பிறக்காத நாட்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 9, 2024
பார்வையிட்டோர்: 447 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சர்வதேசக் குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு, அந்தப் பையனின் பிறந்ததினத்தை, அன்று பிறக்காத சொந்தக்காரர்கள், சொந்தம் கொண்டாடியவர்கள் ஆகிய அத்தனை பேரும் சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள். குடிசைகளின் பிரச்னைகள் பத்தி அதிக அக்கறை செலுத்தும் பிரபல சமூக சேவகியின் பிள்ளையாண்டான் அவன். ஒன்பது வயதில் இத்தனை துருதுருப்பு, இத்தனை இன்டலிஜென்டாக யாரும் இல்லை என்று அங்கு வந்திருந்தவர்கள் அத்தனை பேருமே சொன்னார்கள். அதிலும் தாஜ் கோரமண்டல் உட்பட பல நட்சத்திர ஹோட்டல்களில், குடிசை வாழ் மக்களின் பிரச் ைனக ைள அலசி, புகைப்படக்காரர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் திருமதி, வளர்மதி நாகராஜனுக்கு அன்று சேவை செய்ய வந்தவர்கள் போல் அத்தனை முக்கியப் புள்ளிகளும் குழுமியிருந்தார்கள். ஒரு சிலர், தங்களின் பிறந்த நாட்களும் அன்றுதான் என்றாலும், குழந்தை ஆண்டை முன்னிட்டு வந்திருப்பதாகவும் பீற்றிக் கொண்டார்கள்.

ஒருவகையில் பார்த்தால், இந்த நாட்டில் வறுமை இல்லை என்று நினைப்பது போலவும், இன்னொரு வகையில் பார்த்தால், ஏழ்மையைக் கிண்டல் செய்வது போலவும், கட்டிளம் பெண்களின் முகங்களைவிட பளபளப்பாக இருந்த மொஸாயிக் தவிர, நிலத்தில் மண்வெட்டும் போது, தவறிப் பட்ட மண்வெட்டியால் நீருற்றுப் போல் ஒளிரும் விவசாயியின் ரத்தம் போல் பளிச்சென்று கண்சிமிட்டியது. கம்பீரமான காம்பவுண்ட் சுவருக்கு உள்ளே, கன கம்பீரமான அந்த பங்களாவில் வடிாமியானா பந்தல். தேவையில்லாத அளவுக்கு, பலவிதமான டேய்களுக்கென்றே அமைக்கப்பட்டது போல் தோன்றிய முன் பகுதியில், ஆடும் நாற்காலியில் ஆடாமல் சிலரும், ஆடாத நாற்காலியில் ஆடிக்கொண்டு சிலரும் அமர்ந்திருக்க, மிஸஸ். ராமநாதன், மிஸஸ். மார்த்தாண்டன் உட்பட பலரின் மிஸஸ்கள், பையன் கேக் வெட்டப் போவதை மிஸ் பண்ன விரும்பாதவர்கள் போல், நெருக்கியடித்து நின்றார்கள்.

சுவர்க் கடியாரம் ஏழுதடவை ஒலித்தபோது, ஹேப்பி பர்த் டே மெனி மெனி ரிட்டன்ஸ் ஆப்தி டே என்று கடியார ஒலிக்குப் போட்டியாக பிரமுகர்களும், பிரமுகிகளும் சத்தம் போட்டபோது, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலை மூன்று மணிக்குப் பிறந்தாலும், பிரமுகர்களின் வருகைக்குச் சாதகமாகவும் காலைக் குளிரை முன்னிட்டும், ஏழு மணிக்கு கேக் வெட்டுவதற்காக, பாலியெஸ்டர் துணியோடு பாதி வீங்கிப் போனவன் போல் தோன்றிய குமார், கேக் கில் வைக்கப்பட்டிருந்த ஒன்பது மெழுகுவர்த்திகளையும் ஊதிவிட்டு, ஒரு கத்தியை எடுத்து, வெட்டிய போது கரவொலி எதிரொலிக்க, அதற்கு சளைக்காதனபோல் ரேடியோகிராமில் மன்னவன் பிறந்தானடி: என்ற பாட்டு ஒலித்தது.

மூன்று மணிக்குப் பிறந்த பையனின் பிறந்த நாளைக் கொண்டாட ஏழு மணிக்கு வந்த உறவினர்களுக்கு உண்ணக் கொடுக்க அதிகாலை இரண்டு மணிக்கே வந்துவிட்ட காத்தாயி, தன் பத்து வயதுப் பையன் முனுசாமியுடன் சற்று ஒதுங்கி நின்றாள். பங்களாவில் மொலைக் தரையைப் பெருக்கித் துடைத்துவிட்டு, நாற்காலிகளை வரிசையாகப் போட்டு விட்டு, எவர்சில்வர் தட்டுக்களை கழுவிவிட்டு, சமையல்காரருக்கு மைதாவில் இருந்து சர்க்கரை வரை எடுத்துக் – கொடுத்து ஒத்தாசை செய்தவள். அவள் பக்கத்துக் குப்பத்தில் வாழ்பவள் என்றாலும், அவளும் ஒரு வகையில் பங்களாகாரிதான் பயனற்றதாகக் கருதப்படும் இரவுப் பொழுதை மட்டுந்தான் குடிசையில் கழிப்பவள். பயனுள்ள பகல் பொழுதை, பங்களாவில் செலவிடுபவள். பாத்திரம் தேய்ப்பதிலிருந்து எஜமானருக்கு அலுவலகத்திற்குச் சோறு கொண்டு போவது, மாவு ஆட்டப்போவது, குழந்தைகளைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளுவது, துணிமணிகளைத் துவைப்பது முதலியவை, அந்த அரைப் பங்களா வாசியான காத்தாயியின் பொழுதுபோக்குகள். அப்படிப்பட்ட காத்தாயி, தான் பெற்ற பிள்ளைக்கு இப்படி ஒரு விழா இருந்திருந்தால்கூட, அப்படி மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டாள். வாயெல்லாம் பல்லாக, தன் பையனின் வலதுகைப் பெருவிரலை இடதுகையால் நெருடி விட்டுக் கொண்டே நின்றாள்.

அவள் அங்கே நிற்பதை அபசகுனமாக நினைத்தோ அல்லது ஆக வேண்டிய காரியங்கள் ஆக வேண்டுமென்று நினைத்தோ மிஸஸ் வளர்மதி காத்தா!. இப்படி நின்னா என்ன மீனிங்? போய்த் தட்டுக்கள் கொண்டு வா என்று சொன்னதும், காத்தாயி உள்ளே ஓடினாள்.

ஒட்டுப்போட்ட அன்ட்ராயருக்குள்ளே கால்களையும் ஏதோ ஒரு காடித்துணிச் சட்டைக்குள் கைகளையும் விட்டுக் கொண்டு நின்ற முனுசாமி, மிஸஸ் வளர்மதி ஏன் தன்னைக் கோபமாகப் பார்க்கிறாள் என்று புரியாமல், அதே சமயம், அந்தப் பார்வைக்குப் பயந்தவன் போல், பால்கனியைத் தாங்கிப் பிடிக்கும் ஒரு துணுக்கருகே மறைய முயற்சி செய்தான்.

அவனுக்கு ஒரே ஆச்சரியம். நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் அந்தப் பையனை – குமாரை அதிசயமாகப் பார்த்தான். கையில் மினுங்கும் கடிகாரம்; கழுத்தில் டாலர் செயின்; கண்ணைக் கூசவைக்கும் சட்டை, வைர மோதிரம், இவை போதாதென்று பலர் கண்ணைக் கவரும் பார்சல்களில் இருந்து பிரித்து எடுத்துக் கொண்டிருக்க பொம்மைகள், கஸ்டம்ஸில் இருந்து வந்த துணிகள் ஆகியவற்றை, கீழே விழப் போவதுபோல் தோன்றிய, தன் அன்டிரரயரைக் கைகளால் தூக்கிப்பிடித்துக் கொண்டே கண்களைக் குமார் மீது நிறுத்தினான்.

இதற்குள் படகுக்கார் ஒன்றில் இருந்து ஒரு இளம் பெண்ணும், அவளின் ஆண் சோடியும் இறங்கினார்கள். ஒரு அழகான பார்சலை வைத்துக்கொண்டு அந்த நங்கை சிரித்தவாறு வந்தபோது குமார், குட்மார்னிங் ஆன்டி என்றான்.

‘ஆன்டிக்கும் அவனிடம் விளையாட ஆசை’.

‘குட்மார்னிங் டியர். கமாண்ட் டெல்மா…ஒட் இஸ் இன்ஸைட் தி பார்சல்?’

“சாக்லேட்’

‘இல்லே. டோன்ட் பி. ஏ கிளட்டன்.”

‘ஷர்ட்!’

‘நோ’

‘டாய்’

‘நோ. நோ…’

‘யூ டெல்’

‘நோ… யூ சுட்… டெல் யுவர் திங்.’

குமார் யோசித்தான். பிறகு டாலர் செயின் என்றான். ஆன்டி, கையைத் தூக்கி ‘ஸ்ரண்டர்’ என்றாள். உடனே எல்லோரும் சிரித்தார்கள். “குமார் இஸ் ஏ பிரில்யெண்ட் பாய்” என்று ஒருத்தி சொன்னபோது, மிஸ்டர் நாகராசன் ‘லைக் ஹிஸ் டாடி என்றார். உடனே மிஸஸ் நாகராசன் “நோபடி வில் பிலிவ்.” என்று சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். ஆன்டிக்காரி பார்சலைப் பிரித்தாள். அதற்குள் ஒரு பார்சல், அதைப் பிரித்தால் இன்னொரு பார்சல், கடைசியில் ஒரு ஆறுபவுன் டாலர் செயின் கிடைத்தது. இவ்வளவு பெரிய பார்சலுக்குள் ஒரு சின்னத் தங்கச் செயின் இருப்பதைக் கண்டுபிடித்த குமாரின் இன்டலிஜென்சியை எல்லோரும் பாராட்டிச் சிரித்தபோது, ஒருவர்.பின் ஒருவராக, கார்களிலும் ஸ்கூட்டர்களிலும் வந்து கொண்டிருந்த சிட்டி எலைட்கள் குமாருக்கு தந்தப் பிள்ளையார், செஸ்போர்ட், சிங்கிப் பொம்மை போன்ற சாமான்களை அவனிடம் காட்டி, அவன் அம்மாவிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தூண் மறைவில் பாதி உடம்பை மறைத்துக் கொண்டிருந்த முனுசாமிக்கும் குமாருக்கு ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டும் என்று ஆசை. இந்த குமாரையும் அவன் இங்கிலீஸையும் பார்த்து, கேட்டு, ரசிக்கும் இந்தக் கார்ப்பரேஷன் பள்ளிப்பையன் அவனை ஒரு செளக்கியதாருக்குரிய பெளவியத்துடன் பார்ப்பான். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ் ஆகிவிடுவான் என்று இப்போதே அனுமானிக்கப் பட்டிருக்கும் குமாரும், தன் வயது ஏழைச் சிறுவர்களை, அறிந்தோ அல்லது அப்பா அம்மாவால் அறிவுறுத்தப்பட்டோ கம்பீரமாகத்தான் பார்ப்பான். ஒரு தடவை குடிசைப் பையன் கொடுத்த சாக்லேட்டை வாங்கியதற்காக, பெற்றோரிடம் முதல் முறையாக அடிபட்டிருந்தான். இதனால் ஏழைப் பையன்களிடம் பழகுவதற்கு அதுவே கடைசித் தடவையாயிருந்தது.

குமாரை, ஆச்சரியமாகப் பார்த்த முனுசாமி தானும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதற்காக, லேசாக நகர்ந்தான்; நடந்தான். பின்னர் ஒடிப்போய் நேற்றிரவு தம்பியிடம் திருடியிருந்த ஒரு நிலக்கடலை மிட்டாயை எடுத்து அதில் படிந்திருந்த துளசியை வாயால் ஊதிவிட்டு குமாரின் கைக்குள் திணித்தான். எதிர்பாராத இந்நிகழ்ச்சியை மற்றவர்கள் ஆதங்கத்துடன் பார்த்தபோது, குமார் அந்த மிட்டாயைத் துக்கி வீசி எறிந்துகொண்டே ‘டர்ட்டி ஃபெல்லோ. கிவ்விங் டர்ட்டி திங்’ என்று சொல்லிவிட்டு அப்பாவைப் பெருமையோடு பார்த்தான். எந்தத் தெருப்பிள்ளையாண்டானாவது எதையாவது கொடுத்தால் இப்படித்தான் எறிய வேண்டும் என்று ஒரு முறை செய்முறைப் பயிற்சி மூலம் விளக்கிக் காட்டிய தந்தை இப்போது கைகளைப் பிசைந்த போது, குமார் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற அவனறியாத பழமொழியை நிறைவேற்றிய திருப்தியில் அம்மாவையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற லட்சிய உந்தலில் ‘டர்ட்டிஃபெல்லோ. கெட் அவுட் மேன் என்று கத்தியபோது, பலர் புரியாமலும் கொஞ்சம் சங்கடமாகவும் விழித்த போது, ஆன்டிக்காரி ஐதிங்… நம்ம குமார் ஐ.பி.எஸ். சர்வீஸுக்குத்தான், ஃபிட்’, என்று சொன்னதும் எல்லோரும் சிரித்தார்கள். பலர் ஸ்டேட்மெண்டை வழிமொழிந்தார்கள்.

“எஸ்.எஸ் இவனுடைய டெம்பரமெண்டுக்கு போலீஸ் வேலைதான் லாயக்கு”

“போலீஸ்லயும். இவன் லா அண்டு ஆர்டர் பிராஞ்சுக்கு ரொம்பப் பொருத்தம். டர்ட்டி ஃபெல்லோன்னு எப்படி சவுட் பண்றான் பாருங்க!”

‘சவுட் பண்ணும்போது. அவன் முகத்தைப் பார்த்தீங்களா? இப்பவே ஐ.பி.எஸ். வாங்கிட்டவன் போலில்ல?’

‘எனக்கென்னவோ… ஹறி வில் மேட் பார் எ டாக்டர்னு’ நினைக்கிறேன்?’

“டர்ட்டியா வரவங்களையே சகிச்சுக்க முடியலே இவனால, டர்ட்டி ஆபரேஷன்களை பண்ண முடியுமா?”

உடனே எல்லோரும் சிரித்தார்கள். குமாரைப் பார்த்துப் பெருமையோடு சிரித்தார்கள். முனுசாமியைப் பார்த்து எரிச்சலோடு சிரித்தார்கள். முனுசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களது சொற்கள் காதில் விழுந்தாலும் அவற்றின் அர்த்தம் மூளையில் ஏறவில்லை. என்றாலும் தன்னைப் பரிகசிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு தன்னைத்தானே தள்ளிக்கொண்டு, பொங்கிவந்த அழுகையை அடக்கிக் கொண்டு சிறிது தூரம் நடந்து, செர்வண்ட்ஸ் குவார்ட்டர்ஸ் அருகேபோய் நின்று கொண்டான்.

காத்தாயி வந்து விட்டாள். அவளும் இன்னும் இரண்டும் பேருமாகக் கொண்டு வந்த தட்டுக்களை, விருந்தாளிகள் வாங்கிக்கொண்டு, உதட்டில் பட்டும் படாமலும் கடித்துக் கொண்டு, ஜோக்குகளாக சிலவற்றைச் சொல்லிக் கொண்டு, சிரிப்புக்களாக உதடுகளைப் பிதுக்கிக் கொண்டு நின்றார்கள்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, காத்தாயி, எஜமானியம்மாள் கொடுத்திருந்த சில தின் பண்டங்களை முந்தானையில் வைத்துக்கொண்டு தீண்டப்படாதவன்போல் ஏதோ ஒரு தார்மீகக் கோபத்துடன் நின்று கொண்டிருந்த முனுசாமியின் அருகில் வந்து இரண்டு லட்டுகளில் ஒன்றை நீட்டினாள். முனுசாமி அதை வாங்கி, குமார் நின்ற திசையை நோக்கி வீசியடித்த போது, காத்தாயி ஒன்றும் புரியாமல் விழித்து விட்டுப் பிறகு அதட்டினாள்.

‘ஒனக்குப் பைத்தியமாடா’

‘அவன் மட்டும் நான் கொடுத்த நிலக்கடலை மிட்டாய வீசலாமோ? அந்த லட்டையும் வீசணும்’

‘புரியும்படி சொல்டா’

‘நானு ஆசையோட குமார்கிட்ட, மிட்டாய் குடுத்தேன். நீயே சொல்லும்மா எல்லாரும் எதையோ கொடுத்தாங்கன்னு நானும் குடுத்தா.. அவன். இங்லீசுல்ல திட்டிக்கிட்டு வீசுறான். அல்லாரும் என்னப்பார்த்து சிரிக்காங்கோ… அந்த லட்ட வீசும்மா காத்தாயி புரிந்து கொண்டாள். மகனிள் ஆனைக்குக் கட்டுப்பட்டவள்போல் எஞ்சியிருந்த எச்சிப் பலகாரங்களை காக்கை, குருவி தின்னட்டும் என்பது போல், பங்களாவின் காம்பவுண்ட் சுவரில் வைத்துவிட்டு மகனின் தோளின்மேல் கைபோட்டுக் கொண்டே குடிசையைப் பார்த்து நடந்தாள். அழப்போவதுபோல் இருந்த முனுசாமியின் கன்னத்தை வருடிக் கொண்டே,

‘கவலைப்படாதேப்பா. கண்ணு. ஒனக்கு அம்மா பிறந்த நாள் வைக்கிறேன்’ என்றாள்.

‘நிஜமாவா’

‘நிஜமாவே!’

‘நான் எப்பம்மா பிறந்தேன்?’

‘மாசி மாதம் மூனாந்தேதி’

‘மாசின்னா இங்கிலீஸுக்கு என்ன மாதம்மா?’

‘ஏண்டா இல்லாத பொல்லாததைக் கேக்குற…’

‘அடுத்த புதன்ல உன்னோட பிறந்த நாளு’.

‘கேக் வெட்டணும்மா’

‘வெட்டலாம்’

‘புதுச் சொக்கா’

‘கண்டிப்பா’

‘ஏமாத்த மாட்டியே’

‘சும்மா வாடா’

குடிசைக்குப் போன காத்தாயி, சொன்னதை மறக்க முடியாத அளவுக்கு முனுசாமி அவளைக் குடைந்து கொண்டிருந்தான். கொத்து வேலைக்குப் போகும் கணவனிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். முனுசாமிக்கு பிறந்த நாள் வைக்கணும், கேக் வாங்கிட்டு வா…’

‘ஒன்கு பைத்யமா மே’

‘பிள்ளக்கி பொறந்தநாள் வைக்காட்டி பைத்தியம் பிடிச்சிடும்’

‘அப்பன் கோவணத்துல கிடக்கப்போ.. பிள்ள இழுத்து மூடுன்னானாம்’.

‘அந்தக் கதயே வானாம். மொதலாளி கிட்ட என்னா சொல்லுவியே – தெரியாது. குய்ந்தக்கி ஒரு வடிர்ட் வாங்கணும், கேக் வாங்கணும்.’

‘அப்புறம்.’

‘அப்புறமா? அப்புறம் ஒனக்காச்சு. இல்லன்னா எனக்காச்சு. ஆமாம்!’

மாசி மாதம் இரண்டாம் தேதி இரவில் காத்தாயி புருஷன் பதினைந்து ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, “இனிமேல். பிறந்தநாள். அது இதுன்னு சொன்னாக்கால்… மவளே…. அப்புறந் தெரியுஞ் சேதி… பதினைஞ்சி ரூபாய குடுத்துக்கிட்டே மொதலாளி கேக்காத கேள்வில்லாம் கேட்டுப் புட்டான் என்று எரிந்து விழுந்தான்.

பேச்சு வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த அவளின் இரண்டாவது மகள் காந்திமதி, ‘நான் எப்போம்மா பிறந்தேன்’ என்றாள் சாதாரணமாக, காத்தாயியும் சாதாரணமாகச் சொன்னாள்.

‘நீயா. இவன் பிறந்து. சரியா. இரண்டாவது வருசத்துல. மாசி மாசம் ஒண்ணாந் தேதி பொறந்தே. ஒப்பன் என்னை விட்டாத்தானே. ஏய்யா இப்படிப் பார்க்கிறே வெக்கமா கீது… போய்யா. அந்தண்ட’

காந்திமதி அம்மாவின் முன்னால் வந்து ஒரு வெடிகுண்டை வீசினாள்.

‘அப்படின்னர் நேத்தே… எனக்கும் பொறந்த நாள் வச்சிருக்கணும். ஏன் வைக்கல…’

காத்தாயி, வாயடைத்து நின்றபோது, காந்திமதி கத்தினாள்.

‘எனக்கும் வைக்கணும், எனக்கும் பாவாடை வாங்கணும். அண்ணனுக்குச் சொக்கான்னா… எனக்கு. கவுன் வேணும்.’

இதற்குள், இப்போதைக்குக் கடைக்குட்டியான, ஆறு வயது வாண்டுப் பயல், எ’னக்கும். நாள் வைக்கணும்’ என்று சொல்லிவிட்டு செல்லமாகச் சிணுங்கினான். காந்திமதி, திட்ட வட்டமாகக் கத்தினாள்.

‘அண்ணனுக்கு முன்னாடி… நான் பொறந்திருக்கேன். எனக்குத்தான் பொறந்த நாள்.’

காத்தாயியும் அவள் கணவனும் வாயடைத்து நின்றார்கள். எப்படியோ அழுத காந்திமதியும், கம்பீரமாக தன்னைப் பார்த்துக் கொண்ட முனுசாமியும், சிணுங்கிய வாண்டும், இரவுக்குள் அடைக்கலமானார்கள். காலையிலேயே எழுந்து வேலைக்குப் புறப்பட்ட கணவனை இன்னிக்கு வீட்ல இருய்யா… முன்சாமி பிறந்த நாளும் அதுவுமா என்று இழுத்தபோது, ‘ஒனக்கு.. பைத்யமா மே. இன்னிக்கு நாளக்கி மறுநாளக்கி காத்தாலயே வந்துடுறதாச் சொன்னதால்தான் – மொதலாளி கடன் குடுத்தான். சீக்கிரமாபோய் லேட்டா வாரத. கடனுக்கு வட்டி. புரியதாமே..? என்று சொல்லிவிட்டு, அதற்கு காத்தாயி பதில் சொன்னபோது, அவன் வீட்டில் இல்லை.

காத்தாயி, பதினைந்து ரூபாயை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அடையாறில் போய், ஒரு ரெடி மேட் சொக்கா வாங்கணும், மூணு ரூவாய்க்கு… கேக் வாங்கணும்… பத்து மெழுவர்த்தி வாங்கணும் இந்த காந்திப் பொண்ண. எப்படிச் சமாளிக்கறது?

குழந்தைகளுக்கு, தெருமுனை ஆயாவிடம் இருந்து ஆப்பம் வாங்கிக் கொடுத்துவிட்டு, குடிசைக் கதவை முக்கால்வாசி சாத்திவிட்டு, அவள் புறப்பட்டபோது, மோட்டார் பைக்கில் வந்த ஒருவர், எஞ்ஜினை நிறுத்தாமலே கர்ஜிக்க வைத்துக் கொண்டு, “ஆமாம் நீங்கள்லாம் சோறுதான் திங்கிறீங்களா?” என்றார், அவர். அந்தக் குடிசை மாதிரி பல குடிசைகளை வாங்கிப் போட்டிருப்பவர். காத்தாயியின் வாடகைப் பணத்தை வசூலிக்க வந்து அலுத்துப் போனவர். கண்ணடிக்குள் விழாத அவளை வெளியேற்றிவிட்டு இன்னொரு குடித்தனத்தை கொண்டு வருவதில் குறியாக இருக்கும் அவர், காத்தாயி வாடகை தரக்கூடாதென விரும்பினார். அப்பதானே. விரட்டலாம்.

உள்ளே இருந்து வெளியே வந்த முனுசாமி பொறந்த நாள் கேக் வாங்க மறந்துடாதே. குமார்பய வெட்டுனதை விட பெர்சா இருக்கணும் என்று சொன்னபோது, மோட்டார் பைக்கர் இடியெனச் சிரித்துவிட்டு, அடடே… நீங்க கூட பொறந்தநாள். வச்சிட்டிங்களா? நாடு உருப்பட்டாப்லத்தான். கேக் வாங்க காசு இருக்கு. வாடகபாக்கியக் கொடுக்க வக்கு இல்லியா… காத்தாயி… ஒன்னத்தான். வாடகப் பணத்தை தரப்போறியா. இல்லை. காலி பண்றியா?. இப்பவே ரெண்டுல ஒன்னு தெரியணும். என்றார்.

காத்தாயி அந்த மனிதனை நிமிர்ந்து பார்த்தாள். எட்டுத் தெருவுக்கு கேட்கும்படியா கத்துற பயல், … இவங்கிட்ட… எந்த வில்லங்கமும். வேண்டாம்.

‘இந்தாங்க ஒங்க வாடகை’

‘நான் வந்துதான் வாங்கணும். நீ வந்து கொடுக்கப்படாதோ?…’

‘யோவ், இத்தோட, நிறுத்திக்கோ இதான் லிமிட்’.

மோட்டார் சைக்கிளின் முரட்டுத்தனத்திற்கு ஏற்றாற் போல் இருந்த அந்த ஆசாமி, அவளை ஒரு பொருட்டாக நினைக்காதவன் போல் சிரித்துக் கொண்டே போய்விட்டார். காத்தாயி உள்ளே வந்து முட்டிக் கால்களில் தலையைத் தோய்த்தபோது, முனுசாமி கேக் வெட்டணும் வெட்டணும் என்று அடம் பிடித்தான்.

அவ்வளவுதான், காத்தாயிக்குக் கண்மண் தெரியாத கோபம். முனுசாமியின் முடியைப் பிடித்துக் கொண்டு, ‘நீ கெட்ட கேட்டுக்கு. பொறந்த நாளா. பொறந்த நாள்…’ என்று சொல்லிக் கொண்டே முதுகிலும் தலையிலும் விளாசிய போது, அம்மாவின் கவனம் தன் பக்கம் விழாமல் இருக்க, எனக்கு பொறந்தநாள். வாண்டாம்மா… என்று காந்திமதி புலம்பினாள்.

அரைமணி நேரம் ஆயிற்று.

காத்தாயியின் எஜமானியம்மாவின் பங்களா வராந்தாவின் எட்டில் ஒரு பகுதி பரப்பளவுகூட இல்லாத அந்த குடிசையில், வாசலில் தலையை வைத்துக் கொண்டு முனுசாமி தொலை துரத்தை நோக்கிக் கொண்டிருந்தான். கன்னத்தின் வழியாக வடிந்த கண்ணிர் அங்கே சிறிது தேங்கி வண்டல் மண்போல் படிந்திருந்தது. அம்மாவிடமிருந்து பிறந்த நாள் அடிகளை வாங்கிய நிகழ்ச்சிகளையும். பங்களா குமாருக்கு பலர் கொடுத்த பரிசுகளையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தானோ என்னவோ… எதையாவது கொளுத்த வேண்டும் என்று நினைத்தானோ என்னமோ. உலகம் புரிந்துவிட்ட விவேகத்திற்கு அச்சப்பட்டு. அப்படி இருந்தானோ என்னமோ கரங்களை மார்பில் குறுக்கும் நெடுக்குமாகப் போட்டுக்கொண்டு, ஏதோ ஒன்று புரிந்தது போலவும், புரியாதது போலவும், ஒரு கண் புருவத்தை மேலே தூக்கி இன்னொரு புருவத்தை கீழே சாய்த்து எதையோ சாய்க்கப் போகிறவன் போல் உட்கார்ந்திருந்த அவனருகே

காத்தாயி போனாள். அவன் தலையைக் கோதி விட்டாள். அம்மாவின் நிலையைப் புரிந்து கொண்டவன் போல் அந்த ஒன்பது வயதுப் பையன், அவள் அப்படி தலையைக் கோதிவிட அனுமதித்தபோது, காத்தாயியின் கண்கள் மேற்கொண்டும் நீரை தங்களிடம் இருக்க அனுமதிக்கவில்லை. அவள் கண்ணிர் முனுசாமியின் பரட்டைத் தலையை ஈரமாக்கியபோது, காத்தாயியால் பேசாமலும் விம்மாமலும் இருக்க முடியவில்லை.

“என் ராசா… நம்பள மாதிரி ஏழைங்க… பொறந்த நாளுக்காவ சந்தோசப்படக்கூடாது. அழனும்டா… நமக்கு பொறந்த நாள விட. பிறக்காத நாளுதாண்டா முக்கியம். கவலப்படாதடா என் கண்ணு. நமக்கும் ஒரு காலம் பொறக்கத்தான் போவுது. அது பிறந்தாதான் நாம பிறந்ததுல அர்த்தம் கீதுடா. அதுவரைக்கும் நீ பொறக்கலன்னு நென்சி. பொறுத்துக்கோடா. என் மவராசா”.

– காகித உறவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: சூலை 2005, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *