(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அலுவலகத்திலிருந்து கிளம்பும் வரை வேலையிலேயே மூழ்கிப் போனதால் விமலா சொன்னது முழுவதுமாக மறந்து போயிருந்தது. ரயிலில் ஏறிய போதுதான் திரும்பவும் நினைவிற்கு வந்தது.
“எவ்வளவு நாசூக்காக சொன்னாள். இவள் எத்தனை நாள் நினைத்துப் பார்த்து எப்படிச் சொல்ல வேண்டும் என்று ஒத்திகை பார்த்திருப்பாள். இருந்தாலும் விமலா எப்படி இந்த வியூகத்தில் என்னையும் கணக்கிட்டாள்” மனம் திரும்ப திரும்ப அவள் சொன்னதையே சுற்றி வந்தது.
“நோ… இதை நான் மறந்தே ஆக வேண்டும். நான் ஏன் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு அதையே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்றவாறு கையிலிருந்த வாரப் பத்திரிகையை விரித்து பட்டுக் கோட்டை பிரபாகரின் தொடர் கதையை வாசிக்க முனைந்தேன். முடிய வில்லை.
விமலா கேட்ட கேள்வியே என்னை சுற்றி சுற்றி வந்து வளைத்து போட்டது. நான் திருமணமானவன் என்றுதான் அவளுக்குத் தெரியுமே. ஏன் எனக்கு ஒரு பெண் குழந்தை கூட இருப்பது அவளுக்குத் தெரிந்த விஷயம்தானே. என் மகளுக்கு பெயர் சூட்டு விழாவிற்கு ஆபீசில் எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்த போது, அவளும்தான் கேட்டாளே, “என்ன விசேஷம்?’ என்று.
பெண் என்பதால் நான் எப்போதோ கமென்ட் அடித்ததை மனதில் வைத்துக் கொண்டு இப்படி பேசினாளோ? நான் அப்போதே மனந்திறந்து மறுத்து பேசியிருக்க வேண்டுமே? நான் ஏன் மறுத்து சொல்லவில்லை!
ஒரு வேளை எனக்கு அவள் மீது …. சே! மனசு ஏன் இப்படி அலைகிறது. நான் கண்டிப்பாக விமலாவிடம் மறுத்து சொல்லி அவளுக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பியிருக்க வேண்டும். நான் செய்ததுதான் பெரிய தவறு. கையிலிருந்த புத்தகத்தை மடித்து விட்டு அந்தச் சம்பவத்தை திரும்ப ஒரு முறை என் ஞாபகத் திரையில் திரையிட்டு அசை போட்டேன்.
“என்ன ராஜன் உங்கள் டிபார்ட்மென்டிலே ஒருத்தரையும் காணோம். தனியாகவா இருக்கிறீர்கள்?”
“யாரு விமலாவா? வாங்க. இன்றைக்கு எங்க டிபார்ட்மென்டிலே எல்லோரும் சினிமாவிற்கு போயிருக்கிறார்கள். நமக்குதான் சினிமா அதிகமாக இன்ட்ரஸ்ட் கிடையாதே”
“நான் உங்களிடம் கொஞ்ச நாளா ஒண்ணு கேட்கணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வாய்ப்பேயில்லை. இப்போ கேட்கலாம் என்று நினைக்கிறேன்”
“ஓ! தாராளமா! வாங்க உட்காருங்க”
“ராஜன் நீங்க தப்பா நினைக்க மாட்டீர்களே! உங்கள் சொந்த விஷயத்தில் தலையிட்டாலும்…”
“என்ன சொல்ல போறீங்க சொல்லுங்க”
“ம்…. ம் … ஏன்…. ராஜன் துக்கமாகவே இருக்கிறீர்கள்… உங்கள் முகம் கொஞ்ச நாளாக சோகமாகவே தென்படுகிறது”
“கொஞ்சம் பணப் பிரச்சினை… அவ்வளவுதான்”.
“இல்லை. உங்கள் சொந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் என்னிடம் சொல்ல மறுக்கிறீர்கள்”.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை”
“உங்கள் திருமண வாழ்வில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறிர்களா?” அவள் என்னை பார்த்துக் கேட்டு விட்டு தலையை குனிந்து கொண்டாள். எனக்கு இதயத்தில் யாரோ ஆணியால் அறைந்தது போல் இருந்தது.
எவ்வளவு மகிழ்ச்சியான வாழ்க்கை! என்னை போல் யாருக்காவது புரிந்து அனுசரித்துப் போகும் இவ்வளவு அழகான மனைவி கிடைப்பாளா? என் ஒவ்வொரு சுவையையும் அறிந்து என்னை மகிழ்விக்கும் அன்னையாய் மாறிய என் மனைவியைப் பற்றி…. ஏய்! விமலா வீண் கற்பனைக் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறாயா? என்று சப்தம் போட்டு கேட்க வேண்டும் போலிருந்தது.
“என்ன ராஜன், மவுனமாகி விட்டீர்கள்? உண்மையிலே உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா?”
“ஆமாம். விமலா நீங்க நினைக்கிற மாதிரி எந்த சோகமும் என் வாழ்க்கையில் கிடையாது”
“ராஜன் நான்… நான்… உங்களைத் திருமணத்திற்கு முன்னாலேயே கவனித்து கொண்டிருக்கிறேன். முன்னால் எவ்வளவு அழகாக டிரஸ் பண்ணி கொண்டு வருவீர்கள். ஆனால் இப்போதெல்லாம்… ஏனோ தானோ வென்று உடுத்துகிறீர்கள்…ராஜன் ஏனோ எனக்குள் உங்கள் சோகம் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி விட்டது”
“எனக்குள் சோகம் என்று யார் சொன்னது? விமலா நீங்கள் எதையோ தவறாக கற்பனை செய்து கொண்டு என்னைப் பார்க்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது”
“இல்லை ராஜன் எனக்குள் ஏற்பட்ட பரிதாபம் இப்போது எப்படியெல்லாமோ விரிந்து வேறு விதமாக வேரிட்டு கிளை விட ஆரம்பித்து விட்டது. நீங்கள் விரும்பினால்… நான் உண்மையிலேயே பல நாள் யோசித்து முடிவெடுத்த பின்னால்தான் இதைப் பற்றி உங்களிடம் சொல்கிறேன். என்னாலே உங்களுக்கு மகிழ்ச்சி தர முடியும் என்றால்… என்னால் உங்கள் சோகங்களை கழுவி விட முடியுமானால்… நான் உங்களை என் புருஷனாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டு வேகமாக எழுந்து போய் விட்டாள்.
ரயில் குர்லாவில் நின்ற பிறகுதான் சுய நினைவு வர வேகமாக இறங்கி வீட்டை நோக்கி நடந்தேன்.
என் மனைவி சொன்ன சப்பாத்திக்கல் ஒன்று வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தபோது ஆவி பறக்க காபியோடு வந்தாள் என் மனைவி. குளித்து முடியைப் பறக்க விட்டு நான் வருவதை எதிர்பார்த்துக் காவல் இருந்து எனக்காகத் தன்னை அழகுப்படுத்திக் கொண்டு…. இந்த அழகியிடம் என்று குறை கண்டேன்?
காபியை கையில் வாங்கிக் கொண்ட நான் எதிர் பார்க்காமல் கன்னத்தில் முத்தத்தால் தாக்கப்பட்டேன். என் மகளைத் திரும்பிப்பார்த்தேன். அழகாகத் தூங்கிக் கொண்டிருந்தது அந்த சின்ன மலர்.
“என்ன அய்யாவிற்கு இன்று மூடில்லையோ” என்றாள் என் மனைவி கவிதா என்னைப் பார்த்து சிரித்து கொண்டு. அப்படியே அவளை மெதுவாக வாரி அணைத்தபோது வெளியே வேகமாகச் சப்தம் கேட்டு மெதுவாக எட்டிப் பார்த்தேன்.
கவிதா சொன்னாள், “பக்கத்து வீட்டுக்காரன் எப்போதுமே சின்ன வீட்டிலே இருந்து விடுகிறானாம். இன்று வந்திருக்கிறான் போலிருக்கிறது. அவனுடைய மகனும், மகளும் திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். பாவம் அந்தப் பொம்பிளை சம்பாத்தியத்தில்தான் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.
எனது மனம் தீர்மானம் செய்தது. நாளை காலையில் விமலாவிடம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று. அவளுக்கு எப்படி அறிவுரை சொல்ல வேண்டும் என்று.
– 27.10.1996