பகல் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 3,043 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாலு பேர் மாதிரி எனக்கு வாக்கு சாமர்த்தியம் போத வில்லை; ஒன்றுமில்லாததைச் சில பேர் எவ்வளவு ரசமாய், காது, கண், மூக்கு வைத்து ‘ஜோடனை’ பண்ணி, நேரில் நடப்பது போலவே சொல்லிக் காண்பித்து விடுகிறார்கள் ! கேட்பவருக்கு மெய்சிலிர்த்து விடுகிறது.

எனக்கோ அது தான் சூன்யமாயிருக்கிறது. மண்டையிலும் மனதிலுமிருக்கும் வேகத்தில், கால்பங்கு கூட வாய் வார்த்தையில் வரமாட்டேனென்கிறது. ஆனால், எனக் கென்னவோ அப்படித் தோன்றவில்லை. என் மனவேதனை இன்னமும் தணியவில்லை.

ஒன்றுமில்லை. பஸ்ஸில் போய்க கொண்டிருந்தேன். ஆபீஸுக்குப் போய்க் கொண்டிருந்தேன்.

எங்கே போனாலென்ன, வந்தாலென்ன, அதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா?

நான் என்னவோ சாதாரண மனிதன் தான். காலையி லெழுந்தால் காப்பி – அப்புறம் மார்க்கெட் – ரேஷன் அரிசி அதற்குமேல் அவசர அவசரமாய் ஆபீஸ் ; திரும்பி வந்தா கடற்கரைக்குப் போய்க் காற்று வாங்குதல், வீட்டுக்கு வந் தால் நேரமாய் வந்தேனென்று வசவு வாங்குதல் – சாப்பிடு தல், தூங்குதல் – திருப்பித் திருப்பித் இதேதான். இதிலிருந்து தப்ப வழியில்லை. இந்த தினச்சூழலில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால், எனக்குத் திருப்தி தான். ஆனால், எப்படி ஏற்படும் மனைவிக்கு மடியை விட்டு இப்போது தான் ஒரு குழந்தை இரங்கிற்று. வாசலில் போய் மண்ணைத் தின்று கொண்டு விளையாட. இராத் தூக்கத்தை அழுது கெடுக்க, இடுப்பில் ஒரு குழந்தை. மனக்கவலை ஓயாதிருக்க, வயிற் றில் ஒரு வித்தோ என்று மூன்று மாதங்களாய்ச் சந்தேகம். இத்தனை பாரங்களைக் கழுத்திலே கட்டிக்கொண்டு, மேலே இறக்கையும் கட்டிக்கொண்டு பறப்பதென்றால், எப்படி முடியும்?

ஆகையால், இப்போது என்ன சொல்ல வந்தேன்? பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன்.

இந்தக் காலத்தில் பஸ்ஸில் போவதென்றால் தான், என்ன என்று தெரியுமே ! ஒவ்வொரு வண்டியும் ஒரு மகாமக உற்சவம் – சினிமாக் கொட்டகையின் புதுப் படத்தின் முதல் நாள் கூட்டம். உள்ளே புகுவதே பிரயாசை – புகுந்து தோல்வாரைப் பிடித்துத் தொங்க இடம் கிடைப்பதே துர்லபம். உட்காரவே இடம் கிடைத்துவிட்டால்…அடேயப்பா!

நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

‘லொடக் – லொடக் – லொடக்’

பஸ் ஓர் இடத்தில் நின்றது. வெளியிலிருந்து ஒரு கும்பல் அலை போல் உள்ளே மோதியது. என் பக்கத்தில் ஒருத்தி வந்து உட்கார்ந்து நெறித்தாள் – நெளிந்தாள்.

நிறம் கறுப்பென்றே சொல்லலாம்? சிறிசு , பதினெட்டு இருபது தானிருக்கும். காதில் ‘பளீர், பளீர்’ என்று சுடர் விடும் இரு வெள்ளைக்கல் டோலக் குகள், கழுத்தில் ஸன்ன மாய் ஒரு தங்கச் சங்கிலி. நெருக்கமாய் நெய்யாத நீலப் புடவையில் சிவப்புக்கரை. குறுகுறு என்று முகத்தில் களை.

முறைத்துப் பார்க்கும் எண்ணத்துடனேயே, ஓர் ஆளை உன் னிப்பாய்ப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. கழுதை கூடத்தான் கோவில் சுவரை முறைத்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறது. அதனால் அது சிற்பங்களைப் பற்றிச் சிந்திக்கிறது என்று அர்த்தமா? மனத்தில் எத்தனையோ குருட்டு யோசனைகள், கோட்டைகள், ஆகாசப் பந்தல்கள், அவள் எவளாயிருந்தால் எனக்கென்ன? வணிகச்சியோ, கிருஸ்து வச்சியோ, பிராமணத்தியோ?

ஆனால், அவள் என் மடியில் செத்தாள்.

எனக்கே தூக்கிவாரிப் போடுகிறது. திடீரென்று அவள் முகம் வெளிறிட்டது. கண்கள் பெரிதும் விரிந்து மலர்ந்து, விழிகள் சுழன்றன. தலையாடியது. துவண்டு அப்படியே குப்புற என் மடியில் சாய்ந்தாள்.

நான் ‘ஓ’ என்று கத்திவிட்டேன். அவளை என் மடியில் நிமிர்த்திப் புரட்டினேன். கைநாடியைப் பிடித்துப் பார்த்தேன்.

ஊஹும், பேசவில்லை…விழிகள் செருகின.

மாரடைப்பு. இதற்கு வேளையுண்டா, காரணமுண்டா? வண்டியில் நேரிட்ட குழப்பத்தைக் கேட்கவும் வேண்டுமா; வண்டி நின்றுவிட்டது.

வண்டியில் எங்கேயோ ஒரு மூலையிலிருந்து அவள் புருஷன் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு பாய்ந்து வந்தான். வண்டியில் தான் மகத்தான கூட்ட மாயிருக்கிறதே! யாராரோ எங்கெங்கோ அகப்பட்ட இடத்தில் உட்காரவோ, நிற்கவோ, வாரைப்பிடித்துக் கொண்டு தொங்கவோ, தொற்றிக் கொள்ளவோ வேண்டியது தானே!

அவனும் சின்னப் பையன் தான். இருபத்தைந்து வயது இருக்குமா? – சிவப்பாய், மூக்கும் முழியும், அரும்பு மீசை யுமா யிருந்தான். சரியான ஜோடிதான்.

மார்பில் கைவைத்துப் பார்த்தான்.

என்ன பிரயோஜனம்? பட்சி எப்போதோ பறந்து விட்டது. என் மடியில் சடலம்.

“ஜட்கா! ஜட்கா!!”

“டாக்ஸி! – டாக்ஸி!! -டாக்ஸி!!!”

அவசரத்துக்கு ரிக்ஷாதான் அகப்பட்டது. ஆபீஸுக்கு அரைமணி ‘லேட்’. முதலாளியுடன் சற்று மனஸ்தாபம்.

வேலை இடுப்பை ஒடித்தது. மனம் வேலையில் ஓட வில்லை; ஒரு நிலையில் நிற்கவில்லை. எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு, ஏதோ ஒரு சாக்குச் சொல்லி விட்டு, மூன்று மணிக்கே படியைவிட்டு இறங்கிவிட்டேன்.

சட்டைப் பைகளில் கையைத் திணித்துக்கொண்டு அப்படியே கடற்கரைப் பக்கமாகப் போனேன்.

மணலும் நீலக்கடலும் தகதகத்தன. வெயில் முதுகுத் தோலை உரித்தது.

குளு குளு என்று பசுமை ததும்பும் சரீரம். இன்னமும் குடும்பத்தில் அடிபட்டு வாடி வதங்கவில்லை. புதுக்குடித் தனத்தின் சுகவேதனையில் துடிக்கும் சரீரம் – என் மடியில் அவள் மடிந்தாள்.

இந்த மனத்தின் நிலையை ஒவ்வொரு தடவை என் னென்று சொல்வது? காரணமற்ற கிலேசம்; அதில் ஓர் இன்பம். கடுகடுக்கும் தனித்தொழுகும் ஒரு தித்திப்பு.

கரையோரமாய் நடந்து கொண்டே போனேன். அலைகள் வந்து காலைக் கழுவின.

அம்மாதிரி என் மனத்தின் கனத்தைக் கழுவுமா அவை? கரையோரமாய் நடந்து கொண்டு, நடந்ததையெல்லாம் மறுபடியும் மன அரங்கில் ஒருமுறை நடித்துக் கொண்டேன்.

அவள் கன்னத்தைத் தொட்டேனா? ஆம், தொட் டேன், சூடு இருக்கிறதோ என்று பார்க்க. சூடு அதற்குள் தணிந்து விடுமா என்ன, மாரடைப்பில் செத்தவளுக்கு? சந்தனம் போல் வழுவழுத்த கன்னங்கள் கூட மாறவில் லையே! முன் மயிர் மாத்திரம் கொஞ்சம், இரண்டு பிரிகள், கலைந்திருந்தன. கோணல் வகிடோ, நேர் வகிடோ? இல்லை , அது தான் சரியாக ஞாபகமில்லை. இருந்தால்…

இருந்தால்??… இருந்தால் என்ன? தெரிந்து என்ன ஆக வேண்டும்?. எவளா யிருந்தாலென்ன? எங்கேயிருந்தோ வந்து, வேளை நெருங்கியதும் என்னிடம் சாகவேண்டு மென்றே வண்டியில் ஏறி, நேரே என் மடியில் விழுந்து செத்தாள். ஏதோ முன் ஜன்மத்தின் பிணைப்பு. கொண்டவன் மடியில் சாகிறது தானே…?

விதி! ஆம், இதுதான் விதி!

அவ்வளவு தான். என் மனதில் அவளையும் என்னையும் வைத்து நான் புனைந்த கதை வாய் வார்த்தைக்கும் வராது. ஏட்டிலும் ஏறாது. அது ஓர் எழுதாத காவியமாய் மாறியது. சகுந்தலை – துஷ்யந்தன். நளன் – தமயந்தி, சாவித்திரி – சத்யவான், பிருத்விராஜ் – சம்யுக்தை இவர்களைப் போன்ற மற்றவருடன் நாங்களும் சேர்ந்துவிட்டோம்.

இந்தக் காவியத்தில், நான் மணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தும் மனைவிக்கு இடமில்லை. மாடியை விட்டிறங்கி வாசலுக்குப் போய் மண்ணைத் தின்று கொண்டு வயிற்றில் கட்டியைப் பெருக்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு இடமில்லை.

இடுப்பில் சவாரி செய்து கொண்டு இரவென்றும் பக லென்று மில்லாமல் எப்போதும் அழுத கண்ணும் ஒழுகிய மூக்குமாயிருக்கும் கைக்குழந்தைக்கு இடமில்லை. வயிற்றிலி ருந்து கொண்டே, மருந்தென்றும், மாயமென்றும், வலியென் றும், வியாதியென்றும், செலவும் கவலையுமாய் மனிதனின் உயிரையே குடித்துக்கொண்டிருக்கும் வித்துக்கும் இட மில்லை. நாங்கள் இருவர் தான், நானும் என் மடியில் செத்து வளும். நாங்கள் இருவரும் கூடிய அந்தக் கற்பனை வாழ்க் கையில், பசும்புல் தரைகளும், நீரோடைகளும் நிலவும் நிம்மதியும், நித்திய சுகமும்தான் இருந்தன. நாங்கள் இருவரும் கந்தர்வர் ஆகிக் ககனத்தில், நீந்திக் கொண்டிருந்தோம். ஆனால், ஆனால் இந்தச் சாவு! என் உடல் நடுங்கியது. என்ன கனவு! என்ன வேதனை! விஷத்திலே தோய்ந்த அமிழ்தம் போல் இருந்தது என் மன நிலை.

மணி ஆகிவிட்டது. வீட்டுக்குத் திரும்பினேன்.

மண்ணைத் தின்னும் குழந்தையின் முகத்தழுக்கை என் மனைவி துடைத்துக் கொண்டிருந்தாள்.

என்னைக் கண்டதும் இடுப்பிலிருக்கும் குழந்தையை என் கையில் கொடுத்துவிட்டு, இலை போடப் போனாள். அசதியில் ‘ஊம்…. ஊம்….’ என்று முனகினாள்.

வயிற்றிலிருக்கும் வித்து படுத்தும் வேதனை.

இரண்டு கவளங்களை, வில் உருண்டையாய் விழுங்கினேன்.

“உடம்பு சுகமில்லையா? சாப்பிடவே யில்லையே!”

“ஆமாம் – இன்று என் மடியில் ஒருத்தி செத்தாள்…” என்று வெடுக்கென்று பதில் சொல்லிவிட்டு, கையையலம்பிக் கொண்டு, மாடி வெளிப்புறத்தில் சாய்வு நாற்காலியில் போய்ச் சாய்ந்தேன்.

தெருவில், டிராம் வண்டிகள் கணகண என்று மணி யடித்துக் கொண்டு சக்கரங்கள் தண்டவாளத்தைக் ‘Al…ஈ…ச்’ என்று காதைத் துளைக்கத் தேய்த்துக் கொண்டு சென்றன. பஸ்ஸும் மோட்டாரும் ஊதிக்கொண்டு பறந்தன. ஜனப் புழக்கத்தில் தீராத இரைச்சல் கீழே. இடுப்புக் குழந்தையைத் தொட்டிலில் போட்டு என் மனைவி தூங்கப் பண்ணிக் கொண்டிருந்தாள். இடை யிடையே மூக்கைச் சிந்திப் போட்டாள். என்ன தான் சாது வானாலும், என் மடியில் இன்னொருத்தி செத்தது அவளுக்குப் பொறுக்காது.

“ஆரிரா ரோ…ஆராரோ…!”

ஆம். அவள் யாரோ நான் யாரோ – ஆனால், இவள் மாத்திரம்…இவள் யார்?

இந்தக் குடும்ப உழற்சியில் நான் அவளை மறந்துவிடு வேன். இதில் எதுதான் நிற்கும்? எந்த மகா சக்தியும் சகதிக்கு வர வேண்டியது தான். இப்போது, பச்சை மரத்தில் பாய்ந்த கோடாரிபோல் அவள் என் மார்பைப் பிளந்து கொண்டிருந்தாலும், நாளடைவில் பாசி மேலே மூட மூட, அவள் உள்ளாறி விடுவாள்.

வேதனையே அது தான்…!

திடீரென்று அவளைக் கடைசியாய் நான் கண்ட காட்சி என் கண் முன் வந்து நின்றது . ரிக்ஷாவில் அவள் கூட்டை அவன் ஏற்றிக்கொண்டு செல்கையில், அந்த உடல் துவண்டு உயிரற்ற கைகளும் தலையும் லொடலொட என்று தொங்கலாடின.

தலை மயிரில் ஒரு கொத்து மருக்கொழுந்து.

எனக்குப் பகீர்’ என்றது. “அம்மாடி…..!”

“என்ன! என்ன!” என்று அலறிப் புடைத்துக் கொண்டு என் மனைவி ஓடிவந்தாள்.

“என்னடி பண்ணுவோம்! இன்னும் எத்தனை நாள் இப்படி!” என்று விக்கினேன்.

மண்டையைத் தொட்டாள்.

“ஐயையோ நெருப்பாய்க் காயுதே” – சொல்லவே இல்லையே! நேரமும் ஆயிடுத்து; வீட்டிலும் ஒருத்தருமில்லையே! படுத்துக் கொள்ளுங்கள். விடியற்காலையில் தான் வைத்தியனைக் கூப்பிடணும். படுத்துக்கொள்ளுங்கள். இதோ வந்து விட்டேன் …”

அவள் என்னைப் படுக்க வைத்து விட்டு, பாலாடையையும் ஒரு துணிக் கிழிசலையும் எடுத்துக்கொண்டு. இருளைத் தேடிச் சென்றாள்.

– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *