பிறழ் வாழ்க்கை மனைவிகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 7,508 
 
 

காலை எட்டுமணி.

சாரதா அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தபோது, அந்த இறப்புச் செய்தி கிடைத்தது. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதைவிட அந்த இறப்பிற்கு தான் போகவேண்டுமா என்கிற குழப்பம்தான் அவளிடம் அதிகம் ஏற்பட்டது.

குழப்பத்துடன் கணவன் சுரேந்தரிடம் சென்று, “என்னங்க ராஜேந்திரன் இன்று காலை ஏழுமணிக்கு அவர் வீட்ல இறந்துட்டாரு. எனக்கு இப்பதான் போன் வந்தது” என்றாள்.

“பாவம், குடிச்சு குடிச்சு லிவர் சிரோசிஸ்ல செத்தே போய்ட்டார்…அளவோட குடிச்சு கட்டுப்பாடா இருக்கத் தெரியல. அவர் உடம்பு தேறாதுன்னு எனக்கு அப்பவே தெரியும். ஒரு மரியாதை நிமித்தம் நீ போய்ட்டு வரணும் சாரதா…அதுதான் முறை. .நானும் உன்கூட வந்தா அது நல்லா இருக்காது, நீ உடனே கிளம்பு” என்றான்.

சாரதா தன் மானேஜரை மொபைலில் தொடர்புகொண்டு ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டாள். குழந்தைகளை குளிப்பாட்டி, யூனிபார்ம் மாட்டிவிட்டு, டிபன் ஊட்டி அதுகளை ஆட்டோவில் ஏற்றி ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, சுரேந்தருடன் காரில் கிளம்பிச் சென்று இரண்டு தெருக்களுக்கு முன்பே இறங்கிக்கொண்டு நடந்தாள். முகத்தில் சோகத்துடன் பவ்யமாக புடவையை இழுத்துப் போத்திக்கொண்டு அந்த வீட்டினுள் சென்றாள்.

வீட்டில் ஏற்கனவே பலர் கூடியிருந்தார்கள். ராஜேந்திரனை ஒரு கண்ணாடி சவப் பெட்டியில் வைத்திருந்தார்கள். நெற்றியில் திருமண் இடப்பட்டிருந்தது. மூக்கில் பஞ்சுவைத்து, கால் கட்டைவிரல்களை சேர்த்துக் கட்டியிருந்தார்கள். பெட்டியின் மீது இரண்டு ரோஜா மாலைகள் அவரின் முகம் தெரியும்வண்ணம் ஒதுக்கி கிடத்தப் பட்டிருந்தது. அருகே ஒரு குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது.

ராஜேந்திரனின் இரண்டு சகோதரிகளும் சாரதாவைப் பார்த்ததும் பெரிய குரலில் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தனர். சாரதா சவப் பெட்டிக்கு அருகில் சென்று அமைதியாக நின்றாள். அழவில்லை. அழுகை வரவில்லை. கூடியிருந்த அனைத்து உறவினர்களும் சாரதாவை விரோதமாகப் பார்த்தனர்.

சாரதா அடுத்த அறைக்கு சென்று மெளனமாக அமர்ந்துகொண்டாள்.

அந்த அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் சாரதாவும் ராஜேந்திரனும் சிரித்தபடி இருந்தனர். கல்யாணம் ஆன புதிதில் 2001ல் எடுக்கப்பட்ட புகைப்படம். ஒருவேளை அவனுடன் அதுதான் அவளுடைய கடைசிச் சிரிப்போ என்னவோ?

அந்த அறையின் தனிமையில், தன் வாழ்வியல் திருப்பங்களை சாரதா கசப்புடன் நினைத்துப் பார்த்தாள்….

ஜாதகம் பார்த்து பெரியோர்களின் ஆசீர்வாதத்துடன் முறைப்படிதான் அவர்கள் திருமணம் நடந்தது. திருமணம் ஆன இரண்டாவது நாளே, ராஜேந்திரனின் குடிப்பழக்கம் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவனை திருத்த முயன்று தோற்றாள். அவனின் தொடர்ந்த குடிப்பழக்கம் சாரதாவை அவனிடமிருந்து விலகச் செய்தது. அவனும் ஒப்புக்கொண்டதால் வெகு எளிதாக விவாகரத்தும் கிடைத்தது. அவன் மாறவில்லை. மாற முயற்சிக்கவும் இல்லை. தொடர்ந்து குடித்து குடித்து தற்போது இறந்தும் விட்டான். சாரதாவிடம் ஒருநாள்கூட அவன் அன்பாக, பாசமாக நடந்து கொண்டதேயில்லை. நல்லவேளையாக ராஜேந்திரன் மூலமாக சாரதாவுக்கு குழந்தை கிடையாது.

விவாகரத்துக்குப் பிறகு அடுத்த இரண்டு வருடங்களில் சுரேந்தரை முறைப்படி திருமணம் செய்துகொண்டு தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டாள். அவன் மூலம் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பெற்றுக்கொண்டாள். தான் குடிப்பதேயில்லை என்று சத்தியம் செய்துதான் சாரதாவை மணந்து கொண்டான் சுரேந்தர். ஆனால் அது சுத்தப்பொய் என்பது அவளுக்கு நாளடைவில் புரிந்துபோனது. ராஜேந்திரனைப் போன்று தினமும் தொடர்ந்து குடிக்காமல் அவ்வப்போது குடிப்பான். அது ஒன்றுதான் ஆறுதல். அவ்விதம் குடிக்கும்போது தான் என்ன பேசுகிறோம் என்று வரையறை இல்லாமல் குதர்க்கமாக பேசுவான். அடிக்கடி ராஜேந்திரனையும் அவளையும் இணைத்து அசிங்கமாகப் பேசுவான். குடிவாசனையுடன் அவளை முயங்குதலுக்கு முனைவான். அவன் குடித்தால் சாரதாவுக்கு நரக வேதனைதான்.

முயங்குதல் என்பது பெண்களின் மனம் சம்பந்தப்பட்டது, வெறும் உடல் மட்டும் சம்பந்தப் பட்டதல்ல என்பது ஆண்களுக்குப் புரியவே புரியாதா? அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா… தனக்குத் தெரிந்த இரண்டு ஆண்களுமே ஏன் இப்படி..! என்று அவ்வப்போது நினைத்து சாரதா வெதும்புவாள்.

ஒரு மனைவி தன் கணவனிடம் வெறும் அன்பையும், நல்ல புரிதலையும்தான் எதிர்பார்க்கிறாள். அந்தப் புரிதலின் விளைவாக கணவனிடம், அவனின் தேவைக்காக உடல் ரீதியாகவும் தன்னையே பாசத்துடன் அர்ப்பணிக்கிறாள். புரிதலுடன் அன்பும், வாஞ்சையும் தன்னிடம் தொடர்ந்து காட்டப்படும்போது கணவனிடம் ஏற்படும் ஆசையில் மனைவி உள்ளக் கிளர்ச்சி அடைகிறாள். அவ்விதம் ஏற்படும் உள்ளக் கிளர்ச்சியில் உண்டாகும் கலவிதான் ஏகாந்தமானது. அதுதான் உண்மையான தாம்பத்யம். மற்றவைகள் எல்லாம் வெற்று முயங்குதல்களே…!

ஆனால் ஒரு கணவன், தன் மனைவியை முதலில் ஒரு பெண்ணாகத்தான் பார்க்கிறான். அந்தப் பெண்ணிடம் முதலில் எதிர்பார்ப்பதே அவளின் உடம்பைத்தான். தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் ஆவலும், அவசரமும், எதிர்பார்ப்பும்தான் ஆண்களிடம் அதிகம். மனைவியாக மதித்து அவளைப் புரிந்துகொள்ளும் முனைப்பு அவனுக்கு இரண்டாம் பட்சமே….

மனைவி என்பவள் ஒரு போகப் பொருள். கணவன் ஆசைப்பட்டால் மனைவி அவனுடன் படுக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத நியதி போலும் என்று நினைத்துக் கொண்டாள்.

அதனால் சுரேந்திரனை அவளால் கடினப்பட்டு ஜீரணித்துக் கொள்ளத்தான் முடிந்தது. ஏனென்றால் தன் இரண்டு குழந்தைகளுக்காக அவனிடம் அடங்கிப் போகத்தான் வேண்டும். இவனையும் விவாகரத்து என்று கிளம்பினால் ஊர் சிரிக்கும். நகைப்புக்கு இடமாகிவிடும். இவனிடம் வீரம் காட்ட முடியாது. விவேகத்துடன் பொறுமை காக்க வேண்டும். பொறுமை ஒன்றுதான் அவளைக் காப்பாற்றும்.

பகல் மூன்று மணிக்கு ராஜேந்திரன் உடலை மாயானத்திற்கு எடுத்துச் சென்றார்கள். அதைத் தொடர்ந்து, இந்துக்கள் முறைப்படி எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளியே வந்தாள். வெயில் சுள்ளென அடித்தது. தெருமுனைவரை நடந்து சென்று, அரைமணிநேரம் காத்திருந்த பிறகு ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்துசேர நாலரை மணியாகிவிட்டது.

அதே நேரத்தில் குழந்தைகளும் வீடு வந்து சேர்ந்தன. அம்மாவை அவ்வளவு சீக்கிரம் வீட்டில் பார்த்ததும் குழந்தைகள் சந்தோஷத்தில் ஓடி வந்து கட்டிக் கொண்டன. சாரதா அவர்களுக்கு யூனிபார்ம் களைந்து அவர்களை குளிக்கச் செய்து, தானும் குளித்தாள்.

“ஏம்மா….கார்த்தாலதான எங்களுக்கு குளிச்சுவிட்ட இப்ப எதுக்கு மறுபடியும்?” மூத்தவன் கேட்டான்.

“யாராவது செத்துப் போயிருப்பாங்கடா.” மகள் சொன்னாள்.

“எத வச்சுடி சொல்ற…யார் அப்படிச் சொன்னா?” சாரதா கேட்டாள்.

“இல்லம்மா போனவாரம் அப்பா ஆபீஸ் ஜி.எம். செத்துப்போனதும், அப்பா அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்து, நம்ம வீட்ல குளிச்சாரில்லையா அதை வச்சு சொன்னேன்.”

சாரதா பேச்சைத் திருப்பினாள்.

“ஹோம் ஒர்க் எடுங்க” என்றாள். அவர்களின் ஹோம் ஒர்க்கையும் மேற்பார்வை பார்த்துக்கொண்டு, இரவுச் சமையலையும் முடித்தாள்.
வெயிலில் வந்து, தலைக்கு குளித்ததால் உடல் அசதியாக இருந்தது. இரவு சீக்கிரம் படுத்து நன்றாகத் தூங்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

குழந்தைகளை சாப்பிட வைத்து, சற்றுநேரம் டி.வி.பார்க்க அனுமதித்தாள்.

இரவு எட்டரை மணிக்கு சுரேந்தர் வீட்டுக்கு வந்தான். பெட்ரூமிற்கு சென்று உடை மாற்றியபடி, “சாரு…” என்று அழைத்தான்.

சாரதா உள்ளே சென்றாள். “காலைல போன காரியம் என்ன ஆச்சு? எத்தன மணிக்கு பாடிய எடுத்தாங்க?” என்றான்.

குடித்திருந்தான். வீச்சம் குடலைப் புரட்டியது.

“மூன்று மணியாகிவிட்டது. ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வரும்போது நாலரையாகிவிட்டது. எனக்கு தலை வலிக்கிறது. சீக்கிரம் சாப்பிடவாங்க….சாப்பாட்டுக் கடையை முடிச்சுட்டு நான் தூங்கணும்.”

“என்னது நீ தூங்கணுமா? குழந்தைகளை முதல்ல தூங்கவை. இன்னிக்கி நீ எனக்கு வேணும்.”

:இன்னிக்கி வேண்டாங்க…ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க”

“என்னடி அந்தாளு புட்டுகிட்ட துக்கமா? பங்காளி போய்ச்சேர்ந்த நாளை நான் கொண்டாட வேண்டாமா? சீக்கிரம் ரெடியாகு.”

‘அவ்வளவுதான். குடித்திருக்கும் இவனைச் சமாளிப்பது கஷ்டம். இங்கிதம் புரியாத, பண்பாடு தெரியாத, வறட்டு ஜென்மங்கள்’ மனதில் ஆயாசம் ஏற்பட்டது.

அன்று இரவு அவன் அவளை அத்துமீறி ஆக்கிரமித்தான். சாரதாவால் அதை எதிர்க்க முடியவில்லை. இயலாமையால் தன்னுள் ஏற்பட்ட அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள். தெரு நாயைவிடக் கேவலமாக தான் வாழ்வதாக நினைத்துக் கொண்டாள்.

கோர்ட்டில் பொய்சாட்சி சொன்னால் பிறழ் சாட்சி என்பார்கள். பெரும்பாலான மனைவிகளின் வாழ்வியல் முறையும் பிறழ் வாழ்க்கைதான் என்று தன்னையே சமாதானப் படுத்திக்கொண்டு, சற்று நேரத்தில் தூங்கியும் போனாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “பிறழ் வாழ்க்கை மனைவிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *