(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
உடனடியாக வருமாறு அம்மா கடிதம் எழுதியிருந் தமையாற் தான் இப்பொழுது ஊருக்குப் போகிறேன். யாழ்ப்பாணம் போய் சரியாக ஏழு மாதம் இருக்கும். அடிக்கடி போக ஆசைதான். ஆனால் பணப்பிரச்சனை அந்த ஆசையைத் தடை செய்துவிடும். அரசாங்க லிகிதர் சேவையில் புதிதாக நியமனம் பெற்ற – அதாவது. ஒரு வருடம் இருக்கும் – உத்தியோகத்தன் என்ற முறையில் எனது சம்பளத்தை நீங்கள் ஊகிக்க முடியும். மாதா மாதம் வீட்டிற்கு ஏதாவது அனுப்புவதற்கே பெரியபாடு படுவதுண்டு. இந்நிலையில் கொழும்புச் சீவியம் நடத்துகிறேனென்றால் எனது கஷ்டத்தை (அல்லது கெட்டித்தனத்தை) நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
உடனடியாக வரும்படி கடிதம் எழுதியுள்ளபடியால் ஏதாவது ‘சம்பந்த’ விஷயமாகவும் இருக்கலாம். ‘சம்பந்தம்’ என்றதும் எனக்குக் கவிதாவினுடைய நினைவுதான் வருகிறது. கவிதா என் காதலி. எங்கள் வீட்டிற்கு அண்மையில் தான் இருக்கிறாள். அவள் எனது ‘மனுசி’யாக இருக்கும் கற்பனைகள் அடிக்கடி தோன்றுவதுண்டு. அந்தக் கற்பனையிலான குடும்பவாழ்வில் எனக்கு ஒரு திருப்தி. அந்த நினைவுகளே என்னை ஒரு பற்றுடன் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. அட, நானொரு சுத்த மடையன். (ஒரு கதைக்காக அப்படிச் சொன்னாலும் நண்பன் உதயகுமார் கேட்டால் அதுதான் உண்மையென்றும் வாதிப்பான். என்னை மடையனாக்கிப் பார்ப்பதில் அவனுக்கு ஓர் அலாதி இன்பம்). என்னை மடையனென ஏன் சொன்னேனென்றால், இன்னும் திருமணமாகாமல் அக்கா ஒருத்தியும் எனக்கு இருக்கும் பொழுது நான் எனது திருமணத்தைப் பற்றி யோசிக்கிறேன் (!) அக்காவிற்கு இருபத்தெட்டு வயதாகியும் கலியாணம் முடியாமல் இருப்பதற்குக் காரணம் வழக்கமான சீதனப் பிரச்சனைதான். அதற்காக எனக்கு ‘கலியாண ஆசை இருக்கக் கூடாதென்ற நியதியில்லையே? வெளிப்படையாகக் கூற வெட்கப்படலாம். எனக்கும் வயது வந்துவிட்டபடியால் உள்ளார்ந்த ஆசை இருக்கத் தானே செய்யும்? அதற்காகவேனும் விரைவில் அக்காவி னுடைய பிரச்சனையை முடிக்க வேண்டும் என நான் நினைப்பதுண்டு.
‘ஓ’. ஒருவேளை அக்காவினுடைய கலியாண விஷயமாகத் தான் அம்மா என்னை வரச்சொல்லி எழுதியிருக்கக் கூடும். பாவம் அக்கா, வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கொண்டு இந்த இருபத்தெட்டு வருடங்களையும் எப்படிக் கடத்தினாளோ? இனியும் எத்தனை வருடங்கள் இப்படியே இருப்பாள்? மிஞ்சி மிஞ்சிப் போனால் நல்லூர்க் கோயிலைத்தான் கண்டிருப்பாள். கோயில் என்ற சாக்கிலாவது அவள் இடைக்கிடை வெளியுலகைக் காணட்டுமே என நான் ஆதங்கப்படுவதுண்டு. இல்லாவிட்டால் நான் இந்த உலகமெல்லாம் போய்த் திரிந்தும், (உலகம் என்று சொன்னவுடன் நான் ஏதோ பரதேசம் சென்று வந்ததாக நினைக்க வேண்டாம். நான் ஒரு சாதாரணன். அதற்கெல்லாம் பாத்தியதை ஏது? சும்மா கொழும்பு வரைதான்). சில வேளைகளில் ‘விசர்’ பிடித்து விடும் போலிருக்கிறது. அவள் எப் படித்தான் அந்த அடைபட்டிருக்கும் வெறுமையைச் சகிக் கிறாளோ ! அந்தப் பரிதாபத்தை எண்ணி வீட்டிற்குப் போயிருக் கும் சமயங்களில் அவளை எங்காவது படத்துக்குக் கிடத்துக்கு வரச்சொல்லிக் கேட்டால் மாட்டேனென்று கூச்சப்படுவாள். கூச்சமெல்லாம் இந்த அக்கம்பக்கத்துச் சனங்களை எண்ணித்தான்! பின்னர் குமாப்பிள்ளை உப்பிடி ஆடித்திரியிறாள். உந்த ஆட்டத் துக்குத்தான் இன்னும் உப்பிடியே இருக்குது’ என ‘நூற்றியெட்டு’க் கதைகளைக் கதைப்பினமே என்ற பயந்தான் அவளுக்கு.
கதையோடு கதையாக புகையிரத நிலையம் வந்ததே தெரியவில்லை. ‘றெயினிலே’ ஏறும் பொழுது ஒரு குதூகலம் வந்து ஆட்கொள்கிறது. அது, கனகாலத்திற்குப் பிறகு யாழ்ப் பாணம் போகிறேன் , கவிதாவைக் காணலாம் என்ற காரண மாகத்தான் இருக்கும். சும்மா சொல்லக்கூடாது, கவிதாவை நினைக்கும் பொழுதுகளிலே ஒரு ‘திறில்’ தான். நான் அடிக்கடி ஊருக்குப் போக ஆசைப்படுவதே அவளுக்காகத்தான். என்னைப் பெற்று, அன்போடு வளர்த்து. பாசத்தைப் பொழிந்து கொண்டிருக்கும் அம்மாவையும், அக்காவையும் விட அவள் நினைவு முன்னுக்கு ஓடி வந்து நிற்கும். அதற்காக நான் வெட்கப்படுவதுமுண்டு. அது தவிர்க்க முடியாத எண்ணங்கள் என்று பின்னர் சமாதானமாகிக் கொள்வேன். அதற்காக நான் அம்மாவிலோ, அக்காவிலோ பாசமற்றிருக்கிறேன் என்று அர்த்த மில்லையே?
கவிதா எனக்காகவே காத்திருப்பதில் எனக்கு எவ்வளவோ பெருமை. நான் ஓர் அழகனோ அல்லது ஓர் உயர் மட்ட உத்தியோகத்தனோ அல்ல. என்னிடம் அப்படி என்னத்தைக் கண்டு ‘அவரைத்தான் கட்டுவேன்’ என ‘ஒற்றைக் காலில்’ நிக்கிறாள்? இப்படியான ஒருத்திக்காக என் உயிரைக் கூடப் பணயம் வைக்கலாமே? ஒரு முறை வீடு சென்றிருந்த பொழுது ஒரு மாற்றுச் ‘சம்பந்த’ விஷயமாக அம்மா என்னுடன் கதைத்தா. அதனால் அக்காவினுடைய பிரச்சனையும் தீர்ந்து விடுமென்பது அம்மாவினுடைய வாதம். அதிலுள்ள நல்லது கெட்டதுகளைப் பற்றி யோசிக்க நான் தயாராயில்லை. ‘உந்தப் பேய்க் கதைகளைக் கதைத்தால் நான் இந்தப் பக்கமே வரமாட்டேன்’ என ஒரு வெருட்டு விட்டேன். அம்மா அடங்கிப் போய்விட்டா. எனது காதல் விஷயமும் ‘சாடைமாடை’ யாய் வீட்டிலே தெரியும். ‘அம்மா ஏனணை இப்ப கத்துறாய்…. எனக்கு இப்ப கலியாணம் வேண்டாம். நான் இப்படியே இருப்பன்’ என அக்கா எனக்குப் பரிந்து கொண்டு கதைத்தா.
அக்கா பாவம். எப்படியும் அவளுடைய கலியாணத்தை முடித்துக் கொண்டுதான் நான் செய்யிறது என நினைத்திருக் கிறேன். உங்களுக்குத் தெரியும் தானே; இந்தச் சீதணக் கரைச்ச லாலை எத்தனையோ குமர் காரியம் ‘ஒப்பேறாமல்’ இருப்பது? அதற்காக நாங்களும் பேசாமல் இருந்து விட முடியுமா? நாங் கள் ஏழைகள் – அதாவது பொருளாதார ரீதியாக வசதியற்றவர் கள். சின்ன வயதிலேயே தந்தையை இழந்தவர்கள். சீவிப்பது கோயில் காணியில். கோயில் காணி’ என்றால் உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன். கோயிலுக்குச் சொந்தமான காணியை இடவசதியற்றவர்கள் மிகவும் குறைந்த குத்தகையில் எடுத்து இருக்கலாம். பரம்பரையாகச் சீவிக்கலாம். ஆனால் சீதனம் பாதனமாகக் கொடுக்கேலாது. அக்காவிற்குக் கலியாணம் செய்து கொடுப்பதென்றால், எங்காவது ஒரு காணித் துண்டு வாங்கி ஒரு சிறிய வீடென்றாலும் கட்டியாக வேண்டி யிருந்தது. இதற்காக அம்மா படாத பாடு பட்டா . பாவம் அவவை நாங்கள் தெய்வமாகக் கும்பிட வேண்டும். இந்த ஏலாத வயதிலும் எவ்வளவு முயற்சி!
வீட்டுக்கு அண்மையில் ஒரு காணி விலைக்கு வந்தது. இரண்டோ மூன்று பரப்புத் துண்டென்று நினைக்கிறேன். அவ்வளவு திறமெண்டும் சொல்லேலாது. ஒரு மாதிரி பதினாலா யிரத்துக்குத் தீர்த்து எண்ணாயிரம் உடன் காசும் கொடுக்கப் பட்டது. ஐயா இருந்த பொழுது சேர்த்து வைத்த சொற்பமும் பின்னர் அம்மாவினுடைய முயற்சியில் சேர்த்ததுமான தொகை தான் அது. மிகுதி ஆறாயிரமும் தவணை முறையில் கட்டுவதென் றும், பணம் முழுதும் செலுத்தியதும் காணி எங்களுக்குச் சொந்தமாகும் என்பதும் உடன்படிக்கை. இன்னும் இரண்டொரு மாதத்தில் காசு கட்டி முடிந்துவிடும் என அம்மா முன்னர் எழுதியிருந்தா. எனவே அந்தப் பிரச்சனையும் இப்பொழுது தீர்ந்திருக்கும். அக்காவினுடைய திருமணத்துக்காகத்தான் ஏதா வது ஒழுங்குகள் செய்திருக்கக்கூடுமென நினைக்கிறேன். அந்த நினைவே இனிக்கிறது. என் ஆருயிர் அக்கா கலியாணம் செய்யப் போகிறாள் – அடுத்தது எனக்கு! சீ, அதற்குள்ளும் ஒரு சுயநலமான கற்பனை எழத்தான் செய்கிறது.
இது போன்ற இன்பமும், துன்பமானதுமான நினைவு களுடன் றெயினுக்குள்ளே உறங்கிப் போயிருக்க வேண்டும். மீண்டும் எழ, யாழ்ப்பாணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ரேசனில் இறங்கிய பொழுது ‘டக்குடக்’ என்று நெஞ்சினுள் பயம் அதிகரிக்கிறது. செய்தி என்னவோ ஏதோ என்ற எண் ணம் தான். கணப்பொழுதில் கவிதாவினுடைய நினைவும் வந்து ஓர் ஆனந்தத்தை ஊட்டி மறைகிறது. ஆரியகுளத்துச் சந்தியில் பஸ் ‘ சிற்குக் கூட நிற்கப் பொறுமையில்லாமல் விறுவிறு’ என்று நடையைக் கட்டுகிறேன். நடந்து கொண்டிருக்கும் பொழுது பஸ் வந்து விலத்த, ‘நிண்டிருக்கலாமே’ என்ற எண்ணம் தோன்றுகிறது. எனது அவசரத்தை எண்ணி எரிச்ச லடைந்தவாறே கந்தர்மடம் சந்தியை நெருங்கிவிட்டேன். ஒரு தத்தண்ணி அடிக்கலாமென்றால் சின்னத்தம்பியின் கடை பூட்டியிருக்கிறது. இன்னும் எரிச்சலுடன் வீட்டை நோக்கி நடக்கிறேன்.
வீட்டில் அம்மாவிலும் அக்காவிலும் ஒரு சோகமான அமைதியைத்தான் காணக்கூடியதாகவிருக்கிறது. என்ன விஷயமோவென நெஞ்சு பரபரப்படைகிறது. சில வேளை விஷயம் என்னைப்பற்றியதாக இருந்தாலும் என்ற எண்ணத்தில் அவர்கள் சொல்லும் வரை பேசாமலிருக்கிறேன்.
தேத்தண்ணியுடன் வந்த அம்மா சொன்னா: ‘உவர் தர்மலிங்கத்தாரெல்லோ எங்களை ஏமாத்திப் போட்டார்.’
‘என்ன?’- நான் புரியாமல் நோக்குகிறேன்.
அம்மா விஷயத்தை விளக்கமாகக் கூறியதும் எனக்கு அவன் மேல் படு ஆத்திரம் ஏற்படுகிறது. (தர்மலிங்கம் என்னை விட வயதுக்கு மூத்தவனாயினும் இனியும் ‘ர்’ போட்டு மரியாதையாகக் கதைக்க எனக்கு விருப்பமில்லை).
விஷயம் இது தான்; தர்மலிங்கம் காணிக் சொந்தக் காரன். காணி எங்களுக்கு விற்கப்பட்ட பொழுது எழுதிய பத்திரத்தில் உடன்பட்டபடி எண்ணாயிரம் காசு செலுத்தப்பட்டதாகவும், மிகுதி தவணை முறையிற் செலுத்தப்பட்டதும் காணி எங்களுக்குச் சொந்தமாகும் என்றும் எழுதப்பட்டிருந்தது. அம்மா செய்த மடைத்தனம் என்னவென்றால், பின்னர் கட்டிய பணங்களுக்குப் பற்றுச்சீட்டுப் பெற்றுக் கொள்ளாததுதான். இப்பொழுது அவன்; நாங்கள் காசு கட்டவில்லை என நிற்கிறானாம்.
எவ்வளவு கஷ்டப்பட்டு அம்மா இப்பணத்தைச் சேர்த்தா! நான் கூட இதற்காகப் பட்ட கடன்கள் இன்னும் தலைக்கு மேல் இருக்கின்றனவே!
இனி அக்காவினுடைய வாழ்வில் ஒரு சந்தோஷமான நாள் விடியாதா?
எனக்குச் சாப்பிடவே பிடிக்கவில்லை. அப்படியொரு வேகமான ஆத்திரம்; வேதனை. வழக்குப் போட்டும் பிரயோசன மில்லை. பிடி அவனது பக்கம். இரண்டொரு பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு அவனுடைய வீட்டிற்குப் போய் ஆதரவாகக் கதைத்துப் பார்த்த பொழுது, ‘சரி’ எங்களுடைய ஏழ்மையைக் கருதி, ஒரு சலுகை செய்வதாகச் சொன்னான். அது, மூவாயிரம் ரூபா இன்னும் செலுத்திய பின்னர் காணியை எங்களுக்குத் தருவதாகவும், அதுவரை காணியில் எங்களை இருக்கலாமென்றும். அதற்கு ஒருவாறு உடன்பட்டுக் கொண்டு வந்தேன்.
புதிய காணியில் அம்மாவையும் அக்காவையும் இருப்பதற்கு ஒழுங்குகள் செய்து விட்டு நான் கொழும்பு வந்துவிட்டேன். ஆனால் ஒரு மாத காலத்துக்குள்ளேயே மீண்டும் ஒரு பிரச்சனை தலை தூக்கியது. தனக்கு எதிராக ஓர் ‘அப்புக்காத்து நோட்டீஸ்’ வந்திருப்பதாக அம்மா எழுதினா. பணம் முழுதும் கட்டிமுடியாமல் காணியில் இருப்பதாக தர்மலிங்கம் வழக்குப் போட்டிருக்கிறான். (இதற்காக நான் பின்னர் யாழ்ப்பாணத் துக்கும் கொழும்புக்கும் ஓடுப்பட்டுத் திரிந்த கதை தேவையில்லை என நினைக்கிறேன்).
வழக்கு முதல் விசாரணை முடிந்து தவணை போடப்பட்டிருந்த காலம்.
இப்படியொரு பிரச்சனைக்கு ஆட்படுத்தப்பட்டு விட் டோமே எனக் கவலையாயிருந்தது. இந்த அக்கிரமங்கள் எப் பொழுது தான் அழியும்? தமிழின ஒற்றுமை பற்றி மேடை களில் விளாசித் தள்ளுபவர்களுக்கு இது தெரியவில்லையா? எம்முள் மலிந்து போயிருக்கும் இந்தப் பயங்கர சுரண்டல்கள் அழியும் வரை விடிவு ஏது? நான் சாதாரணன். இதையெல் லாம் சிந்தித்து வருந்துவதைத் தவிர வேறு என்ன பிரயோசனம் எனத் தோன்றியது.
எனக்கு எனது பிரச்சனை.
இரண்டு மூன்று நாட்கள் பித்துப் பிடித்தவனைப் போலத் திரிந்தேன். பின்னர்தான் கண்ணனைச் சந்தித்தேன். கண்ணன் சிறுவயதில் என்னுடன் படித்த நண்பன். இப் பொழுது காடையன், களிசறை என எல்லோராலும் ஒதுக்கப் படுபவன். ஆள் ஒரு ”சண்டியன்” என்று ஊருக்குள்ளே பெயர். ஒரு வேகத்தில் அவனிடமே விஷயத்தைச் சொன்னேன்.
இரவு மீண்டும் சந்திக்கிறோம். சாராயப் போத்தல் கை மாறி …. அது உள்ளே இறங்க அவன் அபார துணிவுடன் தோன்று கிறான்.
‘மச்சான் குணம், நீயும் வா ! இப்ப அங்கை போகலாம்’ என்கிறான்.
‘எங்கை?’ – நான் ஒருவித கலவரத்துடன் வினவு கிறேன்.
‘தர்மலிங்கத்தின் வீட்டை’
நேரமோ இரவு. என்ன அசம்பாவிதம் நடக்குமோ எனப் பயந்தாலும் ரெண்டத்தா ஒண்டு என்ற நினைவில் அவன் பின்னாலேயே செல்கிறேன். ஒரு பெரிய வில்லுக்கத்தியை எடுத்து சாரத்தினுள் செருகிக் கொள்கிறான். அதைக் கண்டதும், திரும்பி ஓடிவிடலாமா என்று கூட ஒரு கணம் யோசிக்கிறேன். பொலிஸ், ஜீப், சிறை, வேலை எல்லாம் கற்பனையில் சுழல்கின்றன.
‘மச்சான் அவனுக்கு ஒண்டும் செய்து போடாதை. உன்னைக் கும்பிட்டன்’
‘சும்மா வாடா பயந்த கழுதை’ என்கிறான்! நடுங்கிக் கொண்டே (கழுதையைப் போல) அவனைத் தொடர்கிறேன்.
தர்மலிங்கத்தினுடைய வீட்டில் வலு நிதானமாகக் கதவைத் தட்டுகிறான் கண்ணன். அவனுடைய மனைவி வந்து கதவைத் திறக்கிறாள்.
‘தர்மலிங்கம் நிற்கிறானே?’
கண்ணனைக் கண்டதுமே மனுசிக்கு ‘ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்’ போய்விட்டது போலும்!
‘அவரையேன் இப்ப உமக்கு?’
விசுக்கென்று கத்தியை இழுத்த பொழுது, லைட் வெளிச் சத்தில் அது பளிச்சிட்டு கண்ணைக் கூசச் செய்கிறது.
‘இதுக்குத்தான்… அவரென்ன பெரிய ஆளோ? ஏழையளை ஏமாத்தப்பாக்கிறியளே….இவன்ரை காணிப் பிணக்குத் தீர வேணும்..இல்லாட்டி உன்ரை தாலி அறும்.’
அவள் வெலவெலத்துப் போகிறாள்.
‘உன்ரை பிள்ளையள் பள்ளிக்கூடத்துக்குப் போகையிக்கை சதக் சதக்கெண்டு வெட்டி விழுத்துவன்’ எனத் தொடர்கிறான், கண்ணன்.
‘ஐயோ! இதென்ன அநியாயம், இதைக் கேட்க ஆளில்லையே’ என என்னை அவள் பார்த்த பொழுது நான் – மௌனம் சாதிக்கிறேன். அதற்கிடையில் இரண்டொரு முறை ‘டேய்… தர்மலிங்கம்’ எனச் சத்தமிடுகிறான் கண்ணன்.
‘நீங்கள் இதைப் பொலிசிலை சொல்லலாமெண்டு நினையாதையுங்கோ. பொலிசிலை சொல்லி என்னைப் புடிச்சுக் குடுக்கலாம்…ஆனால் திரும்பிவந்து சும்மா இருப்பனே….உன்ரை குடும்பத்தைக் குலைப்பன். ஒவ்வொருத்தராய் உயிரெடுப்பன்…இவன்ரை காணிப்பிரச்சனை தீர வேணும்.’
கண்ணனுடைய அட்டகாசத்தைக் கண்டு குழந்தைகள் ளறுகின்றன. இவன் ஏதாவது ஏறுக்குமாறாய்ச் செய்தாலும் என்ற எண்ணத்தில் ‘வாடா போதும்’ என அவனை இழுக்கிறேன்.
தெருவில் இறங்கியவன் இரண்டொரு கற்களை எடுத்து சடாரென வீட்டு ஓட்டின் மேல் எறிந்து ஆர்ப்பாட்டம் செய்த வாறே வருகிறான்.
இந்தக் களிசடை வேலைக்கு நீங்கள் என்ன எதிர்ப்புச் சொல்லுவியளோ தெரியாது. ஆனால் இன்று (அடுத்த நாள்) மலை தர்மலிங்கம் ஓடி வந்த ஓட்டத்தைப் பார்க்கவேண்டுமே!
அவன் போன பின்னர் ‘அடுத்த வழக்குத் தவணையில் சமாதானமாய்ப் போறாராம். இப்ப காணி எழுதித் தந்திருக்கிறார்’ என்று சொன்ன அம்மா, ‘ஏனடா உந்தக் காவாலி கடப்புளியளோடை சேர்ந்து மோட்டு வேலை பார்க்கிறனீ?’ எனத் துள்ளியடிக்கிறா.
‘அக்கிரமங்கள் தலை தூக்கும் பொழுது அவற்றை அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஆயுதந்தான் பலாத்காரம் என கண்ண பரமாத்மாவே பாரதத்தில் நிரூபித்திருக்கிறாரே’ என நான் அம்மாவினுடைய பாணியிலேயே விளக்கம் அளித்ததைக் கேட்டு அக்கா சிரிக்கிறாள்.
ஓ! இனி அவள் எப்போதுமே சிரிப்பாள். என் மனம் கவிதாவை நாடிப் பறக்கிறது.
**நீர்ப்பாசனத் திணைக்களத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் அகில இலங்கை ரீதியாக நடாத்திய 1975-ம் ஆண்டிற்கான சிறுகதைப் போட்டி யில் இரண்டாவது பரிசுபெற்ற கதை.
– சிரித்திரன் 1976 – பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பாதிப்பு: 10-07-1977, தமிழ்ப்பணிமனை, யாழ்ப்பாணம்