பப்பாளி மரம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 11,098 
 

தனி மரம். யார் இருக்கிறார்கள். பேசிக் கொள்வதென்றால்கூட அவருக்கு அவரே தான். சில சமயங்களில் அந்தப் பப்பாளி மரத்தோடு பேசிக் கொண்டிருப்பார். அது அவருடைய வலி குறித்த பிலாக்கணங்களைத் தினம் கவனத்தோடு கேட்கும். இதமாய் அசைந்து ஆறுதலாய் வருடிக் கொடுக்கும். படபடப்புத் தணிக்கும்படி விசிறி விடும்.

அவருக்கான பிடிமானமாய் இருப்பது வீட்டுத் தோட்டம் மட்டும்தான். வீட்டிற்குப் பின்னால் இருந்த வெற்றிடத்தில் தோற்று-விக்கப்-பட்ட தோட்டம். இதில் பரவி-யிருக்கும் பசுமையின் பரிட்சயம் போதும். அந்தப் பப்பாளி மரம் பார்த்தீங்களா.. என்னமாய் கொழுந்து விட்டு வளர்ந்திருக்-கிறது. தினம் விழிப்பதே இந்த இளந்தளிர் மீதுதான். அதில் கிடைக்கும் பரவசம் எதிலுமில்லை என்றது அவர் மனம். அந்திமக் காலத்தில் மனது எப்படியோ இயற்கை-யோடு இயற்கையாய் ஒன்றிப்போகக் கற்றுத் தந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் இந்த மரம் தன்னை உயர்த்திக் கொள்வதைப் பார்க்கையில், ஒரு தாயின் மனம் தன் குழந்தையின் வளர்ச்சி கண்டு மகிழ்வதைப்-போல் குதுகலிப்பார். மனிதர்களைப் போல அதற்கும் வளர்ந்து ஆளாகிறதில்தான் எத்தனை அவசரம்.

unmai - Mar 16-31 - 2010சாப்பிட மறந்தாலும் அதற்குத் தண்ணீர் ஊற்ற மறக்க மாட்டார். மாதாமாதம் தவறாமல் சிறிய மண்வெட்டியால் கிளறிவிட்டு இயற்கை உரம் கலந்துவிடுவார். ஒரு இலை வாடினாலும் மனது வாடிப் போகும். அவரின் ஒரே உறவு.

இருபத்தாறு வயதில் மகன் இருந்தால் ஆயிற்றா.. இருந்தும் இல்லாமல். நேற்று வந்தவள் முக்கியம் என்று போய்விட்டதை என்னவென்று சொல்வது.. என்ன இது.. கலங்குகிறாரா.. இல்லை. உணர்வின் தகிப்பில் மனது தன்னிச்சையாய் உருகுகிறதா.

ஒவ்வொரு அங்குல வளர்ச்சியிலும் எப்படியெல்லாம் ஆனந்தித்திருப்பார். நினைத்துப் பார்த்திருப்பானா.. போகட்டும்..-போகட்டும்.. ஒற்றைப் பனையாக்கிவிட்டு என்று வருந்துவார்.

ஓய்வூதியப் பணம் அவர் ஒருவருக்குப் போதும்தான். தோட்டத்தில் வளரும் காய்-கறிகள் கைச் செலவுக்கு. இந்தப் பசுந்தளிர்-களின் வனப்புதான், அழுத்தும் துயரத்தில் மூழ்கிப் போகாமல் துண்களாய் அவரைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. அவரோடு சேர்த்துப் புதிதாய் இப்போது ஒரு குருவி. புதிதாய் இப்போதுதான் வந்து கூடு கட்டிச் சின்னச்சின்னதாய் முட்டை-யிட்டிருக்-கின்றது. அது இரை தேட வெளி-யேறியிருக்கும் போது கூட்டில் கவனிப்பார். முட்டைகளை எத்தனை கவனமாய்ப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது என்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொள்வார்.

ஒரு உறவு சென்றால் இன்னொரு உறவு என்று சொல்கிற மாதிரி அந்த முட்டைகள் பொறித்து இரண்டு குஞ்சுகள் வெளிப்பட்ட தினம் உள்ளபடி மகிழ்ந்து போனார்.

அந்தக் குருவி ஓடிஓடி உணவு கண்டு-பிடித்து அந்தக் குஞ்சுகள் இரண்டிற்கும் ஊட்டும் அழகை இன்று முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். அடுத்தவேளை அதற்கான உணவின் தேடல் வெற்றிகரமாக அமையுமா என்பதைச் சொல்ல முடியாது . இருந்தாலும், அந்த அந்த நொடியை நம்பிக்கையோடே சந்திக்கின்றன. குஞ்சு-களைப் பார்த்துப் பார்த்து முழுஅர்ப்-பணிப்புடன் கவனித்துக் கொள்கின்றன. அதில்தான் அந்தக் குருவிக்கு எத்தனை குதுகலம். கொஞ்சமே இறகு முளைக்கத் தொடங்-கியதும் பறத்தலில் கிளை விட்டுக் கிளை பறக்க முதலில் கற்றுக் கொள்ளத் தொடங்கின. எங்கிருந்தோ இரை கொண்டு-வந்து ஊட்டிவிட்டது; அலகால் வருடிக் கொடுத்தது; கண்களில் பரவசம்; பாசமாய், பரிவாய்ப் பார்த்துக்கொண்டது.

குஞ்சுகள் படிப்படியாய் உற்சாகத்துடன் அடுத்த-கட்டப் பயிற்சி மேற்கொண்டது. விரைவிலேயே பறத்தலின் சூட்சமம் கற்றுக் கொண்டது. இறகுகளும் முழுமையாக முளைத்து விட்டன.

வழக்கம் போல் காலையில் பப்பாளி மரத்தில் விழித்தபோது புதிதாய் ஒரு மாற்றம். என்ன இது. வெண்மையாய்த் துளிர்த்திருக்கிறதே. அட! அதற்குள் பூப்பெய்து க்ஷ்விட்டாயா.. மகிழ்ச்சியைக் காலம் மொத்தமாய்த் துடைத்து எடுத்துச் சென்று விட்டதாய் எண்ணிக் கொண்டிருந்த அவருக்குள் இப்படியொரு எதிர்பாராத இன்பஅதிர்ச்சி.

வாழ்வில்தான் எத்தனை எத்தனை எதிர்பாராத திருப்பங்கள்.. தண்ணீரோடு, அன்று இயற்கை உரம் வழக்கத்தைவிடக் கூடுதலாக மணலில் கலந்து வைத்தார். கூடுதல் தண்ணீர் ஊற்றினார்.

பறக்கக் கற்றுக் கொண்ட குருவிக் குஞ்சுகளை, குருவி கொத்தித் துரத்திக்கொண்டிருந்தது. முதலில் சற்றே அடம் பிடித்த குஞ்சுகள் ஒரு கட்டத்தில் தன் சிறகடித்துத் தடுமாறி, பின் வெற்றிகரமாக வெகுதுரம் பறந்து மறைந்தன. குருவிக் குஞ்சுகள் பறந்துபோன திக்கைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தது தாய்க் குருவி.

பப்பாளி மரத்தின் பூ நாளுக்கு நாள் பெரிதாய்ப் பருக்கத் தொடங்கியது. பருவமெய்துவிட்ட பூரிப்பில் நன்கு வளப்பமாகி அப்படியொரு வசீகரம். யாரிடமாவது இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. காபிப் பொடி கடன் கேட்டு வந்த பார்வதிப் பாட்டியிடம் காட்டினார்.

பாட்டி உற்சாகத்துடன் வந்து பார்த்தாள்-_ ரொம்ப நேரம் பார்த்தாள்_எதுவோ யோசித்தாள்.

என்ன பார்வதி ..

அவள் சொன்னது சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியாய் இறங்கியது.

ஆண் மரமா..

ம்

அப்பிடின்னா… காய்க்காதா..

ம்

எப்பிடிச் சொல்றெ நீ..

அதான் பூ நீளநீளமாத் தெரியுதே.. ஆண் மரத்துலெதான் பூ நீளநீளமாப் பூக்கும்.. ஓஹோ..

குண்டைத் துக்கிப் போட்டுவிட்டுப் பார்வதி போய்விட்டாள். மனது சுருங்கிப் போனது. என்ன செய்யலாம். வெட்டி விடலாமா..

மரம் பருத்துச் செழித்தோங்கி நிற்பதைப் பார்க்கப் பார்க்க பற்றிக் கொண்டு வந்தது. நாளை மறுநாள் ஊருக்குச் செல்லத் தீர்மானித்திருந்தார். போய் வந்ததும் வெட்டி-விட வேண்டியதுதான். வேறு என்ன செய்ய.. என்று நினைத்துக் கொண்டார். எல்லாச் செடிகளுக்கும் தண்ணீர் விட்டார், பப்பாளி தவிர. குருவி கூர்மையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது.

அன்று ஊர் திரும்பிய கையோடு அரிவாள் எடுத்துக் கொண்டு பப்பாளி மரத்தின் முன் சென்றார். வியப்பு! உற்று நோக்கினார். பப்பாளிப் பூ வெடித்து உள்ளிருந்து சிறிதுசிறிதாய் காய்கள் வெளிப்-பட்டிருந்தன. இது ஆண்மரம் இல்லையா..

குருவி உற்சாகமாய்த் தன் அலகால் கூட்டைச் செப்பனிட்டுக் கொண்டிருந்தது. குச்சி, முள் வைத்து அற்புதமாய்ப் பின்னியிருந்த கூட்டிற்கு உள்ளே, வைக்கோல் மாதிரி மிருதுவான பொருட்களை மெத்தை போல் நேர்த்தியுடன் வைத்துக் கொண்டி-ருந்தது. அவருக்குள்ளும் உற்சாகம் ஊற்-றெடுக்கத் தொடங்கிய அதே வேளை, ஆழத்தில் சின்னதாய் நெருடல். மரத்தை உற்று நோக்கினார். பப்பாளி மரம் முதல்முதலாய் அவருடன் பேசியது போல் உணர்ந்தார்.

உன்னை நான் ஏமாற்றவில்லை. நீ தான்.. சற்றே குரல் தடுமாற சமாளித்துத் தொடர்ந்தது. ஒரு தாவரம் எந்நாளும் யாரையும் ஏமாற்றுவதில்லை. நான் காய்த்தாலும், காய்க்காவிட்டாலும் எவ்வளவோ பிராணவாயுவினை இப்பூவுல-கிற்குத் தினந்தினம் தருகிறேன்.. உலக வெப்பமயமாதலுக்கு மாற்றாய் எத்தனை குளுங்காற்றும், நிழலும் தருகிறேன்.. தெரியாதா உமக்கு.. என்று வார்த்தையை முடிக்க முடியாமல் திணறியது போலிருந்தது.

ஆச்சரியமாய்ப் பார்த்தார்.

போய் விட்டான் சரி. அவன் பெற்றவரை ஏற்கவில்லை. போய்விட்டான். அதற்காக அவனுக்குச் செய்ததைச் சொல்லிக்காட்ட-லாமா.. மனதிற்குள்ளாகவே என்றாலும்கூட..

குருவி கீச்..கீச் என்று கத்தியது. அவரது மனதிலும் எண்ண அலைகள்….

பிரதிபலன் எதிர்பார்த்திருந்திருக்கிறாய். எதிர்பார்ப்பதா அன்பு.. தரவில்லையா.. எதுவுமே தரவில்லையா கேட்கிறேன்.. யோசித்துப் பார்..

அவனின் குழந்தைப் பிராயத்தில் பேசிய மழலை உன் இதயத்தில் மத்தாப்பாய்ப் பூக்கவில்லையா.. பிறந்த போது உனக்குள் அப்பா என்கிற அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்ததில் பெருமிதம் கொள்ள-வில்லையா.. அந்தக் கள்ளங்கபடமற்ற பூஞ்சிரிப்பை எத்தனைமுறை இலவசமாய் அனுபவித்திருப்பாய்.. படித்துப் பலரும் மெச்சும் பண்டிதனாய் உருவெடுக்கையில் எழுந்த மகிழ்வில் மனதெங்கும் சிலிர்த்துக் கொள்ளவில்லையா என்று கரைபுரண்டு ஓடியது. குருவி சற்றும் தளராத உத்வேகத்துடன் கூட்டைச் சீரமைப்புச் செய்திருந்தது. உள்ளூர ஒரே ஒரு முந்தைய குஞ்சின் பஞ்சுச் சிறகு ஒரு ஓரத்தில் செருகிக் கொண்டிருந்தது. குருவி அதில் முகம் ஒற்றி இதமாய்க் கண் அயரத் தொடங்கியது.

பப்பாளி மரத்தில் சிறிது சிறிதாய் இருந்த காய்கள் பருக்கப் பருக்க அவருள் குற்றவுணர்ச்சி பருத்து, துக்கம் கலைந்து, மனது அவமானத்தில் கூசத் தொடங்கியது.

– ஆகஸ்ட் 2010

Print Friendly, PDF & Email

2 thoughts on “பப்பாளி மரம்

 1. நண்பரே, கதை நன்றாக வந்திருக்கிறது.
  முடிவும் பொருத்தமாக அமைந்துள்ளது.
  சிறுகதைக்கு தலைப்பாக,
  ‘ஆண்மரம்’
  என்றே பெயர் வைத்திருக்கலாம்.

 2. நண்பரே, கதை நன்றாக வந்திருக்கிறது.
  முடிவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

  சிறுகதைக்கு தலைப்பாக, ‘ஆண்மரம்’ என்றே பெயர் வைத்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *