“நாட்டு நிலைமை மிகவும் மோசமாக இருந்த காலங்களில் கூட, கல்லூரி அனைத்து துறைகளிலும் ஓங்கி நிற்க அயராது பாடுபட்ட மாமனிதர், எமது கல்லூரியின் பொற்கால அதிபர் திருவாளர் சிவசுந்தரம் அவர்களை கல்லூரி பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன்” என்று பழையமாணவர் சங்கத் தலைவர் பாபு சொன்ன போது பலத்த கர கோஷங்களுக்கும் விசிலடிகளுக்கும் ஆரவாரங்களுக்கும் மத்தியில் கதிரையை விட்டு எழும்புகிறேன் நான். கண்களில் நீர்த்திவலைகள், மனம் எங்கும் பல பட்டாம் பூச்சிக்கள், உடம்பு சற்று நடுங்குகின்றது.
“ஒரு சின்னஞ் சிறிய தீவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் எங்கள் கல்லூரியின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் கோலாகலமாக நிகழும் இந்த நூற்றாண்டு விழாவில் பங்குபற்ற எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்காக நான் ஆண்டவனுக்கு முதலில் நன்றி செலுத்துகிறேன். சிவகெங்கை கிராம மக்களும், சிவகெங்கை கல்லூரி மாணவர்களும் அன்று முதல் இன்று வரை கல்லூரியின் வளர்ச்சியை தாங்கள் சுவாசிக்கும் சுவாசக் காற்றாக நினைத்து வாழ்வதால் என் கடமையைச் செய்வது மிக இலேசாக இருக்கிறது. நான் சிவகெங்கையர் கல்லூரியின் அதிபர் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகின்றேன். நான் நாலடி பாய நினைத்தால் அவர்கள் எட்டு அடி பாய்கிறார்கள். கல்லூரியின் பெருமைக்குக் காரணமான ஈடுபாடும் அர்ப்பணிப்பும் உள்ள சிவகெங்கையர் ஆசிரியர்களுக்கும், நன்றியுணர்வும் செயற்திறனும் மிக்க எமது பழைய மாணவர்களுக்கும், நன்கு கற்பதையும் கல்லூரியில் நிகழும் புறச்செயற்பாடுகளுக்கான தமது பங்களிப்பை வழங்குவதையும் தம் வாழ்க்கை நோக்காகக் கொண்ட கல்லூரி மாணவர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். சிவகெங்கை வளர்த்த உங்களை எல்லாம், கடல் கடந்து வந்து இங்கு வட அமெரிக்காவில் சந்திப்பதில் அளவில்லா ஆனந்தமடைகிறேன்” உணர்ச்சி வசப்பட்டு மனம் திறந்து பேசுகிறேன்.
எனது பேச்சின் பின் நன்றியுரை கூறியவர் மிகச் சுருக்கமாக எல்லோருக்கும் நன்றி கூறுகிறார். எனக்கு இன்னும் காற்றில் பறப்பது போல் பிரமையாக இருக்கிறது. இந்த ஆசிரியத் தொழிலுக்கு இணை ஏதும் இல்லை மீண்டும் மகிழ்வுடன் நினைத்துக் கொள்கிறேன். மேடையால் இறங்கிய என்னைச் சூழ பலர் வந்து தங்கள் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் மேடையில் நான் இருந்த போது என்னையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த இரட்டை விழிகளுக்குச் சொந்தமான ஒரு நடுத்தர வயதுப் பெண் என்னை அணுகுகிறாள். அவளது பெரிய கண்கள், அழகிய சிறிய உதடுகள், சுருட்டைத் தலை மயிர், கூரான நேரிய மூக்கு யாவுமே மிகப்பழக்கமான உணர்வைத் தருகின்றன. “என்னைத் தெரியுதோ?” சிரித்தபடி அவள் கேட்டபோது தான் அந்தச் சிரிப்பு “ஓ தேவகி” என ஒருகாலத்தில் என் தேவகியாக இருந்த அவளை இனம் காட்டுகிறது. “நாங்கள் நீயுசிலாந்திலிருந்து இருந்து போன கிழமைதான் கனடாவுக்கு வந்தனாங்கள். ஒரு மகள் இங்கை தான் இருக்கிறா. அவவிட்டை வந்தவிடத்திலை கணக்காக உங்களையும் பாக்கக் கிடைச்சிருக்குது. இது தான் என்ரை husband பாலா. இவரும் உங்கடை பள்ளிக்கூடம் தான்” என்று ஒரு உயரமான கண்நிறைந்த புருஷன் என்று சொல்லக்கூடிய ஒருவரை அறிமுகப் படுத்துகிறாள் “நான் உங்களைப் பற்றி நிறையக் கோள்விப்பட்டிருக்கிறன். Glad to meet you! “என்கிறான் பாலா. “சிவாவும் நானும் same university யிலிருந்து same course செய்து வெளிக்கிட்டனாங்கள். நான் கலியாணம் கட்டிப் பிள்ளைப் பெத்து வளத்தது தான் செய்த வேலை. சிவாவைப் பாருங்கோ. wow, what a dedicated successful principal.” புருஷனைப் பார்த்துச் சொல்லுகிறாள். பின்னர் என் பக்கம் திரும்பி “எனக்கு உங்களைப் பாக்க நல்ல சந்தோஷமாக இருக்குது. ஊருக்குப் போக முன் கட்டாயம் எங்கடை வீட்டை ஒருக்கா நீங்கள் வரவேணும்” என்று சொல்லி விடை பெற்றுக் கொள்கிறாள்.
பழைய மாணவர் சங்கத் தலைவர் பாபுவின் காரில் திரும்பி அவன் வீட்டுக்குப் போகும் போது அவன் பல கதைகளைச் சொல்லிக்கொண்டு வருகிறான். ஆனால் ஏன் மனம் தேவகியின் நினைவுகளில் ஐக்கியமாகிறது. வீட்டுக்குப் போனதும் களைப்பாய் இருக்கிறது என எனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் போய்க் கொள்கிறேன்
“என்னத்துக்கு இங்கை வந்தனி? எந்த faculty?” “Agriculture” “அது என்ன Agriculture, புல்லுப்பீடம்! புல்லைப் புடுங்கு, தலையிலை வை, இப்ப சொல்லு, என்ன பீடம்?” “புல்லுப்பீடம்”; “எங்கை இனி நட பாப்பம் எல்லாரும் தான், March NOW” அவளும் இன்னும் சிலரும் கண்மல்க நடக்கும் போது என் மனம் அவளில் லயித்துக் கொண்டது. இந்த சின்னவிடயத்துக்கு மனம் கலங்கிப் போகிறாளே எனப் பாவமாயும் இருந்தது. எனக்கு இந்த ragging எல்லாம் ஒத்துவராது. தற்செயலாக கண்டது தான். வேகமாய் நடந்து அவர்களை அணுகுகிறேன். “என்ன பெயர் உங்களுக்கு?” என்கிறேன். அவள் அதற்கும் அழுமாய் போல் “தேவகி” என்கிறாள் “எந்தப் பள்ளிக்கூடம்?”; “ செங்கோட்டை பெண்கள் கல்லூரி” ”ஒ அதுதான் இத்தனை sensitive ஆக இருக்கிறாளோ, தனிப் பெண்கள் பாடசாலையில் படித்ததால் ஆண்களின் குறும்புகளுக்கு முகம் கொடுக்கும் அனுபவம் இருந்திருக்காது. ஆண் சகோதரங்களும் இருக்கமாட்டார்களோ, என்னவோ என நினைத்தபடி “வீட்டில் நீங்கள் தான் ஒரு பிள்ளையோ?” என விசாரிக்க “இல்லை இரண்டு தங்கைச்சிமார் இருக்கினம்” என்கிறாள். “இந்த ragging புதுசா வாற ஆட்களை அறிந்து கொள்ள சில பேர் கைக் கொள்ளுற குறுக்கு வழி. பொதுவாக ஒருத்தரும் யாரையும் துன்புறுத்த வேண்டும் எண்டு இதைச் செய்கிறதில்லை. ஒரு fun ஆகத் தான் செய்யிறது. இப்படி அறிமுகமாகி பலபேர் காதலர்களாக மாறியிருக்கினம். So don’t worry too much” என்கிறேன். என்னை second year agro என அறிமுகம் செய்து கொள்கிறேன்.
அதன் பிறகு சந்திக்கும் பொழுதுகளில் notes offer பண்ணுறன். பின் மெல்ல மெல்ல அவளுடன் நெருங்கச் சந்தர்ப்பம் வர காதல் எம்மை அறியாமலே எங்களிடையே வளர்ந்து விடுகிறது. தொடர்ந்து M.Sc செய்யலாம் அல்லது எங்கேயாவது கிட்டவாக வேலை எடுத்தால் அவளுடன் அவளின் course முடியும் வரை தொடர்பைப் பேணலாம். அதற்குப் பிறகு ஆறுதலாக திருமணத்துக்கு வழி தேடலாம் என்றெல்லாம் கட்டிய கனவுகளை அப்பாவுக்கு வந்த சடுதியான மாரடைப்பின் விளைவான இறப்பு தகர்த்து விடுகிறது.
படித்து முடிந்தவுடன் வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றேன். பின்னர் ஆசிரியர் வேலை கிடைச்ச கையோடை மாத்துச் சம்பந்தமாக கலியாணம் பேசி வருகிறார்கள். தங்கைச்சிக்கு ஒரு ஆசிரியர் மாப்பிள்ளை சீதனமில்லாமல் கிடைப்பதற்காக என்ரை வாழ்வை, என் கனவை இழக்க வேண்டிய துர்ப்பாக்கியம் என் விதியாகிறது. அதைத் தடை செய்ய பலவிதமாய் முயற்சி செய்கிறன்.
“அம்மா நான் ஒரு girl ஐ love பண்ணுறன்” தயங்கித் தயங்கிச் சொல்கிறேன். “அப்ப இதுக்கு என்ன வழி தம்பி சொல்றாய்? தங்கைச்சிக்கு நல்ல இடம் வந்திருக்குது. நாங்கள் உங்களைப் படிப்பிச்சமே தவிர எதையும் சேர்த்து வைக்கேல்லை. நீ உழைச்சு அவளுக்கு சீதனம் தேடுகிறதுக் கிடையிலை உங்கடை இரண்டு பேற்றை வயதும் வட்டுக்கை போயிடும். அப்பாவும் இல்லை——” அம்மாவின் குரல் பிசிறுகிறது. “அம்மா என்ரை ஆசைகளை, கனவுகளை கொஞ்சமாவது நினைச்சுப் பாருங்களன்.” “சரி, இதை விட்டால் தங்கைச்சிக்கு என்ன வழி செய்வாய் எண்டு சொல்லு பாப்பம். எல்லாரும் காதலிக்கிறது தான் தம்பி ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு அது ஒத்து வரவேணும் மோனை” “ஆம்பிளைப் பிள்ளைகளை பலிக்கடாவாக்கிறதுக்குத் தானே பெறுகிறனீங்கள்.” கோபத்துடன் வெளியேறுகிறேன்.
அன்றிலிருந்து அம்மா தினமும் முகத்தை நீட்டி வைச்சுக் கொண்டு கண்ணீர் வடிக்கிறா. தங்கைச்சியும் மனம் விட்டுக் கதைகிறாளில்லை. தேவகியைப் போய் சந்திக்கிறேன். நிலைமையை விளக்குகிறேன் “உங்கடை வீட்டிலை கொஞ்சமாவது சீதனம் தருவினமோ?” பரிதாபமாய்க் கேட்கிறன். அவள் என்னைக் கோவித்துத் திட்டியிருந்தாலாவது தாங்கியிருப்பன். “உங்கடை ஒரு தங்கைச்சிக்கு சீதனம் தேடுறது கஷ்டம் என்றால் நாங்கள் மூண்டு பொம்பிளைப் பிள்ளைகள் இருக்கிற சூழல் எப்படிருக்கும்? சொல்லுங்கோ பாப்பம்.” திரும்ப என்னைக் கேட்கிறாள்.
முடிவில் என் மேல் சுயபச்சாதமும், வாழ்க்கையில் வெறுப்பும், என் உறவுகளில் கோபமும் வந்தது தான் மிச்சம். மாத்துத் திருமணம் முடிந்து விடுகிறது. ஆனால் தேவகியை மறக்க முடியவில்லை. வீட்டில் எதைச் சொன்னாலும் ”என்ன அவளோடை compare பண்ணுகிறியளோ?” என்று மனுசி கேட்டுக் கேட்டு மேலும் ஆத்திரத்தை அதிகப்படுத்தினாள். ஏதோ பெயருக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றேன். நான் உழைச்சுப் போடுகிறேன். நீ சமைச்சுப் போடு அவ்வளவு தான் என்ற மாதிரி நமது தாம்பத்தியம் ஆனது. வீட்டில் இருக்கும் நேரங்களை குறைக்க கல்லூரியில் உள்ள ஈடுபாடு உதவியது. கிடைத்த அதிபர் பதவி உயர்வு சொந்த வாழ்க்கையில் அக்கறை குறைந்து சமுதாய வாழ்வில் முன்நிற்க வழிவகுத்தது. தொழிலில் கிடைத்த வெற்றிகள் மனக்காயத்துக்கு ஒத்தடம் போட்டன.
இரவு பூரா நித்திரை வரவில்லை. விடியக்காலையில் கொஞ்சம் அயர்ந்திருப்பேன். தேவகியின் phone call தான் என்னை எழுப்பியது. “எப்படியிருக்கிறியள்? நேற்று அதிகம் கதைக்க முடியவில்லை, 25 வருடங்களுக்குப் பின் சந்திச்சிருக்கிறம். இண்டைக்கு ஒரு program மும் இல்லை எண்டால் எங்கடை வீட்டை வாங்களேன்” என்கிறாள். எப்படி இவளால் என்னை மன்னித்து தன்னுடைய விருந்தினராக அழைக்க முடிகிறது என வியந்தாலும் மிக்க மகிழ்ச்சியுடன் “நிச்சயமாக வருகிறேன்” என்கிறேன்.” Okay, நான் 11 மணிக்கு உங்களை pick up பண்ண வாறன்”; என்கிறாள்.
அவளின் மகள் மதுவின் காரில் போகும் போது குடும்ப விபரங்களைப் பரிமாறிக் கொள்கிறோம். வீட்டுக்குள் நுழைந்ததும் “வீடு மிகச் சுத்தமாக, கலை நயத்துடன் அழகாக இருக்கிறது” என்கிறேன். “எல்லாம் அம்மாவைப் பார்த்துப் பழகியது தான்”; என்கிறாள் மது. கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள், என் பயணத் திட்டங்கள், அவர்களின் புகலிடப் பதிவுகள் என்று சுவாரஸ்யமாய்க் கதைத்துக் கொள்கிறோம். பல தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறோம். “அம்மா, இந்தா உனக்குத் தான் கோல், சுதன் கதைக்கிறான்” என்று மதுவின் கணவர் அவளிடம் தொலைபேசியைக் கொடுக்கிறார். “Excuse me” என்று சற்றுத் தள்ளிப் போய் நின்று கதைக்கிறாள் அவள். அம்மாவுடன் தினமும் கதைக்காவிட்டால் தம்பிக்கு ஜீரணிக்காது எனப் பகிடியாக ஆனால் அவன் அன்பைப் பற்றி பெருமையாகச் சொல்கிறாள் மது. “அவன் எழும்பினவுடனை email போடுவான், பிறகு படுக்க முன் phone எடுத்துக் கதைப்பான். University ல் இருக்கும் போதும் அப்படித்தான். எங்கடை காலத்திலை படிக்க வேண்டு போனால் பிறகு 3, 4 மாதங்களுக்கு பிறகு தானே வீட்டுக்காரரைக் காணலாம், ஆனால் இங்கை தொழில் நுட்ப வளர்ச்சி webcam, video chat எண்டு பல வகையிலை எல்லாரையும் கிட்ட வைச்சிருக்குது” என்கிறான் பாலா. என்ன இருந்தாலும் என் வீட்டில் இப்படி ஒரு அன்புப் பிணைப்பை பாக்க முடியுமா என மனம் ஆதங்கப்பட்டுக் கொள்கிறது.
“சரி சாப்பிடுவோம்” எனப் போன போது வட்டமான சாப்பாட்டு மேசையில் நான்கு கதிரைகள் வைக்கப்பட்டிருந்தன. “நான் பரிமாறுகிறேன், நீ இரு எனச் சொன்ன அவளிடம் “எப்பவும் நீங்கள் இப்படித் தான். இன்னொரு கதிரை போடலாம், நீங்களும் இருங்கோ. சேர்ந்து சாப்பிடலாம்.” எனச் செல்லமாக கடிந்து கொள்கிறாள் மது. மதுவின் கணவனோ “You guys eat first, so you can talk freely in Tamil, I will eat later besides I need to make a phone call” என்கிறான்.” ”Ok thanks, sweetie”, மது மிக இயல்பாகச் சொல்லிக் கொள்கிறாள். சாப்பாட்டின் பின் பாலா ஏதோ அலுவலாகப் வெளியே போகவேண்டும் என வெளிக்கிட “Uncle அம்மாவுடன் கதைத்துக் கொண்டிருங்கோ, John work க்கு போகேக்கை உங்களை drop பண்ணிவிடுவார்” என்று மதுவும் போய் விட்டாள்.
அப்படித் தனிமையில் விடப்பட்ட போது “உங்களுக்கு என்னிலை கோவம் இல்லையே? என்னைக் கூப்பிட்டு எப்படி இப்படி உபசரிக்க முடிகிறது?” என அவளைத் தயங்கித் தயங்கிக் கேட்கிறேன். என்னை ஒரு ஆழமான பார்வை பார்க்கிறாள் அவள். பின் அமைதியாக “கோவம், ஆத்திரம் எல்லாம் அப்ப வந்தது தான். ஒரு மாசத்துக்கு மேலாய் உங்களை நினைச்சு நினைச்சு அழுதிருப்பன். பிறகு உங்கடை நிலைமையையும் யோசித்துப் பாத்தன். மெல்ல மெல்ல யதார்த்தத்தை எண்ணி என்னை நானே சமாதானம் செய்து கொண்டன்…….. ஆனால் உங்களிலை வைச்ச அன்பு எப்படி மறைய முடியும்? இங்கு வந்து நிக்கிறியள் எண்டதும் உங்களைச் சந்திக்க வேணும், நீங்கள் எப்படி இருக்கிறியள் எண்டு அறிய வேணும் எண்டெல்லாம் ஆசை வந்தது. சந்தோசமாய் இருக்கிறீர்கள் தானே?” கேட்டு விட்டு என் கண்களை ஊடுருவிப் பாக்கிறாள் அவள். எனக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
கொஞ்ச நேரம் கழித்து “உங்களைப் போல் அன்பான அந்நியோன்யமான, குடும்பம் எனக்கு அமையவில்லை” என்கிறேன். எனது குரல் தழுதழுக்கிறது. “அமையாவிட்டால் அமைக்க முயற்சிக்க வேணும் சிவா! கலியாணம் கட்டின புதிசிலை பாலாவை உங்களுடன் தான் நான் எல்லாத்துக்கும் ஒப்பிட்டுப் பாப்பேன். சாப்பாடு ருசியாயிருக்குது எண்டோ நான் அழகாயிருக்கின்றேன் எண்டோ ஒரு நாள் கூடச் சொல்லியிருக்கமாட்டார். மகள் பிறந்த போது அவளுடன் கூட நேரத்தை செலவழிப்பதில் அவருக்கு அக்கறை இருக்கேல்லை. உழைக்கிறதோடை தன்ரை கடமை முடிஞ்சுது எண்டு நினைப்பவரை மாத்த முடியேல்லை. கடைசியில் பிள்ளைகளுக்காண்டி நான் தான் என்னை மாத்திக் கொண்டேன். அவர்களை நாம் தானே உருவாக்கினது. அவர்களை முறையாக வளர்ப்பது நமது கடமை இல்லையா, எனவே பறந்து போனதைத் தேடி இருக்கிறதையும் இழக்காமல் இருக்க வேணும் எண்டால் கிடைச்சதை ஏற்று வாழப் பழகி கொள்ள வேண்டும் என முடிவு எடுத்துக் கொண்டேன். அப்படி பிள்ளைகளுக்காக வாழ்றதிலை சந்தோசமும் திருப்தியும் தேடின போது அந்தப் பிள்ளைகளின் அப்பா அவர் எண்டு அவரில் நேசமும் கூடவே வந்தது. அதற்குப் பிறகு அவரில் இருந்த நல்ல இயல்புகள் தான் பெரிதாகத் தெரிந்தன. அதனால் வாழ்க்கை சுமையாகவில்லை.” மிகத் தீர்க்கமாகக் கதைத்தாள் அவள். எனக்கு அது மிகவும் உறைத்தது.
“என்னுடைய பிள்ளைகள் என்னுடன் ஒட்ட முயன்ற போது நான் வேலையாய் இருக்கிறன் என்று பலதடவைகள் அவர்களைத் தள்ளி வைத்திருக்கிறன். என்னுடைய கடமை சமுதாய சேவை தான் அன்றி வேறு எதுவும் இல்லை என்கிற பிரமையிலை, புகழ் மயக்கத்திலை இருந்ததாலை நான் பெத்த பிள்ளைகளை அசட்டையாய் விட்டிருக்கிறன். பிள்ளைகள் எழும்ப முதல் வேலைக்குப் போய் படுத்த பின் வீட்டை வந்து ஏனோ தானோ என வாழ்ந்ததில் தான் எனக்காக துடிக்கும் பிள்ளைகள் எனக்கு இல்லை. வளரும் நேரத்தில் வழங்க வேண்டிய மரபுகளை, வழிமுறைகளைப் போதிக்காமல் என் வாழ்வு முடிந்து விட்டது என்று நான் பெத்த பிள்ளைகளின் வாழ்க்கையையும் அழிச்சிருக்கிறன்.” சொல்ல வந்ததை சொல்லாமல் அடக்கிக் கொண்டேன். குடிகார மகனும், எதிர்த்து வாயாடி தான் நினைத்தபடி வாழும் பெண்ணும் பிறந்தது என் தலைவிதி என சுயபச்சாதாபத்தில் வாழ்ந்த நான் அது நான் தான் சமைத்த வழி எனப் புரிந்ததில் திடீரென ஆடிப் போகிறேன்.
“Shall, we leave?” எனக் கேட்ட John னின் பின் அமைதியாய் பின் தொடர்கிறேன் நான்.
– ஜனவரி 2010