அமைதியாகத்தான் இருந்தது. உறவினர்கள் வரும் வரை
அந்தக்குடியிருப்பு பகுதி , அதில் வசித்த வயது அறுபதைக் கடந்த தம்பதியருக்கு வாரிசு என்று யாரும் இல்லை, அது பற்றிய அவர்கள் கவலையும் கொண்டதில்லை அனைவரிடமும் அன்பு காட்டிப் பழகுவார்கள் , சொந்த ஊர் நாகப்பட்டினம் , மனைவியின் சொந்தங்கள் இங்கு வசிப்பதால் துணைக்கு ஆகட்டுமே என்று சொந்த ஊரை விட்டு, வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகைக்கு வீடெடுத்து இங்கே வசிக்கின்றனர்
வந்த ஒரு வருடத்தில் எல்லாரிடமும் சகஜமாக பழகும் மாணிக்கம் அய்யா, சுஜாதா அம்மையார் தம்பதியில்தான், சுஜாதா அம்மா இறந்து கிடத்தி வைக்கப்பட்டுள்ளார் நடுக்கூடத்தில்.
மாணிக்கம் அய்யா பிரமைப் பிடித்தது போல் ஒரு ஒரமாக, நெற்றியில் விபூதி பூசி வேட்டியணிந்தபடி மனைவியின் இறுதிக் காரியத்திற்காக, உறவினர்களின் வருகைக்குக் காத்துக்கொண்டு இருந்தார்.
சுஜாதாம்மா கையால் தினம் சாப்பிட்ட தெருநாய் ஒன்று
அங்குமிங்கும் போய் வந்து சிறிது நேரம் கழித்து வீட்டு வாசலில் அமைதியாக உட்கார்ந்து இருந்தது மாணிக்கத்தைப் பார்த்தபடி
ராத்திரியே முடிச்சிடுச்சு போல.. செய்து வைத்த சாப்பாடு எல்லாம் அப்படியே இருக்கு…
இவரு கவனிக்கலை.. தூங்குறாங்க என நினைத்து அலட்சியமாக இருந்து வீட்டார்.. அப்பவே கவனித்து இருந்தால் உசிரைக் காப்பாற்றி இருக்கலாம் எனவும்
மற்ற படி அந்த அம்மாவிற்கு வேறு உடம்பு ஒன்றும் இல்லை, நல்ல படியாதான் கோயில், பூங்கா எல்லாம் சுற்றி வந்தாங்க..
இவரு சரியான நேரத்திற்குப் பார்த்து உதவி பண்ணலை, அதான் போயிட்டாங்க.. எனவும்
ஹோம்ல போய் தங்கி இருந்தால் என்ன? காசா இல்லை,
அவங்க ஒழுங்கா உடம்பை கவனித்துப் பார்த்து இருப்பாங்க..
சொத்து சுகம் இருந்து என்ன பயன்? கொள்ளி போடக்கூட பிள்ளை இல்ல.. எனவும்
எப்படியும், ஒரு பெரிய ரூவா சொத்து தேறும். யாரோ , எவனோ அனுபவிக்கப்போறான். எனவும்,
அவங்களுக்கு பதிலா இவரு போயி இருக்கலாம்.. இந்த ஆளுக்கு ஒரு சுடு தண்ணீர் கூட வைக்க வராது.. இவரு பாடு கஷ்டம்தான்.. திண்டாடித் தெருவில் நிற்கப்போறாரு இனி,,
இவையெல்லாம் உறவினர்கள் எனும் மனிதப் பிறப்புக்களின் நரம்பில்லா நாக்கின் சொல் தாண்டவங்கள். வார்த்தைகளில் வலியைத் தடவி வீசிக்கொண்டு இருந்தனர்
இவையெல்லாம் மாணிக்கத்திற்கு காதில் விழாமல் இல்லை. வாங்கிக்கொண்டு கரங்கள் கோர்த்தபடி, கண்களில் கண்ணீர் கோர்த்து நேற்றைய நினைவில் இருந்தார்
என்னங்க! ராத்திரிக்கு. சப்பாத்தி பண்ணி வைத்து இருக்கேன்,
லேசா தலை சுத்துது, கொஞ்சம் நேரம் படுத்துவிட்டு வருகிறேன் வந்து சாப்பிடலாம் எனக் கூறி சென்றவள்தான்.
இரவு பத்து மணி இருக்கும் போய் பார்த்தபோது சுஜாதா அசதியாய் தூங்கிக் கொண்டு இருந்ததால் தொல்லை பண்ண வேண்டாம் என வந்து இவரும் படுத்து உறங்கிவிட்டார்.
தலை சுற்றுகிறது எனப் படுத்தவள் , காலை எழுந்திருக்கவே இல்லை. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்தான் வந்துப் பார்த்துதான் அம்மாவின் இறப்பை மாணிக்கத்திற்குத் தெரிவித்தார்கள்.
அடக்கம் செய்தவுடன் உறவினர்கள் தனது குடும்பக் கடமை ஒன்று முடிந்ததாக கருதி அனைவரும் விடை பெற்றுச் சென்றனர். மாணிக்கத்திடம், சுஜாதவின் நினைவுகளைத் தவிர.
திருமணம் ஆனதிலிருந்து முதன் முறையாக தனிமையை எதிர்கொண்டுள்ள மாணிக்கம். வாசலில் தனியாக அமர்ந்து யோசித்து இருக்கையில்..
மணமாகி நாற்பது ஆண்டுகள், மகாலட்சுமி மாதிரி வந்தாள், அப்படியே போயிட்டாளே! சொத்தைப் பாதுகாத்தோம், மேலும் மேலும் என சம்பாதித்தோம், சொந்தங்கள் இருந்தும் சொத்தால் பிரிவு ஏற்பட்டதும், இன்று இவர் தனித்து விடப்பட்டதும் அவருள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது
பக்கத்து வீட்டுக்காரர் வந்து இரவு சாப்பாடு எடுத்து வந்துத் தருவதாகக் கூற, இருப்பதாக கூறி மறுத்துவிட்டார்.
நாய் வழக்கம் போல வந்து சிறிது நேரம் நின்று பார்த்து விட்டுப் போனது. அதைப் பார்த்ததும் இவருக்கு சுஜாதா வைத்த உணவு நினைவு வரவே, உள்ளே சென்று மனைவி இறுதியாக செய்து வைத்த சப்பாத்தி ஹாட் பாக்ஸில் அப்படியே இருக்கக் கண்டு,
இரண்டினை எடுத்து நாய்க்கு வைத்து விட்டு மீதியை வைத்துக் கொண்டு அமர்ந்து சாப்பிடலானார்.
அதில் சுஜாதாவின் கை மணம் கண்டார், அந்த நிமிடம் வரை சுஜாதா கூடவே இங்கேயே இருப்பதாகவும், தன்னைப் பார்த்துக் கொண்டு இருப்பது போலவும் நினைத்தபடி சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றார். மனத்தில் பழைய நினைவுகளோடு,
மாணிக்கத்தை அடுத்த வேலை உணவிற்கு எவர் கையையும், எதிர் நோக்க வைக்காமல் விட்டுச் சென்றுள்ளார் சுஜாதா.
பட்டினியால் திண்டாடியது அந்தத் தெரு நாய் மட்டும்தான் ….