பட்டுப் போன பசுமரங்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 5,596 
 
 

காலை…

வழக்கம் போல் குளித்து, உடையணிந்து, கண்ணாடி முன் நின்று முகத்திற்குப் பவுடர் பூசி…ஒட்டுப் பொட்டெடுத்து கவனமாய் நடு நெற்றியில் ஒட்டிய நித்யா….சாமி மாடத்திற்கு வந்தாள்.

அங்கு கண்மூடி கைகூப்பி ஒரு வினாடி வணங்கி முடித்து கொஞ்சமாய் குங்குமம் எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டவள் அடுத்ததாய்….முருகன், சரஸ்வதி சாமி படங்களோடு படங்களாய் இருக்கும் கணவன் படத்திற்கு முன் இருக்கும் தன் தாலி சரட்டை எடுத்து தலைவழியே கழுத்தில் மாட்டி…எடுக்க வேண்டிய சாப்பாட்டுத் தூக்கு, தோள் பையை எடுத்துக் கொண்டு…

”அம்மா! அப்பா! போயிட்டு வர்றேன் !” என்று வீட்டில் கண்ணில் பட்ட பெரிசுகளின் காதில் விழுமாறு உரக்கச் சொல்லி விட்டு அலுவலகத்திற்கு விரைந்தாள்.

அங்கு….

இந்த தாலிதான் பெரிய குழப்பம், கேள்வி குறியாக இருந்தது சந்துருவிற்கு.

இவன் இந்த அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இதைப் பற்றி அவனுக்கு எந்த பதிலும் தெரியவில்லை. உள்ளுக்குள் உருளும் இந்தப் பிரச்சனையும் தீரவில்லை.

வந்த முதல் நாளே….பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்த நித்யாவைப் பார்த்ததும்….இவனுக்குள்…..’ அட… இவளா ?!.. ‘ என்பதே முதல் அடி, அதிர்ச்சி.

அடுத்த விநாடி அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்….

”நான் சந்துரு என்கிற சந்திரசேகரன் மேடம். சென்னையிலிருந்து மாற்றலாகி வந்திருக்கேன்.! ” வலிய தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அதற்குப் பலனாய்… மரியாதை நிமித்தம், அவள் முகத்தில் சிறு புன்னகை, மலர்ச்சி; இல்லை.

” வணக்கம், நான் நித்யா! ” என்கிற சுய அறிமுகமும் இல்லை

மாறாய்…..முகத்தில் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் செய்தியை காதில் வாங்கிக் கொண்டதற்கு அடையாளமாய், ” வணக்கம். நன்றி ! ” என்று இரண்டே இரண்டு வார்த்தைகளை மட்டும் எண்ணி உதிர்த்துவிட்டு…பின் அதே முகத்தோடு வேலையைத் தொடர்ந்ததில் சந்துருக்குள் சின்ன ஏமாற்றம். கொஞ்சமாய் அவமானம்.

அன்று மட்டும்…அப்படி. என்றில்லை. அன்றிலிருந்து இன்று வரை இவனிடம் மறு பேச்சு இல்லை, வார்த்தை இல்லை. எப்போதும் உம்மென்ற கோர முகம். இயந்திரத்தனமான வேலை.
இவனிடம் என்று மட்டுமில்லை. அலுவலகத்தில் எல்லோரிடமும் அப்படித்தான். ஆண், பெண்….. எவரிடமும் வீண் பேச்சு, சிரிப்பு, சிறு முறுவல் எதுவும் கிடையாது.

அந்த அலுவலகத்திலேயே….தான் ஒரு நெருப்பு, தனி மனுசி என்பதாய் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு இருக்கிறாள் என்பதுதான் இவன் கண்டு பிடித்த உண்மை, உருவம்.
மற்றவர்கள் தன்னை அடையாளம் கண்டு கொண்டிருப்பார்கள் என்பதால்……இவள் .இப்படி இருக்கலாம் என்று இவன் நினைத்துக் கொண்டான்.

அவள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அதைப் பற்றி இவனுக்குக் கவலை இல்லை. ஆனால் அவள் கழுத்தில் இருக்கும்….தாலி அதுதான் இவன் கண்ணில் பட்ட நாள் முதலாய்க் கலவரம், இன்று வரை உள்ளுக்குள் உறுத்தல், உலைச்சல்.

இவன் ஆள் புதுசு, அறிமுகமில்லாதவன் என்கிற புறக்கணிப்பாலோ என்னவோ…அலுவலகத்தில் இதுநாள்வரை யாரும் இவனோடு அதிகமாய் ஒட்டி உறவாடவில்லை, பேச்சு பழக்கமில்லை என்பதால்….இவளைப் பற்றி யாரும் எதுவும் இவனிடம் சொல்லவில்லை இவனாலும் எவரிடமும் போய் கேட்க முடியவில்லை. வலிய போய் கேட்டால்….இவளைப் பற்றி இவனுக்கு என்ன அக்கறை? என்று தன்னை தவறாக நினைத்து விடுவார்களோ என்கிற பயம் இவன் அவளைப் பற்றி எவரிடமும் விசாரிக்க வில்லை.

நித்யாவை நேரடியாகக் கேட்கவும் துணிவில்லை.

கழுத்தில் தாலி அணிந்திருக்கும் ஒரு பெண்ணிடம்…. ” ஏங்க ! உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா ? ” என்று கேட்பதென்பது ரொம்ப ரொம்ப மடத்தனம், முட்டாள்தனம்.

இப்படி எல்லாவிதக் குளறுபடியாலும்…..அவனுக்கு உண்மை தெரியாமல் போனதால்…அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல். யாரிடம் எப்படி வார்த்தைகளைப் போட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் யோசனை.

இந்த யோசனை நாளும் பொழுதுமாக உழன்று கொண்டிருப்பதின் விளைவு…இப்போது அவனுக்குள் ஞானம் பெற்றது போல் திடீர் வெளிச்சம், முகம் பிரகாசம்..

அடுத்த நொடி எதிரியிடமிருந்து என்ன பதில் வருமென்று தெரியாமலேயே……

” மேடம் ! சாயந்தரம் அலுவலகம் விட்டதும் வெளியே எனக்காக ஒரு அஞ்சு நிமிசம் ஒதுக்க முடியுமா ? ” அருகில் அமர்ந்திருந்த நித்யாவிடம் வலிய சொன்னான்.

அவள் இவனிடமிருந்து இந்த திடீர் பேச்சு, தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. அலுவலகத்தில் யாரும் இவளிடம் இப்படி பேசியதில்லை. அதனால்….

” ஏன்… எதுக்கு ? ” கேட்டாள். ஏறிட்டாள்.

” எனக்கு உங்ககிட்ட சின்ன விசயம் கேட்கனும். ”

” என்கிட்டேயா !? ”

” ஆமாம். ”

” எதைப் பத்தி ? ”

” அதை அங்க வந்து நோடியாய்ப் பேசிக்கலாமே. இப்போ வேலையைப் பார்க்கலாமே.” சொன்னான்.

இந்த பதில் அவள் எதிர்பார்க்காதது அதனால்…அவன் மேல் இலேசான கோபம் வந்தது. முறைத்தாள்.

” ப்ளீஸ்….. ! ” சந்துரு தன் முகபாவனையாலும், குரலாலும் கெஞ்சி அடுத்து அவளுக்குப் பேச வாய்ப்புக் கொடுக்காமல் தன் வேலையைத் தொடர்ந்தான்.

நித்யாவிற்குத்தான் இப்போது…..இவன் என்ன கேட்கப் போகிறான், எதைப் பற்றி கேட்கப் போகிறான்….ஏன் கேட்கப் போகிறான்….? என்கிற யோசனை, மண்டைக் குடைச்சல்.

இந்த குடைச்சல் இவளுக்குள் இவளை வெகு நேரம் ஆக்கிரமித்தது, அலைக்கழித்தது.

தாளமுடியாத பட்சத்தில்…..எதுவாய் இருந்தாலும் தன்னை மீறி எதுவும் நடந்துவிடப் போவதில்லை. ஆள் அநாகரிகமாக எதையும் கேட்டுவிடப் போவதில்லை என்கிற முடிவிற்கு வந்தாள். அந்த முடிவே அவளுக்குள் தெளிவு, திடத்தைத் தந்தது. மனம் அமைதியானது.

அதே சமயம் சந்துருவிற்குள்ளும் சலனம்.

எப்படியோ இவள் வாயை அடைத்து….மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி…! என்பதாய் முற்றுப் புள்ளி வைத்தாயிற்று. என்றாலும்….தவிர்க்க முடியாத காரணத்தால் இவளுக்கு இடையில் ஏதாவது வேலை வந்து விடுப்பு எடுத்துக் கொண்டு போய் விட்டால்….?! இல்லை….திடீரென்று பேச மனமில்லாமல்… ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஒரு மணி நேரம் முன்னதாகச் சென்று விட்டால்…? என்ன செய்ய…! என்று நினைத்தான். அப்படியெல்லாம் நடக்காது, நடக்கக் கூடாது என்று திரும்பத் திரும்ப நினைத்தான், அதன் விளைவாய் அவளை அடிக்கடி அரைக்கண்ணால் கவனித்தப்படி வேலையைப் பார்த்தான்.

இவன் நினைவு, வேண்டுதல் பலித்தது போல. நித்யா அப்படி எதுவும் செய்யவில்லை. செல்லவில்லை.

மாலை ஐந்து மணிவரை அலுவலகம் நேரம் முடித்தே இருக்கையை விட்டு எழுந்தாள்.

இவனுக்காகத்தான் வெளியில் காத்திருந்தாள்.

சந்துருதான் அவசர அவசரமாக தன் வேலைகளை எல்லாம் மேசை மீது ஓரங்கட்டிவிட்டு பத்து நிமிடங்கள் காலதாமதம் பரபரப்பாக அவளை அடைந்தான்.

” மன்னிச்சுக்கோங்க….நான் வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு. ” என்று தன் தாமதத்திற்கான மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்.

” பரவாயில்லே..! ” அவள் பெருந்தன்மையாக சொன்னாள்.

” நாம அலுவலகத்திற்கு எதிரே…இங்கே நின்னு பேசறது அசவுகரியம், சரி இல்லே. அப்படி கொஞ்சம் நடந்து அந்த பூங்காவுல உட்கார்ந்து பேசலாமா ? ” கேட்டான்.

நித்யாவிற்குள் கொஞ்சம் தடுமாற்றம் வந்தது.

” ஏன் தயங்குறீங்க ? ” கேட்டான்.

” தயங்கலை. வீட்ல சொல்லிட்டு வரலை. அதான் யோசனை.” என்றாள்.

” கைபேசியில் சொல்லாமே..! ” வழியைச் சொன்னான்.

அவளுக்கு இது பிடித்திருந்தது. இந்த யோசனை தனக்கு வராதது குறித்து உள்ளுக்குள் வெட்கம் வந்தது.

உடன்…..தன் கைபேசியை எடுத்து எண்களை அழுத்தி அழைப்பு விடுத்தாள்.

எதிர்முனையில் ஆண்.

” அப்பா… ! ” அழைத்தாள்.

” சொல்லும்மா ? ”

” அலுவலகத்துல கொஞ்சம் வேலை. நான் வர கொஞ்சம் நேரம் ஆகும்.” சொன்னாள்.

” சரிம்மா. ”

துண்டித்தாள்.

” வாங்க…. ” அழைத்து அருகிலுள்ள பூங்கா நோக்கி நடந்தாள்.

சந்துரு தொடர்ந்தான்.

வழியில்….” .காப்பி சாப்பிடலாமா ? ” கேட்டான்

” வேணாம்.”

” ஏன்…பழக்கம் இல்லியா ? ”

” தேவை இல்லே.”

” வேலை செய்த களைப்பு காபி குடிச்சு போக்கிக்கிலாமே என்கிறதுக்காகக் கேட்டேன்..”

” உங்களுக்குத் தேவைன்னா குடிச்சிட்டு வாங்க. நான் மத்தவங்களோட ஓட்டல்ல உட்கார்ந்து குடிச்சி பழக்கமில்லே. அதுல எனக்கு விருப்பமுமில்லே.” சொன்னாள்.

மறுப்பவளை இனி எப்படி வற்புருத்த… ? அதனால்…” எனக்குத் தேவை இல்லே. உங்களுக்காகத்தான் கேட்டேன். உங்களை உபசரிக்கத்தான் அந்த வார்த்தை.” என்றான்.

நித்யா அந்த வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொண்டு பூங்கா சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தாள்.

சந்துருவிற்கு அவள் அருகில் உட்காரலாமா நிற்கலாமா என்று யோசனை. நின்றான்.

” பரவாயில்லே. உட்காருங்க ” சொன்னாள்.

பெஞ்சின் மறு முனையில் அமர்ந்தான்.

” சுத்தி வளைக்காம நேரடியாவே… நீங்க கேட்க வேண்டியதைக் கேட்கலாம். ” சொன்னாள். அவளே எடுத்துக் கொடுத்தாள்.

இது அவனுக்கு வசதியாய் இருந்தது.

” உங்க கணவர் எங்கே வேலை பார்க்கிறார் மேடம் ? ” திடுதிப்பென்று தான் யோசித்து வைத்திருந்த கேள்வியைக் கேட்டான். இந்த கேள்வியில் சந்துரு தான் எதிர்பார்க்கும் பதில் சரியாகக் கிடைக்கும் என்று நம்பினான்.

இந்த கேள்விக்கு அவள் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லித்தானே ஆகவேண்டும். அப்போது அவள் தாலியின் உண்மைத் தன்மை தெரிந்துவிடும் ! நினைத்தான்.

” ஏன் கேட்குறீங்க ? ” அவள் அவன் எதிர்பாராதக் கேள்வியைக் கேட்டாள்.

” சும்மா தெரிஞ்சுக்கலாம்ன்னு கேட்டேன். ”

” ஏன் தெரிஞ்சுக்கனும்….? ” அவள் திருப்பவும் கேள்வி கேட்டாள்.

” சக ஊழியரைப் பத்தி தெரிஞ்சிக்கிறது நல்ல ஆரோக்கியமான விசயம்தானே மேடம் ? ” இவன் அவளைப் பார்த்தான்.

” இல்லே. இது என் சொந்த விசயம். குடும்ப விசயம். ” குரல் கறாராக வந்தது.

” வந்து….”

” சொல்ல விருப்பமில்லே. இதை ஏன் நான் உங்ககிட்ட சொல்லனும். ? ”

இந்த தடாலடியில்…. சந்துரு திக்குமுக்காடினான்.

” மன்னிச்சுக்கோங்க மேடம். தெரிஞ்சுக்கக் கேட்டேன். மத்தப்படி எந்த உள் நோக்கமுமில்லே. நீங்க சொல்ல வேணாம்.” எழுந்தான்.

” உட்காருங்க…. ” நித்யா அவனை விடவில்லை. எழ எத்தனித்தவனை இந்த வார்த்தை சொல்லி அமர வைத்தாள்.

சந்துருவிற்கு அவள் மேலும் பேசப் போகிறாள் புரிந்தது. அமர்ந்தான்.

” எதுக்காக என்னைப் பார்த்து இந்த கேள்வி கேட்டீங்க ? ” கேட்டு அவன் கண்களைப் பார்த்தாள்.

” கழுத்துல தாலி இருக்கு. நான் இங்கே வந்த ஆறு ஏழு மாசத்துல நான் உங்களை வீட்டுக்காரரோட பார்த்ததில்லே. அவரும் உங்களைத்தேடி தப்பித்தவறி நம்ம அலுவலகம் வந்ததில்லே. நான் ஆள் முகத்தைப் பார்த்ததில்லே. அவர் இங்கே… உள் நாட்டில் வேலையில் இருக்காரா, வெளிநாட்டில் வேலையில் இருக்காரான்னு தெரிஞ்சுக்கக் கேட்டேன். ” சொன்னான்.

இது வழக்கமாய் எல்லார்க்குள்ளும் எழும் ஆசை, ஆர்வம். தப்பிதமில்லை. நித்யாவிற்குப் புரிந்தது. ஆனாலும் அவளுக்குச் சிக்கல்.

ஆள் உள் நாட்டில் வேலையில் இருக்கிறார் என்றால்….இத்தனை காலமாக வீட்டிற்கு வராமல் எப்படி இருக்கிறார் என்கிற கேள்வி வரும்.

வெளி நாட்டில் வேலையில் இருக்கிறார் என்றால்…..பதில் அத்துடன் முடிந்து விடும். ஆனால் அதற்கடுத்து…. எந்த நாடு, என்ன வேலை என்றால்தான் அடுத்தடுத்து….பொய் சொல்ல வேண்டி வரும் ! அவளுக்குள் ஓடியது.

இவனுக்கு என்ன தேவை ? ஏன் இவனுக்கு இந்த கேள்வி, ஆசை, ஆர்வம் ? அவளே அவளுக்குள் கேள்விகள் கேட்டாள்.

” சந்துரு ! உங்களுக்கு என்ன தேவை ? ” அதை வாய் வழியாகவே வெளிப்படையாகக் கேட்டாள்.

” உங்களுக்குத் திருமணம் முடிஞ்சாச்சான்னு எனக்குத் தெரியனும். ! ”

இது இன்னும் அந்தரங்கம் – ” ஏன்…? ” கூர்ந்து பார்த்தாள்.

சந்துரு இதற்கு என்ன பதில் சொல்வதென்று தேடினான்.

” எனக்கு கல்யாணம் முடிஞ்சாச்சு ! ” அவளே சொன்னாள்.

” அவருக்கு வேலை ? ”

” வெளி நாட்டுல.”

” குழந்தைங்க ? ”

” இருக்கு.”

” ஆணா பெண்ணா ? ”

” ஆண். சின்னப் பையன்.”

” வயசு ? ”

” அஞ்சு. ” மனசுக்குள் கூட்டி…..யோசித்து நிதானித்துதான் சொன்னாள்.

” தப்பா சொல்றீங்க…நித்யா !. ” தலையைக் குனிந்து கொண்டு சந்துரு மெல்ல சொன்னான்.

” புரியலை ?! ” இவள் அவனைக் குழப்பமாகப் பார்த்தாள்.

” உங்க பையன் வயசு அஞ்சாய் இருக்க முடியாது ! ”

” எப்படி ? ” இவள் அவனைத் திருப்பிக் கேட்டாள். ஆளை உற்றுப் பார்த்தாள்.

” உங்களைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் ? ” இன்னும் தiலை நிமிராமலே சொன்னான்.

” என்ன தெரியும் ? ”

இப்போது நிமிர்ந்து நித்யா முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

” அஞ்சு வருசத்துக்கு முன் நீங்க அப்பா அம்மா விருப்பமில்லாமல் வீட்டை விட்டு வெளியில் போய் காதல் கலியாணம் செய்துகிட்டீங்க. ஆத்திரப்பட்ட உங்க அப்பா… கண் கொத்தி பாம்பாய்க் கண்காணிச்சு திருமணம் முடிஞ்ச ஒரே மாசத்துல….புருசனும் பொஞ்சாதியும் கரூர் கடைத்தெருவிற்கு வந்த உங்களைப் பின் தொடர்ந்து வந்து பட்டப்பகலில் உங்க கணவரை அங்கே வெட்டி ஆணவக் கொலை செய்தார். அது எதிர் கடையில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி….அதை எல்லா தொலைக்காட்சி ஊடகங்களும்…. ஒரு நாள் முழுக்க அடிக்கடி ஒளிபரப்பி பட்டி தொட்டி வரைக்கும் அதை தெரியப்படுத்திச்சு. அது எனக்கு மட்டுமில்லாமல்…அன்னைக்கு முழுக்க அந்த செய்தியைப் பார்த்த எல்லாருக்கும் இது தெரியும். அப்போ நீங்க கர்ப்பமாய் இல்லே. வழக்கு நடந்த ரெண்டு வருசத்திலும் கர்ப்பம், வயிறு பெரிசாகி குழந்தை பெத்ததுக்கான அறிகுறியே இல்லே. அப்படி இருக்கும்போது…உங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு வயசு எப்படி அஞ்சாய் இருக்க முடியும். அதுக்குக் குறைவாய்த்தானிருக்கனும். இப்போ உண்மையைச் சொல்லுங்க. உங்களுக்குக் குழந்தை இருக்கா இல்லியா ? ” தடாலடியாய்க் கேட்டான்.

திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை. நித்யா அதிர்ந்து உறைந்தாள்.

” கு…..ழந்தை இ….ல்லே…! ” நிதானத்திற்கு வந்து மெல்ல சொன்னாள்.

” அப்போ…திருமணம்…? ” விடாமல் சந்துரு அடுத்தக் கேள்வியாலும் அவளைத் தாக்கினான்.

” ந….டக்கலை. ” தட்டுத் தடுமாறிச் சொன்னாள்.

” அப்போ….தாலி….? ” விடாமல் கேட்டான்.

” வேலி. நானாப் போட்டிருக்கேன் ! ”

” ஏன்…? ”

” மத்த ஆண்கள் எச்சல் பார்வையிலிருந்து தப்பிக்க…”

” அதுக்காக மட்டும்தானா வேற உள் நோக்கம் இருக்கா ? ”

” என் புருசன் ஞாபகர்த்தமாகவும் அதைக் கழுத்துல போட்டிருக்கேன்.”

” நீங்க பொறந்த வீட்ல இருக்கீங்களா புகுந்த வீட்ல இருக்கீங்களா ? ”

” ஏன் இந்த கேள்வி ? ”

” காரணம் இருக்கு. பதில் சொல்லுங்க ? ”

” புகுந்த வீட்டில். ”

” அப்பா அம்மா ? ”

” அப்பாவுக்கு ஆயுள். சிறையில் இருக்கார். அம்மா…அந்த கொலை நடந்து முடிந்த பத்தாவது நாளே அதிர்ச்சியில் செத்துப் போயிட்டாங்க. ”

” உங்க மாமனார் மாமியார் இருக்காங்களா ? ”

” இருக்காங்க. ஒரு புள்ளையைப் பறிகொடுத்தபிறகு நான்தான் அவுங்களுக்கு மகன், மகள், மருமகள்… முழு பாதுகாப்பு. எனக்கு அவுங்க அம்மா, அப்பா.! இதை உணர்ந்த நான் அப்பவே அரசுத்; தேர்வு எழுதி பாஸ் பண்ணி உடனே வேலைக்கு வந்துட்டேன். ”

” ஆக…உங்க உழைப்பு, பாதுகாப்புலதான் மாமனார் மாமியார் இருக்காங்க.”

” ஆமாம். ”

” இந்த தாலி விசயத்தை அவுங்க தடுக்கலையா ? ”

” இல்லே. விபரம் சொல்லி போட்டிருக்கேன். ”

” உங்களை மறுமணம் செய்து கொள்ள அவுங்க வற்புருத்தலையா ? ”

” வற்புருத்தினாங்க வற்புருத்துறாங்க எனக்கு விருப்பமில்லே.”

” ஏன் ? ”

” அது காதலுக்குச் செய்யும் துரோகம். என் கணவர் ஆத்மா சாந்தி அடையாது.”

” புரியலை ? ”

” எங்க காதல், கலியாணத்துக்காகத்தான் அவர் உயிர் துறந்தார். அப்படி இருக்கும்போது அவர் இல்லாமல் நான் மட்டும் வேறரொருத்தரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தால்…என் கணவர் ஆத்மா எப்படி சாந்தி அடையும் ? ”

” அதாவது….உங்க கணவர் ஆத்மா சாந்தி அடையாது என்பதற்காக நீங்க மறுமணம் செய்துக்க விரும்பலை. இதுதான் நிசம். அதுதானே உண்மை.! ”

நித்யா இப்படியொரு கிடுக்கிப்பிடியான கேள்வி, மடக்கலை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. திருதிருவென்று விழித்தாள்.

” பதில் சொல்லுங்க ? ” சந்துரு விடத் தயாராய் இல்லை. கேட்டான்.

” அப்படி இல்லே. அது கண்டிப்பா….துரோகம். நான் செய்ய மாட்டேன்.”

” நானும் உங்க கட்சிதான். ஆனா…..என் மனைவி அப்படி சொல்லலை.” சந்துரு மெல்ல வார்த்தைகளை விட்டான்.

நித்யா அவனைக் குழப்பமாகப்; பார்த்தாள்.

” என்ன புரியலையா ?! நானும் உங்களை மாதிரிதான். ஆணவக்கொலையில் என் மனைவி பலி. உங்களுக்குக் கணவர் பலி. சம்பவத்தில்… நீங்க ஒரு வருசம் முந்தி. நான் பிந்தி. அதுதான் வித்தியாசம். இந்த வகையில் நான் நீதி மன்றத்துக்கு வரும்போதுதான்…நான் அங்கே உங்களை அடிக்கடிப் பார்த்தேன். எனக்கு வேலை… சம்பவத்துக்கு முன். பின் இல்லே.” தன் கதையை ரொம்ப சுருக்கமாக சொன்னான் சந்துரு.

அந்த சுருக்கத்தைக் கேட்டே நித்யாவிற்கு இதயத்தில் வலி சுருக்கென்றது. பாதிக்கப்பட்டவள் வலி; எப்படி தெரியாமல் போகும் ?!

சட்டென்று அவளுக்கு அவன் மீது பரிவு, பச்சாதாபம் வந்தது.

” உங்களுக்கு அம்மா அப்பா இருக்காங்களா ? ” அவளாகவேக் கேட்டாள்.

” இல்லே. அனாதை.! ”

துணுக்குற்றாள். நெஞ்சம் படபடப்பாக அவனைப் பார்த்தாள்.

” ஏற்கனவே அம்மா இல்லே. சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க. இருந்த அப்பாதான்…நான் கீழ் சாதிக்காரப் பெண்ணைக் கலியாணம் பண்ணிக்கிட்டேன்னு ஆத்திரப்பட்டு அவளைக் கொன்னது மட்டுமில்லாமல் அவள் அம்மா அப்பா குடும்பத்தையேக் காலி பண்ணிட்டு….தூக்குல தொங்கிட்டார். ” சொன்னான்.

” தீர்ப்பா ? ”

” இல்லே. தீர்ப்பை அவரே கையில எடுத்துக்கிட்டார். தற்கொலை ! ”

நித்யா ஆடிப் போனாள். என்ன சொல்வதென்று தெரியவில்லை.

தன் பேண்டின் பின் பக்க பையிலிருந்து பர்சை எடுத்து பிரித்த சந்துரு, ” இது எங்க கலியாண படம். ” அவளிடம் காட்டினான்.

வண்ணப்புகைப்படத்தில்;….அவனும் அவன் மனைவியும் மாலையும் கழுத்துமாக அழகாய் இருந்தார்கள்.

நித்யா பார்த்து முடித்ததும்….மடித்து மீண்டும் அதை பின் பக்கம் சொருகிக் கொண்ட சந்துரு…

” நானும் உங்களைப் போலத்தான் காதலுக்குத் துரோகம். செத்தவள் ஆத்மா சாந்தி அடையாதுன்னு….மறுமணமே வேணாம்ன்னு காலத்தை ஓட்றேன். ஆனா….. என் மனைவி…..இது தப்பு. பைத்தியக்காரத்தனம். பிடிச்சவளைப் பார்த்து கலியாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமாய் இருந்தால் என் ஆத்மா சத்தியமா சாந்தி அடையும்ன்னு கனவுல வந்து அடிக்கடி சொல்றா. இது பொய் இல்லே. நிஜம்! ” – சந்துரு கடைசி வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.

நித்யா அவனை அடிக்கண்ணால் பார்த்தாள்.

” ஆத்மான்னு ஒன்னு இருக்கிறதை நீங்க நம்பினால்…என் கனவு செய்தியையும் சந்தியமா நீங்க நம்பித்தானாகனும்.! வேற வழியே இல்லே. ” தன் பொய்யை நம்ப வேண்மென்பதற்காக அவன் மீண்டும் அவளிடம் அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.

நித்யாவிடமிருந்து எந்த பேச்சும் இல்லை. மௌனமாக இருந்தாள்.

”உங்களைப் பார்த்ததிலிருந்து பசுமரங்கள் ஏன் பட்டுப்போகனும்ன்னு எனக்குள் நெனைப்பு. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. நீங்க வாழும் வாழ்க்கைக்கு இடைஞ்சலில்லாமல் நானும் உங்களோடு கணவனாய் வாழத் தயார். பதிலை… இன்னைக்கு, இப்பவே சொல்லனும்ன்னு அவசியமில்லே. நாளைக்கும் சொல்லலாம். பத்து நாட்கள் கழித்தும் சொல்லலாம். பதில் சாதகமாய் வரனும் என்கிற அவசியமில்லே. பாதகமாகவும் வரலாம். அதைப் பத்தி கவலை இல்லே.. ஆனா எத்தினி நாளானாலும் உண்டு, இல்லே என்கிற பதில் எனக்குத் தெரியனும். அது முக்கியம். இதுக்காத்தான் உங்களை நிறுத்தினேன். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். வர்றேன். ” – சொல்லி…..சந்துரு எழுந்து…..இவளைத் திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
அவன் வார்த்தைகளைக் கேட்டு ஆடாமல் அசையாமல் இருந்த நித்யா தன்னைத் திரும்பிப் பார்க்காமல் நடந்து செல்லும் சந்துருவைப் பார்த்தாள்.

அவன் நடையும் நடப்பும் இவளுக்குப் பிடித்திருந்தது.!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *