நோய்நொடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 4,499 
 
 

எனக்கு ஒரு ப்ரைவேட் கம்பனியிலே வேலை. பிச்சு பிடுங்கற வேலை. சம்பளம் என்னவோ நல்லாதான் கிடைக்குது, ஆனால், வேலை தான், காலை 9 மணி முதல் ராத்திரி 7 மணி வரை. சில நாள் வீட்டுக்கு வர இன்னும் கூட நேரமாயிடும்.

வீட்டுக்கு வந்து படுக்கையில் அப்பாடா என்று விழுந்தால் போதும் என்றிருக்கும். ஆனால், தூக்கம் வராது. அலுவலக நினைவு அந்த பாடு படுத்தும். முடிக்காத வேலைகளை எப்படி அடுத்த நாள் முடிப்பது என்றே எண்ணம் ஓடும்.

கடந்த 10 நாளாக ஒய்வு ஒழிச்சல் இல்லாத பணி. நேற்று இரவு வீட்டுக்கு வரும் போது மணி 10. வீட்டிற்கு வந்து படுத்தேன். இரவு முழுதும் புரண்டு படுத்தேன். விடிகாலை 3 மணிக்கு தான் தூங்கினேன்.

விழித்து பார்த்தேன். மணி 9. ஐயையோ, நேரமாகி விட்டதே என எழ முயற்சித்தேன். முடியவில்லை. தலை பாரமாக இருந்தது. தலை வலி மண்டையை பிளந்தது. உடல் வேறு அக்கு வேறு ஆணி வேராக வலித்தது கொஞ்சம் வயிறு வேறு பிசைந்தது. வாந்தி வருவது போல.

ஒரு வேளை, டெங்கு ஜுரமாக இருக்குமோ? உடனே, எழுந்து, தெர்மாமீட்டரை தேடிக் கண்டு பிடித்து, உடல் வெப்பநிலை பார்த்தேன். ‘99’ என்று காண்பித்தது. டாக்டரிடம் போகலாமா?

ஒரு வேளை, எனக்கு கோவிட் ஆக இருக்குமோ? அதற்கும், இதே தலைவலி, ஜுரம், உடல் வலி தானே அறிகுறி. டாக்டரிடம் போகலாமா?

எனக்கு நானே, என் கை பிடித்து பல்ஸ் பார்த்தேன். ஒன்றுமே தெரியவில்லை. ஐயையோ, நாடி துடிப்பே அடங்கி விட்டதோ? மார்பில் கை வைத்து பார்த்தேன். டன் டன் என்று நாடி துடிப்பு கேட்டது. ஒரு வேளை எனக்கு இதய வலி வந்து விட்டதோ. இரத்த அழுத்தத்தால், தலைவலி வந்திருக்குமோ?

ஒரு வேளை, சின்னம்மை வந்திருக்குமோ? அதற்கும், இதே தலைவலி, ஜுரம், உடல் வலி தானே அறிகுறி. டாக்டரிடம் போகலாமா?

முடிவு கட்டி விட்டேன். இன்று ஆபிஸ் மட்டம். நேரே டாக்டரிடம் போக வேண்டியது தான். டாக்டர் காலையிலும் வருவார். அவரை பார்த்து விடுவோம்.

நேராக டாக்டரிடம் போனேன். அவர் எனக்கு தெரிந்தவர் தான். ஆஸ்தான வித்வான். டாக்டர் பிஸி. அரை மணி கழித்து, இரண்டு மூன்று நோயாளிகளுக்குப் பிறகு என்னை சோதனை செய்தார் .

“என்ன செய்கிறது உங்களுக்கு?” – டாக்டரின் வழக்கமான கேள்வி.

எல்லாவற்றையும் சொன்னேன் . “தலை வலி மண்டையை பிளக்கிறது டாக்டர், ஜுரம் இருப்பது போல் இருக்கிறது. மூட்டு வேறு வலிக்கிறது. காலையிருந்து மல சிக்கல், வயிற்று வலி, பல்ஸ் இறங்கியிருக்கிறது போல தோன்றுகிறது, இதயம் அதிகமாக துடிக்கிறது, ரொம்ப அசதியாக இருக்கிறது, ஒரு வேளை, டெங்கு, டிப்தீரியா, அல்லது கோவிட் இருக்குமோ என சந்தேகம். கொஞ்சம் எச்சில் விழுங்க முடியவில்லை”

“எத்தனை நாளாக இருக்கிறது?” – டாக்டர்.

“இன்று தான் டாக்டர்” – நான்.

“சரி, நான் சீட்டு எழுதி தருகிறேன்” என்று, உடனே கிடு கிடுவென எழுத ஆரம்பித்து விட்டார். என்ன எழுதுவார் என நினைத்தேன்.

ஒரு பக்கத்திற்கு எழுதி என்னிடம் கொடுத்தார். “ஒரு வாரம் கழித்து என்னை வந்து பாருங்க” என்றார்.

நான் சந்தேகமாக கேட்டேன் “ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, எடுக்கணுமா டாக்டர்”.

“அதெல்லாம் இப்ப வேண்டாம். இந்த சீட்டு படி செய்யுங்க. எல்லாம் சரியாயிடும்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.

***

வெளியே வந்தேன். வழக்கம் போல், டாக்டர் கையெழுத்து எனக்கு புரியவில்லை. நேராக மருந்து கடைக்கு சென்று சீட்டை கொடுத்தேன். அவர், சில மாத்திரைகள் கொடுத்து, “மீதி இங்கே கிடைக்காது. சிலதை பக்கத்து கடையில் வாங்கிக்கோங்க “

“பக்கத்து கடை ஒரு பல சரக்கு அங்காடி. சூப்பர் மார்கெட் அதுலே என்ன, அங்கே வாங்க?” நான் குழப்பமாக கேட்டேன்.

மருந்து கடைக்காரர் படித்தார்,

“ஒரு முட்டை (இரண்டு வேளையும்)
சிக்கென் (இரண்டு வேளையும்)
பால் (இரண்டு வேளையும்)
பழங்கள் (மூன்று வேளையும்)
நல்ல தூக்கம்
நல்ல சத்துள்ள சாப்பாடு (மூன்று வேளையும்)
ஒரு வாரம் முழு ஒய்வு
அப்புறம், உங்களுக்கு தேவையில்லாத எண்ணங்களை மனதில் தேக்கி வைக்காதீர்கள்”

இதுதான் சார், எழுதியிருக்குது”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *