கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 5,264 
 
 

“வடிவேலு ! உனக்குப் பொம்பளைப் புள்ள பொறந்திருக்காம்…! சேதி வந்திருக்கு…”தாய் வள்ளிக்கண்ணு கைபேசியை அணைத்து விட்டு வந்து மகிழ்ச்சியாய்ச் சொல்ல… மூன்று சக்கர வண்டியில் அமர்ந்து ராட்டை உருட்டிக்கொண்டிருந்த அவனுக்குத் திக்கென்றது.

“இரு. நான் போய் பார்த்துட்டு வர்றேன் ! “அவள் இவன் பதிலை எதிர்பாராமல் கதவைச் சாத்திப் பூட்டிக்கொண்டு புறப்பட்டாள்.

இவனுக்கும் மனசுக்குள் பயம் குறுகுறுப்பு . இருக்கப் பிடிக்காமல் யோசனையுடன் மருத்துவமனை நோக்கி வண்டியை விட்டான்.

பரபரப்பு, திகில். கூடவே குழந்தை எப்படி இருக்கிறதோ..? ! கவலை. வேகமாக வண்டியை விட்டான்.

இது வேண்டாமென்று சொன்ன பிள்ளை. அவ்வளவு ஏன்…? தான் மாற்றுத்திறனாளி என்பதால் திருமணமே வேண்டாமென்றுதான் மறுத்தான்.

தாய் வள்ளிக்கண்ணுதான் விடாப்பிடியாக வற்புறுத்தினாள்.

“நீ இப்படியே ஒண்டியா, ஓரியா இருக்கப்படாதுடா. எனக்குப் பின்னால உனக்குத் துணை வேணும். கால்வலி, தலைவலின்னு படுத்தா கவனிக்க ஆள் வேணும்.”சொன்னாள்.

இவன் அசையவில்லை.

“வடிவேலு ! இறந்து பிறக்கும் குழந்தையைக் கூட மண்ணில் புதைக்கும்போது அது தரைக்கு வந்ததுக்கு அடையாளமாய் கருவை முள்ளால காத்து குத்தி, மூக்கு குத்தி புதைப்பாங்க. அதுபோல மனுசனா பொறந்த நீயும் கன்னி கழியனும்…”

“அம்மா ! எனக்கு யார் பொண்ணு கொடுப்பா..? எவள் கட்டிப்பாள்..? “கேட்டு தன் சூம்பிக் கிடக்கும் கால்களைப் பார்த்து கண்ணீர் விட்டான்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ பொண்டாட்டியை வச்சி குடும்பம் நடத்தி, புள்ளைப் பெத்துக்குற தைரியம் இருந்தால் சொல்லு… எல்லா வேலைகளையும் நான் முடிக்கிறேன் ! “சொன்னாள்.

“அதைப்பத்திப் பிரச்சனை இல்லேம்மா. எனக்கு பொண்ணு வந்து ஒழுங்கா குடித்தனம் நடத்துவாளான்னுதான் கவலை ! “சொன்னான்.

“அந்தக் கவலையை விடு. உனக்கு கலியாணம் முடிக்கிறேன் ! “சொல்லி காரியத்தில் இறங்கினாள்.

ஒரே மாதத்தில் அழகே உருவான மாதவி கழுத்தில் தாலி கட்ட வைத்து விட்டாள்.

“நமக்குக் குழந்தை வேணாம் மாதவி !”- முதலிரவிலேயே மனைவியிடம் முறையிட்டான் .

“ஏன்…??…”அவள் ஆழமாகப் பார்த்தாள்.

“கால்…! “சொல்லி தன் கால்களைப் பார்த்தான்.

“அதுக்கென்ன..? “அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் சர்வசாதாரணமாகக் கேட்டாள்.

“இப்படிப் பிறந்தால்…?”

“அப்படியெல்லாம் ஒன்னும் பொறக்காது.”

“எனக்குப் பயமா இருக்கு. !”

“பயம் வேணாம். அப்படிப் பிறந்தாலும் எனக்குக் கவலை இல்லே. வளர்ப்பேன்.”

“நீ வளர்க்கலாம். ஆனா அதன் எதிர்காலம். என்னை மாதிரி கஷ்டப்படும். அதன் வலி எனக்குத்தான் தெரியும்.”

“உங்க அம்மாவுக்கு உங்களை வளர்க்கத் தெரியலை. ஐயோ ! குழந்தை இப்படி ஆச்சேன்னு கவலைப் பட்டு வளர்க்காமல்…..’ இதைப்பற்றியெல்லாம் கவலைப் படாதே ! உனக்குச் சிறப்பான எதிர்காலம் இருக்கு. நிறைய சலுகைகள் இருக்கு. வேலைகள் கிடைக்கும். உனக்கும் பெண் கிடப்பாள் . நல்லா வாழலாம்…! ‘ ன்னு தைரியம் சொல்லி வளர்த்திருந்தா நீங்க இப்படியெல்லாம் யோசிக்க மாட்டீங்க, நினைக்க மாட்டீங்க. நான் இப்படி வளர்ப்பேன். ! “சொன்னாள்.

‘ இவள் சொல்வது உண்மையோ..?! ‘ -மெளனமாக இருந்தான்.

“இதோ பாருங்க. இயற்கையிலேயே குழந்தை இல்லமால் போனால் அது இறைவன் செயல்ன்னு பொறுப்போம். வந்தால்….. வரவுன்னு நினைச்சி சந்தோசப்படுங்க. கவலைப் படாதீங்க. நான் இருக்கேன். “சொன்னாள்.

இதற்கு மேல் மறுத்துப் பேச வழி…?

மாதவி திருமணத்திற்கு முன் வீட்டில் குளித்ததுதான். தாலிகட்டி முடித்த முதல் மாதமே குளிக்கவில்லை.!!

வடிவேலைப் பெற்ற தாயும் , இவளும் சந்தோசப்பட்டார்கள்.

முறையாய் மருந்து, மாத்திரைகள் தடுப்பூசிகள் போட்டு…. இதோ குழந்தை !

அதுவும் பெண் குழந்தை ! பெண்ணே சுமையாகும் இருக்கும் காலத்தில்….ஊனமாகப் பிறந்திருந்தால்…?! – நினைத்துப் பார்க்கவே வடிவேலுவிற்கு நெஞ்சு நடுங்கியது.

என்னதான் முறையாக மருத்துவம் பார்த்துப் பெற்றாலும் குழந்தை இயற்கையிலேயே இப்படிப் பிறந்திருந்தால்…..?

வடிவேலு மருத்துவமனை வளாகத்தில் வண்டியை விட்டு விட்டு வேகமாகத் தவழ்ந்து சென்றான்.

எல்லோரும் மண்டி போட்டு வரும் இவனுக்கு வழிவிட்டு பாவமாக ஒரு மாதிரி பார்த்துச் சென்றார்கள்.

நான்கைந்து அறைகள் தாண்டிய….

“தம்பீ…! இதோ இருக்கா. உன் பொண்ணு…”

வள்ளிக்கண்ணு எதிர் அறைக்குள்ளிருந்து சுருட்டிய துணிக்குள் குழந்தையோடு ஓடி வந்தாள்.

நின்று நிமிர்ந்தவனிடம் குனிந்து காட்டினாள்.

துணியைப் பிரித்து வடிவேலு முதலில் பார்த்தது கால்கள்.அடுத்து கைகள். எல்லாம் எந்தவித குறையுமில்லாமல் நன்றாக இருந்தது.

மனசுக்குள் குப்பென்று சந்தோசம் . காதுகளை அடைத்தது.

மகளை வாங்கி வாரி முத்தமிட்ட வடிவேலுவின் கண்கள் மகிழ்ச்சியில் பணித்தது. அப்படியே மனைவி மாதவியை நன்றியோடு பார்த்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *