கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2022
பார்வையிட்டோர்: 4,039 
 
 

தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க வழியின்றி திணறினான் பகின்.பகினுக்கு திருமண வயது வந்தும் படிப்பும்,அழகும் இருந்தும் தொழில் அமையாததால் யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை.வேலையும் அமையவில்லை என்பதை விட வேலைக்கு செல்ல மனமில்லை.விரக்தியில் நண்பர்களுடன் குடிக்கும் அடிமையாகி விட்டான்.

ஒரு நாள் திடீரென யோசனை வந்தவனாக உள்ளூரில் ஏலத்துக்கு வந்த மில் ஒன்றை இருக்கும் ஒரே வீட்டை அடமானம் வைத்து பாக்கி கடனுடன் வாங்கியவன் அடுத்தநாளே காரும் வாங்கிவிட்டான்.இவனுடைய திடீர் உயர்வு சிலருக்கு திகைப்பை கொடுத்திருந்தது.திருமண தகவல் மையத்தில் ஐந்து கோடி சொத்துள்ள மில்,வீடு,கார் உள்ளதாக பதிவு செய்ய அடுத்த வாரமே ஒரே பெண் உள்ள இடத்தில் பெண் அமைந்தது.பெற்றோர் இல்லை.சித்தி வளர்ப்பில் பெண்.அம்மா வகையில் பெண்ணுக்கு சொத்தும் உண்டு என்பதை அறிந்து திருமணத்தை முடித்தான்.

‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’என்ற கம்பரின் கருத்துக்கேற்ப தொழில் எதிர்பார்த்த லாபம் வராததால் ஏலத்துக்கு வீட்டோடு சேர்த்து மில்லும் போகும் நிலையை அறிந்த அவன், மனைவி தன் சொத்தை விற்று கடனடைத்து விடலாம் என்றதும் கலங்கிய மனம் நிம்மதியானது.

சொத்தும் பத்து கோடிக்கு விற்க, வளர்ப்பு தாயான சித்தி பங்கிற்கு ஐந்து கோடி போக தன் தாயின் பங்கு வந்த ஐந்து கோடியை வைத்து கடனடைக்க கொடுத்தாள் மனைவி மஹி.கடனடைந்தாலும் வீடும்,மில்லும் சொந்தமானாலும் மனைவியின் சித்தியிடம் உள்ள ஐந்து கோடியையும் அடைய வேண்டுமென விபரீத ஆசை வந்தது பகினுக்கு.”சித்திக்கு வாரிசு நானா இருந்தாலும் அவங்க ஆயுசுக்கப்புறம் ஐந்து கோடி பணம் கிடைக்கும்.அதுவரைக்கும் அவங்க கிட்டயே இருக்கட்டும்”என மனைவி சொன்னது பிடிக்காதவனாய் உடனே கிடைக்க வேண்டும் என தோன்ற,மனைவியின் சித்தி வீட்டுக்கு சென்றான்.

“வாங்க மாப்பிள்ளை .மஹி எப்படி இருக்கா?நீங்க மட்டும் தனியா வந்திருக்கீங்க.”கேட்டவாறு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து “சாப்பிட வாங்க”என மனைவியின் சித்தி சித்ரா கூறிய போது மறுக்காமல் சாப்பிட்டான்.

பின் படுக்கையறையில் உள்ள பெட்டை சரி செய்து “நைட் இருந்துட்டு போங்க.நா வேணும்ணா ஹால்ல படுத்துக்கறேன்.மஹிக்கு சொல்லிடுங்க”என கூறி ஹால் தரையில் பாயை விரித்து படுத்துக்கொண்டார் மஹியின் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க சித்தி சித்ரா.

படுக்கையறைறையை தாழிட்ட பகின், சாவியுடன் இருந்த பீரோவை திறந்து பார்க்க ஐந்து கோடியும் அப்படியே இருந்தது.’இந்த பொம்பள எப்ப சாகறது?இந்த ஐந்து கோடி எனக்கு சொந்தமாவது எப்போது?’என தனக்குள் ஒரு தப்புக்கணக்கு போட்டான்.தனக்காக குடிக்க கொடுத்த பாலை அந்தம்மாவிடம் கொடுக்க போனான்.

“நான் ரொம்ப வெயிட் போட்டுட்டேன்னு மஹி சொல்லிட்டு பாலே வீட்ல வாங்கறதில்லை.நீங்க இருமிட்டே இருக்கீங்க.இதுல மஞ்சள் தூள் கலந்திருக்கேன் குடிச்சிட்டு நல்லா தூங்குங்க” என ‘நல்லா’ என்பதை அழுத்திச்சொல்லி கொடுத்ததை, “இன்னுங்கொஞ்ச நேரங்கழிச்சு குடிச்சுக்கறேன் மாப்பிள்ளே.எனக்கு ஒரு மகன் இல்லாத குறைய போக்கிட்டீங்க.எவ்வளவு அக்கரையா கவனிச்சுக்கறீங்க.நான் என்ன புண்ணியம் பண்ணினேனோ?நீங்க மருமகனா கெடச்சதுக்கு!ஆமா ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.எனக்கு பங்கு வந்த அஞ்சு கோடிய உங்க கிட்டயே கொடுத்திடறேன்.காலைல போகும் போது மறக்காம எடுத்துட்டு போங்க.எனக்கு மாசம் முப்பதாயிரம் வாடகை வருது.அதே போதும்.நீங்க மஹியோட சந்தோசமா நல்லா இருக்கோனும்.உங்க சந்தோசமே என்னோட சந்தோசம்”என்றதும் பகினுக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக மனம் அதிர்ச்சியானது.உடல் நடுங்கியது.

“சரிங்க.நீங்க சொல்லறதை கேட்டு நானும் மஹியும் நடந்துக்கறோம்”என்றவன் படுக்கையறை நோக்கி நடக்கையில் சித்ராம்மா பகினிடம் வாங்கி கீழே வைத்திருந்த பால் டம்ளரை பகின் காலில் தட்ட அது முற்றிலுமாக தரையில் ஓடியது.

“பரவாயில்லைங்க மாப்ளே.நாங்கும்பிடற கடவுள் பழனி முருகன் இன்னைக்கு என்னை பால் குடிக்க வேண்டாம்னு சொல்லிட்டார்.அவ்வளவுதான்.நீங்க உள்ளே போங்க நான் துடைச்சுக்கறேன்” என்றதும்,”இல்லைங்க அத்தை, நீங்க படுத்துக்கங்க நானே துடைக்கிறேன்” என்றவன் பதட்டத்துடன் உள்ளே சென்று ஒரு துணியை எடுத்து வருவதற்க்குள் வீட்டிலிருந்த பூனை கவிழ்ந்த பாலை நக்கிக்குடித்து விட்டு வெளியே போனது.துணியால் கவிழ்ந்த பாலை தானே சுத்தமாக துடைத்து வெளியே கொண்டு போய் குப்பை தொட்டியில் போட்ட போது, பாலை நக்கிச்சென்ற பூனை மயக்கமாகி வாசலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது பகினுக்கு மட்டுமே தெரியும்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *