சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியில் கிளம்ப எத்தனித்தான் ரவி..!
“என்னங்க .! வெளிய கௌம்பிட்டீங்களா? வெறும் வயத்தில போகாதீங்க.! கொஞ்சம் பழைய சாதம் கரைச்சு வெச்சிருக்கேன்.! சாப்டுட்டு போங்க என்றாள் மனைவி மல்லிகா.!
மனைவியை ஏறிட்டு பார்த்தான் ரவி.. ! அப்போதுதான் படுக்கையில் இருந்து எழுந்து வந்திருக்கிறாள் போலும்.! கலைந்த தலை..! வாரி சுருட்டி முடிந்திருந்தாள்..! முகம் பள பளப்பாக..! பூசின மாதிரி இருந்தாள்..! ஒரு பூரிப்பில்..! மாசமாக இருக்கிறாள்..! நாலஞ்சு நாட்கள் முன்னாடிதான் தெரிந்தது..! முதல் குழந்தை..! கல்யாணம் ஆகி நாலு வருடத்தில் இப்போதுதான் முதல் சந்தோஷ செய்தி..!
ஆனா தொடர்ந்து அவளைக் கண்ணோடு கண் பார்க்கமுடியவில்லை ரவியால்..! தலை தானாகக் கவிழ்ந்தது..! பின்னே.! மூன்று மாதமாக வருமானமில்லை..! மில் நடக்கவில்லை.! முதல் மாசம் மட்டும் முலாளி பாதி சம்பளம் தந்தார்…! அடுத்தடுத்த மாதங்கள் சம்பளமும் இல்லை..! வேலையும் இல்லை.! மிலலில் வேலை செஞ்ச ஹிந்திக்காரங்கல்லாம் ஊருக்கு போய்ட்டாங்க முக்கா வாசிக்கும் மேல..! இப்ப திரும்ப மில்லு திறக்கராஙகளாம்.. ! போய் ஜி எம் ம பார்க்கத்தான் கிளம்புகிறான் ரவி.!
ரவியோட மனசு ஓட்டம் மல்லிகாவுக்கும் தெரிந்துதான் இருந்தது…! மூன்று மாசமா அவன் புலம்பரது பக்கத்துல இருந்து பார்க்கிறவள்தானே.? ஆனா இந்த ரெண்டு மூனு நாளா அவன் முகம் வாடி இருப்பதன் காரணமும் அவளுக்கு புரிந்துதான் இருந்தது..! தனக்கு ஏதுவும் வாங்கித் தர முடியலங்கர வேதனையில் இருக்கான் னு புரியுது அவளுக்கு..! இன்னிக்கு இல்லாட்டி நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருந்தான் ரவி..!
“ப்ரைவேட்லாம் வேணாங்க..! கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கே போலாம்!” னு சொல்லியிருந்தாள்.. ஆனா “கொரோனா நேரத்துல ரிஸ்க் வேணாம்..! பக்கத்து க்ளினிக்குக்கே போலாம்!” னு சொல்லிட்டான் ரவி.!
ரவி வீட்டுக்குள்ள போனான்…. லைன் வீடுதான்.. நாலு குடும்பம் இருக்கிறது…! பக்கத்து வீட்டுக் குழந்தை அம்மணமாக உக்காந்து கொண்டு சாப்பாட்டு தட்டை உருட்டிக் கொண்டு இருந்தது…மேல கீழ தரையெல்லாம் சாப்பாடாக இறைந்து கிடந்தது… இது போலத்தான் அடுத்த வருடம் தன் பிள்ளையும் விளையாடும் என்கிற சந்தோஷத்தில் .. அதை ரசித்துக் கொண்டே வீட்டுக்குள் போனான் ரவி..!
” நீ கஷ்டப்படாதம்மா.! ரெஸ்ட் எடு.. நானே போட்டு சாப்பிட்டுக்கிறேன்.!”னு சொல்லிட்டு.. சாதமும் மோரும் தட்டில் போட்டுக் கொண்டு நடுக் கூடத்தில் அமர்ந்தான் ரவி..! கண் பக்கத்துல இருந்த சின்ன ப்ரிட்ஜ் மேல தேடியது..!
இன்ஸ்டால்மெண்ட் ல வாங்கின ஃப்ரிட்ஜ்தான்.. ! புதுசு…! “இதுக்கு மாச ட்யூ கட்டணுமே.!”ன்னு யோசனையா ..ப்ரிட்ஜ் மேல இருந்த ஊறுகா பாட்டிலை எடுத்தான் ரவி…! மோர் சாதத்திற்கு ஆவக்கா சரியான ஜோடிதான்..!
நாலு கவளம் போட்டுக் கொண்டு , மல்லிகாவிடம் “கதவை சாத்திக்கம்மா!” னு சொல்லிட்டு.., டிவிஎஸ் ஃபிப்டி சாவியை எடுத்துக்கொண்டு மெல்ல உருட்டிக் கொண்டே வெளியே வந்தான் ரவி.!
டிவிஎஸ் ஃபிப்டியும் இன்ஸ்ட்டால்மென்ட்டுதான் .! கம்பெனியில மொத்தமா பல பேர் வாங்கின போது ரவியும் ஒன்னு வாங்கினான்.. பின்ன மேனேஜர்லாம் பைக் வாங்கும்போது.. தான் ஒரு சூப்ரவைசர்! டிவிஎஸ் ஃபிப்டியாவது வாங்கினாத்தான மரியாதைன்னு அப்ப நினைச்சான்.!
ஹேண்டில் பாரை அசைச்சுப் பார்த்தான்..ரெண்டு மாசம் முன்னாடி போட்ட பெட்ரோல் இன்னும் சிறிது மிச்சம் “சலசல.!” என்று ஆடியது உள்ளே..! “அப்பாடா இதாவது செலவு வெக்காம இருக்கே.?!”ன்னு முகத்தில் ஒரு சின்ன சந்தோஷம்.!
ரவி வேலை செய்கிற மில் பக்கத்திலதான் … ஒரு கிலோமீட்டர்தான் இருக்கும்.. சின்ன ஸ்பின்னிங் மில்.. சுமாராஐம்பது அறுபது பேர் வேல செய்வாங்க..முக்காவாசி பெண்களும்.. ஹிந்தி பேசரவங்களும்தான் .. ரவிதான் பேல் ரூம்ல இருந்து கார்டிங்..ஸ்பின்னிங் வரை சூப்பர்வைசர்..!
இன்னிக்கு ஜிஎம் ம எப்படியாவது பாத்துரணும்.. கம்பெனி எப்ப திறப்பாங்கன்னு கேட்டுட்டு.. கொஞ்சம் அட்வான்ஸ் ஏதாவது கேட்டு வாங்கிட்டு வரணும்னு நெனச்சுகிட்டான் ரவி! சாயந்திரமா மல்லிகாவ ஆஸ்பத்திரிக்கு டெஸ்டுக்கு கூட்டிட்டு போவணும்..! முடிஞ்சா காராசேவு ம் பூந்தியும் மல்லிகாவுக்கு வாங்கித் தரணும்னு நினைச்சுகிட்டான் ரவி..!” பாவம் .! என்னக் கட்டிகிட்டு பெருசா என்ன கெடச்சிது அவளுக்கு.?” என்று நினைத்தது அவன் மனம்..!
கைக்கும் வாய்க்கும் இழுத்துகிட்டு வாழர எல்லா கணவர்களின் நினைப்பும் இதுதானே..?!
மில் வாசலை அடைந்தான் ரவி.! வாசலில் இருந்த செக்யூரிட்டி சின்னதாக சிரித்து விட்டு சல்யூட் வைத்தான்.. ! முகத்தில் கர்ச்சீப் முக மூடி.! அடடா.. தான் கர்ச்சீஃப் கொண்டு வரலயேன்னு நெனைச்சுகிட்டான் ரவி.!
“ஜிஎம் வந்துட்டாரா? ” செக்யூரிட்டியிடம் கேட்டான்….!
“இல்ல சார்.! இன்னும் வரல..!வர்ர நேரம்தான் .!”
சரி அது வரை டீக்கடையில் உக்காருவோம் என்று நினைத்துக் கொண்டே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு. முன்னாடி இருந்த டீக்கடைக்கு போனான் ரவி..!
அது ஒரு சின்ன காம்ப்ளக்ஸ் வரிசையா கடைகள் இருக்கும்.. ஒரு டீக்கடை.. டிவி ராப்பேர் கடை..பார்பர் ஷாப்னு வரிசையா கடைகள் இருக்கும் .
மில்லில் வேல செய்யர முக்காவாசி நபர்களின் ஆஸ்தான கடைகள் இவைதான்.!
“என்ன சூப்ரவைசர் சார்? எப்படி இருக்கீங்க.? வீட்ல எல்லாரும் சவுகரியம்தானே.! பத்திரமா இருக்கிங்கல்ல?” என்று விசாரித்தான்.. டீக்கடை பன்னீர்…! நல்ல மனுஷன்..!
“நான் சவுக்கியம் பன்னீர் .! நீ, மனைவி , குழந்தைகளெல்லாம் சவுக்கியம்தானே.?!” என்று குசலம் விசாரித்து விட்டு .. !
“ஒரு டீ .!”என ஆர்டர் செய்து விட்டு பெஞ்சில் கிடந்த பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்தான் ரவி.!
“சார்..!சிகரெட்.!”என்று அவனது வழக்கமான பிராண்டு ஒரு பாக்கெட்டை எடுத்துக் குடுத்தான் பன்னீர்…!
“ஒன்று போதும் பன்னீர்..வீட்ல அடிக்க முடியாது.!” என்று ஒன்றை மட்டும் உருவிக் கொண்டான் ரவி.! “இது வேற எதுக்காக வீண் தண்டச் செலவு .!?” என்று மனசு எச்சரித்தது..!
அப்ப பக்கத்து பார்பர் ஷாப்பில் இருந்து தாமோதரன் வெளிய வந்தார் சட்டைக்காலரை உதறிக் கொண்டே..! மில்லில் இன்ஜினியரா இருக்கார் ! முடிவெட்டிக் கொண்டு வர்ரார் போலிருக்கிறது..! ரவி தன் தலையை தடவிக் கொண்டான்.. இரண்டு மாத கிராப்.. ! இன்னும் வெட்டவில்லை..!
“என்ன ரவி சௌகரியம்தானே .? எப்ப மில் திறக்கராங்களாம்.? ஏதாவது சேதி தெரியுமா.?” என்றார் தாமோதரன்.!
“தெரியல சார்..! அதான் ஜிஎம்மை பாத்து பேசலாம்னு வந்தேன்..!”
இவன் குரல் கேட்டதும்..தலையை நீட்டி எட்டிப்பார்த்தான் பார்பர் ஷாப் முருகன்! “வாங்க ரவி சார்..? நல்லா இருக்கீங்களா.? கட்டிங் பண்லையா?” னு ஞாபகப் படுத்தினான்.!
அவன் ஜோலி அவனுக்கு…!
“இ்ல்ல ..முருகா..! ஜிஎம்ம பாத்துட்டு வர்ரேன்னு..!” டீயை உறிஞ்சிவிட்டு டம்ளரை பாய்லர் பக்கத்தில் வைத்தான் ரவி.!
ஜிம் மின் நீல சான்ட்ரோ மில்லின் உள்ளே நுழைந்தது..!
ஒரு பத்து நிமிஷம் போகட்டும்..! இப்பதான் வந்திருக்கிறார்.. சிகரெட் வாடை வேறு அடிக்கும் என்று நினைத்துக் கொண்டு பேப்பரை புரட்டினான் ரவி !
சிறிது நேரத்தில் செக்யூரிட்டி கையை காட்டினான் ! “வாங்க சார்..! கூப்பிடரார்.!” னு சொன்னான் ரவியிடம்..! ஜிம் மிடம் சொல்லியிருப்பான் போலிருக்கிறது..!
இதோ வர்ரேன் பன்னீரு என்று சொல்லிட்டு.. விடு விடு என்று உள்ள போய் ஆபீஸ்அறையில் அமர்ந்தான் ரவி.! எப்போதும் சட சட வென்று ஓடிக் கொண்டிருந்த மில் இப்போது ரொம்ப அமைதியாக இருந்தது…மேலே ஃபேன் சுற்றும் சப்தமே கர கரவென்று கேட்டுக் கொண்டிருந்தது இப்போது…!
கம்ப்யூட்டர் பெண் லைட்டாக சிரித்து தலையாட்டினாள்.!
” வா..ரவி..நலம்தானே.?” என்று அழைத்தார் .. ஜனார்த்தனன்.. ஜி.ம்.. நல்ல மனுஷன்..!” வீட்ல மனைவிலாம் நல்லாயிருக்காங்களா.?” என்று கேட்டார் .! வழுக்கைத் தலை பளபள வென்று டாலடித்தது.. எண்ணெயா? வியர்வையா ன்னு தெரியவில்லை.!
“நல்லாயிருக்காங்க சார்..!” என்று சொல்லிவிட்டு..!”மாசமா இருக்காங்க சார்.! “என்று சிறிது தழைந்த குரலில் வெட்கமாக சொன்னான் ரவி.! அப்பத்தானே அட்வான்ஸ் கேட்க முடியும்.?!
“அடடே.?! அப்பாவாகப் போறியா.? வாழ்த்துக்கள்..!வாழ்த்துக்கள்!” என்று நிஜமான சநதோஷத்தில் வாழ்த்தினார்.. ஜி.எம்..!
திரும்பிப்பார்த்து சந்தோஷமாய் தலையாட்டினாள் கம்ப்யூட்டர் பெண்.. ரவியைப் பார்த்து .!
“சார்…! எப்ப சார் மில்லு திறப்பாங்க.! அதான் ஊரடங்குலாம் முடிஞ்சிருச்சே ?” என்றான் ரவி.!
ஊரடங்கு முடிஞ்சிரும்மா! ஆனா குடோவுன்ல ஸ்டாக் தேங்கிப் போச்சு..! ரெண்டு மூனு ரெகுலர் ஆர்டரும் நிறுத்திட்டாங்க..! வேலைக்கு வேற ஆளுங்க இல்லை.! புது ஆர்டரும் வருமான்னு தெரியலை.!” ன்னு அடுக்கிக் கொண்டே போனார் ஜி.எம்.! “சில பல கோடி நட்டம் ப்பா கம்பெனிக்கு..! “நேத்து எம்டி ரொம்ப கவலைப்பட்டார்..! என்ன செய்யரதுன்னு தெரியலைன்னு ரொம்ப வருத்தப் பட்டார்.!” என்றார் ஜி.ம்.!
“ஆமாம் இருக்காதா .? தன்னை மாதிரி தனியாளுக்கே இவ்வளவு பிரச்சினைன்னா..பல பிரச்சினையில இருக்கிற கம்பெனி முதலாளிகளுக்கு பெரிய நட்டம்தானே.??”ன்னு நினைச்சுகிட்டான் ரவி.!
“முன்ன மாதிரி இனி இருக்காது ரவி.! ரெண்டு ஷிஃப்டு ஓடரதுலாம் கஷ்டம்..! ஒரே ஷிஃப்டுதான்..! ஆர்டருக்கு ஏத்த மாதிரிதான் ஆளுங்கள திரும்ப சேக்கணும்!” என்றார் ஜிஎம்.!
“ஓ..! அப்படியா சார்.!”
“ஆமாம்ப்பா.. இனிமே எம்டியோட பொண்ணுதான் நிர்வாகம் பண்ணப் போறாங்க..அவங்க முடிவுதான் இனி.!
சம்பளம்லாம் கூட குறைஞ்சிடும்.!”னு கவலையாய் சொன்னார் ஜிஎம்..!
அடி வயிற்றில் பகீர் என்றது ரவிக்கு..!
“என்ன சார் சொல்ரீங்க..?! கேட்கவே பயமா இருக்கே.?!”
“சார்..எனக்கு அட்வான்ஸ் ஒரு நாலாயிரம் ரூபா வேணும்சார்..! மாசாமாசம் சம்பளத்துல கழிச்சிக்குங்க.. பெண்டாட்டிக்கு ஆஸ்பத்தரி செலவு இருக்கு .!” என்று தயக்கமாகக் கேட்டான் ரவி.!
இதைக் கேட்டவுடன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார் ஜிஎம்..!முகத்தில் ஒரு யோசனையாய்..கம்ப்யூட்டர் பெண்ணிடம்.. “அந்த லிஸ்ட்டை கொண்டாம்மா.!” என்று சொன்னார் ஜி.எம்.!
தன்னிடம் தரப்பட்ட லிஸ்ட்டை மெல்ல
மேலிருந்து கீழாய்ப் பார்த்தவர்..! மெல்லிய குரலில் சொன்னார்..!
” ஐ ஆம் சாரி ரவி..! இப்ப இருக்கிற சூழ் நிலையில .. செலவுகளைக் குறைக்கணும்னு புது எம்டி முடிவு எடுத்து சில பல ஆளுங்களை .. மூனு நாலு மாசம் கழிச்சு வேலைக்கு வரச் சொல்லியிருக்காங்க.. ! இப்பதான் ஆர்டரே இல்லையே..?உன் பெயரும் அதுல இருக்குப்பா..!”என்று சொன்னார் தயக்கமாக..!
பகீரென்று தூக்கி வாரிப் போட்டது ரவிக்கு..சில நிமிஷம் வாயெல்லாம் காய்ஞ்சு போய்.. தலை கிர்ரென சுற்றியது..!
“சார்..என்ன சார் சொல்ரீங்க.? திடர்னு இப்படி சொன்னா நான் எங்க போவேன் சார்..? ”
“இப்ப வேற மல்லிகா மாசமாக இருக்கிறாளே?!.” என்ற பயம் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது ரவிக்கு.!
என்ன பண்ரது ரவி..! இருக்கப் போறது ஒரே ஷிப்டுதான்..! இருக்கிற லட்சணத்துல சூப்ரவைசரே தேவையான்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க எம்டி.! ஆனா சரி இருக்கட்டும்னு வேல்ராஜை வெச்சாக்க சொல்லிட்டாங்க.!வயசுல மூத்தவர்.!கல்யாணத்திற்கு பெண் வேற இருக்குன்னு தான் அவருக்கு ஓகே செல்லியிருக்காங்க!” என்றார். ஜிம்…ஏதேதோ பேசிக் கொண்டே போனார்அவர்..!
ரவியி்ன் காதுகளில் அவர் பேசிய எதுவும் விழவி்ல்லை..!
“சார்.. நான் கேட்ட அட்வான்ஸ்..?” என்று மெல்லமாய் தொண்டை அடைக்கக் கேட்டான் ரவி.!
“தெரியலப்பா! எம்டிகிட்ட கேட்டு சொல்ரேன்..!ஏற்கனவே ஒரு லோன் வாங்கியிருக்கல்ல?” என்று ஞாபகப் படுத்தினார் ஜி.ம்..!
ஆமாம்.. கல்யாணத்திற்கு வாங்கிய லோன்.. இன்னும் பாதி இருப்பது நினைவுக்கு வந்தது ரவிக்கு..!
“சரி ரவி.. நான் மேடத்துகிட்ட பேசிப்பாக்கறேன்..!” சாரிப்பா.!” என்று சொல்லிவிட்டு.. எழுந்து நின்றார் ஜி.எம்..!
“போய்ட்டு வாப்பா..! ” என்று அர்த்தம்.!
மெல்ல எழுந்து வாசலுக்கு வந்தான் .!
“இப்ப என்ன செய்யரது.?! “தொண்டை தாகம் எடு்த்தது..!
“பாத்துட்டிஙகளா சார்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் செக்யூரிட்டி..
வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு தலையாட்டினான் .!
யோசனையாய் காம்ப்பவுண்டு ஓரமாய் நிறுத்தியிருந்த வண்டியின் அருகே வந்தான்.. !
எனன செய்ய இப்போது என்று யோசிக்கும்போதே பாக்கெட்டில் செல்ஃபோன் கிணுகிணுத்தது.!
மல்லிகாதான்.!
“என்னம்மா..? என்ன ஆச்சு?”
“ஒன்னுமில்லீங்க.. போன காரியம் என்ன ஆச்சு.! ஜி.எம் ம பாத்தீங்களா..? மில்லு எப்ப திறக்கராங்களாம்.?”
” பாத்தேன் மல்லிகா! மில்லு திறந்து பழைய படி ஓட மூனு, நாலு மாசம் ஆயிருமாம்.. ! ஆர்டரில்ல! ஆளுங்களும் இத்தன பேர் தேவையில்லன்னுட்டாங்க.. “னு சொல்லும்போது கண்ணெல்லாம் தளும்பி தொண்டையை அடைத்தது ரவிக்கு.. ஆனால் மனைவியிடம் காட்டிக் கொள்ள வில்லை..!
” என்னங்க சொல்ரீங்க.? .” என்று கொஞ்சம் அதிர்ச்சியாய்க் கேட்டவள்…!!!
சிறிதுநேரம் அமைதியாய் இருந்தாள் ! இருவருக்குமே கனத்த மௌன சம்பாஷணை..!!
” சரிசரி.. வருத்தப் படாதீங்க..! எல்லாம் சரியாய்டும்.! வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்..! என்னங்க..என்னங்க..!” என்று அவள் பேசப் பேச ஃபோனைக் கட் செய்தான் ரவி..!
இதற்குமேல் அவளிடம் பேச முடியாது அவனால்..!
நேராக பன்னீர் கடைக்குப் போனான்..! பெஞ்சில் அமர்ந்து கொண்டு .”ஒரு டீ !..” என்றான்..!
இவனது முக வாட்டம் பார்த்த பன்னீர் ..! “என்ன ரவி சார்..? ஏதாவது ப்ரச்சினையா.? முகம் சரியில்லையே.?” ன்னு கேட்க… மள மள வென்று வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு நடந்ததைக் கூற ..! ” கவலைப்படாதீங்க சார்..! மூனு மாசம்தானே இப்படி போய் அப்படி ஓடிடும் சார்…! கவலப் படாதீங்க.. அது வரைக்கும் வேற ஏதாவது டெம்ப்ரரி வேலை பாருங்க ..! ” என்று ஆறுதலாய் சொன்னான் பன்னீர்.!
என்ன வேலைக்குப் போகலாம்.? யாரைப் பாக்கலாம் ..? என்று யோசித்துக்கொண்டே டீயை உறிஞ்சினான் ரவி..!
“பன்னீர்..!நம்ம ஆதவன் பவுண்டரி ஓடுதா பன்னீர்? ”
“அது எங்க சார் ஓடுது..? அதுவும் தான் நிப்பாட்டியாச்சே.?! ”
“எந்த ஃபேக்டரியும் யோசிக்காதீங்க ரவி சார்..! வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க.!” என்று ஆலோசனை சொன்னான் பன்னீர்..!
அவன் சொன்னதும் சரி என்றே ப்டது ரவிக்கு..!! எல்லாருக்கும் ஒரே ப்ரச்சினைதானே..?
“ஐயோ.! திரும்பவும் பேப்பர் பாத்து..! வேலைக்கு அப்ளை பண்ணி.! இன்ட்ர்வ்யூக்கு போயி..!” தலை சுற்றியது பன்னீருக்கு.! நூல் மில்ல விட்டா வேற எங்கயும் வேலையும் கிடைக்காது என்ற நிதர்சனமும் மெள்ள புரியலாயிற்று..!
வேற எந்த வேலைக்குப் போகலாம் என்று யோசிக்கும் போது .. சட்டென்று ஞாபகத்திற்கு வந்தவர்தான் புண்ணிய கோடி.. பக்கத்தில தான் கொரியர் ஆஃபீஸ்ல மேனேஜர் உத்தியோகம்..! கொரியர் ஆஃபீஸ் மூடாதே..?! அவரைப் போய் பார்ப்போம் ..! என்ற நம்பிக்கையுடன்….!!
” எவ்ளோ ஆச்சு பன்னீர்.? “என்று பாக்கெட்டை துழாவியவாறே கேட்க..!
“அதெல்லாம் பின்னால பாத்துக்கலாம் சார்…! கணக்குல எழுதிக்கறேன்.!” என்று சொல்லியவாறே சிகரெட் பாக்கெட்டை ரவியின் சட்டைப்பாக்கெட்டில் திணித்தான் பன்னீர்..!
“அவனுக்கு தெரிந்த நட்பை அவனுக்குத் தெரிந்த விதத்தில் காட்டுகிறான்.!” என்று கண்களில் நன்றியுடன் பன்னீரைப் பார்த்தான் ரவி.!
வண்டியின் பெடலைச் சுற்றி ஸ்டார்ட் செய்தவாறே.”வர்ரேன் பன்னீர்.!” என்ற வாறே கொரியர் ஆபீஸுக்கு கிளம்பினான் ரவி.!
நல்ல வேளை புண்ணிய கோடி இருந்தார்…! லோடு ஏற்ற வந்த லாரி டிரைவரிடம் ஏதோ மெட்டீரியல் லிஸ்ட் வைத்துக்கொண்டு விவாதித்துக்கொண்டிருந்தார்..! ட்ரான்ஸ்போர்ட் டும் கொரியரும் சேர்ந்த குடோவுன் அது..! வழக்கமாக இந்த நேரத்துக்கெல்லாம்.. மினி லாரி ரெண்டு மூனு நிக்கும்.. ! பாக்ஸ் ஏற்ற இறக்க என்று பிசியாக இருக்கும் நேரம் இது..! ஆனால் வழக்கமான சந்தடி இல்லாமல் சிறிது அமைதியாகவே இருந்தது குடோவுன்..!
“வா ரவி சௌக்கியமா.!? டீ சாப்டரியா? வீட்ல மனைவி சௌக்கியமா..?” என்று கேட்டார் புண்ணியகோடி..!
” இல்ல.. இப்பதான் சாப்டேன் !” என்று சொல்லிவிட்டு பட படவென்று நடந்ததை சொன்னான் ரவி!
சற்று நேரம் அமைதியாக இருந்தார் புண்ணிய கோடி.!
“நீ சொல்ரது வாஸ்தவம்தான் ரவி.! உன் மில்லு மட்டுமில்ல.! எல்லா கம்பெனிகளும் இதே நிலமைதான்.. வேல நிக்கரதே தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்தான் .! என்ற கதைதான்.! எங்கயும் பிசினஸ் இல்ல..! இது எங்க போய் நிக்கும்னு தெரியல.!” என்றார் புண்ணிய கோடி..!
” அதான் சார்.. உங்கள பாக்க வந்தேன்..! உங்க ஆபீஸ்ல ஏதாவது வேல காலி இருக்குமான்னு கேக்கலாம்னு ….!! “என்று இழுத்த உடனே ரவியை வருத்தமாகப் பார்த்தார் புண்ணியகோடி..!
” என்னத்த சொல்ரது ரவி .! இங்கயும் நிலமை சரியில்ல..! கம்பெனி லோடுல்லாம் ஒன்னும் புக் ஆகரதில்ல .! இதோ நீயே பாக்கிறயில்ல..! எல்லாம் காலியா கெடக்கு.! டிரைவர்களும் நெறைய பேர் ஊருக்கு போய்ட்டானுக…! இங்கயும் அதே நிலமைதான்… புது ஆள் எடுக்கரதெல்லாம் நடக்காத காரியம்..!” என்று புலம்பலாய்ச் சொன்னார் புண்ணிய கோடி..!
“இரு ..! எனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட பேசிப் பாக்கிறேன்..! நம்ம கிட்டதான் நிறைய கம்பெனி கஸ்டமர்ங்க இருக்காங்களே .?! “னு சொல்லிவிட்டு..ரெண்டு மூனு பேருக்கு ஃபோன் செஞ்சார்..!
இனம் தெரியாத ஒரு நம்பிக்கையுடன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் ரவி.!
நேரம் போய்க் கொண்டிருந்தது..! இருட்டியதே தெரியவில்லை… ! வீட்டில் மல்லிகா தனியாக இருப்பாள்.! காலையில் பேசியது அவளிடம்..! என்று மனது ஒரு பக்கம் புலம்ப…!
எப்படி வேலை போன முக்தோடு அவளைப் பார்ப்பது.. ஏதாவது ஒரு வேலைக்கு ரெடி பண்ணுவோம்.! என்று பரிதவிப்புடன்.. புண்ணிய கோடியுடனேயே பொழுதைக் கழித்தான் ரவி.!
ஒன்றும் வேலைக்காகவில்லை…! எல்லா பக்கமும் ஒரே நிலமைதான் என்ற நிதர்சனம் புரிய வந்தது .!
சட்டைப் பையில் செல்ஃபோன் கிணுகிணுத்தது.! மல்லிகாதான்..!
“இதோ வந்துகிட்டே இருக்கேம்மா.!” என்று சொல்லி வைத்தான் .!
கவலைப்படாத ரவி..! இன்னிக்கு டைம் ஆயிருச்சி.. சில பேரைப் பிடிக்க முடியல.. நாளைக்கு காலைல வா..! ஏதாவது அரேஞ்ச் பண்ணலாம் என்று தைரியமாய் சொன்னார் புண்ணிய கோடி..!
பாதி நம்பிக்கையும்.. பாதி பயமுமாய் .. வண்டியை ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தான் ரவி..! ஆனால் பயம் நம்பிக்கையை முந்தி ஓடத்தான் செய்தது..!
மல்லிகா தனியாகத்தான் படுத்திருந்தாள்.. முகம் சோர்ந்து இருந்தது..!
“வாய்யா.! காலைல போன ஆளு.! ஏதாவது சாப்டியா? ஏன் லேட்டு.? என்ன ஆச்சு.? ஏன் கவலையா இருக்கே.?!” ன்னு அடுக்கடுக்கா கேள்விகளைக் கேட்க கேட்க..! ரவிக்கு துக்கம் பொத்துக் கொண்டு வந்தது…!
மெள்ள மலலிகாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு வெளிறிய முகத்துடன் நடந்ததைச் சொன்னான் ரவி..!
” கவலப் படாதய்யா! இந்த வேல போனா உலகமா நின்னு போய்டும் .?!” “இது இல்லன்னா வேற நல்ல வேலை கண்டிப்பா கிடைக்கும் கவலைப்படாதே.!” என்று தைரியம் சொன்னாள் மல்லிகா.!
சிறிதுநேரம் அமைதியாக இருந்தார்கள் இருவரும்..!
“சரி போனா போகட்டும் விடு.! ஏதாவது சாப்டரியா! ரவை கிண்டி வெச்சிருக்கேன்!” என்றாள் மல்லிகா.!
“இல்ல.வேணாம்மா.. பசிக்கல.! “என்ற வாறே பேன்ட்டைக் கட்டி விட்டு கைலிக்கு மாறினான் .!
பக்கத்தில் இருந்த பானைத் தண்ணீரை ஒரு சொம்பு குடித்து விட்டு.. மல்லிகாவின் பாய் பக்கத்திலேயே தலையணையைப் போட்டுக் கொண்டு வெறும் தரையில் விழுந்தான் ரவி.! தரையின் சில்லிப்பு கூட உரைக்கவில்லை..! மனமெல்லாம் ஒரே சிந்தனைதான்.!
இரவெல்லாம் சரியாக உறக்கமில்லை.. ஏனோ தெரியவில்லை..மல்லிகாவும் சரியாகத் தூங்கவில்லை… புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு நெளிந்து கொண்டுமே இருந்தாள்..!
விடி காலையில்தான் சற்று கண்ணயர்ந்தான் ரவி..!
நன்கு விடிந்து விட்டது…! கண்விழித்துப் பார்த்தான் ரவி.! மல்லிகாவைப் படுக்கையில் காணவில்லை..! உள்ரூமில் பேச்சு சத்தம் கேட்டது..! ஓ..! பக்கத்து வீட்டு சந்திராக்கா பேச்சுக் குரல்..! “இவங்க என்ன செய்யராங்க இந்த நேரத்தில்…?! என்று நினைத்துக் கொண்டே வாரிச் சுருட்டிக் கொணடு எழுந்தான் .!
அதே நேரம் உள் ரூமில் இருந்து வந்த சந்திராக்கா.! “பரவால்ல விடுங்க தம்பி..! இது மாதிரி நடக்கரது சகஜம்தான்..! கடவுள் சித்தம்தான் இதெல்லாம்.. மனச போட்டு உழப்பிக்காதீங்க..! ரெஸ்ட் எடுத்தா போதும்..! ரெண்டு மூனு நாளில் சரியாகி விடும் .!” என்று அடுக்கிக் கொண்டே போனாங்க சந்திராக்கா.!
” என்ன சொல்ராங்க.. வேல போனது தெரிஞ்சிருச்சோ.? அதுக்கு எதுக்கு ரெஸ்ட் எடுக்க சொல்ராங்க.? “ன்னு யோசிச்சுகிட்டே.. உள் ரூமுக்குபோனான் ..!
அங்கே மூலையில் கலைந்த தலையுடன் , விசும்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள் மல்லிகா.!
பகீரென்று தூக்கி வாரிப் போட்டது ரவிக்கு.!
“என்ன மல்லிகா? என்ன ஆச்சு.?! ” என்று கேட்டவாறே அவள் பக்கத்தில் அமர்ந்து தோளைப் பிடித்தான் .!
” கரு கலஞ்சிடுச்சு தம்பி! உடம்பு தாங்கல..!”என்று சொன்னாங்க சந்திராக்கா.!
சந்திராக்கா சொல்லச் சொல்ல வெடித்து அழுதவாறே ரவியின் மேல் சாய்ந்தாள் மல்லிகா.!
தூக்கி வாரிப் போட்டது ரவிக்கு.! இது என்னடா சோதனைக்கு மேல சோதனை.? என்று நினைத்தவாறே.!! அவள் தலையை ஆதரவாகத் தடவி விட்டான் ரவி.!
மல்லிகாவின் பாயை தட்டி உதறிப் போட்டாங்க சந்திராக்கா.!” வாம்மா! வந்து கொஞ்ச நேரம் படு..! வெந்நீர் வெச்சு தர்ரேன்..! முதல்ல தலைக்கு குளிச்சிட்டு நல்லா தூங்கு.!” பருப்பு சாதம் வெச்சு தர்ரேன்..!” என்று சொல்லிவிட்டு கதவை ஒருக்களித்து விட்டு வீட்டுக்கு போனாங்க சந்திராக்கா.!
“என்ன மன்னிச்சிருங்க…! உங்களை ஏமாத்திட்டேன் .! ” என்று விசும்பியவாறே ரவியை இறுக்க பிடித்துக் கொண்டு அழுதாள் மல்லிகா.! அவனை நேருக்கு நேர் பார்க்கவேயில்லை அவள்..!
“நீ ஏம்மா அழற..! அழாத..!! பரவால்ல விடு.! நீ என்ன பண்ணவ.? நம்ம நேரம் சரியில்லை.!” என்றவாறே அவளை மெல்ல அழைத்து வந்து பாயில் படுக்க வைத்தான் ரவி.!
” நான் அம்மாவ வரச் சொல்ரேன்.. ! உனக்கு ஒத்தாசையா இருப்பாங்க.! ” ஒரு வாரத்துக்கு அடுப்படி சமையல்னு உடம்ப படுத்திக்காத!” என்று சொன்னான் .!
அம்மாவுக்கெல்லாம் சொல்லாதீங்க..! மனசு கஷ்டப் படுவாங்க! பின்னாடி சொல்லிக்கலாம்.! என்று விசும்பியவாறே மறுத்தாள் மல்லிகா! அதான் சந்திராக்கா இருக்காங்கல்ல..! என்றாள்!
“சரி..சரி.. நேரம் ஆகிவிட்டது.. புண்ணிய கோடி வரச் சொல்லியிருந்தாரே..?! ” என்று சடாரென்ற நினைவுக்கு வந்ததும்.. பல்லைத் தேய்த்து குளித்துக் கிளம்ப ஓடினான் ரவி.!
குளித்துத் தலை வாரிக் கிளம்பும் போது வழக்கம் போல ஞாபகப் படுத்தினாள் மல்லிகா.!
” நேத்து ராத்திரி செஞ்ச ரவ அப்பிடியே கெடக்குய்யா.. நல்லா இருக்கும் .! கொஞ்சம் சாப்பிட்டு விட்டுப் போ.!” என்றாள் மல்லிகா.!
ரவிக்கும் உப்புமாவை வேஸ்ட் செய்ய மனமில்லை.. எவ்வளவு நேரம் ஆகுமோ இன்னிக்கும் என்று நினைத்தவாறே.. இலுப்பச் சட்டியில் இருந்த உப்புமாவை தட்டில் போட்டுக் கொண்டே .. தொட்டுக்க ஏதாவது தேடினான்..எதுவும் கிடைக்கவில்லை..! ஏதும் செய்திருக்கமாட்டாள்..! பாவம்.. ! என்று நினைத்துக் கொண்டான் ..!
ஃப்ரிட்ஜின் மீது இருந்த ஊறுகாய் பாட்டில் ஞாபகத்திற்கு வந்தது..”தன்னுடைய ஆஸ்தான ஆபத் பாந்தவன் ஆயிற்றே..!” என்றவாறே ஆவக்காய் பாட்டிலை எடுத்தான் .!
ஒரே ஆச்சர்யமாய்ப் போய்விட்டது..! பாட்டிலில் ஊறுகாய் வெகுவாய்க் குறைந்திருந்தது.. “நேற்று கூட முக்காவாசி இருந்ததே?!” என்று யோசித்தான் .!
ரெண்டு கவளம் உப்புமாவை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் போதுதான்..சடாரென்று ஊறுகாய் குறைந்ததின் காரணம் புரியலாயிற்று ..!
மல்லிகாவின் அழுகை..! அவள் இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தது.! ” என்னை மன்னிச்சிடுய்யா.!” என்று அழுததின் காரணம் ஒன்றுக் கொன்று வெளிச்சமாய்ப் புரிய ஆரம்பித்தது ரவிக்கு.!
உண்மை புரிய புரிய..!! கையில் இருந்த உப்புமா தட்டில் விழுந்தது.! கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.! உப்புமாவுடன் சேர்ந்து துக்கமும் தொண்டையை அடைக்க.. உப்புமா உள்ளுக்குள் இறங்க மறுத்தது..!
“ஐயோ.! கடவுளே.?! இவள் ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்தாள்.! ஏன் என்னிடம் சொல்லாமல் மறைத்தாள்.!?” என்று நினைக்க நினைக்க கண்களில் கண்ணீராய் பொங்க ஆரம்பித்தது.!
எல்லாவற்றிற்கும் தான் தான் காரணமா.? தன் இயலாமைதான் காரணமா? என்றவாறே தன் இரண்டு கைகளையும் பார்த்தான் ரவி..!!
ஒரே ரத்தமாய்த் தெரிந்தது அவன் கண்களுக்கு..!!
கொலை செய்யப்பட்ட சிசுவின் ரத்தம்..!
சுற்றிலும் ஒரே ரத்த வாடை..!
“ஐயோ ..! அம்மா.! ” என்று ரத்தம் படிந்த கைகளோடு முகத்தில் அறைந்து கொண்டே ஓங்கி, வெடித்து, உரத்து அழத் துவங்கினான் ரவி..!
பக்கத்து ரூமில் மல்லிகா இன்னும் சுவற்றின் பக்கமாய் திரும்பி படுத்துக் கொண்டு மெல்ல விசும்பிக் கொண்டிருந்தாள்..!
வாசலில் சந்திராக்கா குழந்தை, வழக்கம் போல ,அம்மணமாக, தரையில் ஏதோ பாத்திரத்தை உருட்டிக் கொண்டு, தனக்குத் தானே உளறிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது…!
நான் கதை யை எழுதிய மன பாங்கிலே யே உங்களால் வாசிக்கப் பட்டது குறித்து மகிழ்ந்னே்..ஒரு தாயின் மன நி றை வு ..!
மனைவி இந்த இயற்கை கொடுத்த வரம்..
பிறக்காத தந்தையாய் ரவி இருக்கலாம்…
ஆனால் என்றோ தாயாகிவிட்டாள் ரவிக்கு, மல்லிகா…!
பெற்று சாக்கடையிலும் , குப்பை தொட்டியிலும் விசிவதை விட கருவிலே கருணை கொலை செய்தாளோ…இந்த நல்லதங்காள் …!!
பிறக்காத குழந்தைக்கு தந்தை ஆவதை விட …
பேர்க்கேத்த நிறம் கொண்ட மனசுக்காரி தன் மனைவிக்கு …இன்னொரு தந்தையாகு ரவி..!!
உண்மையில் கதை வாசிக்கும் போது …
கொலையான கருவை நினைத்து வரவில்லை கண்ணீர்..
கணவனுக்காக தன் கருவையே கொலை செய்த தாயின் வலியே நினைவுக்கு வருகிறது..
ஏகப்பட்ட குடும்ப நல வழக்குகள் கொரனா காலக்கட்டத்தில் நீதிமன்ற கதவுகளை தட்டிக்கொண்டிருக்கும் போது…
இது போன்ற கதைகள் படித்தால் அது போன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவது நிஜம்.
வாழ்த்துக்கள் சார்.
.
Story reflects the plight of thousands of common people . Story is very realistic, touching
Title itself is very unique. Story is too good to read
and touching.
கதையை படித்து முடித்த போது..கண்களில் நீர்த்திவலைகள்…அருமை சார்..
கதையை படித்து முடித்த போது..கண்களில் நீர்த்திவலைகள்…அருமை சார்..