொல்றீங்களா?”

“அப்படி இல்லைங்க. நல்லா முழு விபரமும் தெரிஞ்சு சொல்வோம்னு இருந்தேன். சாயந்திரம் பரமு அண்ணனும் வர்றாரு. பேசி ஒரு முடிவுக்கு வருவோம்ங்க.”

“இருக்கட்டும். சுமதி வரட்டும். அவளுக்கு விருப்பம் இருக்கான்னு கேட்டுட்டு இது பத்தி பேசலாம்.”

ஹாலில் இருந்த பத்மினியை பார்க்கிறார். 

“ஆமாம் அத்தை. இதில் சுமதியின் விருப்பமும் முக்கியம் இல்லையா?”

“நீ கொஞ்சம் வாயை மூடறியா. இப்ப உன்னை அபிப்ராயம் கேட்டேனா… அதிகபிரசங்கிதனம் உதவாது… உள்ளே போய் வேலையைப் பாரு”. 

கோபமாக முறைக்க, பதில் எதுவும் பேசாமல் மாமனாரை பார்த்தபடி உள்ளே போகிறாள் சாந்தி. 

“எதுக்கு இப்ப அவ மேலே எரிஞ்சு விழறே. அவ என்ன தப்பா சொல்லிட்டா.”

“எல்லாம் என் தலையெழுத்து. பெத்த மகனை அனுப்பி வச்சுட்டு… இவளோடு போராடறேன். சுமதி என் பொண்ணு… நான் சொன்னதை கேட்பா. சாயந்திரம் அண்ணன் வந்ததும், அவங்க வீட்டில் பேசி, சம்பந்தத்தை முடிக்கிற வழியை பாருங்க.” 


சுடசுட கேசரியும், பகோடாவும் கொண்டு வந்து அண்ணன் முன் வைக்கிறாள். 

“சாப்பிடுங்க மாமா…” 

“என்ன தினகர்… என்னை ரொம்பவே கவனிக்கிறே?” 

“பின்னே இல்லையா. அவன் வாழ்க்கைக்கு விளக்கேத்தி வைக்கப் போகிறவரே நீங்கதானே…”

முகமெல்லாம் பிரகாசிக்க அம்சவல்லி சொல்ல.. 

“என்ன அம்சா… அத்தான் வந்ததிலிருந்து எதுவுமே பேசலை…” பரமு சிவநேசனை பார்க்கிறார். 

“கல்யாண விஷயம் பேச நேரா வீட்டிற்கு வராம தினகரை போய் கம்பெனியில் பார்த்து போட்டோவை தந்து விபரம் சொல்லியிருக்கே. ஏன் அப்படி செய்தே?”

தினகர் கண்களால் ஏதோ தெரிவிக்க, புரிந்து கொண்டவர்… 

“என்ன அத்தான்… இதுக்காக கோபப்படறீங்க. கம்பெனி பக்கம் ஒரு வேலையாக வந்தேன். தினகர்கிட்டே விபரம் சொல்லிட்டு ஒரு வாரத்தில் வீட்டுக்கு வர்றதாக சொல்லிட்டுதானே போனேன்.” 

“உங்களுக்கெல்லாம் இந்த இடம் பிடிச்சிருக்குதானே. கோடீஸ்வர வீட்டு சம்பந்தம். அதுவும் இரண்டு பேரும் ஒரே இடத்தில்… சொத்தும் வெளியே போகாது”. 

“நல்ல முடிவா சொன்னா அவங்ககிட்டே பேசி ஒப்புத் தாம்பூலம் மாத்திக்கலாம்”. 

“எதுக்கு அவசரப்படறே. இன்னும் சுமதிகிட்டே சொல்லலை. ஒரு வாரம், பத்து நாளில் சொல்றேன். அப்புறம் அவங்ககிட்டே பேசலாம்”. 

தினகர் அம்மாவை பார்க்க, நான் இருக்கேன் பயப்படாதே என்பது போல அவனை பார்க்கிறாள். 

பார்க்கில் சிறுவர்களுடன் பிரபு விளையாட அவன் மேல் ஒரு கண்ணை வைத்தவளாக, பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் சிவநேசனிடம் வருகிறாள். 

“மாமா… நம்ப வீட்டில் கல்யாண பேச்சு வந்தாச்சு. சுமதிகிட்டே சொன்னா அவ ஏத்துப்பாளா… அவளோட காதல்… அதில் உறுதியா இருக்கும்போது எப்படி மாமா…” 

“நானும் அதைப்பத்தி தான் யோசிக்கிறேன்”.

“அத்தைகிட்டே சொல்லிடுவோம் மாமா”. 

“இல்லம்மா. அது எந்த அளவுக்கு சரியா வரும்னு தெரியலை. யோசனை பண்ணி பார்த்தா… ரெண்டு பேருக்கும் இது நல்ல வாய்ப்பாகதான் தெரியுது. தினகருக்கும் நாளைக்கு வாழ்க்கையில் முன்னேற பல விதத்தில் உதவியாக இருக்கும். சுமதியும் பெரிய இடத்தில் வாழ்க்கைப்பட்டு நல்லாயிருப்பா. பெரியவங்க நாலையும் யோசிக்கணும்மா.”

“அவ சின்ன பொண்ணு… எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா. இந்த விஷயத்தில் நல்லதை எடுத்து சொல்லி நீதான் அவ மனசை மாத்தணும் சாந்தி.” 

‘கடவுளே என்ன இது. சேர்த்து வைக்கிறேன்னு இருவரிடமும் நம்பிக்கை கொடுத்த நானே பிரித்து வைப்பதா… மனசை மாத்திப்பது அவ்வளவு சுலபமான காரியமா… இன்னைக்கு வரைக்கும் என் திவாகரை மறக்க முடியாமல் அவர் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேனே…’

“மாமா… எப்படி மாமா… இது முடியுமா?”

“முடியணும் சாந்தி, அதுதான் எல்லாருக்கும் நல்லது.”

அத்தியாயம்-11

செல்போன் அடிக்க… படுத்திருந்தவள் தலைமாட்டில் இருந்த போனை எடுக்கிறாள். 

“அம்மா… நான் டாக்டர் சரவணன் பேசறேன்…”

“சொல்லுங்க டாக்டர்…”

“உடம்பு இப்ப எப்படிம்மா இருக்கு. தலைசுத்தல் இருக்குன்னு சொன்னீங்களே. இரண்டு நாளைக்கு முன்னால, நான் வீட்டுக்கு வந்தப்ப கொடுத்த மாத்திரையை சாப்பிட்டீங்களா?”

“இப்ப எவ்வளவோ பரவாயில்லை டாக்டர். நல்லாயிருக்கேன். என் மேல் இவ்வளவு அன்பு வச்சு நேரில் வந்து பார்க்கிறீங்க… போனில் விசாரிக்கிறீங்க… ரொம்ப நன்றி டாக்டர்…”

கமலத்தின் குரல் நெகிழ்கிறது. 

“என்னம்மா நீங்க? இது என் நண்பனுக்காக நான் செய்யறது. இந்நேரம் அவன் இருந்தா உங்களை இந்த அளவு பாதுகாப்பான். எனக்கும் அந்த கடமை இருக்கும்மா. சாந்தி வந்தாங்களா?” 

“இல்லை டாக்டர். வந்து ஒரு வாரம் ஆச்சு. அந்த வீட்டில் அவளுக்கு எத்தனையோ பிக்கல், பிடுங்கல் அதையெல்லாம் சமாளிச்சுதான் வாழறா… கையில் பிள்ளையை வச்சுக்கிட்டு, என் மகள் தனி மரமாக நிற்பதை பார்க்கும்போது… என்னால் வேதனையை தாங்க முடியலை”.

சிறிது நேரம் அந்தப் பக்கம் பதிலில்லாமல் இருக்க…

“டாக்டர் போனை வச்சுடவா?” 

“அம்மா, இன்னும் இரண்டு நாளில் சாந்தியை கூட்டிக்கிட்டு ஹாஸ்பிடல் வாங்க… எல்லா டெஸ்ட்டும் திரும்ப பண்ணிடுவோம்.”

“சரி டாக்டர்… சாந்திகிட்டே சொல்றேன்” போனை வைக்கிறாள்.

எவ்வளவு நல்ல மனுஷன். வீட்டிற்கு வந்தே பார்த்து போகிறார். கடவுள் அவர் வாழ்க்கையிலும் நிம்மதியை தரவில்லையே. மனைவியோடு விவாகரத்தாகி… தனியாக இருப்பதாக ஆஸ்பத்திரியில் பேசி கொண்டார்களே… மனம் மகளுக்காக மட்டுமில்லாமல், அந்த நல்ல மனிதருக்காகவும் வேதனைப்படுகிறது. 


தட்டில் சாதத்தை போட்டு குழம்பை ஊற்றியவள், அப்பளத்தை பொரித்தெடுத்து வந்து சாப்பிடும் கணவன் அருகில் உட்காருகிறாள்.

“அம்மா எங்கே கிரிஜா?”

“கொல்லையில் செடிகளுக்கு தண்ணீர் ஊத்தறாங்க…” 

“இப்ப உடம்பு பரவாயில்லை போலிருக்கு. பழைய மாதிரி வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க”. 

“ஆமாம் நீங்கதான் மெச்சிக்கணும். அந்த டாக்டர் உங்க மாப்பிள்ளையோட ப்ரெண்டாம்… ரொம்பவே கவனிக்கிறாரு. நாலு நாளைக்கு ஒரு தரம் வீட்டுக்கு வாறது என்ன. மாத்திரை கொடுக்கிறது என்ன, நல்ல ராஜ உபசாரம்தான் நடக்குது”. 

“பரவாயில்லை… இந்த அளவு அவங்களை கவனிக்க ஆள் இருக்கே அதை சொல்லு…” 

“அப்ப நான் என்ன அவங்களை கொடுமைப்படுத்தறேன்னு சொல்றீங்களா?”

“சே.. சே… அப்படியில்லை. நீ கவனிக்கிறதே அதிகம். போதுமா”.

“எனக்கென்னவோ அந்த டாக்டர் வீட்டுக்கு வர்றதில் ஏதும் உள்நோக்கம் இருக்குமோன்னு சந்தேகமாக இருக்கு”. 

“நீ யாரைத்தான் நல்லவங்கன்னு சொல்லியிருக்கே சரி போய் மோரை எடுத்துட்டு வா…” 

கணவனை முறைத்தவள், எழுந்து உள்ளே போகிறாள். 


“பரவாயில்லை சாந்தி. அம்மாவுக்கு இப்ப ப்ரஷர் கண்ட்ரோலில் வந்திடுச்சு. ஷுகர் மாத்திரை தவறாமல் சாப்பிடணும்” சொன்னவன்.

“அம்மா… இப்ப நீங்க நார்மலாகிட்டீங்க…”

“ரொம்ப நன்றி டாக்டர். எல்லாம் உங்க கைராசிதான்” -சிரிக்கிறாள் கமலம், 

“அம்மா சொன்னாங்க. நீங்க அடிக்கடி வீட்டுக்கு வந்து பார்த்தது… அக்கறையோடு சுவனிச்சுக்கிட்டது… நாங்க உங்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கோம்.” 

“தப்பு சாந்தி… நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது. என் நண்பன் திவாகர் இருந்து செய்ய வேண்டியதை நான் செய்யறேன். அவ்வளவு தான்”. 

“அப்ப நாங்க கிளம்பறோம் டாக்டர்.”

“நான் இன்னைக்கு உங்களை விடப் போறதில்லை. எனக்கும் ஓ.பி. முடிஞ்சாச்சு. என்னோடு நீங்க இரண்டு பேரும் இப்ப என் வீட்டுக்கு வாறீங்க”. 

திடுக்கிட்ட சாந்தி… 

“டாக்டர் நேரமாயிடும். அம்மாவை விட்டுட்டு… நான் எங்க வீட்டுக்கு போகணும். இன்னொரு நாளைக்கு வாறோம்…”

“அதெல்லாம் முடியாது. பத்து நிமிஷம். அப்புறம் நானே உங்களை ட்ராப் பண்றேன். என் மகள் மதுமிதாகிட்டே உங்களைப் பத்தி சொன்னதிலிருந்து.. அந்த ஆன்ட்டியை பார்க்கணும் கூட்டிட்டு வாங்க டாடின்னு ஒரே தொந்தரவு…” 

“போகலாம் சாந்தி… நமக்காக அவர் எவ்வளவு தடவை வீட்டுக்கு வந்திருக்காரு. லேட்டாச்சுன்னா உங்க மாமாவுக்கு போன் பண்ணி சொல்லிடலாம்”. 

“நாங்க வர்றோம் டாக்டர்.”

சாந்தியின் மறுப்பை மீறி கமலம் சொல்ல… சாந்தியால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை. 


“ஆண்ட்டி… நீங்கதான் சாந்தியா… இந்த பாட்டி பேரு கமலம் தானே… டாடி சொன்னாங்க…” 

ஐந்து வயது சிறுமி கண்கள் அகல பேச…

“என்ன படிக்கிறே மது?”

“ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு”. 

“ஒருநாள் பிரபு தம்பியை கூட்டிட்டு வர்றீங்களா?”

ஆச்சரியத்துடன் பார்த்தவள்… 

“பிரபுவை உனக்கு தெரியுமா?”

“டாடி சொல்லியிருக்காங்க”.

“சமர்த்துப் பொண்ணு…”

மதுமிதாவை வாரியணைத்து முத்தமிடுகிறாள். 

வந்து அரைமணி நேரத்திற்குள் அவள் எழுதிய ஏ.பி.சி.டி நோட்டுகள், டிராயிங்.. அவளுடைய டாய்ஸ் என எல்லாவற்றையும் சாந்தியிடம் காட்டி… அவளை அங்கு இங்கு நகரவிடாமல், அவள் மடிமீது உட்கார்ந்து கதை பேசி நெருக்கமாகிறாள். 

அதை பார்த்தபடி கமலம் கண்கலங்க உட்கார்ந்திருக்க… 

“என்னம்மா பார்க்கிறீங்க… என் மது அன்புக்கு ஏங்குகிறவ…” 

“அவ அம்மா என்னை புரிஞ்சுக்காம, பிரச்சினைகளை பெரிதாக்கி டைவர்ஸ் வாங்கிட்டு போயிட்டா… அதில் கொடுமைஎன்னன்னா… பெத்த மகளையே வேண்டாம்னு சொல்லிட்டா… இப்ப ஆயாவோட பராமரிப்பில்தான் என் மது வளர்ந்துட்டு வர்றா… என் தொழிலில் மகளோட நான் இருக்கிற நேரமே ரொம்ப குறைவு. என்ன செய்யறது. இதுதான் விதிங்கிறபோது ஏத்துக்கத்தானே வேணும்” – அவன் குரலில் விரக்தி தெரிகிறது. 

“கஷ்டமா இருக்கு தம்பி. நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. உங்களை வேண்டாம்னு சொன்னவளுக்காக… நீங்க ஏன் குழந்தையோடு கஷ்டப்படனும்”. 

“கல்யாணம்னு நினைச்சாலே பயமாயிருக்கு. வர்றவ என் மதுவை புறக்கணிச்சா திரும்பவும் பிரச்சினைகளோடு வாழ விரும்பலைமா”. 

“என்னையும் என் மகளையும் புரிஞ்சுக்கிறவ கிடைச்சாதான் நான் மறு கல்யாணத்தை பத்தியே நினைக்க முடியும்”. 

அவன் கண்கள் மதுமிதாவுடன் விளையாடும் சாந்தியை பார்க்க, கமலம் மௌனமாகிறாள்.. 

அத்தியாயம்-12

காலேஜிலிருந்து வந்த சுமதி, சுடிதாரிலிருந்து நைட்டிக்கு மாறியவள். அன்று க்ருபாகரனுடன் பேசியதை நினைத்து மனதிற்குள் சிரித்தவளாக… 

“சுமதி. சுமதி… இங்கே கொஞ்சம் வாம்மா…”

“இதோ வரேன்மா.”

ரூமைவிட்டு வெளியே வந்தவள், அப்பாவின் அருகில் சோபாவில் உட்காருகிறாள். 

“அண்ணி காபி கொடுங்க…”

குரல் தந்தவள்…. 

“என்னம்மா எதுக்கு கூப்பிட்டே?”

“நீ முதலில் காபி குடி. நல்ல விஷயம்தான் சொல்லப் போறேன்.” காபியுடன் வந்த அண்ணியை புரியாமல் பார்க்க, காபியை அவளிடம் கொடுத்தவள் உள்ளே போகிறாள். 

“சுமதி… உனக்கும் அண்ணனுக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகுதுடி…”

“புரியும்படி சொல்லும்மா.”

அங்கு வந்த தினகர்…

“எதுக்கும்மா புதிர் போடற. நம்ப வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு கல்யாணம் நடக்க போகுதுன்னு விபரமா சொல்லும்மா” சுமதியை பார்த்து புன்னகைக்க…

“என்னம்மா… அண்ணன் கல்யாணம் அது, இதுன்னு சொல்றாங்க.”

“ஆமாம் சுமதி. உனக்கும், அண்ணனுக்கும் ஒரே இடத்திலேயே மாப்பிள்ளை, பெண் பார்த்து முடிக்க போறோம். கோடீஸ்வர இடம். நீ செல்வ செழிப்பில் மகாராணி போல வாழப் போற. நீ அதிர்ஷ்டசாலி சுமதி”. 

“என்னை கேட்காம என் கல்யாணத்தை எப்படிம்மா முடிவு பண்ணுவே”. 

சுமதியின் குரலில் கோபம் தெரிய… 

“என்ன சுமதி. எதுக்கு கோபப்படறே. அம்மா உனக்கு நல்லதுதானே செய்யப் போறாங்க… அதுக்கு போய்…”

“அண்ணா நீ கொஞ்சம் சும்மா இருக்கியா… இங்க பாருங்கம்மா அண்ணனுக்கு கல்யாணம் பண்ணுங்க… என் கல்யாணத்தை பத்தி யாரும் பேச வேண்டாம்”. 

“உனக்கும் கல்யாண வயசு வந்தாச்சு. எங்க கடமையை நாங்க செய்யணும் இல்லையா…” 

சொன்ன அம்சவல்லி… 

“என்னங்க பேசாம இருக்கீங்க? அவளுக்கு எடுத்து சொல்லுங்க”.

கணவனை பார்க்கிறாள். 

“சுமதி… உன் நல்லதுக்குத்தான் சொல்றாங்கம்மா. பெரிய இடம். கோடீஸ்வர சம்பந்தம். பெண் கொடுத்து பெண் எடுக்க விருப்பப்படறாங்க. உன் அண்ணனுக்கும். உனக்கும் வாழ்க்கை அமோகமாக அமையப் போகுது. உன் எதிர்காலம் நல்லவிதமா அமையணும்னா அம்மா சொல்றதை கேளு”. 

சோபாவை விட்டு எழுந்திருக்கிறாள். 

“இப்ப என்ன நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லணும் அவ்வளவுதானே”. 

“ஆமாம்.”

“சரி. கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன். ஆனா நீங்க பார்க்கிற மாப்பிள்ளையை இல்லை… என் மனசுக்கு பிடிச்சவரை… நான் உயிருக்கு உயிராக காதலிக்கிறவரை..” 

“என்னடி சொல்றே?”

“ஆமாம். நான் காதலிக்கிறவரை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றேன்.” 

“அது. ஒரு காலத்திலும் நடக்காது. பாவி நீயும் குண்டை தூக்கி போடறியே?”

ஒரு கணம் திடுக்கிட்ட தினகர்… நிலையை உணர்ந்து…

“அம்மா… ப்ளிஸ் கொஞ்சம் அமைதியா இரு. நான் சுமதிகிட்டே பேசறேன்”. 

எழுந்து அவளருகில் வருகிறான். 

‘சுமதி… எங்களை நீ முதலில் புரிஞ்சுக்கணும். இந்த காதல் எல்லாம் இந்த வயசில் இனிக்கும். நாளைக்கு வாழ்க்கை சரியாக அமையலைன்னா எவ்வளவு கொடுமை தெரியுமா. இப்ப உனக்கு பார்த்திருக்கிற இடம், கார், பங்களா, தியேட்டர், பெட்ரோல் பங்கின்னு எக்கச்சக்க சொத்துக்களுக்கு வாரிசு… நீ ராணி மாதிரி வாழப் பிறந்தவ சுமதி. யாரோ ஒருத்தன் காதல்னு சொல்லி பழகினா.. நீ ஏமாந்துட கூடாது…” 

“போதும் உன் அறிவுரை. உனக்கு கோடீஸ்வர இடம் வேணுமின்னு நினைச்சால் நீ அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாக போ… ஆனா… என்னை வற்புறுத்தாதே. ஏழையானாலும் என் மனசுக்கு பிடிச்சவனோடு வாழ்ந்துட்டு போறேன்”

“எவ்வளவு திமிர் பார்த்தியா… உங்க அண்ணன் காதலில் விழுந்து. வாழ்க்கையே தொலைச்சுட்டு போய் சேர்ந்தான்… அந்த வயிற்றெரிச்சலே இன்னும் ஆறலை. அடுத்து நீயா… இந்த வீட்டில் இனி காதல்ங்கிற வார்த்தைக்கே இடமில்லை. அப்படி உனக்கு காதல்னா பெரிசுன்னு நினைச்சு… அவனை கல்யாணம் பண்ண முடிவு பண்ணினா… உன் கல்யாணத்தைப் பார்க்க இந்த வீட்டில் ஒரு ஆள் இருக்க மாட்டாங்க. குடும்பத்தோடு தற்கொலைபண்ணிக்குவோம்.”

“நீ முகத்தில் முழிக்காதே போயிடு, நீயெல்லாம் என் மகளே இல்லை. நான் ஒரு பாவி… கடைசியில் பெத்தது எல்லாம் எனக்கு எதிராக போய் நான் பட்டமரமா நிக்கப் போறேன்… கடவுளே…”

மனம் வெதும்பி தொண்டையை உயர்த்தி கத்திய அம்சவல்லி…அடுத்த கணம்…

“ஐயோ அம்மா… நெஞ்சு வலிக்குதே… என்னமோ செய்யுதே..” புலம்பியவளாய் கண்செருகி மயங்க… அருகிலிருந்த சிவனேசன் மடியில் தாங்க.. தினகர் பதறியபடி அம்மாவின் அருகில் ஓடி வருகிறான்.

– தொடரும்…

– பிறை தேடும் இரவு (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 2014, செல்வி பெண்கள் நாவல், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *