கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2021
பார்வையிட்டோர்: 4,451 
 
 

“பெரிய பொல்லாத சைக்கிள். ஓட்டை வண்டி. ! தொடைக்கனுமாம் தொடைக்க..!” – பத்தாவது படிக்கும் நிர்மல் வெறுப்பும் சலிப்புமாய் வாசலில் நிற்கும் சைக்கிளை ஒரு உதை விட்டுவிட்டு பொறுமிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.

“அம்மா..! அம்மா !” கூப்பாடு போட்டான்.

நளினிக்கு இவனென்றால் உயிர். செல்லம்.

“என்னம்மா..?” என்று கேட்டுக்கொண்டே அடுப்படியை விட்டு வெளியே வந்தாள்.

“அப்பா இம்சை தாங்க முடியல…”கடுப்புடன் சொல்லி நாற்காலியில் அமர்ந்தான்.

“என்ன…?” அருகில் வந்தாள்.

“கடைக்குப் போன்றவர் வழியில என்னைப் பார்த்து சைக்கிளைத் துடைச்சியா..? கேட்கிறார். காலை, மாலை கண்டிப்பா தொடைடான்னு படுத்தி எடுக்கிறார்..!”

“இதிலென்ன தப்பு..?”

“என்ன தப்பா..? நீ உன் புருசனுக்கு வக்காலத்து வாங்கரையா…. ? அவர் என்ன புது சைக்கிளா வாங்கி கொடுத்திருக்கார்..? தொடைச்சி அழகு பார்க்க..? கயலான் கடை வண்டி. பழைய இரும்பு கடையிலிருந்து பொறுக்கி எடுத்து வந்து சரி பண்ணி கொடுத்திருக்கார். தொடைச்சா… துணியெல்லாம் துருவாகி கை அழுக்காகுது.”

அது அப்படியொன்றும் மோசமில்லை. இவனுக்குப் பழசென்ற வெறுப்பு. – நளினிக்குப் புரிந்தது.

வாசலில் நடராஜனின் தலை தெரிந்தது.

“என்னங்க…?” அழைத்தாள்.

“என்ன…?” அவன் காய்கறி பையுடன் உள்ளே நுழைந்தான்.

“அந்தப் பாழாப்போன பழைய சைக்கிளைத் தொடைக்கச் சொல்லி எதுக்கு இவனைப் படுத்தி எடுக்குறீங்க…? போற வர்ற இடத்திலெல்லாம் நிறுத்தி கேள்வி கேட்குறீங்க..?” கேட்டாள்.

அம்மா இப்படி தனக்கு எதிரிலேயே அப்பாவைத் தாக்குவாள். கேள்வி கேட்பாள் ! – என்று நிர்மல் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

துணுக்குற்றான்.

அப்பா அடிக்கப் போகிறாரா..? திட்டப் போகிறாரா..? மனசுக்குள் கலவரம் வந்து எட்டிப் பார்க்க..ஒரு மாதிரி ஆனான். ஆனாலும் எது நடந்தாலும் அம்மா இருக்கிறாள். அப்படியெல்லாம் நடக்க விடமாட்டாள். என்கிற தைரியம்..துணிச்சலாக அமர்ந்த நாற்காலியை விட்டு எழாமல் இருந்தான்.

நடராஜன் காய்கறி பையை தரையில் வைத்து விட்டு அவனெதிரில் நாற்காலியில் அமர்ந்தான்.

“இங்க வா.” மனைவி நளினியை அருகில் அழைத்தான்.

அவள் வந்தாள்.

“என் கையைப் பார்…!” இரண்டு கைகளையும் அவளுக்கெதிரில் நீட்டினான்.

“ஏன் அந்த கையில என்ன..?” பார்த்தாள்.

“நல்லா உத்துப் பார்”

ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம்.!

“என்னங்க..வலக்கை மணிக்கட்டிற்கு மேல கொஞ்சம் வளைஞ்சிச்சிருக்கு..?” – துணுக்குற்றாள்.

“இத்தனை நாள் வருசமா எனக்கேத் தெரியல..? !” வியந்தாள்.

“நான் இவனை விட சின்னவனாய் இருக்கும்போது சைக்கிள் தொடைக்காதததினால் வந்த வினை..!” என்றான்.

தாயும் மகனும் சேர்ந்து திடுக்கிட்டார்கள்.

“அப்போ நான் ஆறாம் வகுப்பு படிச்சேன். என் அப்பா… இவன் தாத்தா. உன் மாமனார். நான் பள்ளிக்கூடம் போக அப்போ எனக்கும் இதே மாதிரி ஒரு பழைய சைக்கிளை வாங்கி கொடுத்தார். அதையும் தொடைடா தொடைடான்னு என்னைப் படுத்தி எடுத்தார். எனக்கும் இவனைப் போல அந்தப் பழைய சைக்கிள் மேல் வெறுப்பு. பள்ளிக்கூடம் போறதோட சரி. அதைத் தொடக்க துணி எடுக்கிறதில்லே. ஏன் திரும்பி பார்க்கிறதில்லே.

ஒரு நாள். பள்ளிக்கூடம் விட்டு வரும்போது பெடல் கழன்று கீழே விழுந்து… இந்தக் கை முறிஞ்சி தொங்கிப் போச்சு. என்னை அழைச்சுக்கிட்டு மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாய் அலைஞ்சார். படா ரோதனை, வேதனை. அப்படி ஒரு நாள் மருத்துவமனைக்குப் போகும்போது…

“உன்னை காலை, மாலை சைக்கிளைத் தொடை, சுத்தம் செய்ன்னு ஏன் சொன்னேன் தெரியுமா…?” – கேட்டார்.

நான் புரியாமல் பார்த்தேன்.

தொடைச்சிருந்தால் வண்டி சுத்தமா அழகா இருக்கிறதோடு மட்டுமில்லாமல் எது எது கழன்று இருக்கு தெரியும். சரி இல்லாததை சரி படுத்திக்கலாம். திரும்பி பார்க்காத வினை… பெடல் கழன்று இருந்தது தெரியாமல் போய் வழியில கழன்று கை முறிவு. இப்போ அவஸ்த்தை ! சொன்னார். அதோடு மட்டும் நிறுத்தாம…

நீ ஒன்னை நல்லா உத்துக் கவனிக்கனும். பழுதுன்னு காரை ஒர்க் ஷாப்புல கொண்டு நிறுத்தினா…மெக்கானிக் செய்யிற முதல் வேலை…கார் அடியில, எஞ்சின்ல கழன்றதெல்லாம் சரி பண்றதுதான். அடுத்துதான் மத்த வேலை.

அதே போல் ரயில் ஜங்க்சனுக்கு வந்து நின்னதும் மெக்கானிக்குகள் தண்டவாளத்துக்கு ஓடி வந்து ஒவ்வொரு பெட்டி இணைப்பு, மத்ததை எல்லாம் சரி பார்ப்பான். இதெல்லாம் எதுக்கு…..? விபத்து நடக்காம இருக்கத்தான். ! சொன்னார்.

சரியான பாடம். !

நான் கற்ற பாடம் என் பையனுக்கும் அப்படி ஏற்பட்டுடக் கூடாதுன்னுதான் சொன்னேன்.

நிர்மல் ! பழசோ புதுசோ… நாம ஓட்டிச் செல்லும் வாகனத்தை தினம் காலை மாலை தொடைச்சி சுத்தம் செய்து கவனிச்சால்…இந்த மாதிரி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பில்லே. நாமும் சுத்தமான வாகனத்தில் அழகாய் அம்சமாய் போகலாம் !” சொல்லி மகனையும் மனைவியையும் சேர்த்துப் பார்த்தான் நடராஜன்.

நிர்மல் தலை குனிந்தான்.

“மன்னிச்சிக்கோங்கப்பா. நீங்க சொன்னபடி என் சைக்கிளை கவனிக்கிறேன் !” சொல்லி எழுந்தான்.

நடராஜனுக்கு மட்டுமில்லாது நளினிக்கு மலர்ச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *