பந்தயக் குதிரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2023
பார்வையிட்டோர்: 4,113 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓடு,ம்,..ஓடு,.,.ஓட்டம்ஓட்டம் ஓட்டம்,…

தவற இருந்த பேருந்தைப் பிடித்தாயிற்று. மாலை ஆறு மணி. அதிகாலையில் ஆறு மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பியவன் நான். அன்றாடம் பள்ளி முடிவடைவதென்னவோ மதியம் இரண்டரை மணிக்கு. ஆனால், உடனே வீட்டிற்குப் புறப்பட்டதாகச் சரித்திரமே இல்லை. ம்,. நாளை மறுநாள் வரலாற்றுப் பாடத்தில் தேர்வு வேறு. ஆமாம், தேர்விற்குத் தயாராக வேண்டும். முதலில் மனம் தயாரானது.

பாடமோ புறப்பாடமோ ஏதாவது ஒன்று தினமும் இருக்கும். வகுப்பில் நடத்தப் பட்ட பாடங்களைப் பேருந்தில் அன்றே திருப்பிப் பார்க்க நாற்பத்தைந்து நிமிடங்கள் போதவில்லை. என் நிறுத்தத்தில் இறங்கும் போது ஒரு பகுதியையாவது முடித்த மகிழ்ச்சியை மீறி மீதமிருக்கும் பாடங்கள் பூதாகாரமாக பயமுறுத்துவதே வாடிக்கையானது. அதனையும் வென்று சிற்சில சமயங்களில் மனம் திருட்டுத்தனமாக நினைவுகளை அசை போட்டுவிட்டு பின்னர் குற்றவுணர்வில் தவிக்கவும் தவறியதில்லை. ஆனால், எனக்கு நாளை மறுநாள் வரலாற்றுப் பாடத்தில் தேர்வு, படிக்க வேண்டும். ஆமாம், ஆமாம் படி, அகத்தில் இருந்த குதிரை ஊக்குவித்தது.

பேருந்தின் சன்னல் வழியே தொலைவில் ஒரு பறவை பறப்பது தெரிந்தது. சட்டென்று காலையில் வீட்டினருகில் புதரில் பத்திரமாக விட்டுவிட்டு வந்த புறாக்குஞ்சின் ஞாபகம் வந்தது.

அவசர அவரமாய் பேருந்தைப் பிடிக்கும் பதற்றத்தில் ஓட்ட நடையில் வந்தவனின் வழியில் கிடந்தது. அடிபட்டதாலோ இல்லை இறக்கை முறிந்ததாலோ பறக்கமுடியாமல் லேசான மார்புத் துடிப்புடன் கீழே கிடந்த அந்தப் பறவை என் ஓட்டத்தை நிறுத்தியது. இரக்கத்தில் என் மனம் உருகியது. அவசரத்தில் செய்வதறியாது வழியில் கிடந்த அதனைத் தூக்கி சற்று தொலைவிலிருந்த ஒரு புதரில் விட்டேன், யார் காலிலும் மிதி படாமலாவது இருக்கட்டுமே என்று. கையில் தூக்கிய போது தான் அதன் பஞ்சு போன்ற சிற்றுடலில் மெலிதாகத் துடித்த அதன் மார்புத் துடிப்பை உணர முடிந்தது. பாவம்,… அது இப்போது என்னவாயிற்றோ தெரியவில்லை. இறங்கியதும் பார்க்க வேண்டும்.

‘பிறகு தேர்வு? உனக்கு உபரியான நேரம் கூட இருக்கிறதோ?’ கேட்ட குதிரையை, இல்லை ஒரு ஐந்து நிமிடம் தான், பார்த்து விட்டுத் தான் போகப் போகிறேன்’, என்று அடக்கினேன். வரலாறு படித்தேன் சில நிமிடங்கள், அந்த ஐந்து நிமிடத்தை முன்பே சரிக்கட்டுவதாய் எண்ணி.

அம்மா எப்போதும் சொல்வதுண்டு பேருந்தில் படிக்காதே, கண்களுக்கு நல்லதல்லவென்று. ஆனால், அம்மாவிற்கு நான் முடிக்க வேண்டிய பள்ளி வேலைகளின் அளவைப் பற்றித் தெரியாது. பள்ளி வேலை இல்லையென்றாலும் பழக்கத்தினால் கதைப் புத்தகத்தையாவது வாசிக்க ஆரம்பித்து விடுவேன். ஆங்கில ஆசிரியையும் தமிழாசிரியையும் வாசித்தல் மட்டுமே மொழிப்பாடத்தில் மதிப்பெண்கள் பெற உதவும் என்று வலியுறுத்துகின்றனர். மொழியில் கவனம் செலுத்தினால் கருத்தும் கதையும் புரிவதில்லை. கதையில் கவனம் செலுத்தினால் சொற்கள் மனதில் பதிவதில்லை. இரண்டு முறை படிக்கலாம் தான். ஆனால், நேரம்?

‘அதிலிருக்கும் அலங்காரச் சொற்களை மனனம் செய்து கொள், பிறகு உபயோகப் படுத்து, மதிப்பெண்கள் கிடைக்கும்’, என்று குதிரை குறுக்கு வழி சொன்னது. அது எனக்குப் பிடிக்காதே என்றால், எல்லோரும் செய்வது தானே என்று சால்ஜாப்பும் தந்தது. சட், பூமியில் நான் இருக்கும் வரை இந்தக் குதிரையும் இருக்கும் என்ற ஆயாசமே எரிச்சலூட்டியது.

கணினியில் அதிகம் உட்கார்ந்து வேலை செய்தாலும் அம்மாவிற்கு நான் பொழுதை வீணாக்குவதாய்த் தான் எண்ணம். திரையைப் பார்த்துப் பார்த்து ஒரேயடியாய் அலுத்துப் போன எனக்கல்லவா தெரியும் பள்ளி ஒப்படைப்புக்கள் என்னைப் படுத்தும் பாடு. மதிப்பெண்களுக்காக கெடுவிற்குள் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் மதிப்பெண்கள் குறைக்கப் படும். மதிப்பெண்களையும், கெடுவையும் மட்டுமே நினைத்து நினைத்து பல வேளைகளில் வேலையை ஏனோ தானோவென்று தான் முடிக்க முடிகிறது. மனதிற்குள் ஓர் அதிருப்தி நிரந்தரமாக உட்கார்ந்து விடுகிறது. மதிப்பெண்கள் இல்லையென்றால், அவ்வேலையைச் செய்வோமா என்பதே சந்தேகம். மதிப்பெண் என்ற மீனைக் காட்டினால் தானே மாணவ டால்பின்கள் வித்தை காட்டும்! இதில் என்ன வருத்தம் என்றால் கடிவாளைத்தைத் தாண்டிப் பார்க்கவே முடிவதில்லை.

பேருந்தினுள் இருந்த ஓரிருவரைத் தவிர மற்ற மாணவர் மற்ற மாணவர் யாவரும் அவரர் புத்தகத்தினுள் புதைந்திருந்தனர். நீயும் கூட படிக்க வேண்டும் தெரியுமா? குதிரை உள்ளிருந்து என்னை முடுக்கியது. பத்து பாடங்கள் படிப்பதென்றால் சும்மாவா?.. படி. அதற்காக எட்டை மட்டும் எடுத்து படித்தால் எதிர் காலத்தில் உபகாரச் சம்பளம் பெற முடியாதே. எடுத்துக் கொண்டால் மட்டும் முடிந்ததா, பத்து சிறப்புத் தேர்ச்சி வேண்டும், மகனே. ஓடு ஓடு,ம் ம்,..ஓடு,…

சிறிது நேரத்தில் கையில் இருந்த வரலாற்றுப் பாடத்திலிருந்து மனம் திடீரென்று தங்கை நந்தினியின் மேல் தாவியது. அத்துடன் அடக்க முடியாத சிரிப்பும் பொத்துக் கொண்டு வந்தது. ஜப்பானியர் தங்கள் ஆட்சி காலத்தில் சிங்கை மக்களின் அமைதியைக் குழைத்தனர்’ என்று அவள் சென்ற ஆண்டு தன் தேர்வில் ‘ஒலி வேறு பாடு பகுதியில் எழுதியதற்கு திருத்தாமல் மதிப்பெண் கொடுத்திருந்தார் அவளுடைய தமிழாசிரியர். அப்போது தொடக்க நிலை ஐந்தில் இருந்த நந்தினி ஒரு மதிப்பெண்ணைக் கூட இழக்கத் தயாராயில்லை. ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் கூடாது என்றும் அம்மா பள்ளிக்கு வரக்கூடாது என்றும் திங்கு திங்கென்று குதித்தாள்.

ஆனால், அம்மாவிற்கு ஒரு மதிப்பெண்ணிற்காக அவள் தமிழைக் கொல்வதில் துளியும் உடன் பாடில்லை. எல்லோரும் அப்படித்தான் எழுதினோம், மதுமிதாவைத் தவிர என்றாள். மதுமிதா எழுதிய ‘குலைத்தனர்’ மதிப்பெண்ணை இழந்து, மற்ற எல்லோருக்குமே மதிப்பெண் கிடைத்ததாம்.

வென்றது கடைசியில் நந்தினி தான். அம்மாவிற்கு ஒரு தொலைபேசியழைப்பிற்கு மட்டுமே நேரமிருந்தது. அப்போது ஆசிரியை வீட்டில் இருக்கவில்லை. நந்தினிக்கு மதிப்பெண் முக்கியமென்றால் அம்மாவிற்குத் தன் வேலையும் அது கொடுக்கும் பணமும் முக்கியமாயிற்றே. பெரியக ‘காடி வாங்க வேண்டும். இதற்காக விடுப்பாவது எடுப்பதாவது? இருந்தாலும், பல நாட்கள் ‘சாதம் தான் குழையும், அமைதி குலையும்’, என்று அரற்றிய படிதான் இருந்தார். தமிழில் உதவ முடியாத பெற்றோரின் பிள்ளைகள் பற்றிய கவலை அவரை அரித்தது. தமிழாசிரியர்கள் மேலும் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை கல்வியமைச்சராய் அவதாரமெடுத்துப் பலமுறை வலியுறுத்திய படி இருந்தார்.

சில நாட்களிலேயே, ‘பாவம் ஆசிரியர்களும் என்ன தான் செய்வார்கள் அவர்களுக்கும் நேரமேது’, என்று கீழிறங்கி பச்சாதாபப்பட்டு பின்னர் மறந்தும் போனார். சமீப காலங்களில் தொலைத் தொடர்புச் சாதனங்கள் மற்றும் விளம்பரங்கள் தங்களை ‘அணு’கச் சொல்லாமல் அனு’கச் சொன்னது கண்ணில் படும் போதெல்லாம் அவரை உறுத்தியது. நானே கூட வெகு நாட்களுக்கு இரண்டு சுழி தான் சரியென்று நினைத்திருந்தேன்.

நந்தினி அன்று குதித்ததை இன்று நினைத்தாலும் எனக்குச் சிரிப்புப் பீறிடும். மதிப்பெண் வேட்டை அவளுக்குக் கைவந்த கலையாகியிருந்தது. அதே சமயம், கிடைத்த ஒரு மதிப் பெண்ணிற்காகவேனும் அவள் தன் ஒலி வேறுபாட்டில் தெளிவாகியிருந்தாள். எனக்குக் கூட அச் சம்பவங்களால் வேறுபாடுகள் தெளிவாய் மனதில் பதிந்தன. அரை மதிப்பெண் வித்தியாசத்தில் தன் தோழியோடு போட்டி போடும் நந்தினி தான் குறைத்து வாங்கும் போது தோழியோடு ஒரு வாரம் வரை பேசாமல் கூட இருந்தாள். அதே போலத் தான் அவளுடைய தோழிகளும். நந்தினியைச் சொல்லிக் குற்றமில்லை.

மாணவன் பாடத்தைச் சரிவர புரிந்து கொண்டிருக்கிறானா என்று அறியும் ஒரு கருவியான தேர்விற்கு மதிப்பெண் என்ற துருப்பிடித்துள்ளதே. யார் தான் என்ன செய்ய முடியும்.

ஐயோ! துருவென்றதும் தான் என் ரசாயனப்பாடத்தின் நாளைய தேர்வு நினைவிற்கு வந்தது. அடடா எப்படி மறந்தேன். சரி, இரவு உறக்கம் நான்கு மணி நேரமோ இல்லை அதற்கும் குறைவோ, இருந்தாலும் வழக்கமாய் வாங்கும் வகுப்பின் முதல் மதிப்பெண்ணைத் தக்க வைக்க கண்ணை மூடாமல் படிக்க வேண்டியது தான். மதிப்பெண்களுக்காகவே கல்வி என்ற நிலை போய் அறிவுக்குக் கல்வி என்ற நிலை வருமோ? .ம்,. ம்…. பெரிய பேராசை தான், உள்ளிருந்த குதிரை இடித்தது.

நந்தினியோடு ஐந்து நிமிடம் உட்கார்ந்து பேசி எத்தனை நாளாகின்றன, மனம் ஏங்குகிறது. தங்கையோடு உட்கார்ந்து அரட்டையா! அதிக ஆசை தான். அவள் தொடக்க நிலை இறுதியாண்டில் படிக்கிறாள் நினைவிருக்கிறதா? ம், சரி சரி அவளை நான் தொந்தரவு செய்ய மாட்டேன். அவ்வப்போது என் நண்பன் சொல்வான், அவன் அவனுடைய பெற்றோருக்கு ஒரே பிள்ளையாயிருப்பதால் வாழ்க்கை தனிமையாக இருப்பதாக. உடன் பிறந்தோர் இருந்தும் ஒரே வீட்டில் பேசவும் நேரமில்லை என்பதை நான் அவனுக்குச் சொன்னதுண்டு.

அப்பாவாவது பூனைக்கு மணியைக் கட்டுவார் என்று அம்மா எதிர் பார்த்தார். அப்பாவிற்குத் தன் வேலையைத் தக்க வைத்துக் கொண்டு, தனியார் வீடு வாங்கும் கனவை நனவாக்கும் குறிக்கோளும் இருந்ததே. ஆயிரம் கவலைகளில் ‘ஒலி வேறுபாடு’ பற்றிச் சொன்னால் அவர் வேற்றுக் கிரகவாசியைப் போல திருதிருவென்று முழித்தார். தவிர, பள்ளிப் பாடங்கள் பற்றி அவருக்கு அதிகம் தெரியாது. இவ்வருடம் நந்தினி தொடக்கநிலை ஆறிலும் நான் உயர் நிலை மூன்றிலும் படிப்பது அவருக்கு சந்தேகமே இல்லாமல் நிச்சயம் தெள்ளத் தெளிவாய்த் தெரியும். அதற்கு மேல் எதிர் பார்ப்பதும் அநியாயமாயிற்றே.

போட்டி மிகுந்த அலுவலக வாழ்க்கையில் வார இறுதியின் மதியத் தூக்கம் அப்பாவுக்கு ஆடம்பரமானதில் வியப்பில்லை. பாவம், அவரும் வாழ்க்கை ஓட்டத்தில் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி என்னைப் போலவே ஓடுகிறார். நான் மதிப் பெண்களையும் புள்ளிகளையும் நோக்கி ஓடினால் அவர் பணத்தையும் பொருளையும் நோக்கி ஓடுகிறார். என்னுடைய இன்றைய ஓட்டமே கூட அவரைப் போல எதிர் காலத்தில் நானும் ஓடத் தானே. ‘எதிர் கால ஓட்டத்தின் வெள்ளோட்டம்!’, ஹஹ்ஹஹ்ஹா, கெக்கலித்தது குதிரை.

ஓட்டத்தையும் தாண்டி சில சமயம் வார இறுதியில் சேர்ந்து சாப்பிடும் போது அம்மாவும் அப்பாவும் கூறிய கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. அதில் எனக்கு மிகவும் பிடித்தது அப்பா தன் தாத்தாவின் நினைவாகக் கூறும் சம்பவங்களே. சுமார் ஏழெட்டு வயதில் நடந்த சம்பவத்தை அப்பா விவரிக்கும் போது அவர் முகமே அலாதியாக மாறி விடும். இறுக்கம் தளர்ந்து பிரகாசிக்கும்.

தன் தாத்தாவின் நரைத்த முடிகளை முடிகளை அகற்ற அப்பாவும் அவருடைய தம்பி தங்கைகளும் போட்டி போட்டுக் கொண்டு உதவுவார்களாம். அப்போதெல்லாம் செயற்கைச் சாயம் இல்லாத காலம். தாத்தாவோ தன் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துபவர். காதோரங்களில் பேரப் பிள்ளைகள் நரைமுடிகளை அகற்றும் போது சுகமாகத் தூங்குவாராம். அகற்றப்பட்ட ஒவ்வொரு முடிக்கும் பத்து காசு கொடுப்பாராம். அடிக்கடி, ‘நரைய மட்டும் எடுக்கணும், கருப்பு முடிய எடுக்கக் கூடாது, என்ன?’, என்பாராம். கேட்கக் கேட்க எனக்கு ஆர்வமாயிருக்கும். கடைசியில் அப்பா, ‘அதெல்லாம் ஓட்டப் பந்தயம் இல்லாத காலம்’, என்று முடிப்பார். சரி சரி, இப்போது பந்தயத்தில் நீ ஓட ஆரம்பித்தாயிற்று, ஓடி வெற்றி கொள் என்று குதிரை உற்சாகப் படுத்தியது. புத்தகத்தில் கவனத்தைத் திருப்பினேன். இப்போது ரசாயனமே படியேன், வரலாற்றுக்குத் தான் இன்னுமொரு நாள் இருக்கிறதே என்றது குதிரை. ரசாயனப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வரலாற்றைப் பைக்குள் திணித்தேன்.

சிறிது நேரத்தில் நிறுத்தம் வந்தது. தன்னிச்சையாக இருக்கையை விட்டு எழுந்து பேருந்திலிருந்து இறங்கினேன், வேதியல் புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமலேயே. வீட்டிற்குச் செல்லும் வழியில் தெரிந்த முகங்கள் கொடுத்த புன்னகைகளை வாங்கிக் கொண்டு நானும் திரும்பக் கொடுத்தேன். நான் பேருந்தில் வாசிப்பது அம்மாவிற்குத் தெரிய வந்ததே ஒரு கதை. ஒரு முறை நான் பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்தில் ஏறிய அம்மாவின் தோழி ஒருவர் என்னருகில் அமர்ந்து என்னை ஏதோ கேட்டாராம். ஆனால், படிக்கும் மும்முரத்தில் இருந்த என் காதில் ஒன்றும் விழவில்லை. அதை அப்படியே அம்மாவிடம் சொல்லி, ‘உன் பையன் ஆனாலும் பயங்கரப் படிப்பாளியா இருக்கானே”, என்றிருக்கிறார். அவரை நான் அலட்சியப் படுத்தியதாக நினைத்திருப்பாரோ என்று அம்மா இரண்டு நாட்களுக்குக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அம்மா எப்போதுமே அப்படித் தான். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அதிகம் கவலைப் படுவார். சட்டென்று இரக்கமும் பட்டுவிடுவார்.

அம்மா சிறுவயதில் படு வெகுளியாய் இருந்தாராம். சுமார் பத்து வயதிருக்கும் போது ஒருமுறை வீட்டில் தனியாக இருக்கும் போது வாயில் மணி ஒலித்ததாம். அம்மா போய் கதவைத் திறந்திருக்கிறார். அப்போது தான் பள்ளியிலிருந்து திரும்பியிருந்த அவர் வீட்டில் இருந்த ஒராளுக்கு மட்டுமே தேவையான உணவை உண்ண விருந்தாராம். வாசலில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி தான் சாப்பிட்டு மூன்று நாளாகிறதென்றும் ஏதேனும் காசு தருமாறும் கேட்டாராம். அம்மாவிடம் காசில்லை. காசில்லை. தான் தான் உண்ணவிருந்த உணவை அப்படியே அவரிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னாரம். பசியோடு இருந்த அம்மா, மாலையில் பாட்டி வந்து சமைத்தது தான் சாப்பிட்டாராம்.

இருந்ததில் பாதியாவது கொடுக்க மாட்ட, எல்லாத்தையும் கொடுத்துட்டு இப்பிடி பட்டினி இருக்கயே,’ என்று பாட்டி அம்மாவிடம் கேட்டிருக்கிறார். இதில் உச்ச கட்டமே இனிமேல் தான். அடுத்த நாளே, அடுக்குமாடிக் கட்டடத்தில் வசித்த பாட்டியின் இந்தியத் தோழிகள் எல்லோருமே உணவோ காசோ கொடுத்திருந்தனர் என்று தெரிந்திருக்கிறது. காலையிலிருந்து பலமுறை சாப்பிட்டு விட்டு, மதியம் சாப்பிட்டு மூன்று நாட்களாகின்றன என்று கூறியதை அப்படியே அம்மா நம்பியிருக்கிறார்.

நட்பு வட்டாரத்தில் பல நாட்கள் அம்மாவை ‘அன்னலட்சுமி’ என்று கேலி செய்திருக்கிறார்கள். என்ன ஒரேயடியாய் அசை போடுகிறாய் மாடு மாதிரி, என்னைப் போல ஓடு, ஓடு, ம்..- பீற்றிக் கொண்டது குதிரை.

வேகமாய் நடந்தேன். சாலையோரத்தில் பூத்துக் குலுங்கிய கொன்றைப் பூக்களுடன் அறிமுகம் செய்து கொள்ள மனம் வழக்கம் போல விழைந்தது. ஒரே நொடியில், ஒட்டப்பந்தயக் குதிரை உள்ளிருந்து துரத்தியது. தூரத்திலிருந்து பார்த்தது போதும், அதுவே அதிகம்,..ம்,. ஓடுஓடு, பூக்களெல்லாம் உனக்காகவென்றா நினைத்தாய் மடையா. அவை நம் நாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கல்லவா. அலங்காரங்கள் இல்லாவிட்டால் நமது கட்டடக் காட்டைக் கண்டு அஞ்சி ஓட்டமாய் ஓடி விடுவரே. மனக்குதிரை கடிவாளத்தையும் ஓட்டத்தையும் நினைவு படுத்தியது. சரியென்று பூக்களின் நினைவுகளை மட்டும் சுமந்தபடி வீட்டிற்கு விரைந்தன கால்கள்.

நேரமில்லாதது ஒரு புறமிருக்கட்டும். உயர் நிலை மூன்றில் படிக்கும் ஒரு இளையன் பூவுடன் பேசுவதை யாரேனும் பள்ளித் தோழிகள் பார்த்து விட்டால் விஷயம் காட்டுத் தீ போலல்லவா பரவி பள்ளியின் தலைப்புச் செய்தியாகி விடுமே. நாட்டு நடப்பு பற்றியறிய நேரமில்லை என்றாலும் பள்ளி வம்புகள் மட்டும் எல்லோர் கவனத்தையும் கவர்ந்தன. கிண்டல்கள் என்னை அதிகம் பாதிக்காமல் பார்த்துக் கொள்வேன் என்றாலும் கூட சில வேளைகளில் எரிச்சல் தலை தூக்கும். விடுமுறையின் கதையே வேறு. பெயரளவிலே தான் நீண்ட விடுமுறை விடப்படுகின்றன. முடிக்க வேண்டிய பாடமும் ஒப்படைப்பும் பள்ளியிலிருப்பதைப் போலவே இருக்கும். வீடு பள்ளியாகியிருக்கும். அவற்றை முடிக்கவும் மறுபடி பள்ளிக்கூடம் திறக்கவும் சரியாகவே இருக்கும். சில வருடங்களாக விடுமுறைக்கு அம்மாவுடன் இந்தியாவிற்குக் கூடப் போக முடியாததாகி இருந்தது.

சரி, காலையில் இருட்டில் யாரும் அறியாமல் பூக்களுக்கு, நேரமிருந்தால், ஒரு காலை வணக்கம் செலுத்தலாமென்று விடுவிடுவென்று நடந்தேன். மனம் மட்டும் கொல்லென்று பூத்திருந்த பூக்களின் செந்தூரத்திலேயே லயித்திருந்தது. பூக்களின் பாகங்களும் மகரந்தச் சேர்க்கையும் கற்றுத் தந்த கல்வி அதன் நிர்மலமான அழகையும் வண்ணத்தையும் ரசிக்க அவகாசம் கொடுக்கவில்லையே. ‘அட்டா, உயிரியல் புத்தகத்தில் பூக்களைப் பற்றிப் படிக்கும் போது தடவித் தடவிப் பார்த்துக் கொள்ளேன், அதை விடுத்து என்ன ஒரே புலம்பலாய் புலம்புகிறாய் இன்று’ – ஏசியது குதிரை.

பூக்களைப் பார்த்ததும் இந்தியாவில் இருக்கும் தாத்தாவின் நினைவு வந்தது. ஓய்வு பெற்ற பொறியாளரான அவர் தோட்டக் கலையில் ஆர்வம் கொண்டவர். அவர் இரண்டு மாதங்கள் தங்கியிருந்த போது அதனைப் பற்றி நிறையக் கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்ததுண்டு. ஆனால், தேர்வும் புறப்பாட நடவடிக்கைகளையும் தாண்டி என்னால் கொஞ்சமும் நேரத்தைத் திருட முடியாததால் அது சாத்தியப்படவில்லை. அவர் இருந்த போது தன் மகளான என் அம்மாவிடம், ‘இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு புத்திக் கூர்மை இருக்கு. ஆனா, எதையுமே முழுமையா செய்யறதில்ல. அவங்களச் சொல்லிக் குத்தமில்லை. அவங்களுக்கு நேரமில்லை. பளு அதிகம், பாவம்’, என்று கூறினார். குதிரைகளைப் பற்றி உன் தாத்தாவிற்கு என்ன தெரியும், நீ சீக்கிரம் வீடு போய்ச் சேர்’- துரத்தியது குதிரை.

வாழ்க்கைக்காகத் தயார்ப் படுத்துவதிலேயே தன் வாழ்க்கையைத் தொலைக்கும் ஒரே இனம் மனித இனமோ! தாயார்ப் படுத்துவதில் அவனுக்கிருக்கும் முனைப்பில் கால் பங்கு கூட வாழ்க்கையை வாழ்வதில் இல்லாமல் போனதே ! பொருளின் பின்னே வாழ்க்கை ஓடுவது நின்று வாழ்க்கைக்குப் பொருள் என்ற நிலை,.. ‘ஓஹோ,.. மறுபடியும் மறுபடியும் பேராசையா?’, குதிரை இம்முறை வலுவாகவே இடித்தது. சரி பேராசை தான். ஆனால், கனவு கூடக் காணக் கூடாதா? ‘கனவு கண்டு கண்டு,..? பந்தயத்தில் பின் தங்கவா?”.

தொடக்கப்பள்ளியில் இருந்த போது எனக்குக் கூடைப் பந்தாட்டம் என்றால் உயிர். தினமும் கொஞ்ச நேரமாவது அனுபவித்து விளையாடி மகிழ்வேன். அப்போதெல்லாம் புள்ளி வேட்டை இல்லை. ஆனால், அதையே ஆசை ஆசையாய் உயர்நிலைப் பள்ளியில் புறப்பாடமாக எடுத்த எனக்கு நாளடைவில் ரசித்து விளையாட முடியாமற் போனது. இப்போதெல்லாம் மனம் ‘புள்ளி’யைத் தாண்டி பந்தை வீசுவதே இல்லை. போட்டிகளில் சேரவும், முடிந்தால் வெல்லவும், புள்ளிகளைச் சேர்க்கவுமே மனம் விழைந்தது. போட்டி வேறு அதிகமானது புள்ளி வேட்டையில். விளையாட்டு ரசிக்கவில்லை. அலுப்பையே கொடுத்தது.

புகுமுக வகுப்புக்கு அதுவும் முதல் நிலையிலிருந்த கல்லூரிக்குச் செல்ல ஒவ்வொரு புள்ளியும் இன்றியமையாததாகியிருந்தது. மொத்ததில் சிறு வயது கூடைப் பந்தாட்ட ஆர்வம் சென்ற இடம் தெரியாது தொலைந்தது. ‘புள்ளிகளுக்கு வழி பண்ணு தம்பி, பெருமூச்சு போதும், சரியா? எங்கே பார்ப்போம் எவ்வளவு வேகமாக நடக்கிறாய் என்று’.

வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்ததுமே, தொலைக் காட்சி பார்த்து எத்தனை தினங்களிருக்கும், இரத்தமும் சதையுமான என் மனிதமனம் கணக்குப் போட்டது. கணக்கை முடிக்க விடாமல் சட்டென்று குதிரை இடையூறு செய்தது. ‘நாளை மறுநாள் வரலாறு தேர்வு, அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டாமா’, என்று பயமுறுத்தியது. ஒரு முறையாவது மதிப் பெண்ணை மறந்து அந்தப் பாடத்தை ஒன்றிப் படித்து அதனுள்ளேயே ஒன்றிவிட வேண்டுமென்ற சின்ன பொறி ஒன்று என்னுள் ஒளிந்து ஒளிர்ந்து கொண்டேயிருந்தது.

ஆனால், படிக்கும் போதெல்லாம் எப்படிக் கேள்வி கேட்டால் எப்படி பதில் எழுதி அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற நுணுக்கத்தைத் தாண்டி கவனம் போவதில்லை. தொலைவில் காணப்படும் பச்சைப்புல் போன்ற மதிப்பெண்ணை நோக்கி மட்டுமே ஓட அல்லவா கடிவாளத்துடன் பழக்கப் படுத்தப் பட்டிருக்கிறேன்.

புல்லென்றதும் தான் நினைவு வந்தது, புதரில் விட்ட புறாக் குஞ்சு, அடடா, ஆழ்ந்த யோசனையில் மறந்தேனே, ஆனால், மறுபடியும் திரும்பி அங்கு செல்ல நேரம் இருக்குமா ? ‘தேர்வா, புறாவா?’ — குதிரை.

தேர்வு தான், தேர்வு தான், மனம் அலறியது. ஆனால் பாவம், அதற்னென்னவானதோ? அந்தச் சிறிய பறவை உயிர்ப் பிழைத்ததா தெரியவில்லையே. ‘புறாவா தேர்வா?’ உறுமியது குதிரை. தேர்வு தான், தேர்வு தான். ‘சரி, பின் என்ன யோசனை, சீக்கிரம் வீட்டுக் கதவைத் திறந்து படிக்க ஆரம்பியேன். இல்லையென்றால், பத்தயத்தில் தோல்வி தான் உனக்கு, ஆமாம், நினைவிருக்கட்டும், ம், ஓடு, ம்’. மதிப்பெண்கள் ஓடு, ம், புள்ளிகள், ஓட்டம், ஓட்டம், ஓட்டம், முடிவற்ற ஓட்டம்…

– திசைகள்.காம் – ஜூன் 03

சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *