கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 4,322 
 
 

(192ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உலகம் அவளுக்கில்லை. அவள் உலகத்திலில்லை. ஒன்றிலி ருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாத கனத்த இருள் சூழ்ந்த உலகம் அது இருக்கிறதோ இல்லையோ என்பதையும் அறிய மாட்டாள். கால் முன்னே செல்கிறது. மனம் நிதானமில்லாமல் ஓடுவதும் நிற்பதும் குமுறுவதும் ஓய்வதுமாய் ஏதோ ஒரு அந்தர நிலையில் தொங்கி நிற்கிறது. நடக்கிறாள்… நடக்கிறாள்…. அது நெடுவழி.

அவள் பெயர் முத்துமெனிக்கா. அவள் தோளின் மேல் அவளு டைய குழந்தை. ஆறோ ஏழுமாதக் குழந்தை அயர்ந்து தூங்குகிறது. பச்சைக் குழந்தைக்குத் தாயின் தோளும் மார்பும் சுவர்க்கபூமி. அது பேசா மல் தூங்குகிறது. வெளியே உலகம்: இருள் படர்ந்த உலகம். இரக்கம் தயை இல்லாத ஒரு முரட்டு உலகம். இதை அக்குழந்தை அறியாது. இரக்கமுள்ள கடவுளே இந்தக் குழந்தையை என்றும் குழந்தையாய் இருக்கவிடு.

காலமோ கார்த்திகை மாசத்து நள்ளிரவென்றாலும் தைரியத்து டன் முத்துமெனிக்கா நடக்கலானாள். அவள் தோள்மேல் கிடக்கும் குழந்தை அதில்தான் அவள் உயிர்வைத்துக் கொண்டிருக்கின்றாள். குழந்தையின் நினைவுவரும் வேளைகளில்தான் அவள் கிணற்றுக்கும். குளத்துக்கும், ஆற்றுக்கும் பயப்பட்டாள். இல்லை , தன் இனத்தவராகிய மனிதருக்கும் அவள் அஞ்சினாள்.

அதிக தூரம் வந்து விட்டாள். மனம் இளைத்துப்போயிற்று. காலும் ஓய்ந்து போய் விட்டது. தன் குழந்தையை ஒரு முறை இறுக அணைத்துக் கொண்டாள். மெல்ல மெல்ல மன மும் நிதானமடைந்து வந்தது. உலகம் இருப்பதையும் உணரலானாள். காற்று ஹோவென்று வீசுவதும் அவள் காதுகளில் கேட்டது. இருள்… இருள்… முன் இருள். அதையும் அறிந்தாள். மனமும் எங்கெங்கோவெல்லாம் சுற்றிச் சுழன்று வந்து கடைசியாய் அவள் வாழ்க்கையைக் கோல் கொண்டு அளவிடத் தொடங்கியது.

துக்கம் வரும்பொழுது மனிதன் தன் பழையகால நிகழ்ச்சிகளை மனதிற் கொண்டு வந்து அதில் ஒரு ஆறுதலும் பெற்றுவிடுகிறான். இச்சமயங்களிலே சாரமற்று வரண்ட வாழ்க்கையும், ஏதோ ஒருவகை இன்பத்தை மனிதனுக்குக் கொடுக்கிறது.

முத்துமெனிக்கா உலகம் அறியாத சிறு பெண்ணல்ல: சரத்கால சந்திரனின் வனப்போ, சிலப்பதிகாரத்தின் சாயலோ, மென்மையோ இவைகளொன்றும் அவளிடத்தில் இல்லை. ஆனால் கர்நாடக சங்கீதத்தில் தொனிக்கும் விறுவிறுப்பும், காரமும், ஓட்டமும் போன்ற ஒரு தனி உடைமை அவளிடம் நிரம்பியிருந்தது. அவள் உலக மேடையில் நடித்த சென்ற இருபத் தைந்து வருஷங்களிலும் சோகரசமும், இன்பரசமும் மாறிமாறித்தான் கலந்திருந்த தென் றாலும், அவள் மற்றப் பெண்களைப் போலல்லாமல் ஒரு அபூர்வமான சிருஷ்டி கல்வியறி வில்லாவிட்டாலும் பகுத்தறிவும் கற்பனையும் நிறைந்த ஒரு பெண்!

இத்தருணம் குழந்தைப்பருவத்தின் நினைவுகள் வந்து தோன்றி மறைந்து கொண்டிருந்தன. தந்தையின் ஞாபகம் – அது ஒரு நீதி வாசகம்போல் நினைவுக்கு வந்தது. தாய் – முன்னெப்பொழுதோ எவ்விடத்திலோ கேட்ட இன்னிசையின் நினைவு போல – அவளும் வந்து தோன்றினாள். தன் தாய் இன்று உயிருடன் இருந்தால் அவள் மடியில் வீழ்ந்து குழந்தை போல் தன் துக்கத்தைச் சொல்ல வேண்டுமென்று ஆவலாயிருந்தது. அவள் ஒருத்தியால் மாத்திரமே தன் மனவேதனையைப் பரிபூரணமாய் அறியமுடியுமென்று நினைத்தாள். ஆனால் அவள் இன்று அவள் பக்கத்தில் இல்லை. அவள் ஆறுதல் மொழிகள் காதுகளில் ஒலிக்கமாட்டா. அன்புக் கரங்களின் மென்மையான பாசமும் கிடையாது. அவள் கோபித்தாலும் அந்தக் கோபத்திலிருக்கும் தன்நலமற்ற தூய்மை வேறெவ்விடத்திலும் இல்லை. மெனிக்காவுக்குக் கதறி அழவேண்டும் போலிருந்தது.

அழுகை ஓய்ந்தது. கன்னத்தில் கண்ணீர்விட்ட வடுவும் காய்ந்து போய்விட்டது. தன் வாழ்நாளில் கண்ட கனவுகள். கட்டிய கோட்டைகள் இடிந்துபோனவைகள். ஆ, அப்பொழுது அவளுக்குத் தன் புருஷன் நினைவு வந்தது. அவள் வாழ்க்கை இடிந்துதான் போய்விட்டதா? அன்று தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றிய கணவன்பால் அவளுக்கு ஒரு குரோதமும் தோன்றவில்லை. அவர் ஒரு பரிசுத்த ஆத்மா என்று நினைத்தாள். அவரைக் கொண்டுபோய் நடுச்சமுத்திரத்தில் நிறுத்திவிட்டது போன்ற உணர்ச்சி அவள்மேல் ஈட்டிபோல குத்த்த தொடங்கியது. உடனே, “நான்தான் பாதகி, துரோகி, எல்லாம் என்னால் தான் வந்தது. நானே என் தலையில் மண்ணையள்ளிக் கொட்டிக்கொண்டேன் என்று கத்தினாள்.

“அவர் ஒரு பாவமும் அறியாதவர். நான் அவரை மணக்கும் பொழுது வயசு இருபது. நான் அவரை நேசித்தேன். அவரோ என்னை ஆவேசத்துடனும் முழு மனதுடனும் காதலித்தார். பொல்லாத காலம் எவர்க்கும் வருவதுதான். நான் ஒருநாள் அவருடன் சண்டை போட்டுக்கொண்டேன். அது ஒரு சாதாரண மனஸ்தாபத்தினால் தன்வயிற்றுக்கு இரண்டு பணம் சம்பாதிக்கத் தெரியாத மாப்பிள்ளைக்கு வீட்டில் என்ன வேலையிருக்கிறது’ என்று கேட்டுவிட்டேன்.

என் நாக்குக் கொடியவாளினும் கூரியதாய் அவர் இயத்தை அறுத்திருக்க வேண்டும். அதன் பின்னர்….”

பிரிவு: ஆம், பிரிவுடன் கூடியது தனிமை. மனிதனைச் சில வேளைகளில் மிருகமாக்கும் தனிமை . முத்துமெனிக்கா தன் குடிசையில் தனியே இருந்தாள். அப்பொழுதெல்லாம் தன் கணவர் திரும்பி வருவார் என்று தினமும் எதிர்பார்த்திருந்தாள் வருவார்…. வருவார்….. இப்படிப் பல மாதங்கள் கழிந்து போய்விட்டன.

அவனோ வரவில்லை ; அவளோ ஏழை. அதிலும் கட்டழகு குலையாத பெண். வயலில் போட்டது விளைந்தால்தான் வயிற்றை நிரப்ப முடியும். அவளுக்கு ஒரு துண்டு வயல் காணி இருந்தது. அதில் அயலவர் சிலருடைய உதவியுடன் சிறு தானியம் விதைத்திருந்தாள். வீட்டில் இருக்க நேரம் கிடையாது. காலை முதல் மாலை வரையில் வயலில் நின்று கிண்டினால்தான் ஏதேன் கிடைக்கும் இடைக்கிடை யாரும் வந்து முத்துமெனிக்காவுக்கு ஒத்தாசை செய் வார்கள். அவர்கள் எல்லோரும் தர்மசிந்தை கொண்டவர்கள்,

அவள் வயலுக்குப் பக்கத்தில் இருந்தது டேவிட்சிங்கோவின் வயல். அவன் நல்ல கட்டமைந்த வாலிபன் அவனும் வந்து உதவிகள் செய்து கொடுப்பான்…

ஒருநாள் பெரு மழை பெய்தது. இல்லை, மழை நீர்வீழ்ச்சி போல வீழ்ந்ததென்று சொல்ல வேண்டும். இலங்கையின் மலைப்பிரதேசங்களில் மழை பெய்வதில்லை. ஆறு களும், குளங்களும் நீர் நிலைகளும் பெருக்கெடுத்து வயல்களைச் சூறையாட ஓடிவந்தன. முத்துமெனிக்காவின் வயல் பள்ளத்தாக்கில் வெள்ளம் வந்து நிறைந்து பயிர்களை அமுக்கி விட்டது. உழவர் மண்வெட்டியுடன் வந்து தங்கள் வயல்களின் வரம்புகளை வெட்டி வெள்ளத்தை ஓடச் செய்து கொண்டு நின்றனர். முத்துமெனிக்காவுக்கு உதவி செய்வோர் யாருமில்லை. நீரில் அமிழ்ந்து போகும் குழந்தையைப் பார்க்கும் தாய் போல் தன் வயலை வந்து பார்த்துக்கொண்டு நின்றாள். வயிறு பற்றி எரியத் தொடங்கியது. நெடுநேரம் இப்படி நின்றாள்.

டேவிட்சிங்கோ தன் வயலில் வேலை செய்துகொண்டு நின்றவன் இவளைக் கண்டான். தன் வேலைகளின் ஒரு பகுதியை முடித்துக்கொண்டு, ஓடோடியும் வந்து இவளு டைய வயலிலே வேலை செய்யத் தொடங்கினான். முத்துமெனிக்கா இதையும் பார்த்தாள். அவளுக்குத் தன் கணவரின் நினைவு வந்தது. அவர் இப்பொழுது இவ்விடம் இருந்தால் ……. தன் கணவனின் தேவையை இருந்தாற்போல் நினைத்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டு நெடு மரம் போல் தனித்து நின்றாள்.

டேவிட்சிங்கோ இங்கு சிறிது அங்கு சிறிதாய் வயலின் அணைகளை உடைத்துவிட வெள்ளம் மெல்ல மெல்லப் படிந்துகொண்டிருந்தது. அப்பொழுது அவள் அவனைப் பார்த்து சிங்கோ , நீ இன்று என் வயிற்றில் பால் வார்த்தாயப்பா. இல்லாவிடில் என் பச்சைக் குழந் தைகள் எல்லாம் நீரில் அழிந்துபோயிருக்குமே” என்றாள். அவள் முகத்தில் நன்றியறிதலுடன் கூடிய ஒரு பாவம் நிறைந்து நின்றது.

“இல்லை. மெனிக்கா நாங்களோ குடியானவர்கள். என் வயலைப் போலத்தான் உன் வயலும். இந்த இளம் பயிர்கள் அழிந்து போவதை எங்களால் பார்க்கவே முடியாது. பயிர் என்றால் என்ன உயிரில்லாத ஏதோ ஒன்றா? எங்களுக்கு அவைதானே எங்கள் பிள்ளை குட்டிமாதிரி. அதனால்தான்.”

“நல்லாய்ச் சொன்னாய். ஆனால் இப்படி ஆபத்துக்குதவுறவர்கள் ஆயிரத்தில் ஒன்று. எல்லாரும் இப்படிச் செய்துவிடுவார்களா? நான் இதை என் உயிர் உள்ளளவும் மறக்க மாட்டேன்.”

டேவிட்சிங்கோவுக்கு இந்த வார்த்தைகளில் ஏதோ ஒரு இன்பம் என்றும் சுவைக்காத ஒரு சுவைபோல், கேளாத ஒரு இன்னிசை போல், காணாத ஒரு புதுமை போல் அவனுக்கு ஒரு தனிப்பட்ட அனுபவம் அன்று…..

இப்பொழுது மாரிக்காலம்… என்று சொல்லுதற்கு முன்பே, மாரி காலமும் போய் விட்டது. இனி மாசுமறுவற்ற ஆகாயம்: கண்ணைக் கூசும் வெயில்: எங்கும் ஒரே தேசோ மயமான பிரகாசம். மெல்லிய தென்றல்… அறுவடைக்காலம் முடிவடைந்துவிட்டது.

முத்துமெனிக்கா தன் வயலில் ஒரு துண்டில் அவரைச்செடி போட்டிருந்தாள். இன் னொரு பகுதியில் புடலங்கொடி படர்ந்து கொண்டிருந்தது.

டேவிட்சிங்கோ பயறு விதைத்திருந்தான். பாகற்கொடி படர்ந்து பூத்திருந்தது. புடலங் கொடிகள் நடக்கத்தொடங்குங் குழந்தை தட்டுத்தடுமாறி தாயின் சேலைத்தலைப்பைப் பிடிப்பது போல தென்னங்கயிற்றில் தாவிக்கொண்டிருந்தன. அவன் வயலில் வேலை செய்துகொண்டு நின்றான்.

காலமோ மாலை நேரத்து மயக்கமில்லாத தெளிந்த புலரிக்காலம் இந்த நேரத்துக்கு நிலா வீசும் இரவு போன்ற ஓர் கன்மையும் மென்மையும் உண்டு.

பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. முத்துமெனிக்கா அவரைக்காய் ஆய்ந்து கொண்டு நின்றாள்… டேவிட்சிங்கோ புடலம் பிஞ்சுகளுக்குக் பக்கட்டில் தூங்கவிட்டுக் கொண்டி ருந்தான்.

ஆழ்ந்த அமைதி புலரிக்காலத்தில் இருக்கும் அமைதி, ஊழிக் கால முடிவில் இருக்கும் அமைதி மாதிரி. புல்பூண்டுகள். பட்சிகள், மிருகங்கள், ஆம் காற்றும் இந்நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போய்விடுகிறது. பமெனிக்கா “தனிமை” என்றால் என்ன? என்பதை இன்று உணர்ந்தாள்.

தனிமை – இளமை – பிரிவு… பயங்கரமான வார்த்தைகள்தான். நகம் இல்லை . மும்மூர்த்திகள் போல் மூன்றும் ஒன்று சேர்ந்தால் ஒரு பேதையால் என்ன செய்ய முடியும்?

அவள் எதையோ எதிர்பார்த்தாள். என்ன அது? அது அவளுக்கே வாய்ப் புரியவில்லை. ஆனால் மனம் கட்டிலடங்காமல் துடித்தது. இடைக்கிடை ஏதாவது அரவங் கேட்கும். திரும்பிப் பார்த்து நடுங்குவாள்… எதற்கோ அவள் உள்ளம் ஏங்கி ஓலமிடும்….

அவரைக்காய்க் கூடையும் நிறைந்து விட்டது. இனி அவளுக்கு இங்கே பயனில்லை. பலவிதமான உணர்ச்சிகள் அவள் உள்ளத்தில் நிறைந்து இருண்ட மேகம் போல இருந்தது. எந்நேரத்திலும் அந்த உணர்ச்சிகளின் அதிர்ச்சியிலே அவள் உள்ளம் வெடிக்கக்கூடும். அந்த வேளையில்தான் டேவிட்சிங்கே எதிரில் வந்தான். அவள் அருகில் திடீரென அவள் கையைப் பற்றினான்.

இதென்ன இது? என்னை விட்டுவிடு சிங்கோ.” என்று அவள் மெதுவாய்ச் சொன்னாள் ஆனால் அவன் பிடி இறுகியது. அவன் பிடியிலிருந்து விடுவிக்க முயன்று பார்த்தாள். ஆற்றாமல் குனிந்து அவன் கையைக் கடித்து விட்டாள். கையில் கடித்தும் பிடி இன்னும் நெகிழவில்லை. கரத்திலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது.

புலரிக்காலத்தின் மங்கிய பொழுதில் முத்துமெனிக்கா அவனை இரக்கத்தோடு பார்த்தாள். தோள்கள் உயர்ந்து வலுவேறியிருந்தன. பார்வையில் காந்தம் ஒளிவீசியது.

கைகள் இரும்பெனத்திரண்டிருந்தன.

பெட்டை நாய் கடிக்கக்கடிக்க ஆண்நாய் தொடர்ந்து போய் வென்று விடுகின்றது. ஆண்மயில் ஆடும் அழகு கண்ட பெண்மயில் மயங்குகிறது. சேவலின் வீராப்புக் கூவலையும் நடையையும் கண்டு பேடு அடங்கித் தலை குனிகின்றது.

இப்பொழுது முத்துமெனிக்காவின் மேனி முழுவதும் பெண்மை பரவியது. மென்மை , இனிமை, ஏக்கம், வாஞ்சை , அவள் குனிந்து இரத்தம் கசிந்த இடத்தை நாக்கால் நக்கினாள். டேவிட் சிங்கோ காதலுடன் அவளைத் தூக்கிக் கொண்டான்.

அத்தருணம் உலகமே ஸ்தம்பித்தது. மரங்கள் நடுங்கின. காற்றுச் சுழன்று அடித்தது. பூமி அதிர்ந்த து.

கிழக்கு நன்றாக வெளுத்துவிட்டது, டேவிட்சிங்கோ எழுந்து சென்று கொடிகளைப் பார்த்தான். பிஞ்சு பிடித்திருந்தது.

முத்துமெனிக்கா மனப்பூரிப்பில் கூடையின் சுமை உணராமல் மிதந்து கொண்டி ருந்தாள். அவளுடைய கையாட்டத்திலேயே உலகம் சுழல்வது போலிருந்தது.

அன்று அந்திப்பொழுது சந்தையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். வழியில் ஒரு கிழவனையும், கிழவியையும் – புருஷனும் மனைவியும் வந்து கொண்டிருந்தனர்.

கிழவன் தோல் சுருங்கிக் கூனி நடக்க முடியாமல் மெல்ல மெல்ல நடக்க, அவன் மனைவி தாங்கும் ஒரு கழிபோல அவனை அணைத்துக் கொண்டு போனாள். முத்து மெனிக்கா இதைக் கண்டாள். கிழவியிடத்தில் அவள் எதையோ கண்டாள் பரிவாக? தியாக உணர்ச்சியா? இரக்கமா? அது என்னவென்று சொல்ல முடியாது. உடனே அவள் நெஞ்சில் வெட்டவெளி உண்டானது போல் ஓர் உணர்ச்சி தோன்றியது. மனம்பகீரென்றது. கிழவன் மேல் காட்டும் உணர்ச்சி கிழவிக்கு எப்படி வந்தது? கிழவனிடம் ஆண்மையில்லை?

அழகில்லை ….. ஆனால் இருவரையும் ஏதோ ஒன்று சங்கிலிபோல் பிணைக்கிறது. அது பரிசுத்தமானது. தெய்வீகமானது. பவித்திரமானது என்று உணர்ந்தாள்.

அப்பொழுதுதான் அவளுக்குத் தான் அன்று காலை நடந்துகொண்டது மஹா பாவச் செயல்போலத் தோன்றி அவளை உயிருடன் சித்திரவதை செய்யத் தொடங்கியது.

நேற்று – இன்று இரண்டும் அவள் வாழ்க்கையில் இரண்டு தீப ஸ்தம்பங்கள். இரண் டுக்குமிடையிலே மனோதீதத்துக்கு எட்டாத கற்பனையாலும் கடக்க முடியாத பெரும் பிளவு.

நேற்று அவளுக்கு தனிமையான உருவம் ஒன்று இருந்தது. இன்றோ அவள் உருவமற்ற ஒரு உருவம் பேச்சற்ற ஒரு பேச்சு….

முத்துமெனிக்கா மாத்திரம் ஏதோ உலகத்தில் இப்படி ஒன்றைப் புதுமையாய்ச் செய்துவிட்டாளென்று நான் இதைப் பிரமாதப்படுத்திச் சொல்லவில்லை. அவளைப் பார்த்தால் உண்மையில் எனக்கு இரக்கம்தான் உண்டாகிறது. அவள் பச்சாத்தாபப்படுவதைப் பார்த்து நான் அவளை மன்னிக்கவும் தயாராய் இருக்கிறேன். அவளும் பெண்தான். உலகத்தை வெறுத்த சந்நியாசினி அல்ல. அவள் அன்று இருந்த சூழ்நிலையில் தருணம், தனிமை, பிரிவு. இளமை – அவள் இயற்கை விதியின் ஒரு கட்டளையை மீற முடியாத ஒரு நிலையில் இருந்தாளென்றுதான் சொல்ல வேண்டும்…… அதனாற்தான் அவளைப்பார்க்க என் கண்ணும் கலங்குகிறது.

அவள், தான் செய்த தவறைக் காலப்போக்கில் மறந்திருக்கலாம். ஆனால் அவளுடன் அவள் உடலுக்குள் வளர்ந்துவரும் ஒரு ஜீவன் அந்த நினைவுக்கு நெய் வார்த்துக்கொண்டு வந்தது. சில சமயங்களில் நேரமே கழியாமல் பாரத்துடன் கனத்து தொங்கி இருக்கும் வேளை களில் தன் வீட்டு வாசலிலே இருந்து தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் வாழ்வைப்பற்றி எண்ணாததெல்லாம் எண்ணி மனம் ஏங்குவாள். தன் கணவர் திரும்பி வருவார் என்று அவளுக்கு நம்பிக்கை இருந்தது. அவர் வந்ததும் அவருடன்

எப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமென்று அநேக நாட்களாய் மனத்தைத் திடப்படுத்தி வைத்திருந்தாள். என்ன நடக்குமென்று அவளுக்குத் தெரியும். தண்டனையை அனுபவிக்கவும் அவள் தயங்கவில்லை. ஆனால் தன் குழந்தையைப் பார்த்து உலகம் நகைக்குமே என்ற நினைவு வரும் சமயங்களில் தான் என் மண்டை சுக்குநூறாய் வெடிக காதா? ஐயோ” என்று கதறிக் கண்ணீ ர் வடிப்பாள்.

இப்படி இன்னும் எட்டு மாசங்கள் அவள் வாழ்க்கையில் கழிந்தது.

டேவிட் சிங்கோவுடன் கூடி வாழவேண்டுமென்ற ஒரு எண்ணமும் அவள் நெஞ்சில் சிற்சில வேளைகளில் உதிப்பதுண்டு – இயற்கைதானே: குழந்தையின் வருங்கால வாழக் கைக்கும் அது உசிதமாய் இருக்கும் என்று நினைப்பாள். ஆனால் தன்னைத்தொட்டு மணந்த புருஷனின் ஞாபகம் வரும். முன்னொருநாள் கண்ட கிழவனின் தோற்றமும் அவனைத் தாங்கிப்போன கிழவியின் தோற்றமும் மனக்கண் முன் தோன்றின. தன்னையே சபித்துக்கொள்வாள். “இல்லை. என் உயிர் போனாலும், அவனிடம் போக மாட்டேன்,” என்று மனத்திடம் கொள்வாள்.

குழந்தையும் பிறந்தது… தான் ஒரு தாய் என்ற அந்தப் பெருமையிலே தாய்மை உணர்ச்சி உள்ளுக்குள் அடங்கிக் கிடந்த மனவேதனையைத் தணித்து, அவள் மனசிலே அன்புப் பெருக்கை ஊறச் செய்தது. தன் குழந்தையின் பேச்சற்ற பார்வையும், “கிளி கலை க்கும் அமிர்த ஒலியும் அவளை ஒரு ராணிபோல் ஆட்டி வைத்தன. குழந்தையின் மழலை மிழற்றலிலே மற்றவர்க்குத் தோன்றாத ஒரு அபூர்வ ஆறுதல் மொழியை அவள் கண்டு நெஞ்சு பூரிப்பாள். ஆனால் சிலவேளைகளில் தன் குழந்தையின் மதுரமான விளை யாட்டுக்களில் அடிமையாகி அமரரும் அறியாத ஆனந்தத்திலே மூழ்கியிருக்கும் பொழுது உணவில் கடிபடும் கல்லுப்போல் அதன் பிற்கால வாழ்க்கை பற்றிய நினைவு ஓடிவரும். நெஞ்சு தடுமாறுவாள். தற்கொலை செய்துகொள்ளலாமென்றும் நினைப்பாள். வேறு வழி

அவளுக்குத் தோன்றாது. ஆனால் திடீரென்று குழந்தையின் அழுகைக்குரல் கேட்கும் ….. குழந்தைக்காக எதையும் சகிக்கத்தக்க ஒரு மனோபலம் பிறந்துவிடும்.

எதையும் எதிர்த்துப் போராடத் தயாராயிருப்பாள்.

இப்பொழுது அவள் எவருக்கும் பயப்படவில்லை உலகத்துக்கும், தன் வேதனைக்கும், தன் கணவருக்கும் அவள் அஞ்சவில்லை …..

ஆனால் குழந்தை பிறந்த ஏழாவது மாசம் ஒரு காலை, அவள் பயம் எல்லாம் எப்படிக் குலைந்ததோ – அவளே அறியமாட்டாள். யாரோ வைத்துச் சுட்டது போல் அவள் நடுங்கி

னாள்… அன்று அவள் புருஷன் வந்திருந்தான்,

அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தவள் இத்தினத்தை. இன்னது தம் என்பதையும் ஒரு வாறு அறிவாள். எதையும் தாங்குவதாக மனத்திடம் கொண்டிருந்தவள். ஆனால் – அது ஏனோ ?

அவன் இதொன்றையும் எதிர்பார்க்கவில்லை. மனக் கோட்டைகளுடன் வந்தவன் – குழந்தையைக் கண்டான் முத்து மெனிக்காவையும் தான் – அவள் நெஞ்சு படபடக்கவில்லை. அவன் அழவில்லை , சிரிக்கவில்லை , மனம் சாந்தமாய் இருந்தது.

அன்று முழுவதும் அவர்கள் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. கழிந்து மாலையாய் மாறிக்கொண்டிருந்தது. முத்துமெனிக்கா அவனிலும் விழிக்க முடியாமல் தைரியம் குன்றி ஒரு மூலையில் படுத்துக்கொண்டாள். அவன் மெல்ல அவளை அணுகி “மெனிக்கா என்று கூப்பிட்டான். எழுந்திருந்து தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். கண்ணீர் கண்களிலிருந்து ஓடிக்கொண்டிருந்தது. “என்னை நீ எதிர்பார்க்கவில்லையல்லவா?” கேட்டான் அவள் புருஷன்.

“ஆ அப்படிச் சொல்லாதீர்கள்.”

“அப்படியானால்?”

“நான் உங்கள் வரவுக்காக இன்றும் நேற்றும் சென்ற மூன்று வருஷங்களாய் எதிர் பார்த்திருந்தேன்.”

“ஊம்…” என்று ஒரு பெருமூச்சுக் கிளம்பியது. பின்னர் உரக்கச் சிரித்தான். அவன் சிரிப்பைக் கேட்டு அவள் பயந்து போனாள். உடல் நடுங்கியது.

“நீங்கள் நான் சொல்வதை நம்பவில்லையா?” “நம்பாமல்? நீ இருப்பதும் நிஜம்தான். உன் குழந்தை இருப்பதும் நிஜம்தானே” “அது என் குற்றமில்லையே.”

“என்ன?” என்று உரக்க கத்தினான், அவள் கணவன். வீடு அதிர்ந்து விடும் போலிருந்தது.

“துரோகி. உன் குற்றமில்லையென்றா சொல்கிறாய்? உண்மையில் உன்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

“என்னைப்பற்றி ஒன்றுமே வேண்டாம். நான் சொல்வதை மாத்திரம் முதல் கேட்டு விடுங்கள். நீங்கள் வரவில்லை; ஒரு கடிதம் இல்லை; என்னைப்பற்றிய நினைவு உங்க ளுக்கு இல்லை… இங்கே எனக்கு ஒரு நாய் துணையில்லை. நான் ஒவ்வொருநாளும் உங் கள் வரவுக்காக ஏங்கிக்கொண்டிருந்தேன்… தன்னந் தனியே. ஒரு பெண்… தனிமை இருந் தது. அதை நினைத்தாலே இப்பொழுதும் என் உடல் நடுங்குகிறது. பிரிவினால் உண்டான மன ஆத்திரம், வேதனை எல்லாம் இருந்தது. அத்துடன் இருந்தது பயங்கரமான இந்த இளமை – இவைகளுக்கு அடிமையானேன். என் வல்லமையில் இல்லாத ஒரு பொல்லாத காலத்தில் என் மேல் வலை வீழ்ந்துவிட்டது. இதை முன்பே நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.”

“சரி சரி: உன்மேல் குற்றமில்லை… என்று சொல்லிக்கொண்டு திரும்பவும் உரக்கச் சிரித்தான். பின்னர் மெனிக்கா. நீ மிருகம் போல் நடந்து கொண்டாய். அதன் பயனை அனுபவிக்க வேண்டுமென்பதும் உனக்குத் தெரியுந்தானே” என்றான். இப்பொழுது அவன் குரல் மாறி வேதனையுடன் இருந்தது.

“நான்தான் எதற்கும் தயாராய் இருக்கிறேனே”

“அப்படியானால் இந்த வீட்டை விட்டுப் போய்விடு. அது இருவருக்கும் நல்லது.

“சென்ற ஒன்றரை வருஷமாய் நான் அதற்கு மனதைத் தயார் செய்துவைத்திருக்கி றேன். வேறு வழியில்லை என்பதையும் நன்றாய் உணர்கிறேன். நான் தவறு செய்துகொண் டேனாகில் தண்டனையை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். ஆனால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன். கருணை வைத்து…. அவளால் பேசமுடியவில்லை. தொண்டை தளதளத்தது. என் பிழைகளை மன்னித்து விட்டதாக ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள். அந்தச் சொல், பட்டமரம் போல் தனித்து நிற்கும் எனக்கு ஒரு வேளை ஏதாவது நன்மை செய்யலாம்.” என்றான்.

அவன் ஒன்றுமே பேசவில்லை; அவன் கண்களிலிருந்து எரியும்: கண்ணீர் பொங்கி வழிந்தது….

முத்துமெனிக்கா திடீரென்று பாய்ந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள் பின்னர் கீழே விழுந்து அவன் பாதங்களைத் தொட்டுத் தன் கைகளில் ஒற்றிக்கொண்டாள். அப்பொழுது அவள் உருக்கம் நிறைந்த குரலில் தன்னிக்கா என் மன்னிப்பு உனக்கு வேண்டாம். உலகம் உன்னை மன்னிக்க வேண்டும் முதல் அதைப் பெற்றுவா” என்றான்.

அவள் எழுந்து தன் குழந்தையை எடுத்து மார்புடன் அணைத்த ரணம் வீட்டிலிருந்து வெளியே காலடி வைத்தாள் நள்ளிரவு…..

முத்துமெனிக்காவின் சிந்தனைகள் அறுந்து போயின. இப்பொழுது நிற்கும் நிலை. இடம், காலம். யாவும் நினைவுக்கு வரவே துரிதமாய் நடக்கத்தொடங்கினாள். மெல்லிய குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. ஒரு முச்சந்தி குறுக்கே வந்தது. அதன் மத்தியிலே ஒரு பிரமாண்டமான அரசமரம். அதன் நிழலில் நிஷ்டைகூடும் நிலையில் ஒரு புத்தவிக்கிரகம்; வழிப்போக்கன் ஏற்றிப்போன ஒரு மெழுகுவர்த்தி எரிந்து அவியும் தறுவாயில் இருந்தது.

முத்துமெனிக்கா அந்த விக்கிரகத்தின் முன்னால் போய்நின்று அதையே உற்றுப் பார்த்த வண்ணம் நின்றாள். கண்கள் கலங்கிக்கொண்டிருந்தன. தன் குழந்தையை எடுத்து அந்த விக்கிரகத்தின் முன்னால் வைத்து கீழே வீழ்ந்து வணங்கினாள். பெருமானே. சாந்தமூர்த்தியே, இந்தக் குழந்தையை உனக்கு அடைக்கலமாய் ஒப்பிக்கிறேன். நான் காற் றுக்குப் பயப்படவில்லை மிருகங்களுக்கும் பயப்படவில்லை . ஆனால் என் இனத்தவராகிய மனிதரை நினைத்தாலே என் மனம் நடுங்குகிறது. இந்தக் குழந்தையை அவர்களிடமிருந்து காப்பாற்று….”

அத்தருணம் வெளியே செபாலிமலர்கள் மலர்ந்துகொண்டிருந்தன …..

முத்துமெனிக்கா தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு யுகம் யுகாந்தரமாய்ப் போய்க் கொண்டிருக்கும் அபாக்கியவதிகளான தாய்மாரின் அடிகளைப் பின்பற்றிச் சென்று கொண்டிருந்தாள். முன்னே குரூர உலகம்… வழியோ நெடுவழி.

– ஈழகேசரி 05.6.1942.

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *