நெனச்சது ஒண்ணு…நடந்தது ஒண்ணு..!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 6,512 
 
 

“மணி பதினொண்ணு ஆச்சு. நாளைக்கு மூணு மணிக்கு எந்திரிச்சாதான் அஞ்சு மணிக்கு கெளம்ப முடியும். பழனி போகையிலேயே ஏழு மணிக்கு மேல ஆயிடும். எட்டு மணிக்கெல்லாம் பூசாரி வந்திடுவதா சொல்லிருக்காரு தெரியுமில்ல. போங்க. போய்ப்படுக்கிற வழியைப் பாருங்க”.

அரட்டை கச்சேரி நின்றது.கருணாம்பா பேச்சுக்கு மறுபேச்சு பேசமுடியுமா. அவரவர் எழுந்து படுக்கக் கிளம்பினார்கள்.

“ஏம்மா நளினி, பிள்ளைய நேரத்தில தூங்க வைக்கிறதில்ல. காலைல எந்திரிச்சு கெளம்பவேண்டாம்?”

“நல்லதுதான் அத்த. சீக்கிரம் எழுந்திரிச்சா நம்மள ஒரு வழி பண்ணிப்புடுவான். காலைல தூங்கட்டும். அப்பிடியே கார்ல தூக்கிப் போட்டுக்கலாம். எப்படியும் மொட்டையடிச்சு காது குத்த முன்ன குளிச்சு புதுத்துணி போடணுமில்ல”.

“ஆமா. எத்தனை மணிக்கு வரேன்னு சொல்லியிருக்காரு தம்பிதுரை?”

“சரியா நாலரை மணிக்கு இங்க இருப்பான். மூணு மணிக்கு அலாரம் வைக்கப் போறேன். சரியா இருக்குமில்ல”

“சரி அத்தை. அது சரி. நீங்க ஏன் இவ்வளவு நேரம் முழுச்சிகிட்டு. முட்டிவலின்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே. நேரத்தில படுக்கபோகலாமில்ல. மாமாவப் பாருங்க. சரியா ஒம்பது மணிக்கு படுத்திடணும்”

“பாவம் விக்கி. சோபால படுத்து தூங்கிட்டான் பாரு. தூக்கிட்டு போ. நான் கதவெல்லாம் மூடிட்டு வரேன்”.

கருணாம்பா தூக்கமுடியாத தன் பெரிய சரீரத்தை தூக்கிக் கொண்டு எழுந்தாள். கருணாம்பா வீடு அமர்க்களப் பட்டுக்கொண்டிருக்கிறது. என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா?. கொஞ்சம் முன்கதை இருந்தால் சுவாரசியமாய் இருக்கும் என்று தோன்றுகிறது.

கருணாம்பா(70) மகாலிங்கம் (76) தம்பதிகளுக்கு மூன்று வாரிசுகள். மூத்தவன் மாதவன்(45). மனைவி மாயா(42). இவர்களின் அருமை புத்திரிகள் நித்யா(14), சத்யா(12). நடுவில் சுதா (40). மாப்பிள்ளை நந்தன்(42). இரண்டு பெண்கள் ஷீலா(13), கலா (11). கடைசி மகன், கேசவன் (35). மனைவி நளினி(30). மூத்தவள் அபிநயா (7), விக்ரம் (3). ரேஷன்கார்டு முதல் பக்க Xerox என்று நினைத்தால் நான் பொறுப்பில்லை.

ஐந்து பேத்திகளுக்கப்புறம் பிறந்த அருமை பேரன் என்பதால் பாட்டி செல்லம். நாளைக் காலையில் எட்டரை மணி அளவில் கருணாம்பா மகாலிங்கம் பேரனும், கேசவன் நளினியின் மகனுமாகிய சீரஞ்சீவி விக்ரமன் என்னும் விக்ரமுக்கு பழனியாண்டவர் திருக்கோவிலில் மொட்டையடித்து, காது குத்து விழா நடக்க இருப்பதால்…இதுதான் அந்த அமர்க்களத்துக்கு காரணம்..

ஒரு வயதில் அடிக்க வேண்டியது. மகாலிங்கத்தின் வயதான தாயார் காலமானதால். தள்ளிப்போய் இப்போது எல்லாம் கூடி வந்திருக்கிறது.

கிர்ர்ர் என்று மூணு மணிக்கு அலாரம் அடித்தது. ராத்திரி எவ்வளவு நேரம் வேணுமானாலும் கருணாம்பாவால் முழிக்க முடியும். ஆனால் காலையில் கொஞ்சம் சிரமம்தான்.

“ஏங்க, எந்திரிங்க. போய் குளிச்சு வரதுக்குள்ள கண்ணம்மா வந்திடும்.என்னிய உடனே எழுப்பிடுங்க. அப்பிடியே பசங்க எந்திரிச்சிட்டாங்களான்னு ஒரு எட்டு பாத்திடுங்க. எல்லாம் அரட்டையடிச்சிட்டு பதினோரு மணிக்கு தூங்கப் போச்சுதுங்க”.

வாயைத் திறக்காமல் கருணாம்பா சொன்னதை சிரமேற்கொண்டு உடனே குளிக்கப் போனார்.வாசலில் காலிங் பெல்.

கண்ணம்மாதான்.குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது எதற்கும் கண்ணம்மா இருந்தாக வேண்டும்.இருபது வருஷ பந்தம்.

“சாமி. சுருக்க குளிச்சிட்டிங்க போல.இதோ முதல் காப்பி உங்களுக்குத்தான்.”

கண்ணம்மா உள்ளே நுழைந்து விட்டாளென்றால் சமயலறைப்பக்கம் யாரும் எட்டிப் பார்க்கவே அவசியமில்லை. பாலைக் காய்ச்சி, கமகமவென்று பில்டரில் டிக்காஷன் இறக்கி, சுடச்சுட முதல் காப்பி தாத்தாவுக்கு. காப்பியைக் குடித்துவிட்டு மாடிக்குச் போய்ப்பார்த்தார்.

நித்யா, சத்யா, ஷீலா பட்டுப் பாவாடையில் ஜொலித்துக் கொண்டிரூந்தார்கள்.

“அட சமத்து குட்டிகளா..எனக்கு முன்னாலேயே ரெடியாய்ட்டிங்களே. கீழ போய் காப்பி. கீப்பி குடிங்க.”

“தாத்தா. சூப்பர் தாத்தா. நீங்க எல்லாத்திலேயுமே முதல் தான் தாத்தா!!!”

மூணும் போய் தாத்தாவை கட்டிக் கொண்டனர்.

“கலாவும் அபியும் எங்கே?”

“தாத்தா. அவுங்க எந்திரிக்க மாட்டாங்களாம். நீங்கள்லாம் போங்கன்னு. நாங்க வரலன்னு என்னென்னமோ தூக்கத்தில உளறுதுங்க தாத்தா. வாங்க.வந்து எழுப்புங்க”

கண்ணம்மா எல்லோருக்கும் காப்பி கலந்தவண்ணம் இருந்தாள். கையில் கொண்டு போக மிளகாய்ப்பொடி தடவிய இட்லி, வடை, பொங்கல், சாம்பார். ஒரு பெரிய பிளாஸ்கில் காப்பி. தண்ணி பாட்டில். நாப்கின். எல்லாம் ரெடி.!!!

“அண்ணி, என்ன இன்னும் குளிக்கப் போகாம? பாரு பசங்கல்லாம் கூட ரெடி”

“சுதா, பாருடா இந்த டெய்லர் கடைசில சதி பண்ணிட்டான். Blouse கைய எவ்வளவு டைட்டா வச்சிருக்கான். உள்ளே போகமாட்டேங்குது.அழகான மேட்சிங் பிளவுஸ். கெடுத்திட்டானே பாவி”

மாயா கட்டில் மேலே நாலைந்து புடவைகளைப் பரப்பி வைத்துகொண்டு தலையில் கையை வைத்துக் கொண்டு இருந்தாள். கண்ணில் முட்ட முட்ட கண்ணீர்.

“என்ன அண்ணி. இப்படி பண்ணிட்டானே. போவுது.விடுங்க. இந்த மஞ்சள் பொடவ உங்களுக்கு அழகா இருக்கும். அதக் கட்டுங்க. எந்திரிங்க.நேரமாச்சு. மணி நாலு”

கருணாம்பா குளித்து சாமி கும்பிட்டுவிட்டு காப்பியும் கையுமாய் உட்கார்ந்திருந்தாள்.

“நளினி.பிள்ள தூங்கறானா?”

“ஆமாத்த. கிளம்பும்போது அப்படியே தூக்கிட்டு போலாம். நான் போய் அபிய கிளப்பறேன். இன்னமும் எந்திரிக்கல. மாயா அண்ணி விக்ரம எம்பொறுப்புல விட்டுட்டு நீ அபிய மட்டும் கவனிச்சிக்கன்னு சொல்லிட்டாங்க..நா போறேன் அத்த”

மாதவன் யாரிடமோ கத்தி பேசிக் கொண்டிருந்தான்.

“என்னங்க கடைசி நிமிஷத்தில வண்டி ரிப்பேருன்னு சொன்னா எப்பிடி. ஃபேன் பெல்ட்டு கட்டா? அது என்ன பெரிய வேலையா. என்ஜின் சூடாகுதா. சரி பண்ணிடுவீங்களா? என்னது? அஞ்சரைக்குள்ள வந்திடுவீங்களா.Ok.வச்சிடறேன்”.

“யாருப்பா? தம்பி துரையா?”

“ஆமாப்பா, வண்டில சின்ன ரிப்பேர். அரைமணி லேட்டு!”

மணி கிட்டத்தட்ட ஆறு ஆகும்போது தான் தம்பிதுரை வண்டியுடன் வந்தான். எல்லோருக்கும் அப்போதுதான் உயிர் வந்தது.

“ஸார். மன்னிச்சிடுங்க. எப்படியும் எட்டு மணிக்கெல்லாம் உங்கள பழனில சேக்கறது எம்பொறுப்பு”

“பரவாயில்லை தம்பி. கார் கண்டிஷன்ல இருக்கணும். அதுதான் முக்கியம். போய் டிபன், காப்பி சாப்பிடு”

“அப்பா.அம்மா. இங்க ஓடி வாங்களேன். கலாவும் அபிநயாவும் ஓடிப்பிடிச்சு விளையாடையில அபி கீழ விழுந்திரிச்சு. முட்டியில ரத்தமா கொட்டுது.

பதறி அடித்துக் கொண்டு போனாள் நளினி.கூடவே நந்தன்..சுதா.. மகாலிங்கம்.

எல்லோருமே ஓடி வந்தார்கள்.

முட்டியைப் பிடித்துக் கொண்டு அலறிக்கொண்டிருந்தாள் அபி..

“பொறப்பட்டு போற நேரம் ஏண்டி கைய.கால.. வச்சிட்டு சும்மா இல்லாம. கலா நீயாவது சொல்லக்கூடாது .?? நீயும் சேந்து ரகள பண்றியே.”

கோபத்தில் அபி தலையில் இரண்டு குட்டு வைத்தாள் நளினி.

“ஏய்.என்ன பண்ற..?? பாவம் அதுவே அடிபட்டு அழுதுகிட்டு இருக்கு..அவளப்போய்.நகரு.நா பாத்துக்கறேன்.”

மாயா நளினியை அந்த இடத்திலிருந்து கிளப்பினாள்..

நந்தன் முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்.
துடைத்துவிட்டு பாண்ட் எய்ட் போட்டு விட்டான்.

“ஐய்யய்யே.அபிக்குட்டிக்கு ஒண்ணுமேயில்லையே..இங்க பாரு.. பழனி மலையே ஏறலாம்.சிரி.!!!

தாத்தா பேத்தியைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்..

“நேரமாச்சு.. எல்லாத்தையும் எடுத்து வண்டில வையுங்க..அவங்கவுங்க பெட்டிய செக் பண்ணுங்க..

அப்புறம் அதக்காணம்..

இதக்காணம்னு அலறாதிங்க..”‘

கருணாம்பா வாய் முகூர்த்தம் பலிக்குமென்று அப்போது யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்…

கருணாம்பா எல்லோருக்கும் உத்தரவு போட்டுக் கொண்டிருந்தாள்..

குழந்தைகளெல்லாம் வண்டியில் கும்மாளமிட்டுக்கொண்டு ஏறி உட்கார்ந்தார்கள்…

மகாலிங்கத்துக்கு ஒரு ஃபோன் .

“மாமா..நா பாலா பேசறேன்..திருச்சிலேர்ந்து. மாயாவோட அண்ணன் மாமா. !!

நீங்கெல்லாம் விக்கிக்கு மொட்டையடிக்க பழனி போறதா மாயா சொல்லிச்சு.பாதி வழி போயிருப்பீங்க இல்ல மாமா.???”

“இல்ல மாப்ள.. . கொஞ்சம் லேட்டாயிடிச்சு.இதோ கிளம்பிட்டே இருக்கோம்..மாயாகிட்ட குடுக்கவா..?

“ஒரு நிமிஷம் மாமா. உங்க கிட்ட சொல்லிடறேனே.இப்ப சொல்லக்கூடாதுன்னுதான் முதல்ல நெனச்சேன்.ஆனா அம்மா மாயா கிட்ட பேசியே ஆகணுமின்னிட்டாங்க.”

“என்ன தம்பி. எதாவது.??”

“அப்பாவுக்கு தீடீர்னு மொதநா ராத்திரி மார்ல வலி.நெஞ்சப்பிடிச்சிட்டு சாஞ்சிட்டாரு.”

“ஐயையோ. அப்புறம்..!!”

“ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணி எல்லா டெஸ்ட்டும் எடுத்தாங்க. .ரத்தக்குழாயில அடப்பாம்.. பயப்பட ஒண்ணுமில்ல. ஸ்டென்ட் போடணுமாம். பழனி முருகன வேண்டிட்டு.. மொட்டையடிச்சிட்டு.

மாயாவ அனுப்பி வச்சா நல்லாருக்கும்.. ஒரு நிமிஷம்.அம்மா மாயா கிட்ட பேசணுமாம்..”

“மாப்ள. தைரியமா இருங்க.அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது.இதோ மாயாவ கூப்பிடறேன்..

மாயாவை சமாதானப்படுத்தவே முடியவில்லை.

“அத்த. நா இப்பவே அப்பாவப் பாக்கணும். அவரு உங்களோட வரட்டும்.என்ன திருச்சிக்கு ரயில் இல்ல பஸ்ஸூல ஏத்தி விட்ருங்க..”

“மாயா. அண்ணன்தான் சொன்னாரில்ல..பயப்பட ஒண்ணுமில்லை .

நாமெல்லாம் பழனி போய்ட்டு எல்லாத்தையும் முடிச்சிட்டு நேரா திருச்சி போயிரலாம்.. அப்பாவுக்கு வேண்டிகிட்டு போவோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்..”

கணவனின் ஆறுதல் பேச்சு அவளை கொஞ்சம் சாந்தப்படுத்தியது. ஆனாலும் அழுகை நிற்கவில்லை..

அவளை அணைத்துக் கொண்டு சுதா வண்டியில் ஏறினாள்.

அபியோ.அம்மா..தூக்கு.தூக்கு..!!! என்று இடுப்பிலே ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

கருணாம்பா முட்டியைப் பிடித்துக் கொண்டு ஒரு வழியாக ஏறி உட்கார்ந்தாள்.

கண்ணம்மா இரண்டு பெரிய கூடையில் சாப்பாட்டு எல்லாம் கொண்டு வைத்தாள்.

“கண்ணம்மா.. எல்லா வேலையும் முடிச்சிட்டு வீட்டை பூட்டி சாவிய எடுத்திட்டு போ.. நாங்க ஃபோன் பண்றோம்.திருச்சி வேற போகவேண்டியிருக்கும்..”

“அம்மா. வீட்டப்பத்தி கவலைப்படாம போய்ட்டு வாங்க..”

வண்டியைக் கிளப்பினான் தம்பிதுரை.

“என்னப்பா.தம்பிதுரை.வண்டி பிக்கப் எப்பிடியிருக்கு. எஞ்சின் ப்ராப்ளம் ஒண்ணும் இருக்காதே.. பழனி போய்ட்டு திருச்சி வேற போகணும்.”

“ஸார்.நேத்து ஒரு ரவுண்டு போய்ட்டு வந்தாச்சு. சூப்பர் கண்டிஷன்ல இருக்கு ஸார்.. கொடைக்கானல் கூட போகலாம்.”

“தாத்தா. தாத்தா. ப்ளீஸ். ப்ளீஸ். அப்பிடியே கொடைக்கானல் போகலாம் தாத்தா.”

நித்யா.சத்யா..ஷீலா.ஏக குரலில் கத்தினார்கள்.

“ஷ்ஷ்ஷ். முதல்ல பழனி.. அப்புறம் திருச்சி.சம்பந்திய பாத்தப்புறம் தான் மத்ததெல்லாம்.”

“அத்த.. அப்பாவுக்கு இப்படியாகும்னு நான் நினைக்கவேயில்ல.

காலைல எந்திரிச்சு ஒரு மணிநேரம் யோகாசனம். அப்புறம் அரைமணி நடந்திட்டு வந்துதான் காப்பி.அளவா சாப்பிடுவாரு.. ஒரு பழக்கமும் கிடையாது. அம்மா.. பாவம். ஒண்ணும் தெரியாதே.”

மறுபடியும் மாயா அழ ஆரம்பித்தாள்.

“இத பாரும்மா.. இதெல்லாம் நம்ப கைலையா இருக்கு.. அதான் அண்ணன் இருக்காரில்ல. நல்ல சமயத்தில ஆஸ்பத்திரி போய்ட்டாங்க.. பழனி முருகன் கைவிட மாட்டான்.”

“மாயா. நானும் வேண்டிட்டு இருக்கேன்..மாமாக்காக நானும் மொட்டையடிக்கப் போறேன்.”

மாதவன் மாயா கையைப் பிடித்துக் கொண்டான்.

“கருகருன்னு.. விக்கி முடி. “

நளினாவுக்கு ஒரே ஆதங்கம்.

“அப்படியெல்லாம் பேசக்கூடாது.. சாமி காரியம். அடுத்த மூணு மாசத்தில நல்லா வளந்திடும்..

“பிள்ள இன்னமும் தூங்கி எந்திரிக்கல..??? குட்டிப்பயல் எங்க..?”

கருணாம்பா கேட்டதும்தான் அங்கே ஒரு பிரளயமே உருவானது.

“விக்கி.விக்கி.. எங்க.? அண்ணி விக்கிய நீங்க எடுத்திட்டு வரலியா.?”

“விக்கி. ஐய்யோ எம்பிள்ள..!!!”

“விக்கிய நா தூக்கிட்டு வரல. தப்பு பண்ணிட்டேன் நளினி. அப்பா நியூஸ் கேட்டதும் ஒண்ணுமே ஓடல.”

“ஐய்யோ ..விக்கி குட்டி.!”

அபி பெரிதாக அழ ஆரம்பித்தாள்.

“ஆமா..இப்ப அழு.. தம்பி பாப்பா இருக்கானான்னு ஒருத்தியாவது பாத்தீங்களா.வாயத் தொறந்தீங்க..!!

நளினி அபியை அடிக்கவே போய்விட்டாள்..

“இருங்க. தப்பு எல்லார் மேலயும் தான். இப்போ குழந்த வீட்ல இருக்கானான்னு முதல்ல பாப்போம்.கண்ணம்மா பாக்காம பூட்டிட்டு போனா ஆபத்து…தம்பி .. வண்டிய ஓரங்கட்டுப்பா.”

கேசவனும் , மகாலிங்கமும் மட்டுமே அமைதியாய் இருந்தார்கள்.

அதற்குள் ஒரு போன்..கருணாம்பாளுக்கு.

“என்னம்மா..இப்படி பண்ணிடீங்களேம்மா.”

“கண்ணம்மா.. முதல்ல விஷயத்த சொல்லு. இந்த பஞ்சாயத்து.. டயலாக். .எல்லாம் வேண்டாம். நாங்கெல்லாம் உசிர கைல பிடிச்சிட்டிருக்கோம் ..விக்கி..”

“பாப்பா எங்கிட்ட தான் இருக்கான்..சமத்தா சிரிச்சிட்டு பாலக் குடிச்சிட்டிருக்கான்.

நல்லா போனீங்க பழனிக்கு மொட்ட போட.பிள்ளய இங்கனக்குள்ள விட்டுப் போட்டு..உலகமகா அதிசயம்டா சாமி.. “

“முருகா..என்னப்பனே.இரு போன நளினி கிட்ட தரேன்..”

“கண்ணம்மா. கண்ணம்மா.

போன குட்டிகிட்ட குடு..!!”

“விக்கி குட்டி.அம்மாக்கு ஹலோ சொல்லு.”

“அல்லோ. அல்லோ.!!!”

எங்கண்ணே.தங்க கட்டியே..அம்மா சாரிடா..

அம்மாவோட டூ விட்டுடு.”

அதற்கு மேல் பேச முடியவில்லை..

“ஸார்.வண்டிய திருப்பட்டுங்களா.

அரைமணில வீட்ல இருப்போம்.அழுவாதீங்கம்மா..”

“ஆமா.. தம்பி.நேரா வீட்டுக்கு போங்க.”

***

கருணாம்பா திரும்ப போனை வாங்கிக் கொண்டாள்.

கண்ணம்மா விலாவாரியாய் நடந்ததைச் சொன்னாள்..

“அம்மா. சமையல் ரூம்பு வேலையெல்லாம் முடிச்சிட்டு வீட்ட கூட்டித் தொடைக்கலாம்னு பெட்ரூம் போனேனா.

ம்ம்ம்மா.ம்மாமான்னு பாப்பா குரல் கேக்கற மாதிரி இருந்திச்சு.

பிரமயாயிருக்குமின்னிட்டு
நாம்பாட்ல கூட்டிட்டு இருந்தேன்.

தொட்டில்ல எந்திரிச்சு உக்காந்து “அம்மா..அம்மா “ன்னிச்சு பாருங்க..ஈரக்கொலையெல்லாம் நடுங்கிடிச்சு.”

“ரொம்ப அழுதானா.?? கண்ணம்மா நீமட்டும் இல்லையினா என்ன ஆயிருக்கும்.

அந்த முருகன் தான் உன் ரூபத்தில வந்திருக்கான். இன்னும் பத்து நிமிஷத்ல அங்கு இருப்போம்..

‘உள்ளம் உருகுதையா..
உன்னெழில் காண்கையிலே..’

என்று T.M. சவுந்தரராஜன் பக்தர்களின் உள்ளம் உருக பாடிக் கொண்டிருந்தார்.

உலகை சுற்றிவர மயில் வாகனத்தில் முருகன் பறக்க, மூன்றே சுற்று பெற்றோரை சுற்றி வந்து மாம்பழத்தை அண்ணன் கணேசன் தட்டிச் சென்ற கோபத்தில் பாலதண்டாயுதபாணியாய் காட்சியளித்தார் முருகன்.

“எல்லோரும் நல்லா வேண்டிக்கங்க. மாயா..இங்க வாம்மா..அப்பா நல்லாயிருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கோ. விக்கி கண்ணா. மயில் பாரு..”

கருணாம்பாளுக்கு பேரனைப் பார்க்க பார்க்க மனசெல்லாம் பூரிப்பு.

“நளினி.. எல்லாம் நல்லபடியாக நடந்திச்சில்ல”

பழனி மலையை விட்டு இறங்கும்போது சரியாக மணி பனிரெண்டு..

“அண்ணே. அப்பாவுக்கு எப்படி இருக்குது..”

“ஆபரேஷன் எல்லாம் நல்லபடியா முடிச்சிஞ்சிருச்சு. எல்லோரும் நேர இங்க ராத்திரி சாப்பிட வந்திடுங்க..”

“தாத்தா.தாத்தா. கொடைக்கானல்.???”

“போய்ட்டா போகுது..!!!!”

“ஹைய்யா..”

“எல்லோரும் வண்டில ஏறுங்க.எண்ணிக்குங்க.!!!! மொதல்ல மொட்டையெல்லாம் எண்ணிடலாம்…”

ஒரு மொட்டையடிக்க வந்த இடத்தில இப்போ எண்ணிக்குங்க
மொத்தம் ஆறு மொட்டை..

விக்கிக்கு காது குத்தி மொட்டை…!!!

கேசவன் பையன் கிடைக்க வேண்டி….!!!!

மாதவன் மாமனாருக்காக.!!!

மகாலிங்கம் சம்பந்திக்கு வேண்டி..!!!

நந்தன் கண்ணம்மா ஆயுசோடு இருக்க வேண்டி…!!!

இன்னொன்று..???

நம்ப தம்பிதுரை..வண்டி நல்லபடியா ஊர் போய்ச் சேர…!!!!!

முருகனுக்கு அரோகரா…

இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ' சரசா சூரி' எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்... நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்..பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து' ஜாங்கிரி' எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான அனுபவம்..என்னுடைய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *