பங்குக் கிணறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 6,618 
 
 

வக்கீல் வரதராஜா, கிருஷ்ணபிள்ளையின்; குடும்ப வக்கீல். அதோடு மட்டுமல்ல கிருஷ்ணபிள்ளையின் தந்தை இராமநாதபிள்ளையின் சொத்துக்களையும் கவனித்து வந்தவர். இராமநாதபிள்ளையின் மறைவுக்கு பின்னர் மகன் கிருஷ்ணபிள்ளையின் குடும்பவக்கீலாக இயங்கினார். ஆதனால் அவரின் சொத்து, குடும்ப விபரம் முழுவதும் அவருக்குத் தெரியும். வக்கீல் வரதராஜாவின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் கிருஷ்ணபிள்ளையின் மூத்த மகள் இராஜலஷ்மி. அவளது கேஸ் சம்பந்தப்பட்ட பைலை புரட்டியபடி சிந்தனையில் இருந்தார் வக்கீல். மூளைக்கு உரம் கொடுக்க அவருடைய கிளார்க் மேசையில் கொண்டுவந்து வைத்த சுக்கு போட்ட கோப்பியை உறிஞ்சு குடித்தார். அவரிடம் தனது கேஸ் விஷயமாக கதைக்க வந்து குறைந்தது அரைமணி நேரமாகிவிட்டது என்பதை இராஜலஷ்மி உணர்ந்தாள். அவள் வக்கீலை சந்திக்க வந்தது இது முதல்தடவையல்ல. இதுவரை பீஸாக மட்டும் ரூபாய் பத்தாயிரம் கொடுத்திருப்பாள். இந்த கேஸை மட்டும் வக்கீல்; வென்று தந்தால் தான் திடீர் பணக்காரியாகிவிடலாம். இருக்கிற கடன்களையும் தீர்த்துவிடலாம். அது மட்டுமல்லாமல் தனது சகோதரிகள் பாக்கியத்துக்கும் விஜயாவுக்கும் சொத்தில் ஒன்றுமே கிடைக்காமல் செய்துவிடலாம். பங்குக் கிணறு முழுவதும் தனக்கு மாத்திரம் சொந்தமாகிவிடும். வேலி போட்டு சகோதரிகள் இருவரையும் கிணற்றில் தண்ணீர் அள்ள முடியாமல் செய்துவிடலாம். அப்பாவும் அம்மாவும் இப்ப இருக்கிற வீடு, என் தாத்தா, தலைப்பிள்ளையான அம்மாவுக்கு எழுதி கொடுத்தது. அந்த பெரிய வீடும் கிணறும் அவையள் இரண்டு பேரும் கண்மூடிய பின் முறைப்படி தலைப்பிள்ளை எனக்குத் தான் வரவேண்டும.; அப்ப தெரியும் அவையளுக்கு நான் யார் என்று, மனதுக்குள் கறுவிக் கொண்டாள் இராஜலஷ்மி.

இராஜலஷ்மி , பாக்கியலஷ்மி. விஜயலஷ்மி என்ற பெயர்களில் கிருஷ்ணபிள்ளை ருக்மணி தம்பதிகளுக்கு மூன்று பெண்கள் பிறந்தார்கள். வாரிசுக்கு ஒரு ஆண்பிள்ளை கூட கிருஷ்ணபிள்ளை தம்பதிகளுக்கு இல்லை. சிறு வயது முதற்கொண்டே சகோதரிகளுக்கிடையே எப்போதும் சண்டை சச்சரவு தான். உணவிலும் கூட தமக்கு விரும்பியதை தான் சமைக்க வேண்டும் என அடம் பிடிப்பார்கள். ஆடைகள் வாங்குவதிலும் பிரச்சனைகளை உருவாக்கி வாக்குவாதப்படுவார்கள். ருக்மணியின் கணவன் கிருஷ்ணபிள்ளை எவ்வளவு கட்டுப்பாட்டுடன் பிள்ளைகளை வளர்த்தாலும் ருக்மணி கொடுத்த செல்லத்தால் தங்கள் போக்கில் வீட்டை போர்களமாக்கினார்கள் மூன்று சகோதரிகளும். தகப்பனைக் கண்டவுடன் மட்டும் அமைதியாகிவிடுவார்கள். ருக்மணி தன் பிள்ளைகளின் போக்கை பார்த்து கவலைப் படாத நாளே இல்லை. அவர்களை ஏன் பெற்றோம் என்றாகிவிட்டது அவளுக்கு. பிள்ளைகளின் போக்கு கிருஷ்ணபிள்ளையின் தேகநலத்தை வெகுவாக பாதித்தது. தன் நண்பர்களிடம் சொல்லி கவலைப்பட்டார்.

“ இந்த மூன்றும், இப்பவே நாய்கடி பூனைகடி என்றால் நாங்கள் இல்லாத காலத்தில் எப்படி ஒற்றுமையாக வாழப்போகுதுகளோ” என்று கவலைப் பட்டாள் ருக்மணி

“எல்லாம் நீர் கொடுத்த செல்லம். தட்டி கேட்காமல் பாசத்தோடு வளர்த்தீர்;. அதுகளுக்கு உமது பாசம் விளங்கவில்லை. இனி அவர்களுக்கு வரப் போகிற கணவன்மார் எப்படி இருக்கப்போகினமோ தெரியாது”இ. மனைவி மேல் குறைபட்டார் கிருஷ்ணபிள்ளை.

கிருஷ்ணபிள்ளை மலேசியாவுக்கு சென்று பிரித்தானிய ஆட்சியின் போது ஸ்டேசன்மாஸ்டராக ஈபோ, பீனாங், கோலாலம்பூர் ஆகிய இடங்களில்; வேலைசெய்து ஏராளமான சொத்து சம்பாதித்தவர். உரும்பிராயில் மலெயன் பென்சனியர் கிருஷ்ணபிள்ளையை தெரியாதவர்கள் இல்லை. கோயில் கரியங்களுக்கு அள்ளி கொடுத்தார். அவரின் பிள்ளைகளில் இராஜலஷ்மியும், பாக்கியலஷ்மி, மலேசியாவில் பிறந்தவர்கள். கடைக்குட்டி விஜயலஷ்மி மட்டும் அவரது சொந்தக் கிராமமான உரும்பிராயில் பிறந்தவள். பிள்ளைகளை வேம்படி பள்ளிக்கூடத்தில் காரில் அனுப்பி படிப்பித்து, சொத்துக்கள் வெளியே போகாமல் இருக்க சொந்தத்துக்குள் திருமணமும் செய்து வைத்தார். ஆனால் திருமணத்துக்கு பின்னர் சகோதரிகள் மூவருக்குமிடையே எவர் காசுக்காரர்?, யாருடைய கணவன் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்?;, படிப்பில் யார் பிள்ளை கெட்டிக்காரன், யாருடைய வீடு வசதியான பெரிய வீடு? போன்ற அற்ப விஷயங்களால் அவர்களுக்கு கிடையே ஒற்றுமை இருக்கவில்லை. போட்டி பொறாமையால் குடும்பங்களுக்கிடையே நல்ல உறவு இருக்கவில்லை. சகோதரிகள் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தனது பெரிய காணியில் அவர்களுக்கு ஒரே மாதிரியான மூன்று வீடுகளை கட்டிக்கொடுத்தார் கிருஷ்ணபிள்ளை. ஆனால் மூன்று குடும்பங்களுக்கு பாவிப்பதற்கு பொதுக் கிணறும், பலாலி வீதியோடு இணைக்கும் பொதுப்பாதையும் அமைத்துக் கொடுத்ததினால் பல பிரச்சனைகள் மூன்று குடும்பங்களுக்குள் வளரத்தொடங்கியது. அதோடு வீட்டு எல்லைப்பிரச்சனை வேறு.

அவர் மனைவி ருக்மணி கடைசி காலத்தில் பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும் வாழ விரும்பினாள். ஆனால் கிருஷ்ணபிள்ளை அதை விரும்பவில்லை. காரணம் பிள்ளைகள், தன் பென்சன,; தான் இருக்கும் வீடு, யாருக்கும் எழுதாத கிருஷ்ணபிள்ளை தம்பதிகள் பெயரில் இருக்கும் இருபது பரப்பு தோட்டக் காணி, கடைசி காலத்துக்கு தான் இல்லாத போது மனைவிக்கு தேவையாக சேர்த்து வைத்த வங்கிப் பணம் ஆகியவற்றில் அவர்கள் கண்வைத்திருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். தனக்கு கிடைக்கும் பெரும் தொகை மலேசியன் பென்சனில் தாங்கள் இருவரும் வசதியாக தனக்கு சீதனமாக கிடைத்த நாலு அறைகள் கொண்ட மாளிகை போன்ற வீட்டில் வாழலாம் என்று தீர்மானித்தார். பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு மூன்று வருடங்கள் மட்டுமே அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணபிள்ளை, படுத்தபடுக்கையாகி சொற்பகாலத்தில் கண்ணை மூடிவிட்டார். கண்ணை மூடமுன்னர் எக்காரணத்தாலும் பிள்ளைகளோடு ருக்மணி வாழக் கூடாது என்பது அவர் கட்டளை. பிள்ளைகள் ஒருவராவது அவரது கடைசி காலத்தில் உதவவில்லை. கிருஷ்ணபிள்ளையி;ன் மறைவுக்கு பின்னர் ருக்மணி தனித்துப் போனாள். உதவிக்கு கிருஷ்ணபிள்ளையி;ன் தூரத்து சொந்தக்காரர் ஒருவருடைய மணமாகாத பெண் சித்திராவை உதவிக்கு வைத்துக்கொண்டாள்;. அமைதியான குணமுள்ள சித்திரா, ருக்மணியை தன் சொந்தத் தாய் போல் சமையல் முதற்கொண்டு வீட்டுவேலை வரை செய்து கவனித்து வந்தாள்.

******

“உம்முடைய கேசை கவனமாக படித்தனான். கிணற்றில் உமக்;கும் இரு சகோதரிகளுக்கும் பங்கு வைத்து தான் உங்கடை அப்பா வீடு கட்டி தரும் போது பத்திரத்தில் எழுதியிருக்கிறார். மூன்று குடும்பங்களும் பாவிக்கவசதியாக பாலாலி வீதியை இணைக்கும 12 அடி அகலமான பொதுப்பாதை போட்டுகொடுத்திருக்கிறார்.. நீங்கள் படலை போட்டு மற்றவர்களின் போக்கு வரத்தை தடுப்பது சட்டப்படி தவறு. காரணம், தானும் அவர் மனைவியும் இல்லாத காலத்தில் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காக பங்கு வைத்த எழுதியிருக்கிறார். அதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். உங்கள் மூன்று பேருக்கும் தந்த காணிகளோடு சேர்ந்திருக்கும் இருபது பரப்பு தோட்டக் காணியும், அவருக்கு சீதனமாக கிடைத்த பெரிய வீடும் இன்னும் எவர் பெயருக்கும் எழுதப்படவில்லை. உங்கடை தாயார் என்ன யோசித்திருக்கிறாரோ தெரியாது. ஆனால் உயில் எழுதி வைத்திருப்பதாகவும் தான் கண்முடிய பின்னரே அதை திறக்கும் படி எனக்கு சொன்னார். அவர் மனது புண்பட நீங்கள் நடக்க வேண்டாம். அது உங்களுக்கு நல்லதல்ல” வக்கீல் அமைதியாக ஆலோசனை சொன்னார்.

“நான் தான் மூவரிலும் மூத்தவள். கூடப் படித்தவள். எனக்குத் தான் கூடிய சொத்து அப்பா எழுதி வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி கிணறு வெட்டியிருக்க வேண்டு;ம். அப்பா இப்ப இல்லை. அம்மாவுக்குப் பிறகு அவர்கள் இப்போ இருக்கிற வீடு முத்தவளான எனக்குத்தான் சேரவேண்டும். அப்படித்தான் என் மேல் அன்பு வைத்திருந்த பாட்டியும் பாட்டாவும் நான் பிறந்த போதே சொன்னவர்கள் என்று அம்மா அடிக்கடி எனக்குச் சொல்லுவா. என் பாட்டனார் இராமநாதபிள்ளைக்கு என் மேல் கொள்ள ஆசை.. அது உங்களுக்குத் தெரியும் தானே. ஆதனால் தான் அவர்தான் எனக்கு இராஜலஷ்மி என்று பெயர் வைத்தவர்”

“ பேருக்கும் உயிலில் எழுதிய விஷயத்துக்கும் தொடர்பு கிடையாது பிள்ளை. அது சரி நீங்கள் மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்தவர்கள். ஒரே இரத்தம் தானே ஓடுது. எதற்காக உங்களுக்குள்ளை வீணாக சண்டைபிடிக்க வேண்டும. உங்களைப் பார்த்து உங்கடை பிள்ளைகளும் விரோதம் காட்ட தொடங்குவினம். பிறகு இந்த ஒற்றுமையின்மை பரம்பரையாக வளர தொடங்கிவிடும். ஊர் சனங்கள் கூட உங்களை சண்டைக்கார குடும்பம் என்று பகிடிகண்ணும். ஒரு வருத்தம் துன்பம் என்றால் உங்கள் குடும்பங்கள் ஒன்றுக்கு ஒன்று உதவியாக இருக்க வேண்டும்.” புத்திமதிகளை வக்கீல் தொடர்ந்து சொன்னது இராஜலஷ்மிக்கு பிடிக்கவில்லை.

“ நீங்கள் ஒற்றுமையைப் பற்றி பேசுகிறீர்கள். அதை அவையள் இரண்டு பேருக்கும் உபதேசம் செய்யுங்கள். பொதுக்கிணத்தில் ஒரு கீழ்சாதி ஆள் ஒருவரை தண்ணி அள்ள விட்டிருக்கிறார் பாக்கியத்தின் புருஷன். அவர் கொம்யூனிஸ்டாக இருக்கலாம், அதோடு அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு எங்கடை எம்பியை தெரியும். அவர் என் கணவனுக்கு கிட்டத்துச் சொந்தம். அரசியல் காரணத்துக்காக கீழ்சாதி சனங்களை எங்கடை கிணத்திலை தண்ணி அள்ள விட்டு நீரை மாசுப்படுத்த வேண்டுமே. அதைபற்றி என்டை அவர் பாக்கியத்தின் புருஷனிடம் கேட்டபோது “கணக்க கதைத்தால் கிணற்றுக்குள் பொலிடோல் ஊத்தி போடுவன் எண்டு வெருட்டுகிறார். சண்டித்தனம் காட்டுகிறார். எண்டை அவருக்கும் கொட்டடி ராஜேந்திரன் போன்ற சண்டியர்களின் ஆதரவு இருக்கிறது என்பது அவருக்குத் தெரியாது போல. அது மட்டுமே எனக்கு சொல்லாமல் மெசின் போட்டு கிணற்றை இறைத்து தண்ணீர் முழுவதையும் தன் தோட்டத்துக்கு மட்டும் விட்டிருக்கிறாள் விஜயா. என்றை அவர் குளிக்கப்போனபோது கிணத்திலை தண்ணி; இல்லை. நாங்கள் மூவரும் தண்ணி அள்ளும் போது எங்கடை சொந்த வாளிகளைத் தான் பாவிப்பம். ஒரு நாள் எங்கடை வாளியை களட்டி கிணத்துக்குள்ளை வேண்டும்மென்று போட்டிட்டினம். பொதுக் கிணறை எனக்கு சொல்லாமல் அவளுக்கு தெரிந்த ஆளைக் கொண்டு இறைத்துப் போட்டு செலவுக் காசை மட்டும் பங்கு கேட்டு வந்திட்டாள். அதோடை இரண்டு பேரும் புது வேலி போடுகிறோம்; என்று; வேலியை தள்ளிப் போட்டு எனது காணியில் ஆறு அங்குல நிலத்தை ஆக்கிரமித்துவிட்டுதுகள். அதோடை மட்டுமே பாக்கிய லஷ்மி என்டை வேலி கதியால்களில் இருந்த இலைகளை வெட்டி எனக்குத் தெரியாமல் விற்றுப்போட்டாள். தென்னம்மோலையால் அடைக்கப்பட்ட வேலியிலை ஓட்டை வைத்து எங்கடை வீட்டை யார் வந்து போகிறது எண்டு விடுப்பு பார்க்கிறது தான் அவளுக்கு வேலை. நான் இனி காசு செலவழித்து சேவையரைக் கொண்டு காணியை அளப்பிக்க வேண்டும். ” சண்டைக் கோழி போல் சிலிர்த்து நின்று பொரிந்து தள்ளினாள் இராஜலஷ்மி.

வக்கீலுக்கு அவள் சொன்னதை கேட்டபோது சிரிப்பு வந்தது.” இப்ப நீர் என்னோடை கதைக்க வர முந்தி உம்முடைய இரண்டு சகோதரிகளும் வௌ;வேறு நேரம் பார்த்துவந்து ஒருத்தரைப் பற்றி ஒருத்தர் முறையிட்டுப் போட்டு போயிருக்கினம். பொதுப்பாதையிலை தங்கடை பகுதியிலை கல்லும் முள்ளும் போட்டு தாங்கள் போக வர இடைஞ்சல் செய்ததுக்கு அவையளும் உம்மேலை கேஸ் போடப் போகினமாம். இந்த ஒற்றுமையின்மையாலை மூவருக்கும் தான் செலவு”.

“ கேஸ் போட்டுப்; பார்க்கட்டும் யார் வெல்கிறது எண்டு பார்ப்பம். செலவைப் பற்றி எனக்கு கவலையில்லை. என்றை அவர் துபாயிலை ஒயில் கொம்பெனியிலை வேலை. நல்ல சம்மபளம். என்ன செலவு வந்தாலும் அவையளுக்கு பாடம் படிப்பிக்காமல் விடப் போவதில்லை. நான் வாறன்”. தான் வந்த காரியம் சரிவரவில்லை என்று வேறு வக்கீலை வைத்து கேஸ் வைக்க வேண்டும் என்று கருவிக் கொண்டு சென்றாள் இராஜலஷ்மி.

*******

ஒரு நாள் ருக்மணியின் திடீர் மரணம் ஊரையே அதிர்ச்சியடைய வைத்தது. ருக்மணி வீட்டுக்கு மா இடிக்க வரும் செல்லத்துக்கு ருக்மணியின் பிரிவால் மனதில் உள்ள பெரும் மனக் கவலை. கண்களில் கண்ணீh வடிய “ என்ன நல்ல மனமுள்ள மனுசி. கஷ்டப்படுகிற ஊர் சனங்களுக்கு எவ்வளவு உதவி செய்வா. புருஷன் செத்து இரண்டு வருஷம் கூட ஆகவில்லை. பிள்ளைகளோடை இருந்து கஷ்டப் படவேண்டாம் என்னோடு வா என்று அவர் கூட்டிக்கொண்டு போயிட்டார். உவளவை தான் அந்த மனுசனும் மனுசியும் சாக காரணம்” என்று கவலைப்பட்டாள்.

ருக்மணியின் இழவு வீட்டுக்கு ஊரே திரண்டு வந்திருந்தது அவ்வளவுக்கு அவள் பல ஊர்சனங்களுக்கு; உதவிசெய்திருக்கிறாள். சில விதவைகள் கூட்டம் பல இழவு வீடுகளுக்கு போய் கூலிக்கு மாறடித்து பழகினவர்கள். இழவு வீடுகளில் தம்கணவன்மாரை நினைத்து ஒப்பாரி வைப்பார்கள். சிலருக்கு ருக்மணிபற்றி அவ்வளவுக்கு தெரியாது. கூலிக்கு மார்படிப்பவாகள். இழவு வீடுகளில் போய் அழுதால் எதும் நாலு பணம் கிடைக்கும் அவர்களுக்கு. அவர்களோடு சேர்ந்து இராஜலஷ்மி, பாக்கியம், விஜயா மூவரும் போட்டிக்கு ஒப்பாரி வைத்தார்கள். இதில் இராஜலஷ்மி தாயின் பிரிவு தாங்க முடியாமல் மூர்ச்சித்து விழுவது போல் நடித்தாள். ஆனால் மூன்று சகோதரிகளின்; பார்வைகள் மட்டும் ருக்மணியின் பிரேதத்தின் காதுகளில் போட்டிருந்த ரங்கூன் வைரத் தோட்டிலும், கழுத்தில் இருந்த பத்து பவுன தங்கச் சங்கிலியிலும், கையில இருந்த தங்க வலையல்களில் மேல் தான் இருந்தது.

“ அம்மாவுக்கு சொன்னனான் அப்பா போன பிறகு என்னோடை வந்திருக்கும் படி. வந்திருந்தால் இது நடந்திருக்காது” என்று கதறினாள் பாக்கியம்.

“ அம்மாவுக்கு, நான் கடைக்குட்டி என்று என்னிலை அவவுக’கு எவ்வளவு அன்பு. என்னோடை வந்திருங்கோ அம்மா எண்டு எத்தனை தடவை கேட்டனான். அவ கேட்கவில்லை. எங்கள் குடும்பத்துக்கு அம்மா தான் எல்லாம். இனி எண்டை பிள்ளைகள் அம்மம்மா எங்கே எண்டு கேட்டால் நான் என்ன பதில் சொல்லப் போறன்” விஜயா தன் கணவன் வழி இனத்தவர்களை கட்டிப்பிடித்து கதறினாள்.

மூலையில் ஒதுங்கி இருந்த செல்லத்துக்கு மூன்று பிள்ளைகள் அழுதது எல்லாமே நடிப்பாகத் தெரிந்தது. “இப்ப ஏன் ஆக்களுக்கு காட்டவே இதுகள் ஒப்பாரி வைக்குதுகள். சொத்துக்கு ஊரிமை கொண்டாடவே. உவள் சித்திராதான் அம்மாவை கடைசி வரை கவனித்தவள். அவளிண்டை மடியிலை தான் அவவுடைய உயிர் போயிற்று. அப்ப இந்த மூன்று பேரும் எங்கையாம் போயிட்டினம்?” என்று முணுமுணத்தாள்.

பக்கத்தில் அதை கேட்டுக் கொண்டிருந்த செல்லத்துக்கு தெரிந்த ருக்மணியின் சொந்தக்காரி ஒருவள் “ சரியாய் சொன்னாய் செல்லம். இந்த பிள்ளைகளின் ஒற்றுமையின்மைதான் ருக்குவின் உயிரை கெதியிலை கொண்டு போயிட்டு. இப்ப அவவிட்டிட்டு; போன ஏராளமான சொத்தை சுருட்டிக் கொண்டு போக வந்திருக்கினம், கிடைத்;தது போதாதெண்டு” என்று ஒத்துப்பாடினாள்.

ஆண்வாரிசு இல்லாதபடியால் யார் கொள்ளி வைப்பது என்ற பிரச்சனை உருவாகிபோது இராஜலஷ்மி தன் மகன் தான் வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள். தகப்பன் உயிரோடை இருக்க அவன் கொள்ளி வைப்பது முறையில்லை என்றார் முறைகள் தெரிந்த ஒரு கிராமத்து முதியவர். இறுதியில் ருக்மணியின் தங்கை மகனுக்கு அந்த உரிமை கிடைத்தது. ருக்மணியின் பிரேதம் வேலி வெட்டி பாடையில் சுடலைக்கு போனபோது தங்கள் உரிமையைக் காட்ட மூன்று பிள்ளைகளும் வீதி மட்டும் போய் கதறி அழுது பிரியாவிடை கொடுத்து விட்டு வந்தனர்.

காடத்து முடிந்து மறுநாள் ருக்மணியின் பிள்ளைகள் குடும்பம் இனத்தவர்கள் ஆவலுடன் வக்கீல் வரதராஜன், கிருஷ்ணபிள்ளை- ருக்மணி தம்பதிகள் எழுதிப் போட்டு போன உயிலை தொண்டையை கனைத்துக் கொண்டு, வாசிக்கத் தொடங்கினார். எலலோருi;டய கவனமும் அவர் மேல் இருந்தது.

“இந்த இறுதி உயில் கிருஷ்ணபிள்ளை- ருக்மணி ஆகிய நாமிருவரும சுயநிலயில் எழுதிய உயிலாகும்.

இராஜலஷ்மி , பாக்கியலஷ்மி. விஜயலஷ்மி ஆகிய எங்கள் முன்று பிளளைகளுக்கு எல்லா வசதிகளும் படிப்பும் கொடுத்து வளர்த்து நல்ல இடத்தில் சீதனம் கொடுத்து திருமணம் செய்துவைத்தோம். ஆனால் சகோதரங்களுக்கிடையே சிறு வயது முதற்கொண்டு ஒற்றமையில்லாது வாழ்ந்தனர். திருமணமான பின்னரும் முன்று குடும்பகளுக்குள் ஒற்றமையில்லை. நாம் அதனால் பட்ட கவலையே எம்மை வருத்தக்காரர் ஆக்கிற்று. அவர் இறந்த பிறகு உதவி இல்லாமல் இருந்த என்னை கடைசி காலத்திலை சித்திரா தன் சொந்த தாய் போல் கவனித்துவந்தாள். அக்காரணத்தால் சித்தராவுக்கு என்னுடைய நகைகளும, வங்கியிலை இருக்கிற முப்பது இலட்சம் ரூபாய் பணத்தில்; எனது இறுதிச் சடங்கு செலவு. வக்கீல் செலவு, வரி போக, பத்து இலட்சம் ரூபாயும், எழுதப்படாத இருபது பரப்பு தோட்டக் காணியும் சொந்தமாக வேண்டும். நாங்கள் இருந்த வீட்டை முதியோர் வாழும் இல்லமாக மாற்றி மூன்று பேர் கொண்ட அறக்கட்டளை மூலம் பரிபாலனம் செய்ய வேண்டும். அதற்காக வங்கியில் உள்ள மிகுதி பண்த்;தை அன்பளிப்பாக தானம் செய்கிறேன். இதற்கான நடவடிக்கையை ; வக்கீல் வரதராஜா அவர்களி;ன பொறுப்பில் விடுகிறேன்.

இப்படிக்கு

கிருஷ்ணபிள்ளை ருக்மணி

இராஜலஷ்மி , பாக்கியலஷ்மி. விஜயலஷ்மி ஆகிய மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி வாயடைத்து போய் நின்றனர். வக்கீல் உயில் வாசித்ததை ;கேட்டுக்கொண்டிருந்த செல்லம் “இது இவையளுக்கு ஒரு நல்லபடிப்பினை. இனியாவது ஒற்றுமையக வாழப் பழகவேண்டும்” என்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *