பத்தினிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 6,902 
 
 

அது 1988 ம் வருடம்….

முப்பது வருடங்களுக்கு முன், சுதாகருக்கு சுமதியுடன் கல்யாணம் ஆனது. பெண் பார்த்து, பெரியோர்களின் ஆசியுடன் முறைப்படி நடந்த கல்யாணம். முதலிரவில் சுதாகர் மனைவியிடம் மனம்விட்டு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அவளை அன்றே கலவிக்கு வற்புறுத்தவில்லை.

அதனாலேயே சுமதிக்கு கணவன் மீது ஒரு மரியாதையும் ஏராளமான காதலும் உண்டானது. அவன் அவளிடம் எப்போதும் சிரிக்கச் சிரிக்க பேசினான். சுமதிக்கு தன் கணவன் சிடுமூஞ்சியாக இல்லாமல் ஜோவியலாக இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

அவர்கள் இருவரும் ஊட்டிக்கு ஹனிமூன் சென்ற போதுதான் முதன் முதலாக புரிதலுடன் கூடிய சங்கமம் அவர்களுக்குள் நிகழ்ந்தது. , .

உடல் ரீதியான புணர்ச்சி முடிந்ததும், சுதாகர் சிரித்துக்கொண்டே சுமதியிடம் “இன்றையிலிருந்து நாம் கலவியில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் நான் உனக்கு ரெண்டாயிரம் ரூபாய் தருவேனாம்…அதை நீ கோவித்துக் கொள்ளாமல் வாங்கிக் கொள்வாயாம்…” என்றவன், அதே சிரிப்புடன் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவளிடம் நீட்டினான்.

சுமதிக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் தன்னுடைய கணவன்தானே…மறுக்காமல் அதை வாங்கிக் கொள்வதுதான் மரியாதை என்று நினைத்து கைநீட்டி பணத்தை வாங்கிக் கொண்டாள்.

முதல் முயங்குதலில் ஆரம்பித்த இந்தப் பழக்கம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திருமணம் ஆனதிலிருந்தே சுமதி கணவன் சுதாகர் மீது உயிரையே வைத்திருந்தாள். அவளுக்கு பிடிக்காத ஒரே விஷயம் சுதாகரிடம் வேறு ஏதாவது ஒருபெண் நெருங்கிப் பேசினாலோ அல்லது பழக ஆரம்பித்தாலோ – அது தன்னுடைய தங்கையாகவே இருந்தாலும் – அவள் பத்ரகாளியாக மாறி, அந்தப் பெண்ணை அமில வார்த்தைகளால் குதறிவிடுவாள்.

அதுதவிர ஒழுக்கம் தவறும் ஆண்களையும், பெண்களையும் கண்டால் அவளுக்கு ஆகவே ஆகாது. பெண்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அவர்களிடம் வாலாட்டும் ஆண்களை நிற்கவைத்துச் சுட வேண்டும் என்பாள்.

அப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு கோவாவில் தெஹல்கா ஆசிரியர் தருண்தேஜ்பால் லிப்டில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதால் அவள் அந்தப் பத்திரிக்கை வாங்குவதையும் படிப்பதையும் உடனடியாக நிறுத்திவிட்டாள்.

அத்தோடு நிற்காமல், தேஜ்பாலை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வெகுண்டு மற்ற பத்திரிக்கைகளுக்கு கடிதமும் எழுதினாள்.

பல வருடங்களுக்கு முன், தன்னைப் பார்த்து ஒருவன் அசிங்கமாக சைகை செய்ததைக் கண்டு பொறுக்காமல் அவனை அங்கேயே செருப்பால் அடிக்க, அது டிவியிலும், பேப்பரிலும் பெரிதாக வந்துவிட்டது. அதைத் தொடர்ந்த ஒரு பத்திரிகைப் பேட்டியில், “விட்டிருந்தால் அவனைக் கொலையே செய்திருப்பேன்…. உயிர் என்பது கரப்பான்பூச்சிக்கும், மனிதர்களுக்கும் ஒன்றுதான்….மனிதர்களைக் கொல்ல நாம் பயப்படுகிறோம், கொன்றபிறகு குற்ற உணர்ச்சியில் அதிகம் நடுங்குகிறோம் அவ்வளவுதான். ஒழுக்கம் கெட்டவர்களைக் கொன்றால் அதில் தப்பே இல்லை…”என்றாள்.

தற்போது 2018 ம் வருடம்…

சென்னையின் நங்கநல்லூரில் சொந்தவீட்டில் சந்தோஷமான வாழ்க்கை.

இந்த முப்பது வருடங்களில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்து அவன் நன்கு படித்து வேலையில் சேர்ந்து திருமணமும் ஆகி இப்போது பெங்களூரில் மனைவியுடன் இருக்கிறான்.

சுதாகருக்கு தற்போது வயது ஐம்பத்தி ஏழு. அவர் ஐம்பது வயதாக இருக்கும்போதே அவரை ஷுகர் தொற்றிக்கொண்டது. ஆனால் கடந்த ஒரு வருடமாக ஷுகர் அதிகமானதால் தினமும் இன்சுலின் உபயோகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

சுமதிதான் அவரை நன்கு கவனித்துக் கொண்டாள். பெரும்பாலான சமயங்களில் அவள்தான் கணவருக்கு இன்சுலின் போட்டு விடுவாள்.

ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் ஜெனரல் மானேஜராக இருக்கும் சுதாகருக்கு அடுத்த மூன்று வருடங்களில் ரிடையர்மென்ட்.

ஆனால் அவருக்கு போதாத நேரம், கம்பெனியில் திடீரென ஆள் குறைப்பில் ஈடுபட்டனர். அந்தக் குறைப்பில் சுதாகரும் பலியானார்.

சுதாகருக்கு சொந்த வீடும், அன்பான மனைவியும், ஏகப்பட்ட பேங்க் பாலன்ஸும் இருந்தாலும், கம்பெனி தன்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டதே என்று வருந்தினார்.

இந்த ஐம்பத்தி ஏழு வயதில் தனக்கு எவன் வேலை கொடுப்பான் என்று தவித்தார்.

கடைசி நாள் ஆபீஸிலிருந்து வீட்டுக்குத் தொய்வாக வந்தார்.

ஆனால் சுமதி அவருக்கு அன்று நிறைய தைரியம் சொன்னாள்.

“உங்களுக்கு என்னங்க கவலை? ஒரே பையன். அவனுக்கு நல்ல வேலை கிடைத்து, நல்ல இடத்தில் கல்யாணமும் நடந்துவிட்டது. பெங்களூரில் சந்தோஷமாக செட்டில் ஆகிவிட்டான். உங்க கடமையை நீங்க முடித்து விட்டீர்கள். இப்ப உங்களுக்கு சொந்த வீடு, கை நிறையப் பணம்… வீட்டிலேயே நிம்மதியாக இருங்க.” என்றாள்

“………………”

“ஆங்… உங்களுக்கு இன்னொரு பிக் சர்ப்ரைஸ். நீங்க ஒவ்வொரு தடவையும் என்னைக் குலாவும்போது ரெண்டாயிரம் பணம் தனியா கொடுப்பீங்களே… முப்பது வருசமா அது எல்லாத்தையும் நான் செப்பரேட்டா சேர்த்து வச்சிருக்கேன்…அதுவேற லட்சக் கணக்கில் என்னிடம் தனியாக இருக்கிறது…கவலையே படாதீங்க.”

கெட்டநேரம் வந்தால் சேர்ந்து வரும்போல…சுதாகரின் வாயில் சனியன் வந்து ஒட்டிக்கொள்ள, “அட… அப்படியா சுமி, இது தெரிஞ்சிருந்தா நான் எல்லாப் பணத்தையும் உனக்கே கொடுத்து வச்சிருப்பேனே….” என்றார்.

சந்தோஷத்தில் சுதாகர் உண்மையை மனைவியிடம் உளறிக்கொட்டி விட்டார். அதைவிடக் கசப்பான உண்மை தன் தவறை அவர் உணரவும் இல்லை.

ஆனால் சுமதியின் மனதில் அந்த வார்த்தைகள் முள்ளாகத் தைத்துவிட்டது. அப்போதைக்கு அவள் அதைப் பெரிது படுத்தவில்லை.

ஆனால் இரவில் படுக்கையில் தூக்கம் வராது வேதனையில் புரண்டு கொண்டிருந்தாள். சுதாகர் அவளருகில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அது என்ன சொன்னார்? “அட அப்படியா இது தெரிஞ்சிருந்தா எல்லாப் பணத்தையும் உனக்கே கொடுத்து வச்சிருப்பேனே…”

அப்படியென்றால் இத்தனை வருடங்களாக அவர் பல பெண்களிடம் போய் வந்திருக்கிறார்… அவர்களிடம் பணம் கொடுத்திருக்கிறார்….

எத்தனயோ முறை ஆபீசிலிருந்து லேட்டாக வந்திருக்கிறாரே… கேட்டால் பார்ட்டி என்பாரே… சற்று குடித்திருப்பாரே. ஓஹோ…எவளிடமோ படுத்துவிட்டு வந்திருக்கிறார்….

சட்டென படுக்கையில் இருந்து எழுந்து அடுத்த அறையிலுள்ள அவருடைய லேப்டாப்பைத் திறந்து மன்த்லி கிரெடிட்கார்டு அக்கவுண்டை அமைதியாக ஆராய்ந்தாள்.

வரிசையாக நல்லி சில்க்ஸ்; ஜிஆர்டி ஜ்வெல்லர்ஸ்; அடிக்கடி பத்தாயிரம், இருபதாயிரம் கேஷ் வித்ட்ராயல் என்று காணப்பட்டது. நகை, புடவை, பணம் என வாரி இறைத்திருப்பதை புரிந்துகொண்டாள்.

லேப்டாப்பை அணைத்து மூடிவிட்டு, அவருடைய ஐ-போன் மொபைலை எடுத்து போட்டோஸ் ஐகானை விரலால் ஒத்தினாள். பல பெண்களுடைய போட்டோக்கள்… அதில் சிலபெண்களுடன் சிரித்தபடி சுதாகர் போஸ் கொடுத்திருந்தார். .

சனிக் கிழமைகளில் ஆபீஸ் செல்வதாக தன்னிடம் பொய் சொல்லிவிட்டு பெண்களை மேய்ந்திருக்கிறார். போன மாதம்கூட நல்லியில் பத்தாயிரத்துக்கு புடவை வாங்கியிருக்கிறார். அவரது ஆட்டம் எத்தனை வருடங்களாகத் தொடருகிறதோ! என்னை நம்ப வைத்துக் கழுத்தை அறுத்திருக்கிறார்.

சந்தேகத்திற்கு இடமின்றி சுதாகர் என்னை ஏமாற்றியிருக்கிறார்.

ரேஸ், சீட்டாட்டம், குடி என்று இருந்திருந்தால் கணவன் என்பதற்காக ஒருவேளை அவரை மன்னித்துவிடலாம்.

ஆனால் இது பெண்கள் விஷயம். இவனுக்கு இனி என்ன மரியாதை?

ஒவ்வொரு முயங்குதலுக்கும் எனக்கும் ரெண்டாயிரம் கொடுத்து என்னைக் கேவலப்படுத்தியிருக்கிறான்….

இவனை சும்மா விடலாமா? கண்டிப்பாகக் கூடாது.

சுமதிக்குள் தூங்கிக் கொண்டிருந்த கருநாகம் படமெடுத்து சீறியது… விஷத்தைக் கக்கும் முன் தரையை ஓங்கி ஓங்கி அடித்தது.

மறுநாள் காலை சுமதியின் தூங்காத கண்கள் ஜிவு ஜிவு என சிவந்திருந்தது.

“என்ன சுமி சரியாத் தூங்கலையா?”

“ஆமாங்க உங்களுக்கு வேலைபோனா எனக்கு வருத்தமாக இருக்காதா?”

“நான் நிம்மதியாகத் தூங்கினேன்….”

“ஓ வெரி குட்… ஷுகர் டெஸ்ட் பண்ணுங்க…பிரேக்பாஸ்ட் தோசை பண்ணுகிறேன்…”

சுதாகர் க்ளுகோ மீட்டரால் ஷுகர் பார்த்தார்.

“ஓ காட்… இருநூறு சுமி… எம்டி ஸ்டமக்ல இது ரொம்ப ஜாஸ்தி. இப்ப பதினெட்டு யூனிட் இன்சுலின் நான் போட்டுக்கணும்…”

“சரி நீங்க போய் பல் தேய்ங்க… இன்னிக்கி நான் உங்களுக்கு இன்சுலின் போட்டு விடுகிறேன்..”

சுதாகர் பல் தேய்க்க வாஷ்பேஸின் சென்றான்.

சுமதி பதினெட்டு யூனிட்டுக்கு பதிலாக, இன்ஜெக்ஷன் சிரிஞ்சின் த்ராட்டில் முழுவதையும் திருகி அதன் முழு கொள்ளளவான அறுபது யூனிட்டையும் ஏற்றிக் கொண்டாள்.

சுதாகர் பல் தேய்த்துவிட்டு வந்து கட்டிலில் படுத்துக்கொண்டு பனியனைத் தூக்கி தன் தொப்புளை சுமதிக்கு கண்பித்தார்.

அவள் மிகவும் சுவாதீனமாக அறுபது யூனிட்டையும் சுதாகரின் தொப்புளின் அருகில் போட்டுவிட்டாள். அது பகலில் போட்டுக்கொள்ளும் வீரியமான ஆக்ட்ராபிட் (act rapid) இன்சுலின் என்பதால் உடனே வேலை செய்யத் தொடங்கியது.

வீட்டிலுள்ள ஸ்வீட்ஸ், சாக்கலேட் அனைத்தையும் உடனே ஒளித்து வைத்துவிட்டு, தோசை வார்க்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

பத்து நிமிடங்கள் ஆனது…

“சுமி எனக்கு அகோரப் பசி… சீக்கிரம் தோசை வாத்துக் கொடேன்…”

“இதோ…”

சமையலறையில் மேலும் பத்து நிமிடங்கள் காத்திருந்துவிட்டு, “கேஸ் தீர்ந்து போச்சுங்க…நீங்க வந்து சிலிண்டர் மாத்திக் கொடுங்க…” என்றாள்.

சுதாகரைப் பார்த்தபோது லோ ஷுகரால் தொப்பலாக வியர்த்திருந்தார். உடம்பு வெல வெலத்தது. போட்டிருந்த பனியன் ஈரமாகக் காட்சியளித்தது.

வாய் குழறியபடி, “சுமீ ப்ளீஸ்… எனக்கு உடனே ஸ்வீட் கொண்டாயேன்…”

“ஏண்டா உன்ன நான் எவ்வளவு நம்பினேன்… உன்மேல என் உயிரையே வச்சிருந்தேனடா நாயே. ஆனா உனக்கு அடுத்தவளோட தொடை இடுக்கு கேக்குதில்ல… நீ கேக்கும் போதேல்லாம நான் கொடுத்தேனடா, எதுல உனக்கு குறை வச்சேன் சொல்லு?”

சம்திங் ராங் என்பதை உடனே புரிந்துகொண்டு, “சுமீ ப்ளீஸ் என்னை மன்னிச்சு விட்டுருமா… நான் இனிமே சத்தியமா உங்கிட்ட நேர்மையா இருப்பேம்மா. ஸ்வீட் எடுத்துக் கொடும்மா ப்ளீஸ்…”

“கார்ப்பரேஷன்ல தெருநாய்களைப் பிடித்து ஊசி போட்டுக் கொல்வாங்களாம். நீயும் ஒரு தெருநாய்தான். உனக்கும் இப்ப ஊசி போட்டாச்சு. . தேவடியாக்கள் கிட்ட பணம் எண்ணிக் கொடுக்கிற மாதிரி, முப்பது வருஷமா எங்கிட்டயும் கொடுத்து என்னையும் ஒரு நிரந்தர தேவடியாவாக்கிட்டேயடா தெரு நாயே…. நீ செத்து ஒழி…”

அவன் கெஞ்ச கெஞ்ச பெட்ரூமிலிருந்து வெளியேறி கதவை இழுத்துத் தாளிட்டாள்.

சுதாகர் உயிர் பயத்தில் “சுமீ….சுமீ உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குறேம்மா…” கதறினார்.

அடுத்த பத்து நிமிடங்கள் கதவைத் தட்டியபடி மரண ஓலமிட்டு கதறி அழுதார்.

பிறகு சத்தமே இல்லாமல் ஒரேயடியாக அடங்கிப் போனார்.

கதவைத்திறந்து பார்த்து அவர் செத்ததை உறுதி செய்துகொண்டு, பதட்டமே இல்லாமல், மகனுக்கு போன் செய்து குரலில் மட்டும் அழுகை தொனிக்க “டேய்… அப்பாக்கு நேத்து வேலை போயிடுத்துடா… அந்த வேதனைல ஓவரா இன்சுலின் போட்டுகிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாருடா…” என்றாள்.

“ஓ காட்…. போலீஸுக்கு உடனே இன்பார்ம் பண்ணிரு. நீ பயப்படாதம்மா…. தைரியமா இரு. நான் உடனே காரில் கிளம்பி வருகிறேன்” என்றான்.

குடும்பப் பெண்கள் அனைவருமே பத்தினிகள்தான். ஆனால் அதில் பலர் விதியை நொந்துகொண்டு, வாழ்வில் ஏமாற்றங்களுடன் சமரசம் செய்துகொண்டு பொய்யான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

கொலையும் செய்வாள் பத்தினி என்கிற கூற்றின்படி சுமதியும் ஒரு பத்தினிதான்.

ஆனால் கொலைகாரப் பத்தினி.

Print Friendly, PDF & Email
என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *