நூற்றுக்கு நூறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 5,790 
 
 

ஆல்பம் பலவிதம். கல்யாண ஆல்பத்துக்குத்தான் முதல் இடம்..கட்டு சாதக்கூடை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ஆல்பம். இப்போ பொண்ணுக்கு எத்தனை நகை போடுவீர்கள் என்ற பேச்சு போய் எவ்வளவு ஆல்பம் பண்ணப்போறீங்க என்பதாயிருக்கிறது. கல்யாணம் முடிந்து தப்பித் தவறி யார் வீட்டுக்கும் போனால் அவ்வளவு தான்!

பொத்தென்று மடிமீது கனக்கிறதே என்று பார்த்தால் குறைந்தது நாலு அல்லது அஞ்சு ஆல்பம்.

“பாத்துண்டே இருங்கோ இதோ காபி கலந்துண்டு வரேன்”.

மாமி மாயமாகி விடுவார்.

வரும்போது சுடச்சுட காப்பி , முறுக்கு , மைசூர் பாகு.ஆல்பம் பார்த்த களைப்புக்கு அமிர்தம்.

ஒருவழியா, தப்பிச்சோம்னு எழுந்தா, அடுத்த வாரம் அவசியம் வரணும் Honeymoon ஆல்பமும், Photo shoot ம் பாக்கி இருக்குன்னு ஒரு குண்ட தூக்கி போட்டார். நான் ஏன் இந்த பக்கம் வரப்போகிறேன்?

இந்த கதைக்கும் கல்யாண ஆல்பத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் ஆல்பத்துக்கும் இந்த கதையின் நாயகன் சுந்தரத்துக்கும் ரொம்பவே நேருங்கிய
தொடர்பு இருக்கிறது.

சுந்தரம் கொஞ்சம் வித்தியாசமாக ஆசாமி. எழுபது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்.எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.ஒரு மருந்து கிடையாது. ஆனால் பத்து நாளுக்கு ஒரு முறையாவது டாக்டரிடம் போகவேண்டும்.

” டாக்டர் ஒரு வாரமா வயத்த வலிக்கற மாதிரி இருக்கு. தொண்டேல கூட ஒரு வலி. Endoscopy எடுத்துடலாமா டாக்டர்?

எடுக்கும் வரை விடமாட்டார்.

முதலில் டாக்டர் நம்பிக்கு இவர் மேல் ரொம்பவே எரிச்சல் வந்தது. நீங்க டாக்டரா அல்லது நான் டாக்டரா. ? வேணும்ன்னா நீங்க என் சேரில் உக்காருங்க! என்று ஒரு நாள் கோபித்துக் கொண்டு விட்டார். அப்புறம் இவரது சுபாவம் புரிந்த பின் பாவம் மனுஷன் இது ஒரு obsession என்று விட்டு விட்டார்.

Abdominal scan, CT scan , MRI ,chest x-ray என்று ஒன்றும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் report வரும்போது அவர் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும். ‘Normal scan report ‘என்பதைப் பார்த்து பூரித்து போவார்.

இவருடைய மனைவி பத்மா இவருக்கு நேர் எதிர்.

வாயைதிறந்து இன்னசெய்கிறது என்று சொன்னதேயில்லை . எல்லாமே கைவைத்தியம் தான்.

“நல்ல உடம்பை வச்சுட்டு ஏன் தான் டாக்டருக்கு வாரி வாரி குடுக்கிறீங்களோ தெரியல?”
என்று கோபித்துக் கொள்வாள்.

இதைவிட சகிக்க முடியாத வேறு ஒன்று இருந்தது. அது தான் அவருடைய வினோத பழக்கம்.

தான் இது வரை எடுத்த அத்தனை ஸ்கேன் ரிப்போர்ட்ஐ யும் ஒரு ஆல்பமாய் பண்ணி அதை அடிக்கடிஎடுத்து பார்த்துக் கொண்டே இருப்பார். பத்மாவையும் கூப்பிட்டு பார்க்க சொல்வார். பத்மா அவரை கிண்டல் பண்ணுவாளே தவிர கோபிக்க மாட்டாள்.

பதினெட்டு வயசில் கல்லூரியில் படிக்கும்போது கிரிக்கெட்டில் கீழே விழுந்து X ray எடுத்து தான் முதல் படம். பிறகு வரிசையாக தேதி வாரியாக எல்லா scanம்.

கடைசியாக ‘ 64 slices Heart scan ‘ ஒன்றும் எடுத்து விட்டார். பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது. இதைப்பாத்தியா latest 3D scan 64 slices. !

“அதென்ன 64 slice ?மாம்பழம் slice மாதிரி? *

”இது தான் latest CT scan ஒரு block ம் தப்பிக்க முடியாது. ஸாருக்கு ஒரு block ம் இல்லையாக்கும் ” என்று பீற்றிக்கொள்வார்.

‘ Black and white சினிமாவிலிருந்து colour படம் பார்ப்பது போலிருக்கு’ என்று பத்மா கேலி பண்ணுவாள். ஆனால் நல்ல வேளை, வேறு யாரிடமும் காட்ட மாட்டார்.

ஆனால் ஒவ்வொரு தடவையும் டாக்டரிடம் போகும்போது ஆல்பத்தை மறக்காமல் கொண்டு போவார்.இதைத்தவிர பழய Blood report, urinalysis , fasting sugar, cholesterol எல்லாம் இன்னொரு பையில். டாக்டர் அதை அப்படியே தள்ளி வைத்து விட்டு ” அப்புறம் சுந்தரம்” என்பார். பத்மாவும் சொல்லி பார்த்து விட்டாள்.

“இப்படி கட்டித் தூக்கி , இல்லாத வியாதியை இழுத்து விட்டுக்க போறீங்க! நேத்து பார்வதி இருமல் நிக்க மாட்டேங்குதுன்னு டாக்டரிடம் போனாளாம். டாக்டர் X-ray எடுத்துட்டு வாங்கன்னு சொன்னாராம்.போனவாரம் தான் எடுத்தேன்னு சொல்லி காட்டியிருக்கா….அதுக்கு அவர்….

” ஒரு வாரத்துக்குள்ள என்னென்ன உடம்பில நடக்கும்னு உங்களுக்கு தெரியுமா? போய் இன்னொண்ணு எடுத்துட்டு வாங்கன்னு” சொல்லி அனுப்பி விட்டார்.நீங்க என்னடான்னா தொப்புள் கொடி அறுத்த நாளிலேர்ந்து எடுத்த டெஸ்டைப் போய் பத்திரப்படுத்தி டாக்டரிடம் கொண்டு போய் காண்பிக்கிறீங்களே! ”

ஆனால் சுந்தரம் அவர் பழக்கத்தை விடுவதாயில்லை.

இதோ கிளம்பி விட்டார்.எல்லா report ம்எடுத்துக்கொண்டு….

லேசாக நெஞ்சு வலிப்பது போல ஒரு தோணல். டாக்டர் நம்பி test பண்ணின வரை, ஒன்றும் இல்லை

“சரி ECG மட்டும் எடுத்துட்டு வந்திடுங்க” என்று அனுப்பினார். எப்போதும் போல் ‘ Normal ECG’ என்றது report.

”சுந்தரம் ! You are perfectly alright! எமன் உங்க கிட்ட நேருங்கவே பயப்படுவான். தைரியமா போய்ட்டு வாங்க” என்றார். சுந்தரத்துக்கு வாயெல்லாம் பல்.

”Thank you doctor”

கூறிவிட்டு கிளம்பினார்.

வரும்போது எப்பொதும் எதிர்த்த கடையில் ஒரு ஜூஸ் சாப்பிட்டு விட்டுத்தான் கிளம்புவார்.

Clinic கிலிருந்து வெளியே வந்தவர் எதிரே வரும் காரை கவனிக்கவில்லை.ஒரே நிமிடத்தில் எல்லாமும் முடிந்து விட்டது. கூட்டம் கூடி விட்டது.

”பாவம் போய்ட்டார்”.

தலையில் அடிபட்டு எக்கச்சக்கமான ரத்தம் போயிருந்தது. பையில் இருந்த report எல்லாம் மூலைக்கு ஒன்றாய் சிதறிக் கிடந்தது.எல்லாம் “Normal… Normal… என்று ஒரே குரலில் கத்துவது போலிருந்தது.

நூற்றுக்கு நூறு வாங்கியும் பரிட்சையில் தோற்ற மாணவன் போல விழுந்து கிடந்தார் சுந்தரம்!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *