பயனுற வேண்டும்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 11,644 
 

ஒரு நாள் கூட கதிரேசன் இரவு வீட்டுக்கு வந்ததும் அதிகாலை புறப்பட்டுப் போனதும் அவளுக்குத் தெரியாது. அதுதான் அம்பது லட்சம்.

“”என்னம்மா விக்கித்து நிக்கற… போய் கம்ப்யூட்டர ஆன் பண்ணு.. மணி ஆயிட்டு..”

மலர்விழி, வேகமாக கம்ப்யூட்டரை ஆன் செய்தாள்.

குறிப்பிட்ட இணையதளத்திற்குள் நுழைந்தாள். இன்னும் ஒரு சில நிமிடங்களே இருக்க.. கண்களை மூடி மனதிற்குள் அம்மாவை கொண்டு வந்தாள். கண்களை திறந்தபோது அப்பா ஹாலில் அம்மா படத்திற்கு எதிரே குளித்து முடித்து ஈர உடையோடு அமர்ந்திருப்பதை உணர்ந்தாள். உடம்பு நடுங்கியது.

பயனுற வேண்டும்மெல்ல மெல்ல தனது பெயரையும் பதிவு எண்ணையும் பதிந்தாள்.

காத்திருந்தாள்.

விநாடிகள் கரைய…

சட்டென திரையில் அவளது மதிப்பெண்கள் தோன்றியது. படித்தாள். மயக்கம் வந்தது அவளுக்கு.

அவளே எதிர்பார்க்காத மதிப்பெண்கள்.

இரண்டு பாடங்களில் இருநூறு. ஒன்றில் ஒரு மதிப்பெண் குறைவு, ஆனந்தத்தில் அலறினாள்.

“”அப்பா…”

மனைவி படத்தின் முன்னே அமர்ந்திருந்த கதிரேசன் கண் திறந்தான்.

“”ஜெயிச்சிட்டேம்ப்பா..”

கதிரேசன் எழுந்து மெல்ல நடந்து வந்து கணிணி முன் அமர்ந்து மதிப்பெண் பட்டியலைப் பார்த்தான்.

மகளை அப்படியே அள்ளி கட்டிக் கொண்டான்.

ஆனந்தத்தின் உச்சியில் தந்தையும் மகளும் வாய் விட்டு அழுதார்கள்.

“”பொறப்படு… பொறப்படுடா தங்கம்…”

“”எங்கப்பா?…”

“”கெளம்பு சொல்றேன்…”

மலர்ழி பரபரவென டிரெஸ் மாற்றி புறப்பட்டாள்.

கதிரேசன் வீட்டைப் பூட்டினான். பைக்கை துடைத்தான்.

“”பின்னால உக்காருடா…”

மலர்விழி ஏறிக் கொள்ள.. பைக் சாலையில் பறந்தது. ஒரு கையை பின்னால் செலுத்தி மகளை கட்டிக் கொண்டு ஒற்றைக் கையால் பைக் ஓட்டினான். அந்த பாசத்தை

நெகிழ்ச்சியை தடுக்க முடியாமல் மலர்விழி திண்டாடினாள். வழியில் கண்களில்படும் தெரிந்தவர் அறிந்தவர் முன்னே பைக்கை நிறுத்தினான், மகளை

அறிமுகப்படுத்தினான். மார்க்கைச் சொன்னான்.

மார்கெட் இருக்கும் ஏரியாவுக்குள் நுழைந்தான்.

கையைப் பிடித்து மகளை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாகச் சென்றான்.

“”பரமேஷ் என் பொண்ணு டாக்டருடா… மார்க் சொல்லுடா ராசாத்தி…”

மலர்விழி மதிப்பெண் சொன்னாள்.

“”ராஜவேலு என் பொண்ணு சாதிச்சிட்டா… எழுதப் படிக்க தெரியாதவன் நீ. உன் பொண்ணு எப்படி டாக்டர் ஆவான்னு கேட்டில்ல.. ஆகிட்டா…”

அந்த ராஜவேலு முகம் மாறி, “”வெளயாட்டுக்குச் சொன்னதுப்பா அது.. நீ தப்பா நெனச்சுக்காதம்மா…”

ஆவேசமாக மார்கெட்டைச் சுற்றிச் சுற்றி வந்தான்.

“”அப்பா…”

மலர்விழி தயக்கமாக அப்பாவை அழைத்தாள்.

“”என்னடா..?”

“”நீங்க ரொம்ப அலட்ற மாதிரி இருக்குப்பா…”

“”என்னால சந்தோஷம் தாங்க முடியல”

“”அது சரிதாம்ப்பா. ஆனா இங்க இருக்கறவங்கள்ல யார் பொண்ணாச்சும் மார்க் கம்மியா எடுத்து அதனால அவங்க வருத்தத்துல இருந்தா உங்களோட இந்த சந்தோஷம்

அவங்கள காயப்படுத்தும்ப்பா…”

கதிரேசன் சட்டென நிதானமானான். மகளை உற்றுப் பார்த்தான்.

யோசித்தான். “”அதுவும் சரிதாம்மா…” என்றவன், “”அம்மாடி தங்கம்… இதுதான் நம்ம கடை”

மலர்விழி போர்டு பார்த்தாள்.

அம்மாவின் படத்துடன், “அம்சவள்ளி காய்கறி வியாபாரம்’.

“”நீ கடைக்கே வந்ததில்ல. இதுதான் அப்பாவோட சீட்டு. கால் வலிக்கறப்ப உக்காந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துப்பேன். மத்தபடி கையில தராசோட அங்கதான் நிப்பேன்.

தினம் தராச கையில பிடிச்சிகிட்டு நிக்கறப்ப மனசுக்குள்ள ஒரு கலக்கம் இருக்கும். இப்ப அது இல்ல. உன் அப்பா இன்னைக்கு சந்தோஷமா வியாபாரம் பார்க்கப் போறேன்..

ஏய் மணி ஓடிப்போயி மூணு பேருக்கும் டிபன் வாங்கி வா. அப்படியே அஞ்சு கிலோ லட்டு வாங்கிட்டு வாடா..”

மணி, பணம் வாங்கிக் கொண்டு ஓடினான்.

மலர்விழி அப்பா அமர்ந்து பணம் வாங்கும் அந்த சின்ன இடத்தில் அமர்ந்தாள். சிறிய இடம். கைகளும் கால்களும் கூடையில் இடித்தது. அடைத்துக் கொண்டு காய்கறிகள்.

கதிரேசன் சீட் என்று கூறியது அழுக்குப் படிந்த ஒரு மரப் பலகை. கீழே மண்ணும் தூசியுமாக இருந்தது. காய்கறிகளின் கலவையான நெடியோடு கீழே கிடந்த அழுகிய

காய்கறிகளின் நாற்றம் நாசியில் அறைந்தது. கரக் முரக் என்று ஒரு பழைய டேபிள் பேன் ஓடிக் கொண்டிருந்தது. ஆனாலும் வியர்த்தது.

தூக்கிக் கட்டிய வேட்டியோடு தராசு பிடித்தபடி நின்றிருந்த அப்பாவைப் பார்த்தாள். மற்ற கடைகளை விட கூட்டம் அதிகம் இருந்தது.

காய்கறி வாங்க வருபவர்களிடம் மகளை அறிமுகப்படுத்தினான். மார்க் சொல்லி ஆனந்தப்பட்டான். அரைகிலோ காய்கறிக்கு கால்கிலோ காய்கறி அதிகமாக விழுந்தது.

மார்கெட் வாசலில் கார் வந்து நிற்பதைப் பார்த்தான்.

“”ஒரு நிமிஷம் இருடா.. கல்யாண ஆர்டர் போலத் தெரியுது…”

வேட்டியை தூக்கிக் கட்டிக் கொண்டு ஓடினான்.

மாலைப் பேப்பர் கதிரேசனுக்கு இன்னுமொரு ஆனந்தத்தை அழைத்து வந்தது. மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற நால்வரில் மலர்விழியும் ஒருத்தி. அரசுப் பள்ளி

சாதனை என்று புகைப்படத்தோடு செய்தி வந்திருந்தது.

கதிரேசன் ஆனந்தத்தின் உச்சிக்குச் சென்றான். கடையில் இருந்த அத்தனை பேப்பர்களையும் வாங்கி வந்தான். வீட்டுக்கு மலர்விழியை வாழ்த்த வந்தவர்களுக்கெல்லாம்

பேப்பர் கொடுத்தான். மலர்விழியின் புகைப்படத்தைக் காட்டினான். லட்டு கொடுத்தான். அவர்கள் குடியிருந்தது குறுகலான தெரு. நடுத்தர மற்றும் ஏழை மக்கள்

வசித்தார்கள். தெருவே கூடி வந்து வீட்டு வாசலில் நின்றது. அருகில் இருக்கும் ப்ளஸ் ஒன் மாணவிகள் பெற்றோர்களோடு வந்திருந்தார்கள். மலர்விழியின்

மதிப்பெண்களை கேட்டு கேட்டு பிரமித்தார்கள். சிலர் பெருமைப்பட்டார்கள். பலர் பெறாமைப்பட்டார்கள்.

மலர்விழி அந்த மாலைப் பேப்பரில் தன்னைப் பற்றி வந்திருந்த செய்தியோடு வெளியாகி இருந்த இன்னொரு செய்தியை அப்பாவிடம் காட்டினாள்.

கதிரேசன் மலர்விழியைப் பார்த்தான்.

“”என்ன செய்திடா அது.. படிச்சுக் காட்டு…”

மலர்விழி படித்தாள்.

மருத்துவக் கல்லூரி வாசலில் டாக்டர் கோட் அணிந்து நின்ற மலர்விழியைக் கதிரேசன் கண்கள் கலங்க பார்த்தான். மலர்விழி கல்லூரி முகப்பில், கம்பீரமாய் பீடத்தில் வீற்றிருந்த பாரதியின் சிலையிலிருந்து கண்களை மீட்டு அப்பாவைப் பார்த்தாள்.

ஆனந்தத்தில் தொண்டைக் கட்டிக்கொண்டு கதிரேசனுக்கு பேச்சு வர மறுத்தது. தன்னுடைய பத்து வருட கனவு. ஏக்கம் கை கூடி வந்ததில் வானத்தில் பறப்பது போல உணர்ந்தான். இனி தன் வாழ்வில் இதை விட மகிழ்ச்சியான தருணம் ஏதும் வரப்போவதில்லை என்று நினைத்தான். மனசு பூரித்து, சந்தோஷத்தில் வழிந்தது.

“”அப்பா பத்து மணிக்கு கிளாஸக்குப் போகணும். முதல் நாள் கிளாஸ். லேட்டா போகக்கூடாது. யாருக்காக வெயிட் பண்றீங்க…”

“”கொஞ்சம் இருடா…”

கதிரேசன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்தப் பெண் தனது அம்மாவோடு வந்தாள்.

“”மலர், இது லெட்சுமி. நீ பேப்பர்ல காட்டினியே. நான் டாக்டருக்குப் படிக்க வேண்டும். ஒரு மதிப்பெண்ணில் தகுதியை இழந்த, தந்தை இல்லாத ஏழை மாணவியின் கண்ணீர்

பேட்டி. அந்தப் பொண்ணுடா… இது என் பொண்ணு மலர்விழி…”

இரண்டு பேரும் சிரித்து, கைகுலுக்கிக் கொண்டார்கள்.

அந்தப் பெண், “”ஆல் த பெஸ்ட்” என்றாள்.

“”நீங்க போங்கம்மா…”

அந்த அம்மா, கதிரேசனை பார்த்து கண்கள் கலங்கி கும்பிட்டாள். அந்தப் பெண் லெட்சுமி கதிரேசனின் காலை தொட்டு வணங்கி விட்டு நகர்ந்தது.

மலர்விழி அப்பாவை, புரியாமல் கேள்வியாகப் பார்த்தாள்.

கதிரேசன் சிரித்தான்.

“”உனக்கு மெரிட்ல சீட்டு கிடைச்சிட்டு. சேர்த்து வச்சிருந்த பணத்த என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன். அப்பதான் மார்கெட்டுக்கு என்னைத் தேடி அவங்க வந்தாங்க. கல்யாண ஆர்டர்ன்னு சொல்லிட்டுப் போனேனே… கல்யாண ஆர்டர் இல்ல அது. வந்தவங்க லயன்ஸ் கிளப் ஆளுங்க. நான் அப்பப்ப ரத்தம் கொடுப்பேன்.

ஒரு ஆபரேஷனுக்கு அவசரமா ப்ளட் தேவைப்படுது உடனே வரணும். அதான் நேர்ல வந்தோம்னாங்க. அவங்ககூட கார்ல போயி பளட் டொனேட் பண்ணினேன். அங்கதான், இந்தப் பொண்ணோட அம்மாவப் பார்த்தேன். அதே ஆபரேஷனுக்கு அவங்களும் ப்ளட் கொடுக்க வந்திருந்தாங்க. அவங்களும் என்னை மாதிரிதான். புருஷன் இல்லாத சூழ்நிலைல ரத்தம் கொடுக்கறதோட பல நல்ல காரியங்கள் பண்ணிகிட்டு இருக்கேன்னு சொன்னாங்க. உன்னை மாதிரியே அரசாங்க பள்ளியில ப்ளஸ் டூ படிச்ச அவங்க பொண்ணு ஒரு மார்க்ல மெடிகல் சீட் கிடைக்காத சூழ்நிலை இருக்குன்னு சொன்னாங்க. “”நான் பண்ணியிருக்கற உதவிக்கு கடவுள் என்னை கைவிட்டுட மாட்டான்னு கண்கலங்கினாங்க. அந்த பொண்ணு இடத்துல உன்னை வச்சுப் பார்த்தேன். நான் பணம் சேர்த்து வைக்காம இருந்து நீ ரெண்டொரு மார்க் கம்மியா எடுத்திருந்தா உன் நெலமையும் அதுதான.. அம்மா இருந்திருந்தா எப்படித் துடிச்சிருப்பா… நெனக்கவே தாங்கல எனக்கு. அந்த நேரத்துல கடவுளா இல்லாம ஒரு மனுஷனா அவங்களுக்கு உதவி பண்ணலாமான்னு யோசிச்சேன்”.

கலங்கிய கண்களை வேட்டி முனையால் துடைத்துக் கொண்டான்.

“”நியூஸ் பேப்பர்ல வந்திருந்த அவங்க பொண்ணோட பேட்டிய நீ படிச்சுக் காட்டின அந்த நிமிஷம் முடிவு பண்ணிட்டேன். காய்கறிகடைக்காரன் ஒரு ஏழைப் பொண்ண படிக்க வச்சான்ங்கறது எவ்வளவு பெரிய விஷயம். நான் பண்ணினது நல்ல காரியம்தானே… சொல்லுடா?”

மலர்விழி, பதில் பேச முடியாமல் நின்றிருந்தாள். இல்லை, திகைத்து திக்குமுக்காடியிருந்தாள். பல நேரங்களில் தனது அப்பா குறித்து அவளுக்குள் பெருமை ஏற்படும்.

இப்போது அது பல்கிப் பெருகி பன்மடங்காகி இருந்தது. மகள் தன்னை ஆச்சரியமாய் பார்ப்பதை உணர்ந்தவன், “”உதவி செய்யற மனசு சுயநலமா இருக்கக்கூடாது. சங்கிலியா விரியணும். நாலு பேர் தங்களுக்குக் கிடைக்கற சந்தோஷத்த நாப்பது பேரோட பகிர்ந்துக்கணும். நான் சம்பாதிச்ச ஐம்பது லட்சத்துக்கு என்னோட உழைப்புதான் மூலதனம். இந்த உடம்பு இருக்கற வரைக்கும் அந்த உழைப்பும் இருக்கும். இன்னும் நிறைய சம்பாதிப்பேன். உனக்கு சந்தோஷம்தானடா…”

மலர்விழி அப்பாவைப் பார்த்துச் சிரித்தாள்.

அழுக்கு வேட்டியும், கசங்கிய சட்டையுமாய் நின்றிருந்த அப்பா அவளுக்கு கடவுளாய், தேவதூதனாய், மகானாய், யோகியாய்த் தெரிந்தார்.

“”அம்மாடி தங்கம், கடைசிவரைக்கும் நீ இந்த அழுக்கு அப்பா, காய்கறிகடைக்காரன் பொண்ணா இருக்கணும். வைத்தியத்துக்கு வசதி இல்லாம செத்துப் போன அம்மா உன் நினைவுல இருக்கணும். டாக்டரா ரோட்டுல நீ நடந்து போறப்ப நாலு பேர் உன்னைப் பார்த்து கும்பிடணும்”தலையாட்டியபடி, கண்களை துடைத்துக் கொண்டு.. பாரதி சிலையை பார்த்தபடி மலர்விழி நடந்தாள்.

மனதுக்குள் பாரதி பிளிறினான்..

மண் பயனுற வேண்டும்

வானகம் இங்கு தென்பட வேண்டும்.

உண்மை நின்றிட வேண்டும்

ஓம்…ஓம்..ஓம்…

– மே 2015

Print Friendly, PDF & Email

1 thought on “பயனுற வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *