கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 6,933 
 
 

லியான் வீட்டுத் தோட்டம் இரண்டாம் நாளாக வெறிச்சோடிக் கிடந்தது. அவன் இன்றும் விளையாட வரவில்லை.

தோட்டம் நீளவாக்கில் தெரு வரை நீண்டிருந்தது. வீட்டு வாசலே இல்லையோ எனச் சந்தேகம் வருமளவு அப்பார்ட்மெண்டுக் குழந்தைகள் மாலை முழுவதும் அவனது தோட்டத்திலேயே பழியாய்க் கிடப்பார்கள். வாசல் சந்தடியில்லாமல் இருக்கும்.

முதல்முறை பார்த்தபோது, ` என்னோட பர்பிள் பேபி பொம்மை வேணுமா?` என லியான் கேட்க, சொல்லத்தெரியாமல் ‘ஹ.ஹ்ம்’ என மேலும் கீழும் தலை ஆட்டிய சுமி அவனது பொம்மைகளிலிருந்து எடுத்த பர்பிள் பேபியைத் திருப்பிக் கொடுத்தாள். அருகிலிருந்த ஏடன் பழுப்பு நிறக் குச்சியால் மண்ணைக் குத்திக் கொண்டிருந்தான்; ஒரு கிளை வழியாக ஏறி இன்னொன்று வழியாக இறங்க முடியுமா எனப் பார்த்துக்கொண்டிருந்தான் கால்வின். அவரவர் உலகின் ஆழத்துள் அவரவர் ஏகாந்தமாக அமிழ்ந்திருந்தார்கள்.

தன் வீட்டுக்குள் குடுகுடுவென ஓடி உள்ளிருந்து நடுத்தர வயது நபரை அழைத்து வந்தான் லியான். லண்டனுக்கு வந்த புதிதில் புதியவர்களைப் பார்த்துப் பயந்த சுமி இந்த அபார்ட்மெண்டுக்கு வந்த நாளிலிருந்து அவர்களுக்குப் பழகியிருந்தாள்.

‘இவதான் கேட்டாள் அப்பா’ எனச் சுமியை கைகாட்டி அவர் முகத்தைப் பார்த்தான் லியான்.

‘ஒ, லிட்டில் பிரின்சஸ் கேட்டாளா? உனக்கு இல்லாததா?’ என அவள் உயரத்துக்குக் குனிந்து கண்சிமிட்டியபடி, ‘லியான், பிரின்ஸசுடன் ஷேர் பண்ணி விளையாடறியா?’ என அவளது ஹேர்பேண்டை தொடாமல் தொட்டுச் சொன்னதில், லியானுக்கு அடுத்து சுமிக்குப் பிடித்துப்போன ரெண்டாவது வெள்ளையர் ஆனார் அவர். கைநிறைய கலர் சாக்லேட்டைக் கொடுத்துவிட்டத்தைப் போலப் பரவசப்பட்ட லியான் தன் வெள்ளை தலைமுடி அதிர ‘ஒகே’ என மேலும் கீழும் தலையாட்டினான்.

புறநகர்ப் பகுதியில் இருந்த அவர்களது அப்பார்ட்மெண்ட் லண்டனின் மனித நடமாட்டத்துக்கு எல்லைப் பகுதியோ எனச் சந்தேகப்படுமளவு காடுகள் சூழ்ந்திருந்தன. இருவரது வீடுகளும் ஒட்டிப்பிறந்த ரெட்டைப் போல வசதியாக அமைந்திருந்தன. நினைத்த நேரத்தில் இருவரும் தோட்டத்து மூலைகளில் கிடக்கும் சாதாரணப் பொருட்களையும் சுவாரஸ்யமான விளையாட்டுப் பொருளாக மாற்றிக்கொண்டிருப்பார்கள். கடவுள் புன்னகையை வீசிச் செல்லும் நேரத்தில் மண் புழுவும் காட்டு ராஜாவாக மாறும்.

வீட்டுக்குள் போரடிக்கும் நாட்களில் அவர்களது அப்பார்ட்மெண்டில் இருக்கும் தோட்டத்துக்கு விளையாடப்போவார்கள். பல நேரங்களில் லியான் செய்வதை நிழல் போலத் தொடர்ந்து செய்வாள் மூன்று வயது சிறியவளான சுமி. அவனது ஆறு வயதுத் துடிதுடிப்புக்கு இணையாக செய்ய முற்பட்டாலும் பல சமயங்களில் அவளால் வேடிக்கை மட்டும் பார்க்க முடியும். லியான் தோட்டத்திலிருந்த டிராம்போலின் மேல் குதித்து விளையாடுவது, அவனுடன் சேர்ந்து புத்தகப் படங்களை வேடிக்கைப் பார்ப்பது என சுமி நேரம் காலம் தெரியாமல் அவர்கள் வீட்டுப் பின்புறத்திலிருந்தாள்.

தினமும் செய்யும் காரியம் தான் என்றாலும், தோட்டத்திலிருந்த மஞ்சள் ரோஜாக் கிளையை உடைத்து வீட்டுக்குப் பின் பக்கம் குழி நோண்டி லியான் நடும்போது அவளுக்கு கட்டுப்படுத்த முடியாத சந்தோஷம் வந்துவிடும். தன் வீட்டிலிருந்து பிளாஸ்டிக் குடுவையில் நீர் எடுத்து வந்து செடியில் ஊற்றுவாள். சின்னச் சின்ன கூழாங்கற்களை மணல் மேல அழுந்தச் செய்துவிட்டு அவனைக் கட்டிக்கொள்வாள். அவளுக்காகவே லியான் பல பொம்மைகளை வெளியே எடுக்கத் தொடங்கினான்.

ஸ்கூலிலிருந்து வருவதற்குக் கொஞ்சம் தாமதமானாலும் அவனது வீட்டின் பின்பக்கக் கண்ணாடிக் கதவில் முகத்தை அழுந்திவைத்து ‘லியான், லியான்’ என யாராவது வரும்வரைக் கூப்பிட்டபடி நிற்பாள். பெரும்பாலும் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். அவனை அழைத்து வர அவனது அம்மா க்ளேர் பள்ளிக்கூடத்துக்குப் போயிருப்பாள். அவர்கள் வரும்வரை பின்கட்டு பொம்மைகளைத் தொடாமல் டிராம்போலின் அருகே பொறுமையில்லாமல் சுமி காத்திருப்பாள். விளையாடி முடித்த பின்மாலை வேளைகளில் அவனது வீட்டிலிருந்து கொஞ்சமும் சத்தம் வெளிவராது. பல சமயங்களில் லியான் அப்பாவுடன் சிரிக்கும் சத்தம் மட்டும் திடீரெனக் கேட்கும். அச்சமயம் காரணமறியாத குதூகலம் அவளை ஆட்கொள்ளும்.

சில நேரங்களில் லியானுடன் விளையாட அவனது அப்பா வந்துவிடுவார். அவர்கள் இருவர் மட்டும் தோட்டத்தில் விளையாடும் நாட்களில், ‘லிட்டில் பிரின்சஸ், வா ஒரு ரைடு போகலாம்’ என அவரது சைக்கிள் முன்சீட்டில் அவளை பெல்ட் போட்டு உட்காரவைத்து அபார்ட்மெண்டு முழுவதும் சுற்றி வருவார். சுமி அதிகமாக வெட்கப்படுவது அப்போதுதான். அதுவும் யாரேனும் எதிரே வந்து, ‘ஒ, என்ஜாய் யுவர் ரைட் டார்லிங் ‘ எனச் சொன்னால் போதும் முத்துப்பல் அத்தனையும் தெரிய ஈ-எனச் சிரித்து சின்ன சைக்கிளில் கூடவே வரும் லியானைப் பார்த்து, ‘லியான்!’ எனக் கைநீட்டுவாள். லியானின் அப்பா குஷியாக விசிலடித்தபடி ஏதாவது பாடிக்கொண்டுவர, முகமெல்லாம் சிரிப்பது போலப் பூரணச் சந்தோஷத்துடன் வலம் வருவாள்.

மழை வராத நாட்களில் தோட்டத்தின் மறு எல்லையில் இருக்கும் ரோஜா செடிகளுக்கிடையே இருந்த மரப்பாச்சி தாத்தா பொம்மைகளோடு விளையாட லியான் துடிப்பான். யார் அவற்றை அங்கு வைத்தது என்ற அவனது கேள்விக்கு ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கதைகளை அவனது அப்பா கூறுவார்.

நிலவின் அரசன் பூமிக்குக் கொடுத்த பரிசு எனச் சொன்னதும் வாஞ்சனையோடு நிலவை மானசீகமாக கட்டிப் பிடிப்பான் லியான். அவன் செய்வது புரியாவிட்டாலும் சுமி அவனோடு சேர்ந்து நிலவுக்கு முத்தங்களை அள்ளிக் கொடுப்பாள். கேப்டன் அமெரிக்கா தங்க குதிரையில் வந்திறங்கி லியானுக்காகச் செய்தது அந்த பொம்மைகள் எனச் சொல்லும் நாட்களில் உடம்பு முழுவதும் கொப்பளிக்கும் குதூகலத்துடன் `தாங்க்யூ கேப்டன் அமெரிக்கா!` எனக் கத்தியபடி தோட்டம் முழுவதும் சுற்றி வருவான் லியான். காற்றிலிருந்துப் பரவசம் தொற்றிக்கொண்டது போல் சுமி தன் பிஞ்சு விரல்களால் அவனைப் பிந்தொடந்து கண்ணுக்குத்தெரியாத குதிரையை ஓட்டிச் செல்வாள். அப்போது குதிரை ஓட்டுவது எப்படி என அவளது கை விரல்களைப் பிடித்தபடி கணைத்துக் கொண்டே அவளுக்குச் சொல்லித்தருவான்.

கடந்த ரெண்டு நாட்களாகவே லியான் விளையாட வரவில்லை. பக்கத்து வீடு அமைதியாக இருந்து பழக்கப்பட்ட சுமிக்கு, மாலைவேளைகளில் அங்கிருந்து வரும் கூச்சல் கிலி மூட்டியது. உள்ளே சென்று பார்க்கலாம் என்றால் அவன் வீட்டுப் பின்கதவு திரைச் சீலைப் போட்டு மூடி இருந்தது. பல முறை சென்று பார்த்தும், எப்போதும் வீட்டு ஜன்னல் வழி சமையலறையில் தெரியும் கிளேரைக் காணவில்லை. இரவு தூங்கும் வரை அங்கு கேட்ட சத்தத்துக்கிடையே லியான் குரலைக் கண்டுபிடிக்க முயன்றாள்.

இன்றாவது வந்துவிடுவானென டிராம்போலினில் உட்கார்ந்திருந்தாள். பள்ளியிலிருந்து வந்ததும் தன் டிராம்போலினில் சுமி உட்கார்ந்திருந்ததைப் பார்த்த லியான், புத்தக மூட்டையை கீழே வைத்த கையோடு வேகமாக வெளிவந்து `கெட் ஆஃப். இட்ஸ் மைன்`என அவளைக் கீழே தள்ளிவிட்டான்.

திடீரென இத்தாக்குதலால் வெலவெலத்துப் போய் அழுகை வந்தாலும் அவன் விளையாட வந்தது சுமியைக் குஷிப்படுத்தியது. அவனருகே சென்று , `உட்டன் கிரான்ட்பா!` என ரோஜா தோட்டமிருந்த மரப்பாச்சி திசையில் ஆசையாகக் கைநீட்டினாள்.

என்ன நடந்தது எனப் புரிவதற்குள், `நீ மட்டும் போய் விளையாடிக்கோ!` எனக் கத்தியபடி அவளைத் தள்ளிவிட்டான் லியான். கீழே விழுந்ததால் ஏற்பட்ட சிராய்ப்பு வலியைவிட பயம் அவனிடமிருந்து அவளை விரட்டியது. லியான் முகத்தைப் பார்த்து பயந்தபடி தன் வீட்டுக்குள் ஓடிவிட்டாள். தன் அறை ஜன்னலிலிருந்து வெறுமையானத் தோட்டத்தை அழுதுகொண்டே பார்த்தபடி சுமி தூங்கிப்போனாள்.

லியான் வீட்டிலிருந்து கடந்த மூன்று நாட்களாக கேட்ட கூச்சல் இன்று காலையிலிருந்து இல்லை. முந்தினம் நடந்த சம்பவத்தால் மிகவும் பயந்து போயிருந்ததால், வெளியே வராமல் தன் வீட்டு ஜன்னலிலிருந்து வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

ஆசையாக அவர்கள் நட்ட செடிகளை லியான் பிடுங்கி எறிந்து கொண்டிருந்தான். எப்போதும் விளையாட வரும் கால்வின், ஏடன் என யாரும் அங்கில்லை. ஆத்திரத்துடன் செடிகளை உதைத்து புழுதி கிளப்பினான். எப்போதும் அவன் வீட்டுப் பின்பக்கம் இருக்கும் சைக்கிள் அப்போது அங்கில்லை. அவனது அப்பா இருந்தாலாவது வெளியே போய் விளையாடலாம் என சுமி நினைத்த நேரத்தில்,

‘லியான் உள்ள வரியா இல்லியா?’ , என கத்தலாய் ஒரு ஆண் குரல் கேட்டது. பின் அந்தக் குரலுக்குச் சொந்தமான உருவம் சத்தமாக முணுமுணுத்தபடி சுமி வீட்டைத் தாண்டி தோட்டத்துக்குப் போக எத்தனித்தது. லியான் அப்பாவின் உடலசைவில் புதுவிதமானக் கடுமைத் தெரிந்தது. அவரைப் பார்க்கவும் அவளுக்கு பயமாயிருந்தது.

`வர்றேன் டாடீ!`, எனப் பதறியடித்தபடி லியான் அவரை நோக்கி ஓடிவந்தான்.

மாடியிலிருந்து சுமி பார்த்தபோது, அப்பாவைத் தொடர்ந்த லியான் பர்பிள் பேபியை விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். லியான் வீட்டுத் தோட்டம் முன்பில்லாத மெளனத்துக்குத் திரும்பியது.

– ஜனவரி 10th, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *