கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 8,125 
 
 

வித்யாதரனின் பார்வை எதேச்சையாக அந்த பல்லியின் பக்கம் திரும்பியது. பிறகு அதிலேயே நிலைத்து விட்டது.

தன்னை சுற்றி கோலம் போட்ட மாதிரி புள்ளி புள்ளிகளாய் பச்சை நிற பூச்சிகள் உட்கார்ந்து கொண்டு, பறந்து கொண்டு இருந்தாலும் அந்த பல்லி அவற்றைக் கண்டு கொள்ளவே இல்லை. எதற்கோ காத்திருந்த மாதிரி இருந்தது. உடம்பில் துளி கூட அசைவில்லை. அதன் வால் மட்டும் மெதுவாக சுழன்று கொண்டிருந்தது. சாம்பாரும், ரசமும் சாப்பிட்டு சாப்பிட்டு நமக்கு அலுத்து போன மாதிரி ஒரு வேளை பச்சை பூச்சிகள் அதற்கு அலுத்துப் போயிருக்கலாம். அவர் முகத்தில் ஒரு ஏளன சிரிப்பு வெளிப்பட்டது. இதை கவிதாவிடம் சொன்னால் அவள் வேறு கோணத்தில் சொல்லுவாள். ‘ஒருவன் மா மரத்தின் மாங்கனியை சாப்பிட குறி வைக்கிறான் என்றால், அதை சுற்றியிருக்கும் மாவிலைகளை சாப்பிட்டு அலுத்துப் போனவன் என்றா எடுத்துக் கொள்ள முடியும்? பச்சை பூச்சிகள்தான் அதன் உணவு என்று நீங்கள் எப்படி தீர்மானிக்கலாம்?’ என்று மடக்குவாள். வர வர தான் என்ன யோசிக்கிறோம் என்பதை விட, இதில் கவிதாவின் பார்வை எப்படியிருக்கும் என்ற எண்ணம், வெளிச்சத்தை ஒட்டிய நிழல் மாதிரி கூடவே அவர் மனசில் வந்து அமர்ந்து விடுகிறது.

பல்லி திடீரென்று சுறுசுறுப்பானது. தலை தூக்கி கழுத்தை முறுக்கிக் கொண்டது மாதிரி பக்கவாட்டில் பார்த்தது. ஆமாம்! இளம் சிவப்பும் மஞ்சளும் கலந்த ஒரு எறும்புக்கு கண்ணாடி இழைகளால் ஆன இறக்கை முளைத்தது மாதிரியான ஒரு ஈசல் அப்போதுதான் சுவற்றில் அமர்ந்திருந்தது. பல்லி தன் கால்களை நிதானமாக அகட்டி, அகட்டி முதலை தண்ணீரில் நீஞ்சுவது மாதிரி சலனமில்லாமல் அதன் பின்பக்கம் பார்த்து முன்னேறியது. ஓரளவுக்கு நெருங்கியவுடன் ஒரு அசுர பாய்ச்சல்! அடுத்த வினாடி, அந்த ஈசல் பல்லியின் வாயில்! நாக்கை சுழற்றி உள்ளே தள்ளியது. பிறகு ஏதோ ஒரு அதிர்வை உணர்ந்ததும், கலவரப்பட்டு ஓடி மறைந்துவிட்டது.

பல்லி ஓடிவிட்டாலும் அந்த காட்சி மட்டும் வித்யாதரனின் மனசைவிட்டு விலகவில்லை. தான் ஏன் அதில் அதிக கவனம் கொண்டோம் என்று யோசிக்கலானார். அந்த வன்முறை பிடித்திருந்ததா? இல்லை…. மை காட்! அவர்தான் அந்த பல்லியா? அப்படியென்றால் இளஞ் சிவப்பு…மஞ்சள்… கண்ணாடி இழை…. ஆமாம்! கவிதாவும் கிட்டத்தட்ட அந்த நிறம்தான். கண்ணாடி அணிந்திருக்கிறாள். சே! என்ன மட்டரகமான உருவகம்!! ஏன் இப்படி சிந்தனை போகிறது? உயர்ந்த சிந்தனைகள், தர்க்க வாதங்களை உள்வாங்கும் மனசு, ஏன் இப்படி அடிக்கடி குப்பை தொட்டியாகி விடுகிறது?

வித்யாதரனின் மனைவி சரளா அவரிடமிருந்து சட்டப்படி விடுதலை பெற்று மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. திருமணம் செய்து கொண்டு, மன வேறுபாடுகளால் ஒருவரை ஒருவர் கீறிக் கொண்டது அவர் வாழ்வில் மிக கொடுமையான துன்பியல் சம்பவங்கள். எழுத்துலகில் எந்த அளவுக்கு மலை உச்சிகளை எட்டினாரோ, அந்த அளவுக்கு நேர் எதிராக சொந்த வாழ்க்கையில் பெரிய பெரிய பள்ளத்தாக்குகளில் விழுந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எதற்கு இந்த மன உளைச்சல்? பிரிந்திருந்தால் இருவருக்குமே மகிழ்ச்சிதானே என்பது புரிந்தவுடன், அந்த முடிவுக்கு தயாரானார். விண் விண்ணென்று தெரித்துக் கொண்டிருக்கும் கட்டி உடைந்து, சீழ் வெளியேறி, மருந்து கட்டு போட்டதும் ஒரு நிம்மதி வருமே அந்த மாதிரி விவாகரத்து பெற்ற அன்று உணர்ந்தார்.

கவிதா ஒரு ரசிகையாகத்தான் வித்யாதரனுக்கு அறிமுகமானாள். தன் வீட்டு பெண்ணோடு அவரால் சுமுகமாக இருக்கமுடியவில்லையே தவிர, அவரது கதைகளில் வரும் கற்பனை கதாநாயகிகள் உயர்தர பெண்ணியம் பேசுவார்கள். உளவியல் ரீதியாக பல பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு கொடுப்பார்கள். அதனால் அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அவர்கள் நேரிலும், போனிலும் மணிக்கணக்காக பேசியிருக்கிறார்கள். அவர்களில் கவிதா மட்டும் வித்தியாசமாக தெரிந்தாள். சரளாவுக்கு நேர் எதிர். முதலில் அவரது கதைகளை பற்றி ஆழமாக விமர்சித்து வந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் மீது தன் ஆளுமையை தொடர்ந்தாள். அதை அவர் அனுமதித்தார் என்றே சொல்ல வேண்டும்.

பேனாவும், வெள்ளை பேப்பருமாக எழுதிக் கொண்டிருந்தவரை, அவள்தான் கணினியில் நேரடியாக தட்டச்சு செய்ய பழக்கினாள். முதலில் அடம் பிடித்தவரை, தட்டி கொட்டி அவள் விருப்பத்திற்கு கொண்டு வந்தாள். கணினி பழகியதும், அவரால் நிறைய எழுத முடிந்தது. பத்திரிக்கைகளுக்கு உரிய நேரத்தில் கொடுக்க முடிந்தது. அடுத்த பாய்ச்சலாக, இணைய தளத்தில் வித்யாதரனுக்காக ஒரு வலைமணையை உருவாக்கிக் கொடுத்தாள். அதில் வரும் கடிதங்களுக்கு பதில் எழுதவும், அவ்வப்போது அதை புதுப்பிக்கவும் அடிக்கடி வர ஆரம்பித்தாள். பிறகு அவருக்கு உதவியாளர் என்ற பொறுப்பை அவளே ஏற்றுக் கொண்டாள். அவர் சொல்லச் சொல்ல அவள் கணினியில் சேர்ப்பாள். இடையிடையே விவாதமும் செய்வாள். பல சமயங்களில் எப்படி இந்த சின்னப் பெண்ணை இவ்வளவு தூரம் அனுமதித்தோம்? இது சரியா? இல்லை தவறா? என்று யோசித்து குழம்பியிருக்கிறார். கடந்த ஒரு சில மாதங்களாக கவிதா இல்லாமல் அவரால் ஒரு வாக்கியம் கூட எழுத முடியவில்லை.

வாசலில் காலிங் பெல் ஒலித்தது. அது ஒலித்த விதத்தில் கவிதாதான் வந்திருக்கிறாள் என்று புரிந்தது. வித்யாதரன் இருபது வயது இளைஞன் மாதிரி ஓடிச் சென்று கதவை திறந்தார். கவிதாவேதான்!

“கவிதா! வா! இப்போதான் ஒரு பல்லி, பூச்சியை வேட்டையாடினத பார்த்துகிட்டுருந்தேன்.”

“ஆமாம். வீழ்த்துவதும். வீழ்ந்தபின் வெற்றிக் கொடி நாட்டுவதும் ஆண்களின் வழக்கமல்லவா?”

“என்ன கவிதா! வந்ததுமே கத்தியை சுழற்ற தொடங்கிட்டே. இன்னிக்கு என்னை ஒரு வழி செஞ்சுட்டு போறதா எண்ணமா?”

“ஐய்ய! நான் சொன்னது உங்க வசனம்தான். மகரந்த பூக்கள் நாவல்ல உங்க கதாநாயகி ரம்யா சொல்லறதுதான் அது.”

“நதியின் நீரை எடுத்து நதிக்கே அர்ப்பணம் செஞ்ச மாதிரி” என்று சொல்லிவிட்டு அவளை முதன் முறையாக கூர்ந்து கவனித்தார். மனசு மீண்டும் குப்பைக் கூடை ஆனது.

“என்ன சார்! மணிரத்னம் படத்திலே ஹீரோ ஹீரோயினை பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க?”

வித்யாதரன் உள்ளுக்குள் விகிர்த்து போனார். கிராதகி! ஒரு நொடியில் உள் மனதை புரிந்து கொள்கிறாளே! “இல்லே. எங்கிருந்தோ வந்தாய். எழுத்து சாதி நான் என்றாய். எழுத்தையும் தாண்டி எனக்கு பல விதங்களில் உதவியாய் இருக்கிறாய். வம்பு சண்டையும் போடுகிறாய். நீ யார்? ஏன் என் பக்கம் வந்தாய்? உன்னை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.” அவருக்குள் காமத்தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

“சார். பேச்சு தடம் மாறி எங்கேயோ போகுதுன்னு நினைக்கிறேன். என்ன சொல்லணுமோ சொல்லிடுங்க”

“கவிதா. தப்பா எடுத்துக்காதே. மணிரத்னத்துக்கு கூட ரெண்டாவது படம்தான் ஹிட்டு. அது மாதிரி முதல் முயற்சியில தோல்வியடைஞ்சிட்டு, ரெண்டாவதுல வெற்றி பெற்றவங்க நிறைய பேர் இருக்காங்க…..”

தட்டு தடுமாறி தன் உள்ளத்து ஆசையை போட்டு உடைத்துவிட்டார். அது கவிதாவுக்கு ஷாக்காக இருந்திருக்க வேண்டும். மெனமாக தலையை குனிந்த படி இருந்தாள். மூச்சு மேலும் கீழுமாக போனது. கைகள் இரண்டும் இறுகின. நிமிர்ந்ததில் கண்களில் கண்ணீர்.

“சார்! இதை நான் எதிர்பார்க்கல. நீங்களும் ஒரு சாதாரண ஆம்பிளைன்னு நிரூபிச்சிட்டீங்க.”

“நானும் சாதாரண ஆம்பிளைதான் கவிதா. எழுத்தாளர்னா ஏதோ ஆகாசத்துலேர்ந்து குதிச்சவங்க இல்லே. நான் என் எண்ணத்தைச் சொன்னேன். உனக்கு இஷ்டம்னா ஒத்துக்க. இல்லேன்னா விட்டுடு”

“அது எப்படி? எப்படி நீங்க என்னை அந்த மாதிரி கேட்கலாம்? நீங்க என்ன வேணும்னாலும் கேக்கலாம். அதுக்கு நாங்க உண்டு இல்லேன்னு மட்டும் பதில் சொல்லணும். இந்த ஆம்பளைங்களே இப்படித்தான். இந்த சுடிதார்க்குள்ள என்ன இருக்குன்னு பார்க்கிற ஆசை உங்களுக்கு வந்திடுச்சு. உங்க அல்டிமேட் கோல் அதுதான். என்னை உரிச்சு பார்த்துட்டீங்கன்னா…”

“கவிதா! ப்ளீஸ். ஸ்டாப். என்ன தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கே. ஏதோ உடல் இச்சைக்காக அலைபவன்னு நினைச்சுக்கிட்டே”

“அதுதானே உண்மை.” அவள் குரல் கூடியது. கத்தி மாதிரி அந்த வார்த்தைகள் பாய்ந்து வந்து அவரை தாக்கின. படபடப்புடன் எழுந்தாள். சரிந்த கண்ணாடியை நடுங்கும் கைகளால் பிடுங்கி கை பைக்குள் போட்டுக் கொண்டாள். மீண்டும் ஆரம்பித்தாள்.

“உங்களோட எழுத்துக்கள் அனைத்தும் போலி”

“ஆமாம். எழுத்துக்கள் எல்லாமே கற்பனைகள். போலிதான். ஒரு கதையிலே கொலை செய்யறது மாதிரி விவரிச்சுருக்கேன். அதுனால நான் கொலைகாரன்னு ஆகிவிட முடியுமா?

“ஓ! பிரபல எழுத்தாளர்! வார்த்தைகளின் வித்தகர்! எல்லாத்துக்கும் ரெடியாக பதில் வைச்சுருக்கீங்க. பொய்யாக யோசித்து, பொய் வாழ்க்கை வாழ்ந்து….. இரட்டை வேடதாரி…. நீங்க ஒரு ஹிப்போக்கிரேட்.”

“வானத்து நட்சத்திரங்களை வியந்து பார்த்துக் கொண்டே, யதார்த்தம் புரியாமல் பள்ளத்தில் விழுபவன்தான் எழுத்தாளன், கவிதா. என்னை நம்பு. எனக்கு கொஞ்சம் இரக்கம் காட்டேன்.”

கண்ணீர் கொப்பளித்த சிவந்த கண்களுடன் ‘இதுதான் உன்னோடு கடைசி’ என்ற மாதிரி ஒரு அம்பு பார்வையை வீசி விட்டு, விறு விறுவென தன் தோள் பையை எடுத்து மாட்டிக் கொண்டு, வாசல் கதவை படீரென சாத்திக் கொண்டு போய்விட்டாள்.

வித்யாதரனை அந்த தனிமை கொல்லத் தொடங்கியது. சே! அவசரப்பட்டு விட்டோமோ? ஒரு தீவிர ரசிகையை கொச்சைப்படுத்திவிட்டோமோ? அவள் செல்லுக்கு முயற்சி செய்தார். முதல் முறை ரிங் போனது. பிறகு கட் செய்யப்பட்டது. அடுத்த முறை ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு விட்டது. வித்யாதரனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவளுடைய ஒர்கிங் வுமன் ஹாஸ்டலுக்கு போனார். அங்கேயும் இல்லை. அவளுக்கு நண்பர்கள் வட்டம் மிக குறைவு. அவர்களிடம் இவளை பற்றி விசாரித்தால் பல எதிர் கேள்விகள் வரும். டீரென அந்த பல்லி ஈசலை சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. மாறுபட்ட பல யோசனைகளுடன் அங்கும் இங்கும் அலைந்தார். திஉணர்ச்சி மிகுதியில், ஒரு வேளை அவள் ஏதாவது விபரீதமான முடிவுகளை எடுத்துவிட்டால்? அவள் செய்யக் கூடியவள்தான். எல்லாவற்றிலும் தீவிரம். ஆசை காட்டுவதிலும் தீவிரம். எதிர்ப்பதிலும் தீவிரம். எங்கே போய் அவளை தேடுவது? எப்படி தடுப்பது ? தன்னைத்தானே நொந்து கொண்டார்.

இரண்டு மணி நேர அலைச்சலுக்கு பிறகு அவர் வீடு திரும்பியதில் ஆச்சர்யம் இருந்தது. கவிதா அவருக்காக வீட்டு வாசலில் காத்திருந்தாள். முகம் காட்டாமல் திரும்பியிருந்தாள்.

கதவை திறந்து, உள்ளே வந்த பிறகும் அமைதி தொடர்ந்தது. வித்யாதரன் பொறுமை காத்தார். பிரம்பு கூடை ஊஞ்சலில் உம்மென்று தலை குனிந்து உட்கார்ந்திருந்தாளே தவிர ஒன்றும் பேசவில்லை.

“கவிதா! நான் ரொம்பவும் டயர்டா இருக்கேன். இன்னொரு தடவை உன்னோட சண்டை போட ……”

“நான் ஹாஸ்டலை காலி பண்ணப் போறேன்.”

“லுக்! நான் ஏதோ சொன்னதுக்காக, ஹாஸ்டலை காலி பண்ணி, வேலையை விட்டுட்டு, வேற ஊருக்கு போயி….”

“நான் ஏன் வேற ஊருக்கு போகணும்?”

பளீரென நிமிர்ந்தவளின் முகத்தில் கோபமில்லை. ஒரு புன்னகை கூட்டமே வெடித்து சிதற காத்திருந்தது. “என் வீடுதான் இங்க இருக்கே! இங்க வந்துட்டா போச்சு”

ஓடிவந்து வித்யாதரனின் தோள்களைப் பற்றிக் கொண்டாள். கவிதாவை இவ்வளவு நெருக்கத்தில் அவர் பார்த்ததில்லை. அடுத்த நொடியிலேயே அந்த நெருக்கம் இன்னும் அதிகரித்தது.

“கவி! நான் ஒண்ணு சொல்லட்டுமா? அறிவுப்பூர்வமாக எடுக்கப்பட்ட சில முடிவுகளைவிட முட்டாள்தனமாக எடுக்கப்பட்ட பல முடிவுகள்தான் ஜெயிச்சுருக்கு. நான் முட்டாளாகவே இருக்க ஆசைப்படறேன்.”

“நானும்தான்.”

எழுச்சியும் வீழ்ச்சியும் தொடர்வது என்பது பிரபஞ்சத்தின் இயக்கம். இது ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் பொருந்தும். அதில் எது வீழ்ச்சி? எது எழுச்சி? என்பதை அனுமானித்தல் மிக கடினம். இது சரி, அது தவறு என்பது மானுடப்பார்வையின் பேதம். ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம் கோணங்கள் மாறுபடும்.

கவிதாவின் அணைப்பில் வித்தியாதரன் ஒரு எழுச்சி பெற்று உயரே பறப்பது போல உணர்ந்தார். அடுத்த வாரம் பத்திரிக்கைகளுக்கு செம தீனி காத்திருக்கிறது.

அது வித்யாதரனின் எழுச்சியா? வீழ்ச்சியா?

– 03 டிசம்பர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *