(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வீரன் விக்கித்து நின்றான்.
தானும் அப்பவே கிழவிக்குப் பெயர் கொடுத்திருக்க வேண்டும். சரி… சரி… இனி யோசித்துப் பயனில்லை.
தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக இழுத்துக் கொண்டு கிடக்கும் அந்தக் கிழவியின் உயிரை இன்னும் இரண்டு நாள் . இரண்டே இரண்டு நாள் நிறுத்தி வைத்திருக்க அவனால் முடியுமென்றால்…
அவனால் அது முடியாது!
கிழவியின் உயிரைத் தன்னால் இழுத்துப் பிடித்து நிறுத்தி வைக்க முடியாது என்பதையும் அவன் உணராமலில்லை.
மனிதனின் பலவீனத்தை சக்தியின்மையை சந்தர்ப்பங்கள் தான் எத்தனை நாசூக்காக அவனுக்கு உணர்த்துகின்றன. அவ்வப்போது சமயம் வாய்க்கையில் எல்லாம்…
“இந்தாம்மா நிலா, தண்ணிச் சுட்டா அப்பாயிக்கு ஒரு கிளாஸ் ஓர்லிக்ஸ் அடித்துக்கொடு. நீயும் ஒரு கரண்டி அள்ளிக் கொட்டிக்கிறாதே…! இன்னும் நாலைஞ்சு நாளைக்கு வேணும்.”
தன்னுடைய ஒன்பது வயது சிறுமியிடம் கூறினான்.
இன்னொரு போத்தல் ஓர்லிக்ஸ் வாங்கப் பணம் கிடைக்க இன்னும் நாலைந்து நாளாகுமா? அல்லது அவளுடைய ஆயுசே இன்னும் நாலைந்து நாள் என்பதுதான் அவனுடைய கணிப்பா?
“டேய் சீராளை..! இங்கே வா, அந்தப் போத்தலைக் குட்டிச் சாக் கோடு கொண்டுபோய், தண்ணி கலக்காமல் நல்லதா ஒன்று நான் கேட்டேன்னு வாங்கிட்டு வா. அப்பாயிக்கு கொடுப்போம்! எனக் குன்னு கேளு, தெரியுதா? ஓடு…. ஓடு…”
தாய் மேல் தனக்குள்ள பாசத்தை காட்டிக் கொள்ளும் இறுதிக் கட்டம்.
பாளை சீவும் பண்டா வீட்டை நோக்கி நடந்தான் மகன்…
ஆவி பறக்கும் கிண்ணத்துடன் அப்பாயியை நோக்கி நடந்தாள் மகள்…
ஆபீஸை நோக்கி நடந்தான் வீரன்…
கிழவியின் கருவிழிகள் கண்களின் ஒரு மூலைக்கும் மறுமூலைக் குமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தன. கிழவிக்குத் தெரியும் மகனின் பற்று, பாசம், எல்லாம்…
அவனுடைய பதைப்பு, துடிப்பு, வருத்தம் யாவற்றிற்கும் அடித்தளம் எது என்பது அவள் அறியாததல்ல!
உதட்டைப் பிளந்து கரண்டிக் குழியால் உள்ளே ஊற்றப்படுவது கூட உள்ளிறங்காமல் கடைவாய் வழியாக வடிந்துவிடும் இந்த இறுதி வேளையில் ஓர்லிக்ஸ்’ என்றும்… ‘ஓவல்’ என்றும்… பிஸ்கோத் தென்றும்… ஆரெஞ்சென்றும்… அவளைச் சுற்றி வட்டமாக மாலை கோர்த்து கிடக்கின்றனவே….பிரயோஜனம்?”
செத்த பின் ‘சீத்தை’ போடும் பித்துக்குளித்தனம் தானே! அத்தனையும் தின்று தீர்க்க கிழவிக்கும் ஆசைதான் என்றாலும் முடியவில்லையே! ஊறும் உமிழ் நீரைக்கூட உள் விழுங்கத் திராணியில்லை. வாயால் தின்று வயிற்றை நிரப்ப இயலாவிட்டாலும் கண் களால் தின்று மனதை நிரப்பிக் கொண்டாள். இப்போதாவது கண்படும் இடத்தில் அவைகளை வைத்திருக்கிறானே மகன்!
சாகப் போகும் சந்தோஷத்தில் கிழவி சிரித்துக் கொண்டாள். உதடு பிரியாவிட்டாலும் உள்மனதில் ஒரு விரிசல்! இரவின் கருமை யிலே நெளிந்தோடும் மின்னற் கொடிபோல.
கூழாங்கல் குவியலாய் பட்டர் பிஸ்கோத்துக்கள், ஓட்டுத் துண்டங்களாய் றோஸ்டு ரஸ்க்’ இன்னும் கிழவி பார்த்தே கேட்டே யிராத என்னென்னவெல்லாமோ!
அத்தனை மேலும் ஒரு கணம் பார்வையை மேயவிட்ட கிழவி கண்களை இறுக மூடிக்கொள்கின்றாள். அன்றெல்லாம் தன்னால் தின்று தீர்க்க முடிந்த அந்தக் காலத்தில் ஒரு அரை வயிற்றுக் கஞ்சியாவது ஊற்றினார்களா?
கணவன் கண்ணை மூடிய காலம் தொட்டு இன்றுவரை அதே இடம்தான் அவளுக்கு. அப்பனுக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செய்து முடித்து தாயையும் தன்னுடன் கூட்டி வந்து விட்டான் வீரன். பத்து மாதம் சுமந்து பெற்ற மகன்தான் என்றாலும் அவனுக்கென் றொரு மனைவி, ஆறேழு பிள்ளைகள் என்று ஆகிவிட்ட பிறகு அவனிமிருந்து பெற்றவள் பெரிதாக எதை எதிர்பார்க்க முடியும்?
ஏதோ காமா சோமா வென்று காலம் தள்ளி… நெஞ்சில் விழுந்த அடி படிப்படியாக மாற, மீண்டும் தோட்டத்தில் ஒருத்தியாகி காலை யில் மலைக்கும், மாலையில் லயத்திற்கும் என்று சுற்றி வந்தாள் செக்கில் கட்டிய மாடாய்.
வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்க வேண்டும் என்ற எண்ணம் கிழவிக்கு எப்போதுமே எழுந்ததில்லை. அவளைப் பொறுத்தவரை வீடு, மலை, ஓய்வு எல்லாம் ஒன்றுதான். அவளாலேயே நடக்க முடியாத பட்சத்தில் என்றாவது ஒருநாள் இருந்து விட்டாளென்றால் அன்றைக்கு வீட்டில் அமளிதான்!
“கிழவி, இன்னைக்கு வேலைக்குப் போகலியா?” என்பதில் தொடங்கி எனக்கிருப்பது போதாதென்று இதுவேறு வந்து கழுத்தை அறுக்கிறது சனியன் என்று தொடர்ந்து கிழடை கொளுத்திய அன்று தான் தனக்கு நிம்மதி என்று முடிப்பான் வீரன்!
அத்தனையும் தனக்கே உரித்தான தடிக்குரலில், தனக்கே உரித்தான தனித்துவ பாஷையில்.
அப்போதெல்லாம் கிழவி “ஏம்பா அப்படிச் சொல்றே இந்த மாசத்திலேயே இன்னைக்கு மட்டும் தானே வீட்டுலே நின்னேன்” என்று நினைத்துக் கொள்வாள். ஆனால் சொல்ல மாட்டாள்.
நியாயமானவைதான் என்றாலும் நினைப்பதை எல்லாம் வாய் விட்டுச் சொல்லிவிட முடியுமா என்ன? அதுவும் இளைத்தவர்கள்…. வலுத்தவர்களிடம்!
கிழவி மௌனமாக கண்ணீர் வடிப்பாள். அடுத்த நாள் மழையோ… பனியோ நடந்து விடுவாள், மலையை நோக்கி தலையில் கூடையுடன்.
மகன் வீட்டு அடுப்பில் விறகு எரிகிறதா இல்லையா என்பது கூடக் கிழவிக்குத் தெரியாது. அவள் ஆட்சிக்குட்பட்டதெல்லாம் இஸ்தோப்பின் இடது மூலை இருட்டு. அவளது சாம்ராஜ்யமே அதுதான். அதட்டுவதற்கு ஒரு நாய். அணைத்துக் கொள்ளவும் அதுதான்!
சுருட்டிக் கொள்ள அந்த இருண்ட மூலை… விரித்துக் கொள்ள ஒரு சாக்கு… போர்த்திக் கொள்ள ஒரு சீலை…. தலைக்கு அணைவு மூலையில் புதைக்கப்பட்டுள்ள திருகை…
இரவில் குளிர்ந்துவிட்ட கிழவியின் உடலுக்குச் சூடேற்றுவது ‘நச்நச்’ என்று அவள் மெல்லும் வெற்றிலை. மனதிற்குக்கூட அதுதான். காலையில் வீடு கூட்டும்போது அந்தப் பெண் நிலா வெளியே கொண்டு போய் போட்ட கிழவியின் எச்சில் சுண்டை எடுத்து வர ஒரு ஆயிரம் சத்தம் போட்டுப் பார்த்துவிட்டு, “நாமலே போய் எடுத் தாந் துறுவோம்” என்று எழுந்து தட்டுத் தடுமாறி நடந்து சென்று கோழிக் கூடையில் மோத, அது கறே புறே’ என்று கத்த, மகன் உள்ளேயிருந்து கத்துவான்.
“இந்தாம்மா நெலா, அந்த எச்சில் கொத்தை போய் எடுத்துக் கொடு. அந்தச் சனியன் விழுந்து சாகுது, வாயைத் திறந்து கேட்டா என்னவாம்..? அவ்வளவு ராங்கி” என்று.
கூடக் கொழுந்து எடுக்கும் வலுவோ, ஓடி ஆடி வேலை செய்யும் உடலுரமோ கிழவியிடம் கிடையாது. எதிர்பார்க்கவும் முடியாது. அந்த வயதில் அவள் வேலை செய்வதே அதிசயம். சம்பளம் முப்பதோ, நாற்பதோ எடுத்து வந்து மகனிடம் கொடுத்து விடுவாள் சதம் குறை யாமல். வருசத்திற்கு ஒரு சேலை என்றாலும் வாங்கிக் கொடுப்பது அவன் . அரை வயிற்றுக்கஞ்சி என்றாலும் ஆக்கிக் கொடுப்பது அவன் மனைவி. சுருட்டிக்கொள்வது இஸ்தோப்பு மூலை என்றாலும் இடம் கொடுப்பது அவன் வீடு என்ற நன்றியுணர்வுடன்.
துரை கொடுக்கும் சில்லறையில் சம்பளத்து வாசல் வியாபாரி யிடம் ஒரு இருபத்தைந்து சதத்திற்கு பிஸ்கோத்து வாங்குவாள். சம்பளத்து வாசலுக்கும் லயத்திற்கும் உள்ள இடைத்தூரத்தில் அவள் கடித்துக் குதப்பிய ஒன்று போக மீதி இருபத்துநாலையும் கடதாசியில் சுற்றிய சடம்பு அவிழாமல் அடிமடியிலிருந்து எடுத்துப் பேத்தியிடம் கொடுத்து விட்டு, மீதி சில்லறைகளை நோட்டுகளுடன் சுற்றி மகனிடம் நீட்டி விடுவாள்.
கிழவியிடம் சம்பளத்தைப் பெறும் ஒவ்வொரு மாதமும் “இந்த மாதம் கிழவிக்கு ஒரு சீலை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்” என்று தான் வீரன் நினைப்பான்.
ஆனால் குடும்பம் என்பதே ஒரு பெரிய கடல்… கூலிக்காரனின் குடும்பமும் கடல் தான்! அதில் எத்தனையோ அலைகள் ! ஒன்றில்லா விட்டால் ஒன்று வந்து கொண்டே இருக்கும்.
“பாவம் கிழவி! சரி அடுத்த மாசம் பார்ப்போம்” என்று சமா தானம் அடைந்து அதுவும் தொடர்ந்து கொண்டே போய் தீபாவ ளியோ, பொங்கலோ , பல்லைக் கடித்துக் கொண்டு, கிழவிக்கு ஒரு சீலை வாங்கிக் கொடுத்து விடுவான். அதுவும் “இது பெருநாள் மாத மாயிற்றே” என்ற கட்டாயத்தில் “போன மாதமே வாங்கியிருக் கலாம்” என்ற முனகலுடன்!
சம்பளம் போட்ட மறுநாள் துரையில்லாத நேரம் பார்த்து மெதுவாக ஆபீசை அடைவான் வீரன். தலையைச் சொறிந்த வண்ணம் “எங்க கிழவிக்கு எவ்வளவுங்க இருந்திச்சு” என்று கேட்டுக் கொள்வான். ஒன்றோ, அரையோ கிழவி பதுக்கிக் கொண்டாளா என்று பார்க் கத்தான்! கிழவி சரியாகத்தான் கொடுத்திருப்பாள். றொட்டி வாங் கியது போக!
அந்தி சாயுமுன்னமே அடிவானம் இருண்டு விட்டது. கொழுந்து நிறுத்து முடிந்து அமைதியான பெறட்டுக்களத்தின் அகன்ற பரப்பில், அங்கொன்று இங்கொன்றாக இறைந்து கிடக்கும் கொழுந்திலைத் துகல்கள் போல நீலம் பூத்துக் கிடந்த வானத்தில் நட்சத்திரங்கள் ஒன்றிரண்டு மின்னின.
மலைநாட்டிற்கே உரித்தான குளிரில், பல்லோடு பல்லடிபடும் அந்த அந்திநேரப் பனியில் குளிரோ, நடுக்கமோ இல்லாது அதோ போகிறாள் கிழவி… ஆற்று நீரில் குளித்து விட்டு!
மெதுவாக ஆற்றுப்படி இறங்கி, சில்லிட்டோடும் அச்சிற்றோடையில் குளித்து முடித்து, ஈரசீலையைச் சுற்றிக் கொண்டு எண்ணி அடி வைத்து ஏறி வர அவளுக்கு இத்தனை நேரம் பிடித்திருக்கிறது. பச்சைத் தண்ணீர் குளிரும் என்றால், அவளுக்கு யார் சுடு தண்ணீர் வைத்துக் கொடுக்கப் போகிறார்கள்?
நனைத்து விடப்பட்ட அடைக்கோழியாய் உள்ளெலும்பு வெளியே தெரிய, முழங்காலுடன் முழங்கால் மோத, முழுப்பாதமும் தரையில் பட அழுத்தி ஊன்றி அவள் நடக்கும் விதத்தைப் பார்த்தால், இப் போதோ இன்னும் கொஞ்ச நேரத்திலேயோ என்றுதான் படும். ஆனால் அடுத்த நாள் காலையில் மலையில் நிற்பாள்!
அன்று கழுத்திருந்த இடத்தில் இன்று தலையிருக்கிறது. வளர்ச்சிக்குப்பின் தேய்வுதானே!
கிழவிக்கு சின்னதுரை வேலையை நிறுத்தி விட்டார். காரணம், பின்னிக்கிடக்கும் தேயிலையில் விரைவாக நீந்திவர கிழவியால் முடி யாது. மலைகளில் ஏறவோ, பள்ளங்களில் இறங்கவோ முடியாது. ஊடே ஊடேயுள்ள கான்களைத் தாண்ட முடியாது. வேலை செய்யும் இடத்தில் எங்கேயாவது விழுந்து கிழவி செத்து தொலைந்து விட்டால்..!
பெரியதுரை முன் கைக்கட்டி நிற்க வேண்டும். வேலை செய்ய முடியாத கிழவிக்கு சம்பளம் அழுவது போதாதென்று வீண் தொல் லைகளை ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும்? அப்படி ஏதாவது நடந்து விட்டால் பெரியவரிடம் இவர் தப்பிக்க முடியுமா? ஆகவே கிழவிக்கு வேலை கொடுக்க மறுத்து விட்டார்.
அடுத்த நாள் வீரன் ஆபீசை இரண்டாக மட்டுமல்ல மூன்றாகவும் ஆக்கிவிட்டான்
“கிழவிக்கு யார் சோறு போடுகிறது?”
அவன் துரையிடம் கேட்ட முதல் கேள்வி. “இப்ப கிழவிக்கு வேலை செய்ய முடியாதுதான். அதுக்காக வேலை இல்லேன்னுடுறதா? இத்தினி வருசமா எந்தத் தோட்டத்துக்காகப் பாடுபட்டிச்சி… இந்த தோட்டத்துக்கு ஒழைச்ச கிழவி தானே…. நான் என்ன கண்டாக்கா? இல்லை கணக்குப்பிள்ளையா? வீட்டுல வைச்சு சோறு கொடுக்க… அதெல்லாம் சரிவராது துரைகளே! வேலை கொடுங்க இல்லேன்னா சுட்டுத் தள்ளிப் புடுங்க…!
மாதுளை மொட்டாய்ச் சிவந்து கிடக்கும் அவன் கண்களையும், ஆளையும் பார்க்கையில் … “இவனிடம் பேசிப் பயனில்லை ” என்று ணர்ந்த துரை “நீ போ” என்று அவனை அனுப்பிவிட்டு கண்டக்ட ரிடம் கூறினார், மேடு பள்ளமில்லாத ரோட்டோர மலைகளாகப் பார்த்துக் கிழவிக்குப் போடும்படி!
இதுபோன்ற சின்ன விசயங்களையும் பெரியவரிடம் அனுப்பி, தன்னுடைய நிர்வாகத் திறமையை அவர் குறைத்து மதிப்பிட சிறியவர் விரும்பவில்லை. தனது முன்னேற்றத்தை அது பாதிக்குமென்ற நோக் கில் தாமே விஷயங்களைச் சமாளிக்கும் எண்ணமே தவிர, கிழவி மேலுள்ள பச்சாத்தாபமோ பரிவோ அல்ல அது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு பென்ஷன், மாதத்திற்கு பதினாறு அல்லது இருபது ரூபாய் என்பதும், அரிசிக்குப் போக மிகுதி எவ் வளவு இருக்கும் என்பதும் வீரனுக்குத் தெரியும். ஆகவேதான் “சுட்டுத் தள்ளுங்கள்” என்றவன், பென்ஷன் கொடுங்கள் என்று கேட்க வில்லை. பலவந்தமாக ஒரு தொழிலாளிக்கு பென்ஷன் கொடுக்கத் தோட்டத்துக்கு முடியாது.
தனி மலை கொடுத்து கிழவி வேலை செய்யத் தொடங்கிய கால கட்டத்தில் தான் ஒரு புது நனை மாதப் பென்ஷன் கிடையாது. ஓய்வுச் சம்பளம்’ என்று மொத்தமாக அறு நூறோ…. எழுநூறோ…. கொடுக்கப்படும். வேலை செய்துள்ள விகிதப்படி என்பதுதான் அப்புதுச் சட்டம்.
ஓய்வுக்குப் பெயர் கொடுத்தவர்கள் யாரும் வேலைக்குப் போக இயலாது என்றவுடன் வீரன் தயங்கினான். இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று.
பெயர் கொடுத்த விபரம் எல்லாம் கம்பெனிக்குப் போய், “சரி” என்று வர குறைந்தது நாலு மாதமாகலாம். பெயர் கொடுத்து விட்டு வேலையில்லாமல் சம்பளம் இல்லாது திரிந்தவர்களிடம் வீரன் சொன்னான். “பாத்தியா ஏமாத்திப்புட்டானுக, நம்மகிட்ட நடக்காது” என்று பெருமையாக.
ஆனால் பெயர் கொடுத்த நாலாவது மாதத்திலேயே இஸ்டோர் லயத்து இருசனுக்கு , எண்ணூறு ரூபாய் கிடைத்தவுடன் வீரன் விக்கித் துத்தான் நின்று விட்டான்.
கவ்வாத்து மலையாய்க் காய்ந்து கிடந்த இருசனுடைய நடையிலே கூட ஒரு மிடுக்கு.
எண்ணூறு ரூபாய் ஆயிரத்துக்குக் கொஞ்சந்தான் குறைவு. இரு கைகள் கொள்ளாத நோட்டுக் கட்டுகள்.
“சம்பளம் போடையில் துரை மேசையில் அடுக்கி வைத்திருப் பாரே அந்த மாதிரி” என்று எண்ணிய வீரன்… “சரி சரி, இனி யோசித்து என்ன பயன்” என்று அன்றே கிழவியை இழுத்துக் கொண்டு ஓடினான் ஆபீசுக்கு.
“எந்த வருடம் பேர் பதிந்தாய்?”
“எத்தனை தடவை ஊருக்குப் போயிருக்கிறாய்?”
“வேறு எந்தெந்தத் தோட்டத்தில் வேலை செய்தாய்?”
“தோட்டச் சம்பளத்தைத் தவிர வேறு வருமானம் உண்டா ?” என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் கூறிவிட்டு, “எப்பங்க பென் ஷன் கிடைக்கும்?” என்று கேட்டு வைத்தான்.
“பென்ஷன் இல்லே வீரா, ஓய்வு உபகாரச் சம்பளம்!” திருத்தினார் துரை.
எந்த மண்ணோ ! காசு எப்ப கிடைக்கும் என்பதுதான் அவனுடைய அவா.
“போன தடவையே எழுதியிருந்தீன்னா இந்த மாசம் கெடைக்கும் இப்ப இன்னும் ஆறு மாசமாகும்” என்று ஐயா கூறியதும் அதுவரை’ என்ற கேள்வியே பேயாய் பெரிதாய் எழுந்து நின்றது. ஆறு மாதமென்றாலும் சுமை சுமைதானே.
“கிழவி பேருக்கு ரெண்டேக்கர் கொந்தரப்புக் கொடுங்க” என்றான்.
“ஏலாது! ஓய்வு பெறப் பேரெழுதிய யாருக்கும் செக்றோலில் பேர் இருக்கக் கூடாது!” என்றார் அய்யா.
“சரி!, என் பேருக்குக் கொடுங்க” என்று அப்போதே கிழவிக்கு ஒரு வழி பார்த்துக் கொண்டுதான் வந்தான்.
அடுத்த நாளிலிருந்து வெய்யிலோ மழையோ கிழவி புல் வெட்ட வேண்டியது. சம்பளம் வீரன் பெயரில்.
வீரன் ஆபீசுக்கு போய் “இன்னும் வரல்லையா” என்று ஆர்ப் பாட்டம் செய்யாத நாள் அந்த ஞாயிறு ஒன்றுதான்.
அப்பேர்ப்பட்ட தன் மகன் இன்று துடிக்கிறான்? துவள்கிறான் என்றால்…! “ஓர்லிக்சா… ஓவலா….” என்கின்றான் என்றால் ..! கிழவிக்குத் தெரியாதா? அகிலத்தையே ஆட்டி வைக்கும் மூவாசைகளுள் கடைசி ஆசைதான் தன் மகனையும் துடிக்க வைக்கிறதென்று. மகன் இப்போதும் எங்கே போகின்றான் என்பது கிழவிக்குத் தெரியும், ஆபீசுக்குத்தான்!
கட்டை விரல் நுனியில் ஏதோ சில்லிட்டது. காலை ஒருமுறை மடக்கி நீட்டினாள். நீட்டிய காலை மறுபடியும் மடக்கினாள். நினை வில் கால் மடங்கியதேயொழிய செயல்படவில்லை “ஒரு நிகாத் தெரியாத நிபாத நிலை” பரக்க பரக்க ஒரு தடவை விழித்துப் பார்த்தாள். சுற்றியுள்ள எதுவுமே பார்வையில் பிடிபடாமல் நழுவிச் சென்று கொண்டிருந்தன. மேலிமையில் நூல் சேர்த்து கீழிமையுடன் இழுத்து ஒட்ட வைப்பது போலிருந்தது. கிழவி கண்களை மூடிக் கொண்டாள்.
“எல்லாம் பாசாகி விட்டது. இன்னும் இரண்டு நாளில் பணம் கிழவியின் கைக்கு வந்து விடும்”
நேற்றுக் கிளாக்கரய்யா சொன்ன செய்தியின் இனிமையை நுகர்ந்தவாறு ஆபீசை நோக்கி விரைவாக நடைபோட்டான் வீரன். நிலைமை எப்படியிருக்கிறது என்பதை மேலும் தெளிவாக அறிந்து கொள்ளும் நோக்கம் தான்.
இந்தப் பண விஷயமே இப்படித்தான் நம் கையில் வந்து விழும் வரை எதையுமே நம்ப இயலாது.
தலையிலே கிடந்த கொழுந்து நிறைந்த கூடையைத் தரையில் இறக்கி வைத்த பெண் போல் ஒரு திருப்திப் பெருமூச்சு விட்டான் வீரன்.
“நாளைக்குக் கிழவியைக் கூட்டிவா. நான் சொல்லுற நாலைந்து இடத்துல கையெழுத்துப் போட்டுட்டு காசை வாங்கிட்டுப் போக லாம்” என்ற செய்தியைக் கேட்டதும்…
கூரை இரும்பின் இடுக்கில் குளவி கூடு கட்டிக்கொண்டிருந்தது. தற்செயலாக மோட்டு வளையைப் பார்த்த வீரன் குளவி கூடு கட்டு வதைக் கண்டான். “மனைவி ஒரு மாதிரி இருக்காளோ” என்று மனதில் எழுந்த சோம்பல் நினைவைக் கலைத்து விரட்டிக் கொண்டு வந்தது “மாமோவ்” என்ற குரல்.
வீரன் வெளியே வந்தான். லயத்துக் கோடியில் நின்று கொண்டு கத்துபவன் ஸ்டோர் லயத்து இருசனின் பேரன். “கங்காணியூட்டுக் கறுப்பனுக்குப் பயந்துதான் பயல் அங்கேயே நின்றுவிட்டான்” என்று யூகித்த வீரன், அது கடிக்காதுடா வா” என்றவாறுபையனிடம் வந்தான்.
“அப்பா உங்களைக் கையோட கூட்டியாரச் சொல்லிச்சு” என்ற படி சிறுவன் முன் நடக்க, வீரன் பின் நடந்தான்.
இருசக் கிழவன் எண்ணூறு ரூபாவை வாங்கி மகனிடம் கொடுத்து இன்னும் தொன்னூறு நாள் ஆகவில்லை. கிழவனுக்கு “அந்தா இந்தா” என்றிருக்கிறது இழுத்துக் கொண்டு. நாளைக்கு நாலுதரம் கழுவி, துணி மாற்றி, இடம் மாற்றி, கிடந்த இடத்தைக் கூட்டி மெழுகிப் போடுவதென்றால் யார்தான் முகம் சுழிக்க மாட்டார்கள். “செத்துத் தொலையுதில்லையே!” என்று கறுவிக்கொட்ட மாட்டார்கள்?
ஊறி நொதிந்த இடத்தில் கிடந்தான் கிழவன். எத்தனை தடவை தான் இடம் மாற்றுவது?
“கொர், முர்ர்” என்று உள்ளுக்கும் வெளிக்குமாக மூச்சுத் திணறியது.
“மூணு நாளா இதேகதிதான்!, இப்போ முடிஞ்சிடும் போலிருக்கே…!” என்று கேட்ட வீரனுக்கு இருசனின் மகன் கொடுத்த பதில்.
“விளக்கெண்ணெய் இருக்கா?” என்று கேட்ட வீரன் இடதுகைக் குழியில் எண்ணெயை வாங்கிக் கொண்டு கிழவனிடம் நெருங்கி உட்கார்ந்து கண்ணைக் காட்டினான். இருசனின் மகன் மற்றவர்களைக் கூட்டிக் கொண்டு வெளியே வந்து விட்டான்.
வலது கைவிரலால் எண்ணெயைத் தொட்டுக் கிழவனின் முகத்தில் தடவினான் வீரன்.
புருவமேட்டில் தடவி நாசித் தண்டை நெருடியவாறு விரல் களைக் கீழிறக்கி நாசித் துவாரத்திடம் வந்ததும் ஒரு முறை தொட்டுக் கொண்டான். கொழகொழத்த விரல் இடுக்குகளில் இப்போது இறுகப் பிடிபட்டிருந்தது நாசித் துவாரம். கிழவனின் மூக்குப் புடைத்து விம்மியது. உடல் இலேசாகத் துடித்தது. மூச்சுத் திணறியது.
வேட்டைக்காரனின் வெளிச்சைத்தையே உற்றுப் பார்க்கும் காட்டு முயற்கண்கள் போலக் கிழவனின் கண்கள் வீரனுடைய கண் களை நேர்பாய்ச்சி ஒரு கணம் பார்த்தன. மறுகணம் மேல் இமைக்குள் சொருகச் சேர்ந்தன. தலை கவிழ்ந்து விட்டது.
வீரன் தலையைப் பலமாக உதறிக் கொண்டு கால்களை எட்டிப் போட்டான். இந்த நேரத்தில் தனக்கேன் அந்தப் பழைய நினைவு வர வேண்டும். மீண்டும் தலையை உதறிக் கொண்டான்.
ஒரு காரைப் பிடிச்சாவது கிழவியைத் தூக்கிப் போட்டுக் கிட்டுப் போய்க் கையெழுத்துப் போட்டுட்டா நிம்மதியா மூச்சுவிடலாம்.
“இரண்டு நாள் கழித்துப் போகிற உயிரை அப்போதே நிறுத்திக் காட்டினாயே, இந்தக் கிழவியின் உயிரை இரண்டு நாள் நிறுத்தி வைக்க உன்னால் முடியுமா?” என்று மனம் கேட்கிறதோ?
உள் மனதின் பயங்கர ஓலம்.
சந்தில் தெரிகிறது அவனுடைய லயம். அது என்ன அங்கே கூட்டம்…
“அப்பாயி செத்துப் போச்சுப்பா” என்று அலறியபடியே ஓடி வந்தாள் மகள்.
ஓட்டம் நடையாகி, நடையும் மெலிந்து, உலகமே சுற்றியது அவனுக்கு.
பழம் விழுந்துவிட்டது.
வீரன் விக்கித்து நின்றான்.
– 1964 வீரகேசரியின் மலையகச் சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்றது. மலையகச் சிறுகதைகள் (துரைவி வெளியீடு).
– தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்.