இரண்டு நாளுக்கு ஒருமுறை பிரேமா பேசுவாள். அவரது மருமகள். அப்புறம் போனை வாங்கி மகன் ரமணன் பேசுவான். அவருக்கு பிரேமாவுடன் பேசப் பிடிக்கும்.
“வேற ஒண்ணும் விசேஷம் இல்லியேம்மா?” என அவர் கேட்பார்.
“இல்ல மாமா. இதோ இவர்கிட்ட குடுக்கறேன்” என்றபடி ரமணனிடம் பிரேமா போனைத் தருவாள். சூட்சுமமான பெண்தான்.
நர்மதா இறந்தபோது திரும்ப ஒரு தனிமை அவரை அப்பியது. கொஞ்சம் பக்தி சிரத்தையான ஆள் அவர். நெற்றியில் திருநீறு இல்லாமல் அவரைப் பார்க்க முடியாது. காலை தினசரி குளித்து விட்டு சந்தியாவந்தனம் பண்ணினார். சிறு பூஜையறை வைத்திருந்தார்.
சிறு சிவலிங்கம் ஒன்று இருந்தது. தட்டில் அதை வைத்து பால் அபிஷேகம் தினசரி செய்வார். வாயில் தன்னைப்போல எதும் திருப்பதிகம் உருளும். எல்லாம் தமிழ்தான். விநாயகர் அகவல், கந்தசஷ்டி கவசம் மனப்பாடமாய் உரக்கச் சொல்வார்.
கந்தர்கலி வெண்பா, கோளறு திருப்பதிகம் தெரியும். மனசிருந்தால் தேவார, திருவாசக, அபிராமி அந்தாதிப் பாடல்களைத் தமிழ்ச் சுவையோடு இலக்கிய நயம் உள்ளே தித்திக்கப் பாடுவார்.
நர்மதாவின் காரியங்கள் எப்படி முடிந்தன… அதுவே ஒரு மயக்க நிலையில் தான் எல்லாம் பார்த்தார். கிறுகிறுப்பாகவே இருந்தது. யாராவது சூடாக எதாவது குடிக்க அவருக்குத் தந்து கொண்டேயிருந்தார்கள். அவருக்கும் வேண்டியிருந்தது…
எல்லாம் நிறைவேறியது. ரமணன் ஊருக்குக் கிளம்ப வேண்டும். வந்து அப்பாவைக் கூட சென்னைக்கு அழைத்தான் அவன்.
“இப்பத்திக்கு வேணாம். போகப்போக என்ன ஆறதோ ஆகட்டும்” என்று சொல்லி விட்டார்.
“இல்ல மாமா. இங்க மாமி இல்லாமல் நீங்க… எப்பிடி… தனியா?” என்று பிரேமா வந்து கையைப் பிடித்துக் கொண்டாள்.
“அதை ஒண்ணும் பண்ண முடியாது” என்று முழுக்கச் சொல்ல முடியாமல் உதட்டைப் பிதுக்கிக் காட்டினார். அழுகை வந்து விட்டது. என்றாலும் அவர் வரமாட்டார், என்பது அவளுக்கும் தெரியும். பிடிவாதக்காரர். தான் சார்ந்த உலகத்தில் அவரது ஆளுமை பாவனை, அது முக்கியம் அவருக்கு என்பது தெரியும்.
பென்ஷன் வருகிறது. தன் காரியங்களைத் தானே பார்த்துக் கொள்வதும், தன் செலவுகளைத் தானே சமாளித்துக் கொள்வதுமாக, அது ஒரு நிலை. வீடும் சொந்த வீடு. அந்த வயசில் அது, அந்த சுயம், கௌரவம் எல்லாம் அவருக்கு முக்கியம்.
பட்டணம் அவருக்குப் பிடிக்கவில்லை. பூஜை அறை என்று அந்த வீட்டில் தனியே கிடையாது. சமையல் அறையிலேயே கீழ்த்தட்டில் குழம்புப்பொடி ரசப்பொடி சர்க்கரை என்று டப்பாக்கள். நடுத்தட்டில் ஒரு குருவாயூரப்பன் படம். பிரேமாவின் அப்பா அம்மா பாலக்காடுப் பக்கம். ஒரு பிள்ளையார் படம். சாமிக்குக் குழம்புப் பொடி நைவேத்தியமா என்று இருந்தது.
அரை சாண் உயரத்தில் ரெண்டு வெள்ளி குத்து விளக்குகள் பக்கத்துக்கு ஒன்றாய். நல்ல நாள் என்றோ, விடுமுறைநாள் என்று அவள் வீட்டில் இருந்தாலோ விளக்கு ஏற்றுவாள். அடுத்த விசேஷம் வரை அந்த விளக்குகள் கரிப் பிசுக்கு பிடித்து தேய்க்காமல் அப்படியே இருக்கும். அதெல்லாம் அவருக்கு ரசிக்கவில்லை.
ஆனால் தினசரி அலம்பித் துடைத்து பளிச்சென்று குத்து விளக்கு ஏற்றுவதால் யாரும் சம்பளம் தர மாட்டார்கள். அதுவும் அவருக்குத் தெரியாமல் இல்லை.
பதின்மூன்று நாள் காரியம் ஆகும் வரை கூட பிரேமா இருந்தாள். இதே வேலைக்காரி வந்து சமையல் பண்ணினாலும், திரும்ப சூடாய் எல்லாம் பரிமாறும்படி மருமகள் பார்த்துக் கொண்டாள்.
அவர்கள் ஊருக்குப் போனபின் தான் பெரும் துக்கமாகி விட்டது. சாப்பாட்டைத் தானே எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. குழம்பு சாப்பிட்ட பின், மோர் வைத்துக் கொள்ளவில்லை என்று எழுந்து எடுத்து வந்தார்.
“அடாடா, உப்பு…’ என நினைவு வந்தது. “சரி, உப்பு இல்லாமல் சாப்பிடுவோம்’ என ஒரு வீம்பு. சாப்பிடப் பிடிக்கவில்லை. தான் எவ்வளவு பலவீனமாய் இருக்கிறோம் என அவர் உணர்ந்தார்.
ஒரு வாய் சாதத்துடன் ஹோவென அழுதார் கிருஷ்ணப்பிரசாத்.
இவள், நர்மதாதான் தொலைக்காட்சிப் பிரியை. சங்கரா தொலைக் காட்சியில் எதும் கோவில் காட்டினால் பார்ப்பாள். பஜன் சாம்ராட் பார்ப்பாள். எதுவும் முக்கியமான செய்தி இருந்தால் அப்போது
மாத்திரம் கிருஷ்ணப்பிரசாத் டி.வி போடுவார்.
நர்மதா நாளிதழில் செய்தி வாசித்ததே கிடையாது. நாளிதழ் அவர் பார்க்கையில், “இன்னிக்குத் தங்கம் ரேட் என்ன?” என்பாள், என்னவோ வாங்கப் போகிறாப் போல. அதற்குமேல் அவளுக்கு நாளிதழில் அக்கறை கிடையாது. மாவு சலிக்கையில் மாத்திரம் நாளிதழ் தேடும் ரகம்.
அவள் இல்லாத பொழுதுகள் திகைக்க வைத்தன.
தொலைக்காட்சியில் இப்போது சானல் சானலாய்த் தேடினார்.
டிஸ்கவரி பரவாயில்லை. என்ன, எல்லாமே ஆபத்தான பயணம் அப்டி இப்டின்னு பயமுறுத்தறான். ஆபத்துன்னா அப்பிடியொரு பயணம் போவானேன், என்றிருந்தது அவருக்கு.
விளையாட்டு சானல்கள் பரவாயில்லை. அதுவும் இப்போது இந்தியா கபடி என்றும், ஷட்டில் காக் என்றும், ஹாக்கி என்றும், கிரிக்கெட் என்றும் உலகில் தலைநீட்ட ஆரம்பிக்கிறது அவருக்குப் பிடித்திருந்தது.
பி.வி. சிந்து வெள்ளி வாங்கிய அந்த மேட்ச் பார்த்தார். விராட் கோலி பிடிக்கும். இந்தியா என்று இல்லாமல், எந்த இரு வெளிநாட்டு டீம்கள் மோதினாலும் பார்க்க ஆரம்பித்திருந்தார். வெளிநாட்டில் மேட்ச்
என்றால் நம்ம நேரப்படி காலை, மதியம் என்று எப்ப வேணாலும் ஆரம்பிக்கும். ராத்திரிகளில் கூட மேட்ச் நடக்கும். இப்பவெல்லாம் இந்தியாவில் நடந்தாலே பகலிரவு மேட்ச் ஆடுகிறார்கள்.
பாதி மேட்சில் தூக்கம் வந்திராதா? நமக்கு மதியம் பேப்பர் வாசிக்கச்சயே தலை தொங்க ஆரம்பிச்சிருது. மேட்ச் பாக்க வர்றவங்களும் அங்கியே கிரவுண்டிலேயே தூங்கிருவாங்களோ? என்னமோ?
நம்ம ஆட்கள் ஜெயிச்சால் நல்லாதான் இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. கிரிக்கெட் மேட்ச் இருந்தால் அவர் பார்ப்பார் என்று பிரேமாவுக்குத் தெரியும். இடையே அவரை டிஸ்டர்ப் பண்ண மாட்டாள்.
மேட்ச் முடிந்த பின்தான் பேசுவாள். உற்சாகமாக அவளுடன் மேட்ச் பற்றி உரையாடினார் கிருஷ்ணப்பிரசாத்.
“நீயும் பாத்தியாம்மா?” என்று ஆர்வமாய்க் கேட்பார்.
“நானா… எங்க. வாஷிங் மிஷின் ஓடறது. இந்தப் பக்கம் கிரைண்டர்ல போட்டிருக்கேன்… அப்பப்ப ஃபோர், சிக்ஸர், அவ்ட்னா ஸ்டேடியமே அதிரும். அப்ப வெளிய வந்து பார்ப்பேன்…” என்பாள் பிரேமா.
பஜன் சாம்ராட் வைத்தால், கூட நர்மதா இருந்து பார்ப்பது போல இருந்தது. அதற்காகவே வைத்தார் சில சமயம். சின்னச் சின்னக் குழந்தைகள். நல்லாத்தான் பாடறதுகள். நாமாகா பசாரு பண்டரி
நாமாகா பசாரு… அவருக்குப் பிடித்த பாடல். ஓ.எஸ். அருண் பாடிக் கேட்டிருக்கிறார்.
நீங்க வேணா கிரிக்கெட் மாத்திக்கோங்கோ என்று ஒருதரம் குரல்.
நர்மதாவின் குரல் தான். சட்டென சுற்றுமுற்றும் அவளைத் தேடினார்.
எங்க, அவள் போய் அவள் சாம்பலை திரிவேணி சங்கமத்தில் கரைத்தாயிற்று. அழுகை வந்தது.
பேரன் அவரை மாதிரியே இருப்பதாக நாகராஜன் சார் சொன்னார் ஒருதரம்.
“சரியாத்தான் ஸ்வாமி உம்ம பேரை வெச்சிருக்கு அவனுக்கு” என்று நாகராஜன் சிரித்தார். தொலைக்காட்சி இல்லை என்றால் இந்தப் பொழுதுகளைத் தள்ள முடியாது போலிருந்தது. அவனுகளும், எல்லாத் தொலைக்காட்சிக்காரனுமே 24 மணி நேரமும் எதாவது போடுகிறான்.
அவ்வளவுக்கு என்னதான் போட முடியும்? காலையில் போட்டதை இரவு நேரங்களில் ரிபீட் போடுகிறான். முன்பு நர்மதா இருந்தாள். அவள் இருப்பே பெரும் ஆதரவு. கொடிகளில் காயும் அவளது
உடைகள். சுங்கடிச் சேலை. தலையில் பன் வைத்துக் கொண்டை போடுவாள் நர்மதா.
சில சமயம் வாஷ் பேசினில் பல் செட்டைக் கழட்டி வைப்பாள். அவருக்கு ஒரு பல் கொட்டவில்லை. இதுகுறித்து அவருக்கு சிறு பெருமை இருந்தது.
பிரேமா இந்தத் தலைமுறைப் பெண். வேலைக்குப் போகிற பெண். வேலைக்குப் போகிற பெண்களின் பாதி வேலைகளை, வீட்டு வேலைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அவளது பிளவுசை அவன் அயர்ன் பண்ணித் தந்ததை ஒருநாள் பார்த்தார்.
அவள் பர்சில் பணம் வைத்தான் ஒருநாள். அலுவலகத்துக்கு நேரமாகி விட்டது என அவள் ஓடியபோது அவளை பஸ் ஸ்டாப் வரை கொண்டு விட்டுவிட்டு வந்தான்.
இராத்திரி அவள் வர தாமதமானால் அவன் குக்கர் வைத்து சாதம் வடித்திருந்தான். பையனுக்கு ஊட்டியே விட்டுவிட்டான். இப்படி வேலைகளை அவரிடம் நர்மதா விட்டதேயில்லை. அவர் முகம் அறிந்து ரமணனைத் தன் பக்கமாக அவள் இழுத்துக் கொண்டு விடுவாள்.
“அப்பா வேலையா இருக்கார்டா. வா. நாம தாயக்கட்டம் விளையாடலாமா?” எங்கே வெளியே போனாலும் நர்மதா அவருக்கும், பிள்ளைக்கும் சாப்பாட்டு வகை செய்துவிட்டுத்தான் போவாள். அல்லது அதற்குள் வீடு திரும்பியும் விடுவாள்.
தாத்தா என்று பேரனின் குரல் அலைபேசியில். “ராஜ்” என்று கிட்டத் தட்ட கத்தினார். “எப்பிடி இருக்கே?” என்றார்.
“ஐம் ஃபைன் தாத்தா. ஹவ் எபவ்ட் யூ?” என்று கேட்டான்.
“நல்லா இருக்கேன். உன் பிறந்த நாள் வருது போலருக்கே” என்றார் உற்சாகமாய். 28ம் தேதி அவனுக்கு எட்டு முடிந்து ஒன்பது ஆரம்பிக்கிறது வயது.
“ஆமாம் தாத்தா. நீங்க எப்ப வரீங்க தாத்தா?” என்று கூப்பிட்டது குழந்தை.
“நானா?” என்றார் தாத்தா.
“வாங்க தாத்தா” என்றான் அவன் மறுபடியும். அப்புறம் பிரேமா போனை வாங்கிப் பேசினாள்.
“மாமா நீங்களும் வந்து ரொம்ப நாள் ஆச்சே. இவன் ஆசைப்படறான்…” என்றாள்.
“பிறந்த நாள்ன்துமே, தாத்தா வருவாராம்மா… அப்டின்னுதான் முதல் கேள்வியே” என்றாள்.
அவர் பதில் சொல்லவில்லை என்றதும், “அங்க வர்ற சேனல் எல்லாமே இங்கயும் வரும் மாமா” என்று சிரித்தாள் பிரேமா.
“அதில்லம்மா…” என்றவர் “சரி. வரேன். இவனை ட்ரெய்ன் புக் பண்ணி டிக்கெட்டை எஸ் எம் எஸ் அனுப்பித் தரச் சொல்றியா?” என்றார்.
அவள் பையனிடம், “ஏ தாத்தா வர்றார்டா…” என்று பேசுவது கேட்டது. “தாத்தா” என்று கூப்பிட்டான் ராஜா.
“ஐ லவ் யூ” என்று கத்தினான் பேரன். அவருக்குச் சில்லென்றிருந்தது.
ஒரு மாற்றம் தேவைதான்’ என நினைத்தார். கொஞ்சம் பரபரப்பாய்க் கூட இருந்தது. மகனுக்கும் மருமகளுக்குமான தாம்பத்தியம், அது இந்தக் காலத்து மோஸ்தர், அதை நாம சட்டை செய்யக் கூடாது, என தனக்குள் சொல்லிக் கொண்டார்.
பெண் சம்பாதிக்கிறாள், அந்தப் பணமும் வேண்டித்தானே இருக்கிறது. இப்ப அவர்கள் மூணு படுக்கையறை வசதி கொண்ட சொந்த அடுக்ககத்தில் வாழ்கிறார்கள். ஈஎம் ஐ கட்ட அவள் சம்பளமும்
உதவியாகத்தானே இருக்கிறது? இப்போதைக்கு பைக் வைத்திருக்கிறான் ரமணன். நாலைந்து வருடத்தில் கார் வாங்க அவனுக்கு எண்ணம் கட்டாயம் இருக்கும். இதுதான் பட்டண வாழ்க்கை.
எல்லாத்துக்கும் பணம் வேண்டித்தான் இருக்கிறது.
“ஊருக்குப் போறேன் நாகராஜன்” என்றபோது உற்சாகமாய்த் தான் இருந்தது.
“அடிச் சக்கை. பேரனைப் பார்க்கவா?” என்றார் அவர்.
“ஆமாம். அவனுக்குப் பிறந்தநாள் கூப்பிட்டிருக்கான்…” என்றபோது சிறு சிரிப்பு.
“அவனே கூப்பிட்டுட்டானா. பலே… பலே” என நாகராஜன் தலையாட்டினார்.
“எத்தனை நாள் கிருஷ்ணப்பிரசாத்?”
“தெரில” என்றார். “கிளம்பி வர டிக்கெட் அனுப்பிட்டான்… அங்க போயி திரும்பி வர்ற டிக்கெட் அப்பறமாப் பாக்கணும்.”
ரயில் நிலையத்துக்கே ரமணன் வந்திருந்தான். பைக்கில் குலுங்கக் குலுங்கப் போனார். பயமாய்த் தான் இருந்தது. போய் இறங்கியதும், “வாங்க” என்றபடி பிரேமா குளிக்க ஓடினாள். அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா ஆச்சி கடைசி ஒன் டே” என்றார் அவளிடம். “மிஸ்ரா பெüலிங் தூள்” என்றாள் அவள். அப்படியே ரமணன் பக்கம் திரும்பி, “மாமாவுக்கு காபி குடுங்க. நான் குளிச்சிட்டு இதோ வந்துர்றேன்…”
என உள்ளே ஓடினாள்.
கிருஷ்ணப்பிரசாத்தைப் பார்த்ததும் பேரன் கைகூப்பி வணக்கம் சொன்னான். சிலிர்த்தது அவருக்கு. மேசையில் கிடந்த செய்தித்தாளைப் பார்த்து அவசரமாக கடைசிப் பக்கத்தை, விளையாட்டு, பார்த்தார்.
நியூசி 79 ஆல் அவ்ட். ரொம்ப மகிழ்ச்சியாய் உணர்ந்தார் அவர். சரி ஹைலைட் பாக்கலாம், என நினைத்தார்.
இந்தியா தோத்திருந்தால் ஹைலைட் பார்த்திருக்க மாட்டார்.
அன்றைக்கு மாலை சீக்கிரமே பெர்மிஷன் எடுத்துக்கொண்டு பிரேமா வந்தாள். ராஜாவுக்கு தேதிப்படி பிறந்த நாள். சாய்ந்தரம் பக்கத்து வீடு, எதிர் வீடு என்று வாண்டுகள், பள்ளிக்கூட சில சிநேகிதர்கள் என பட்டாளம் வந்தது. தாத்தா அவனுக்கு ஒரு டிரஸ் வாங்கி வந்திருந்தார்.
அதை முதலில் போட்டுக் கொண்டுவிட்டு, பின்னால் கேக் வெட்ட என்று வேறு புது உடை மாறினான் ராஜா. இம்மாதிரி நாசூக்கான விஷயங்களில் ரமணன் கெட்டி, என நினைத்துக் கொண்டார். ஒரு சிரிப்பு. பிள்ளைகள் குதூகலித்தார்கள். ஒரு பொம்மைத் துப்பாக்கியால் மேலே பார்க்கச் சுட்டார்கள். பொல பொலவென்று வண்ண வண்ணக் காகிதங்கள் ராஜா மேல் சிதறின.
எங்கும் அலையடித்து சுவர்களில் மோதும் சிரிப்பு. இதெல்லாம் இந்தக் காலப் பிள்ளைகளுக்கு வேண்டியிருக்கிறது.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. அப்போதுதான் சிக்கலாகி விட்டது.
எல்லாருமே வீட்டில் இருந்தார்கள். ஹா. பட்டணத்தில் எல்லாருமே வீட்டில் இருக்கிற காலங்களில் ஒருத்தருக்கு ஒருத்தரே அனுசரித்துப் போக சிரமப் படுகிறார்கள். குட்டிப்பையன் அன்றைக்கு லேட்டாய் எழுந்து கொண்டான். பல் தேய்த்த ஜோரில் டி.வி பக்கம் வந்து உட்கார்ந்தான்.
கார்ட்டூன் நெட்வொர்க் அல்லது போகோ. அதை மாற்ற விட மாட்டேன் என்கிறான். அதுவும் எத்தனை சத்தமாக வைக்கிறான் இவன், என்றிருந்தது.
காலை நாளிதழ் ருசிக்கவில்லை அவருக்கு. இந்த சத்த களேபரத்தில் தலை வலிக்கிறாப் போலிருந்தது. மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை கிரிக்கெட் போட்டி வேறு இருந்தது. அவன் பார்க்க விடுவானா?
தெரியவில்லை. அவன் அப்பாவுக்கே நியூஸ் பார்க்க அவன் ரிமோட்டைத் தரவில்லை.
பிரேமா அவர் தவிப்பைப் புரிந்து கொண்டாள். லேசான புன்னகையுடன் அவரைப் பார்த்தாள். அவள் கேலி செய்கிறாளோ என்றிருந்தது அவருக்கு, “என்னடா?” என்று ரமணனைக் கூப்பிட்டார்.
“என்னப்பா” என்றபடி வந்தான்.
“என் ரிடர்ன் டிக்கெட்” என்று சிறிய புன்னகை சேர்த்துக்கொண்டு கேட்டார். தொலைக்காட்சியில் வாத்து குட்டிக்கரணம் அடித்து விழுந்து விழுந்து சிரிக்கிறது. ராஜாவின் கண்கள் விரிந்தன. “நாலைஞ்சு நாளுக்கு டிக்கெட் இல்லியேப்பா” என்றான் ரமணன்.
பேரன் டி.வியை விடுகிறாப் போல இல்லை. பிரேமா மெல்ல ராஜாவிடம் போய், “தாத்தாவுக்கு…” என்னுமுன் “ம்ஹும்” என்று பதில் சொன்னான் அவன். பேரனிடமா போட்டி போடுவது? என்றிருந்தது அவருக்கு. பிரேமா ரமணனிடம் சொன்னது கேட்டது.
“பிடிவாதம் பாருங்க. தாத்தா பேர் உள்ளவன் தானே?” அவருக்குத் திகைப்பாகி விட்டது. ரமணன் உள்ளே வந்து, “இன்டர்நெட்ல லைவ் ஸ்ட்ரீமிங் வரும்ப்பா. அதைப் போடவா?” என்றான். அவர் வேணாம்
என்கிறாப் போல தலையாட்டினார்.
“ஏன்டா என் ரிடர்ன் டிக்கெட், தட்கல்ல பார்க்கலாமா?” என்று கேட்டார் கிருஷ்ணப்பிரசாத்.
– ஜனவரி 2017