கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2022
பார்வையிட்டோர்: 3,216 
 
 

முகம் கொள்ளா புன்னகையுடன் காரில் சென்று கொண்டிருந்தாள் எழிலரசி. திருமணம் முடிந்து ஏழு வருடங்களுக்கு பின் இந்த வருடம் தான் தன் பிறந்த வீட்டில் தைப் பொங்கலை கொண்டாட போகிறாள். எழிலின் கணவர் ஒரு காவல்துறை அதிகாரி, இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு பொறுப்பை ஒப்படைத்து இருந்தார்கள். ஒரு வாரமாக அவளின் தாய் அங்கு தனியாக இருக்க வேண்டாம், பொங்கல் பண்டிகைக்கு பிள்ளைகளை கூப்பிட்டுட்டு இங்க வந்துரு, பிள்ளைகளும் கூட ரெண்டு நாளு சேர்ந்தாப்புல இருந்துக்கும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார். சொன்னது போல அவளின் அண்ணன் தங்கையையும், மருமக்களையும் அழைத்து செல்ல அதிகாலையிலேயே காரை எடுத்துட்டு வந்து விட்டான்.

கார் கிளம்பியதும் குழந்தைகள் இருவரும் மடியில் படுத்து தூங்கி விட்டார்கள். என்னத்தா பிள்ளைகள் தூங்கிட்டாங்களா, நீ வேற எதாவது சாப்பிடுறீயானு கேட்ட அண்ணன் கிட்ட இல்லண்ண எனக்கு எதுவும் வேண்டாம். நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன் அண்ண, இந்த பொங்கல் பண்டிகையை நான் மறக்கவே மாட்டேனு சொல்லி புன்னகைத்தாள். ஒவ்வொரு பண்டிகை வரும்போது உன் நினைவுதான் எங்களுக்கும்,என்ன செய்ய மாமாவோட வேலை இங்க தான இருக்கு . சரி நீ கண்ணைக் மூடி தூங்கு, எப்படியும் ஊர் போய் சேர நான்கு மணி நேரம் ஆகும்.

தூக்கம் வராவிட்டாலும் கண்ணை மூடி கடந்த பொங்கல் பண்டிகைகளை நினைத்து பார்த்தாள். தனசேகரன்-பொன்னி தம்பதியருக்கு எழிலையும் சேர்த்து மொத்தம் நான்கு குழந்தைகள். மூன்று ஆண் குழந்தைகள் அடுத்தடுத்து பிறக்க நான்காவதாக பிறந்தாள் எழிலரசி. மிகவும் செல்லப் பெண்ணாக வளர்ந்தாள்,இருப்பினும் மிகவும் அன்பானவள்.

அவள் குடும்பம் முழுக்க முழுக்க விவசாய குடும்பம். பொங்கல் பண்டிகை வந்து விட்டால் அவள் வீடே விழாக்கோலம் பூண்டு விடும்.வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து, பரணில் உள்ள பாத்திரங்கள் அனைத்தும் கழுவப்பட்டு, வீட்டு வாசல் மற்றும் மாட்டு தொழுவத்தில் கலர் கோலங்கள் போட்டு சூரிய உயரத்திற்கு முன்பே மண்பானையில் பொங்கலிட்டு, காய்கறிகளுடன் கதிரவனுக்கு படைத்து விட்டு, இலை போட்டு ஒருவாய் சர்க்கரை பொங்கலை வாயில் வைக்கும் போது ஒரு வாரமாக பொங்கலுக்கு பார்த்த வேலை அலுப்பு எல்லாம் மறந்து பொங்கல் தேனாக தித்திக்கும். இப்படி பழைய நினைவுகளுடனே தூங்கிவிட்டாள்.

ஒரு வழியாக ஒரு மணியளவில் பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அவளின் பிறந்த வீட்டு உறவுகளுக்கு எழிலையும், குழந்தைகளையும் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. தனது வீடு எப்போதும் போல பொங்கலுக்கு தயாராகி இருந்தது.கூடுதல் சிறப்பாக இரண்டு அண்ணிகள் வேறு இருந்தார்கள், அவளின் இரண்டு அண்ணன்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. மதியம் தடபுடலாக விருந்து தயார் செய்து இருந்தார்கள். சாப்பிட்டுட்டு அனைவரும் சிறிது ஓய்வு எடுத்தார்கள். மாலைப்பொழுதில் எழிலுக்கு மாதவிடாய் வந்து விட்டது, என்ன இன்னும் ஒருவாரம் இருக்கே அதுக்குள்ள இப்படி வந்துட்டே, சரி நம்ம வீடுதான பரவாயில்லை அப்படினு நினைச்சுட்டு குளித்து விட்டு தனது அறையில் உடை மாற்றிக்கொண்டு இருந்தாள் எழில்.

பின்கட்டில் அவள் அண்ணிகள் இருவரும் பேசிக் கொண்டது தற்செயலாக எழிலின் காதில் விழுந்தது. இந்த வாரம் தான் தலைக்கு ஊத்த நாளுனா எதற்கு இங்க வரா இந்த எழிலு, நம்மலே வீடெல்லாம் சுத்தம் செய்து சுத்தபத்தமா காலையில பொங்கல் வைக்க ரெடியியிருக்கோம் என்றார் பெரிய அண்ணி. அவளுக்கா தெரியணும் பிறந்த வீட்டை பற்றி கொஞ்சமாவது அக்கறை இருந்தால் வந்துருப்பாளா என்ன செய்ய பொங்கல் வைச்சு முடிக்கிற வரைக்கும் அவ அறையை விட்டு வெளில வராம இருந்தா நல்லாருக்கும், இதை போய் அவகிட்ட யார் சொல்ல முடியும் என்றார் சின்ன அண்ணி.

இதைக் கேட்டதும் எழிலின் கண்கள் தானாக கண்ணீர் சிந்தியது,முதல் முறையாக தன் வீடு தனக்கு அந்நியமாக தோன்றியது. ஊருக்கு கிளம்பு என்று தன்மானம் தூண்டியது, நாளைக்கு காலைல பொங்கலை வைச்சுகிட்டு இப்ப கிளம்பி போனேன உன்ன பெற்றவர்களுக்கும், உன் அண்ணன்களுக்கும் என்ன பதில் சொல்லப் போற அதைவிட ஊருக்கு போனா உன் வீட்டுக்காரர் அதுக்குள்ள வந்துட்டேன்னு கேட்பார் அவர்கிட்ட என்ன சொல்லுவ அப்படினு அவள் மனசாட்சி சிரித்தது. யாரிடமும் எதுவும் கூறாமல் உடை மாற்றிக் கொண்டு கண்ணில் கண்ணீர் வடிய கண்ணை மூடி அறையில் படுத்துக்கொண்டாள்.

சிறிது நேரத்துக்கு அப்புறம் அவள் அம்மா வந்து என்ன படுத்துட்டா ஒருவேளை வயிறு வலி இருக்கும் போல, சரி அவளை தொந்தரவு பண்ண வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு கசாயம் போட்டு கொடுத்துட்டு நீ நல்லா தூங்கி ஓய்வு எடு குழந்தைகள் நான் பார்த்துக்கிறேன் சொல்லி வெளில போய்ட்டாங்க எழிலின் அம்மா. அவ அண்ணன்களும் அவள் உடல் சரியில்லாததால் சோர்வாக படுத்து இருக்கா அப்படின்னு நினைச்சுட்டு தொந்தரவு பண்ணல.

மறுநாள் காலை 3 மணியிலிருந்து வெளியில் பொங்கல் வைக்கிறதுக்கான வேலை நடந்து கொண்டு இருந்தது.

எழிலுக்கு முழிப்பு தட்டியும் வெளியில் செல்லவில்லை. அவள் அப்பா எழில் அதிகாலையில் எந்திரிச்சிடுவாளே ஏன் எந்திரிக்காம இருக்கா அப்படின்னு கேட்டாரு, அவங்க அம்மா அவளுக்கு ஒரே வயிறு வலி அதனால் தான் எந்திரிக்காமல் இருக்கா, ஓய்வு எடுக்கட்டும் அப்படின்னு சொல்லிட்டாங்க. எல்லாரும் பொங்கல் வைத்து முடித்து அதற்கு அப்புறம் அவள் அறைக்கே வந்து அண்ணிகள் பொங்கல் கொடுக்க வந்தாங்க, இந்தா எழில் பொங்கல் சாப்பிடு,இப்போ வயிறு வலி பரவாயில்லையா? பொங்கல் எப்படி இருக்குன்னு சாப்பிட்டுட்டு சொல்லு இனிப்பெல்லாம் கரெக்டா இருக்கான்னு சொல்லு அப்படின்னு அண்ணி சொன்னாங்க.

எழில் அதை வாங்கி வாயில் வைக்கவும் அவளுக்கு அது கசப்பாக தோன்றியது, இருந்தாலும் பொங்கல் மிக ரொம்ப நல்லா இருக்கு அண்ணி என்று புன்னகைத்தாள். இரண்டு நாட்கள் கழித்து அவள் கணவர் ஊருக்கு அழைத்துப் போக வந்திருந்தார்.

என்ன எழில் உனக்கு இந்த பொங்கல் பண்டிகை மறக்க முடியாத பண்டிகையாக இருந்துருக்கும் அப்படித்தானே என்றார். ஆமாங்க இந்த பொங்கல் பண்டிகையை மறக்கவே மாட்டேன் என்று அவளுக்கே உரித்தான புன்னகையுடன் பிறந்த வீட்டிலிருந்து புறப்பட்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *