நெருடலை மீறி நின்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 10, 2021
பார்வையிட்டோர்: 12,355 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சந்தோஷமாயிருக்கிறது. ரொம்ப சந்தோஷமாயிருக்கிறது. இருபத்துநாலு வயசில் இன்றுதான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கிறது. இன்னும் அந்த மோட்டார் பைக் சத்தம், தூக்கித் தூக்கிப் போடுகிற அனுபவம், அறுபது மைல் வேகத்தில் புடவைத் தலைப்பை அடக்க முடியாமல் தலைமுடியைக் கோத முடியாமல் காலை மாற்றிக்கொள்ள முடியாமல், பிடித்த பிடியை விடமுடியாமல், நெஞ்சு முழுக்க பயத்தோடும், ஆனந்தத்தோடும் சவாரி செய்தது இன்னும் உடம்பு முழுக்கப் பரவிக் கொண்டிருக்கிறது.

லேசான பெட்ரோல் வாசனையும், சூடான எஞ்சின் நெடியும், ஷேவிங் க்ரீம் மாதிரி ஏதோ ஒரு சுகந்தமும் இன்னும் மூக்கருகே வட்டமிடுகின்றன. இது மொத்தமும் கலந்து ஒரு ஆண் வாசனையாய் மனசுக்குப்படுகிறது. இத்தனை நெருக்கமாய் இதுநாள் வரை நான் யாரோடும் உட்கார்ந்ததில்லை. என் நினைவுக்குத் தெரிந்து அருகே நின்றதுகூட இல்லை. பேசினது இல்லை. பழகினது இல்லை. முகத்தை உன்னிப்பாய்க் கவனித்தது இல்லை. யாராவது என்னைப் பார்க்கிறார்கள் என்றால் சட்டென்று கண்களைத் தாழ்த்திக்கொள்கிற பழக்கம் எனக்குப் பதினாலு வருஷப் பழக்கம். பத்து வயசில் கன்னத்துப் பக்கம் ஒரு அரும்பு மாதிரி, சிரித்த வெள்ளைத் தேமல் விரிந்து கொடியாகிக் கிளைத்து உடம்பு முழுக்க, முகம் முழுக்க, இலை இலையாய், வெள்ளைப் பூவாய்ச் சிரிக்க ஆரம்பித்து என்னைச் சிரிக்க முடியாதபடி செய்துவிட்டது.

யார் பார்வைக்கும் படாமல் ஒதுங்கிப் போக வைத்தது. எத்தனையோ இரவுகள் என்னைத் தேம்பித் தேம்பி அழ வைத்தது. அழுதது நான் மட்டுமில்லை. கூடச் சேர்ந்து கண்கலங்க, விரக்தியாய் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த எனக்கு அம்மாவும் அப்பாவும். எனக்கு இப்படி நேர்ந்ததுக்குப் பிறகு அம்மா பவுடர் பூசிக் கொள்வதை நிறுத்திவிட்டாள். பூ வைத்துக்கொள்வதைக் குறைத்துவிட்டாள்.

புதுசை சலவைக்குப் போட்டுப் பழசாக்கிக் கட்டிக்கொள்வாள். ஊரிலுள்ள அத்தனை கோவிலுக்கும் விளக்குப் போடுவாள்.

அப்பா லூக்கோடர்மாவைப் பற்றி உலகத்திலுள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கிப் படித்தார். எத்தனைபிரிவு வைத்தியம் உண்டோ, அத்தனை வைத்தியத்துக்கும் காசை இறைத்தார். இன்னொரு குழந்தை இப்போது வேண்டாம் என்று இருந்தவர், இப்படி ஒரு குழந்தைக்குப் பிறகு வேண்டவே வேண்டாம் என்று அடங்கினார்.

என்னுடைய ஒரே பொழுதுபோக்கு, புத்தகங்கள். மனசுக்குப் பிடித்த ஒரே விஷயம், உத்தியோகம். ஆரம்பகாலத்தில் அடைந்து கிடந்ததும், அழுது தவித்ததும் மெல்ல மெல்லக் குறைந்து போயின. இந்த நோய் தீர்க்க முடியாதது என்று தெரிந்ததும் மனசின் வேதனைகள் மறைந்துபோயின. வேதனை இருந்த நெஞ்சில் வெறுமே ஒரு பள்ளம் இருந்தது. எங்கள் மூன்று பேருக்கும் இடையே எதுவும் பேசமுடியாமல் போயிற்று. இப்போ இந்த இரண்டு நாளாய் நான் சந்தோஷமாய் இருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாயிருக்கிறேன். இருபத்து நாலு வயகப்பெண் எதற்குச் சந்தோஷப்படுவாள்? தன்னை மறந்து நெஞ்சில் கை கோத்து எதற்குக் குதூகலப்படுவாள்? இயல்பாய் சுலபமாய் எதற்குப் பாட்டுப்பாடுவாள், சிரிப்பாள், கனவு காணுவாள்? யாரும் சட்டென்று ஊகித்துவிட முடியும்.

“எஸ். ஐ லவ் ஹிம். ஐ லவ் ஹிம். பத்ரிநாதன்.” நேற்று பஸ் ஸ்டாண்ட் வரை அவர் மோட்டார் பைக்கில் சவாரி. இன்று தெரு முனை வரை மோட்டார் பைக் சவாரி வீட்டிற்குக் கூப்பிட்டேன். நாளைக்கு வருகிறாராம். “எத்தனை மணிக்கு வருவீங்க பத்ரி?”

“எப்ப வேணா…” தாங்க்யூ சொல்லக்கூடத் தோன்றவில்லை எனக்கு. வீட்டில் அவர் வரப்போவதைச் சொன்னேன். அப்பாவுக்கு ஆச்சரியம். உடனே ஓட்டடை அடிக்க ஆரம்பித்தார். நான் வீட்டிற்கு யாரையும் அழைத்ததில்லை. பள்ளிக்கூடத்தில், காலேஜில் நான் இப்போது வேலை செய்கிற ஆபீஸில் யாரும் என் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டதில்லை.

“மேடம், உங்க முகத்தில் வெள்ளை வெள்ளையாய் இருக்கே இது என்ன- இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். அது என்ன என்று தெரிந்து பிறகுகூடக் கேள்வி கேட்பார்கள். இதற்கு என்ன வைத்தியம் என்று அலசுவார்கள். ஒட்டிக்குமோ, ஆபீஸ் பேப்பரைப் பயத்துடன் வாங்குவார்கள். உடம்பில் வேறு எங்கேயாவது வெள்ளை தென்படுகிறதா என்று நான் அறியாதபடி பார்வையால் தேடுவார்கள். வலக் கன்னத்திலும், இடக் கன்னத்திலும் சொல்லிவைத்த அளவாய் வட்டமாய் இரண்டு வெள்ளைத் திட்டுக்கள் மின்னுவதால் எனக்கு சங்கு சக்கரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘எஸ் எஸ்’ என்று சங்கேத பாஷையில குறிப்பிடுவார்கள். அவர்கள் மீது எனக்குக் கோபமில்லை. அவர்கள் நடத்தையில் வருத்தமேயில்லை. அவைகள் பள்ளிக்கூட நாட்களிலிருந்து எனக்குப் பழகிப்போன சமாசாரம். “எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். அவனுக்கும் இதே கம்ப்ளெய்ன்ட் தான். ஆனா நல்ல உத்தியோகம். கை நிறையச் சம்பளம், உசந்த குடும்பம். உனக்கு வேணா பார்க்கட்டுமா?” ஆபீஸில் வயதான ஒருத்தர் என்னைக் கேட்டபோது தான், துக்கம் பீரிட்டு அடித்தது. அவர் காதுக்கு மட்டும் கேட்கும்படியாய், “வேணும்னா உங்க பொண்ணுக்கு அந்தப் பையனைப் பாருங்க சார்,” என்று சொல்ல வைத்தது. என் பதிலில் அடிபட்டு நசுங்கினார். அந்த மனிதரை நினைத்து ராத்திரி முழுக்க வேதனைப்பட்டேன். தலையணை நனைய அழுதேன். எதற்காக அழுதேன் என்று கேள்வி கேட்காமல் தலையைக் கோதியபடி விசும்புகிற அம்மாவையும் கால்மாட்டில் உட்கார்ந்து விசிறின அப்பாவையும் பார்த்து மனசைத் திடப்படுத்திக் கொண்டேன். பேசினால் இவர்களோடுதான் பேசுவது. இந்த இருவரோடு தான் பழகுவது என்று சங்கல்பம் செய்துகொண்டபோது ஒரு மூன்றாவது ஆள் வருகை எனக்கு நேருமென்று நினைக்கவேயில்லை.

“ஹலோ, எம் பேர் பத்ரிநாதன். இந்தக் கம்பெனியில ஸேல்ஸ் எஞ்சினியர். அடிக்கடி டூர் போய்ட்டு வர வேலை. இந்தத் தடவை கொஞ்சம் லாங் டூர். நீங்கதானே புது டெஸ்பாட்ச் கிளார்க்? எனக்கு ஏதாவது லெட்டர் உண்டா? பர்ஸனல் தபால் எனக்குக் கொஞ்சம் இங்கே வரும். இருந்தா தயவுசெய்து கொடுக்கணும். பனாரஸ் அல்வா சாப்பிட்டிருக்கிறீர்களா? பூசணிக்காயில் ஊசி குத்தி சக்கரை இறக்கியிருக்கும். வாயில் போட்டால் தித்திப்பா கரையும். “இந்த மாதிரி டூர் போனா இப்படி ஏதாவது வாங்கிட்டு வருவேன். லைக் டு டேக் சம்?”

என் நினைவு தெரிந்து இதுதான் முதன் முதலாய் இனிப்பில் ஆரம்பித்த சிநேகிதம். என் முகத்தின் கோரம் பற்றிக் கொஞ்சம்கூட சலனப்படாத பாவம். அவர் பெயருக்கு நான்கு கனமான கவர்கள் ஒரு வாரப்பத்திரிகையிலிருந்து வந்திருந்தன. அவற்றை மெல்லிய நூலில் கட்டி ஒரு பெரிய கவரில் போட்டு பசை ஒட்டி வெளியே பெயரெழுதி, கவர் மீது தபால் வந்த தேதிகளை, நேரத்தைக் குறித்து வைத்திருந்தேன்.

ஆச்சரியத்துடன் கவரை வாங்கிக்கொண்டார். “ஸோ நீட் ஸோ ப்யூட்டிஃபுல்!” கவரைப் பெற்றுக்கொண்டதற்கு கையெழுத்துப் போடும் படிக் கேட்டபோது, “பர்ஸனல் தபாலுக்குக்கூட ரிஜிஸ்டரா?” என்றார்.

“உங்க கையெழுத்து எவ்வளவோ அழகா இருக்கு; கையெழுத்துக்கும், ஒருத்தர் மனசுக்கும் சம்பந்தம் உண்டாம். உங்களுக்கு மிருதுவான மனசு. ஆம் ஐ ரைட்?” என்றேன்.

“யூ நோ. இதெல்லாம் திரும்பி வந்த கதைகள். நான் எழுதினது. வழக்கமா இதுகள் திரும்பி வந்தா ரொம்பக் கஷ்டமா இருக்கும். சோர்வா படும். இப்ப என்னவோ கையில் கர்வமா தூக்கிட்டுப் போலாம்போல இருக்கு. ப்ளிஸ், அடுத்த தடவையும் திரும்பின கதையை யார் கண்ணுக்கும் படாம இதேமாதிரி கொடுத்துடுங்க. தாங்க்யூ வெரிமச்.”

பதில் ஏதும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று மேலே வீசப்பட்ட புகழ்ச்சியையும் கலகலப்பையும் தாங்கமுடியாமல் கஷ்டப்பட்டேன்.

பிற்பகல் இடைவெளி வழக்கம்போல் போரடித்தது. “நான் அந்தக் கதைகளைப் படிச்சுட்டுக் கொடுக்கட்டுமா?’ என்றேன்.

பளிரென்று ஒரு வெள்ளைச் சிரிப்பு. “யூ மீன் இட்? ஓ.கே. படிச்ச பிறகு வெளிப்படையா அபிப்பிராயம் சொல்வதானால் தருகிறேன்.” நான் தலையசைத்தேன். கவரை எடுத்து வந்து கதைகளைப் பிரித்துப் படித்தேன்.

கிறுக்கல் கையெழுத்து எந்தப் பத்திரிக்கைக்காரன் இதைப் படிப்பான்?

முதல் இரண்டு கதைகளையும் வீட்டிற்கு எடுத்துப்போய் சுத்தமாய் எழுதி வேறொரு பத்திரிக்கைக்குப் போஸ்ட் பண்ணினேன். பதினைந்து நாட்கள் கழித்து கதை பிரசுரமானதை நான் விரித்து நீட்டினபோது நம்ப முடியாமல் தவித்தது சிரிப்பாய் இருந்தது. இடைவேளையில் கேரியரைத் தூக்கிக் கொண்டு என் டேபிளுக்கு வந்து, வறுவலை துவையலை பொரிச்ச கூட்டை இலக்கியத்தை பரிமாறிக் கொள்வது சுவையாய் இருந்தது.

மறந்துபோய்க் கூட முகத்துத் தேமலைக் கேட்கவில்லை. எனக்கே ஒரு சந்தேகம். தேமலே எனக்கு இல்லையோ என்று ஒரு க்ஷண சந்தேகம்.

இல்லாம எங்கு போகும்? ஒவ்வொரு நாள் காலையும் குளித்துத் தலை முடிந்து கொள்கிறபோது கண்ணாடியைப் பார்த்துச் சிரிக்கிற வெள்ளைத்தேமல். எனக்கே இதைத் தொட்டுப் பார்க்கப் பயமாய் இருக்கிறதே. உள் மனசில் என் கண்ணில் கொஞ்சம்கூட அருவருப்புக் காட்டாமல் எப்படி இருக்க முடிகிறது. பத்ரி? ஒரு வேளை, ஊர் முழுக்க சுற்றி விதவிதமான அழகை ரசித்து முதிர்ந்து போனாயோ? அழகில்லாத பெண்ணோடு பழகுவதை டெஸ்ட் ட்யூப் சோதனையாய்க் கொண்டிருக்கிறாயோ? இது ஒரு அனுபவம் என்பாயோ. என்னைப் பற்றி ஒரு கதை எழுதிவிட்டு அதற்குக் காசு வாங்கி மறந்து போவாயோ. நான் உனக்கு டெஸ்ட்ட்யூபா? அமிலக் கரைசலா? ஆராய்ச்சிப் பொருளா? இல்லை. நிஜமாகவே உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா? என் பேச்சு உனக்கு ரசிக்கிறதா?- இந்த லூக்கோடர்மா உனக்கு ஒரு விஷயமே இல்லையா? எங்க அம்மாவுக்கும் லூக்கோடர்மா இருந்தது. உன்னைப் பார்க்கிற போதெல்லாம் என் அம்மா ஞாபகம் வருகிறது. இப்படி ஏதாவது கயிறு திரித்துச் சாட்டையாக்கிக் கடைசியாய் விளாசப் போகிறாயா?

ச்சீ— எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அவலம் வாய்க்கவேண்டும். வெந்தும், வேகாததுமாய் ஒரு முகம் கிடைக்க வேண்டும். நான் கரிக்கட்டையாய் கிருஷ்ண நிறமாய் இருந்திருக்கக் கூடாதா. புருவத்துக்குத் தீட்டின மையை எடுத்துக் கன்னத்து வெள்ளையில் தீட்டினேன். கொஞ்சம் வழித்து இடக் கன்னத்தில் தேய்த்தேன். இன்னும் இரண்டு விரல் எடுத்து முகவாயில் நெற்றி மேட்டில் கழுத்து வளைவில் முகம் முழுக்க கறுப்பாய் கரிக்கட்டையாய் கிருஷ்ண நிறமாய் அப்பா இந்தக் கறுப்பு எத்தனை அழகு! லூக்கோடர்மா இல்லாத என் முகம் எத்தனை எடுப்பு!

வாசல் பக்கம் நிழலாடிற்று. காலை ஏழு மணிக்கு யார் வரப் போகிறார்கள்?

“மே ஐ கம் இன்-?” பத்ரி. பளிரென்று ஒரு பயமும், சந்தோஷமும் வயிற்றில் வெடிக்க “யெஸ் கம் இன்.” ஐயோ மூஞ்சியெல்லாம் மை! பொத்திக்கொண்டு அறைக்கு ஓடுகையில் எதிரே நின்றுவிடுகிறார்.

“ஏய் என்ன இது கரி வேஷம்?” .

நிமிர்ந்து அவர் கண்களைச் சந்திக்கையில் வெட்கமும் அவமானமும், விசும்பலுமாய் அவசரமாய் அழிக்க முற்படுகையில், நித்யா, உனக்கென்ன பைத்தியமா!” என்கிறார். “உன்னைக் கெட்டிக்காரின்னு நெனைச்சேன். அசடே கண்களை மூடிக்கொண்டால் இருட்டாகிவிடுமா? கறுப்பைத் தீத்திக் கொண்டால் எல்லாம் போய்விடுமா? கண்ணாடி சொல்கிற அழகா முக்கியம்? வெறும் நிலைக் கண்ணாடிப் பொண்ணா நீ? நிஜத்தை மறுக்காதே நித்யா பாவம், கோழைத்தனம். அழகு என்பது உருவமா? வெளித் தோலா? இல்லை நித்யா. அது மனசு கேட்காமல் உதவி பண்ணுகிற உன் மனசு, பதில் நன்றிக்குக் கட்டிக் காத்துக் கொண்டிராமல் நகர்ந்து போகின்ற உன் குணம். சின்ன வேலையைக்கூட மாக்கோலம் போடுகிற அழகாய்ச் செய்து முடிக்கிற பழக்கம். அழுவதை நிறுத்து நித்யா, இது வேணும் அது வேண்டாம்னு பிரித்துப் பிரித்து அடம் பிடிக்கிற மனகதான் அழும். உன்னைப்புரிந்து கொள்.”

தலையை வருடி முதுகைத் தட்டி கட்டிலில் அமர்ந்து கைக்குட்டையால் முகத்தின் கறுப்பைத் துடைத்து கண்ணீரை ஒற்றி. “உன் முகத்தை மறக்கக் கற்றுக் கொள்ளணும். இது சுலபம். உன்னால் இது முடியும்.”

இரண்டு நிமிஷம் என் கைகளை அழுத்தப் பிடித்துக் கொண்டிருந்துவிட்டு விடை பெற்றுப் போனார். ஊருக்குப் போகிறாராம். இன்னொரு டூராம்.

நான் சோப்பும் டவலும் எடுத்துக்கொண்டு சொச்சத்தை அழிக்கக் குளியலறைக்குள் நுழைந்தேன்.

ஈரம் சிதற மீண்டும் ஹாலுக்கு வருகையில் அம்மாவின் குரல் கேட்டது. அம்மா பாத்திருப்பாளா?

“பையனைப் பார்த்தா நல்லவனா தெரியறான். ஆனா கலயாணம் ஆயிடுத்தாமே!” அப்பாவும் பார்த்திருக்கிறார்.

“ஒரு குழந்தைகூட இருக்குன்னு என்கிட்ட சொல்லியிருக்கா நித்யா.” இது அம்மாவின் பதில்.

“விறுவிறுண்னு போய் குழந்தைக்குப் பக்கத்தில் உட்கார்ந்துடறான்”

“உம்.”

“இத்தனை இதம்மா நம்ம பெண் கிட்ட நாம கூடப் பேசினதில்லை. நீங்க தொண்டையைக் கனைச்சுண்டு உள்ளே போவேளோன்னு நினைச்சேன்.”

“நான் எதுக்குப் போகனும்? அவள் சந்தோஷமாக இருந்தா சரி.”

“இவனோட பழகறதுக்கப்புறம் சந்தோஷமாதான் இருக்கா. வாய் ஓயாம ஆபீஸ் பத்திப் பேசறா. யார் சொன்ன ஜோக்கையோ இங்க சொல்லிச் சிரிக்கிறா”

“ஆனா அந்தப் பையனுக்கு கல்யாணமாயிடுத்து.”

“ஒரு குழந்தை வேற இருக்கு. எதுக்கும்மா இதெல்லாம்னு நெஞ்சு வரைக்கும் கேள்வி வருது. கேட்டுடலாமான்னு படறது.”

“நீ ஒண்ணும் கேட்க வேண்டாம். பேசாம விடு”

“விடச் சொல்றேளா?”

“வேறென்ன பண்றது? எத்தனை நாள் சந்தோஷமா இருக்காளோ, அத்தனை நான் சந்தோஷமான இருக்கட்டும்.”

“வைப்பாட்டியாவா?” அம்மா முழங்காலில் கரும்பு உடைக்கிற வேகத்தோடு கேட்கிறாள்.

சிலீரென்ற ஒரு பொட்டு சோப்பு நீர் உதட்டில் இறங்க அனிச்சையாய் நாக்கு நுனியில் நெருடுகிறேன். கொஞ்சம் இனிப்பாய் காரமாய் கசப்பாய் என்னனென்னவோவாய் ஒரு சுவை பரவுகிறது.

– தஞ்சைச் சிறுகதைகள் – காவ்யா வெளியீடு – முதற்பதிப்பு: டிசம்பர் 1999

பாலகுமாரன்

‘கசடதபற’ இதழில் முதல் சிறுகதை ஆசிரியராக அறிமுகமான பாலகுமாரன் தஞ்சை மாவட்டம் பழமாநேரியில் பிறந்தவர். தஞ்சையில் இலக்கிய தடம்பதித்த கு.ப.ரா., தி. ஜானகிராமன் வழியில் எழுதத் தொடங்கியவர். ஜானகிராமனின் தாக்கத்தை பெரும்பான்மையான படைப்புகளில் கண்டுகொள்ளலாம்.

இவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் பெண்களைப் பற்றியும், ஆண் பெண் வக்கிரங்களைப் பற்றியுமே பேசுகின்றன. பெண்களை அதிலும் அவர்கள் வக்கிர மனசையே பேசுவதால் இவரை ‘நவீன அருணகிரிநாதர்’ என்று சாடுவார் செ.யோகநாதன்.

இவரைப் பற்றி பலர் இப்படி அபிப்பிராயம் சொல்லுவதால், “இன்றைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஆதாரமாக இருப்பது ஆண், பெண் உறவு. இப்படி மிக மோசமான நிலையில் இருக்கும் இதனைச் சரிசெய்யாமல் சமன்படுத்தாமல் வேறு எந்தச் பிரச்சனையையும் தீர்வு செய்ய முடியாது. நான் பசிக்கு தீனி போடுபவன். ருசிக்கு அலையாதீர்கள்..” என்று சமாதானம் சொன்னாலும் பின்னாளில் காசுக்காக மட்டுமே எழுதி குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் கும்பலில் இவரும் கரைந்துப் போனதால், அவர் செய்துள்ள ஆரம்பகால இலக்கிய முயற்சிகளும் கரைந்துபோய் கொண்டுதான் இருக்கின்றன.

1978 ஆம் ஆண்டு இலக்கிய சிந்தனையில் பரிசுபெற்ற ‘நெருடலை மீறி நின்று…’ கதைக்கு தி. ஜானகிராமன் இப்படி ஒரு குறிப்பு எழுதியுள்ளார். “செக்ஸ்-ஆண் பெண் கடல் ஒரு புனிதமான அத்யாவசியம் என்று சொல்ல பகவான் ரஜினீஸ் தேவை இல்லை. அதை உணர்த்த ஆதி மனிதர்கள் தட்டித் தடவி ஒரு மாதிரியாக கலியாணம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்… மிகவும் நுட்ப உணர்வோடு அமைந்த படைப்பு” என்று கூறுகிறார்.

– தஞ்சைச் சிறுகதைகள், தொகுப்புரிமை: சோலை சுந்தரபெருமாள், முதற் பதிப்பு: டிசம்பர் 1999, காவ்யா வெளியீடு, பெங்களூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *