பிருந்தா ஹாஸ்டல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 6,870 
 

கலாவின் காதுக்குள் வந்து அவள் கணவன் ஏதோ சொல்லியதும் அவள் சீ என்று எரிந்து விழுந்தாள். அவள் முகத்தை பார்த்ததும் பாலுவுக்கு அருவருப்பாக போய்விட்டது.

என்ன கேட்டுவிட்டோம் என்று இப்படி கத்தினாள்.

‘’ராத்திரி முழுக்க பாலா பாலான்னு கொஞ்சுறா, காலைல வெலகி வெலகி ஓடுறா. என்ன ஆச்சு இவளுக்கு. இன்னைக்கி ராத்திரி வாடி ஒனக்கு இருக்கு தீபாவளி’’ என்று மனதிற்குள் கறுவிக்கொண்டே சாப்பிடாமல் ஆபிசுக்குப் போய்விட்டார்.

கலா பிருந்தாவை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தாள். டிவியை போட்டாள். ஆசை முகம் படத்தில் இருந்து ‘’நீயா இல்லை நானா’’ பாட்டு பாடியது. அன்றோரு நாள் ஆலம்பட்டி கிராமத்தில் இந்த பாட்டை ஓரு டீக்கடையில் நின்று முழுசாக பார்த்து ரசித்தாள் ஏதோ அவளுக்காகவே எழுதப்பட்ட்து போல தோன்றியது. ஆமாம் மறு முறை வரும்வரை மயக்கத்தில் இருந்தது அவள் தானே?

‘’பாவம் பிருந்தாப்பா. அவரிடம் இப்படி கத்தியிருக்க வேண்டாம். ஆனால் பகலில் இப்படி பேசினால் எனக்கு கோபம் தான் வருது’’

திருமணம் முடிந்த மறுநாள் உறவுக்காரி ஒருத்தி ஒன் ஹஸ்பண்டை நாங்க எல்லோரும் மணின்னு தான் கூப்பிடுவாங்க. அவன் ஃபிரென்ட்ஸ் பாலுன்னு கூப்பிடுவாங்க. . ஆனா நீ பாலா என்னு கூப்பிடுறது ரொம்ப ஸ்டைலா இருக்குடீ என்றாள்.

நான் எப்போ அப்படி கூப்பிட்டேன்.

இப்போ நீ கண்ணை மூடிக்கிட்டே அப்படி ரெண்டு தடவை கூப்பிட்டியே.

அப்படியா என்று அதிர்ந்தாள்

இவர் பேர் என்ன என்றாள் கலா

அடி பாவி புருஷன் பேர் தெரியாதா அவன் பேரு பாலசுப்ரமணியன் என்றாள்

கலா திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டாள். அவள் தன் கல்யாண பத்திரிகையை கூட பார்க்கவில்லை. மாப்பீள்ளை பேர் மணி என்று சொல்வவதை மட்டும் கேட்டிருக்கிறாள்.

எப்படி இந்த வீட்டுல வாழ போறேன் கடவுளே என்று மனதுக்குள் குமைந்தாள் .

அந்தக் காலத்தில் பாலாவும் இவளும் காதலிக்கும்போது சின்ன மலை கோயிலுக்கு அடிக்கடி போவார்கள். அவன் சிவப்பாக அழகாக சுருள் முடியுடன் இருப்பான்; பூர்வீகம் கேரளா; இவளை விட வயதில் சின்னவனாக தோன்றுவான்.மூன்றாண்டுகள் காதல் வானில் பறந்தாள். திருமணம் முடிக்க முடியாது என்று சொல்லித்தான் அவன் பழகினான். ஆனாலும் அவன் தனக்கு கிடைத்ததே தன் பாக்கியம் என்று நினைத்தாள்.

போன மாதம் இவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வயது முப்பத்தியாறு என்றார்கள். ஆனால் தொப்பை போட்டு நாற்பது போல தெரிகிறது.. எதுவுமே பொருத்தமில்லை. ஒரு எழவும் தெரியல. மண்ணு மாதிரி அவரு அம்மா வளர்த்திருக்கிறா.

‘’என் பாலா கில்லாடி. எப்பவும் ஏதாவது ஜோக் அடித்து சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பான். மனசு மகிழ்ச்சியால் பொங்கி கொண்டே இருக்கும்’’.

அந்த நாள் நல்லா ஞாபகம் இருக்கு. அன்று அண்ணன் தன் நண்பன் நரேந்திரனை வீட்டுக்கு அழைத்து வந்தான். அவனை பார்த்தால் பழைய நடிகர் பாலாஜி போல தோன்றினான். எனவே இவள் அவனுக்கு பாலாஜி என்று தன் மனதுக்குள் பெயர் வைத்துக்கொண்டாள்

அவ்வளவு அழகான ஒருவனை அவள் தன் வாழ்வில் பார்த்ததேயில்லை.

அடிக்கடி வீட்டுக்கு வந்த இவன் ஒரு நாள் இவளது கல்லூரி வாசலில் வந்து நின்றான். அவளை வா என்று சொல்லிவிட்டு முன்னால் நடந்தவன் பஸ்ஸில் ஏறி ஒரு இடத்தில் இறங்கி அங்கு ஒரு சந்துக்குள் திரும்பினான். இவளும் திரும்பினாள். சிறிது தூரத்தில் ஒரு படிக்கட்டு வந்தது. அவன் ஏறினான் இவளும் ஏறினாள். அது தான் இவன் தங்கி படிக்கும் பிருந்தா ஹாஸ்டல் என்பது தெரிந்தது. இது பின் வாசல். அவன் அவளை தன் அறைக்குள் அழைத்து சென்றான். ஐந்து மணிக்கு வெளியே அழைத்து வந்து பஸ் ஏற்றி விட்டான்.

பிருந்தா ஹாஸ்டல் அவள் வாழ்வில் மறக்க முடியாத இடமாகிவிட்டது இப்படியே இரண்டு வருடங்கள் போய் வந்தாள். எந்த பிரச்சனையும் வராமல் அவன் பாதுகாப்பாக நடந்துகொண்டான்.

திருமணம் முடிக்க மாட்டான் என்று தெரிந்தும் இவள் இப்படி தன்னை அவனிடம் இழந்துகொண்டே இருந்தாள். திருமணமே வேண்டாம் என்று தன் வீட்டில் சொல்லி இருந்தாள். ஆனால் அம்மா இவளுக்கு இந்தக் கல்யாணத்தை ஏற்பாடு செய்துவிட்டாள்.

.. அவளுக்கு இரவில் பாலாவின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. நல்ல வேளை இவர் பெயரும் பாலு என்றிருந்தது. தன் கணவரை பாலா என்று இரவில் அழைத்தாள். பகலில் அவரை யாரோ போல நடத்தினாள். இவளால் இந்த இரட்டை வாழ்க்கையை தவிர்க்க முடியவில்லை.

வாழ்ந்தாக வேண்டும் வா வா பாலா’ என்று பாடுவாள்.

இன்றிரவு பாலாவை நினைக்கக்கூடாது என்று ஒவ்வொரு நாளும் முடிவு செய்வாள். ஆனாள் இரவில் அவள் கணவரை கண் கொண்டு காண இயலாது. அவர் பேசுவதும் சகிக்க முடியாது. செத்து போய்விடலாம் போலிருக்கும். விளக்கை அணையுங்கள் என்று கட்டாயப்படுத்துவாள். அவரை முற்றிலும் தவிர்க்க விரும்பினாள். அவரை எந்த வகையிலும் அவளால் ரசிக்க முடியவில்லை. இதற்கு ஒரே வழி இரவில் பாலாவுடன் கற்பனையில் வாழ்வது தான் என்று முடிவு செய்துவிட்டாள்.

இரவில் கணவனை பாலா பாலா என்று கொஞ்சுவாள்; பகலில் முறைப்பாள். இந்த போராட்டம் அவளுக்கு செட்டாக ஒரு வருடம் ஆயிற்று. அதற்குள் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பகலில் கடமையும் இரவில் காதலுமாக அவள் வாழ்க்கை ஓடியது.

பிருந்தா ஹாஸ்டல் பெயரையே தன் குழந்தைக்கும் வைத்தாள்.

அன்றும் இன்றும் பிருந்தா தான் இவளுக்கு சந்தோஷம். அவளால் மட்டுமே இன்று குடும்பத் தேர் ஓடுகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *