கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 16,109 
 
 

அந்த ஏரி பனியால் மூடியிருந்தது. மாலதியும் ஹரியும் தமது நண்பர்களுடன் பனியில் சறுக்கி விளையாடுவதற்காக ஏரிக்கரைக்கு வந்திருந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் ஹரியோடு கைகோத்து இந்த ஏரிக்கரை நீரில் கால் நனைய நடந்த ஞாபகம் அவளுக்கு வந்தது. இன்று நீரை மூடிப் படர்ந்திருக்கும் பனியைப் பார்க்க, எவ்வளவு வேகமாக இந்த மண்ணில் எல்லாம் மூடிமறைக்கப் பட்டுவிடுகின்றன என்பதை நினைக்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

பறவைகளின் கூக்குரல் கேட்டு அண்ணார்ந்து பார்த்தாள். வெள்ளை நிற சீ-ஹல் பறவைகள் ஏரிக்கரையில் இரைதேடி வானத்தில் பதிவாக அங்குமிங்கும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இடையிடையே அவை கூக்குரலிட்டு தமக்குக் கிடைத்த இரையைப் பங்குபோட்டுக் கொண்டிருந்தன.

நண்பர்கள் எல்லாரும் வட்டமாக பனியில் சறுக்கி விளையாடிக் கெண்டு இருந்தனர். உட்சாக மிகுதியால் மாலதியும் ஹரியும் கைகோர்த்தபடி தங்களை மறந்து நண்பர்களை விட்டு தனியாக ஏரியின் நடுப்பகுதியை நோக்கிச் சறுக்கத் தொடங்கினர். இவர்கள் ஏரியின் நடுப்பகுதியை நோக்கி சறுக்கிச் செல்வதை இவர்களுக்குப் பின்னால் சறுக்கிக் கொண்டு வந்த மாலதியின் சினேகிதி சிமி அவதானித்தாள்.

“மாலதி கவனம், அந்தப் பக்கம் போகவேண்டாம். பனிக்கட்டியில் வெடிப்பு ஏதாவது இருந்தல் ஏரி அப்படியே உங்களை விழுங்கி விடும், புரியுதா?” என்று சத்தம் போட்டு எச்சரித்தாள்.

“பரவாயில்லை, இரண்டு பேரும் சேர்ந்தே போயிடுவோம்!” என்றான் ஹரி.

“பாவி நீ போனால் பரவாயில்லை, அதுக்காக அவளையுமெல்லே இழுத்துக் கொண்டு போய் படுகுழியில் விழுத்தப் பாக்கிறாய்..!” பயந்துபோன சிமி அவனைத் திட்டித் தீர்த்தாள்.

இந்த ஏரிக் கரைக்கு வரும்போதெல்லாம் மாலதிக்கு ஊர் ஞாபகம் வரும். சின்ன வயதில் கீரிமலைக் கடற்கரை மணலில் நண்டு பிடித்தது, மணல்வீடு கட்டியது, கடலலையில் கால்நனைக்கப்போய் பட்டுப் பாவாடையை உப்புத் தண்ணீரில் நனைத்ததற்காக அம்மாவிடம் ஏச்சு வாங்கியது, கரையோரத்தில் இரைதேடி வட்டமிடும் காகங்களை விரட்டப்போய் கொத்து வாங்கியது, அங்கே கறுப்புக் காகம், இங்கே வெள்ளை சீ-ஹல்! இரண்டுமே இரை தேடித்தான் வட்டமிடுகின்றன. என்ன நிறமாய் இருந்தாலென்ன, உயரப் பறந்தாலென்ன, இவைகளின் நோக்கம் எல்லாம் ஒன்றாய்த்தான் இருக்குமோ?

அவ்வப்போது வந்து மனதைத் தொட்டுத் தாலாட்டும் எத்தனையோ நினைவுகள்! கடலலையில் கரைந்து போகும் மணல் வீடு போல மெல்ல மெல்ல அவளைவிட்டு, புதியமண் வாசனையில் கரைந்து போகும் கடந்தகால பழைய நினைவுகள்.

மாலதி கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். ஏழு மணியானாலும் வானம் வெளிச்சுக் கிடந்தது. வீட்டு நினைவுவரவே செல்போனில் தாயுடன் தொடர்பு கொண்டாள்.

தெலைபேசி கிணுகிணுக்க மரகதம் சலிப்புடன் எடுத்து ‘ஹலோ’ என்றாள்.

“அம்மா நான் ஹரியுடன் வெளியால போறன் நான் வர கொஞ்ச நேரமாகும் நீங்களும் அப்பாவும் சாப்பிட்டு படுங்கோ என்ன, என்னட்ட திறப்பு இருக்கு.”

“சரி மாலதி” என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்த மரகதத்தால் மாலதியின் போக்கை புரிந்து கொள்ள முடியவில்லை.

பிள்ளைகளுக்கு இந்த நாட்டில் இருக்கும் அளவுக்கு அதிகமான சுதந்திரத்தால், எதையும் மறுத்துப் பேசமுடியாத பெற்றோர்கள். பெற்றதாயின் வாயையும் கட்டிப்போடும் இந்தச் சுதந்திரம் யாருக்கு வேணும்?

‘மாலதி படித்து பட்டம் பெற்று இப்போ நல்ல வேலையும் கிடைத்தாகி விட்டது. இனி எமது சொல்வழி கேட்கவா போகிறாள்.’ மனதுக்குள் புழுங்கினாள் மரகதம்.

இனம், மதம், மொழி, கலாசாரம் எல்லாவற்றிலும் மாறுபட்ட ஒருவனை துணையாகத்தேடும் மகளை நினைக்க, இந்த நாட்டிற்குப் புலம் பெயர்ந்ததே தப்போ என்று எண்ணத் தோன்றியது…ஹரி ஹரி என்று ஏன்தான் இவள் அவன்மேல் உயிரைவிடுகிறாளோ?

வீட்டு மணி ‘டிங்; டொங்’ என அடித்தது. யாராக இருக்கும் என்று நினைத்துக்கெண்டு மரகதம் கதவைதிறந்து பார்த்தாள். தம்பி கணேசன் வாசலில் நின்றான்.

“வா வா கணேசு, என்ன சொல்லாமல் வந்திருக்கிறாய்?”

மரகதத்தின் கணவரும் அழைப்பு மணிச் சத்தம் கேட்டு கீNPழ இறங்கி வந்தார். உள்ளே வந்து உட்கார்ந்த கணேசு எதையோ சொல்லத் தயங்குவது போல இருந்தது.

“என்ன கணேசு என்ன விஷயம்?”

“இல்லை அக்கா, நான் நேர விசயத்திற்கு வாறன். அத்தான் நீங்களும் கேளுங்கோ, என்ர மகள் சுமதி சொன்னவள் மாலதியை ஒரு வெள்ளைப் பெடியனோட அடிக்கடி டவுன்டவுணில் காணுறவாவாம். அது தான் உங்களிட்ட கவனம் என்று செல்லிற்று போக வந்தனான்.”

“எங்களுக்கும் தெரியும் கணேசு. வெள்ளம் தலைக்கு மேல போயிற்றுது. மாலதி ஹரி எண்ட பெடியனுடன் டேட் பண்ணிறாவாம். அனேகமாக ஹிரியை தானாம் கலியாணம் செய்யபேகிறாள். நாங்கள் என்ன செய்யிறது? இப்ப இது ஊராய் இருத்தால் மாலதி இவ்வளவு துணிவாய் தாய் தகப்பனோட கதைக்க முடியுமா? இது கனடா எங்களுக்கு கதைக்கிறதுக்கு ஒரு உரிமையும் இல்லையாம், அதவிட போன சனிக்கிழமை ஹரியையும் கூட்டிக்கெண்டு வீட்டிற்கெல்லே வந்தவா.”

“என்னக்கா சொல்லுறியள்..? பெடியனை வீட்டை கூட்டிக் கொண்டு வந்திட்டாளே?”

“ஓம், வீட்டை கூட்டிக் கொண்டு வந்தநேரம் நல்லகாலம் மூத்தவன் மோகனும்; ஒட்டாவாவில இருந்து வந்து இருந்தவன். மோகனுக்கும் முதல்ல சாடையாக தெரியும் போல இருக்கு. அவனும் எவ்வளவே புத்திமதி சொல்லிப் பாத்திட்டான். அவள் கேக்கிறாள் இல்லை.”

“இந்தக் காலத்துப் பிள்ளையள் இப்படித்தானக்கா… இஞ்சை வந்து அதுகள் படுகிறபாடு.. வீட்டுக்கு வீடு வாசற்படி..!” கணேசு ஆறுதல் சொல்லிப் பார்த்தான்.

“தகப்பனும் இதைக் கேள்விப்பட்டதிலை இருந்து ஒரேயடியாய் உடைஞ்சு போயிட்டார். அவமானம் என்று சொல்லி அறைக்கு வெளியாலை வாறாரில்லை” என்று கணேசிடம் செல்லி மரகதம் அழத்தொடங்கினாள்.

“நாங்கள் இலங்கையிலை எவ்வளவு சந்தோசமாக இருந்தநாங்கள். இவரும் அரசாங்க உத்தியோகம்தானே, நல்ல பதவியில இருந்தவர். தெகிவலையில வீடும் வேண்டிட்டம். யாழ்பாணத்தில இருந்து எங்கட வீட்டிற்கு எவ்வளவு பேர் வந்து போவினம் தெரியுமே? எங்கட வீடு எப்பவும் கலகலப்பாய்தான் இருக்கும். இந்த இனக்கலவரத்தால எல்லாம் அழிஞ்சு போச்சு. அதாலதானே நாங்கள் சொந்த மண்ணைவிட்டு புலம் பெயர்ந்து கனடா வந்தநாங்கள். இங்க வந்து நானும் இவரும் எவ்வளவு கஷ்;டப்பட்டு பிள்ளையளை வளர்த்தநாங்கள். இப்பதான் பிள்ளையள் வளர்ந்து நல்ல வேலையும் செய்யினம் என்று நிம்மதியாய் இருப்பமெண்டு பாத்தால் இப்ப இவள் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுறாள்” என்று தம்பியிடம் அழுதாள் மரகதம்.

“அக்கா இப்ப அழுது என்ன செய்யிறது அவசரப் படவேண்டாம். இன்னும் கெஞ்ச நாளைக்கு விட்டுப்பிடியுங்கோ. அவள் பழகிறமாதிரி ஹிரியுடன் பழகட்டும். கனடாவிலை இருக்கிற அநேகமான பிள்ளையள் தாங்களே தங்களுடைய வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்ள விரும்புகினம். வேறு இனத்தவர்கள் எல்லாரும் கூடாதவர்கள் என்று இல்லை. எங்கட பிள்ளையள் இரண்டு கலாசாரத்திற்கும் இடையிலை அகப்பட்டுத் தத்தளிக்கிறதால எங்களுக்கும் அவர்களின் கஷ்டம் புரியிறது இல்ல. மாலதி ஒருவரையறைக்கு உட்பட்டு ஹிரியுடன் பழகினால் அதிலை பிழையில்லை” என்று ஆறுதல் வார்த்தை சொல்லி விடை பெற்று சென்றான் கணேசு.

தம்பி கணேசு வந்து விஷயத்தைச் சொல்லிவிட்டுப்போக, ஊர் எல்லாம் தெரிஞ்சு போச்சே என்று மரகதத்திற்கு நெஞ்சு படபடத்தது. உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியுமே? அதுவும் இந்த மண்ணில..?

மாலதி வீட்டிட்டுக்கு வரும் வரைக்கும் மரகதத்திற்கு நித்திரை வரவில்லை.

திரைச் சீலையை விலக்கி வெளியில் எட்டிப் பார்த்தாள். வீடுகள் மரங்கள் வீதிகள் எல்லாம் பனிமூடி இருந்தது. இவ்வளவு பனிமழையைப் பொழிந்துவிட்டு வானம் ஒன்றும் நடக்காதது போலத்; தெளிவாக இருந்தது. ஒன்று இரண்டு கார்கள் மாத்திரம் வீதியால் பேய்க் கெண்டு இருந்தன. மரகதமும் ஒரு முடிவுக்கு வந்து இருந்தாள். மாலதியின் திருமணம் அவவின் விருப்பப்படியே நடக்கட்டும். பிள்ளைகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கெடுக்காமல் இனம் சனம் என்ன சொல்லும் என்று மற்றவர்களுக்காக மகளின் மனத்தை கஷ்டப்படுத்த அவள் விரும்பவில்லை.

மாலதி பத்தரை மணியளவில் வீட்டிற்கு வந்தாள். அவளின் முகத்தில் ஒரு வாட்டம் தெரிந்தது. களைத்துப் போயிருக்கலாம் என்று நினைத்தாள்.

“மாலதி சாப்பாட்டை சூடாக்கட்டா.” என்றாள் மரகதம்.

“எனக்குப் பசிக்கேல்லை, கொஞ்சமாக தாங்கோ அம்மா.”

தாயாரின் வற்புறுத்தலுக்காக சாப்பிட இருந்த மாலதி சாப்பாட்டில் விருப்பம் இல்லாமல் அளைந்து கெண்டு இருந்தாள்.

“மாலதி என்ன நடந்தது நீ ஏதே குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது”. என்றாள் மரகதம்.

“இல்லை அம்மா ஹரி நல்லவன்தான், ஆனால் சிலவேளைகளில் அவனுடைய போக்கு எனக்கு பிடிக்கவில்லை. அவன் மற்றைய பெண்களுடனும் மிகவும் அன்னியோன்யமாக பழகுகிறான். அதைத்தான் என்னால பொறுக்க முடியாமல் இருக்கு.”

அதற்கு தாயார் சென்னார், “பிள்ளை இதை பெரிசுபடுத்தாத, ஹரியிண்ட கலாச்சாரம் அப்படி. நீ சமாளிச்சுத்தான் போகவேணும்.”

“இல்லையம்மா, இண்டைக்கு நான் ஹரியின்ர வீட்ட போனனான்.”

அதைக்கேட்ட மரகதத்திற்கு திக்கென்டது. என்றாலும் மகளிடம் காட்டிக்கௌளாமல்,

“அங்க என்ன நடந்தது” என்று கேட்டாள்.

“அவன் என்னட்ட தான் வேண்டிய பதக்கங்களையும், விளையாட்டில வேண்டிய கிண்ணங்களையும் காட்டி தன்னைப் பற்றிதான் ஒரே புழுகு. என்னப்பற்றி ஒன்றுமே கேட்கயில்லை.

திரும்பி வரயிக்கைகூட ‘பாய்’ சொல்லிப் போட்டு கதவைப் படார் என்று சாத்திக்கொண்டு போயிட்டான். ‘எப்படி வந்தாய்? வீட்டை கொண்டு வந்து விட்டுவிடவா?’ என்றுகூடக் கேட்கயில்லையம்மா!”

“சிலபேர் இப்படித்தான் பிள்ளை, சுயநலமாய் தங்களைப் பற்றி மட்டுமே நினைச்சுக் கொண்டிருப்பாங்கள். அவைகளைக் குறைசொல்ல முடியாது! அவையள் வளர்ந்த விதம் அப்படி!”

“அப்படிப் பட்டவையோட வாழமுடியும் எண்டு நினைக்கிறியாம்மா?”

தாயிடம் புத்திமதி கேட்கிற அளவிற்கு ஏதாவது நடந்திருக்குமோ? மரகதம் பதில் ஒன்றும் சொல்லாமல் மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா இனி நானும் ஹரியும் நல்ல நண்பர்கள்! எங்களுக்குள்ளே உள்ள உறவு அவ்வளவுதான்!” என்று செல்லிவிட்டு கைகழுவிக் கொண்டு மாடியில் உள்ள தனது அறையை நோக்கி மாடிப்படிகளில் ஏறினாள்.

“அவ்வளவுதான் என்றால்..?” எதையோ அறிந்து கொள்ளும் ஆவலில் கீழே இருந்தபடி மரகதம் குரல் கொடுத்தாள்.

“நோமோர் டேட்டிங்!” நின்று நிதானமாகப் பதில் சொன்னாள் மாலதி.

“அம்மாடி!” என்று அதற்காகவே காத்திருந்ததுபோல நிம்மதிப் பெருமூச்சு விட்ட மரகதம், ஏதோ ஒரு இனம்புரியாத சுமையைத் தற்காலிகமாக இறக்கி வைத்த ஒரு தாயின் சுகத்தை அந்தக் கணத்தில் அனுபவித்தாள்.

நன்றி: உதயன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *