கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2016
பார்வையிட்டோர்: 5,930 
 
 

“அப்பா நீங்களும் அம்மாவும் நீண்டகாலம் அக்காவோடை இருந்திட்டியள். இனி எங்களோடை வந்திருங்கோவன். உங்களுக்கு நானும் மகள் தானே” என்று தனது இரண்டாவது மகள் வனிதா டெலிபோனில் கேட்ட போது நாகலிங்கம் என்ன பதில் சொல்வதென்று யோசித்தார்.

தானும் மனைவியும் மூத்த மகள் புனிதாவின் டவுன் ஹவுஸ்; பேஸ்மண்டில் குடும்பம் நடத்துவது வனிதாவுக்கு ஏன் பிரச்சனையைக் கொடுத்தது என்று அவருக்கு விளங்க அதிக நேரமெடுக்கவில்லை. தாங்கள் கனடா வந்ததால் தான் பிள்ளைகளுக்குள் சண்டை வந்தது. நிம்மதியாக கொழும்பிலேயே இருந்திருக்கலாம் என நாகலிங்கம் யோசித்தார்.

ஊரில் சண்டைக்கு பயந்து கொழும்பில் வந்திருந்த நாகலிங்கம் தம்பதிகள் பாங்கில் டிபொசிட்டில் இருந்து கிடைத்த வட்டிப் பணத்தில் நிம்மதியாக ஒரு அறை அனெக்சில், பம்பலப்பிட்டி கோயிலுக்குப் பக்கத்தில் வாழ்ந்தனர். பிரச்சனைகள் தீர்ந்தவுடன் ஊருக்குப் போய் வாழலாம் என்பது தான் அவர்கள் திட்டம். அப்போது தான் அவரின் மூத்த மகள் புனிதா முழுகாமல் இருக்கிறாள் என்ற செய்தி வந்தது. புனிதா குடும்பமும் வனிதா குடும்பமும் தான் நாகலிங்கம் தம்பதிகளை ஏஜன்சி மூலமாக 20 இலட்சம் ரூபாய் செலவு செய்து கனடாவுக்கு கூப்பிட்டவர்கள். தங்களுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பராமரிக்க புனிதா குடும்பத்துக்கு அவசியம் நாகலிங்கம் தம்பதிகளின் உதவி தேவைப்பட்டது. புனிதாவும் புருஷனும்; காலையிலை வேலைக்குப் போனால் வீடு திரும்ப இரவாகிவிடும். பாவம் குழந்தைகள். பேபி சிட்டரிடம் விட்டிட்டுப் போனால் அவர்கள் உழைக்கிற சம்பளத்திலை அரைவாசி கொடுக்க சரியாக இருக்கும் பிறகு மோர்ட் கேஜ் . கார் லோன் , இன்ஷூயூரன்ஸ் என்று செலவு வேறை. தன்னை கூப்பிட்ட கடன் வேறை. பிள்ளையளும் நல்ல பழக்கங்கள் பழகாது. உந்த பேபி சிட்டர்களிடம் போய்வருகிற பிள்ளைகளிண்டை வளர்ப்பு தெரிந்த விசயம்தானே என்று தன் மனைவி பொன்னம்மா முணுமுணுத்தபடியால் புனிதா வீட்டில் தங்குவதந்கு நாகலிஙகம் சம்மதித்தார்.

*********

கொடிகாமம், சாவகச்சேரி சந்தை குத்தகைக்காரர் குடும்பி வைத்த நாகலிங்கம் என்றால் அந்த வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும். மீசாலையில் இருபது பரப்பு காணியில் மா பலா மரங்களுடன்; இரண்டு வீடு, பளையில் தென்னந்தோட்டம் , பூனகரியில் மொட்டைக்கருப்பன் விளையும் 25 ஏக்கர் வயல், இவையெல்லாம் பொன்னம்மாவை அவர் மனைவியாக அடைந்தபிறகு அவர் கஷ்டப் பட்டு சேர்த்த சொத்து. பொன்னம்மா வந்த நேரம் அவர் தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. தன் மனைவி தனக்கு கொண்டு வந்த அதிர்ஸ்டத்தை பெருமையாக தன் நண்பர்களுக்கு சொல்லி பெருமைப்படுவார் நாகலிங்கம். கல்யாணமாகி மூன்று வருடங்களில் மூத்த மகள் புனிதாவும் அதன் பிறகு இரண்டு வருட இடைவெளியின பின்; இரண்டாவது மகள் வன்pதாவும் பிறந்தார்கள். சிறுவயது முதற் கொண்டே இரு சகோதரிகளும் ஒருவரை ஒருவர் விட்டு பிரிய மாட்டார்கள். நாகலிங்கத்தின் குடும்ப ஒற்றுமையைப்; பார்த்து ஊரே வியந்தது. பாகுபாடு காட்டாமல் இரு குழந்தைகளையும் பொன்னம்மா வளர்த்;தாள். நகை நட்டோ, உடுப்புகளோ அல்லது படிப்பதுக்கு வசதிகளோ எல்லாம் வேறுபாடின்றி புனிதாவுக்கும் வனிதாவுக்கும் கிடைத்தது. ஏன் அவர்கள் கலியாணத்தில் கூட அண்ணனும் தம்பியும் இருவருக்கும் கணவர்களாக கிடைத்தது அவர்கள் கொடுத்து வைத்த அதிர்ஷ்டம். அதுவுமன்றி புனிதா வனிதா குடும்பங்கள் ஒன்றாக கனடாவுக்கு புலம் பெயர்ந்து கூட்டுக் குடித்தனம் அங்கு வாழத் தொடங்கியது சகோதரிகளுக்கிடையே உள்ள இறுக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. பிரச்சனையில்லாமல் அவர்கள் வாழ்க்கை போய் கொண்டிருந்த போதுதான் பெற்றோர் கனடாவுக்கு புலம்பெயர்ந்தனர். தங்களோடை இரண்டு பிள்ளைகளிண்டை குடும்பமும் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை.

வனிதா சிறுவயது; முதல் கொண்டே வாய்க்;காரி. எந்த விசயமும் தன் மனதுக்கு ஏற்றபடி நடக்கவேண்டும் என நினைப்பவள். தனக்கு ஒரு வேலை கிடைத்தது என்ற பெருமை வேறு. அக்கா தங்கைக்குள் ஏற்பட்ட ஒரு சிறு வாக்குவாதத்தால் இரண்டு குடும்பங்களும் பிரிந்தன. “அம்மாவும் அப்பாவும் இங்கை வந்த நாள் முதல் கொண்டு உண்டை பிள்ளையளை கவனிக்க பேஸ்மெண்டிலை இருந்து கஸ்டப் படுகினம். நான் அப்பாவை கூட்டிக் கொண்டு போறன் அம்மா உன்னோடை இங்கை இருக்கட்டும்” என்று பாகப்பரிவினைப் பேச்சைத் தொடங்கினாள் வனிதா. அவளும் புனிதாவைப் போல் போட்டிக்கு ஒரு டவுன் ஹவுஸ் வாங்கிப் போனாள். ஜயாவும் நாகலிங்கமும் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை.

அவளுக்கு குழந்தைகள் இல்லாததால் பேஸ்மண்டை வாடகைக்கு கொடுத்து விட்டு ஒரு அறையை பெற்றோர் வந்திருக்க ஒதுக்கி வைத்தாள். தாய் தகப்பனுக்கு கிடைக்கிற வெல்பெயர்(றநடகயசந); பணத்தில் அரைவாசி புனிதாவின் மோர்ட்கேஜ் கட்டப் போகிறது என்று அவளுக்குத் தெரியும். இப்போ தனக்கும் மோர்ட்கேஜ் கட்ட வேண்டிய நிலை. அதனால் அவர்களின் வெல்பெயர் பணத்தில் கொஞ்சத்தை தனக்குத் தந்தால் என்ன? என்பது அவள் வாதம். அதன் முடிவே தகப்பனிடம் டெலிபோனில் அந்த வேண்டு கோள்.

“என்னவாம் வனிதா?. அங்கை வந்து எங்களை இருக்கட்டாமே?” என்றாள் ஜெயா. மூன்று மாதங்களுக்கு முன் வனிதா தனியாக குடும்பம் நடத்த போனபோதே இந்த பிரச்சனை உருவாகும் என்பது ஜெயாவுக்கு முன்கூட்டியே தெரியும். மகளின் குணம் தாய்க்குத் தெரியாதா?

“ ஓம். என்ன பதிலை அவளுக்கு சொல்லுறது எண்டு எனக்குத் தெரியயில்லை. அவளும் மகள் தானே. நாங்கள் இங்கை வந்த நாள் முதல் அக்காவீட்டிலை தான் இருக்கிறோமாம். அதுமட்டுமல்லாமல் அவவிண்டை பிள்ளையளைக் கூட வளர்க்க எங்கடை நேரத்தை செலவு செய்யறோமாம். தானும் மகள் தானே என்கிறாள்.” என்றார் நாகலிங்கம் மனைவியின் பதிலை எதிர்பார்த்து.

“நீங்கள் சொன்னனீங்களே நாங்கள் அங்கை வந்தால் ஆர் புனிதாவிண்டை பிள்ளைகளை பாக்கிறது எண்டு?”

“சொன்னனான் தான். அவளின் பிடிவாதக் குணம்; உனக்குத் தெரியும் தானே. அப்படி இரண்டு பேரும் வரமுடியாவிட்டால் என்னை மட்டும் அங்கை வந்து இருக்கட்டாம்.”

“ நல்லாய் இருக்கு கதை. அப்ப நான் இங்கை, நீங்கள் அங்கையே. உந்த வெல்பெயர் காசெடுத்து மோர்ட்கேஜ் கட்டுறதுக்காக, கலியாணம் முடிச்ச நாள் கொண்டு பிரியாத எங்களைப் பிரிக்கப் பாக்கிறாளே?” பொன்னம்மாவுக்கு கோபம் வந்தது.

“இதைப் பற்றி புனிதாவோடை கதைத்துப் பார்ப்போமே. அவள் ஓமெண்டால் கொஞ்ச நாளைக்கு கேட்டதுக்காக போயிருப்பம். என்ன?” நாகலிங்கம் ஜெயாவைப் பார்த்து கேட்டார்.

“ வேண்டாம். புனிதா சம்மதிக்காட்டால், வனிதா பிறகு புனிதாவோடை வரிஞ்சு கட்டிக்கொண்டு போகப் போறாள். ஏற்கனவே இரண்டு பேருக்குமிடையே பிரச்சனை”.

“உவையள் இரண்டு பேரும் எங்களை கனடாவுக்கு கூப்பிடும் போது உதுக்குத்தான் நான் வரத் தயங்கினனான். இப்ப பாத்தியே நடக்கிறதை?” நாகலிங்கம் குறைப்பட்டார்.

“ ஆர் கண்டது கலியாணத்துக்கு முதல் ஒட்டெண்டால் ஒட்டாயிருந்தது. ஒருத்திக்கு ஒண்டெண்டால் மற்றவள் துடித்துப்போவாள். இப்ப இந்த இரண்டும், நாய் கடி பூனை கடி என்று இப்படி நடக்குமெண்டு ஆர் கண்டது. குடும்பம் எண்டு வந்ததும் எரிச்சல் பொறாமை எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக்கொள்ளுது. ஏங்களாலை இதுகளுக்கிடையே பிரச்சனை வலுக்கக் கூடாது. எல்லாம் இந்த பிச்சை சம்பளத்தாலை தான். எதுக்கும் நாங்கள் பிள்ளையளிடம் இருந்து விலகி இருக்கிறது நல்லது. அவை அவையள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். “

“ அதைத் தான் நான் யோசிக்கிறன். இப்படி எப்போதாவது ஒரு நாள் நடக்கும் எண்டு தான் சில வருஷங்களுக்கு முந்தி சீனியர் அப்பார்ட்மெண்டுக்கு எழுதிப் போட்டனான். போன கிழமை தான் ஒரு இடமிருக்கு எடுக்க விருப்பமா எண்டு கேட்டு கடிதம் வந்திருக்கு” என்று கூறிவிட்டு, நாகலிங்கம் பொன்னம்மாவின் பதிலை எதிர்பார்த்தார்.

“பாத்தியளே எல்லாம் கடவுள் செய்த உதவி. எழுதி போடுங்கோ நாங்கள் எடுக்கிறோமெண்டு. கொழும்பிலை தனியாக இரண்டு பேரும் வெள்ளவத்தையிலை அனெக்சிலை இருக்கயில்லையே. தூரத்திலை இருந்து கொண்டு தேவைப்பட்ட நேரம் அவையளுக்கு உதவுவோம். அப்ப இந்த பிரிவினைப் பிரச்சனையில்லை. உவையள் இரண்டு பேரும் எங்களை கனடாவுக்கு கூப்பிட செலவு செய்த காசை திருப்பிக் கொடுத்துப் போடுங்கோ. உங்களுக்கு தான் கொழும்புலை உள்ள பாங் டிப்பொசிட்டிலை காணி விற்ற காசு 50 லட்சம் இருக்கு. அது இப்ப வட்டியோடை சேர்ந்து உவையளின்டை காசை கொடுக்க போதுமானதாயிருக்கும். பிறகு ஒரு நேரம் அதை பிள்ளையள் சொல்லிக்காட்ட கூடாது பாருங்கோ” என்றாள் பொன்னம்மா தன் குடும்பத்தின் சுயமரியாதையை நிலைநிறுத்த.

“நீர் சரியான ராங்கிக்காரி. என்னை விட ஒரு படி கூட போயிட்டீர். உந்த காசு திருப்பி கொடுக்கிற விசயத்தை அவையளோடை இப்ப கதையாதையும். சந்தர்ப்பம் வரும் போது அதை பற்றி பேசுவோம். மாதம் முடிய நாங்கள் சீனியர் அப்பார்ட்மெண்டுக்குப் போகப் போறோம் எண்டு இரண்டு பேருக்கும் பட்டும் படாமலும் சொல்லு என்ன?” என்று பொறுப்பை பொன்னம்மாவிடம்; கொடுத்து விட்டு தனக்கு வந்த கடிதத்துக்குப் பதில் போட அறைக்குள் போனார் நாகலிங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *