கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2023
பார்வையிட்டோர்: 2,772 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாலையில் சமையல் அறையில் டம்ளர்களின் சத்தமும், பரபரவென்று ஆள் நடமாடும் சத்தமும் கேட்க ஆரம்பித்தால் பார்வதி வேலை செய்கிறாள் என்பதை அறிந்துகொள்ளலாம். பார்வதி எங்கள் வீட்டுக் காரியக்காரி. பெயர் தான் பெரிதாக இருக்கிறதே தவிர வயது ஒன்றும் அதிகமாக ஆகிவிடவில்லை: பன்னிரண்டு தான். என் மனைவி கல்யாணி. அவள் பிறந்தகத்திலிருந்து ஒத்தாசைக்காக அவளை அழைத்து வந்திருந்தாள். தாயார், தகப்பனார் இரண்டு பேரும் அற்ற அனாதை. ஆள் அதிக நடமாட்டமில்லாத மருதன்பட்டி ரெயில்வே ஸ்டேஷனுக்கு என்னை ஒரு வருஷத்துக்கு மாற்றி இருந்தார்கள். மாற்றல் உத்தரவு வந்தபோது கல்யாணி பிரசவிப்பதற்காகப் பிறந்தகம் போயிருந்தாள். அவளுக்கு இந்த விஷயம் கடிதமூலமாகத் தெரிந்தபோது மிகவும் வருத்தப்பட்டு எனக்குப் பதில் எழுதியிருந்தாள். ‘பிறந்த குழந்தையும் இறந்துவிட்டது. உங்களுக்கு மாற்றலாகி இருக்கும் ஊரும் லக்ஷணமாக இருக்கிறது.யாரும் இல்லாமல் தன்னந்தனியாக நான் மருதன்பட்டிக்கு வரவில்லை. இந்த ஒரு வருஷமும் இங்கேயே இருந்து விடுகிறேன்’ என்பதுதான் கடிதத்தில் கண்டிருந்த விஷயம். கல்யாணியின் அபிப்பிராயத்துக்கு விட்டுக்கொடுக்க எண்ணி வேலையில் சேருவதற்குமுன் மருதன்பட்டிக்கு ஒரு தடவை போயிருந்தேன்.

ரெயில்வே ஸ்டேஷனைச் சுற்றி ஒரே மலைக்காடு. குன்றுகள் தெரியாமல் மூடி இருக்கும் மரங்களில் கட்டியிருக்கும் தேனைச் சேகரிக்கும்பொருட்டுக் குறவர்கள் மலை அடிவாரங்களில் மாரி காலங்களில் தவிர எப்பொழுதும் கூடி இருப்பார்கள். சந்தனக் கட்டைகள் சேகரிக்கும் தொழிலும் அவர்களுடையதுதான். ஊரைச் சுற்றி ஒரே நிசப்தம். உலக யுத்தம், போட்டி, பஞ்சம் இவைகளைவிட்டுத் தனியே விலகி நின்ற ஊர் மருதன்பட்டி. என்னிடம் ‘சார்ஜ் ஒப்பிக்கக் காத்துக்கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் நாற்பது வயதுக்கு மேலானவர். மனைவி இறந்து பத்து வருஷங்கள் ஆகிவிட்டன. ஒரே ஒரு பிள்ளை. வடக்கே எங்கோ வேலையாக இருந்தான். வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்யவேண்டும் என்பது அவர் விஷயத்தில் இல்லை. பிள்ளை கையை எதிர்பாராமல் சுதந்தரமாகச் செலவழிப்பற்காகவே அந்த உத்தியோகத்தில் அவர் இருந்தார் என்று சொல்லிவிடலாம். ஒவ்வொரு புதன்கிழமையும் சந்தை கூடும்போது தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர்மோரும் குடிநீரும் ஏழை ஜனங்களுக்கு அளித்து வந்தார். முதல் முதலில் அவரைச் சந்தித்தபோது, “நிம்மதியாக இருந்தேன் ஸார். மாற்றித் தொலைத்துவிட்டான். உங்களைப் போல் சிறுபிள்ளைகளுக்கு ஏற்ற இடம் இல்லை ஸார் இது. சினிமா இல்லாமல் பொழுது போகாதே உங்களுக்கு” என்றார் அவர்.

“என்னைப்பற்றிக்கூட இல்லை ஸார். என் மனைவிக்குக் கட்டோடு பிடிக்காதே என்றுதான் பார்க்கிறேன்” என்றேன் நான்.

“அதைத்தான் நானும் சொல்கிறேன். நீங்களானால் என்ன? மனைவியானால் என்ன ? ஒருவரை ஒருவர் பிரிந்து எத்தனை காலம் இருப்பது?” என்றார்.

அப்பொழுது அவர் குரல் கம்மிப் போயிற்று. கண்களில் நீர் துளும்பி நின்றது. மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து கஷ்டப்பட்டவருக்கல்லவா அதன் கஷ்டம் தெரியும்?

மருதன்பட்டியைப் பார்த்தபிறகு வாரத்திற்கு ஒரு சினிமாவாவது பார்க்கத் தவறாத கல்யாணியை எப்படி அங்கே அழைத்துவருவது என்பதே பெரிய பிரச்னை ஆகி விட்டது.

அதற்குள் அவளிடமிருந்து வந்த கடிதத்தில், தான் மருதன்பட்டிக்கு வருவதாகவும், கூடத் துணைக்கு ஒரு அனாதைப் பெண்ணை அழைத்து வருவதாகவும் எழுதியிருந்தாள். அதோடு பிரசவத்துக்கு அப்புறம் உடம்பு மிகவும் பலஹீனமாக இருப்பதால் வேலை செய்யவும் அந்தப் பெண் உதவியாக இருப்பாள் என்றும் எழுதியிருந்தாள்.

மனத்திலிருந்த பெரிய சுமை நீங்கியது. ஒரு நாள் விடியற்காலம் வந்த மெயிலில் கல்யாணியும், பார்வதியும் வந்து இறங்கினார்கள். குழந்தை இறந்துபோன துக்கம் அவள் மனத்தை விட்டு நீங்கிவிட்டதாகத் தெரியவில்லை. “என்ன பண்ணுவது? நாம் கொடுத்து வைக்கவில்லை. மூக்கும், முழியுமாய் உங்களையே உரித்து வைத்திருந்தது” என்று ஸ்டேஷனிலேயே குறைப்பட்டுக் கொண்டாள். அவள் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணும், ‘ஹும்’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே என் முகத்தைப் பார்த்தாள்.

“இவளைப் பற்றித்தானே எழுதியிருந்தாய்?” என்று கேட்டேன் கல்யாணியிடம்.

“ஆமாம்; பார்வதி இல்லாவிட்டால் நான் இங்கே வந்தே இருக்கமாட்டேன். அப்பாகூட இந்த ஊரில் இருபது வருஷங்களுக்குமுன் உத்தியோகம் பண்ணி இருக்கிறாராம். ‘அது ஊரில்லை அம்மா, காடு’ என்று ரெயில் ஏறும்வரைக்கும் சொல்லிக்கொண்டிருந்தார்” என்றாள் கல்யாணி.

அவள் குற்றச்சாட்டைப் பொறுக்காமலோ என்னவோ காற்று ஒருதரம் சடசடவென்று வீசி நின்றது. ரெயில்வே ஸ்டேஷனில் வரிசையாக நின்ற சரக் கொன்றை மரங்கள் சடசடவென்று பனித் துளிகளை உதறின. அத்துடன் தேன் கலந்திருந்த ரகசியம் வண்டுகளுக்கு மாத்திரந்தான் தெரிந்திருக்க நியாயம். ஏனெனில், அவை உய்ய் என்ற ராகத்துடன் மரத்தடியைச் சுற்றின.

மெயில் இரண்டு ஸ்டேஷன்கள் தாண்டிப் போகும் மட்டும் நாங்கள் ஸ்டேஷனிலேயே இருந்திருக்க வேண்டும். அதிகாலை ஆறு மணிக்கு ரெயிலைவிட்டு இறங்கியவர்களை ஏழரை மணிக்குத்தான் வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன். ரெயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே நின்று பார்த்தால் இரு புறமும் சந்தன மரங்களின் வரிசைகளுக்கு நடுவில் அழகான சிறு வீடு ஒன்று தெரியும். அதன் முன்புறத்தில் எனக்கு முன்பு இருந்தவர் நித்தியமல்லிகைக் கொடி ஒன்றையும் ரோஜாச் செடிகளையும் வைத்துப் பயிராக்கி இருந்தார். நல்ல பூமி; ஆதலால் செடிகள் மதமதவென்று வளர்ந்து பூத்துக் குலுங்கின.

பார்வதியும், கல்யாணியும் வீட்டை அழகுபடுத்தினார்கள். ஹாலில் ஒரு பெரிய மகானின் படத்தை மாட்டினார்கள். துர்க்காற்று,பேய் முதலியவை உள்ளே வராமல் அவர் காப்பாற்றுவார் என்று நம்பினார்கள். கல்யாணி ஒழிந்த வேளைகளில் எதையாவது படித்துக்கொண்டு பொழுதைப் போக்கிவிடுவாள். அந்தச் சமயங்களில் வீட்டில் வேலை செய்யும் காடனுடன் வேடிக்கையான பேச்சில் இறங்குவாள் பார்வதி. காடன் ஜாதியில் குறவன். வருஷத்தில் மழைக்காலத்தில் வேலை செய்ய என்னிடம் வருவான். மீது நாட்களில் அவன் ஜாதித் தொழில் அவனை இழுத்துப் போய்விடும்.

காடனுடன் பார்வதி சிரித்து விளையாடுவது கல்யாணிக்குப் பிடிக்கவில்லை. “அந்தக் குறவனோடு என்னடீ விளையாட்டு?” என்று அவளைக் கடிந்துவந்தாள். பார்வதி காலையில் எழுந்துவிடுவாள். காபிபோட்டு வைத்துவிட்டுக் கல்யாணியை எழுப்புவாள்.

“அக்கா, காப்பி ஆறிவிடும். நான் குளிக்கக் போகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கொல்லைக் கிணற்றடிக்குப் போவாள் இப்படி மூன்று நான்கு மாதங்கள் வரையில் எங்கள் வீட்டில் பார்வதியால் நாங்கள் மிகவும் சந்தோஷமாகவே இருந்தோம். காடனுடன் அவளுடைய நட்பு அதிகமான பிறகு பார்வதியின் போக்கு விசித்திரமாக மாறத் தொடங்கியது.


அன்று தை வெள்ளிக்கிழமை. காபியைப் போட்டுவைத்துவிட்டு, வழக்கம்போல் “அக்கா!” என்று பார்வதி கல்யாணியைக் கூப்பிட்டாள்.

“குளிக்கத்தானே போகிறாய்? போய்விட்டு வா” என்று உத்தரவிட்டாள் கல்யாணி.

“எண்ணெய் தேய்த்துக்கொள்ளப் போகிறேன் அக்கா. மலைக்குகையில் அருவி இருக்கிறதாம். அங்கே போய்க் குளித்துவிட்டு வருகிறேன்”.

“வேலை இல்லையா உனக்கு? பாறை ஜலத்தில் ஸ்நானம் செய்துவிட்டுப் படுத்துக்கொள்ளாதே. இதை யெல்லாம் உனக்கு யார் கலகம் பண்ணுகிறார்கள்? போடீ பைத்தியமே” என்று அதட்டிவிட்டுக் கல்யாணி சமையல் அறைக்குள் சென்றாள். பார்வதி சிறிது நேரம் யோசித்தாள், பிறகு சமையல் அறயை ஒரு பார்வை பார்த்து விட்டு மான் வேகத்தில் சந்தன மரத்தூடே ஓடி மறைந்தாள்.

“நீ வேண்டாமென்று சொன்னாயே. பார்த்தாயா? அந்தப் பெண் ஓடிவிட்டது” என்று நான் கல்யாணியிடம் சொன்னேன்.

“வரட்டும் சனியன்! பிய்த்துக் கட்டி விடுகிறேன்” என்றாள் கல்யாணி. மலை அருவியில் ஸ்நானம் செய்து விட்டு ஒரு கன்னித் தெய்வம் மாதிரி அள்ளி முடிந்த கூந்தலுடன் பார்வதி வீட்டுக்கு வந்தபோது மணி ஒன்பது. கல்யாணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“ஏ அனாதைப் பிணமே! ஊரிலிருந்து அழைத்து வந்ததற்கு நல்ல பெயரைக் கொண்டுவந்து விட்டாய். போகவேண்டாம் என்று சொன்னதைக் கேட்காமல் ஏன் போனாய்?” என்று இரைந்தாள் கல்யாணி.

“மலை அருவி குளுகுளுவென்று இருக்கு அக்கா!” என்று பார்வதி சம்பந்தம் இல்லாமல் பதில் சொன்னதைக் கேட்டுக் கல்யாணி பற்களை நறநறவென்று கடித்தாள்.

தினம் தவறாமல் பார்வதி மலை அருவிக்குப் போவது வழக்கமாகிவிட்டது. நீரில் குடைந்து ஸ்நானம் செய்துவிட்டு வந்த அந்த இன்பத்தை அவள் எங்கள் இருவரிடமும் விவரிப்பாள். மலை அருவிக்கு அருகில் வாசம் செய்யும் கன்னித் தெய்வத்தைப் பற்றியும், ஸ்நானம் செய்யும்போது எழும் சுகந்தத்தைப் பற்றியும் அவள் கூறும்போது எங்கள் தேகம் சிலிர்க்கும். ‘அந்தப் பரிமளத்தைப் புண்ணியம் செய்தவர்களால்தான் நுகர முடியும்’ என்று காடன் அடிக்கடி சொல்லி இருக்கிறானாம். மலை அருவியைப் பற்றிப்பார்வதி கதை சொல்லும்போது கல்யாணி மெய்ம்மறந்து பரவசமாகக் கேட்பாள்.

“போதுமடி பெண்ணே! நீ அங்கே போக வேண்டாம்.வயசுப் பெண்ணான் உனக்கு அங்கே என்ன வேலை?” என்று கல்யாணி கூறுவாள்.

பார்வதி எங்கள் தனிமையைப் போக்க வரவில்லை. அவள் மனத்துக்கு ஏதோ இன்பத்தைத் தேடிக்கொள்ள வந்திருந்தாள். பதினான்கு வயதுப் பெண்ணாக இருந்தாலும் அவளிடம் தெய்வபக்தி குடிகொண்டிருந்தது.


வருஷத்தில் மழைக்காலம்மட்டும் எங்களிடம் வேலை செய்யும் காடன் பார்வதி வந்தபிறகு வருஷம் பூராவுமே தங்கினான். இளவேனில் காலத்தில் இன்னிசையுடன் பாடி மகிழ்ந்து குதித்து ஓடியது மலை அருவி. காடனும் அவன் சுற்றத்தாரும் பார்வதியைக் கன்னித் தெய்வமாகவே மதித்துவந்தார்கள். இளவேனில் மறைந்து கடுங்கோடை வந்ததும் மலைமேல் ஏறுவதற்குக் குறவர்கள் கன்னித் தெய்வத்துக்குப் பூசைபோட்டார்கள்.

அன்று பார்வதி வழக்கம்போல் வீட்டு வேலைகளைச் செய்தாள். அக்காவை எழுப்பினாள். கன்னித் தெய்வத்துக்கு ரோஜாமாலை கட்டி எடுத்துக்கொண்டாள்.

“காடன் வீட்டார் பூசை போடுகிறார்களாம்; பார்த்துவிட்டு வருகிறேன் அக்கா “என்றாள் கல்யாணியிடம்.

என்றும் இல்லாமல் என் மனம் சுரீரென்று வேதனைப் பட்டது.

“கல்யாணி ! இது என்ன பைத்தியக்காரத்தனம்? ஏதோ படிப்புவாசனை இல்லாத ஜனங்கள் எதையாவது செய்தால் நீயும் இடம் கொடுக்கிறாயே” என்றேன் கல்யாணியிடம்.

“நான் என்ன பண்ணுவது? அடுத்த மாசம் ஊரில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுகிறேன்.”

பார்வதியின் முகம் வாடிவிட்டது. ஆனால், ஏதோ மந்திர சக்தியால் தூண்டப்பட்டவளைப்போல் மெதுவாகச் சந்தனமரங்களினூடே சென்றாள் பார்வதி. என் மனம் கேட்கவில்லை. அவளை அறியாமல் மலை அருவியை அடைந்து அதன் பாறையின் மறைவில் உட்கார்ந்தேன். காடன் குடும்பத்தார் கூட்டமாக வந்திருந்தார்கள். தேனும், தினைமாவும், மான் இறைச்சியும், காட்டு மலர்களும் குவிந்திருந்தன.

பார்வதி ஸ்நானம் செய்து முடித்தாள். தன் மஞ்சள் குங்குமப் பெட்டியிலிருந்து குங்குமம் இட்டுக் கொண்டாள். அழகிய கண்களால் ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு, “காடா!” என்று மலை கிடுகிடுக்கும்படி கத்தினாள்.

கூட்டத்தில் ஒருவன் சிலம்பு போட ஆரம்பித்தான். “ஏன் தாயே?”

“நான் வந்திருக்கிறேன்.”

“அம்மா!”

“கொண்டு போகிறேன்.”

“அம்மா, தாயே!”

“பேசாதே!” -பார்வதி பயங்கரமாக விழித்தாள்.

“உங்கள் மந்திர தந்திரங்களால் பிராமணப் பெண்ணை வஞ்சித்துவிட்டீர்கள். தஞ்சாவூரிலிருந்து வந்த இரண்டு மாதங்களுக்கெல்லாம் அவளைக் குறத்தியாக்கி விட்டீர்கள். இனிமேல் அவளை இங்கே விடமாட்டேன்.”

“ஐயையோ தாயே!” என்றான் பூசாரி.

பார்வதி தடாரென்று விழுந்தாள். மூக்கிலும் வாயிலும் ரத்தம் கசிந்தது.

“அடே பாவி!” என்று கத்திக்கொண்டே நான் ஓடினேன். பார்வதி பிணமாகக் கிடந்தாள். பிணத்தைச் சோதித்த டாக்டர் மாரடைப்பு என்றார். காடன் வமிசத்தார் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலுக்குப் போனார்கள்.


பல வருஷங்களுக்குப் பிறகு போன வருஷம் மருதன்பட்டிக்குப் போனேன். மலை அருவியைப் பார்க்கப் போயிருந்தேன். அங்கே அருவி இல்லை! பாசி படிந்த சிறிய குளம் ஒன்று இருந்தது. அதற்குப் பார்வதி குளம் என்று பெயர் வழங்குகிறதாம். கல்யாணமாகாத பெண்கள் யாரும் அங்கே வருவதில்லையாம்.

என்னவோ சொல்லுகிறார்கள். பழைய கதைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *