கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 8,088 
 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விழிப்புக்கும் எழுச்சிக்கும் வித்திட்ட தேசிய தினத்தை வரவேற்க நாடு தயாராகிக் கொண்டிருந்தது.

அன்று ஆகஸ்ட் மூன்றாம் நாள்.

கெப்பல் உயர்நிலைப்பள்ளியிலும் அலங்கரிப்பு வேலை மும்முரமாக நடந்தது. கொடிகள் கட்டுவதிலும், பூத்தொட்டிகளை ஒழுங்குபடுத்துவதிலும், வண்ணச் சுவரொட்டிகள் ஒட்டுவதிலும் மற்றும் பலவகைப்பணிகளிலும் மாணவ மாணவியர் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தனர்.

கருநீலமும் வெள்ளையும் கலந்த சீருடையில் தேனீக்கள் போல ஓடி ஆடி உழைக்கும் அவர்களோடு ஆசிரியர்களோடு பங்கேற்றிருந்தார்கள்.

தலைமை ஆசிரியர் ‘செங் லி யான் நியோ‘ தனது அலுவலகத்திலிருந்து பணிகளையும் பணியாற்றுகிறவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

வெறிச்சோடிய பார்வை அது. மகிழ்ச்சியில் திளைக்க வேண்டியவர் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார்.

சென்ற ஆண்டிலும் அதற்கு முந்திய ஆண்டுகளிலும் தேசிய தினங்களை அவர் எவ்வளவு உற்காகத்தோடு கொண்டார்! எவ்வளவு களிப்போடு கலந்து கொண்டார்!

ஆனால், இந்த ஆண்டு-

அலுவலகத்தில் உள்ள மற்றவர்களுக்கு அவரை ஏறிட்டுப் பார்க்கவே சங்கடமாக இருந்தது. என்ன காரணத்நுக்காக் அவர் இவவளவு மாறிப் போயிருக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அனுதாபப்பட்டார்கள்.

“கூமா….”

அலுவலகத்திற்குள் வந்த ஒரு மாணவன் குரல் கேட்டுத் திரும்பினார் தலைமை ஆசிரியை.

“கூமா” என்றால் அத்தையம்மா! பெரும்பாலான மாணவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பாகள்.

“தோரணம் கட்டுவதற்கு நூல்கயிறு எடுக்க வந்தேன்” என்று சொல்ல வந்தவன் அவன். ஆனால் அவரைப் பார்த்த்தும் அவனால் அதை சொல்ல முடியவில்லை தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டது போல குரல் தழதழக்க…தேம்பித் தேம்பி அழுது கொண்டு நின்றான்.

மாணவ மாணவிகள் அவர் மீது வைத்திருக்கின்ற அன்புக்கும் மதிப்புக்கும் ஓர் அடையாளமாக இருந்தது அக்காட்சி.

தலைமை ஆசிரியையின் மன வேதனை மேலும் அதிகமாகியது. இருக்கையை விட்டு எழுந்து மெதுவாக அவனருகில் சென்று அவனுக்கு ஆறுதலாக ஏதோ சொல்ல நினைத்தார். ஆனால், அவராலும் பேச முடியவில்லை .

திரும்பிச் சென்று இருக்கையில் அமர்ந்தார். நெஞ்சில் உள்ள துயரச் சுமையின் அழுத்தம் அவர் முகத்தில் நிழலாகப் படர்ந்தது. நிலைகொள்ளாமல் சுழலும் எண்ணங்களின் எதிர் விளைவாகக் கண்களில் ஈரம் கசிந்தது.

உள்ளக் கடலில், துன்ப அலைகள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பரித்ததை மறைக்கும் முயற்சியாகக் கோப்பு ஒன்றை எடுத்து முகத்துக்கு நேராகப் பிடித்துக்கொண்டு புரட்டிப் பார்க்கத் தொடங்கினார்.

தற்செயலாக எடுத்த அந்தக் கோப்பு அவருடைய நினைவுக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பாக இருந்தது.

விவரம் தெரிந்த நாளிலிருந்து நேற்று வரை அவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை யெல்ல்லாம் அவ்வப்போது அதில் குறித்து வைத்திருந்தார்.

அவருடைய விரல்கள் அதில் ஒவ்வொரு தாளாகப் புரட்ட, கண்கள் எழுத்துக்கள் மீது நிலைக்க, ஒன்றன்பின் ஒன்றாகச் சென்ற காலக் காட்சிகள் பல அவர் மனத் திரையில் விரிந்தன.


லாலாங் புல் மண்டிய புதர்கள். மணல் மேடுகளின் சரிவில் பாதுகாப்பற்ற சாலைகள். ஒழுங்கில்லாத ஒற்றையடிப் பாதைகள். குறுகலான சந்துகள். அசுத்தங்கள் தேங்கிய சாக்கடைகள். நெருக்கமான அத்தாப்பு வீடுகள்…

அப்போதைய ‘ரெடின்மாஸ்’ கம்பத்தின் பொதுவான தோற்றங்கள் சிலவற்றை நினைவூட்டியது கீழ்க்காணும் குறிப்பு. இதை எழுதியபோது செங் லியான் நியோவின வயது பதினாறு.

முன் கம்பி வேலி அடைப்புக்குள் ஒரு சின்ன அத்தாப்பு வீடு. வீட்டைச் சுற்றிலும் ரம்புத்தான் மரங்கள். காய்கறி செடிகள். மரவள்ளிக் கொடிகள்.

வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய பலா மரம். அந்த மரத்தின் நிழலிலே தான் பாடப்புத்தகமும் கையுமாக அமர்ந்திருப்பேன்.

அந்த நிழல் அவ்வளவு இதமாக இருக்கும்! காற்றில் இலைகளின் சலசலப்பும்….சிட்டுக்குருவிகள் ‘கீச் கீச் ஒலியும்…பக்கத்து வீட்டில் வெள்ளாட்டுக் குட்டிகள் எழுப்பும் சத்தமும்…பழக்கமாகிப் போன சூழ்நிலைகள், உலகத்தையே மறந்து புத்தகத்தில் ஆழ்ந்து விடுவேன் அங்கு!

இயல்பாகவே எனக்கு படிப்பில் அப்படி ஒரு படிப்பு; ஆர்வம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை.

வழக்கம்போல் படித்துக் கொணடிருந்தேன். வெளியே போவதற்காக வேலிக்கதவை நெருங்கிய கனச்சுந்தரம் என்னைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே திரும்பினார்.

‘ஏன் சிரிக்கிறீர்கள்?’

‘புத்தகத்தோடு நீ உட்கார்ந்திருக்கும் காட்சி எனக்குப் புத்தரையும் போதி மரத்தையும்நினைக்கச் செய்கிறது நியோ!’

சொல்லிக் கொண்டே வெளியே போய் விட்டார். பதிலுக்கு நான் சிரித்ததைக் கூட அவர் கவனிக்கவில்லை.

எப்பொழுதுமே அவர் அப்படிதான். கொஞ்ச நேரம நிற்க மாட்டார். அதிகம் பேச மாட்டார். எந்த நேரத்திலும் கையில் புத்தகத்தோடுதான் இருப்பார் – என்னை போல.

எங்கள் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடியிருக்கிது ஓர் இந்தியக் குடும்பம், அக் குடும்பத்தின் ஒரே பிள்ளை அவர். மேல நிலை இரண்டாம ஆண்டு படிததுக் கொண்டிருக்கிறார். மேல்நிலை படிப்பை முடித்ததும் பல்கலைக்கழகத்தில் சேர போகிறார்.

ஒரே பிள்ளை என்பதால் பெற்றவர்களும் அவர் படிப்பில் நிறைய அக்கறை காட்டுகிறார்கள்.

எனக்கோ… மேல் நிலைக்குச் செல்வதே கேள்விக் குறியாக இருக்கிறது. என் குடும்ப நிலைமையே அதற்குக் காரணம்.


அப்பா, அம்மா, அக்காள், அண்ணன், தம்பி, தங்கச்சி நான் ஆக ஏழு பேர் கொண்டது எங்கள் குடும்பம் பெரிய குடும்பம்.

அண்ணனுக்குத் திருமணம் நடந்நு தனி குடித்தனம் போய் விட்டார்.

அக்காளுக்கும் கல்யாணம் ஆகி, இரண்டு குழந்தைகளுக்கு தாயகி விட்டாள்.

வாடகைக் கார் ஓட்டுவது அப்பாவின் தொழில். அதன் வழி வரும் சம்பாத்தியமும், இந்தியக் குடும்பம் தரும் வீட்டு வாடகைப் பணமும் தான் எங்களுக்கு வருமானாம்.

தம்பிக்குப் படிப்பு ஏறவில்லை கூட்டாளிகளோடு ஊர் சுற்றுவது தான் அவன் வேலை.

தங்கச்சிக்கு என்னை விட ஒரு வயது தான் குறைவு. தட்டுதடுமாறி உயர்நிலை இரண்டாம் வகுப்புக்கு வந்திருக்கிறாள் ஆனால் இப்பொழுதே ஒரு பையனோடு பழக ஆரம்பித்து விட்டாள் வீட்டுக்கு பின்புறமுள்ள தோட்டத்தில் அவனோடு சிரித்துப் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறாள்.

அது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அம்மா அதை அம்மா அதை கண்டும் காணாத மாதிரி நடந்துகொணடிருக்கிறாள்.


அந்தப் பையனுக்கே என் தங்கச்சியைக் கல்யாணம் செய்து கொடுக்க போகிறார்களாம் அதைப்பற்றிப் பேசுவதற்காக இன்று அண்ணணும் அண்ணியும் அக்காளும் அக்காள் கணவரும் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்பாவும் வீட்டில் இருக்கிறார்.

தங்கச்சி கல்யாணத்தைப் பற்றிப் பேச வந்தவர்கள் சுற்றி சுற்றி என்னை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் தங்கச்சி மாதிரி யாருடனும் பழக வில்லையாம். எனக்கொரு மணமகனைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளத் தெரியாதவளாக இருக்கிறேனாம் தங்கச்சி கல்யாணத்துக்கு தடையாக நிற்கிறேனாம். நான் கற்பனையில் மிதப்பவளாம். கனவுலகில் வாழ்கிறேனாம் கல்யாணம் கணவன் குடும்பம் குழந்தை என்ற எண்ணங்களே எனக்குக் கிடையாதாம்.

எந்தப் பெண்ணுக்கு அந்த எண்ணங்கள் இல்லாமலிருக்கும்?

ஆண்மகன் துணையோடு தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை ஆரம்பமாகிறது. இது இயற்கையின் விதி என்பது எனக்குத் தெரியாதா?

இவர்கள், தான் என்னைப் புரிந்து கொள்ள வில்லை.

என்னுடன் பழக வேண்டுமென்று இளைஞர்கள் சிலர் நெருங்கி வருவதுண்டு. வெட்டித்தனமாக ஊர்சுற்றும் பொறுப்பற்ற தம்பியின் நண்பர்கள் அவர்கள். அவர்களோடு பேசுவதற்கே விருப்பமில்லாமல் விலகிப் போய் விடுவேன்.

‘அவன் நல்லப்பிள்ளை. இவன் தங்கக் கம்பி’ என்று சில பேரை என் அம்மா மறைமுகமாக பரிந்துரைத்ததும் உண்டு. அதையெல்லாம் நான் காதில் வாங்கிக் கொள்வதேயில்லை.

என் அக்காள் கணவர் ஒரு சூதாடி சூதாட்டத்தில், தோற்று விட்டு வரும் போதெல்லாம் அக்காளுக்கு அடியும் உதையும் கொடுப்பது அவர் பழக்கம்.

அடியும் உதையும் வாங்கி வாங்கிப் பழகி போய் விட்டாள் அக்காள். என்னால் அது முடியாது. எனக்கு அந்த மாதிரிக் கணவன் வேண்டவே வேண்டாம்.

அண்ணி ஒரு பொறுமைசாலி. அண்ணன் வெளியே வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டிருக்கிறார் என்று ஆதாரங்களோடு அறிந்தும் சகித்துக் கொண்டிருக்கிறாள்.

அண்ணியின் நிலையில் நான் இருந்தால் சும்மா விட மாட்டேன். நீதி மன்றம் வரைக்கும் போய் ‘எனக்காயிற்று அவருக்காயிற்று’ என்று இரண்டிலொன்று பார்த்து விடுவேன்.

என் அண்ண்னை போன்றவர்களின் வண்டுக்குணத்தை வெறுக்கிறேன், வெறுக்கிறேன்; அடியோடு வெறுக்கிறேன்.

என் அப்பாவைப் பற்றியும் எழுதாமல் இருக்க முடியவில்லை எங்கள் கம்பத்தில் இன்றைக்கும் அவரைக்கண்டு அஞ்சுகிறாகள்.

உடம்பு முழுவதும் பச்சை குத்திக் கொண்டவர் அவர்! காலாடி கும்பல் ஒன்றுக்குத் தலைவராம்! அவருக்கு வாழ்க்கைப் பட்ட நாளிலிருந்து இன்று வரை பயத்திலே தான் குடுமபம் நடத்துகிறாள் என் அம்மா.

அம்மாவைப்போல் ஆமையாய் ஊமையாய் புழுவாய் பூச்சி யாய் அடங்கி கிடக்க என்னால் முடியாது. முடியவே முடியாது.

அக்கம் பக்கத்து வீடுகளிலும் மனைவியை அடக்கி ஆள்கின்ற கணவன்களையே காண்கிறேன் மனைவி மீது அதிகாரம் செலுத்துவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள் அவர்கள். கொடுமை செய்வதை ஆண்மை என்று நினைக்கிறார்கள்.

இந்த நிலைமை எல்லா குடும்பங்களிலும் இல்லை. இதற்கு விதிவிலக்கான சில குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் ஒன்று எங்கள் வீட்டில் வசிக்கும் இந்தியக் குடும்பம்’

அவர்கள் இங்கு குடித்தனம் வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை அந்தக் குடும்பத் தலைவரும் தலைவி யும் உரத்த குரலில் பேசிக்கொண்டதில்லை.

கணவன் எப்பொழுதும் மன நிம்மதியோடு இருக்க வேண்டுமென்பது மனைவியின் விழைவு. மனைவி எப்பொழுதும் மன மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்பது கணவரின் அவா.

இந்த அவாவினாலும் விழைவினாலும் அவர்கள் இருவரும் ஒருவடொருவர் இணைந்து, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போவதை அன்றாடம் நான் கவனிக்கிறேன். காணிகிறேன்.

வாழ்க்கை வண்டியைச் சீராக ஓடச் செய்யும் சம அளவிலான சக்கரங்கள் அவர்கள்,

கணவன்-மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் ஓர் உதாரணம்.

என் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும், என் கணவர் எப்டிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் நான் தீமானித்துக் கொள்வதற்குக் காரணமானவர்கள் அவர்கள்.

அவர்களை பார்த்து பார்த்து நான் என் மனத்துக் குள்ளேயே ஒரு தீர்மானத்தை உருவாக்கிக்கொண்டு விட்டேன்,

மனத்துக்குள்ளேயே இருப்பது மற்றவர்களுக்கு எப்படித் காண்கிறார்கள். தெரியும்? தெரியாத காரணத்தினாலே தான் என்னிடம் குறை

என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்ளப் போகிறேன்.

திருமணத்தைப்பற்றி நினைக்கவோ, கனவு காணவோ எனக்கு நேரமில்லை. நான் படிக்க வேண்டும். தொடர்ந்து படிக்க வேண்டும்.


தொடர்ந்நு படிப்பதற்கு வழி பிறந்து விட்டது!

தங்கச்சிக்குக் கல்யாணம் நடந்தபோது அண்ணி எனக்கொரு வாக்குறுதி கொடுத்தாள். அதன்படி அவளே என் பெற்றோரிடம் வாதாடி அவர்களைச் சம்மதிக்க வைத்தாள்.

அண்ணிக்கு என் மீது அளவு கடத்த பிரியம் என்னை ஒரு குழந்தையாகப் பாவித்து அன்பு காட்டுவாள்.

இன்று என்னை தனியாக அழைத்துச் சென்று பரிவோடும் பாசத்தோடும் பேசினாள். “உன் படிப்பு முடிந்த பிறகாவது நீ திருமணம் செய்து கொள்ளத்தானே வேண்டும்?”

“படிப்புக்கு முடிவு ஏது அண்ணி?”

“வாழ்க்கைக்கு ஒரு முடிவு இருக்கிறது. அதற்குள் நடக்க வேண்டிய காரியங்கள் நடக்க வேண்டாமா?”

“காரியங்கள் மின்னல் வேகத்தில் நடந்நு விடுகின்றன. அனால், அவற்றைத் தொடர்ந்து காலமெல்லாம் எத்தனையோ தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. எவவளவோ துன்பங்களை அனுபவிக்க நேருகிறது”

“இருட்டுக்குப் பின் வெளிச்சம் துன்பத்துக்குப் பிறகு இன்பம் இதுதான் இல் வாழ்க்கை. தொல்லைகளைத் தாங்கி கொண்டு தான் உன் அம்மாவும் உன் அக்காளும் நானும் அக்கம்பக்கத்தில் சிலரும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்”.

“அப்படி வாழ்வதை நான் விரும்பவில்லை. அர்த்தமுள்ள வாழ்க்கை வாழநான் ஆசைப்படுகிறேன். எனக்கு அம்மா மாதிரி ஒரு வாழ்க்கையை வழங்கக் கூடிய துணைவன் தான் வேண்டும்”

“எல்லாப் பெண்களும் நினைப்பது இப்படித்தான். எதிர்பார்ப்பதும் இதுதான். அனால், அமைவது போன பிறவியில் அவரவர் செய் புண்ணியத்தின் அளவைப் பொறுத்த்து. போகட்டும். நீ எதிர்பார்க்கும் அந்த அர்த்தமுள்ள வாழ்க்கை வழங்குவார் என்று எந்த பிள்ளையையாவது நம்புகிறாயா? யாரையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாயா?”

அண்ணியின் கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது. சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்து விட்டேன்.

யாரோ ஒருவர் என் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறார் என்பதை அப்போது நன்றாகப் புரிந்துக் கொண்டு விடடாள் அண்ணி.

“யார் அந்தப் பிள்ளை? என்னிடம் சொல்லிவிடு நியோ அந்த பிள்ளையிடமும் அவர் குடும்பத்தாரிடமும் பேசிக் கல்யாணத்தை நிச்சயப்படுத்தும்வரை ரகசியம் வெளியில வராது அது என் பொறுப்பு. சொல்.”

சொல்லலாமா, கூடதா என்று மனதுக்குள் ஒரு போராட்டம்.

சொல்ல நினைத்தேன், சொல்லத் துடித்தேன். நெஞ்சுக் குள்ளிருந்து ‘கனகசுந்தரம்’ என்னும் அந்த சொற்கள் துள்ளி கொண்டு பாய்ந்தன! உதடுகளும் நாவும் சதிராடி அதை ஒலிக்கவில்லை. உச்சரித்தன! ஆனால் அதிலே என் குரல மட்டும் ஏனோ இதயத்தில் முழங்கிய ஒலி அங்கேயே அடங்கி விட்டது.

வெறும் வாயசைவைக் கொண்டு, ஓசையற்ற வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாத அண்ணி ‘யார் அவர்?’ என்று மறுபடியும் கேட்டாள் பலமுறை கேட்டாள்.

‘யாருமில்லை’ என்று கடைசிவரை மறுத்து விட்டேன் ‘முழு பூசணைக் காயைச் சோற்றில் மறைப்பதுபோல’ என்பார்களே அந்த மாதிரி மறைத்து விட்டேன்.

ஏன் அப்படி மறைத்தேன்?

பெண்களுக்கே இயல்பான கூச்சமா?

அம்மாவும் அப்பாவும் எதிர்ப்பார்கள் என்ற எண்ணம்? உற்றார் உறவினர்களின் வரவேற்புகள் எப்படியிருக்கும் என்ற அச்சமா?

கனகசுந்தரம் என்னை விரும்புகிறாறோ இல்லையோ என்ற சந்தேகமா?

என்னவென்று சொல்ல முடியாத ஏதோ ஒன்று, அண்ணியிடம் உண்மையைச் சொல்ல விடாமல் இன்று தடுத்து விட்டது.


அண்ணியிடம் மட்டுமல்ல? அவரிடமும் என் கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை. முடியவில்லையா? தெரியவில்லையா? எனக்கே குழப்பமாக இருக்கிறது.

இன்று தனக்குப் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்திருப்பதை என்னிடம் தெரிவித்தார் கனகசுந்தரம்.

வழக்கம்போல் அதே பலாமரத்தின் அடியில் சந்தித்தவர் வழக்கம் போலவே சுருக்கமாய் பேசினார்.

என்படிப்பை சிலவார்த்தைகள் கேட்டார். என்தங்கச்சியைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டு சிரித்தார்.

நான் எதிர்பார்க்கும் வார்த்தை ஒன்றைச் சொல்லமாட்டரா என்று ஏங்கியது எள் மனம். ஒன்றுமே சொல்லவில்லை.

அவர் அத்தகைய எண்ணம் எதுவும் இருப்பதாகவே தோன்றவில்லை.

அந்த எண்ணம் எனக்கு இருப்பதையாவது புரிந்து கொண்டிருக்கிறாறா என்றால், அதற்கான அறிகுறி எதுவும் புலப்படவில்லை எல்லை தாண்டாமல் பழகுகிறார் வரம்பு மீறாமல் பேசுகிறார் அளவோடு சிரிக்கிறார்.

இந்தப் பண்பும் குணமும் நாகரிகமும் என்னைக் கவர்ந்தது போல் அவரைக் கவர்த்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு என்னிடம் அழகில்லையா? பண்பில்லையா? குணமில்லையா?

என் மனத்தை திறந்து ‘உங்களை விரும்புகிறேன்’ என்று சொல்லி விடலாமா என்று கூட நினைக்கிறேன். ஆனால், நொடி பொழுதில் அந்தத் தைரியம் போய் விடுகிறது.

‘அந்த எண்ணத்தோடு உன்னிடம் பழகவில்லை’ என்றுஅவர் சொல்லி விட்டால் என் பெண்மைக்கு எவ்வளவு அவமதிப்பு? அவமானத்தால் கூனி குறுகிப் போய் விடுவேனே? சே!

இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருப்பேன். என் மீது அவருக்கு விருப்பம் உண்டாகும் வரை காத்திருப்பேன்.


இன்று அந்த இந்தியக் குடும்பம் எங்கள் வீட்டிலிருந்து வெளியேறுகிறது ‘குயின்ஸ்டவுன்’ புது நகரத்தில் அவர்களுக்கு அடுக்குமாடி வீடு கிடைத்து விட்டது.

சில நாட்களாகவே என் மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறது.

பலாமரத்தின் அருகிலேயே பயிராகியிருக்கும் ஒரு மரவள்ளி கொடியைப் பார்க்கிறேன் அதன் பக்கத்தில் ஓர் அகத்திக் கீரை கன்று, அதைப்பற்றி படரத் துடிக்கிறது கொடி, தொடுவதற்கு நெருங்கும்போதல்லாம் கொடியைக் கீழே தள்ளிவிடுகிறது காற்று.

கனகசுத்தரம் வந்து நின்றார்.

“நீயோ, எங்காவது எப்போதாவது எதிலாவது போதிமரத்தையும் புத்தரையும் காண நேர்ந்தால் எனக்கு உன் ஞாபகம் தான் வரும்! “

வழக்கத்துகு மாறாக இன்று கலகலப்பாகப் பேசுகிறார். என்னை நன்றாக நிமிர்ந்து பார்க்கிறார்! வாய்விட்டுச் சிரிக்கிறார்.

அவருடைய மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவாக இருக்கும்?!


காரணம் இப்போது புரிந்து விட்டது.

இதை எழுதும்போது என்கையில் கனகசுந்தரம்-மகேஸ்வரி கல்யாண அழைப்பிதழ் இருக்கிறது.

மகேஸ்வரியை எனக்குத் தெரியாது. அவள் போன பிறவியில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் ’வாழ்க மணமக்கள்’ என்று என் மனம் வாழ்த்துகிறது.

நான் வருத்தப் படவில்லை பெருமூச்சு விடவில்லை ஏன்னென்றால் அவர் என்னை ஏமாற்ற வில்லை.

என் விருப்பத்தை வெளியிடத் தயங்கியது என் தவறு. என் ஆசையை இதயத்துக்குள்ளேயே புதைத்து வைத்தது என் குற்றம். இதை நன்கு உணருகிறேன். ‘உணருகிறேன்‘ என்பது உணமை என்றால் அவரை மறந்துவிட வேண்டும் என்பதும தெரிகிறது. ஆனால், முடியவில்லையே?

வேறோருத்திக்குச் சொந்தமாகிவிட்ட பிறகும் அவர் என் நெஞ்சில் நிறைந்தே இருக்கிறார்! என் இதயத்தில் அவருக்குக் கொடுக்த இடம் அவருக்கு மட்டுமே உரியது. அவரைத் தவிர வேறு எவரையும் என்னால் கனவில் கூட நினைக்க முடியாது.

அண்ணிக்கு இது தொரிந்தால் பைத்தியக்காரத்தனம் என்பாள். தெரிந்தால்தானே சொல்வாள்? நான் தான் ஏன் மனத்தில் உள்ளதை யாரிமும் சொல்ல போவதில்லையே!’


“மேல் நிலைப்பள்ளி படிப்பு முடிந்தது. மேலும் படிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். குடும்பச் சூழ்நிலை நன்றாக இல்லை.

நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று எல்லோருக்கும் வருத்தம். வெறுப்பு.

படிப்பு படிப்பு என்று எப்பொழுது பார்த்தாலும் புத்தகத்தையே கட்டி அழுது கொண்டிருக்கிறேனாம்.

அது என் கூடவே பிறந்த குணமாக இருக்கிறதே? என்ன செய்வேன்?

ஆசிரியை பயிற்சியில் சேரப் போகிறேன். ஆசிரியையாக அலுவல் செய்து கொண்டே பட்டப்படிப்பையும் மேற் கொள்ளலாம்.

எழுத்தறிவிக்கும் பணி இறைவனுக்கே செய்யும் பணியாகும்.


பள்ளிக்கூட மணி ஓசை கேட்டு, ரெடின்மாஸ் கம்பத்து நினைவுகளிலும் நிகழ்ச்சிகளிலுமிருந்து மீண்டார் தலைமை ஆசிரியை செங் லியான் நியோ.

இருபத்து ஒன்றாம் வயதில் ஆசிரியைப்பணி ஏற்றதையும் சில ஆண்டுகளில் துணைமுதல்வராக பொறுப்பு வகித்ததையும், பின்னர் தொடக்க நிலைப்பள்ளி முதல்வராக நியமனம் பெற்ற தையும், நாற்பத்து ஏழாம் வயதில் உயர் நிலைப்பள்ளி முதல் வராக உயர்ந்ததையும் நினைவு கூர்ந்து ஒரு பெருமூச்சை நெட்டுயிர்த்தார்.

பணியிலும் படிப்பிலுமே அவர் காலம் ஓடிவிட்டது.

கால ஓட்டத்தில் கருத்துக்கள் வளர்ந்தன, மாறின; தெளிந்தன! ஆனால், கனகசுந்தரம்கல்லில் எழுத்தாகப்பதிந்திருக்கும் அந்த நெஞ்சத்தில் இன்னொருவருக்கும் இடம் கிடைக்கவேயில்லை! ஆசைகள் உணர்ச்சிகள் தோல்விகள், சோதனைகள் யாவுமே அவரை அணுக இயலாமல் விலகி ஓடின.

ஆனால்-

இவ்வளவு காலமும் இல்லாத கவலையும் மனக் குழப்பமும் தவிப்பும் இப்போது ஏற்பட்டுஅவரை நிலை குலையச் செய்வது ஏன்? நிம்மதி இழப்பது எதனால்?

அவர் கையிலிருக்கும் கோப்பில் கடைசியாக எழுதி வைத்த குறிப்பு அந்தக் காரணத்தை விளக்குகிறது:

“பள்ளிக்கூடமே என் உலகம்! மாணவ மாணவிகளே என் குழந்தைச் செல்வங்கள்! கல்வி பணியே என் இலட்சியம் எனத் தொடங்கியது என் வாழ்க்கைப் பாதை. அந்த பாதையிலே இத்தனை ஆண்டுகளாக நான் மேற் கொண்டிருந்த பயணம் முடியப் போகிறது.

ஐம்பத்து ஐந்து வயது நிறைவு எய்தியதன் விளைவாக இன்னும் சில தினங்களில் ஓய்வு பெற போகிறேன்.

என் குழந்தைகளாக பாவித்த மாணவ மணிகளுக்கும் எனக்கும் இனித் தொடர்பு இருக்காது. என் குழந்தைகள் என்று யாரை பாவிப்பேன்?

ஓய்வு பெற்ற பிறகு தனிமையில் வாழபோகும் நிலைமையை எண்ணிப்பார்த்துக் கவலைப்படுகிறேன். குழப்பமடைகிறேன். கலங்குகிறேன்.

பூக்காமல் காய்க்காமல் பழுக்காமல் வெறுமையாக -தனி மரமாக வாழ்ந்த நான் ஏதோ ஒரு பெரிய குற்றத்தைச் செய்து விட்டது போன்ற உணர்வுக்கு அடிக்கடி ஆளாகிறேன்.

என் அண்ணன், அக்காள் தங்கச்சி, தம்பி ஆகியோர் பிள்ளைகுட்டிகள் பேரன்பேத்திகள் என்று பெரிய குடும்பங்களாக பெருகியிருக்கிறார்கள்.

ஆனால், எனக்கு? ஆயிரக்கணக்கான புத்தகங்களை தான் வீடு நிறைய அடுக்கி வைத்திருக்கிறேன்!

எனக்கொரு மகன் இல்லை. மகள் இல்லை. பேரன் இல்லை பேத்தி இல்லை எப்படி இருப்பார்கள்? எனக்குத்தான் கணவனே இல்லையே?

வாழைமரம் கூடத் தனக்கொரு வாரிசைத் தோற்றுவித்து விட்டுத் தான் வீழ்கிறது.

ஆனால் நான்?

’அர்த்தமுள்ள வாழ்க்கை என ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு, அர்த்தமில்லாத ஒரு வைராக்கியத்துடன் இயற்கையின் சட்டத்துக்கு எதிராக வாழ்ந்து என்ன சாதித்தேன்?

நான் வாழ்ந்தது ஒரு வாழ்க்கை தானா?

பிறந்து வளர்ந்த மண்ணுக்கு என்னைப் போன்றவர்களால் பெருமை உண்டா? பலன் உண்டா?

வாழ்வளிக்கும் நாட்டுக்கு நான் செலுத்தும் நன்றி என்ன? நினைக்க நினைக்க அழுகை வருகிறது.


ஆகஸ்ட் மூன்றாம் தேதி கலங்கிய கண்களோடு புறப்பட்ட தலைமை ஆசிரியை செங் லியான் நியோ, நான்கு நாள் ஓய்வுக்கு பிறகு ஆகஸ்ட் எட்டாம் தேதி களிப்பு மிகுந்தவராகப் பள்ளிக்குத் திரும்பினார்.

தேசிய தினத்துக்கு முதல் நாளான அன்று அவருக்கு அங்கே பிரியாவிடை உபசரிப்பு நிகழ்ச்சிகள் காத்திருந்தன.

அவர் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிவதைக் கண்டு மாணவர்களும் மற்றவர்களும் வியப்புற்றனர்! உற்சாகத்தோடு காணப்பட்ட அவர் எல்லோருக்குமே ஒருபுதிராகத் தோன்றினார்.

நான்கே நாட்களுக்குள் இப்படி ஒரு மாறுதல எவரால் ஏறபட்டிருக்கும்? எதனால் ஏற்பட்டிருக்கும்?

இக் கேள்விகளுக்குப் பதில் தரும் குறிப்பை இதோ அவரே எழுதுகிறார்:

“இன்று என் மனதில் இன்பம் அலைமோதுகிறது. மகிழ்ச்சி வெள்ளம் பெருகி பாய்கிறது. ஆனந்தக்கடலில் நீந்திக்கொண்டே இதை எழுதுகிறேன்.

முந்தா நாள் காலையில் வீட்டில் மணிச்சத்தம் கேட்டுக் கதவை திறந்தேன். எதிரில் நின்றது ஓர் இந்தியக் குடும்பம் கணவன். மனைவி, ஒருசிறுவன், ஒரு சிறுமி…..

சிறுவனுக்கு மூன்று வயதிருக்கும். சிறுமிக்கு இரண்டு வயதிருககலாம்.

பக்கத்து வீட்டுக்குப் புதிதாக குடிவந்திருக்கிறார்கள், பால் காய்ச்சும் சடங்கில் பங்கு கொள்ளக் கூப்பிட்டார்கள், போனேன்.

அங்கே எனக்கோர் ஆச்சரியம் காத்திருந்தது. அதோடு அதிர்ச்சி ஒன்றும் என்னை எதிர் கொண்டது.

கனகசுந்தரமும் அவர் மனைவி மகேஸ்வரியும் உருவ படங்களில் காட்சியளித்தார்கள்! படங்களுக்கு மாலை அணிவிக்க பட்டிருந்தது! ஊதுபத்தி எரித்து புகைந்து மணத்த்து!

சென்ற ஆண்டு அவ்விருவரும் காலமாகி விட்டார்களாம் அவர்ளுடைய மகனையும் மருமகளையும் பேரன் பேத்திகளையும் தான் இப்போது சந்தித்திருக்கிறேன்!

என் உள்ளத்தில் மின்னல் வெட்டுகளைப் போலப் பழமைய நினைவுகள் எல்லாம் தோன்றி மறைந்தன. புதைந்து கிடந்த எண்ணங்கள் கொப்பளித்து ஓய்ந்தன.

விளக்கம் சொல்லத் தெரியாத – விளங்கிக் கொள்ளவே முடியாத உனர்ச்சிகளுக்கு ஆளானேன் – ஒரு நிமிட நேரம்!

மறு நிமிடம் அவற்றிலிருந்து விடுபட்டேன்; தெளிவு பெற்றேன். கனிந்தகுரலில் பேசினேன்.

“உங்களுக்கு இரண்டே குழந்தைகள் தானா?”

என் கேள்விக்குப்பதில் சொல்லாமல் வெட்கத்தோடு வேறு பக்கம். திரும்பிக் கொண்டான் அவன் கனகசுந்தரத்திடம் இருநத அதே சுபாவம்! அவன் மனைவி எனக்குப் பதில் சொன்னாள்.

“இன்னும் ஒரு குழந்தை வேண்டுமென்று தான் நினைக்கிறோம். ஆனால் இவர்களை வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கிறது ஏனென்றால் நாங்கள் இருவருமே வேளைக்குப் போகிறவர்கள்…”

“இன்னும் ஒன்று மட்டுமல்ல. அதற்கு மேலும் பெற்றுக் கொடுங்கள்! வளர்ப்பதற்கு நான் இருக்கிறேன்!”

கணவனும் மனைவியும் என்னை வியப்போடு பார்த்தார்கள். நான் உறுதியான குரலில் தொடர்ந்தேன் :

“உங்கள் குழந்தைகளுக்குப் பாட்டியாக இருப்பது தான் இனி என் வேலை! இவர்கள் இன்று முதல் என் பேரன் பேத்திகள்!”

அந்தக் குழந்தகளை நோக்கிக் கை நீட்டினேன் என்ன ஆச்சரியம்! இருவரும் ஓடி வந்து என்னிடம் ஒட்டிக் கொண்டார்கள்! அன்றிலிருந்து என்னுடனேயே இருக்கிறார்கள் ‘பாட்டி,பாட்டி’ என்று என்னைச் சுற்றிச் சுற்றி வருகிறாகள்! பூரித்துப் போகிறேன் ! ‘பாட்டி’ எனும் சொல் எனக்குத் தேனாக இனிக்கிறது! என் பூரிப்பு நீடிக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்!

[தேசியப் புத்தக மேம்பாட்டு நிறுவனமும் உள்ளுர் தினசரிப் பத்திரிகைகளும் இணைந்து நடத்திய 1986ம் ஆண்டு சிறுகதை எழுதும் போட்டியில் முதலிடமும் இரண்டாம் பரிசும் பெற்ற சிறுகதை.]

– சிங்கப்பூர்க் குழந்தைகள் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1989, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம், சிங்கப்பூர்.

சிங்கை பெர்னாட்ஷா சே.வெ.சண்முகம் சே.வெ.சண்முகம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெய்வாசலில் 1933ல் பிறந்தார். 1951ல் சிங்கப்பூருக்கு வந்த இவர், துறைமுகத்தில் பணியாற்றினார். 1961ல் கிடங்குப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்று 1991ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1949ல் எழுதத் தொடங்கிய இவரது முதல் சிறுகதை “வேறு வழியில்லையா?” மதுரையிலிருந்து வெளியாகும் “நேதாஜி” இதழில் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இவர், சிறுகதைகள், தொடர்கதைகள், குட்டிக்கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், மேடை நாடகங்கள், வானொலி…மேலும் படிக்க...

2 thoughts on “பாட்டி

  1. நல்ல கதை. ஆனால் தட்டச்சு செய்தவர் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம். களைஞர்கள் என்றா அடிப்பது? வைராக்கியத்துன் இயற்கையின் என்பது பிழைதானே? பார்த்து சரியாக எழுதவும்.

    1. மிக்க நன்றி, பிழைகளை சரி செய்து விட்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *