நீறு பூத்த நெருப்பு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 5,504 
 
 

மல்லிகை முல்லையின் நறுமணம் ஒரு பக்கம்.

கேசரி…பஜ்ஜி…காபியின் நாவில் நீர் சுரக்கவைக்கும் மணம் ஒருபுறம்..சந்தோஷம்…பயம்…பதற்றத்துடன் கைகோத்து ஃயூஷன் கலவையாக புதிய ஒரு சங்கமத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன.

“பெண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…ஸ்ருதிகிட்ட கேட்டு உங்கள் முடிவைச் சொல்லுங்கோ. பெண்ணின் விருப்பம் ரொம்ப முக்கியம். சேகா! நான் சொல்றது சரிதானே…”

ராஜி தெளிவாக…. மிகவும் மிருதுவாக, உறுதியாகச் சொள்ளாள்.

அவள் பூசி மெழுகி பேசவில்லை, அது மிகவும் இயல்பாகவே இருந்தது, ராமசுப்பு ஆடிப்போய் விட்டார்.

Sumangali - Neeru Potha Nerupu-picஸ்ருதிக்கு இரண்டு மூன்று வரன்கள் வந்து பார்த்தன. பிள்ளை வீட்டுகாரர்கள் எப்படிப் பழகினார்கள். தங்களின் எதிர்பார்ப்பை …. எப்படியெல்லாம் பேசி வலை வீசினார்கள்… என்பதெல்லாம் நன்றாகப் புரிந்திருந்த நிலையில் ராஜியின் பேச்சு வித்யாசமாக இருந்தது.

பெண்ணை நிமிர்ந்து பார்த்தார்.

அங்கு பார்வைகள் பேசின.

‘சேகர்ட்ட தனியா பேசனும்னு இருந்தா சொல்லு.’ மங்களம் பெண்ணுக்கு அடி எடுத்துக் கொடுத்தாள்…

‘புடிச்சிருக்கா’ ராஜி ஸ்ருதியின் முதுகைத் தடவினாள்.

சின்னதாக தலையசைத்தாள் ஸ்ருதி.

பளிச்சென்று விளக்குப் போட்டாற் போல் அத்தனைபேர் கண்களிலும் ஒரு சந்தோஷம்…சட்டென்று சாயலடித்தது.

“மேற்கொண்டு ப்ரொஸ்ட் பண்ணலாம் இல்லையா”

ராமசுப்பு பேச ஆரம்பித்தார்.

“தாராளமா…! சேகர்… உன் முடிவை நீயே சொல்லேன்” ராஜி பிள்ளையிடம் சொல்ல..

“பெரியவா விருப்பம் பகவான் சங்கல்பத்துல நல்லபடியா நடக்கட்டும்.” சேகர் சொல்லிமுடித்தான.

“ஸ்ருதி! சேகர்ட்ட பேச வேண்டாமா? பேசறதுன்னா பேசுடா!”

ராஜியின் கேள்விக்கு…

“இல்லை ….. ப்ளிஸ்-” ஸ்ருதி வெட்கம் மேலிட மறுத்தாள்.

“ஓகே…. நோப்ராப்ளம்…. ஆனால் நான் கொஞ்சம் பேசணுமே நீங்க கேக்கறேளா?”

ராஜியின் குரல் கரகரத்தது.

இது என்ன? பட்டணத்தில் பூதம் கிளம்பறமாதிரி. ராமசுப்பிவின் பார்வையில் குழப்பம்….

“என் குடும்பத்தைப் பத்திச் சொல்லணும். அதான்” ராஜி தெளிவாக இருந்தாள்.

“சொல்லுங்கோ…”

“எல்லாருமா… கோவிலுக்கு போயிட்டு மீனாட்சி அம்மனை தரிசனம் பண்ணிட்டு… அப்படியே பொற்றாமரைக் குளக்கரையில் உட்கார்ந்து பேசலாமே!”

***

அடுத்த அரைமணியில் அம்பாளை தரிசித்து மானசீகமாக மகன் வாழ்வு நன்றாக இருக்க தொழுது..

ரிலாக்ஸாக கோவில் குளக்கரையின் படிக்கட்டில் ஓர் ஓரமாக இடம்பிடித்து உட்கார்ந்தனர் அனைவரும்.

கோவில் அதிக கும்பல் இல்லாததால் சௌகர்யமாகவே இருந்தது.

ராஜி ஆரம்பித்தாள்.

“கண்போன்ற உங்கள் பெண்ணை என் பிள்ளைக்குக் கொடுக்கப் போகிறீர்கள். அதனால் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாதென்று நான் நினைக்கிறேன். அதனால் தான் கோவிலில் பேசலாம் என்று நினைத்தேன்.”

அவள் வாழ்க்கையை….அந்த முக்கியமான நிகழ்வை..தவிர்க்க முடியாத உண்மையை..அப்படியே சொல்ல…சொல்ல..நீரின் அலைகள் சாட நிதானம் காட்டின…அத்தனை மனமும் அமைதி காத்தன.

அந்த அமைதி அவசியமாக இருந்தது.

***

“ராஜி…”

“என்னப்பா…”

“இங்கவா…உன் பேருக்கு ரிஜிஸ்தர் தபால் வந்திருக்கு..கையெழுத்துப் போட்டு வாங்கு”

கண்கள் பயத்துடன் பார்க்க…கவரை பாத்தன கைவிரல்கள்.

“என்னம்மா!” சிவராமன் குரல் பிசிறியது.

“டைவர்ஸ் நோட்டிஸ்பா…உங்க மாப்பிள்ளை அனுப்பியிருக்கார்…!”

“மா..பிள்ளை…தீவட்டி தடிராமன். டைவர்ஸ் நோட்டீஸா அனுப்பியிருக்கான். அவனை விட்டேனா பார்…கோர்ட்டுல அவனை நாற அடிக்கலை..என் பேரு சிவராமன் இல்லை..”

பெற்றவன் வயிறு பிசைந்து சபித்தது.

ராஜி மெல்ல குழந்தையைத் தூங்கப் பண்ணினாள்.

“நாளைக்கு நாள் நன்னாயிருக்கு போய் வக்கீலைப் பார்க்கிறேன். விவாகரத்தா கேட்கிறான் விவாகரத்து?”

சிவராமன் எகிறினார்.

“அ….ப்பா!”

“என்…ம்…மா…”

“அப்பா! எதுக்குப்பா மோதணும். அவர் மனசுல வேற ஒருத்தி வந்து உட்கார்ந்துட்டா. வகையா குடும்பம் நடத்தறா. எனக்கு அவர் மனசுல இடம் இல்லேன்னு ஆயிட்டப்பவே..எனக்கு விட்டுப் போச்சுப்பா. பசை போட்டு ஒட்டவைக்க இது பொருள் இல்லை. அதனால்தான் வீட்டை விட்டே வந்துட்டேன். ஒரு தரம் இல்லைன்னு ஆளபிறகு சண்டைபோட்டு வழக்காடி வாடி…அசிங்கம்ப்பா..அருவருப்பா இருக்கு… கோர்ட்டுக்குப் போய்…விவாகரத்து வேண்டாம்னு போராடி ஜயிச்சு…மறுபடியும் அந்த வீட்டுல போய் வாழமுடியுமாப்பா? வேண்டாம்ப்பா..நடக்கறது நடக்கட்டும்…”

ராஜி திடமாகப் பேசினாள்.

ஒரு முடிவு…வரப்போகிறது…

மனது பலி ஆடாய்க் கலங்கினாலும் பலவீனங்களைத் தூக்கி எறிந்தது.

என் வாழ்க்கையை எப்படி பாதுகாப்பாய் அர்த்தமுள்ளதாக மாக்கிக்கலாம் என திட்டமிட்டது. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ராஜி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால்..மூர்த்திக்கு சௌகர்யமாய்ப் போயிற்று.

மாதாமாதம் குறிப்பிட்ட தொகை ஜீவனாம்சமாகத் தர கோர்ட் உத்தரவிட்டது.

“அப்பா!”

“என்னம்மா”

“ஜீவனாம்சம் வேணாம்பா!”

“ஏம்மா அப்படி சொல்ற? மாசாமாசம் பணம் அனுப்பறப்பவாவது அவனுக்கு உன்னோட நிளைவு வந்து அவன் செய்த தப்பு அவன் மனசை உறுந்தட்டும் மா!”

“வேணாம்பா…அவருக்கு என் நினைப்பு வந்து செய்த தப்பு மனசை உறுத்துமோ இல்லையோ! அந்தக் காசை கை நீட்டி வாங்கறப்ப துக்கம் வந்து என்னை குழில தள்ளுமேப்பா…ஒரு தப்பும் பண்ணாத எனக்கு ஏன் இந்த கதின்னு கதறுமே மனசு! வேணாம்பா ஜீவனாம்சம்! எதுக்குப்பா…அந்தப் பணம்!. இவனோட மனைவியா நான் வாழ்ந்ததுக்கு…அந்த ரத்தான உறவுலேந்து கிடைக்கறது பணம் இல்லப்பா! பாவச்சுமை. என் பாவம் இதோடு கழியட்டும்..வேணாம்ப்பா”

வக்கீலிடம் பேசி…ஜீவனாம்சம் வேணாமனு எழுகிக் கொடுத்துட்டு வெளியே வந்தப்ப..

“முடிஞ்சு போச்சு எல்லாம்!” உதடுகள் முணுமுணுத்தன.

அப்பா கையைப் பிடித்துக் கொண்டாள் ராஜி…

‘வாம்மா’ தாங்கிய தகப்பன் மகளை வழிநடத்தி அழைத்து வந்தார். வாசலிலேயே குழந்தையை வைத்துக்கொண்டு பழியாய்க் கிடந்தாள் தாய்.

***

சக்கரம் சுழன்ற கதையைச் சுருக்கமாக முடித்தாள் ராஜி.

“படிச்சு முடிச்சு மச்சரா வேலைக்குப் போனேன். உத்யோகம் பாதுகாப்பைத் தந்தது. உறவு முறிஞ்சு போயிட்ட வெறுப்பில் நான் போட்டுக்கொண்ட வைதவ்யம் மனசுக்கு ஆரோக்கியமா இருந்தது. வைராக்யத்தைத் தந்தது…சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டேன்..” ராஜி முற்றுப்புள்ளி வைத்தாள்.

ஸ்ருதி மெல்ல ராஜியின் தோளைத் தொட்டு தூக்கி அணைத்துக் கொண்டாள்.

‘அம்..மா..எழுந்திருங்கோ! வீட்டுக்குப் போகலாம்”

விரல் கோத்து நடப்பித்தாள்.

சேகர் மனசு நிறைந்தது. கண்ணில் அன்பு பெருக அவளைப் பார்த்தாள்.

மீனாகரி அம்மன் கோவில் ராஜகோபுர வெளிச்சம் வழியோடு துணைவர் வீடு வந்து, நிச்சயதார்த்தம் தேதி நிச்சயித்து…

எல்லாமே பேசி…

முடிவு எடுத்து…பிரியாவிடை பெற்று…ரயில் ஏறினர் இருவரும்.

***

சீரான லயத்துடன் அந்த எக்ஸ்ப்ரஸ் ரயில் போய்க்கொண்டிருந்தது. ராஜி சுகமாக தூங்கிக் கொண்டிருந்தாள். மெல்ல போர்வையை இழுத்து மூடி அவளை அணைத்தபடி காலை நீட்டி உட்கார்ந்தான் சேகர்.

திருச்சியில் ஒருவர் தன் இரு பெண்களுடன் ஏறவே… அவர்கள் உட்கார ஏதுவாக தன் காலை எடுத்துக் கொண்டான்.

தூக்கம் பிடிக்காமல் இருந்த சேகர் அவர் பொருட்களை சரியாக வைக்க உதவினான். அவருடைய ஒருகை பாரிசவாயு தாக்கியதில் செயலிழந்து இருந்ததை உணர்ந்த அவன் மனம் – ‘பா..வ..ம்.’ என்று பரிதாபப்பட்டது. இரண்டு பெண்களுமே கிட்டதட்ட 20களில் இருந்தனர். அவனுக்கு நன்றி சொல்லிய பெண்கள்…தள்ளி இருந்த தங்கள் இடங்களில் போய் அமர்ந்து கொண்டனர்.

“சார்…எந்த ஊரு?” பெரியவர் மெல்ல ஆரம்பித்தார்.

“மெட்ராஸ் தான்”

“ஓ..! நானும் சென்னைதான்!”

‘அப்…படியா -”

கொஞ்ச நேரம் பேசப் பேச அவனிடம் அவருக்கு ஈர்ப்பு வர…தொடர்ந்து பேச ஆரம்பித்தார். மனக லேசாகற மாதிரி ஒரு உணர்வு வர…. பேசினார்.

‘எல்லாம் விதி…வாழ்க்கைல நான் செஞ்ச பாவம் என்னை இப்படி ஆக்கிடுத்து. இளமைல் கொஞ்சமா ஆடல…தாலி கட்டிண்ட பொண்டாட்டிய கைக்குழந்தையோட தவிக்கவிட்டதுக்கு..எனக்கு பகவான் கொடுத்த பரிசு இது. எத்தனையோ வைத்யம் பண்ணிப் பார்த்தாச்சு. ஒண்ணும் சரியாகல..பாபவிமோசனம் கிடைக்கணும். என்னமோ உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும் போல இருக்கு தப்பா நினைச்சுக்க மாட்டியே!”

“சொல்லுங்க சார். உங்க பாரம் இறங்கும்னா நான் சுமைதாங்கியாக இருப்பதில் நோ அப்ஜக்ஷன்!”

“பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணிட்டு ஏற்கனவே தொடர்பு இருந்தவளை கல்யாணம் பண்ணிண்டேன். நீ பார்த்தியே அவா இரண்டு பேருமே என் பொண்கள் தான். வேலைக்குப் போறா…அவா அம்மா – போனவருஷம் போய்ச் சேர்ந்துட்டா…என் கை இப்படியாகி 10 வருஷமாச்சு. இவாளுக்கு வரன் பாக்கணும். போனவாரம் கோவிலுக்கு போனப்ப மனசுல பொறி தட்டியது…என் முதல் மனைவி கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கணும்னு தோணித்து – சென்னைல என் சகோதரி இருக்கா….அங்க போய் தங்கிண்டு தேடணும்” பேசிக்கொண்டே போனார் அவர்.

சட்டென்று தூக்கம் முழித்தவளாய் எழுந்து உட்கார்ந்தாள் ராஜி. பளிச்சென்று வெளிச்சம் பரவியதில் எதிரே பார்வை பதிய அணுவின் தாக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வில் கண்கள் நிலை குத்தியது ராஜிக்கு.

“அம்மா…மாயவரம் வந்துடுத்து…காஃபி வாங்கிண்டு வரவா”

“வாங்கிண்டு வாப்பா!”

தேடிப்போகும் தெய்வம் எதிரிலேயே…மூர்த்தி பதட்டமாக எழுந்திருக்க…

“சார். உங்களுக்கும் காபி வாங்கிண்டு வரவா – உங்க பெண்களுக்கு”

“வேண்டாம்…எனக்கு மட்டும் போதும்…” மூர்த்தி தடுமாறினான்.

“என்ன பேசுவது!” இருவருக்குமே பதற்றமாக இருந்தது.

“அ…ம்மா… இந்தாம்மா காபி” ராஜி காபியை வாங்கிக் கொண்டாள்.

“சார்… இந்தாங்கோ!” மூர்த்தியிடம் கொடுத்த போது அவர் கை வெசாக நடுங்குவதை உணர்ந்தான்.

“சார் இல்லப்பா நான்…. உன் அப்பாடா கண்ணா!” மனசு உண்மையைப் புதைத்து அழுதது.

“உங்களுக்கு வீன் சிரமம்!” மரியாதைக்கு நன்றி சொன்னான் மூர்த்தி.

“பரவாயில்லை….நீங்க பெரியவர்…எங்கப்பா மாதிரி…சின்ன உதவிக்கு எதுக்கு நன்றி!” சகஜமாகப் பேசினான் சேகர்,

சட்டென்று ராஜி பேச ஆரம்பித்தாள்.

“சேகருக்கு அவன் அப்பாவை பார்க்க கொடுத்து வைக்கல. அவன் ஒருவயது குழந்தை. அவர் போயிட்டார் ஒரு விபத்து ல…என்ன பண்றது. எங்கப்பாம்மா தான் எல்லாம். இப்ப இவன் ஆளாகிட்டான். நானும் மச்சரா இருந்து ரிட்டயராகிட்டேன். அம்மா எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள். வைதவ்யம் ரொம்ப கொடுமை. நான் அதை ஒப்புக்கொண்டுதான் ஆகணும், என்வாழ்க்கை இப்படியாச்சேன்னு மனசால ரொம்ப கஷ்டப்பட்டேன். இரண்டு பேரும் போயிட்டா…நம்ப பண்ற பாவ புண்ணியம் தான் நம்ப வாழ்க்கை. இதில் வருத்தப்பட எதுவுமே இல்லை. கவலைப்படாதீங்கோ…உங்க பொண்களுக்கு நல்ல இடத்தில வரன் அமையும்! சேகர்…சிதம்பரம் வந்துடும்…இறங்கறதுக்கு நேரம் ஆயிடுத்து..நாங்க தரிசனத்தை சிதம்பரத்துல முடிச்சிண்டு. மேற்கொண்டு பிரயாணப்படணும் வரோம்!”

ராஜி தடுமாறாமல் பேசினாள்.

‘வரோம் சார்….’

கைகூப்பினான் சேகர்.

தொய்ந்து கிடந்த வலது கையை இடது கையால் தூக்கிப் பிடித்து வணங்கினான் மூர்த்தி, வயிற்றிற்குள் சங்கடம் பொங்க…தேடிப்போகும் தெய்வம் நேரில் ஆசீர்வதித்த திருப்தியில் கண்கள் கலங்கியதைக் கட்டுப்படுத்திக் கொண்டான் மூர்த்தி.

ப்ளீச் செய்யாத நிறத்தில் பச்சைக் கரை போட்ட புடவை… ரவிக்கை; நெற்றியில் விபூதி…வாரிமுடிக்கப்பட்ட தலைமுடி லேசாக கலைந்திருக்க..அந்த தெய்வம் கிளம்பத் தயாரானது.

திருமண தினத்தன்று அம்மியில் அவள் விரல் படித்து அவள் போட்ட மெட்டி இல்லை.

தலையில் பூ இல்லை. நெற்றியில் குங்குமம் இல்லை;

அவன்தான் அவளை துவம்சம் பண்ணிவிட்டானே..!

ஐயோ நான் பாவி…தாவி கட்டி தாரமாக்கிக் கொண்ட மனைவியை விதவைக் கோலத்தில் பார்க்க…எத்தனைபேர் கொடுத்து வைத்திருப்பார்கள்..

தலைககு உசந்த பிள்ளை…தகப்பனை ‘சார்…” என்று கூப்பிடுகிறான்…

மனதின் சூறாவளி முகத்தில் கருமையைப் பூசியது.

“நாங்க கிளம்பறோம்…சார்!” சேகர் அவர் கையைப் பிடித்து விடைபெற்றான்.

எத்தனையோ வருஷமாக…வெளியில் தெரியாமல் ஜ்வாலை இல்லாமல் மனசில் எரிந்து கொண்டிருந்த அக்னி…சட்டென்று வினாடியில் குளிர்ந்து அணைந்து போக…அப்..பா..அக்னி குளர்ந்ததே! இறைவா…இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு இப்படி ஒரு சாதனையா…இந்த சாதனைக்காக நான் பட்ட வேதனைகள்…இறைவா…நன்றி சொல்கிறேன் ஏற்றுக்கொள்…

தெளிவாக திடமாக மகளின் கைப்பிடியின் துணையில் அந்த தெய்வம் இறங்கியது.

நீறு பூத்த நெருப்பு அடங்கி…காற்றில் கலந்து போனது.

– மே 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *