“காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது”
“இந்த வயசிளயும் இந்தக் கிழவிக்கு இதெல்லாம் தேவையா ?
கமலா பரிமளத்துக்கு விளங்கியும் விளங்காமல் இருக்கும் படியாக அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை.
கமலா பரிமளத்தின் மகள்தான்.
அந்தக்காலத்தில் அம்பிளாந்துறையில் இருந்த பணக்காரக் குடும்பங்களில் ஒன்றுதான் பரிமளத்தின் குடும்பம்.
பல வியாபாரம் செய்திருந்தாலும் அதிகம் உழைத்தது நெல் வியாபாரத்தில்தான். சொந்தமா ரெண்டு லொறி வைத்திருந்தார். இந்தப் பாழாய்ப்போன யுத்தம் வந்துதான் எல்லாத்தையும் மாற்றிப்போட்டது.
1986 ம் வருசம் , ஒருநாள் ரெண்டு லொறியிலயும் நெல் ஏற்றிக்கொன்டு போன பரிமளத்தின் புருசன் திரும்பி வரவேயில்லை.ரெண்டு லொறியும் கூடத் திரும்பி வரவில்லை.
பரிமளம் தேடாத இடமில்லை. எல்லா ஆர்மிக் கேம்பின் முன்னுக்கும் போய்த் தவம் இருப்பது போலக் காத்துக் கிடப்பாள்.
புருசன் கானாமல்ப் போகும் போது பரிமளத்தின் வயது 25 , அவள் புருசனின் வயசு 31. இப்போ பரிமளத்து 55 வயசாச்சு ,புருசனுக்கு 61 வயசு.
காணாமல் போன இந்த 30 வருசத்தில எத்தனையோ விசாரணைக் கமிஷன் வந்திருந்தது. ஒன்று விடாமல் எல்லா விசாரணைக் கமிஷனுக்கும் போய் “என்ட புருசனை கண்டுபிடிச்சுத் தாங்க?” என்று கெஞ்சுவாள்.
காணாமல்ப் போனோரைக் கன்டு பிடிக்கவென தொடங்கின ஆனைக்குழுக்ககளைக் கண்டு பிடிக்கவே இன்னொரு ஆணைக்குழு அமைக்க வேண்டும்.
போன மாசம் கூட மைத்திரி உருவாக்கியிருக்கும் விசாரணைக் கமிசனில் பதிவு செய்யப்போயிருந்தாள்.
” உயிரோடு இருந்தாலே உன்ட புருசனுக்குச் சாகின்ற வயசுதானே?”
என்ற கேலியுடன் தான் பரிமளத்தின் புருசனின் பெயரைப் பதிவு செய்தார்கள்.
கமலம் பரிமளத்தின் ஒரே மகள். கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் பிறந்தவள். கமலத்துக்கு ரெண்டு வயசா இருக்கும்போதுதான்
அப்பா காணாமல்ப் போயிருந்தார்.
பரிமளம் புருசன் காணாமல்ப் போன பின் தன் இளமைக் காலம் முழுவதையும் புருசனைத் தேடுவதிலயும் , கமலத்தை வளர்ப்பதிலயும்தான் செலவழிச்சாள்.
சொந்தக்காரங்க வந்து இன்னொரு கல்யானம் என்று பேசத் தொடங்கும்போதே “என்ட புருசன் இன்னும் உசுரோடதான் இருக்கார், என்னத் தேடி ஒரு நாள் கட்டாயம் வருவார்” என சத்தமிட்டே வாயை அடைத்து விடுவாள்.
இந்த முப்பது வருசத்தில ஒவ்வொரு சொத்தா விற்று கடைசியில கமலத்தின்ட கல்யாணத்துக்காகத்தான் அம்பிளாந்துறையில் இருந்த வீடு வளவையும் விற்றிருந்தாள்.
கமலம் கல்யாணம் முடிச்சு அமிர்தகழியில் தன் புருசனோடு செட்டில் ஆகியிருக்கிறாள். கமலம் வேலை எதுவும் செய்யவில்லை.
புருசன் அமிர்தகழி மகாவித்தியாலயத்தில் டீச்சரா வேலை செய்கிறான்.
கமலத்துக்கு ரெண்டு பிள்ளைகள்.மூத்தது மகள். ரெண்டாவது பையன்.
பையனில் தன்ட புருசனின் சாயல் அடிப்பதா அடிக்கடி சொல்லுவாள் பரிமளம்.
பரிமளம் இப்போது கமலத்தின்ட வீட்டிலதான் இருக்கிறாள்.
பரிமளத்தின் கழுத்தில புருசன் கட்டின 21 பவுண் தாலி இப்பவும் இருக்குது. அந்தக்காலத்தில பரிமளத்துக்கு அவள் புருசன் 21 பவுணில தாலி கட்டின விசயம் ஊரெல்லாம் பேமஸ்.
என்ட புருசன் சாகல உயிரோடுதான் இருக்கான் நான் ஏன் தாலியைக் கழட்ட வேணும் என்று பிடிவாதமாகவே இருந்துவிட்டாள்.
இதுவரை முப்பது வருசத்தில ஒருநாள் கூட அவள் தாலியைக் கழட்டியதில்லை.
கமலமும் பெருசா வசதியாய் ஒன்றுமில்லை. புருசனுக்கு வாற டீச்சர் சம்பளம் மாசச் செலவுக்கே சரியாப் போகும். பிள்ளைகளுக்கு புது உடுப்பு எடுக்கிறது என்றாலே எங்கேயாவது கடன்பட்டுத்தான் வாங்கவேண்டிய நிலை.
எத்தனையோ கஷ்டம் வந்த போதெல்லாம் பரிமளத்தின் தாலிக்கொடியை அடகு வைக்க கேட்டிருக்கிறாள் ,
ம்ம்ம்ம்….
“என் உசுரு போனதுக்குப் பிறகு வேண்டுமென்றால் என்டா தாலிக் கொடியை எடு “ என்று பிடிவாதமா இருந்துவிடுவாள் பரிமளம்.
இந்தக்கிழவி செத்தும் தொலைக்குது இல்லையே என்றுகூடச் சிலசமயம் சொல்லிப் பேசி இருக்கிறாள் கமலம்.
பெத்த பிள்ளைதானே பேசுது பேசட்டும் என்று மனசைத் தேற்றிக்கொள்வாள் பரிமளம்.
அன்று பின்னேரமாகியும் வீட்டுக்கு யாரும் வரவில்லையே என்று பதட்டமாக இருந்தது பரிமளத்துக்கு.
“பிள்ளைகளை கூட்டிவரவென்று பள்ளிக்கு மத்தியாணம் போன கமலத்தையும் காணல, பிள்ளைகளையும் காணலயே? ”
விசாரித்துப் பார்ப்பதற்கு கமலத்திடம் கைத்தொலைபேசியும் இல்லை.
பதட்டத்துடன் வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
இரவு ஏழு மணியாகியிருந்தது கமலமும் , மகளும் மட்டும் களைத்துப்போய் வந்தார்கள்.
“எங்க பிள்ள அவரும் மகனும் ?”
“மகன் பள்ளிக்கூடத்தில மயங்கி விழுந்ததா ஆசுபத்திரியில் சேர்த்திருக்காங்க அம்மா. அவரும் மகன்கூட ஆசுபத்திரியிலதான் இருக்கிறார்”
“என்ன பிள்ள சொல்லுறா அவனுக்கு என்னாச்சு ,இப்ப எப்படி இருக்கிறான்.”
“இதயத்தில ஏதோ பிரச்சினையாம். ஒபரேசன் பண்ணினா சரிவருமாம். அரசாங்க ஆசுபத்திரியில ஒபரேசன் பண்ணினாலும் ஒபரேசனுக்குத் தேவையான சில மருந்துகளை நாமதான் வாங்கிக் கொடுக்கணுமாம். அதுக்கு ஒரு அஞ்சு லட்சமாவது வேணுமாம்.
பசுபதி ஜயாட்ட பத்து வட்டிக்கு கேட்டிருக்கன். இந்த வீட்டை அடகு வைச்சா தருவதாச் சொல்லி இருக்காரு” கமலத்தின் குரல் நடுங்கியது.
உடுப்பு மாற்ற உள்ளே போன கமலம் வெளியே வந்தாள்.
ஹோலில் ……
பரிமளம் தன்ட புருசனின் போட்டோவுக்கு முன் கும்பிட்டவாறே நின்று கொண்டிருந்தாள். அவள் வாய் முணுமுணுத்தது.
“என்னங்க நீங்க சேர்த்து வச்ச சொத்து எல்லாத்தையும் விற்றது நம்மட பிள்ளைக்காகத்தான் .கடைசியா ஒங்கட ஞாபகமா என்னிட்ட இருந்தது இந்தத் தாலிக்கொடி மட்டும் தான். இது என்ட கழுத்தில இருக்கும்போது நீங்களே எனக்குப் பக்கத்தில இருக்கிற மாதிரி இருக்கும். நீங்க உயிரோட இருக்கிறதா எனக்கு நம்பிக்கை தருவதே இந்தத் தாலிதான்.
இப்போ நம்ம பேரப்பிள்ளைக்காக இதையும் விற்கப்போகின்றேன் என்னை மன்னிச்சுக் கொள்ளுங்க”