கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு தந்தை வீட்டிற்குச்சென்ற சகானிக்கு ‘குழந்தைகள் இரண்டு பேரையும் அழைத்து வராமல் விட்டு விட்டோமே…’ என கவலை மேலோங்க கண்ணீர் சிந்தினாள்.
துக்கம் தொண்டையை அடைக்க, உணவு உள்ளே செல்ல மறுத்து போராட்டம் நடத்தியது.
கணவன் மநேசன் ஒரு குடிகாரன். சம்பாதிப்பதை குடித்து செலவழித்து விடுவான். தலை வலிக்கு மாத்திரை வாங்க கூட பணம் தராமல் கையை நீட்டி கடுமையாக தாக்குவான். கடும் சொல்லால் திட்டுவான்.
தனது தந்தை மாதா மாதம் வாங்கி தரும் மளிகை பொருட்கள் குடும்பத்தினரின் பசியைத்தீர்த்தது. அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்றுத்தந்தது. பிரிந்தாலாவது திருந்துவார் என எண்ணி வந்தவளுக்கு பல யோசனை தடுமாற செய்தது. ‘போதையில் பிஞ்சுக்குழந்தைகளுக்கு நஞ்சு கொடுத்து விடுவாரோ?’ என பயம் கொண்டதால் உடம்பே வியர்த்தது.
உடனே சகோதரனை அழைத்துக்கொண்டு போனவளுக்கு அங்கே வீட்டின் முன் பலர் கூடியிருப்பதைப்பார்த்ததும் பயம் தொற்றிக்கொண்டது. ஆம் குழந்தைகள் வாயில் நுறை தள்ளியபடி இறந்த நிலையில் துணியால் போர்த்தப்பட்டு படுக்கையில் கிடந்தனர். கணவன் தலை கவிழ்ந்து கைகளில் விலங்குடன் விலங்காக….
“ஐயோ…..கடவுளே….எல்லாம் போச்சே…..” என பயங்கரமாக கத்தினாள்…!
“என்ன….? என்ன…? என்னாச்சு….? என அவளைச்சுற்றி அவளது தாய், தந்தை, சகோதரன் என அனைவரும் வந்து படுக்கயறையில் நிற்க ” ஒ…ஒன்னுமில்ல… கெட்ட கனவு…” என கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்து போர்வையை விலக்கி தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டாள்.
கணவனுக்கு போன் செய்தாள். மூன்று முறையும் எடுக்கவில்லை. நான்காவதாக எடுத்தார் “ஏங்க…. ஏங்க… குழந்தைங்க….?” என்றாள் அழுதவாறு.
“இப்பதான் ஸ்கூல்ல விட்டுட்டு, ஆபீஸ்ல லீவு சொல்லிட்டு, பொண்டாட்டிக்கு புடிச்ச மல்லிகைப்பூ வாங்கிட்டிருக்கேன். நீ கோவிச்சிட்டு போனா நா விட்டிடுவேனா..?ராத்திரி பூரா உசுரே இல்லாம தானே இருந்தேன்..!” என்றான்.
“என்னாச்சு? ஒடம்பு சரியில்லையா..?”
“மக்கு… உசுரு நீதான்னு சொன்னது புரியலையோ…? டியூப் லைட்” என்றான் பொய் கோவத்துடன்.
“நான் டியூப் லைட் தான். புருசங்கற கரண்ட் இல்லாம எரியல. அதான் நீங்க சொன்னது புரியல” என்று கலாய்ப்பாகக்கூறி முகத்தில் சிரிப்பை வெளிப்படுத்தினாள்.
தங்கள் மகளின் அழுத முகம் சிரித்தது கண்டு ஆனந்தம் கொண்டனர் சகானியின் பெற்றோர்.
Very nice story..
Very nice & meaningful story .. Keep it up sir..Shanmugam.L From Bangalore..