(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்தப் பயங்கரச் செய்தியைச் செவி மடுத்த ரூஹுல்லா பலத்த அதிர்ச்சியுடன் ஒரு கணம் செயலற்று நின்று விட்டான். அவன் மதி மருண்டதும் மூச்சுத் தடைப் பட்டது. ரத்த நாளங்கள் தெறித்து விடும் போல் இருந்தன. விழிகள் அக்கினிப் பிழம்பாக மாறின. தலை கிறு கிறுத்தது. அடிப்பட்ட வேங்கை போல் கறுவிக்கொண்டு, அடக்க முடியாத ஆவேசத்துடன் காசீம் ராவுத்தரின் மனைக்குள் பாய்ந்தான். திடுதிப்பென்று தன் முன்பு வந்து நின்ற அந்தக் கொடியோனைக் கண்டதும் காசீம் ராவுத்தரின் நெஞ்சைப் பீதி லபக்கென்று கவ்வியது.
“உங்கள் முடிவு என் காதில் விழுந்து விட்டது. உங்கள் அந்தஸ்துக்கு மருமகனாக வாய்ப்பதற்கு நான் அருகதையற்றவன் என்று எண்ணிவிட்டீர்கள். இருக்கட்டும், மாமூ” என்று ஆத்திரமும் ஆவேசமும் சுடர் விடும் சொற்களை ரூஹுல்லா உதிர்த்ததும் காசீம் ராவுத்தர் நடுங்கி விட்டார். ஏதோ சொல்லுவதற்கு வாயெடுத்தவர் நாகூர் மினாராபோல் சமைந்து நின்று விட்டார்.
தொடர்ந்தான் அந்த முரடன்; “ஒன்று மாத்திரம் நிச்சயம், மாமூ. பரீதாவுக்கு உரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை.”
திருதிருவென்று விழித்த காசீம் ராவுத்தர் . “அடே, நான் சொல்வதைக் கொஞ்சம் கேளப்பா” என்று தட்டுத் தடுமாறி விடுத்த வேண்டுகோளைத் துளிகூட லட்சியம் செய்யாது மேலும் பேசலானான் அந்த இளைஞன் :
“எத்தனை வருஷங்கள் செத்தொழிந்தாலும் சரி. உங்கள் பெண் என் சொத்து! வேறு யாரும் அதை அனுபவிக்க முடியாது.”
“நான் ஒன்றும் உயில் எழுதி உன் அம்மாவுக்கோ உனக்கோ கொடுக்கவில்லை, தெரியுமா?” என்று கதறினார் காசிம் ராவுத்தர் ஒரே எரிச்சலுடன்.
“அதையும் இப்போதே சொல்லிவிடப் போகிறேன். என் விருப்பத்திற்கு விரோதமாக மாத்திரம் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் இதே தெருவில் இரண்டு தலைகள் உருண்டோடும்.”
“அட பாவி” ஸ்தம்பித்து விட்டார் ராவுத்தர்.
“நான் சொன்னது நடந்தே தீரும்!” என்று ஆர்ப்பரித்துக்கொண்டு, பற்களிலும் விழிகளிலும் குரூரம் தெறிக்க எகிறிக் குதித்து இடுப்பில் செருகியிருந்த பிச்சு வாவை வெடுக்கென்று எடுத்துத் திண்ணை மீது ரூஹுல்லா சினத்துடன் வீசி எறிந்ததும், ராவுத்தரின் சப்த நாடிகளும் ‘கப்சிப்’ ஆகிவிட்டன. விழிகள் ரங்கராட்டினம் போல் சுழன்றன. வழுக்கைத் தலையில் பீரிட்டெழுந்த வேர்வை, கோடை வெள்ளம் போல் பிரவாகம் எடுத்தது.
நிலைப்படியைத் தாண்டிக் கூடத்தில் காலடி வைத்ததும் அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர வைத்து விட்டது. கண்ணீரும் கம்பலையுமாகக் கதவின் இடுக்கில் நின்று கொண்டிருந்த தன் இல்லக்கிழத்திமீது அவர் மங்கிய பார்வை விழுந்ததும் ராவுத்தரின் மனம் பட படத்தது.
“கேட்டாயா, ஆமினா? உன் மகள், அவளுக்கு வருகிறவன் இவர்கள் உயிர்களுக்கு உலை வைக்கப் போகிறானாம் அந்தச் சைத்தான் பயல்” என்று காசீம் ராவுத்தர் ஜீவனற்ற தொனியில் பேசியதும் அந்த அரிவையின் குவளைக் கண்கள் கலுழ்ந்தன.
“பரீதா பெண்ணாகப் பிறந்து இப்படி நம்மைக் கொடுமைப் படுத்துகிறாளே. அட அல்லாவே” என்று மனமொடிந்து பிலாக்கணமிட்ட ஆமினாவின் கண்களிலிருந்து மளமளவென்று மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் மல்கிற்று.
தேங்காய்க்கடைக் காசீம் ராவுத்தருக்கு அவருடைய சகோதரியின் மகன் ரூஹுல்லா மருமகனாக வாய்க்கப் போகிறான் என்று ஓயாது பேசிக்கொண்டிருந்த தம்பிக் கோட்டையில் உள்ள கிழத் ‘துப்பட்டிகள்’ நிகழப் போகும் அந்த நிக்காஹ்வின் நறுமணம் கமழும் புலவுச் சோற்றை உண்டு களிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தன. என்றைக்குப் பரீதா பேகம் குவா குவா என்ற குதலைக் கூப்பாட்டை இந்தக் குவலயத்தில் எழுப்பி னாளோ. அந்தச் சுபவேளையில் அம்மதலையின் செவி களிலே ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்ற தெய்விகச் சொற்களை உள்ளூர்ப் பள்ளிவாசல் மோதினார் வார்த்தபின், பேரீச்சம்பழத்தைப் பாலிலே தேய்த்து அக் குழவியின் மாதுள நாவிலே நாஸுக்காக உராய்ந்தவுடன் அப் பார்ப்பின் பளிங்கு வதனத்திலே தெய்விக மந்த காசம் கிளர்ந்து மறைந்தது.
தாயின் பக்கத்தில் கிடந்த அந்தச் சேயைப் பாத்தி மாபீ அன்போடு வாரியெடுத்து அதை மார்போடு அணைத் துக்கொண்டதும், அந்த வெள்ளரிப் பிஞ்சு தன் ஓலத்தைக் கிளப்பிற்று.
“அடி என் பெண்ணே! அப்படி ஏன் கீச்சென்று கத்துகிறாய்? உன்னை எதிர்பார்த்துத் தானே மூன்று வருசங்களுக்கு முன்பே உன் ரூஹுல்லாவைப் பெற்றெடுத்து வைத்திருக்கிறேன்” என்று களிப்புடன் கூறி. பரீதாவின் ரோஜாக் கன்னங்களில் கணக்கில்லாத முத் தங்களைச் சொரிந்தாள் பாத்திமா பீ.
“வாயை மூடாமல் அப்படியே நில்லுங்கள், ஆச்சி. உங்கள் எண்ணம் ஆண்டவன் அருளால் நிறைவே றட்டும்” என்று நல்வாழ்த்துப் பகர்ந்து ஒரு பிடி அஸ்காச் சர்க்கரையைத் தன் நாத்தனாரின் வாயில் போட்டு விட்டாள் குழந்தையின் தாய். ‘அச்சிக்’ என்ற வெண்கல ஒலியுடன் மங்களத் தும்மலை உதிர்த்த அந்தக் குழந்தையும் தன் கால்களை உதறிக்கொண்டது.
இந்தச் சுப வைபவம் நிகழ்ந்து பதினாறு வருஷங்கள் தத்தித் தத்தி மறைந்துவிட்டன. தன் மாமனின் இல்லத்தில் ரூஹுல்லா தங்கு தடையின்றி அவிழ்த்துவிட்ட ஞமலிபோல் தாராளமாக நுழைவதும், அங்கே திரைமறைவில் இருந்த மான்குட்டியுடன் கண்ணா மூச்சி விளை யாடுவதும், இவர்களுடைய கேளிக்கை , வரம்பை மீறுவ தும், அப்போது ராவுத்தர் தம் கில்லாடி மாப்பிள்ளையை. “அட போக்கிரிப் பயலே , போடா வெளியே” என்று பெருமையுடன் விரட்டி அடிப்பதும் – இத்தகைய நேத்திரானந்தமான காட்சிகளைப் புகையிலை அசை போட்டுக் கொண்டு பொல்லாப்புகளை ஒலி பரப்பித் திரியும் பாட்டி மார்கள் கவனித்து வரத் தவறவில்லை.
தம் செல்வியின் வதுவையை விரைவில் முடித்துவிடக் காசீம் ராவுத்தர் துடித்துக்கொண்டிருந்த வேளையில் கலி புருஷனுக்கு நிகரான ‘சைத்தான்’ தன் கொடுமைச் சேஷ்டைகளைத் தொடங்கலானான்.
“சாயபு , ஒன்றே ஒன்று, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு கிளியை அந்தச் சுவாமிமலை வடிவேலன் உங்களுக்கு அருளியிருக்கிறான். அந்த மாணிக்கத்தைப் பெறு வதற்கு நாகூருக்கும் முத்துப்பேட்டைத்தர்க்காக்களுக்கும் நீங்கள் அடித்த பயணங்கள் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. நிலைமை அப்படி இருக்க வெள்ளையப்பன் புரளுகிற கௌரவமான இடமாகப் பார்க்காமல், பாசி பிடித்த குட்டையிலே பிள்ளையைத் தள்ளிவிடப் பார்க்கிறீர்களே இது நியாயமா என்று கேட்கிறேன்?” என்று காசுக்கடைக் கும்பகர்ண முதலியார் ஒரு தீப்பொறியை ஊதிவிட்டதும், ராவுத்தரின் நெஞ்சு சுரீலென்று தகித்தது. குடும்ப நண்பர் மொழிந்த சொற்களில் பொதிந்து கிடந்த உண்மையை அவர் புரிந்துகொள்ள ஓர் இமைப் பொழுதே பிடித்தது.
காலாடிகளின் கூட்டத்திற்குக் காவலனாகவும் சோதாக்களின் சங்கத்திற்குப் போஷகனாகவும் ரூஹுல்லர் தன் வாழ்க்கையைப் போக்கி வருவதை ராவுத்தா கவனித்துத்தான் வந்தார். சுற்றுப்புறம் உள்ள குக்கிராமங்களில் இரண்டோர் ஆசை நாயகிகள் அவனுக்கு இன்பப் போதையை ஊட்டி வந்ததாகவும் அவர் செவிகளில் லேசாக வீழ்ந்தது. அது மட்டும் அல்ல. ‘கொட்டைப் பாக்கு வீட்டு மௌல்வி சாஹேப் உள்ளூர்ப் பள்ளி வாசலில் ஜமா நமாஸை நடத்த லாயக்கானவரா?’ என்ற தாடிகள் சிலிர்க்கும் பிரச்னையை வலுப்படுத்திச் சாந்தம் நிலவும் ஊரையே இரு கோஷ்டிகளாகப் பிரித்துத் தன் திறமையான திருப்பணிகளை ரூஹுல்லா காட்டத் தொடங்கியதும், காசீம் ராவுத்தர் உண்மையிலேயே நடுகடுங்கி வெலவெலத்துப் போனார்.
ரூஹுல்லாவின் மூர்க்கத்தனமும் போக்கிரித்தனமும் நாளடைவில் பொசுங்கிவிடும் என்று நினைத்த அவர். அவனுக்கு நிக்காஹ்’ வை முடித்துவிட்டால் வாலிப வேகம் வாடிவிடும் என்று நம்பியும் வந்தார். ஆனால் குடும்ப நண்பர் இடித்துக் கூறிய விஷயம் அவரை ஆழ்ந்த அவந்தரையில் மூழ்கடித்து விட்டது. பதினேழு வருஷங் களாகக் கட்டி வந்த மனச் சுவரை இடித்துத் தள்ளுவதா? கூடப் பிறந்த சகோதரிக்கு, வாக்குக் கொடுத்த தான் எந்தத் தைரியத்துடன் அதை மீற முடியும்? ராவுத்தரின் அறிவு குழம்பியது. சிரத்தைப் பலமாக அழுத்திக் கொண்டு சித்தப்பிரமை கொண்டவர்போல் வீட்டிற்குள் நுழைந்து, வாசற்கதவைத் படீரென்று பலமாகச் சாத்தினார்.
“ஆமினா . பெற்றவர்களாகிய நாமே பரீதாவின் எதிர் காலத்தை நினைக்காவிட்டால், வேறு யார்தாம் சிரத்தை காட்டுவார்கள்?” என்று தொடங்கிய காசீம் ராவுத்தர் தம் சிநேகிதர் கூறிச் சென்றதைத் தம் நாயகியின் காதில் போட்டும் விட்டார்.
“இஸ்லாத்தில் பிறந்த நாம் கொடுத்த வாக்கை அழிப்பது நல்லதாகுமா?” என்றாள் துணைவி.
“அதுதான் என்னையும் வாட்டி வதைக்கிறது.”
“பெண் பிறந்த நேரத்திலே உங்கள் அக்கா காட்டிய ஆசையை மறந்துவிட்டீர்களா? அந்த வேளையில் இதே என் கையாலே அவர்கள் வாயில் ஒரு பிடி சர்க்கரை போட்டேனே!”
“அதற்கு என்ன செய்வது?” கைகளைப் பிசைந்தார் ராவுத்தர்.
“நாம் தவறி நடந்துவிட்டால் அந்த நல்லவளின் ஆவி நிம்மதியில்லாமல் அலையுமே. அந்தப் பாவம் நமக்கு வேண்டாம். ஊரார் நாக்கு நூறு உளறும். ரூஹுல்லாவுக்கே முடிச்சிடுங்கள்” என்று குலவிளக்கு மன்றாடி முடித்ததுதான் தாமதம், தடாலென்று வாசற் கதவைத் திறந்து கொண்டு திடுமென்று உள்ளே புகுந்த ரூஹுல்லா கதவின் பின்புறத்தில் இரண்டு நிமிஷங்கள் தங்கிவிட்டு மறுபடி வெளியே பொய்விட்டான். எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபரீதத்தைக் கண்ட ராவுத்தர் சட்டென்று மிதியடிக் கட்டைகளை மாட்டிக்கொண்டு வெளிவாச லுக்கு உடனே விரைந்தார். நாலைந்து தடியன்கள் அங்கும் இங்கும் ஓடுவதனாலும், அண்டை வீடுகளின் கதவுகளும் சாளரங்களும் சடசடவென்று மூடிக்கொள் வதனாலும் உண்டான பேரிரைச்சலைக் கேட்டு ராவுத்தரின் நெஞ்சு திக்கென்றது.
“எசமான், நிலைமை மோசமாகப் போய்விட்டது. ஒரு கேடு கெட்ட கூத்தி விஷயமாக உங்கள் மருமகப்பிள்ளைக்கும் மரவக்காடு ஆசாமிகளுக்கும் அடிதடி வந்து விட்டது. கௌரவமான வீட்டுப் பிள்ளையின் புத்தி ஏன் இப்படி மேயப்போகிறதோ! எசமான்” என்று அங்கலாய்த்தான் வண்டிக்கார முனிசாமி.
உன்மத்தம் பிடித்தவர் போல் வீட்டிற்குள் பாய்ந் தார் ராவுத்தர். “ஆமீனா ..ஆமினா” என்று கூரை வீழ்ந்துவிடும்படி அவர் கர்ஜித்ததும், அலறிப் புடைத்துக் கொண்டு அடுக்களையிலிருந்து ஓடிவந்த அவர் மனைவி, தன் கொழுநனின் கோலத்தைக் கண்டு மலைத்துப் போனாள்.
“உன் மகள் எங்கே?” என்று அலறினார் ராவுத்தர். வெறி பிடித்தவர் போல்.
“கொல்லைப் புறத்திலே மீனை ஆய்ந்து கொண்டிருக்கிறாள்.”
“அவளை அப்படியே தூக்கிக் கிணற்றிலே போட்டு விடு. உன்னாலே முடியாமற்போனால் நானே அதைச் செய்து முடித்துவிடுகிறேன்.” – ராவுத்தரின் உடல் பதறியது.
தொடர்ந்தார். “ஒரு போக்கிரி, துரோகி, வெட்கங் கெட்டவனுடைய காலில் பரீதாவை லாடமாக அடித்து அவள் வாழ்வைக் குட்டிச்சுவராக்குவதைவிட இதைச் செய்துவிட்டால் நமக்கு மோட்சம் கிடைத்துவிடும்.”
“பதறாதீர்கள்!” என்று கணவனைச் சாந்தப்படுத்தினாள் குலதெய்வம்.
“நீயும் உன் நாத்தியும் ஹைதர் காலத்திலே பேசிக் கொண்டதை அடுப்பிலே போட்டுப் பொசுக்கு. உனக்கு மருமகனாக வரப் போகிறவனின் இரு கால்களையும் வெட் டிப்போட நாலைந்து வேட்டை நாய்கள் நம் தெருவிலே அலைகின்றன, ஆமினா. அந்தக் கேடு கெட்ட மிருகம் நமக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம்.” – ராவுத்தரின் கண்கள் குளங்களாயின. மனைவியின் தோளைப் பற்றிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து, ‘யா அல்லா ‘ என்று ஹீனக் குரலில் கூறிக்கொண்டே கட்டி லின்மீது தடாலென்று சாய்ந்தார்.
காசீம் ராவுத்தர் செய்த முடிவு காட்டுத் தீப்போல் ஊரெங்கும் பரவினதும், ரூஹுல்லா திகைத்துவிட்டான். அவமானம் அவன் இருதயத்தைத் துண்டு துண்டாக வெட்டியது. ஏமாற்றம் அவன் உடலை நறுக்கித் தள் ளியது. வஞ்சப் பசி நெஞ்சிலே உருவாகியது. தன் மாமனை நேரில் சந்தித்துப் பயமுறுத்தியபின் ஊரில் உள் ளோரை மிரட்டித் தனக்கு உரியவளை வேறு எவனும் கவராதபடி ஏற்பாடு செய்துவிட்டுத் தான் மாயமாக மறைந்தான் அந்த மூர்க்கன்.
ரங்கூனைப் போய் அடைந்த ரூஹுல்லா இரண் டொரு மாதங்கள் ஏதேதோ சில்லறைப் பணிகளைச் செய்து வந்தான். ஊதியமாகக் கிடைத்த வெள்ளிகள் அவன் சிற்றுண்டிக்கும் பீடிகளுக்குமே சரியாக இருந்தன. அவன் அக்கரையில் காலடி எடுத்துவைத்த நோக்கமோ, நன்றாக உழைத்துச் சம்பாதித்துப் பணமூட்டையுடன் தாயகத்திற்குத் திரும்பித் தன் மாமன் மகளை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்பது தான். அதற்காகக் கையாள வேண்டிய அசகாய முறைகளை அவன் தீவிரமாகச் சிந்தித்துக்கொண் டிருந்த வேளையில். முறுக்கிய மீசையுடன் கொழுகொழுவென்றிருந்த அவன் கட்டுமஸ்தான உடலின் வனப்பிலும் மிடுக்கிலும் நையாண்டிப் பேச்சிலும் ஓர் மாடப்புறா தன் இளநெஞ்சைப் பறி கொடுத்துவிட்டது; விதி புரிந்த திருவிளையாடல் என்று தான் சொல்ல வேண்டும்.
சிங்லீ தனக்குச் சொந்தமான கடைகளின் வாடகையை வசூலிப்பதற்கு ரூஹுல்லாவை வேலையில் அமர்த்தியபோது, அந்த இளைஞனுடன் நெருங்கிப் பழகு வதற்கு அந்தப் பர்மாப் பதுமைக்குப் பல அருமையான சந்தர்ப்பங்களைக் காலதேவன் தாராளமாக வழங்கலானான். செல்வத்தில் புரளும் தன் எசமானியின் விசித்திர மனப் போக்கைப் புரிந்துகொண்ட அந்தத் தம்பிக்கோட்டைச் சிங்கம் வலுவில் தன்னை அடையும் சுந்தரியைத் தன் சுயநலத்துக்குத் துஷ்பிரயோகம் செய்யத் திட்டமிட லானான். அபிமானம் என்ற ஊஞ்சலில் அவளை வைத்துத் தாலாட்டி நயவஞ்சக அரவணைப்பில் இன்ப மூட்டிக் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு கப்பல் ஏறிவிட வேண் டும் என்ற திட்டத்தை அவன் அறிவு உருவாக்கிக்கொண்டிருந்த பொல்லாத நேரத்தில், “ரூஹு, நீங்கள் வந்து நான்கு மாதங்கள் தாம் ஆகின்றன. எனக்கு என்னவோ நான்கு வருஷங்களாகப் பழகிவிட்டது போல் தோன்று கிறது. இந்தப் பிணைப்பு நிரந்தரமாக அமைய வேண்டும் என்பது தான் என் ஆசை” என்று சிங்லீ கொவ்வை இதழ்களில் குறு நகை தவழ, தன் இச்சையை மறைமுக மாக வெளியிட்டதும் ரூஹுல்லாவின் மனம் அலை பாய்ந்தது.
“ஏதோ உங்கள் தயவினால் இந்தத் தமிழன் வயிறு வளர்க்கிறான்” என்றான் ரூஹுல்லா அடக்கமாக.
“என் தயவு இன்றுடன் முடிந்துவிட்டது. இனி உங்கள் தயவுக்குத்தான் இந்த ஏழை ஏங்கி நிற்கிறாள்!” கிள்ளை மொழி பேசி, அந்த ஆண் மகனின் கொள்ளை அழகை மானசிகமாகப் பருகி, கள்ள விழியை அந்த எழிலரசி வீசினதும் ரூஹுல்லா தடுமாறினான்.
அவள் தொடர்ந்தாள், “நீங்கள் புரிந்த சேவைக்கு என் நன்றியை எந்த விதத்தில் காட்டுவது என்று தெரியாமல் தவிக்கிறேன், ரூஹு.”
“ஒன்றுக்கு மூன்றாக என் ஊதியத்தை உயர்த்திவிட்டீர்களே”
“அதையும் நிறுத்திவிடப் போகிறேன்.”
“வேலைக்குச் சீட்டா …?”
“ஆமாம்” என்று கலகலவென்று சிரித்துக் கொண்டே அந்த ஆண் மகனின் இரும்புத் தோள்களிலே தன் தளிர்க் கரங்களை வீசி, ‘ரூஹு. என் உள்ளத்தைக் கிள்ளி எடுத்துக்கொண்ட நீங்கள், இந்த அபலையை உங்கள் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது’ என்று நெடுமூச்செறிந்த வண்ணம் கொஞ்சிய அந்த அஞ்சுகம், அணைப்பை மேலும் இறுக்கியவுடன், குபீரென்று ஓர் கட்டுக்கு அடங்காத உணர்ச்சி அவன் நரம்புகளில் ஊர்ந்தது. அந்த இளைஞனுடைய உதடுகளுடன் உறவாட அவள் செம்பவழ அதரங்கள் துடித்தன. சரசமாட அவள் விழிகள் ஏங்கின. மேலும் பேசலானாள் அந்த அணங்கு, “உங்கள் நாட்டிலிருந்து எத்தனையோ பேர்கள் இங்கே வருகிறார்கள் . அவர்களில் இரண்டொருவர் என் போன்ற பேதைகளின் உள்ளங் களைத் தூண்டில் போட்டுச் சிக்கவைத்து விடுகிறார்கள். சில காலம் கூடிக் குலாவி மகிழ்ந்துவிட்டு நன்றாக அனுப வித்து இறுதியில் எங்களைப் புறக்கணித்துவிட்டு மறைந்து விடுவதும் சகஜந்தான். அப்படிப்பட்ட துரோகத்தை உங்களிடம் நான் எதிர் பார்க்க மாட்டேன். வேண்டுமானால் என் நெஞ்சிலே கத்தியைப் பாய்ச்சி என் உயிரையும் அன்புடன் எடுத்துச் சென்று விடுங்கள்” என்று மிக்க உணர்ச்சியுடன் வேண்டிக்கொண்ட கட்டழகு தாலாட்டும் பட்டு நிகர் மேனி கொண்ட அந்த வனிதை ரூஹுல்லாவின் காலடிகளில் வீழ்ந்தாள்.
காதலன் விருப்பப்படியே இஸ்லாம் மதத்தைத் தழுவி, ‘குல்ஸும்’ என்ற புதிய நாமகரணத்துடன் ரூஹுல்லாவின் பீவியாக மாறிய சிங்லீ . தன் எட்டாவது மாத இல்லற வாழ்க்கையைக் கடத்தி வந்த சமயத்தில் ஒரு விபரீதம் தலைகாட்டியது. பரீதாவுக்குப் பரிசம் போட்டு விட்டதாகவும் இன்னும் இரண்டு வாரங்களில் நிக்காஹ் நடத்திவிடப் போவதாகவும் அறிவித்த – தம்பிக்கோட்டை யிலிருந்து கடல் கடந்து வந்த – நண்பனின் கடிதம் ரூஹுல் லாவை அவலக் கடலில் மூழ்கடித்து விட்டது. அவன் சித்தம் கலங்கியது. உதிரத்தின் ஓட்டம் உறைந்துவிட்டது. ‘எனக்குச் சேர வேண்டியவளை வேறு ஒருவன் என் கண் முன்பே தட்டிக்கொண்டு செல்வதா?’ என்று எண்ணியதும் ஏக்கமும் அனல் மூச்சும் அவன் உடலை உலுக்கிவிட்டன.
“எப்படியாவது இந்தக் கல்யாணம் நடைபெறாமல் நிறுத்திவிட வேண்டும். அப்படித் துரதிருஷ்ட வசமாக முடியாவிட்டால், மணத் தம்பதிகளின் உயிர்களை உறிஞ்சி வஞ்சப் பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் ” என்ற பிரதிக்கினை உள்ளத்தில் குமிழியிட்டதும், அவன் கரங்களும் துடைகளும் கட்டுக்கு அடங்காத உணர்ச்சிப் பெருக்கத்தால் வெடவெடவென்று அடித்துக்கொண்டன. பித்துப் பிடித்தவன் போல் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே பெட்டியைத் திறந்தான். அதில் இருந்த துணிமணிகளை வெளியே வீசி எறிந்தான். பெட்டியின் அடித்தளத்தில் கிடந்த பொருள்களின் மீது அவன் கொடூ ரப் பார்வை வீழ்ந்ததும் விழிகள் ரங்கராட்டினம் போல் சுழன்றன. தடித்த உதடுகளில் கிளர்ந்த முறுவல் கழைக் கூத்தாடிற்று. தன் லட்சியம் நிறைவேறாது போனால் என்ன விபரீதம் விளையும் என்று தன் மாமனை முன்பு ஒரு நாள் எந்த ஆயுதத்தை எடுத்துக்காட்டிப் பயமுறுத்தினானோ, வஞ்சம் தீர்ப்பதற்காக இத்தனை நாட்களாக எந்தப் பொருளைப் பாதுகாத்து வந்தானோ. பளபளத்த அந்தப் பிச்சுவாவை அவன் பெட்டியிலிருந்து வெளியே எடுத்தபோது அவன் மேனி சிலிர்த்தது. தன்னையும் அறியாது உரக்கச் சிரித்துவிட்டான். பெட் டியையும் படுக்கையையும் எடுத்துக்கொண்டு துறை முகத்தை நோக்கி ஆவேசத்துடன் புறப்பட்டான்.
யுத்தகால மாதலால் ஒன்றுக்கு இரண்டாக வெள்ளி களை லஞ்சமாக வாரியிறைத்துப் பயணச் சீட்டைப் பெறுவதில் அவன் ‘பிறைக்கொடி’ நாட்டியதும், தன் மாமன் மகளின் குழலும் தன் பிடிக்குள் சிக்கிக்கொண்டதாக மனப்பால் பருகிச் செருக்கோடு நின்றான். துறைமுகத்தை விட்டுக் கப்பல் கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் தாமத மாகும் என்று அறிந்தவுடன் வதனம் எங்கும் வெற்றிப் புன்னகை தாண்டவமாட, வஞ்சப்பசி அடி வயிற்றைக் கலக்க, நெஞ்சு படக் படக்கென்று கௌளி அடித்துக் கொள்ள , சித்தப் பிரமை பிடித்தவன் போல் மனமும் கால்களும் சென்ற திக்கெல்லாம் அலைந்தான். கால்கள் சோர்ந்தவுடன் அருகில் கிடந்த சிமென்ட் பெஞ்சில் மிக்க அலுப்புடன் சாய்ந்தான். மற்றோர் ஓரத்தில் எவனோ வேறு ஒரு பிரயாணி வீற்றிருப்பது அவன் பார்வையில் வீழ்ந்தது. உடுத்திருந்த உடையின் மூலம் அவனும் தன்னைப்போல் தஞ்சைவாசி என்று ஊகித்துக்கொண்டான். “அண்ணே, நீங்களும் கப்பல் ஏறுகிறீர்களா?” என்று கம்மிய குரலில் வினவினான் ரூஹுல்லா .
“ஏற வேண்டியதுதான், தம்பி . ஆனால் என் பாழும் விதி என் நெஞ்சிலே ஈட்டியைப் பாய்ச்சிவிட்டது” என்று மனம் வெதும்பி அந்த ஆசாமி பதிலளித்ததும், ரூஹுல் லாவுக்கு என்னவோ போல் இருந்தது.
“நானும் நீங்களும் ஒரே மண்ணில் பிறந்து, ஒரே ஆற்றுத் தண்ணீரைக் குடித்தவர்கள் தாம் ! அல்லவா? மனசிலே பாரமாகக் கப்பியிருக்கும் கவலைச் சுமையை இறக்க வேண்டுமானால், நடந்ததை வாய்விட்டுச் சொல் லுங்கள், அண்ணே” என்றான் ரூஹுல்லா.
கழுத்தைச் சுற்றியிருந்த பட்டுக் கைக் குட்டையினால் நீர் துளித்த நேத்திரங்களைத் துடைத்துக்கொண்டு, ‘இந் தக்கப்பலில் மட்டும் நான் கிளம்பாவிட்டால் எவ்வளவோ அநர்த்தங்கள் அக்கரையில் நடந்துவிடப் போகின்றன” என்றான் அந்த ஆசாமி, மிகவும் மனம் ஒடிந்தவனாய்.
“பாஸ்போர்ட், ஊசித் தகராறா?”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை. நாசமாய்ப் போகிற டிக்கெட்தான் சமயத்தில் கிடைக்காமல் ஏமாற்றி விட்டது.
“அடுத்த பதினைந்தாம் தேதிக் கப்பலிலே ஏறுங்களேன்!”
“அது என்றைக்குப் புறப்படுகிறதோ அன்றைக்கு என் ஊரிலே கல்யாணம் நடக்கப் போகிறது!” – மிக்க வேதனையுடன் தன் தலையில் ஓங்கி அடித்துக்கொண்டான்
அந்த ஆசாமி.
“கல்யாணமா! யார் நிக்காஹ்?”
“அந்தத் துரதிருஷ்ட மாப்பிள்ளை நான் தான் தம்பி! எல்லாம் என்னைப் பெற்றவர்கள் செய்த வேலை இது. அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். என் நிக்காஹ்வை நடத்திப் புலவுச் சோற்றை உண்டு களித்து, மருமகளைக் கண்ணால் பார்த்துவிட்டுக் கண்ணை மூட வேண்டுமென்று அவர்களுக்கு ஆசை திடீரென்று வந்துவிட்டதாம். எனக்குக்கூட முன்னும் பின்னும் தெரிவிக்காமலே எல்லா ஏற் பாடுகளையும் செய்து, நிக்காஹ்’ நாளும் குறித்துச் செய்தியை மாத்திரம் அனுப்பியிருக்கிறார்கள். கூத்தைப் பார்த்தீர்களா! இந்த உலகில் எல்லாம் தலைகீழாகப் போய்விட்டன.”
“அப்படிச் சொல்லாதீர்கள். பெற்றவர்கள் வைத்த ஆசைக்கு என்ன செய்வது? சரி, பார்த்த இடம் எந்த ஊராம்?” என்று சாவதானமாகக் கேட்டுப் பீடியைப்பற்ற வைத்தான் ரூஹுல்லா.
“அந்த வேடிக்கையையும் கேளுங்கள். ஊர் பேர் தெரியாத இடத்திலே போய் ஒரு பொம்மையை எனக்குப் பிடித்திருக்கிறார்கள். நானோ கொரடாச்சேரி வாசி. பதினைந்தாம் தேதி கல்யாணம். கப்பலிலே இடம் இல்லை. நானோ மாப்பிள்ளை. அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நான் சொல்வது நிசமா இல்லையா என்று இதைப் பார்த்தால் தெரிந்துவிடும்” என்று நெஞ்சு இரு கூறுகளாகப் பிளந்து விடும் போல் ஏளனப் புன்னகை யுடன் கதறிக்கொண்டு குல்லாவை வெடுக்கென்று கழற்றி அதில் செருகியிருந்த மஞ்சள் நிறப் பத்திரிகையை எடுத்து நீட்டினான், அவலத்தில் அவதிப்பட்ட அந்த மாப்பிள்ளை.
அந்தப் பத்திரிகையில் அடங்கிய செய்தியை ரூஹுல்லா படித்ததுதான் தாமதம்; அவன் ஸ்தம்பித்து விட்டான். நாடித் துடிப்பு ஒரு கணம் நின்றுவிட்டுப் பலமாக அடிக்கத் தொடங்கியது. சித்தம் துடித்தது. ரத்தம் கொதித்தது. நெற்றி வேர்த்தது.
“அப்படியென்றால் அந்தப் பயல் நீதானா? எவ்வளவு மன அழுத்தம் உனக்கு இருக்க வேண்டும்” என்று ரூஹுல்லா , விழிகள் தீவட்டிகளாக மாற, ஆத்திரம் மேலிட ஆரவாரித்ததும் அந்த ஆசாமி விதிர்விதித்துப் போனான்.
“என்ன சொல்கிறீர்கள். அண்ணே?” என்றான், அந்த அப்பாவி ஒரே பீதியுடன்.
“அட துரோகி, என் கண்ணைப் பிடுங்கிவிட்ட உன்னைக் குழி வெட்டி உயிரோடு புதைக்க வேண்டும்” உன் மத்தம் கொண்டவன் போல் நாத் தழுதழுக்கக் கதறிவிட்டுப் பற்களை நறநறவென்று ரூஹுல்லா கடித்துக் கொண்டதும் அந்த ஆசாமி விரல்களை நொடித்துக் கொண்டு திருதிருவென்று விழித்தான்.
“தாறுமாறாக என்ன என்னவோ பேசுகிறீர்களே. அண்ணே! என்ன ஆச்சு உங்களுக்கு?” என்றான் அந்தப் பிரயாணி, ஒரே குழப்பத்துடன். பயங்கரமானமயான அமைதி சில விநாடிகள் அவ்விடத்தில் குடி கொண்டு கலைந்தபின் ரூஹுல்லாவின் சிரம் தொங்கி விட்டது. அவனிடம் கொழுந்து விட்டெரிந்த ஆவேசம் பொசுங்கிச் சாம்பராயிற்று. கண்கள் பஞ்சடைந்தன. காதுகள் மந்தமாயின. கால்கள் பின்னிக்கொண்டன. எதிரில் நிற்பவனைத் தலை நிமிர்ந்து பார்க்க அவனுக்குத் தைரியம் இல்லாமல் போயிற்று.
“என்ன என்னவோ பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடு, அண்ணே . உனக்கு ஓர் உபகாரம் செய்யப் போகிறேன். எந்தப் பயணச் சீட்டை நான் வாங்கினேனோ. அதை எடுத்துக்கொண்டு இந்தக் கப்பலிலே நீ ஏறிவிடு” என்று நாக்குழற ஜீவனற்ற குரலில் தட்டுத் தடுமாறிச் சொல்லிய ரூஹுல்லா, தன் டிக்கெட்டை எடுத்து அந்த ஆசாமியின் கையில் திணித்தான்.
“இதற்கு எவ்வளவு பணம் ஆச்சு? நான் கொடுத்து விடுகிறேன். அண்ணே!” என்று குதூகலம் தாளாது குதித்த அந்த ஆசாமி வினவிக்கொண்டிருக்கையில், ஒரு வார்த்தையும் பதில் கூறாமல் நேத்திரங்களிலே நீர் மல்க. நெஞ்சிலே அவலம் கொழுந்துவிட்டெரிய, இருதயத்திலே ஓங்காரம் பிலாக்கணமிட , தள்ளாடித் தள்ளாடி நடந்து, காரிருளிலே மறைந்துவிட்டான் மனமொடிந்த அந்தத் தம்பிக்கோட்டை வஸ்தாத்.
“இவ்வளவு களைத்துப் போய்விட்டீர்களே. எங்கே போயிருந்தீர்கள்?” என்று. கணவனின் பரிதாபக் கோலத்தைக் கண்டு மனம் பதைத்த சிங்லீ ஈனக் குரலில் கேட்டாள்.
“இனிமேல் இந்தப் படுபாவி உனக்குத் துரோகியாக மாற மாட்டான். இது சாத்தியம்!” என்று உணர்ச்சியுடன் கூறிக்கொண்டு துணைவியின் மருங்கில் சோர்வுடன் அமர்ந்த ரூஹுல்லா தாரை தாரையாகக் கண்ணீர் வார்த்தபொழுது, தன் காதலன் நடத்திவிட்ட கபட நாடகத்தை அறியாத அந்தக் கர்ப்பிணி ஒன்றும் விளங்காமல் பேந்தப் பேந்த விழித்தாள்.
– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.
– ‘கலைமகளில்’ காட்சியளித்தவை.