பாப்பாரப்பூச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,553 
 
 

பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தாள் லட்சுமி. குமரனால் உட்கார முடியவில்லை. கீழே உட்கார்ந்தால் ஆசனவாயில் முள்ளை சொருகிவிட்டதைப்போல உறுத்தியது. எழுந்து வராந்தாவில் இப்படியும் அப்படியும் நடந்தான். தொடர்ந்து நடக்கவும் முடியவில்லை.

லட்சுமியின் கதறல் அதிகமானதும் மருத்துவர் அறைக்கு ஒடினான். நிதானமாய் நடந்து பிரசவ அறைக்கு வந்த மருத்துவர் லட்சுமியின் வயிற்றை அழுத்திப் பார்த்தார். அருகில் நின்ற நர்சிடம் கையை ஆட்டி சைகை செய்தார். ஒரு கை நீளமுள்ள கம்பின் முனையில் பந்துபோல சுற்றப்பட்டிருந்த துணியை மண்ணெண்ணைய் டப்பாவில் முக்கி எடுத்து, தீக்குச்சியை சர்ரக்கென்று ஊரசி பற்றிவைத்தாள் நர்சு.

பளீரென பற்றிக்கொண்ட தீ திகுதிகுவென எரிந்து, அந்த அறைச் சுவர்களைங்கும் நடனமாடியது. செஞ்சுவாலைகளுடன் கொழுந்துவிட்டெறிந்த அதை நர்சிடமிருந்து வாங்கிய மருத்துவர் லட்சுமியை நெருங்கினார்.

மருத்துவர் ஏன் தீவட்டி பிடிக்கிறார்? ஒரு காலத்தில் மின் விளக்குகள் வராத ஆதியில் லாந்தர், பெட்ரோமாக்ஸ், சிம்னிவிளக்குகள் வெளிச்சத்தில் பிரசவங்கள் நடத்திருக்கலாம். ஒருவேளை தீவெட்டி வெளிச்சத்தில் கூட குழந்தைகள் பிறந்திருக்கலாம். ஆனால் இப்போது ஏன் தீவெட்டி பிடிக்கிறார் இந்த மருத்துவர். அதுவும் விடியப்போகும் இந்த நேரத்தில் குமரனுக்கு விசித்திரமாய் இருந்தது. ஆனால் இதே போன்று கொழுந்து விட்டைரியும் தீயை இவன் கூட அண்மையில் பார்த்திருக்கிறானே. எங்கே ?

அப்போது அவன் கனவிலும் நினைத்துப்பார்த்திராத அது நடந்தது. வலியால் கதறிக் கொண்டிருந்த லட்சுமியை கட்டிலிலிருந்து இறக்கி நிற்கவைத்தாள் நர்சு. கசங்கிக் கிடந்த அவளின் சேலை முந்தானையை உருவி அவளது இடுப்பில் சுற்றிச் சொருகினாள்.

பெரிய பூசனிப் பழம் போல பெருத்திருந்த வயிறும், அதற்குமேல் பருத்து, ஜாக்கொட்டை மீறி விம்மிக் கொண்டிருந்த மார்பகங்களுமாய் லட்சுமி நிற்க, நர்சு இவளது இரண்டு கைகளையும் பின் பக்கமாய் மடக்கிப் பிடித்துக் கொள்ள, குரூரச் சிரிப்புடனும் வெறிபிடித்தக் கண்களுடனும் எரியும் தீப்பந்தத்தை லட்சுமியின் வயிற்றில் வைத்து அழுத்தினார். சடசடவென ஜாக்கெட், சேலை தீப்பிடிக்க, அலறித்துடித்தாள் லட்சுமி.

அதிர்ந்துபோன குமரன் ஐயே “அத உட்ருங்க சார்… உட்ருங்க சார்” என்று கத்தினான்.

இவனைத் திரும்பி முறைத்த மருத்துவர் அந்த தீப்பந்தத்தை வீசிவிட்டு வேறு ஒரு பெரிய தீப்பந்தத்தை அவரே கொளுத்தினார். தீ ஒரு ஆள் உயரத்துக்கு எழுந்தது. தீயின் சுவலைகள் அவரின் முகத்தில் ஓங்காரமாக நடனமாட, மிகக் கொடூரமான சீரிப்பொன்று அவர் வாயிலிருந்து எழுந்தது.

நர்சு லட்சுமியின் கைகளை பின்புறமாக புடவையாலேயே கட்டினாள். குமரன் அலறினான். ஓடிப்போய் மருத்துவரின் கால்களில் விழுந்தான். இவனை உதைத்துத் தள்ளிவிட்டு, தீப்பந்தத்தை மீண்டும் லட்சுமியின் வயிற்றிலேயே வைத்து பலங்கொண்டமட்டும் அழுத்த, பொதுக் என வயிற்றினுள் புகுந்தது. வயிற்றுச்சதைகளும் குடலும் பொசுங்கிக் கருக, பொலபொலவென வயிற்றுக்குள்ளிருந்து வெள்ளையும், மஞ்சுளுமாய் ஆயிரக்கணக்கான முட்டைகள் உதிரத் தொடங்கின.

மருத்துவர் தீவட்டியை அசைத்து அசைத்துச் சொருக, கீழே உதிர்ந்த முட்டைகள் அவள் கால்களுக்குக் கீழே தெப்பலாக விழுந்து சிதறின.

“உட்ருங்க டாக்டர்.. இனிமே அப்டி செய்யமாட்டங் டாக்டர்.. அத உட்ருங்க டாக்டர்” என்று அடித் தொண்டையிலிருந்து கத்தினான் குமரன்.

“ஏய்… த்தமே… இன்னா…ன்னாமே….ஏங் தூக்கத்துல இப்டி கத்தற” என்று லட்சுமி அரண்டு போய் குமரனை உலுக்கினாள்.

படாரென எழுந்து உட்கார்ந்தான் அவன். இளஞ்சிவப்பு இரவு விளக்கின் ஒளியினூôடே லட்சுமி அவனைப் புரியாமல் பார்த்தாள். கண்களை மூடி, தலையை உதறிக்கொண்டு அவளைப் பார்த்தான். அவள் வயிற்றைப் பார்த்தான். முந்தானை மார்பகங்களுக்கு நடுவில் ஒதுங்கியிருக்க, மார்புகளுக்குக் கீழியிருந்து இடுப்புவரை மேடிட்டிருந்த வயிறு, அவள் மூச்சுக் காற்றில் மெல்ல எறி இறங்கியது.

“இன்னாமே எதுனா கனா கினா கண்டியா ?” என்றாள் லட்சுமி. கனவு தானா ?

“ஒன்னுமில்ல….உனுக்கு இடுப்பு எதுனா நோவுதா ?” என்று கேட்டான்.

“இல்லியே …. இன்னாமே” என்றாள் கொட்டாவி விட்டபடி

“ஒன்னுமில்ல… படு” என்று கூறிவிட்டு உள் அறையிலிருந்து எழுந்து வெளியே வந்தான்.

சமையலறைக்கும் உள் அறைக்கும் இடையிலிருந்த நடு அறையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள் அவனது அம்மா கமலம்மா. ஊர் நிசப்தமாயிருந்ததது. லேசாக இருமிக்கொண்டே வெளி வாசலைக் கடந்துபோய் சிறு நீர் கழித்தான். இருமல் சத்தத்தைக்கேட்டு வடவாண்டை மூலையிலிருந்து ஏட்டுகானின் நாய் குரைத்தது.

என்ன கனவு இது ? ஏன் இப்படி இவனை வதைக்கிறது ? எவ்வளவு பயங்கரமான கனவு. லட்சுமியின் வயிற்றிலிருந்து ஆயிரக்கணக்கான முட்டைகள் உதிர்வது என்ன கனவு ?

அதே முட்டைகள். பாப்பாரப்பூச்சிகளின் கூண்டுகளிலிருந்து உதிர்ந்த அதே வெளுப்பும், மஞ்சுளுமான முட்டைகள் அந்த கண‌த்தில் அவனது தூக்கம் அங்கே அடுக்கப்பட்டிருந்த பானைச்சந்திலோ மூட்டைச்சத்திலோ போய் பதுங்கிக் கொள்ள, திகிலோடு யோசிக்க ஆரம்பித்தான்.

ஒரு வேளை நாம் அதைச் செய்திருக்கக் கூடாதோ ? அத்தனை பேர் சொன்னபிறகும் செய்திருக்கக் கூடாதுதான்.

பொதுவாகவே ரொம்ப மிருதுவான மனம் கொண்டவன் தான் குமரன். வயல்களில் நெற்பயிர்களையும், கேழ்வரகுக் கதிர்களையும் கடித்து துவம்சம் செய்கிற எலிகளைக்கூட அடிக்கக்கூடாது என்பான்.

“எலிங்க துன்ற தானியத்துலதான் உங்க தலமுறை அய்ஞ்சிடப் போவுதா” என்பான்.

வளைகளில் ஊதல் அடித்தோ, வரம்புகளைத் தோண்டியோ எலிகளைச் சாகடிக்கிற சக வாவாயிகளைக்கூட தீட்டுவான். அப்படிப்பட்டவன் ஒரு கால்மணி நேரத்தில் ஆயிரமாயிரம் பாப்பாரப்பூச்சிகளையும், அதன் முட்டைகளையும் பொசுக்கித் தள்ளிவிட்டான்.

எல்லாம் இந்தக் கேபிள் ஒயரால் வந்தது. ஊருக்கு வெளியே எட்டி மரங்களிலும், புங்க மரங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் பாப்பாரப்பூச்சிகளை சின்ன வயதிலிருந்தே அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும், அப்போதுதான் சோப்புப்போட்டு குளித்ததைப் போல சுத்தமாகவும், நெருப்பைப்போன்று சிவப்பாகவும், வரிசை வரிசையாக ஓடிச் கொண்டிருக்கும் அவை பெரும்பாலும் யாரையும் கடிப்பதில்லை.

பார்ப்பன் வீட்டுப் பிள்ளைகளைப் போல செக்கக் செவேலேன இருப்பதாலேயே பாப்பாரப்பூச்சியென பெயர் சூட்டப்பட்ட அந்த எறும்புகளை யாரும் நசுக்குவதுமில்லை, சிவப்பாக இருப்பதாலேயே சாமி எரும்பு என்று சிறுவர்கள் கும்பிடுவது கூட உண்டு சிவப்புக்கு எப்போதுமே மரியாதைதானே.

ஊருக்குள் தொலைக்காட்சிப் பொட்டிகள் பெருகிய பின் நகரத்திலிருந்து கேபிள் ஓயர்கள் வந்துவிட்டன். ஒற்றை ரயில் தண்டவாளம் போன்று ஊரோடு ஊரை இணைத்துக்கொண்டு முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கின்றன அவை. அதே வேளையில் பனை மரங்கள், புளி மரங்கள், புங்கமரங்கள், வேப்பமரங்கள் என மரத்தோடு மரத்தையும் இணைத்துவிட்டன அவை.

அங்குதான் ஆரம்பித்தது வம்பு. மரங்களில் மட்டுமே ஊர்ந்து கொண்டிருந்த அந்தப் பாப்பாரப்பூச்சிகள் அந்த ஒயர்தடத்தைப் பற்றி ஊருக்குள்ளும் வந்து விட்டது. மனிதர்கள் ஊருக்கு ஊர் பயணிப்பதைப்போல ஒயர்களின் வழியே மரத்திற்கு மரம் சதா பயணம் செய்து கொண்டே இருக்கும். ஒயர்கள் போட்ட புதிதில் வரிசை வரிசையாக அவற்றின் மீது அவை ஊர்ந்து செல்வதைப் பார்க்க வெகு அழகாக இருக்கும்.

“ரயிலு ரயிலு” என கை நீட்டி குதிப்பான் இவனது மூன்று வயது ரேவதிக் குட்டி. எல்லாமே அளவோடு இருக்கிறவரை அழகுதானே. ஆனால் அழகே கூட அதிகமானால் ஆபத்தாகிவிடுகிறது.

மரங்களிலிருந்து இறங்கி வீடு, வாசல், திண்ணை, சுவர் என எங்கும் அவை திரியத் தொடங்கிய போதுதான் தொல்லைகள் ஆரம்பித்தன. நடக்கும்போது பாதங்களைப் பற்றி சரசரவென தொடை வரை ஏறிவிடுகிறது. கால்களை உதறினால் அப்படியே சதையைக் கவ்விக் கடிக்கிறது. கடி தடத்தில் அவை உமிமும் திரவம் விறுவிறுவென நமைச்சலை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் உடல் எங்கும் திட்டுத் திட்டாக தடித்து விடுகிறது.

தரையில் மந்தை மந்தையாய் செம்மறியாட்டுக் கூட்டங்களைப் போல இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கும் அவை, தங்களுக்கிடையில் மனிதக்கால்கள் நுழைந்தால் போதும், அத்தனையும் ஒருசேர தலையைத்தூக்கி, வாயைப் பிளந்து, கொடுக்குகளை நீட்டி, ஆக்ரோஷமான போர் வீரர்களைப்போல நிற்கின்றன. அவைகளுக்கிடையில் அந்நியர் புகுந்து விட்ட ஆத்திரம் சிறு சிறு கடுகுகளைப் போன்ற அவற்றின் கண்களில் தெரியும்.

இந்த ஊர், வீடுகள், வாசல்கள், மரங்கள் எல்லாம் யாருக்குச் சொந்தமானவை ? மனிதர்களுக்கா ? கேவலம் இந்த எறும்புகளுக்கா ? யாருக்குக் குறுக்கே யார்வருவது ? அடிக்கடி குமரனை இந்தக் கேள்வி அரிக்கத் தொடங்கிவிடும்.

சிவப்பாய், அழகாய் இருக்கிறதேயென்று இவற்றிற்கு இடம்கொடுத்தது தான் நாம் செய்த தவறோ ? அழகாயிருப்பவையும், சிவப்பும், வெறுப்புமாய் இருப்பவையும் மனிதர்களின் பலவீனத்தைத் தின்று இப்படிதான் பெருகிவிடுமோ ? ஊரில் வீடுகள் பெருகிவிட்டன. குடும்பங்கள் பிரிந்து பிரிந்து வீடுகளாக விரிந்துகொண்டே இருக்கின்றன. அவற்றிற்காக செங்கல் சூளைகள் புகைந்து கொண்டே இருக்கின்றன. அதற்காக தேடித்தேடி மரங்களை வெட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஊரில் ஒரு புளிய மரம் இல்லை, புங்க மரங்களும், எட்டி, பனை, வேம்பு மரங்களும் சாம்பலாகிக் கொண்டே இருக்கின்றன. மனிதர்கள் பெருகப்பெருக வீடுகள் பெருகின்றன. புழு, பூச்சிகள் பெருகப்பெருக மரங்கள் பெருக வேண்டுமில்லையா ? ஆனால் இருப்பதும் போனால் அவை மட்டும் என்ன செய்யும் ? ஊருக்குள் தானே வரும். அப்படி வந்ததால்தானே மனிதன் நடமாடுவதே சிரமமாகிவிட்டது. மிதித்தால் கடிக்கிறது. மிதிக்காமலும் இருக்க முடியவில்லை.

குமரனின் வீட்டுக்கு அருகிலேயே செழித்திருந்த புங்கமரத்தில் பெரும் கூட்டமே இருந்தது அடி மரம் முதல் நுனிக்கிளை, இலைகள் வரை மொசமொசவென மொய்த்துக்கிடந்தன. மரம் முழுவதும் இலைகளைச் சேர்த்து சுருட்டிச்சுருட்டி பெரிய பெரிய பந்துகளைப் போல கூடுகள் கட்டிவிட்டன. ஒவ்வொன்றிலும் முட்டைகள் இட்டு காவல் இருந்தன. அவை யாவும் குஞ்சு பொறித்துவிட்டால் வீடு தாங்காது. அந்த ஊரும் தாங்காது. என்ன செய்வது ?

ஏற்கனவே ரேவதியின் சிவந்த உடலைங்கும் அவை கடித்து திட்டுத் திட்டாய் தடிப்புகள். அதைப் பார்த்துப் பார்த்து சபித்துக்கொண்டே இருந்தாள் லட்சுமி. வேறு வழியே இல்லாமல் தான் வருகிற பாவம் வரட்டும் என்று குமரனின் அப்பா, ஒரு நீண்ட மூங்கில் கெடையின் முனையில் தீவட்டியைப் போல துணியைச் சுற்றி, மண்ணெண்ணெயில் ஊறவைத்துக் கொளுத்தி தலைக்கு மேல் நீட்டி, புங்கமரத்தில் தொங்கிய பூச்சிக் கூடுகளின் அடியில் காட்டினார்.

சடசடத்து தீப்பற்றிய கூடுகளின் மேல் மொய்த்த பாப்பாரப்பூச்சிகள் நொடிப்பொமுதில் சுருண்டு விழுந்தன. தூக்கிப் பிடித்த கைகள் வலித்து, அவர் தளர்ந்தபோது குமரன் தீப்பந்தத்தை வாங்கினான்.

“டேய் நைனா … நீ வாணாண்டா … உம் பொண்டாட்டி வாயும் வயிறுமா இன்னிக்கோ நாளிக்கோனு கீது….. இந்நேரத்திக்கி நீ இதமாதிரி வேலய யெல்லாங் செய்யக்கூடாது” என்றார்.

“அதைல்லாங் பார்த்தா ஆவாது …. நீ குடுப்பா….மனுசனால வெளிய ஒலாத்த முடியலா… இப்படியபோனா ஒருத்தரு கூட ஊருக்குள்ள இருக்க முடியாது”. என்று தீப்பந்தத்தை வாங்கி தூக்கிப்பிடித்து கூடுகளைப் பொசுக்கினான். எரியும் கூடுகளுக்குள்ளிருந்து வெள்ளையும், மஞ்சளுமாய் எறும்பு முட்டைகள் கொத்துக் கொத்தாய் உதிர்ந்தன.

“ஒன்னு ஒன்த்லயுங் எம்மாம்முட்ட கீதுபாரு…அப்படியே உட்டா இன்னா ஆவற்து” என்று மீண்டும் மீண்டும் தீயில் எண்ணெயை ஊற்றி எல்லக் கூடுகளையும் தீய்த்துக்கருக்கினான்.

தரையெங்கும் உதிர்ந்த முட்டைகளும், வெடித்துச் சிதறிய எறும்புகளும் தெப்பலாய்க் கிடந்தன. புளிமரத்தில் புளியம் பழம் உதிர்க்கும் போது கூட இவ்வளவு தெப்பலாய் பழம் உதிர்வதில்லை.

“டேய் மச்சாங்…நீ ஏன்டா இந்த வேலயப் பண்ற….அதுவேற வாயும் வயிறுமா கீது” என்றார் வெள்ளைக்கண்ணு. கணேசனும் இவனைத் திட்டினார். மனைவி கர்ப்பவதியாக இருக்கும் போது கோழி அறுக்கக்கூடாது ஆடு வெட்டக்கூடாது, வாழை மரத்தைக்கூட வெட்டக்கூடாது என்பது ஊர் நம்பிக்கை. அது கருவுக்கு ஆகாது என்பது குமரனுக்கும் தெரியும். ஆனால் என்ன செய்வது ?

குமரன் இதற்கு முன் ஒரு பாப்பரப்பூச்சியைக்கூட கொன்றதில்லை. ஒரு முறை தண்ணீர் குண்டானில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு பாப்பாரப்பூச்சியைக் கூட குச்சியிலேற்றி வெளியில் விட்டவன் தான். ஆனால் என்ன செய்வது ? வளர்க்கிற நாய் பல் படாமல் கடிக்கிறபோது கொஞ்சுகிறோம். அதே நாய்க்கு வெறி பிடித்துவிட்டால் அடித்துக்காட்டில் வீசுவதில்லையா ? என்று மனசுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டான்.

கீழே சிதறிய எறும்புகளையும் முட்டைகளையும் தென்னைத் துடைப்பத்தால் பெருக்கிச்சேர்த்து தீ வைத்தபோது அவனது மனம் கனக்கத்தான் செய்தது. அன்று காலை அவனுக்கு உணவே இறங்கவில்லை.

யாருக்குச் சொந்தமானது இந்த பூமி, மனிதனுக்கா? எலி, பாம்பு, கீரி, மான், முயல், ஈ, எறும்புகளுக்கா? யார் வாழ எவர் அழிவது மேல்? இந்த இரண்டு மூன்று நாட்களாகவே அவனுக்குள் நெளிந்து கொண்டே இருக்கின்றன கோள்விகளும் முட்டைகளும் சடசடத்து இறந்த பாம்பாரப்பூச்சிகளும். ஒரு வேளை எல்லோரும் சொல்வதைப் போல இந்த நேரத்தில் அவற்றைக் கொளுத்தியிருக்கக் கூடாதோ? அது வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்குமோ?

லட்சுமியைப் பார்த்தான். சலனங்கள் எதுவுமின்றி தூங்கிக் கொண்டிருந்தாள். இன்றோ நாளையோ பிரசவம் ஆகிவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படி ஒரு கனவா? அவனுக்குக் கவலையாக இருந்தது. மீண்டும் எழுந்து வெளியே போய் வள்ளிமலையைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டான். உள்ளே வந்து திருநீறை நெற்றியில் பூசிக்கொண்டு படுத்தான். இவனது மார்பின் மீது வலது கையைப்போட்டு இவனோடு ஒட்டிப்படுத்தாள் லட்சுமி.

அரை மணி நேரம் கடந்தும் உறக்கம் வரவில்லை. அந்த நாய் வேறு விட்டு விட்டு குறைத்ததுக்கொண்டேயிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் தூக்கம் அவனை நெருங்கிய போது, நேரம் எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை முதுகில் எதுவோ நகத்தால் பிராண்டுவதைப் போல உணர்ந்து திரும்பிப்படுத்தான்.

“த்தும்மே…ஏய்…ஒய்த்த நோவுதுமே” என்றாள் லட்சுமி. மீண்டும் புரண்டு, கண்கள் சொருகினான்.

“ஏமே…எய்ந்திருமே….ஒய்த்த ரொம்போ நோவுது” என்று முனகிய படி அவனது தோள்பட்டையை உலுக்கினாள்.

அது மண்டைக்குள் உறைத்த‌தும் சடாரென்று எழுந்து உட்கார்ந்தான் பல்லால் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு இவனுக்கு அருகில் உட்கார்ந்திருந்த லட்சுமியைப் பார்த்தான். அதே இரவு விளக்கின் இளஞ்சிவப்பு வெளிச்சத்தில் அவளது முகத்திலிருந்த வேதனை அவனைக் கலவரமடையச் செய்தது. தலையை உயர்த்தி சுவர் கடிகாரத்தைப் பார்த்தான். ரெண்டேகால் மணி.

எழுந்து டியூப்லைட்டைப் போட்டான். பாயில் இவர்களுக்கு அருகில் படுத்திருந்த மூன்று வயது ரேவதி பளீர் வெளிச்சத்தில் தொட்டாச்சிணுங்கி செடியைப்போல கண்களைச் சுருக்கிக்கொண்டு திரும்பிப்படுத்தாள்.

“இன்னா நோவு ஜாஸ்தியாவாகீது இரு அம்மாவ கூட்டறேங்” என்றவன் உள் அறையிலிருந்த வெளியே வந்தான். அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கமலம்மாள் இவன் விளக்கைப்போட்டதும் கண்களை இடுக்கிகொண்டு விழிந்தாள். விஷயத்தைச் சொன்னதும் எழுந்து வந்தாள். அவர்கள் இருவரும் புடவையை மாற்றிக்கொள்ள இவன் சட்டையை மாட்டிக் கொண்டான். மாற்றுத்துணி, பழைய நூல் சேலைகள் பொட்ஷீட் எடுத்து ஒரு கட்டைப்பையில் வைத்துக்கொண்டு மோட்டர்சைக்கிளை மிதித்து மூவரும் உட்கார்ந்து கொள்ள அந்த அகாலத்தில் அதிக சத்தமாய் உருமிக்கொண்டு அது கிளம்பியது.

வெளித்திண்ணயில் உறங்கிக் கொண்டிருந்த அவன் அப்பா எழுந்து உள்ளேபோய் பேத்திக்கு அருகில் படுத்துக்கொண்டார். அங்கிருந்து ஐந்து மைல் தூரத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்குப் போய்ச் சேருவதற்குள் லட்சுமிக்கு வலி கூடிக்கொண்டே இருந்தது. சிலுசிலுவென்று வீசிய மெல்லிய குளிர்காற்றுக்குப் பாதுகாப்பாய் சால்வையை தலைவரை சுற்றியிருந்தவள் பல்லைக் கடித்துக் கொண்டு குமரனின் முதுகில் சாய்ந்து, மெலிதாக முனகிக் கொண்டே வந்தாள். ஒரு கையில் வண்டியின் கம்பியையும், மறு கையில் மருமகளையும் பிடித்துக்கொண்டிருந்த கமலம்மாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை.

ஐந்துமைல் தூரம் இன்னுமா வரவில்லை என மூன்று பேருமே சலித்துக்கொணடு ஆளரவற்று செடிப்பூச்சிகளின் கொய்ங் என்ற சத்தங்களோடு இருந்த சாலையில் விரைந்தனர். வேகமாகவும் போகமுடியாது. குழிப்பள்ளத்தில் துக்கிப்போடும். மெதுவாகவும் போக முடியவில்லை.

ஒரு யுகத்தைக் கடந்ததைப்போன்ற அலுப்புடன் அந்தச் சாலையைக் கடந்து, ஒரே ஒரு விளக்குடன் சோம்பலாய் படுத்திருந்த மருத்துவமனையை நெருங்கி வண்டியை ஒரங்கட்டிவிட்டு உள்ளே எட்டிப்பார்த்தபோது யாருமே இல்லை.

“சார்..சார்…” என்று கத்தி அலுத்த பின் தான் கம்பி கிரில்களில் இருந்த பூட்டைக் கவனித்தனர்.

“நைனா… நர்சம்மா கோட்டர்சுல இருப்பாங்க போய் எயிப்பி கூட்டுகினு வடா…” என்றாள் கமலம்மாள்.

அதே வளாகத்தில் மருத்துவமனையின் வலதுபுறம் வரிசையாக நான்கு நர்சு குடியிருப்புகளும் ஒரு மருத்துவர் குடியிருப்பும் இருந்தது. குடியிருப்பு இருந்தாலும் அதில் மருத்துவர் இருக்க்மாட்டார். நர்சுகள் மட்டுமே இருப்பார்கள். பதட்டத்தோடு ஓடி முகப்பில் விளக்கு எரிந்து கொண்டிருந்த வீட்டின் கதவைத் தட்டினான். நான்கு குடியிருப்புகளில் இரவில் எதில் விளக்கு எரிகிறதோ அதுதான் அன்று இரவுப் பணி செய்ய வேண்டிய நர்சின் வீடு. இது ஏற்கெனவே அங்கே போனவர்களுக்குத் தெரியும்.

கொட்டாவி விட்டபடி வந்த நர்சு இவனது பரபரப்பைப் பார்த்து எவ்விதப் பதட்டமும் இல்லாமல் எந்த ஊரு என்றாள்.

சொன்னான். செரி…..போ….வர்றேன் என்றாள்.

அடுத்த பத்தாவது நிமிடம் இவர்களின் பதைபதைப்புக்குப் பொருத்தமே இல்லாத நிதானத்தோடு வந்து, பூட்டைத்திறந்து விளக்குகளைப் போட்டுவிட்டு பிரசவ அறைக்குள் நுழைந்தாள் நர்சு. லட்சுமியைக் கட்டிலில் படுக்கவைத்து நாடி பிடித்துப்பார்த்தாள். வயிற்றில் கை வைத்து அழுத்திப் பார்த்தாள். தவிப்போடு அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தான் குமரன்.

அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தாள் நர்சு. “ஊசி போட்டிருக்கேன். காலீலதாங் ஆவும். வலி ஜாஸ்தியானா வந்து சொல்லு” என்று கூறிவிட்டு குடியிருப்புக்குப் போய்விட்டாள்.

உள்ளிருந்து லேசான முனகல் கேட்டுக்கொண்டிருக்க, வராந்தாவில் நீள நீளமாய் போட்டிருந்த முட்டி உயர சலவைக்கற்களில் ஒன்றின் மீது உட்கார்ந்தான். அரைமணி நேரம் கடந்திருக்கும் திடீரென்று முனகல் கதறலாக மாற, பதறி உள்ளே எட்டிப்பார்த்தான்.

“நர்சம்மவை கூப்டுகினு வாடா நைனா….நோவு ஜாஸ்தியாய்ச்சி” என்றாள் கமலம்மா.

சலிப்போடு வந்து மீண்டும் சோதித்த நர்சு, மீண்டும் ஒரு ஊசி போட்டாள். “எழுந்து நட…நடந்தாதான் சீக்கிரத்துல ஆவும்” என்றாள்.

வராண்டாவில் பல்லைக் கடித்தபடி லட்சுமி நடக்க, பின்னாலேயே நடந்தாள் கமலம்மா.

வானமும், ஊரும் ஆழ்ந்த உறக்கத்திலிருக்க, தூக்கங் கெட்டதால் சிடுசிடுத்துக் கொண்டிருந்தாள் நர்சு. இவன் மீண்டும் மொசைக்கல்லில் உட்கார்ந்தான். கவலை அவனை பலவீனப்படுத்தியது. தவறு செய்துவிட்டோமோ ?

இந்த நேரத்தில் அத்தனை உயிர்களை கொன்றிருக்கக் கூடாதோ ? அதனால் தான் இவள் வலியில் துடிக்கிறாளோ? இரண்டாவதாக பையன் பிறக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த சொந்தங்களும் வேண்டிக்கொண்டு காத்திருக்கின்றன. இவனும்தான். என்ன ஆகுமோ ?

பிறந்த குழந்தையை ஒரு தொட்டிலில் போட்டு எடுத்து வந்து இவன் முன்னால் நீட்டினாள் நர்சு. ஆணா? பொண்ணா ? நெஞ்சுக்கூடு தட்தட் என்று அடித்துக்கொள்ள ‘முருகா…முருகா…’ என்றபடி எட்டிப்பார்த்தான். அதிர்ந்து போனான்.

தொட்டிலில் விரித்திருந்த வெள்ளைத்துணியின் மீது நெருப்பு போன்ற சிவப்பு நிறத்தில் வசவசவென்று ஆயிரமாயிரம் பாப்பாரப்பூச்சிகள் அசைந்து கொண்டிருந்தன.

“நல்லா பாத்துக்குபா உங்க கொய்ந்திங்கள“ என்று சிரித்தாள் நர்சு. அவள் அந்தச்சிரிப்பின் ஒளி உயர உயர அவள் வாயின் இருபுறமும் கொடுக்குகள் முளைத்து நீண்டன.

“அய்யோ” என்று அலறினான்.

“இன்னாப்பா…. நோவு உம்பொண்டாட்டிக்கா….உனுக்கா…நீயின்ன ஒக்காந்துகினே தூங்கி தூக்கத்துலயே கத்தற” என்று அதட்டினாள் நர்சு.

அடச்சே… மீண்டும் கனவு. எப்படி கண்ணசர்ந்து விட்டேன். இதென்ன தொல்லை. இந்தப் பூச்சிகள் என்னை பழிவாங்காமல் விடாதா என்று திகிலோடு கண்களைத் தேய்த்தான்.

“ம் மா ஆ…..ஆ…….அய்யோ………ம்……..” என்று கத்தினாள் லட்சுமி. இப்போது பிரசவ அறையினுள் படுக்க வைக்கப்பட்டிருந்தாள்.

“கத்துரீ….ஜோராகத்து…….இப்பப் பெத்துக்க ரொம்ப கஸ்டமாகீதா… அப்ப படுக்கும்போது மட்டும் நல்லா இர்ந்திச்சா” என்று சீறினாள் நர்சு.

அதே எரிச்சலோடு வெளியே வந்தவள், இவனிடம் பிளாஸ்க்கை நீட்டி காபி வாங்கிவரச் சொன்னாள். இந்த நேரத்துல எப்படி அவள உட்டுட்டுப்போறது என்று தயங்கினான். “போய்யா உம் பொண்டிடாட்டிய ஒன்னும் நெரிகிரி தூக்கினு போய்டாது” என்று கத்தினாள். விடிந்தும் விடியாத அந்த நேரத்தில் வண்டியைக் கிளப்பி பேருந்து நிலையம் போய் காபி வாங்கிக் கொண்டு திரும்பி வந்து உள்ளே நுழைந்த போது, சோகமாக நின்றிருந்தாள் கமலம்மாள். இவனைப்பார்த்ததும் அவள் முகம் வெளிறிவிட்டது. இவனுக்குப் பதறியது.

“ஆயிட்சிடா நைனா” என்றாள்.

சட்டென்று மனம் லேசானது. நிம்மதியடைந்தான். ஆனால் ஏன் கவலையாக இருக்கிறாள் ? ஒரு வேளை பாப்பாரப்பூச்சி ஏதேனும் பழிவாங்கிவிட்டிருக்குமோ ?

“நல்லா செவசெவன்னு கீதுடா” என்று அவள் சொன்னாதும் இவனுக்கு திக்கென்து.

செவசெவன்னு….அய்யோ பாப்பாரப்பூச்சியே பிறந்துவிட்டதா ? அதனால் தான் அம்மா சோகமாக இருக்கிறாளா ? நர்சிடம் காபி பிளாஸ்க்கை கொடுத்துவிட்டு உள்ளே ஓடினான். அதற்குள் நனைந்த புடவையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் கமலம்மா.

துவண்டு போய் படுத்திருந்தாள் லட்சுமி. மனசு பரபரக்க உள்ளே நுழைந்தவன் கண்கள் விரிய, அவளுக்குப் பக்கத்தில் கிடத்தப்பட்டிருந்ததைப் பார்த்தான். அங்கே ஒரு குட்டி லட்சுமி படுத்திருந்தது. அந்த கணத்தில் குமரனுக்கு நெஞ்சில் முட்டிக்கொண்டு அழுகை வந்துவிட்டது.

“இன்னாடா பன்றது நைனா….நம்ம தல எய்த்து…ரெண்டாவதும் பொண்ணா பொறந்திட்ச்சி…ஆனா செவசெவன்னு பாப்பாத்திமாதிரி கீது பார்ரா” என்றாள் கமலம்மா.

“பாப்பாத்தி மாதிரி இருந்தா பரவால்ல….பாப்பாரபூச்சி மாதிரி இல்லையே” என்று மனசுக்குள் நினைத்து கொண்டவன் “ஆணா இருந்தா இன்னா பொண்ணா இருந்தா இன்னாமா” என்று சொல்லிக் கொண்டே குழந்தையின் கன்னத்தை வருடினான்.

பஞ்சைத்தொட்டது போல இருக்க, அவனது உச்சி வரை ஒரு சிலிர்ப்பு ஓடியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *