பார்க்கின்ஸன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2023
பார்வையிட்டோர்: 4,028 
 
 

குணசீலத்துக் கதை – 3

‘திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்’. என்ற நம்மாவாழ்வார் வாக்குப்படி குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம். அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர், பெயர் எல்லாம் மாற்றி, கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாசகர்களுக்குக் கட்டுரையாய் சொல்வதை விட கதாபாத்திரங்கள் மூலம், மனநல பாதிப்புகளையும், அதனை எப்படிச் சரி செய்து கொள்ளலாம் என்ற விழிப்புணர்வையும் ஊட்டுவதே இந்தக் குணசீலத்துக் கதைகளின் நோக்கம்.


க்ளையண்டைப் பார்த்தார் கவுன்சிலர் வரதராஜன்.

மிதமான பார்க்கின்ஸன்தான் என்பதை அனுமானிக்க முடிந்தது.

‘கேஸ் ஹிஸ்ட்ரி’யைத் தன் பாணியில் சேகரிக்கத் தயாரானார்.

பேஷண்ட்டின் பாதுகாப்பாளராக வந்திருந்த கல்லூரிப் பருவ மங்கையும், தன் வயதொத்த பேரிளம் பெண்ணையும், பார்த்தார்.

‘மகளும், மகள் வயிற்றுப் பேத்தியுமாக இருக்கவேண்டும்’ என ஊகித்தார்.


“ரிடையர்டு ப்ரொபசர். ஊர்ல விட்டு வெச்சா, பொழுதுக்கும் காலேஜ் ஸ்டூடண்ட்களை வெச்சி பாடம் நடத்தி, ஓவரா ஸ்ட்ரைன் பண்ணி உடம்பை கெடுத்துக்குவார்னு ஒரு மாறுதலா இருக்கட்டும்னு எங்க வீட்டோட கொண்டு போய் வெச்சிக்கிட்டேன்;

அவருக்கு எந்த வேலையும் கொடுக்கலை;

‘ஃபுல் ரெஸ்ட்ல’ தான் இருந்தாரு.”

வெள்ளந்தியாகச் சொன்னாள், மகள்.

நோய்க்கான காரணம் புரிந்துவிட்டது கவுன்சிலர் வரதராஜனுக்கு;

அடுத்து ஆகவேண்டியதைப் பற்றி யோசித்தார்.


திடீர்னு இப்படி ஆயிருச்சு! குணமாயிருவாங்களா எங்கப்பா?”

கேட்டாள் பார்கின்சன் நோயாளியின் மகள். கண்களில் நீர் துளிர்த்தது.

“தாத்தா பெட்டர் ஆயிருவாங்களா?”

அழகான நுனிநாக்கு ஆங்கிலத்தில் கேட்டாள் அந்தப் பருவ மங்கை.

அவள் வலது கையிலிருந்த புத்தகத்தில், ஆள்காட்டி விரல் ‘Book Mark’ ஆக நுழைந்திருந்தது.

“என்ன புத்தகம் அது?”

வாங்கிப் பார்த்தார் வரதராஜன்.

‘எட்கர் ஆலன் போ’ என்ற அமெரிக்கக் கவிஞரின் கவிதைத் தொகுப்பு.


“நெவர் மோர்…!”

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் பி ஏ படித்தபோது, கல்லூரி ஆங்கில இலக்கிய வகுப்பில், காதில் வாங்கிய சொற்றொடர்;

இப்போது போல் மண்டையில் அடித்தது வரதராஜனுக்கு.

எதிரில் நியூராலஜிஸ்ட் ரிஷபன் நின்றதால், தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார் மனநல ஆலோசகர் வரதராஜன்.

இனிஷியல் ஸ்டேஜ். என்லைட்டன் த ஸ்டேஜ் டு தெம்.

‘பார்க்கின்ஸன்’ பேஷண்ட்டைப் பார்த்தார் வரதராஜன்.

“ஸ்பீச் தெரபி தேவையானு பார்த்துக்கங்க…!”- என்றார் ரிஷபன்.

“ஓ கே சார்…!” என்றார் மனநலஆலோசகர்.


பார்க்கின்ஸன் நோய்;

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்;

அதாவது மொத்த உடலியக்கத்துக்கு மூளையே பிரதானம் என்பதுதான் இந்தச் சொலவடையின் உட்பொருள்.

அசாதாரணமான ஜீன், சுற்றுச் சூழல் மாசு போன்றவைகூட ஒரு சில விழுக்காடுகள் இந்த நோய்க்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும், மூளையில் ஏற்படும் பாதிப்பின் விளைவே பார்க்கின்ஸன் நோய்க்கு 99 சதவிகிதம் முக்கியக் காரணமாகக் கொள்ளப்படுகிறது.

நரம்புச் செயலிழப்பால் ஏற்படும் முக்கியமான பாதிப்புகளில் ‘அல்சைமர் (Alzheimer’s Disease) எனப்படும் ஞாபக மறதி முதலிடத்திலும், பார்கின்சன்’ (Parkinson) இரண்டாவது இடத்திலும் உள்ளன.

குறிப்பாக நரம்பு மண்டலத்திலுள்ள டோபோமைன் (Dopamine) என்ற ஹார்மோனின் சுரப்புக் குறைவுபடும்போது உண்டாகும் நோயே பார்க்கின்சன்.

உடலின் தசை இயக்கத்தைப் பெருமளவில் இந்தநோய் பாதிக்கிறது.

பேசுதல், பார்த்தல், கேட்டல் போன்ற செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் ஓர் நோய் இது.


‘ஜேம்ஸ் பார்க்கின்சன்’ என்ற ஆங்கில அறுவை சிகிச்சை நிபுணர்தான் இந்த நோய்க்கான அறிகுறிகள், விளைவுகள் குறித்து முதன்முதலாக முறையாக விளக்கி, இது மத்திய நரம்பு மண்டல நோய் என்பதை அடையாளம் கண்டார்.

இந்தநோய்க்கு பக்கவாத நடுக்கம் (Paralysis Agitans), முடக்குவாத நடுக்கம் (Shaking Palsy) என்றெல்லாம் பெயரிட்டார்.

பின்னாளில் இது ‘பார்க்கின்சன் நோய்’ என்று இவர் பெயராலேயே குறிப்பிடத் தொடங்கவிட்டது மருத்துவ உலகம்.


‘பி ஏ’ வகுப்பில் முதல் பெஞ்ச்சில் அமர்ந்திருப்பான் வரதராஜன்.

“லெட் மீ டிஸ்கஸ் ‘ரேவன்’ பை ‘எட்கர் ஆலன் போ…?”

பேராசிரியர் ‘ஏ வி ஆர்’ன் கம்பீரமான குரல் வகுப்பறையை வசப்படுத்தும்;

அப்படியொரு வெண்கலக் குரல் அவருக்கு.

“யெஸ் ஸார்…!”

நிரம்பி வழிந்த வகுப்பறை ‘கோரஸ்’ஸாய்ப் பிரதிபலிக்கும்;

‘அமெரிக்கன் லிட்ரேச்சர்’ புத்தகம் மேஜையில் விரிந்திவாறிருக்கும்;

அதோடுகூடக் குறிப்பேடுகளும் தயார் நிலையிலிருக்கும்.


“தயாராகலாமா?” – கேட்பார் ஏ வி ஆர்

“யெஸ் ஸார்…!”

ஒரே குரலில் மொத்த வகுப்பும் ஆமோதிக்கும்…;

ஒத்தாற்போல் அனைவரும் நிமிர்ந்து அமர்வார்கள். கண் மூடிவார்கள்;

கவனம் குவிப்பார்கள்;

மனதை ஒருமுகப் படுத்துவார்கள்;

‘ஏ வி ஆர்’ வகுப்பில் வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறை இது.


“ரிலாக்ஸ்” – என்பார் ஏ வி ஆர்.

இப்போது, காதுகளை மட்டும் திறந்துகொள்ளவேண்டும்…;

கண்கள் மூடிய நிலையில்தான் இருக்கவேண்டும்;

இது ‘ப்ரொபசர்’ ஏ வி ஆரின் அன்புக் கட்டளை;

வகுப்பிலிருக்கும் மொத்த மாணவர்களின் காதுகளும் பேராசிரியரின் ‘கமாண்டிங் லாங்வேஜ்’ கேட்கக் கண்களை மூடியபடிக் காத்திருப்பர்.”


“Once upon a midnight…..”

மந்திர உச்சாடனம் போலத் தொடங்குவார் ஏ வி ஆர்;

நடு ராத்திரி பனிரெண்டு மணி…;

கரியிருட்டு…;

“உய்…! உய்…!! உய்…!!!”;

வீசியடித்தது ஊதற்காற்று…;

“விஷ்…! விஷ்…!! வீஷ்…!!!”;

காற்றில் அலையும் தாவரங்களின் ஓசை;

புதைக்கப்பட்ட சவங்களின் ஆவிகளெல்லாம் கல்லரைவிட்டு எழும்பிக் கடற்கரையில் கை கோர்த்து உலா வரும் பருவ நாள்;

“அமாவாசை.”


கடற்கரையை ஒட்டி நின்றது, ஒரு பிரும்மாண்டமான பங்களா…;

பங்களாவின் மேல்தளத்தில் நேர்த்தியாக அமைக்கப்பட்ட நூலகம்…;

இயற்கை வெளிச்சத்திற்காகவும் காற்றிற்காகவும், நாற்புறமும் அமைக்கப்பட்ட நூலக சன்னல்கள்…;

மூடப்பட்ட சன்னலுக்கு முன் ஊதற்காற்றில் படபடத்தபடித் தொங்கும் பழுப்பு நிற திரைச்சீலைகள்;

“டக்…டக்… டக்…டக்…”;

கதவு தட்டும் சத்தம்;

ட்ரக்…ட்ரக்…;

விடாது கதவு கீறும் ஓசை.


நூலகத்தினுள் ஓர் இளைஞன்.

சோகமே வடிவமாய் அமர்ந்திருக்கிறான்;

கனத்த புத்தகத்தில் ஆறுதல் தேடிக்கொண்டிருக்கிறான்;

தன் இளம் காதல் மனைவியை இழந்த சோகத்தை புத்தகங்களின் ஏடுகளில் புதைக்கப் பார்க்கிறான்.”

‘எதுவொன்றை வலுக்கட்டாயமாக மறக்க நினைத்தாலும் அது பன்மடங்கு நம் முன் வந்து நிற்பது’தானே நடைமுறை.

மறக்க நினைத்த சோகம் பன்மடங்கு பெருகுகிறது அந்த இளைஞனுக்கு.


“டக்…டொக்… டக்…டொக்…”

‘காதலிதான் தனைத் தேடித் திரும்பி வந்திருப்பாளோ?’

எண்ணுகிறது அவன் மனம்.

“மாண்டவர் எப்படி மீண்டு வரமுடியும்…?”

தர்க்கிக்கிறது அவன் புத்தி.

மனசுக்கும் புத்திக்குமிடையே சிறிதுநேரம் வாக்குவாதம் வந்தாலும், அலைபாயும் மனசு முழுதும் ஆறுயிர் காதலியின் நீங்கா நினைவொன்றையேச் சுற்றி வந்தது;

காதலிதான் வந்து கதவு தட்டுவதாக உணர்ந்தான்;

‘வேறு எவராவது இருக்குமோ?’ என்றும் யோசனை வருகிறது.

அப்படியெனில், கதவுக்கு வெளியில் நிற்பது ‘ஆணா? பெண்ணா?’

தெரியாதாகையால், “சார்…! மேடம்…! இதோ வருகிறேன்..” என்கிறான்;

சொல்லியபடியே ஓட்டமும் நடையுமாய்த், தன் காதலி ‘லேனோர்’ தரிசனம் எதிர்பார்த்துத் கதவை விரியத் திறக்கிறான் இளைஞன்.

வெளியே…;

இருட்டைத் தவிர எவருமில்லை.

“ONLY DARKNESS NEVERMORE…”

அப்படியே வகுப்பு முழுதும் சிலிர்ப்புடன் பிரமிக்கும்;

கவிதை வரிகள் மூடப்பட்ட கண்முன் காட்சிகளாய் ஓடும்;

‘ஏ வி ஆர்’ சார் வகுப்பென்றால் அப்படியிருக்கும்;

காட்சிப் படிமங்கள் கண் முன் நிற்கும்.

கல்லூரிக்கு விடுப்பெடுத்தாலும், அவர் வகுப்புக்கு மட்டும் வந்துவிடுவார்கள் மாணவர்கள்.


“தாத்தா பேசுவாரா கவுன்சிலர் சார்…!”

அழகான ஆங்கில உச்சரிப்பில் மீண்டும் கேட்டாள் அந்தக் கல்லூரிப் பெண்.

“ம்…!”

“எப்ப..?”

“அந்தப் புத்தகத்தைக் கொடுங்க…!”

“நாற்பது வருடத்திற்கு முன் வகுப்பறையில் வைத்திருந்த அதே புத்தகத்தின் புதுப் பதிப்பு”

ரேவன் கவிதை உள்ள பக்கத்தைத் புரட்டி வைத்துக் கொண்டார் வரதராஜன்.


“லெட் மீ டிஸ்கஸ் ரேவன்…!”

கம்பீரமாகத் தொடங்கினார் வரதராஜன்.

நடுநடுவே பேஷண்டின் அசைவுகளையும் கவனத்துக்கொண்டார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்தக் கவிதையை உயிர்ப்புடன் விவரித்தார்.

கடைசீப் பத்தி படிக்கும்போது சற்றே தடுமாறினாற்போல பாவனை செய்தார்;

தப்பும் தவறுமாகப் படித்தார்.

And the Raven, never flitting, still is sitting, still is sitting

On the pallid bust of Pallas just above my chamber door;

இப்போது கவுன்சிலர் வரதராஜன் விளக்கினார்.

“சிகிச்சை முறையின் நோக்கம் பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன்;

‘அதிக உழைப்பு, குறைவான ஓய்வுதான்!’ தரப்பட வேண்டும் இதுபோன்ற நோயாளிகளுக்கு;

ஓய்வு அதிகம் கொடுத்துவிட்டால், அடுத்த செய்கைக்கு இவர்கள் தயாராக மாட்டார்கள்;

தொடர் ஓய்வுகொடுத்தால், இவர்களை எளிதில் முடக்கிப்போட்டுவிடும்;

பிஸியோதெரபியோ, ஸ்பீச் தெரப்பியோ, பார்கின்சனுக்கான முழுமையான தீர்வாக இருக்காதுன்னாலும், பாதிப்பு மேலும் தீவிரமடையாமத் தடுக்கத்தான் உதவும்.

பார்க்கின்ஸன்’னு டைக்னோஸ் செஞ்தபின் அவங்களை தனிமையில் விடவேக்கூடாது;

நாள் பூரா ரெஸ்ட் தர்றது கூடவேக் கூடாது;

அவங்களுக்கு ஈடுபாடுள்ள, பிடிச்ச துறைல, முழுக்க முழுக்க அவங்களை ஈடுபடுத்தறது ஒண்ணுதான் அவங்க உயிர்ப்போடச் செயல்பட ஒரே வழி.

Old Age is hath yet his honour and his toil…

என்ற டென்னிசனின் யுலிஸெஸ் கவிதை வரிகளை விளக்கத் தொடங்கிவிட்டார் பார்கின்சன் நோயாளி.


“ரிடையர் ஆனதும், பூரண ஓய்வு எடுக்கட்டுமேனு அவருக்கு வர்ற டியூஷன் க்ளாஸை நிறுத்தினதோட, அவரோட பேத்திக்குக்கூட சொல்லித்தர அனுமதிக்கலை. இப்போதான் எங்க தப்பு தெரியுது கவுன்சிலர் சார்..” என்றார் பேஷண்டின் மகள்.

“நீங்க மட்டுமில்லை. பலரும் இப்படித்தான் இருக்காங்க. பல வியாதிகளுக்கு அவங்கவங்களா எதையாவது தீர்வு செஞ்சிக்கறாங்க.”

வரதராஜன் சொன்ன போது

“Self-medication is always dangerous”

என்று கம்பீரமாகச் சொல்லி, விளக்கவும் தொடங்கினார் பேஷண்ட்.

“சார் நான் உங்க ஸ்டூடண்ட் சார்.”

கவுன்சிலர் வரதராஜன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

“I recognized you while you approach Raven.,,!”

என்று சொல்லி வரதராஜனின் முதுகில் தட்டிக் கொடுத்தார்.


மருந்து மாத்திரைகள், தெரப்பிகள் போன்ற எல்லாவற்றையும் விட, இந்த நோய்க்கு அடிமையாகிவிடாமல் பாதுகாப்பது, தனி மனிதனுடைய சுயத்தை போற்றுதலும், சுதந்திரமாகச் செயபடவிடுதலும்தான் வழிகள்;

‘சார்’க்கு மிகவும் பிடிச்ச துறை ஆங்கில இலக்கியம் நடத்தறதுதான்;

அதை தொடர்ந்து செய்ய அனுமதியுங்க.. நார்மலாயிடுவாரு…!”


“நான் அடுத்த இன்னிங்ஸ்க்கு ரெடியாயிட்டேன். என் பேத்திதான் இந்த என் இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்துல, என் முதல் ஸ்டூடண்ட்…!” என்றார் ஏ வி ஆர் குதூகலத்துடன்..

“பேத்திகள்னு சொல்லுங்க சார். என் மகளையும் உங்ககிட்டேதான் அனுப்பப்போறேன். அவளும் பி ஏ இங்க்லீஷ் லிட்’தான் படிக்கறா சார் என்றார் வரதராஜன் குருபக்தியுடன்.

– விகடன் 27.05.2023

இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *